1 சாளரத்தின் ஓரத்தில் கிடந்த பெட்டியின் மீது அமர்ந்தவாறே, வானைப் பார்த்திருந்தேன். வானில் வெள்ளிப் படகுபோல, வளர்பிறை மிதந்து சென்று கொண்டிருந்தது. படகைச் சுற்றி வைடூரிய மணிகளைப் போல மினுங்கிக் கொண்டிருந்தன தாரகைகள். பூஞ்சோலையில் பூத்த வர்ணப் பூக்களைப் பார்வையிட்டவாறே செல்லும் ஒரு அரசகுமாரியைப் போல, மெதுவாக நடை பழகிச் சென்றது நிலவு. குதூகலத்தில் என்னையுமறியாமல், துள்ளிக் கொண்டிருந்த என் மனத்திற்கு, அது அழகான இன்பக் கனவுகளையெல்லாம் பெருக்கிக் காட்டிக் கொண்டிருந்தது. அமைதியும் மகிழ்ச்சியும் மனத்தில் துளும்பிற்று. திடீரென ஒரு மேகம், கன்னங் கறுத்து, வெள்ளிப் படகை மூழகடிக்க வரும் பிரமாண்டமான அலை மாதிரி விரைந்து வந்தது. அப்பா சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தார். பக்கத்திலே அம்மா வெற்றிலை மடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளது நோக்கும் இருப்பும் அப்பாவின் மீதே பதிந்திருந்தன. முன் தோன்றிய தேவதையின் வாயிலிருந்து வரக்கூடிய வரத்தை எதிர்நோக்கும் தபசியைப் போல அவள் இருந்தாள். “எனக்கும் முன்னாமே வைத்து அதே எண்ணந்தான். நம் ரஞ்சனிக்கேற்ற மாப்பிள்ளைதான் அவன்” என்றார் அப்பா. “பையனுக்கென்ன? அழகும், தகுதியும் நிறைந்து கிடக்கிறது. ஆனாலும் நம் ரஞ்சனியைக் கட்டக் கொடுத்து வைக்க வேண்டுமே” என்றாள் அம்மா. “பையன் பி.ஏ. படிக்கிறான். அவன் அம்மா அப்பாவுக்கு இந்த விடுமுறையிலேயே கலியாணத்தை முடித்து விட வேண்டும் என்று ஆசை. படிப்பிலேயும் மிகவும் சூட்டிகமுள்ளவன்; எப்படியும் இந்த வருடம் தேறிவிடுவான். பிறகு ஒரு சிரமமுமில்லை. நம் கடனும் தீர்ந்ததென்று இருக்கலாம்” என்றார் அப்பா. “பி.ஏ. படிக்கிறவர். எனக்கும் முன்னமே வைத்து அதே எண்ணந்தான்” - இந்த வார்த்தைகள் என் மனத்திற்கு ஒரு சிறந்த குதூகலத்தை ஊட்டிற்று. ‘அவரும்’ பி.ஏ. படிப்பவர்தானே? அவரும் அழகுடையவர்தான்; தகுதிக்கும் குறைவில்லை. அப்பா குறிப்பிட்டவர் மட்டும் அவராயிருந்தால்... சே! அவராய்த் தான் இருக்க வேண்டும். இந்தப் பாழும் மனம் என்னவோ அடிக்கடி அலைப்புறுகிறது. அவர்கள் பேச்சு ஓயவில்லை. நானும் அவர்கள் பேசுவதைக் கேட்டேன். “எதற்கும் சந்திரசேகரன் இந்த விடுமுறையில் ஊருக்கு வரும்போது அவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறது.” என் மனம் துள்ளியது: “சந்திரசேகரன்!” எனது தாரக மந்திரம்! அவர் தானா? அவர் மட்டும்... ஆனால் - ? “ஆமாம். சந்திரசேகரனும் அந்தப் பையனும் ஒன்றாய்த்தான் படிக்கிறார்களாம். மற்றவர்களிடமிருந்து தெரிந்து கொள்வதை விட, சிநேகிதனிடம் கேட்பதில் எவ்வளவோ செய்திகள் தெரிந்துவிடுமல்லவா?” என்றார் அப்பா. என் மனது சுழன்றது. இவ்வளவு நாளும் நான் கனவு கண்டதெல்லாம் மண்ணோடு மண்ணாய் மக்கிப் போய்விட்டது. எனது மனத்தில் இவ்வளவு நாளும் வைத்துப் போற்றி வரும் தெய்வத்தை அகற்றி, வேறொன்றை அமர்த்தச் சதி நடக்கிறது! என் கண்கள் கலங்கின. நீர்த்திரை மூடிய கண்களால் வானைப் பார்த்தேன். அந்தக் கருமேகம் சந்திரனுடைய ஒளியைப் பரிபூரணமாக மறைத்துவிட்டது. ஒரே இருள்! என் மனத்திலும் அப்படித்தான். என் மனத்தை இருள வைத்த மேகம் விலகுமா? என் சிந்தனை சுழன்றது... “கல்யாணம்” - அதை நினைக்கும் போது ஆகாயக் கோட்டைகள் கட்டும் என் மனம் விம்முகிறது. ஆகாயக் கோட்டைகள் யாரும் கட்டலாம். ஆனால் அடிப்படைதான் பலமாயிருக்க வேண்டும் என்பதையே மறந்து விடுகிறது. கல்யாணம் ஆனந்தகரமானதுதான். ஆனால், பிறர் இருந்து அதை ஒரு கடனாகச் செய்ய முனையும்போது, அதனுடைய சுவையே கெட்டுப் போய்விடுகிறதே. என்னைப் போன்ற ஒரு பெண்ணின் வாழ்க்கைக் கடலின் எவ்வலையும், அமைதியையும் நிர்ணயிக்கக்கூடிய சக்தி அதற்குத்தான் உண்டு. ஆயினும், எனது பெற்றோர்களைப் போல, பிறர் அதை ஒரு கடமையாகப் பாவித்து, நிர்ப்பந்தத்துக்கு உட்படுத்தும் போது, அது தன் தெய்வீக சக்தியையே இழந்துவிடுகிறது. “ரஞ்சி! ரஞ்சி!” - இது அம்மாவின் குரல். “என்னம்மா” என்றேன், அடைபட்ட தொண்டையைத் திறக்க முயன்று. “வாசலிலே யாரோ ஒருவன் பிச்சை கேட்கிறான். கொஞ்சம் பழையது இருந்தால், கொண்டு வந்து போடு” என்று சொன்னாள், வாஞ்சையோடு. அந்த வாஞ்சை எனது இதயத்தை முன்போல் தொடக்கூட இல்லை; என் இதயம் தன் வாசலைச் சாத்திக் கொண்டது. சிறு கோப்பையில், கொஞ்சம் சாதம் எடுத்துக்கொண்டு நடைப்பக்கம் போனேன். நான் கொண்டு வரும் நாலைந்து பருக்கைக்காக ஏக்கத்துடன் நின்றுகொண்டிருந்த அந்த ‘அன்னக்காவடி’ என்னை வரவேற்றான், “மகராசி, நீ நல்லாயிருக்கணும்” என்ற வார்த்தைகளால். அதில் ஏதேனும் அர்த்தமிருந்ததோ, என்னவோ? அவனது தோளில் கிடந்த காவடியின் வெண்கல மணி உடைந்து போயிருந்தது. அந்த மணியடிக்கும் போது, மோன நிலையிற் பொருமும் பேதையின் நினைவுதான் எனக்கு வந்தது. ‘கணீர் கணீர்’ என்று ஒலிக்கக் கூடிய சக்தியை அது எப்போது இழந்ததோ? அவன் கையில் ஹரிக்கேன் விளக்கு. அப்பா! அதை அவன் விளக்கி, எவ்வளவு நாட்களாயிற்றோ? சிமினி யெல்லாம் ஒரேயடியாய்ப் புகை மண்டிக் கிடந்தது. அந்தச் சிமினியின் உள் மினுங்கிய சுடர் தனது ஒளியை விரிக்க முடியாது தவித்தது. என் மனமும் அப்படித்தானிருந்தது. என்னுடைய பெற்றோர்களின் எண்ணம், எனது இதயத்தில் எரிகின்ற ஒளியை மறைத்து அணைக்க முயல்கிறது. என் பேதையுள்ளம் அந்த இதயத்தினுள்ளேதான் வட்டமிட முடியும். அந்த உள்ளத்தைத் திறந்து வேறு யாருக்கும் காட்ட இயலாது. அப்படியே காட்ட முயன்றாலும், அது பிறருடைய மனத்திலும் பதியுமா என்பது சந்தேகம். ஆமாம், தனது உள்ளத்தின் ஒலியை ‘கணீர்’ என்று வெளிக்குக் காட்ட முடியாமல் ஏங்கும் அந்த உடைந்த வெண்கல மணிக்கும் எனது உள்ளத்திற்கும் என்ன வித்தியாசம்? பிச்சைக்காரன் தெருக் கோடியைக் கடந்து செல்லும் வரையிலும் நான் நின்றேன். இருளின் நிழல் போன்ற அவனுருவம் மறைந்த பிறகுதான் நான் வீட்டிற்குள் வந்தேன். நேராகப் படுக்கைக்குப் போய்ப் படுத்துக் கொண்டேன். உள்ளமும் கண்களும் கலங்கிக் கொண்டேயிருந்தன. படுக்கையில் படுத்தவாறே, வெளியே நோக்கினேன். வானம் இன்னும் இருண்டுதான் இருந்தது. அந்த இருண்ட வானத்தின் மோன அமைதியிலே, ஏதேனும் சாந்தி கிடைக்குமா என்று என் கண்களும் மனமும் துழாவின. மனம் சாந்தியடையவில்லை. கொந்தளிப்பு அதிகமாயிற்று. கலங்கிய என் கண்களிலிருந்து, சூடு பொருந்திய கண்ணீர் காதை நோக்கி வழிந்தோடிற்று. என் மனத்தில் என்னவோ ஒன்று, கண்ணீரை நிறைய பெருக்கிக் கொட்ட வேண்டும் என்று தூண்டிக் கொண்டிருந்தது. அந்த நினைப்பே வற்றாத நீரூற்றுப்போல, கண்ணீரைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது. உண்மை! கண்ணீரைப் பெருக்குவதால், நைந்த மனத்துக்கு, சிறிது ஆறுதல்கூட ஏற்படுகிறது. உள்ளுக்குள்ளேயே கொந்தளிக்கின்ற துயரம் கண்ணிலிருந்து புறப்படும் கண்ணீருடன் கலந்து, சிறிதளவு குறையத்தான் செய்கிறது. கண்ணீர், துக்கத்தைக் கரைத்துவிடும் திராவகமோ என்னவோ? பனி படர்ந்தது போலிருந்தது எனது பார்வை. நீர்த்திரை படர்ந்த என் கண்கள் அவ்விருளை ஊடுருவிப் பார்க்கும்போது, சிந்தனை, அவிழ்த்துவிட்ட கன்றைப் போல, எங்கெல்லாமோ பாய்ந்து, துள்ளிக் கொண்டிருந்தது. - அப்பாவும் அம்மாவும் தெய்வங்கள்தான். ஆனால், தெய்வம் மனிதனுக்குத் தேவையானது - நியாயமாகத் தேவையானது எது என்பதை அறியாது தான் விரும்பியதையே அளிக்கக் கூடியதாயிருந்தால், அதனால் சமூகத்துக்கு என்ன பலன்? - திறந்து காட்ட முடியாத உள்ளத்தைப் பெண்களுக்குப் படைத்துவிட்டு கடவுள் ஏன் அவர்களது மனத்தில் அமுத அலைகளை வீசும் உணர்ச்சிகளையும் உண்டாக்கினார்? - வாழ்க்கை என்பதே ஏமாற்றந்தானா? இப்படி யெல்லாம் சிந்தனையலைகள் ஏறியிறங்கின. நான் அப்படியே படுத்திருந்தேன். இந்தத் துயரத்தின் வேளையிலும், எனக்குப் பழக்கமான அந்த முகம் என் கண் முன் இருளைப் பிளந்த மின்னல் போல ஒளி தந்தது. அம் முகந்தான் என் மனதுக்குச் சாந்தியளிக்க முயன்றது. திறந்திருந்த என் கண்களை மூடியவாறே, அந்த உருவத்தைப் பார்க்கச் சாத்தியமாயிருந்தது. சாந்தியளிக்க சக்தியுள்ளதாகக் கருதும் அந்த முகத்தை நான் கவனித்தவாறே இருந்தேன். என் உள்ளத்தை நிறைத்து நின்றது, அந்த முகம்! அந்த முகம்! அந்த... நான் எப்படியோ தூங்கிப் போய்விட்டேன். |