(சிறுகதைத் தொகுப்பு) 1. தலைமுறை இடைவெளி துணைவேந்தர் மிகவும் அமைதி இழந்து காணப்பட்டார். ஒரு வேலையும் ஓடாமல் பரபரப்படைந்த நிலையில் இருந்தார் அவர். காந்தளூர்ப் பல்கலைக் கழக எல்லை ஏறக்குறையப் போர்க்களம் போல ஆகியிருந்தது. விடுதிகளைக் காலி செய்து மாணவ - மாணவிகளை வெளியே அனுப்புவதா, காம்பஸுக்குள் போலீஸை வரச்சொல்வதா என்பதைப் பொறுத்துத் துணைவேந்தருக்கும் பிரபுவுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. வார்டனாகிய டாக்டர் பிரபு, இளைஞர். ஓரளவு மாணவர்களோடு நெருங்கிப் பழகுகிறவர். அந்தப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத் துறையின் தலைவர். கலகலப்பாகவும் தாராளமாகவும் பழகும் இயல்புள்ளவர். துணைவேந்தர் குலசேகரன் இதற்கு நேர்மாறான இயல்புள்ளவர், முன்கோபி. பதற்றப்படுகிறவர். ‘இந்தத் தலைமுறையிலும் இனிமேலும் படிக்க வருகிற பையன்கள் உருப்படவே மாட்டார்கள். அரசியல்வாதிகள் அவர்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார்கள்’ என்று அடிக்கடி வெறுத்துச் சொல்லுகிறவர். “நான் அப்படி நினைக்கவில்லை ஸார்! மாணவர்களை வழிக்குக் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று டாக்டர் பிரபு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் துணைவேந்தரிடம் வாதாடுவார். மாணவர்களின் கட்சியை எடுத்துச் சொல்லுவார். இந்த முறை ஏற்பட்ட தகராறு மிகவும் சாதாரணமாகத்தான் தொடங்கியது. ஆனால் நொடியில் மிகப் பெரிதாக வளர்ந்த்விட்டது. ஹாஸ்டல் ‘பி’ பிரிவு மெஸ்ஸில் காலைச் சிற்றுண்டியின் போது இட்டிலிக்கு வழங்கப்பட்ட சட்டினியில் எப்படியோ ஒரு கரப்பான் பூச்சி விழுந்து கலந்து, ஒரு மாணவனின் பிளேட் வரை வந்துவிட்டது. மெஸ்ஸில் அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த அத்தனை மாணவர்களும் உடனே கரப்பான் பூச்சியோடு கூடிய அந்தத் தட்டுடன் ஊர்வலமாக உணவு விடுதிக் கண்காணிப்பாளரும் பொது உறவு அதிகாரியுமாகிய பி.ஆர்.ஓ.வைச் சந்திக்கப் போயிருக்கிறார்கள். இந்தப் பொது உறவு அதிகாரி யாரோ ஓர் அமைச்சருக்கு உறவினர். அதனால் தம்மை யாரும் எதுவும் செய்து விடமுடியாதென்று இறுமாப்பாக இருப்பவர். துணைவேந்தரை விடத் தம்மை அதிகச் செல்வாக்குள்ளவராக நினைப்பவர். வறட்டுப் பிடிவாதக்காரர். விட்டுக் கொடுக்காத முரண்டு உள்ளவர். சந்திக்க வந்த மாணவர்களை வரவேற்று அன்பாக இரண்டு வார்த்தை பேசி, “இனி, இப்படி நடக்காமல் கவனித்துக் கொள்கிறேன். சமையற்காரர்களையும் கண்டிக்கிறேன். தவறு நேர்ந்ததற்கு மன்னியுங்கள்” என்று அவர் ஆறுதலாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யத் தவறியதோடு எரிகிற நெருப்பில் எண்ணெயை வார்ப்பது போல், “எல்லாம் நீங்க படிச்சுக் கிழிக்கிற லட்சணத்துக்கு இது போதும். போங்கடா” என்பது போல் எடுத்தெறிந்து பேசிவிட்டார். உடனே அது பெரிய போராட்டமாக வெடித்து விட்டது. பொது உறவு அதிகாரி காம்பஸுக்குள் இருந்த தம் வீட்டிலிருந்து வெளியேற முடியவில்லை. மாணவர்கள் அவர் வீட்டை சூழ்ந்து கொண்டனர். கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கின. நாற்காலிகள் மேஜைகள் உடைந்தன. கற்கள் பறந்தன. ஒரே களேபரம். மெஸ்ஸிலும் பயங்கரமான சேதங்கள் ஏற்பட்டன. பொது உறவு அதிகாரி மன்னிப்புக் கேட்டாலொழிய விடமாட்டோம் என்றார்கள் மாணவர்கள். பொது உறவு அதிகாரியோ மன்னிப்புக் கேட்க முடியவே முடியாது என்றார். அவருக்கு ஒரு குறைவும் வராமல் பார்த்துக் கொள்ளும்படி மந்திரி டெலிஃபோன் மூலம் துணைவேந்தரை வற்புறுத்தினார். மந்திரியை எதிர்த்துக் கொண்டால் இன்னும் ஓர் ஐந்தாண்டு பதவியில் நீடிப்பது போய்விடும் என்ற பயம் துணை வேந்தருக்கு இருந்தது. அதனால் பொது உறவு அதிகாரிமேல் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஹாஸ்டல் சொத்துக்கள், விடுதியைச் சேர்ந்த பொருள்கள் ஆயிரக் கணக்கில் சேதம் அடைந்துங் கூடத் துணைவேந்தர் சம்பந்தப்பட்ட அதிகாரியைக் கண்டிக்கவில்லை; அவரைக் கடிந்து கொள்ள முயலவும் இல்லை. பையன்களின் கோபம் இதனால் அதிகமாயிற்று. “படிக்கிற பையன்கள் பணிவாகத்தான் போக வேண்டும். விநயம் இல்லாவிட்டால் வித்தையைக் கற்க முடியாது” என்றார் துணைவேந்தர். “நான் அப்படி நினைக்கவில்லை சார்! பணிவாக இருப்பது எப்படி என்று நாம்தான் அவர்களுக்கு நடந்து காட்டவேண்டும். நாமோ வீண் பிடிவாதம், வறட்டுக் கர்வம் இவற்றை வைத்துக் கொண்டு சுலபமாகத் தீரவேண்டிய பிரச்னையைக் கூட இழுத்தடிக்கிறோம். பணிவற்ற விதத்தில் பணிவைக் கூடக் கற்றுக் கொடுக்க முடியாது ஸார்.” “எதைச் சொல்கிறீர்கள் மிஸ்டர் பிரபு? நான் அவர்களிடம் போய் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறீர்களா?” “நான் உங்களைச் சொல்லவில்லை ஸார்! தவறு செய்தவர்களுக்கு அந்தப் புத்தி இருக்க வேண்டும்.” “ஏதோ மூத்தவன் சொன்னான் என்று மன்னித்து மறந்து விட்டுவிட வேண்டியதுதானே?” “மன்னிப்பு ஒரு வழிப்பாதை அல்ல. நாம் மன்னித்தால் தான் அவர்கள் மன்னிக்க முடியும். இந்தக் காலத்து இளைஞர்கள் மூப்பு என்பதைத் தவறு செய்யும் உரிமையாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஸார்! யார் செய்தாலும் தவறு தவறு தான் என்பார்கள்.” “நீங்களே மாணவர்களைப் போலப் பேசுகிறீர்களே! இந்தப் பல்கலைக் கழகத்தின் வார்டன் நீங்கள்தான் என்பதை நினைவு வைத்துக் கொண்டு பேசுங்கள்.” “பதவிகளையே நினைத்துக் கொண்டிருந்தால் மனிதத் தன்மைகள் மறந்து போய் விடுகின்றன, ஸார்!” “எனக்கு இந்தப் பையன்களோடு மாரடித்து மாரடித்து அலுத்து விட்டது. பல்கலைக் கழகத்தை ஒரு மாத காலத்துக்கு மூடிவிட்டுக் காவலுக்காகப் போலீஸை உள்ளே அழைப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.” “அப்படிச் செய்தால் சுலபமாகத் தீரக்கூடிய பிரச்னை மேலும் குழப்பமாகிவிடும். உண்ணும் உணவிலே புழு பூச்சியும் அசுத்தமும் இருந்தால் உங்கள் பையனோ என் சகோதரனோ கூடக் கோபப்பட நியாயம் இருக்கிறது. கமிஷன் கொடுக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக மட்டமான கடைகளில் பல்கலைக்கழக உணவுவிடுதிக்கான காய்கறிகள் சாமான்களை வாங்குகிறார்கள். அதனால் வருகிற வினைதான் இது.” “ஏதேது? நீங்களே மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பீர்கள் போல் இருக்கிறதே!” “உண்மையை ஏன் ஸார் மறைக்க வேண்டும்? தவறு நம் பக்கம் இருந்தால் நாம் ஒரு குழந்தையிடங்கூட வயது வித்தியாசம் பாராமல் துணிந்து உடனே மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்க வேண்டும் ஸார்!” “உங்களுக்கு வயதும் அனுபவமும் குறைவாக இருப்பதனால்தான் நீங்கள் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் பிரபு! பையன்களிடம் விட்டுக் கொடுத்தால் அப்புறம் நம்மை அவர்கள் மதிக்க மாட்டார்கள்.” “இந்தக் காலத்து இளைஞர்கள் வறட்டுப் பிடிவாதத்தையும் முரண்டுகளையுந்தான் மதிக்க மாட்டார்கள்; மன்னிக்க மாட்டார்கள். நாம் சிறிது விட்டு கொடுத்தால் அவர்களை நிச்சயம் வழிக்குக் கொண்டு வந்து விடலாம். ‘இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்’ என்று ஹாஸ்டல் பி.ஆர்.ஓ. ஊர்வலமாக வந்த மாணவர்களிடம் ஒரு வார்த்தை ஆறுதலாகச் சொல்லியிருந்தால் இவ்வளவு தூரம் இந்தப் பிரச்னை வளர்ந்திருக்காது ஸார்!” “சரி! உமக்கும் எனக்கும் ஒரு பந்தயம். நாளைக் காலை வரை டயம் தருகிறேன். மாணவர்களோடு கலந்து பேசி உம் கொள்கைப்படியே விட்டுக் கொடுத்து நிலைமையைச் சரி செய்தால் என் கையிலிருந்து உமக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன். உம்மால் முடியுமா? முடியாவிட்டால் நாளைக் காலையில் பல்கலைக் கழகத்தைக் கால வரையறையின்றி மூடும்படி உத்தரவிட்டு விட்டுப் பாதுகாப்புக்குப் போலீஸை அழைக்க வேண்டியதுதான்.” “நாளைக் காலைவரை அவசியம் இல்லை, ஸார்! இன்றிரவே நிலைமையைச் சரி செய்ய என்னால் முடியும். ஆனால் ஒரு நிபந்தனை.” “என்ன நிபந்தனை?” “பையன்களிடம் திமிராகப் பேசிய ஹாஸ்டல் பி.ஆர்.ஓ.வைத் தாற்காலிகமாகவாவது சஸ்பெண்ட் செய்து நீங்கள் ஓர் ஆர்டர் தரவேண்டும்.” “அது முடியாத காரியம். நான் மந்திரிக்கும் பயந்தாக வேண்டும். பி.ஆர்.ஓ. மந்திரிக்கு மிகவும் வேண்டியவர்.” “அவர் மட்டும் மாணவர்களிடம், ‘நீங்கள் படித்துக் கிழிக்கிற லட்சணத்துக்கு இது போதும் போங்க’ன்னு சொல்லியிருக்கா விட்டால் இவ்வளவு தூரம் வந்திருக்காது.” “என்ன செய்யறது? அவர் போதாத வேளை! சொல்லித் தொலைத்திருக்கிறார்.” “அது உங்களுக்கும் எனக்கும் பல்கலைக்கழகத்துக்கும் அல்லவா போதாத வேளையாக முடிந்து விட்டது?” இதற்குத் துணைவேந்தர் பதிலெதுவும் கூறவில்லை. பிரபுவே மேலும் பேசினார்: “ஒரு தனி நபருடைய பிடிவாதத்துக்காகப் பல்கலைக் கழகத்தையே மூட முடியாது. அவரைச் சஸ்பெண்ட் செய்ய முடியாவிட்டாலும், ஹாஸ்டலுக்குக் காய்கறி, பலசரக்கு சாமான்கள் வாங்குகிற பொறுப்பை அவரிடமிருந்து வாடனாகிய என் பெயருக்கோ வேறு ஒருவர் பெயருக்கோ உடனே மாற்றுங்கள். அடுத்த நிமிஷமே இந்த ரெஸிடென்ஷியல் யூனிவர்ஸிடி முழுவதும் அமைதியடைந்து பழைய நிலைக்குத் திரும்பச் செய்து விடலாம். ‘நாங்கள் செய்த எந்தத் தவற்றுக்காகவும் வருந்த மாட்டோம். மாணவர்களே பணிந்து பேச வேண்டும்’ என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது நடக்காது. பிடிவாதம் மற்றொரு பிடிவாதத்தை வெல்லாது. பிடிவாதத்தை அன்பாலும் விட்டுக் கொடுப்பதாலுமே ஜெயிக்க முடியும்.” துணைவேந்தர் தயங்கினார். சிந்தித்தார். நீண்ட நேர சிந்தனைக்குப் பிறகு வேறு வழி இல்லை என்ற காரணத்தால் வேண்டா வெறுப்பாக வார்டனின் நிபந்தனைக்கு அவர் இணங்க வேண்டியதாயிற்று. “பி.ஆர்.ஓ.வைச் சஸ்பெண்ட் செய்தால்தான் அவருக்கும் அவருக்கு வேண்டிய மந்திரிக்கும் கோபம் வரும். ‘ஹாஸ்டலுக்கு வேண்டிய காய்கறி, பலசரக்கு, பால் தயிர் முதலிய சாமான்கள் வாங்கும் பொறுப்பை இனிமேல் வார்டனே கவனித்துக் கொள்வார்’ என ஆர்டர் போடுவதில் எனக்குச் சிரமம் எதுவும் இல்லை, பிரபு!” “உங்களுக்குச் சிரமம் இருக்காது ஸார்! ஆனால் பி.ஆர்.ஓ. அதனால் சிரமப்படுவார். சாமான்கள் வாங்குவதில்தான் அவருக்கு லாபம் இருக்கிறது.” “புரிகிறது” என்றார் துணைவேந்தர். அடுத்த அரை மணி நேரத்துக்குள்ளே ஹாஸ்டலுக்குச் சகல சாமான்களும் வாங்கும் ‘பர்ச்சேஸிங் அதாரிடி’யாக வார்டன் பிரபுவுக்கு அதிகாரம் அளிக்கும் ஆர்டரை அவர் கையில் தந்தபடியே, “இந்த ஆர்டரை மட்டும் வைத்துக் கொண்டு இவ்வளவு பெரிய கொந்தளிப்பை எப்படித்தான் அடக்கப் போகிறீர்களோ, எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் சொன்னபடியே செய்கிறேன். உமக்கும் எனக்கும் பந்தயம் வேறு இருக்கிறது” என்றார் துணைவேந்தர். “பந்தயத்தில் நிச்சயமாக நான் ஜயிக்கிறேன். ஆயிரம் ரூபாய் தயாராக இருக்கட்டும்!” என்று கூறிவிட்ட்டுப் புறப்பட்டார் டாக்டர் பிரபு. அப்போது மாலை ஆறு மணி. துணைவேந்தர், பிரபு திரும்பிவர இரவு எவ்வளவு நேரமானாலும் அதுவரை தம் அலுவலகத்திலேயே காத்திருப்பதாகச் சொல்லியிருந்தார். துணைவேந்தருக்கு நம்பிக்கை இல்லை. ஒரு சிறு அதிகார மாறுதல் உத்தரவை மட்டும் வைத்துக் கொண்டு மாணவர்களின் கொந்தளிப்பை அடக்கிவிட முடியும் என்று தோன்றவில்லை. ‘பி.ஆர்.ஓ.வை டிஸ்மிஸ் செய்’ என்றுதான் மாணவர்கள் வற்புறுத்துவார்கள் என்று எண்ணினார் துணைவேந்தர். பிரபு நிச்சயமாகப் பந்தயத்தில் தோற்றுப்போய் ஆயிரம் ரூபாயைத் தம்மிடம் எண்ணி வைக்கும்படி நேரப் போகிறது என்றுதான் துணைவேந்தர் நம்பினார். ஆறே முக்கால் மணிக்கு அறையின் முகப்பில் பால்கனிக்கு வந்து வெளியே பார்த்தபோது, ஹாஸ்டல் புல்வெளியில் மாணவர்கள் கூட்டத்தின் நடுவே பிரபு பேசிக் கொண்டிருப்பதைத் துணைவேந்தர் குலசேகரன் கவனித்தார். உள்ளூரிலுள்ள பிரபல ஹோட்டலின் ‘காட்டரிங் சர்வீஸ் வேன்’ ஒன்று சிற்றுண்டி காப்பியுடன் ஹாஸ்டலுக்குள் நுழைவதையும் கண்டார். சிறிது நேரத்தில் மாணவர்களுக்குச் சிற்றுண்டி காபி வழங்கப்படுவதையும் துணைவேந்தர் கவனித்தார். பிரபு தண்டச் செலவு செய்வதாகத் தோன்றியது அவருக்கு. அறைக்குத் திரும்பி யூனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன் ஃபைலை எடுத்துப் புரட்டத் தொடங்கினார். துணைவேந்தரின் மனம் ஃபைலில் செல்லவில்லை. ஏழே கால் மணிக்கு, “மே ஐ கம் இன் ஸார்” என்ற வேண்டுதலோடு இரண்டு மாணவர்கள் பின் தொடரத் துணைவேந்தர் அறைக்குள் நுழைந்தார் வார்டன் பிரபு. முதலில் தம்முடன் வந்த மாணவர்களைத் துணைவேந்தருக்கு முன் அமரச் செய்துவிட்டுப் பின் பிரபுவும் அமர்ந்தார். வந்திருக்கும் மாணவர்கள் இருவரும் மாணவர் யூனியனின் தலைவரும் செயலாளரும் என்பது துணைவேந்தருக்குத் தெரியும். “ஸார்! நாங்கள் போராட்டத்தை நிறுத்திக் கொள்கிறோம். பிரச்னையைச் சுமுகமாகவும் மாணவர்களாகிய எங்கள் மேல் அநுதாபத்துடனும் தீர்த்து வைத்த டாக்டர் பிரபுவுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்” என்றார்கள் மாணவர் பிரதிநிதிகள் இருவரும். துணைவேந்தருக்குத் தம் செவிகளையே நம்ப முடியவில்லை. பிரபுவிடம் ஏதாவது வசியமருந்து இருக்குமோ என்று வியப்பாக இருந்தது அவருக்கு. “இனி நீங்கள் போகலாம்” என்று பிரபுவே மாணவர்களிடம் கை குலுக்கி விடை கொடுத்தார். துணைவேந்தரோடும் கை குலுக்கி விடை பெற்றுக் கொண்டு மாணவர்கள் சென்றார்கள். அவர்கள் சென்றதும், “மிஸ்டர் பிரபு! என்னிடம் ரொக்கமாக அவ்வளவு பெருந்தொகை இல்லை. ஒரு செக் தருகிறேன்” என்று கூறியபடியே ஆயிர ரூபாய்க்குச் செக் எழுதத் தொடங்கினார் துணைவேந்தர். “பரவாயில்லை. எப்படி ஆனாலும் சரி. உங்கள் ‘செக்’கை நான் பணமாக மாற்றப் போவதில்லை, ஸார்! சும்மா ஒரு நற்சான்றிதழைப் போல ஃப்ரேம் போட்டு மாட்டப் போகிறேன்” என்றார் பிரபு. “உங்கள் இஷ்டம்” எனப் புன்முறுவல் பூத்தவாறே பிரபுவிடம் செக்கைக் கொடுத்துவிட்டு, வியப்பு மேலிட்ட குரலில், “என்ன ஐயா மந்திரம் போட்டீர்? ஆறு மணிக்குப் புறப்பட்டுப் போய் ஏழரை மணிக்குள் காரியத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு வந்து விட்டீரே!” என்று வினவினார் துணைவேந்தர். “ஒரு மந்திரமும் இல்லை. எல்லாத் தரப்பு மாணவர்களையும் கூப்பிட்டு அன்போடு பேசினேன். அவர்கள் சொல்வதையும் பொறுமையோடு கேட்டேன். பின்பு ஹாஸ்டலுக்குச் சாமான்கள் வாங்கும் பொறுப்பு மாற்றம் பற்றிய உங்கள் ஆர்டரைக் காட்டினேன். அப்படிக் காட்டிய சுவட்டோடு, ‘ஹாஸ்டலுக்குக் காய்கறி பால் தயிர், பலசரக்கு வாங்கும் விஷயத்தில் எனக்கு ஆலோசனை கூற, ‘ஸ்டூடண்ட்ஸ் அட்வைஸரி பேனல்’ ஒன்று தேவை. அதற்கு நீங்களே பெயர்களைத் தாருங்கள்’ என்று கூறி, அவர்களில் பன்னிரண்டு பேர் கொண்ட ஓர் ‘அட்வைஸரி பேனல்’ அமைத்தேன். முடிந்ததும் என் சொந்தச் செலவில் வெளியே இருந்து குட்லண்ட்ஸ் ஓட்டல் காட்டரிங் ஸர்வீஸ் மூலம் மாணவர்களுக்கு ஒரு டீ கொடுத்தேன். பிரச்னை சுலபமாக முடிந்து விட்டது.” “உண்மையாகவா? பிரமாதம்!” “பிரமாதம் ஒன்றும் இல்லை, சாதாரணமாகத்தான் இதை நான் செய்தேன். கடுமையாக இருப்பதனால் எந்தச் சிக்கலும் தீராது. தாராள மனப்பான்மை ஒன்றுதான் சிக்கலைத் தீர்க்கும்” என்றார் பிரபு. துணைவேந்தர் எதிரே நிற்கும் அந்த முப்பத்திரண்டு வயது இளைஞரின் மலர்ந்த முகத்தை நிமிர்ந்து பார்த்தார். வயதில் மட்டுமல்லாமல் சிந்தனையிலும் பிரச்னைகளை அணுகும் முறையிலும் கூட, அவருக்கும் தனக்கும் கால் நூற்றாண்டு இடைவெளி இருப்பது போல் தோன்றியது துணைவேந்தருக்கு. தம் இருக்கையிலிருந்து புதிய மரியாதையோடு எழுந்து நின்று, “ரொம்ப நல்லது! உங்களைப் பாராட்டுகிறேன், மிஸ்டர் பிரபு” என்று கைகுலுக்கி விடைகொடுத்தார் அவர். வெளியே காம்பஸில் இரண்டு நாட்களாகக் கேட்டுக் கொண்டிருந்த ‘ஒழிக, டௌன், டௌன்!’ என்ற குரல்கள் ஓய்ந்திருந்தன. அமைதியினிடையே மாமரத்துக் குயில் நிதானமாக அகவுவது கேட்கத் தொடங்கியிருந்தது. (கலைமகள், தீபாவளி மலர், 1977) |