8. கண்ணுக்கினியாள் கருத்தில் கலந்தாள் அவுணர் வீதி முரச மேடையிலிருந்து நுணுக்கமான உள் வழியில் புகுந்து காணவேண்டுமென்று இளையபாண்டியன் விரும்பியும் முடிநாகன் அப்போது அதற்கு இணங்கவில்லை. 'இளங்கன்று பயமறியாது' - என்பதுபோல் பேசினான் சாரகுமாரன். "கொள்ளையிடுவதும் ஊனுண்ணுவதுமாகத் திரிந்த இந்த இராட்சதக் கூட்டத்திற்கு நாகரிக வாழ்வு கொடுத்தாரே பாட்டனார்; அவருக்காவது நன்றி செலுத்த வேண்டாமா இவர்கள்? இந்தக் கூட்டத்தினரால் எப்படித்தான் இவ்வளவு நன்றி விசுவாசமில்லாமல் வாழ முடிகிறதோ?" "மனம் பண்படப் பண்படத்தான் நன்றியைப் போன்ற உயர்ந்த குணங்கள் எல்லாம் வருமென்று தங்கள் பாட்டனார் அடிக்கடி கூறுவார். எத்தனை காலம் நீரினுள் கிடந்தாலும் கல் இளகவோ மென்மை பெறவோ முடியாது. இந்தக் குறும்பர்கள் குணமும் அப்படித்தான்..." "இருக்கலாம்! ஆனால் இவர்களை அப்படியே விட்டுவிட முடியாது. 'ஓர் குறிக்கோளுடன் வாழ்கின்ற பெருங்குடி மக்களின் நகரமிது' என்பதுபோல் தெய்வீகக் கபாடங்களுக்கு நிலை வைத்துப் பாட்டனார் படைத்த நகரமிது. இந்தக் கபாடங்களுக்கு வெளியே யார் எப்படி வாழ்ந்தாலும் கவலைப்படாமல் விட்டுவிடலாம். உள்ளே இருக்கிறவர்களின் தகுதியையும் ஒழுக்கத்தையும் பற்றி நாம் கவலைப்பட்டுத்தான் ஆகவேண்டும்." "இளையபாண்டியர் கவலைப்படுவதிலும், இந்த உட்பகையை நீக்குவதற்கான வழிவகைகளைச் சிந்திப்பதிலும் கவனம் செலுத்துவதும் சரிதான்! ஆனால் ஒன்றில் மட்டும் அவசரப்படக்கூடாது. சற்றே வயது முதிர்ந்தவன் என்ற முறையில் என் அறிவுரையைச் செவிசாய்த்துக் கேட்க வேண்டும். இந்த அகாலத்தில் முரசமேடைக்குக் கீழே உள்ள சுருங்கை வழியை ஆராயும் முயற்சி மட்டும் வேண்டாம். அதனாற் சில பல அசம்பாவிதங்கள் நேரிடலாமென்று தோன்றுகிறது." "சம்பவிக்கக் கூடிய நிகழ்ச்சிகள் எல்லாம் நாம் நினைக்கிறபடி தான் நடக்க வேண்டுமா என்ன? அசம்பாவிதங்கள் நேருமென்பதையே ஒரு பெரிய பயமுறுத்தலைப் போலத் தெரிவிக்கிறாயே முடிநாகா?" "பயமுறுத்தல் அல்ல! வெறும் வேண்டுகோள்தான்! நகர் பரிசோதனைக்காக அழைத்து வந்த தங்களை பத்திரமாகப் பாட்டனாரிடம் கொண்டுபோய் ஒப்படைக்க வேண்டுமென்பது என் விருப்பம். தயைகூர்ந்து இதற்குமட்டும் இளையபாண்டியர் செவி சாய்க்க வேண்டும்." முடிநாகனின் வேண்டுகோளுக்கு இணங்கினான் இளையபாண்டியன். அவுணர் வீதி முரசமேடையிலுள்ள இரகசியங்களை அறிந்து கொள்ளத் துடிக்கும் துடிப்பும், துணிவும், ஆவலும், அதிகமாயிருந்தும் அவற்றை அடக்கிக் கொண்டு இருவரும் புறநகரிலுள்ள கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்றனர். குளிர்ந்த காற்று வீசும் மரங்களடர்ந்த புறநகர் வீதிகள் இரவில் மிக வனப்பாயிருந்தன. யாருக்காகவோ உரத்த குரலில் அலைகளை எற்றி எற்றி அரற்றுவதுபோல் கடல் ஓசை தொலைவில் கேட்டுக் கொண்டிருந்தது! கடற்கரைக் கோடியில் உயரமான பாறை ஒன்றின் மேல் அமைந்திருந்த கலங்கரை விளக்கின் உச்சியில் விறகுகள் தீக்கொழுந்துகள் எழ எரிந்து கொண்டிருந்த காட்சியானது அந்தரத்தில் பற்றி எரியும் செந்தீப்போல் தோற்றமளித்துக் கொண்டிருந்தது. புறநகரப் புன்னைத் தோட்டத்தில் நிலா ஒளியிலும், கடற்காற்றிலும் உற்சாகமடைந்ததாலோ என்னவோ அங்குவந்து தங்கியிருந்த பாணர்களும், விறலியர்களும், இசையிலும், கூத்திலுமாக உறங்காமல் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர். யாழொலியும், இசைக் குரலொலியும், ஆடும் பாதங்களின் அழகு ஒலியும் நிறைந்து கடற்கரைப் புன்னைத் தோட்டம் கந்தர்வலோகமாயிருந்தது. நகர் பரிசோதனைக்காகப் புனைந்து கொண்ட மாறு வேடங்களில் இருந்த காரணத்தால் கூட்டத்தோடு கூட்டமாக ஒதுங்கி நின்று சாரகுமாரனும், முடிநாகனும் அவற்றை எல்லாம் காண வாய்ப்பிருந்தது. நகரணி மங்கல நாளுக்காகக் கோ நகருக்கு வந்திருந்த கலைஞர்கள் வந்த இடத்தில் தங்கள் சொந்த மகிழ்ச்சிக்காகத் தங்களுக்குள்ளேயே பாடிய பாடல்களும், இசைத்த இசைகளும், ஆடிய ஆட்டங்களும், இணையற்ற தரத்திலிருந்தன. "நோக்கமும் பயனும் எதிர்பாராத எல்லையில் கலைகள் தான் எத்தனை அழகாயிருக்கின்றன பார்த்தாயா முடிநாகா! பரிசிலை எதிர்பார்த்து அரண்மனைக் கொலு மண்டபத்துக்கு வரும் போது இவர்களில் பலர் தரமிழந்து விடுகிறார்கள். சொந்த மனத்தின் திருப்தியை ஒரு சித்தியாக எதிர்பார்த்து அதற்காக ஏங்கிக் கொண்டே படைக்கும்போது அந்தக் கலைத்திறனுக்கு இணை சொல்ல முடியாமல் அது உயர்ந்துவிடுகிறது பார்!" என்று முடிநாகனின் காதருகே மெல்லக் கூறினான் இளையபாண்டியன். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|