கொற்றவன் கோட்டம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 1. பூமலி பெருந்துறை முதல் யாமம். சோழ சாம்ராஜ்யம், சோகத்தின் மையத்தில் சுழன்று கொண்டிருந்தது. குணபுலத்தின் புலிக்கொடி, காற்றின் உத்வேகத்தால் படபடவென அடித்துக் கொண்டிருந்தது. வானத்தின் மையத்தில் கண் சிமிட்டிக் கொண்டிருந்த தாரகைகள், வெளுக்கும் கிழக்கை வெறித்துப் பார்த்தபடி இருந்தன. கோழிக் கோமானின் கோட்டைக் கலசத்தின் மேலே கண் துஞ்சா யவனக் காவலர்கள் உலவிய வண்ணமிருந்தார்கள். அவர்களின் பார்வையிலே அடிவானத்தின் மஞ்சள் நிறம் பட்டுத் தெறித்துச் சிதறியது. காவிரிப்பூம்பட்டினத்தின் கலங்கரை விளக்கு, வருகின்ற மேனாட்டு மரக்கலங்களையும், அவற்றின்மீது பறந்து கொண்டிருந்த பல வண்ணக் கொடிகளையும் வரவேற்றபடி வெளிச்சம் போட்டுக் கொண்டிருந்தது. அந்த வெளிச்சம் கடலலையைத்தான் முத்தமிட்டு மகிழ்ந்ததேயொழிய அதன் கரையையல்ல. அப்படியென்றால் அங்கு நடமாடும் அரசாங்க அதிகாரிகளுக்கு ஏது வெளிச்சம்? அந்தக் குறையை அழகு நிலா தீர்த்து வைக்கப் புறப்பட்டது. உருக்கி வைத்த தங்கம் போல் உதயமான வெண்ணிலவு மொட்டை மரம் போலவே காட்சி அளித்தது. இளஞ்சேட்சென்னியின் கூரிய வாள்பட்டுப் பாழ்பட்ட மோரியர் பாழியைப் போல் அதன் ஒளி அமைந்திருந்தது. ஆர்ப்பாட்ட அமளியோடுங் கூடிய துறைமுகப் பட்டினம், யானையின் கொம்பைப் போன்ற பொன்னிலவின் அரைகுறை ஒளியோடு மின்னியது. தமக்கென்று வாழாத துறைமுகத் தலைவர்கள் பிறருக்கென்று உழைத்துக் கொண்டிருந்தார்கள். ‘நாடு வளர்ந்தால் நாமும் வளர்வோம்!’ என்ற எண்ணமுடைய எழுச்சிமிக்க வாணிபச் சீலர்கள், தம்முடைய வயதையும் தளர்ச்சியையும் மறந்து, சோழவள நாட்டின் செழிப்பை நினைத்து ஊக்கத்தோடு அங்குமிங்குமாகப் போவதும் வருவதுமாக இருந்தனர். சில்லென்று வீசிக்கொண்டிருந்த மெல்லிய பூங்காற்றில் வேலையின் அலுப்பு தெரியாதபடி பணியாற்றிக் கொண்டிருந்த சுங்கக் காவலர்களின் உதடுகள் மட்டும் சதா நேரமும் எதையோ ஒன்றை உச்சரித்தபடி இருந்தன. அந்தத் துறைமுகத்தை ஏந்திக்கொண்டிருந்த மருவூர்ப்பாக்கமும், அதன்கண் பொருந்தியிருந்த மிகப் பெரிய மாடமாளிகைகளும் மௌனப் புன்னகை புரிந்தவண்ணமிருந்தன, அம் மாளிகைக்கு இடையிடையே கிடந்த பரதவர் வீடுகளில், சிமிழ் விளக்குகள் மட்டும் மினுக்மினுக்கென ஒளி காட்டிக்கொண்டிருந்தன. அந்த ஒளியினால் யாருக்கு நன்மை? அவரவர் வீட்டுக்கே யல்லாமல் வேறு யாருக்கு உறுதுணை புரிய முடியும்? இருளுக்கும் ஒளிக்கும் என்றுமே உறவு இருந்ததில்லை. ஒன்றுக்கொன்று நேர்ப் பகையே. அந்தப் பகைமை உணர்ச்சியைப் பெரிதும் வளர்க்கக்கூடிய அளவுக்கு இழி தன்மை வாய்ந்த இருட்டு, வெள்ளி நிலவைக் கண்டு வெறிச் சிரிப்பைக் காட்டியது. மரங்களையும் செடிகளையும் கொடிகளையும் தாழைமலர்ப் புதர்களையும் உறவாக்கிக் கொண்டு தன்னுடைய அத்தியாயத்தின் முதல் பக்கத்தைப் புரட்டி வைத்தது. அங்கெல்லாம் இருளாட்சியே அணி செய்தது என்றாலும் நிலவு தன் கருணைக் காட்டத்தை வழங்கத் தவறவில்லை. அடர்ந்த இலைகளுக்கு மத்தியிலெல்லாம் புகுந்து நெளிந்து விளையாடியது. அவ்வொளித் துளிகளையும் சிதைக்க முடிவெடுத்த காரிருள், காற்றையே கைப்பாவையாக்கிக் கொண்டு பணியாற்றத் தொடங்கியது. அந்தப் பணியிலும்தான் என்ன தீவிரம்! நீதியை விரட்ட அநீதிக்கு என்ன துணிச்சல்? உண்மையை ஒழிக்கப் பொய்யிற்கு எவ்வளவு வேகம்? அழியக்கூடிய ஆணவத்துக்குத்தான் என்ன எக்காளம்? அந்த எக்காளத்தைச் சுக்கு நூறாக்க ஒருவன் தோன்றாமலா போய் விடுவான்? ஆம்; அவன் தோன்றச் சில நாழிகைகள் இருக்கின்றனவென்பதைப் புரிந்து கொண்டதோ இல்லையோ...
இருளுக்கும் ஒளிக்கும் நெடும்போர்! அந்தப் போர் முனைக்குக் கால்கோள் விழா நடத்துபவன்போல வேக வேகமாக ஓர் இளைஞன் வந்து கொண்டிருந்தான். அவன் வெறும் கட்டழகு வாய்ந்த கட்டிளங்காளை மட்டுமல்ல, சோழ சாம்ராஜ்யத்தின் சுகத்துக்காகத் தன் உடல் பொருள் ஆவியை என்றோ ஒப்படைத்துவிட்ட மாவீரன். மனிதருள் பதராகிவிட்டவரைத் திருத்த அல்லது அழிக்கப் பிறந்த ஆண் சிங்கம். அறிவுக்கு அறிவாய் - ஆற்றலுக்குப் பேராற்றலாய் விளங்கிய வித்தகன் அவன். அவன்தான் காவிரிப்பூம்பட்டினத்துக் கரையோரமாக அந்த நடுயாமத்தில் அவசர அவசரமாக வந்து கொண்டிருந்தான். அவன் வேகத்தால் பூமாதேவியின் உடலில் சற்று வலி ஏற்பட்டுத்தான் இருக்க வேண்டும். அதைப்பற்றி அவன் அணுவளவும் கவலைப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அவன் மிதியடியின் கீழ் மிதிபட்ட நண்டு ஒன்றல்ல, இரண்டல்ல; பல. அவன் மெய்மறந்த நிலையிலே புயல் வேகத்தில் நடந்து கொண்டிருந்தான். மெய்ச் சிலிர்க்க வைத்துவிட்ட ஒரு பயங்கர செய்தியைக் கேள்விப்பட்டிருந்ததால்தான் அவன் தன்னையே மறந்திருந்தான். இல்லையென்றால் ஒன்று கூட மிதிபட்டிருக்காது. அவன் மனிதர்களை நேசிப்பதில்லை. அதற்காக நல்லவர்களைப் பகைத்துக் கொள்ளுவதுமில்லை. அவனைப் பொருத்த மட்டில் ஆறறிவுக்குக் கீழான உயிர்களையே அதிகமாக நேசித்து வந்தான். சூதும் சூழ்ச்சியும் இன்னதென்று அறியாத உயிர்களிடத்திலவனுக்கு அதிக விருப்பம். ஆனால் அன்றைய தினத்தைப் பொருத்த மட்டில் அவன் மாறுபட்டவன்போலவே அனைத்தையும் மிதித்தபடி நடந்தான். அந்தச் சமயத்தில் அவனுக்கு இருந்த ஆத்திரத்துக்கு எதிரிகள் எவரேனும் கிடைத்திருப்பாரேயானால், ஒரு துளி எலும்புகூட கிடைத்திருக்க முடியாது. ஏதோ ஒன்றைப் பறி கொடுத்துவிட்டவன் போல அடிக்கொரு தடவை உதட்டைக் கடித்துப் பெருமூச்செறிந்த வண்ணம் நடந்து கொண்டிருந்தான். அடிக்கடி ‘உச்’ கொட்டித் தனக்குள்ள மனோ வேகத்தைக் கந்தும் கடலலைக்குச் சமர்ப்பணம் செய்தபடி இருந்தான். அவனது வலது கை உறையிலிருந்த வாளைத் தடவிப் பார்த்தபடி இருந்தது; அவனுடைய அழகிய விழிகள் நாலாபக்கமும் சுழன்று சுழன்று வழியை மீண்டும் மீண்டும் முற்றுகையிட்டபடி இருந்தன. அவனுடைய நெஞ்சம் வைரம் பாய்ந்ததென்றாலும் தனிமையை நினைத்து அச்சப்படாமலில்லை. அதற்காக அவன் தன் மூளையை அதிகமாகக் குழப்பிக் கொள்ளவுமில்லை. துணிவின் தலை வாசலில் அறிவை நிறுத்தி வைத்துவிட்ட பிறகு ஆன்மாவிற்குக் கவலைப் படலம் ஏது? ‘புகார்’ முகத்தைக் கடந்தான். தாழைப் புதர்களைத் தைரியத்தால் துரத்திவிட்டபடி வந்துகொண்டிருந்தான். அவன் எதிர்பார்க்காத சம்பவம். ஓலைச் சுருளோடுங்கூடிய ஓர் அம்பு, வட திசையிலிருந்து மிக வேகமாக வந்து மண்ணில் புதைந்தது. புதைந்ததா? அவனைப் போக விடாதபடி தடுத்து நிறுத்தியது. முன் வைத்த காலை பின்னுக்கு இழுத்துக்கொண்டான். திடுக்கிட்டான்; சுற்று முற்றும் திரும்பிப் பார்த்தான். கோபத்தால் முகம் சிவக்க, “யாரங்கே?” என்று கர்ஜித்தான். அந்த ஒலி, யானையின் பேரொலியைப்போல் இருந்தது. எய்தவனுக்குத் தைரியம் இருக்குமானால் அம்பை ஏன் தூதாக அனுப்பி வைக்கப் போகிறான்? அதைப்பற்றி அப்போது அவன் மனம் சிந்திக்கவில்லை. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னான்; சுழன்ற கண்களையே மேன் மேலும் சுழலவிட்டான். ‘இந்த நேரத்தில்...’ என்று கைகளை முறித்தபடி குனிந்து அந்த அம்பை எடுத்தான். அப்போது பேரலை ஒன்று உருண்டு திரண்டு வந்து அவன் பாதங்களை மோதிவிட்டு மீண்டும் விரைவாகச் சென்று கடலுக்குள் ஒளிந்து கொண்டது. அதற்குக்கூட அவனைக் கண்டால் அச்சம் போலும்! “வில்லவா! இந்த எச்சரிக்கை, உனக்கு மட்டுமல்ல; சோழ சாம்ராஜ்யத்துக்குச் சொந்தமுடையவன் யான் ஒருவனேயென்று சொல்லும் உன் மாமன் இளஞ்சேட் சென்னிக்கும்தான். இனியும் எங்களைப் பகைத்து வாழத் தீர்மானிப்பவர் தரைமட்டமாகி விடுவர். உன் அண்ணன் அருங்கவிப் புலவனாக இருக்கலாம். ஆனாலும் எங்களின் பேராற்றலுக்கு முன்னே ஒரு சின்னஞ் சிறு புழு...” அதற்குமேல் அவனால் படிக்க முடியவில்லை. அந்தப் ‘புழு’ என்னும் சொல்லைக் கண்ட மாத்திரத்தில் அவனுடைய அங்கமெல்லாம் கொதித்தது. ஓவெனக் கதறினான். “ஐயோ அண்ணா! புடம் போட்டு எடுக்கப்பட்ட பொன்னே! மணியே! புவியரசே!” என்று ஆவேசமாகச் சொற்களை உதிர்த்துவிட்டு, மீண்டும் ஓலையைப் பார்த்துவிட்டு, “வேளிர் குலத்து வித்தகனை- என் மூத்தவனை- திதியனின் தோன்றலை இகழ்ந்து வரைந்துள்ள வீணர்களே! உங்கள் உள்ளத்தில் தைரியமென்ற ஒன்று கடுகளவாகிலும் குடிகொண்டிருக்குமேயானால் எதிரில் வந்து நில்லுங்கள் பார்ப்போம். வேழம் நிகர்த்த மண்ணிலே கோழை உள்ளத்தோடு பிறந்துவிட்ட குணக்கேடர்களே! சோழர் குலத்துக்குச் சொந்தம் கொண்டாடும் சொரணையற்றவர்களே! ஊம்... வந்து நில்லுங்கள்; நில்லுங்கள்; நில்லுங்கள்!” என்றபடி ஆத்திரம் அடங்கக் கத்தினான்; உருவிய வாளோடு கண்களை உருட்டினான்; வலது காலால் பூமியை எட்டி உதைத்தான். அவ்வேளையில் அவன் மூளையில் ஓர் எண்ணம் சுளீரென்று பட்டது. நா குழறியது; உருவிய வாளை உறைக்குள் போட்டுவிட்டு மண்ணைத் தொழுதேத்தியபடி, “சோழமா தேவி! என்னை மன்னித்துவிடு அம்மா! ஆத்திரத்தால் அவசரப்பட்டுச் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டுகின்றேன்!” என்றான். எட்டி உதைத்த குற்றத்திற்காக முழங்காலிட்டு மன்னிப்பு கோரி மீண்டும் எழுந்தான். அந்த அளவுக்குப் பொன் கொழிக்கும் போகபூமியைப் போற்றி வளர்த்தான். அவனைப் பொருத்த வரையில் அது தெய்வம்தான்! சுருட்டிய ஓலையை நீட்டினான். தேங்கி நின்ற கண்ணீர்த் துளிகளை இடது கையால் துடைத்தபடி விட்டதைத் தொடரலானான். “... உனக்கு மூத்தவளும், உன் அண்ணனுக்குத் தங்கையுமான வல்லிக்கொடியின் வாழ்வு இன்னமும் எத்தனை நாள் வரையிலும்தான் நீடிக்கப் போகிறது? உன்னுடைய மாமாவின் உயிர், உடலைவிட்டுப் பிரிவதற்குச் சில மணி நேரமே உள்ளன. அந்தக் கிழப்புலி வீழ்ந்ததும் சோழநாட்டுச் சொந்தக்காரர்கள் நாங்களே. அப்போது நீயும் உன் அண்ணனும் எங்களின் சுட்டு விரலுக்கிடையே சுழன்றாடும் வெறும் பொம்மைகள்! கேலிகூத்துக்குரிய கோமாளிகள்! ஆகவே இந்த விநாடியிலிருந்தாவது எங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியை விட்டுவிடு; எப்படியோ எங்கள் சிறிய தந்தைக்கும் உங்களுக்கும் உறவு ஏற்பட்டுவிட்டது. அதற்காகவே இந்த நீட்டோலை. உன்னால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சென்னி நாகனை ஒழுங்காக வெளியில் விட்டுவிடு. உன்னையாவது நீ காப்பாற்றிக்கொள்! இதுவே எங்கள் இறுதி எச்சரிக்கை.” இப்படிக்கு, சென்னியின் சொந்தக்காரர்கள். பெருமூச்சோடு ஓலையைச் சுருட்டினான். ஒவ்வொரு சொல்லிலும் கலந்திருந்த எரியீட்டியைக் கண்டு துவண்டானேயொழிய அதற்காக அடிமைச் சாசனத்தில் கையெழுத்துப் போட அவன் மனம் எண்ணவில்லை. ஓலைச்சுருளைப் பூப்பந்தாக்கிக்கொண்டு பேசினான். அந்தப் பேச்சில் சிரிப்பும் சீற்றமும் இரண்டறக் கலந்திருந்தன. “பொன்னித் தெய்வமே! சோழமாதேவியே! உன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். என்னையும், என்னைச் சார்ந்தவரையும், இந்தச் சோழ மண்டலத்தையும் சூறையாட சூழ்ச்சி பல நிகழ்த்தும் சுயநலக்காரர்களைச் சாய்க்கும் வரையிலும் என் இரு இமைகளும் உறக்கத்தை ஏற்காது. இது உறுதி” - என்றபடி, அந்த அம்பையும், அத்தோடு, இணைந்து வந்த அழைப்பையும் மார்புக் கவசத்துக்குள்ளே மறைத்து வைத்துக்கொண்டு மேற்குத் திசையில் திரும்பினான். பனிப்படலம்போல் அடர்ந்திருந்த பூஞ்சோலைகளுக்கு நடுவே, கீய்யென்ற இரைச்சலுக்கு இடையே தட்டுத் தடுமாறியபடி நடந்து கொண்டிருந்தான். நிலவைத் தடுத்து நிறுத்திவிட்ட நெடுமரங்களுக்குக் குறுக்கும் நெடுக்குமாகக் கிடந்த சப்பாத்திப் புதர்களையும் அவன் கடந்து கொண்டிருந்தான். அவனுடைய மனக்கண் முன்னே இளஞ்சேட் சென்னியின் முழுவுருவம் பளிச்சிட்டது. கண்கள் கலங்கின; நடந்தபடியே தன் பழங்கால நினைவை நடக்க விட்டான். சோழன் வரலாற்றில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் செல்வன் இவனே. செம்பியன் வழிவழித் தோன்றலாகிய சென்னியின் வீர சரிதை, சுவைமிகுந்த ஓர் அருங்காவியமாகும். தமிழகத்தின் தலைவாயிலில் நின்று நிலப்போர் நடத்திய நல்லவன். சோழ மண்டலத்தின் சுற்றுப்புறங்களையெல்லாம் கற்றவர் கொண்டு கவிபாட வைத்த முதற் காவலன். ஆம்; அவன்தான் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்னும் சோழ மன்னன். சோழ மண்டலத்தைப் பொருத்தமட்டில் அவன் மன்னர் மன்னனே. *அழுந்தூரை தலைநகராக்கிக்கொண்டு அரசாண்ட அடலேறு! அச்சமயத்தில்தான் அசோகன் காலத்து மோரியர், தமிழக எல்லைக்குள் நுழைய திட்டமிட்டனர். அத்திட்டத்தை ஒற்றரின் மூலமாக அறிந்த சென்னி, தன் சேனைத்தலைவனான வேள்-திதியனை மோரியர் எண்ணத்தை முறியடிக்கும்படி அனுப்பி வைத்தான். அந்த சமயத்தில்...? (* இதுவே பிற்காலச் சோழர்களின் எல்லைக் கோடு.) அழுதூர் அழகு மணிமாடத்தில் திதியனின் திருமகளான வல்லிக்கொடி நின்றிருந்தாள். படர்ந்த முகத்திலே செந்தாமரை பூத்துக் குலுங்கியது. அன்னவள் வதன அதரத்தில் ஈரப் பசை நிரம்பி வழிந்திருந்ததால் பொன் வண்டுக்கு அங்கு வேலை நிரம்ப இருந்தது. அப்படிப்பட்ட அழகி அங்கு நின்றபடி எதையெதையோ எண்ணியவண்ணம் இருந்தாள். அவளுடைய அண்ணனான இரும்பிடர்த்தலையாரும், அவ்விருவருக்கென்று பிறந்த இளவல் வில்லவனும் வெளியூருக்குச் சென்றிருந்தார்கள். அவ்விருவருக்கும் தம் இருக்கையை நோக்கி வருவதற்குச் சில நாட்கள் பிடித்தன. நின்றிருந்த தோகையை நெடுமாறன் கண்டான். அவன் மட்டுமா? அவளும்தான் அவனைக் கண்டு மெய் மறந்து நின்றாள். அந்தச் செய்தி, திதியனைத் திணறத்தான் வைத்தது. புருவம் நெளிய, புரண்டெழுந்த புன்முறுவல் ஒளியைச் சிந்த, “சோழ மண்டலக் காவலா! இந்நாட்டு எல்லையில் வாழும் ஒரு சாதாரண மனிதன் நான். தங்களின் கருணை உள்ளத்தால் தானைத்தலைவன் பதவியைப் பெற்றேன். அதுவே யான் செய்த நல்வினைப் பயன்! பெற்ற இன்பம் பேரின்பம். அவ்வின்பத்துக்கு அணிகலனை அணிவிக்கிறீர்கள். அதற்கு நான் சிறிதளவும் அருகதையுடையவனல்லன்!” என்று பணிவோடு தெரிவித்துக் கொண்டான். “வேளிர் குலத்து மறவனே! உன்னையும், உன் உள்ளத்தில் கொழுந்துவிட்டெரிகின்ற தேச பக்தியையும் நான் மட்டுமல்ல, இந்த மண்டலமே போற்றுகிறது. அன்புக்குப் பேதாபேதம் இல்லை; அது யாரையும் நேசிக்கவல்லது. அந்த அன்புதான் என்னையும் உன் குடும்பப் பெருமையோடு இணைத்துவிட்டது. அன்பானது தானாக வந்து என்னை அடையவில்லை; நானாகத்தான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். திதியா! ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள். நீ தாழ்ந்தவனுமல்ல; நான் உயர்ந்தவனுமல்ல. என்னைச் சிலர் உயர்ந்தவனாக்கினர். அவ்வளவுதான்! அந்த உயர்வுக்காக, அதனினும் உயர்ந்த ஓர் அன்பை நான் வெறுக்கத் தயாராயில்லை. அப்படி வெறுப்பேனானால் மனிதருள் பதர்தான்!” என்று சொல்லி முடித்ததும், திதியனின் முகத்தில் கட்டுக்கடங்காத அளவுக்கு ஆனந்தம் தாண்டவமாடியது. அதை அவன் சமாளித்துக்கொண்டு, “மக்கள் திலகமே! அப்படியானால் என் வல்லிக்கொடியாள் என்னைவிட பாக்கியம் செய்தவளே!” என்றதும் சென்னி, தன் கழுத்திலே அணிந்திருந்த வைர மாலையைக் கழற்றி அவன் கழுத்துக்குரிய மாலையாக்கினான். இந்தச் சம்பவம் நடைபெற்ற காலத்தில் வில்லவன் சின்னஞ் சிறியவன். அண்ணனின் அரவணைப்பிலேயே காலம் கழித்தவன். அவரால் சொல்லப்பட்ட அந்தச் சுவையான சம்பவத்தை அவன் நினைத்து மகிழ்ந்தான். அவனுடைய அந்தப் பெருந்தன்மை வாய்ந்த பண்பை எண்ணிக் களிப்பில் திளைத்தான். இதுவே அவன் நடை வேகத்தில் ஓடி வந்த முதல் சம்பவம். இச்சம்பவத்தைத் தொடர்ந்தார் போல சில நினைவுகள் அவன் உள்ளத்தில் அலைகளைப்போல எழுந்தனவென்றாலும், அவற்றிற்கெல்லாம் வில்லவன் முக்கிய இடம் கொடுக்காமல் சென்னியின் தாயாதிகளான சென்னிநாகனும், கொடுங்கூற்றனும், சென்னிவேளும் மறைமுகமாகச் செய்துவரும் சதிகளைப் பெருமளவுக்கு எண்ணிக் கலங்கிய வண்ணம் உறையூர்க் கோட்டையை நெருங்கிக் கொண்டிருந்தான். அலைமோதிய அச்சத்தால் அடிக்கொருதரம் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே மருவூர்ப்பாக்கத்தின் மயான அமைதியைக் கடந்து வந்து கொண்டிருந்தான். அவனுடைய வரவை ஆவலோடு எதிர்பார்ப்பது போல உறையூர்க் கோட்டையிலிருந்து மணியோசை எழுந்தது. அந்த ஓசையில் என்றுமில்லாத கம்பீரம் இருப்பது போலவே வில்லவன் நினைத்தான். பட்டினப்பாக்கத்துக்குள் நுழைந்ததும் அரபுக் குதிரைகளின் குளம்படிச் சத்தங்கள் அவன் செவியில் ஆழமாக விழுந்தன. நகருக்குள் நுழைந்துவிட்டோமென்ற நம்பிக்கை அவனுக்குப் பிறந்தது. அதோடு உற்சாகமும் களைவிட்டுப் பிரகாசித்தது. அப்பிரகாசத்தை, ஓலையில் கண்ட செய்தியையும் வேலவன் குன்றத்தில் கேட்ட திடுக்கிடத்தக்க செய்தியையும் எண்ணிக் கதிகலங்கியவாறு மேலும் நடையைத் துரிதப்படுத்தினான். “நில் அங்கே!” - இருந்தாற்போலிருந்து அவன் பின்புறத்திலிருந்து கணீரெனக் கேட்டது. அந்தக் குரலிலிருந்த அதிகாரத்தை அசட்டை செய்துவிட்டுக் காலடி எடுத்து வைத்தான். “உன்னைத்தான் சொல்கிறேன்... இனியும் அடியெடுத்து வைப்பாயேயானால் நீ உன் உயிரை இழப்பது உறுதி!” என்றபடி ‘சட்’டென்று அவனை நெருங்கினான் அவன். நிழல்போல வில்லவனைத் தொடர்ந்தான். வில்லவன் வெறிச்சிரிப்பைக் காட்டினான். அவன் நடக்கத் தயங்கவில்லை. கையைப் பலமாகத் தட்டி ஓசையெழுப்பியவாறு, “உயிர்மீது ஆசை! அந்த ஆசை, எனக்கு என்றுமே இருந்ததில்லை மறவனே!” என்றான். அந்தக் குரலைக் கேட்டவன் அதிர்ச்சிக்கு ஆளாகி அவன் முன்னே திடுமென வந்து நின்றான். நின்றவன் நின்றவன்தான். வில்லவனையே ஒரு கணம் உற்றுப் பார்த்துவிட்டு, “என்னை மன்னித்துவிடுங்கள்!” என்று சொல்லிக்கொண்டே வாய்விட்டுக் கதறினான். அவனுடைய பயந்த சுபாவத்தைக் கண்டு பரிதாபப்பட்ட வில்லவன், “செலீகஸ்!... என்ன, என்றைக்குமில்லாத அளவிற்கு இன்றைக்கு - இந்த நடு ஜாமத்தில் நகர்வலம்?” என்று கேட்டு, அவன் நெஞ்சுக்குத் தைரியத்தை உண்டாக்கினான். அதோடு, அவனை ஊடுருவிப் பார்த்தான். அதற்குக் காரணம் இல்லாமலில்லை. செலீகஸ், வில்லவனின் ஆருயிர் நண்பன். சென்னியின் அபிமானத்துக்குரிய கிரேக்க மாவீரன். வாணிபம் நடத்தும் கூட்டத்தாரோடு வந்த செலீகஸ், தனக்கிருந்த புத்தி கூர்மையினால் தமிழ்மொழியில் பெரும் புலமை பெற்றான். தான் ஒரு கிரேக்க நாட்டவன் என்பதை மறந்து தமிழின் பெருமையைத் தன்னோடு வந்த வாணிபர்களுக்கெல்லாம் சொல்லும் பணியில் தீவிரப் பட்டான். அவனுடைய இடையறாத உழைப்பால் சில மேனாட்டு வணிகர்கள் தமிழையும் தமிழரின் பண்பாட்டையும் நன்குணர்ந்தார்கலென்றே சொல்ல வேண்டும். அவன் தன்னை ஒரு சோழநாட்டுப் பிரஜையாகவே ஆளாக்கிக் கொண்டான். பத்தொன்பது வயதிலேயே ரோம் நாட்டை விட்டுவிட்டு வந்தவன், இப்போது முப்பது வயதை எப்படியோ கடத்திவிட்டான். மருவூர்ப் பாக்கத்திலேயே ஐந்து ஆண்டுகளைக் கழித்தவன். அங்கிருந்த வண்ணம் அனைவருடைய நட்பையும் பெற்றுக் கொண்டான். ஒருநாள் அந்திம வேளையில் அவன் தன் அறிவுத்திறனை யவன வாணிபருக்குப் பங்கிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவ்வழியாக மாறு வேடத்தில் வந்த சென்னியும், அவனுடைய அந்தரங்க அமைச்சரான கோமுடியாரும் செலீகஸின் தமிழ்ப்பற்றை உணர்ந்து உற்சாகத்தால் மெய்மறந்து போனார்கள். அன்றுமுதல் அவனை அரசாங்க துணையாளனாகவே நியமித்துவிட்டான் மன்னன். அரண்மனை அந்தஸ்து கிடைத்தவுடன் போர்க் கலைகளில் வெற்றி பெற்றான். அழுந்தூர் வேள் மகளை மன்னாதி மன்னன் மணம் புரிந்துகொண்டவுடன் வில்லவன் இருப்பிடமும் அதுவாயிற்று. அன்றுமுதல் செலீகஸும் வில்லவனும் உடலால் இருவராகவும் உள்ளத்தால் ஒருவராகவும் இருந்து வருவோரானார்கள். அந்தப் பாசவுணர்ச்சியோடு செலீகஸை ஏற இறங்கப் பார்த்தான். அந்தப் பார்வைக்குள் நெளிந்தாடிய அன்புணர்ச்சியை உணராத செலீகஸ், “வில்லவா! விழிகளால் என் வாழ்வை விழுங்கிவிடப் போகிறாயா?” எனக் குறும்பாகக் கேட்டான். செலீகஸ் நமட்டுச் சிரிப்பொன்றை லேசாக அவிழ்த்து விட்டபடி, “வேங்கை மார்பனே! சென்னியால் சதாகாலமும் நினைத்து மகிழத்தக்க பேராளா! இதற்குள்ளாகவா நீ எனக்குப் பணித்த கட்டளையை மறந்து போனாய்? வியப்பாக இருக்கிறது!” என்றவாறு புருவத்தை மேலேற்றினான். உயர்ந்த புருவத்தை நிலவொளியால் கண்ட வில்லவன் தன் தலையைக் கீழே தொங்கப் போட்டான். உதட்டின் முனையிலிருந்து, “மன்னியுங்கள்!” என்ற சொல், அடக்கத்தோடு வெளியில் வந்து விழுந்தது. “வில்லவா! நான் மிகமிகச் சாமான்யமானவன். வயதில் பெரியவனேயொழிய உன்னைப்போல் விவேகத்திலல்ல! அந்தக் குறை என்னிடத்தில் நிரம்ப இருப்பதால்தான் அவசர அவசரமாக உணர்ச்சிவயப்பட்டு மறந்து போனாய் என்றேன். உன்னுடைய மூளையில் எத்தனை விதமான குழப்பங்கள் இருக்கின்றனவென்பதை நான் நன்கறிவேன்!” என்று சொல்லிக் கொண்டு வந்துவிட்டவன் போல், “ஆமாம்... போன காரியம்?” என்று ஆவலோடு கேட்டான். அதைக் கேட்டதும் வில்லவனின் விழிகள் உலைகளத்திலே பழுக்கக் காயவைக்கப்பட்ட இரும்பைப் போல சிவந்தன. முல்லையொத்த பல்வரிசையை ஒரு முறை கடித்துவிட்டு, “செலீகஸ்! போன காரியமா கேட்கிறாய்? அதுவும் இந்த நேரத்திலேயா தெரிந்துகொள்ள விரும்புகிறாய்? வேண்டாம்! விடியட்டும், பொழுது! வேனில் மண்டபத்தில் சொல்கிறேன்!” என்றபடி கவசத்துக்குள் மறைத்து வைத்திருந்த ஓலைச் சுருளொன்றை எடுத்து, வேகமாக அவன் முன்னே நீட்டினான். செலீகஸ் அவனுடைய முகச் சாயலைப் பார்க்காமலேயே பெற்றான், பிரித்தான்; பார்த்தான்; ஒவ்வொரு வரியும் அவனை வீரத்தின் கூர்மைக் கோட்டிலே கொண்டு போய் நிறுத்தியது. உணர்ச்சிப் பெருக்கால் கையும் காலும் ஆட்டம் கண்டன; தூக்கி எறிந்தான், ஓலைச் சுருளை! அது ‘தொப்’ பென்று மண்ணை மண்டியிட்டு, காற்றின் உத்வேகத்தால் லேசாக அசைந்து கொண்டிருந்தது. “வில்லவா! இந்தக் கொடிய வாசகத்தைத் தீட்ட முனைந்த தீயரின் விரல்களைத் தீக்கிரையாக்கும் வரையில் என் மனம் அமைதியின் தலைவாசலில் படுக்காது. என்ன, ஆணவம்! சென்னியா கிழப்புலி! இதைப் பொறித்தவன் என் முன்னே இப்போது நிற்பானானால் அவன் கழுத்தைத் துண்டாக்கிவிடுவேன். சந்திரகுப்த சாம்ராஜ்யத்தின் படைகளைச் சாம்பலாக்கிய சோழர்குலத் தலைவனை இழிவாகச் சொன்னவனை இனியும் பேசாமல் விட்டு வைக்கக்கூடாது. வில்லவா! ஆமாம்... இந்த ஓலையைக் கொண்டு வந்த கொடியவன் யார்?” ஆவேசத்தோடு கேட்டான். அப்போது வில்லவன் தன்னைச் சாந்தியின் சந்நிதானத்துக்கு ஒப்படைத்துக் கொண்டிருந்ததால் செலீகஸின் மனக் கொதிப்பை அறியாமல் ஊமையாகிக் கிடந்தான். வில்லவன் உள்ளம் எதிலோ பலமாகச் சிக்கிக் கொண்டிருக்கிறதென்பதை அவனுடை மௌன விரதத்தின் வாயிலாகத் தெளிவாகப் புரிந்துகொண்ட போர்வீரன், “வில்லவா! எங்கே கவனம்?” என்று கேட்டு, சிந்தனைச் சக்கரத்தை முடுக்கினான். அதன் சுழற்சியால் பழைய உலகத்துக்கு வந்த வில்லவன், “எங்கேயுமில்லை, செலீகஸ்! சோழ மண்டலத்துக்கென்று எதிர்காலம் தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்ற பேரமளியை எண்ணும்போது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எங்கெங்கு நோக்கினும் அங்கெல்லாம் நமக்கு எதிரிகள். என் உடன் பிறந்தவளுக்கென்று ஒரு குழந்தை பிறந்திருந்தால், ஆளும் உரிமைக்கென்று ஓர் ஆண் சிங்கம் அவதரித்திருந்தால் எந்த ஒரு கயவனாவது இந்த நாட்டின்மீது குறிவைத்து அலைவானா?” என்றபடி மளமளவெனக் கண்ணீர் சொரிந்தான். அவனுடைய வாழ்நாளில் சிந்திய முதல் கண்ணீர் இதுவே. இதற்கு முன்னே அவன் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகு அழுததே கிடையாது. அந்தக் கண்ணீர்த் துளிகளைக் கண்ட செலீகஸின் மனம் புழுவைப் போல் நெளிந்தது. என்றாலும் தான் தெரிந்து வைத்திருந்த உண்மையைச் சொல்லிவிட்டால் வில்லவனுக்கு கொஞ்சம் ஆறுதல் வரலாமென்று கருதி, முதலில் தன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, “வில்லவா! உன் கண்ணீருக்கு ஒன்றை உருவாக்கும் சக்திகூட உண்டு. அதைரியப்படாதே! சோழ சாம்ராஜ்யம் பிழைத்து விட்டது!” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே செலீகஸின் இரண்டு தோள்பட்டைகளையும் பிடித்து ஒரு குலுக்குக் குலுக்கி, “என்ன சொல்கிறாய், செலீகஸ்?” என்று கேட்டான். செலீகஸ் சிரித்த முகத்தோடு பேசத் தொடங்கினான்: “உண்மையைச் சொல்கிறேன். அரசியார் கருவுற்றிருக்கிறார். அதிகாரபூர்வமான செய்தி!” வில்லவன் முகத்தில் மலர்ச்சியும் மருட்சியும் சூறாவளியைப் போல் சுழன்றன. “செலீகஸ்! விளக்கு எரியத் தொடங்கிவிட்டதா? என்னால் நம்ப முடியவில்லையே!” தனக்குள்ள அதிருப்தியை மூடி மறைக்காமல் தெரிவித்தான். “நண்பரே! பொய் சொல்லி ஒருவர் மனத்தைத் திருப்திபடுத்த இந்தச் செலீகஸின் மனம் என்றுமே இடம் கொடுத்ததில்லை. பிறந்த மண்ணும் பழியைச் சுமந்ததில்லை; என்னைச் சுமந்துகொண்டிருக்கும் மண்ணும் அப்படிப்பட்டதல்ல. கடந்த ஒரு வாரமாக நீ இங்கு இல்லாததால் சென்னிக்கொரு துணைவனாக விளங்கி, சில உண்மைகளைக் கண்டறிந்தேன். அவற்றில் ஒன்றைத்தான் உன்னிடம் சொன்னேன். முக்கியமான செய்தியும் இதுவே!” என்றதுமே அவன் பூரிப்புக்கு எல்லையில்லையென்றே கூறிவிடலாம். “செலீகஸ்! நீ சொல்வது முழுவுண்மையானால் இனி நமக்குக் கவலையில்லை. எந்தப் படை எந்தவித ரூபத்தில் வந்தாலும் வேதனை இல்லை, அல்லவா?” என்றதும், செலீகஸின் முகம் வாட்டத்தால் கூம்பிப் போன மலரைப் போலானது. “அப்படியானால் இன்னமும் நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லையா?” - செலீகஸ் சாதாரணமாகவே கேட்டான். ஆனால், அதிலும் அந்தக் கவலை படராமலில்லை. வில்லவனின் முகம் வேதனையால் சுருங்கியது! அந்தக் கோபுர தீபத்தை அவன் மறந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதன் அழகுக் கலசத்தின் மேலே வானத்துக்கு எச்சரிக்கை செய்வதுபோல வெற்றிப் புலிக்கொடி காற்றின் வேகத்தால் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த வண்ணம் அவனால் அவ்வளவுதான் பார்க்க முடிந்தது. ஆனாலும் அவனுடைய கண்கள் பெயரவில்லை. பெயர வைத்துவிட்டது, செலீகஸின் பேச்சு. “வில்லவா! உன்னுடைய உள்ளத்தை நான் நன்றாக அறிவேன். உன்னோடு பழகிய காலத்தை நினைத்தால் என் முன்னே குழந்தை வடிவம்தான் பளிச்சிடுகின்றது. இன்னமும் உன் இதயம் குழந்தையே. குழந்தையின் பிஞ்சு உள்ளத்தில் ஓர் ஆவல் ஆரம்பமாகிவிடுமானால் அந்த ஆவல் பூர்த்தியாகும் வரையிலும் அது உறக்கம் கொள்ளாது. நீயும் அப்படித்தான். உன் மனத்திலே ஒன்றைப்பற்றிய எண்ணம் விழுந்துவிடுமானால் அதற்கொரு முடிவு கிடைக்கும் வரையிலே ஓயமாட்டாய். அலைபோல அலைவாய்; மூளையைக் குழப்பிக் கொள்வாய்; அதைப் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கிவிடுவாய். இந்தப் பிடிவாதம் அரச குடும்பத்துக்கு மிகவும் வேண்டியதுதான். அதற்காக நீ வருந்தாதே! மன்னருக்கேற்ற மைத்துனர்!” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டுக் கவசத்தையெல்லாம் உற்றுப் பார்த்தான். ஏன்? தன் கையால் தடவியும் பார்த்தான். அவனுடைய இந்தச் செய்கையைக் கண்ட வில்லவன், “என்ன, செலீகஸ்! இப்படி வெறிக்க வெறிக்கப் பார்க்கிறாய்?” என்று கேட்டுவிட்டு மீண்டும் ஓலைச் சுருளில் விழிகளைப் பதிய வைத்தான். செலீகஸ் குமுறிய நெஞ்சோடு பேசத் தொடங்கினான்: “வில்லவா! நீ என் உயிரினும் இனிய நண்பன்; என் மனக் கோயிலைத் திறந்து வைத்துச் சொல்கிறேன். வில்லவா! நீ இல்லையென்றால் நான் இல்லை. கடந்த நாட்களில் நான் என் இமைகளை மூடியதில்லை. நீ சென்ற இடத்தில் என்ன நடந்ததோ ஏது நடந்ததோவென்ற பீதியினாலேயே தூங்காமல் தூங்கிக் கொண்டிருந்தேன். எனக்கு என் அன்னையைக் குறித்துக்கூடக் கவலை ஏற்படவில்லை. கிரேக்கத்திலிருந்து வந்த நான், என் பெற்றோரைப்பற்றி ஓரிரு முறைதான் என் ஞாபகத்துக்குக் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் உன் தொடர்பு எனக்குக் கிடைத்துவிட்ட பிறகு உன்னை நினைக்காத நேரமில்லை. இதற்கு என்ன காரணமென்பதே எனக்குப் புரியாத புதிராக இருந்து வருகிறது” என்று அவன் சொன்னதும், வில்லவன் கண்கள் மேல்நோக்கி நின்றன. செலீகஸின் செம்மையான நெஞ்சிலிருந்து பீறிட்டெழுந்து உதிர்ந்த கருத்துக்களையெல்லாம் அள்ளிப் பருகியது போதாதென்று எண்ணி, “செலீகஸ்.... என் ஆருயிர் நண்பா!” என்றவாறு அவனைக் கட்டித் தழுவி உச்சி முகர்ந்தான். அந்த அன்பின் பிணைப்பிலிருந்து இரண்டு வினாடிகளுக்குள் விடுபட்ட செலீகஸ், “சரி, சரி; இங்கிருந்தபடியே பேசியது போதும். நீ எங்கு சென்றாய் என்பது புரியாமல் அரசியார் கவலையோடு இருக்கிறார். சோழ குலக் கொற்றவனும் வேதனையோடு மேன்மாடத்தின் முற்றத்தில் அமர்ந்திருக்கிறார். உன் வருகையை ஆவலோடு அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இன்னமும்...” என்பதற்குள்ளாகவே, “அப்படியானால் நீ யாரிடமும் எதையும் சொல்லவில்லையா?” எனக் குறுக்கிட்டுக் கேட்டான். இந்தக் கேள்வியையும் அவன் மறந்துதான் கேட்டான். அதற்குள் செலீகஸ் பதில் சொல்ல முற்பட்டான். “வில்லவா! நீ தான் யாரிடமும் என்னைப்பற்றிச் சொல்லாதே என்றாயே!” - இதைச் சொன்னதும் வில்லவன் தன் தலையில் பலமாக அடித்துக்கொண்டான். தனக்குப் புதிதாக ஏற்பட்டிருக்கும் ஞாபக மறதியை நினைத்து உள்ளுக்குள் வருந்திவிட்டு, “செலீகஸ்! இன்னமும் என் அறிவு குழப்பத்தில் உழன்றபடி உள்ளது. இதற்குத் தூக்கம் இல்லாததும் காரணமாக இருக்குமோ?” என்றதும், செலீகஸ் சற்றும் தயங்காமல், “இருக்கலாம். தூக்கம், மனித தேகத்துக்கு மிகவும் அத்யாவசியமானது. அந்தத் தூக்கத்தைத் துறக்க ஒருவன் தீர்மானிப்பானானால் அவன் சற்று நேரத்துக்கு முன்னதாக நடந்ததைக் கூட மறந்துவிடுவான்! ‘இறந்த காலம்’ என்பது அவனைப் பொருத்த மட்டில் விதிவிலக்கு. ஆமாம்... நீயும் தூங்காமல்தான் இத்தனை நாட்களையும் கழித்தாயா?” என்றான். செலீகஸ் கேட்ட கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்ல முடியாமல் வானத்தில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த முல்லைப் பூக்களை அறிவால் முகர்ந்த வண்ணம் இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக ஓர் பயங்கர ஓசை எழுந்தது. அவ்வோசையைக் கேட்ட இருவரின் இதயங்களும் கல்லாகின. ஓசை கேட்கும் திசையை உற்றுக் கவனிக்கத் தலைப்பட்டனர். செலீகஸ் கையில் வாளேந்திக்கொண்டு வழியை உற்றுக் கவனித்தான். வில்லவன் உறையைத் தடவி விட்டபடியே கண்களை வழியின் மீது செலுத்தினான். இருவர் பார்வையிலும் சிட்டாகப் பறந்து செல்லும் ஓர் குதிரை தென்பட்டது. “ஆ! அதோ, புரவி!” என்று அலறிய செலீகஸின் வாயைப் பொத்திவிட்டு, “சூ! உரக்கப் பேசாதே. பேசாமல் என் பின்னால் ஒரு பத்தடி தொலைவுக்கு வா!” என்று அமைதியுடன் கூறிவிட்டு வேக வேகமாக அடியெடுத்து வைத்து விரைந்தான். அவன் நிழலையே துணையாக்கிக் கொண்ட செலீகஸ், தன் நெஞ்சில் மூண்டெழுந்த தீயை சிந்தனை என்னும் தண்ணீரால் ஒருவாறு அணைத்துவிட்டு வில்லவனின் வாய்ச் சொல்லுக்காக ஆவலோடு நின்றிருந்தான். தென் மேற்குத் திக்கை நோக்கிச் செல்லுபவர் யாராக இருக்க முடியுமென்ற சந்தேகத்தில் தீவரமாகிக் கிடந்த வில்லவன், “செலீகஸ்! உறையூர்க் காவலர்களெல்லாம் உலகத்தைவிட்டே ஓடிவிட்டார்களா?” என்று வெறுப்போடு கேட்டான். அந்தக் கேள்விக்குள் புதைந்திருந்த வெறுப்பை, அவனுடைய தொனியால் தெளிந்தவன் எதையும் சொல்லாமல் திருதிருவென விழிக்கலானான். அந்த விழிப்புக்கு விளக்கேற்றி வைப்பதுபோல இன்னொரு குதிரை அவர்களை நோக்கி மேற்குத் திசையிலிருந்து வந்து கொண்டிருந்தது. அதன் மீது அமர்ந்திருந்தவன் நாட்டின் நலனுக்காக இரவுக் காவல் புரிபவனே. அப்படித்தான் அவன் உருவம் நிலவொளியில் பளிச்சிட்டது. இருவருக்குமே தெளிவாகப் புரிந்தது! புரவிகளின்றி வெளிநாட்டு உளவாளிகளைப் போல் இருந்த இருவரையும் நெருங்கி வந்தான். ஆனால், அவன் நினைத்தது அணைந்து விட்டது. நெருங்கி வந்த ஊர்க் காவலன் தானைத் தலைவனையும் துணைப் பாதுகாப்பாளனையும் பார்த்துவிட்டுச் சட்டென்று குதிரையைவிட்டு இறங்கி வந்து தலை வணங்கினான். அம் மரியாதையைச் சிரந்தாழ்த்தி ஏற்றுக்கொண்ட செலீகஸ், “காவலா! அதோ, தென் மேற்குத் திசையாகச் சென்று கொண்டிருப்பவன் யார்?” என்று கொதிப்போடு கேட்டான். ஊர்க் காவலன் திரும்பிப் பார்த்தான். செலீகஸ் காட்டிய திக்கை ஊன்றிக் கவனித்தான். அவனும் ஓரிரு வினாடி வரையிலும் திகைப்பவன்போல் பாவனை செய்தான். அதன் பிறகு அவன் திணறவில்லை; திடமான உள்ளத்தோடு திரும்பினான். “தலைவ! வேறு யாருமில்லை. நம்முடைய கோட்டத்துக்கு உட்பட்ட குடந்தைக் குறுநில மன்னர் வேலழகர்தான் செல்கிறார்!” என்று எந்தவிதக் கிலேசத்துக்கும் அடிமையாகாதவாறு கூறினான். “தானைத் தலைவா! இப்போது உறையூர்க் கோட்டையிலிருந்துதான் வருகிறேன். நெடுங்காலமாக நம்முடைய மன்னர் மன்னரோடு ஒன்றியிருந்த பெரும் புலவர் சேந்தன் கொற்றனார் நம் அரண்மனைக்கு இன்று வந்துள்ளார். அவரைப் பார்த்துவிட்டுப் போகவேண்டுமென்று வேலழகர் வந்தார். அதனால்தான் சொன்னேன்!” - இதை அவன் சொன்னதும் வில்லவன் மனம் உயிர்பெற்று எழுந்ததென்றே சொல்ல வேண்டும். பெருமூச்செறிந்தான் அவன். செலீகஸ§ம், ‘ஓகோ!’ என்ற ஓங்காரத்தின் வாயிலாகப் பெருமூச்சொன்றை அவிழ்த்து விட்டபடி, “சரி! நீ போகலாம்!” என்று கட்டளைப் பணித்துவிட்டு வில்லவனை ஏறெடுத்துப் பார்த்தான். ஊர்க்காவலன் புறப்பட்டான். புறப்பட்ட காவலனை வில்லவனின் சொல்லம்பு தடுத்தது. “காவலா! இந்தக் கணத்திலிருந்து குறித்துக்கொள். நீ சொன்னது பொய்யாக இருக்குமானால் கொடுவாள் உன் கழுத்தைக் கொத்திச் சுவை பார்க்கும். சென்று வா!” என்று கனல் தெறிக்கும் கண்களோடு சொல்லிவிட்டுச் செலீகஸின் முகத்தைப் பார்த்தான். அவன் முகத்தில் என்ன இருக்கிறது? சுருக்கம் விழுந்த தோலோடுங் கூடிய முகத்தில் ஆப்பிள் நிறத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? அவனென்ன, வாலிபச் சீலனா? வயோதிகத்தை எட்டிப் பிடித்துவிட்ட அந்த வதனத்தில் ஜீவகளை தவழ ஏது வழி? என்றாலும் வீரத்தன்மை வீழ்ந்திருக்கவில்லை. அவ்வீரத்தன்மையினால் வில்லவனின் விழிகளை விழுங்கிவிடுவது போல ஒருமுறை பார்த்துவிட்டு மறுமுறை வெறுப்போடு தலையைத் திருப்பிக் கொண்டான். வில்லவனுக்கு வீர வணக்கம் செய்துவிட்டுச் செல்லும் வீரனையே உற்றுக் கவனித்தபடி இருந்தான். “செலீகஸ்!” - கனிவோடு கூப்பிட்டான் வில்லவன். “என்ன?” - வெறுப்போடு வினாக்குறியை எழுப்பிவிட்டு விரல்களை நொடித்தபடி நின்றிருந்தான். “கோபமாகப் பேசிவிட்டேனென்பதற்காக என்மீது கோபப்படுகிறாயா?” செலீகஸ் அமைதியாகவே இருந்தான்! “ஏன்? இனி, என்னிடம் பேசுவதே பாவ காரியம் என்று கருதுகிறாயா?” இப்போது அவன் அமைதியைக் கடைபிடிக்கவில்லை; கோவெனக் கதறிவிட்டான். “என் இனிய நண்பனே! இனியும் அப்படிப்பட்ட கொடிய சொற்களைக் கொட்டி என் உள்ளத்தைக் குமுறச் செய்துவிடாதே! நீ என் நண்பன்; அதுவும் உயிர் நண்பன். உன்னிடமிருந்து இதுபோன்ற கொடிய கருத்துக்கள் வெளிவரக் கூடாது. நீ அனைவரையும் சந்தேகிக்கக்கூடிய நிலைக்கு ஆளாகிவிட்டாயே என்பதை எண்ணித்தான் கோபப்பட்டேன். வேறொன்றுமில்லை!” என்றவாறு, தன்னுடைய சோர்ந்து போன கைகளால் அவன் முகத்தை வருடிவிட்டான். பத்து நாட்களுக்கு மேலாகத் தேக்கி வைத்திருந்த அன்பால் அவன் உடம்பைக் கழுவினான். அவனுடைய இந்தச் செயல்களையெல்லாம் நினைத்து மகிழ்ந்த வில்லவன், “விளக்கேற்றி வைத்த வித்தே! இனியும் நான் சந்தேக வலையில் வீழ்ந்து புரளமாட்டேன். போதுமா, இந்த உறுதி?” என்று அவனது கையைப் பிடித்து அழுத்தினான். அந்த அழுத்தத்தில் குளிர்ச்சி கண்ட செலீகஸ், “இது போதும் எனக்கு. நீ உடனடியாகப் புறப்படு. நான் மருவூர்ப் பாக்கத்துக்குச் சென்றுவிட்டு விரைவாக வந்து சேருகிறேன்!” என்றபடி, அவனது வலது கையைப் பிடித்து, முத்தமொன்றை மோதவைத்து அடியெடுத்து வைத்தான். அந்தச் சமயத்தில் அவன் ஞாபகத்துக்குச் செலீகஸினிடம் சொல்லிச் சென்ற செய்தி நினைவுக்கு மெருகேற்றவே செலீகஸைத் தடுத்து நிறுத்தினான். “ஆ! செலீகஸ்! கொடுங்கூற்றன் இருப்பிடம் தெரிந்ததா?” என்று மெல்லிய குரலில் கேட்டான். செலீகஸ் சுற்றுமுற்றும் பார்த்தான். எதிரிகள் யாராவது இருக்கிறார்களாவென்பதை விழிக்கோடுகளால் ஆராய்ந்துவிட்டு, “வில்லவா! நீ சென்ற நாள்தொட்டு நான் செய்துவந்த பெரும்பணி இதுதான். கூற்றுவன் கிடைக்கவில்லை; திடுக்கிடத்தக்க செய்தியொன்று கிடைத்துள்ளது. நீ சுட்டிக் காட்டிய மண்டபத்திலேயே நானும் சொல்கிறேன். இப்போது எதையும் சொல்லக் கூடாது. இந்த மரங்களுக்குக்கூட ஒட்டுக் கேட்கும் பழக்கம் உண்டாகிவிட்டிருக்கிறது. நான் போகிற காரியமும் அதை உத்தேசித்துதான். போய் வா!” - தனக்கிருக்கும் ஞாபகசக்தியை நளினமாக அறிமுகப்படுத்திவிட்டு அடியெடுத்து வைத்தான். “சரி!” - இதைத் தவிர வேறொன்றையும் சொல்லாமல் வில்லவனும் திரும்பினான். ஆனாலும் அவனுடைய அந்தரங்க மாளிகையில், ‘ஊம்! செலீகஸ் சொல்லப் போவது எதுவாக இருக்கும்! புதிர் போட்டுவிட்டுப் போகிறானே!’ என்ற பெருஞ் சந்தேகம் மின்னியது. திரும்பிப் பார்த்தான். அவன் இல்லை; வெறும் காலடி ஓசையே அவன் போவதற்குச் சான்றாகப் பரிணமித்துக் கொண்டிருந்தது. அப்போது...? நிலவானது நடுவானத்தின் மையத்தில் முகிலோடு போராடிக் கொண்டிருந்தது. அதை அவன் பார்க்கவில்லை; அவனை அது மட்டும் பார்த்தது! காரணம்? அவன் தன் கையில் தாங்கிக்கொண்டிருந்த ஓலைச் சுருளில் முழுக்கவனம் செலுத்தியிருந்ததால்தான்! |