6. கபாடத்தில் ஒரு களவு மதில் மேல் அந்த இடத்திற்கு வந்த பின்புதான் முடிநாகன் செய்த சமயோசிதமான யோசனையின் சிறப்பு இளையபாண்டியனுக்குப் புரிந்தது. முடிநாகனின் அனுபவ அறிவையும், கபாடபுரத்தின் கோட்டை மதிற்சுவர்களில் எங்கெங்கு எந்தெந்த நுணுக்கங்கள் அமைந்திருக்கின்றன என்பது பற்றி அவனுக்கிருந்த ஞாபகத்தையும் பெரிதும் வியந்தான் சாரகுமாரன். நூற்றுக்கணக்கான கடற்குறும்பர்கள் எதிர்த்து நின்றாலும் தாக்கி அழிப்பதற்கு வேண்டிய வசதிகள் அப்போது அந்த இடத்தில் இருந்தன. பாட்டனார் அந்த மதிலையும், கோட்டையையும் அமைத்திருக்கும் விதத்தையும் நுணுக்கத்தையும் இளையபாண்டியனான சாரகுமாரன் வியந்து கொண்டிருக்கும்போதே கீழே குனிந்து அமர்ந்த முடிநாகன் அந்த இடத்தில் கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்த மாபெரும் மர உருளை ஒன்றைக் குறித்து, "இதோ பார்த்தீர்களா?" என்று வியப்பு நிறைந்த குரலில் கூறிக்கொண்டே சுட்டிக் காண்பித்தான். அந்த உருளையைப் பிணைத்திருந்த கயிறுகளைச் சுழற்றி முடிநாகன் வேகமாக அவற்றை இயக்கியபோது மிக விரைவாக அடுத்தடுத்துப் பல அற்புதங்கள் நிகழ்ந்தன. இயந்திரப் பொறிகளால் நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த அந்த இடத்து மதிற்சுவரிலிருந்து அடுக்கடுக்காக அம்புகள் பாயத் தொடங்கியபோது கீழே முத்துப் பண்ட சாலையைக் கொள்ளையிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த கடற்கொலைஞர்கள் திகைத்துப் பதுங்கலாயினர். கூரிய முனையுடன் கூடிய அம்பு மழையிலிருந்து தப்புவதற்காகப் பண்டசாலையின் சுவரோடு சுவராக ஒண்டிக் கொள்வதைத் தவிர அவர்களால் வேறெதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. வில்லெறி வியன்பொறி - கல்லிடு கூடை போன்ற பல்வகை இயந்திரப் பொறிகள் அந்த மதிலில் அங்கங்கே அமைக்கப்பட்டிருந்ததைத் தக்க சமயத்தில் நினைவூட்டியதற்காக முடிநாகனைப் பாராட்டினான் சாரகுமாரன். இந்தச் சமயோசிதமான காரியத்தினால் முத்துப் பண்டசாலை கொள்ளை போகாமல் காப்பாற்றிய அவர்கள் அதே சமயத்தில் தங்கள் குதிரைகளைக் கொள்ளைபோக விடும்படி நேர்ந்தது. மதிலிலிருந்து எதிர்பாராத தாக்குதலைக் கண்ட கொலைஞர்களில் சிலர் பின்பக்கமாகக் கடலில் நிறுத்தியிருந்த படகுகளில் ஏறித் தப்பினர். வேறு சிலர் வீதிவழியே ஓடிவந்த போது மதிற் சுவரருகே நிறுத்தப்பட்டிருந்த இவர்களுடைய குதிரைகளில் ஏறித் தப்பிவிட்டனர். முத்துப் பண்டசாலையைக் காப்பாற்றிய பெருமையோடு தங்கள் பரிகளை இழந்து நடந்தே அரண்மனைக்குத் திரும்பினார்கள் முடிநாகனும் சாரகுமாரனும். மறுநாள் காலையில் விடிந்ததும் பாட்டனார் வெண்தேர்ச் செழியர் இளையபாண்டியனைச் சந்தித்த போது கேட்ட முதல் கேள்வி, "இரவில் நகருலா முடிந்த பின்பும் நெடுநேரம் நீ திரும்பிவரவில்லையே? உன்னுடைய பள்ளியறையில் கூட உன்னைக் காணமுடியவில்லை. அவ்வளவு நேரம் எங்கே போயிருந்தாய்?" - என்பதுதான். இளையபாண்டியனிடம் அவர் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, தேர்ப்பாகன் முடிநாகனும் அங்கு உடனிருந்ததனால் அவனே பாட்டனாருக்கு மறுமொழி கூறிவிட்டான். "இளைய பாண்டியர் நகர் பரிசோதனைக்குப் போக வேண்டுமென்று ஆசைப்பட்டார். மகேந்திரமலைக் குன்றுகளிலுள்ள இரத்தினாகரங்களையும் கடற்கரையோரத்துப் புறவீதியிலுள்ள முத்துப் பண்ட சாலைகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு அரண்மனைக்குத் திரும்பினோம்" - என்று முடிநாகன் கூறியவுடனே, "குறிப்பிடத் தக்க நிகழ்ச்சிகள் எவையேனும் உண்டா?" - என்று அவனையே மேலும் கேட்டார் பெரியவர். முடிநாகன் உடனே முத்துப் பண்டசாலை நிகழ்ச்சியை விவரித்தான். அப்படி விவரித்துச் சொல்லும் போது தான் பாட்டனாரிடம் அதைப்பற்றிச் சொல்லுவதை இளைய பாண்டியர் விரும்புகிறாரா, விரும்பவில்லையா, என்பதை அறிய இடையிடையே அவருடைய முகபாவத்தையும் கவனித்துக் கொண்டான். அவன் எல்லாவற்றையும் கூறி முடித்ததும் முத்துப் பண்டசாலையிற் கொள்ளை போகாமல் காப்பாற்றியதற்காக அவர்களிருவரையும் மனமாரப் பாராட்டினார் வெண்தேர்ச் செழியர். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|