முன்னுரை

     இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இந்திய சுதந்திரத் திருநாளின் பொன்விழா கொண்டாடப் பட்டது. முதல் சுதந்தரத் திருநாளின் பரவச உணர்வுகளை, அநுபவித்த அந்நாளை மக்கள், அன்றைய மகிழ்ச்சி அநுபவத்தில் நூற்றில் ஒரு பங்கு கூடப் பிரதிபலிக்காத கொண்டாட்டத்தைக் காண்கையில், பழைய நினைவுகளையே அசைபோடுவது தவிர்க்க இயலாததாக இருந்தது. புதிய தலைமுறைகள், நுகர் பொருள் வாணிப அலையிலும், சினிமா, சின்னத்திரை மாயைகளிலும், வெளிநாட்டு வாய்ப்புகளைத் தேடி, நுழைவுக்கான அனுமதி தேடி அந்த அலுவலக வாயில்களில் இரவு பகலாகத் தவம் கிடக்கும் உறுதி நிலையிலும், தங்களை மூழ்கடித்துக் கொண்டிருந்தன. நடுத்தர வர்க்கம் என்று அடையாளமிடப்பட்ட வர்க்கம், அன்றாடம் ஏறும் விலைவாசிகளிலும் தேவையில்லாப் பொருட்களின் ‘திணிப்பு’, தேவை நெருக்கடிகளிலும் வரவுக்கும் செலவுக்கும் தாக்குப்பிடிக்க இயலாமல், ‘உபரி’ வருமானங்களுக்காகச் சத்தியங்களைத் தொலைப்பதுதான் தருமம் என்று பழக்கப்பட்டுவிட்டிருந்தது. வறுமைக்கோடு மேலே மேலே உயர்ந்து, மக்கள் தொகையின் அதிக விழுக்காட்டைத் தன் வரையறைக்குக் கீழே தள்ளிக் கொண்டிருந்தது. அந்த அடித்தளத்துக்கு இன்றியமையாத தேவைகளாகப் பெருகியிருந்த சாராய, சூது, பெண் வாணிப விவகாரங்கள், கோட்டு வரையறை கடந்த உச்சாணி வரை கோலோச்சிக் கொண்டிருந்தன. நாளொரு கொலையும் பொழுதொரு கொள்ளையுமாக அழிவுகள் சாம்ராச்சியப் படையெடுப்பையும் விஞ்சிக் கொண்டிருந்தன. நம் அறிவியல் மேம்பாடுகள், ‘ராக்கெட்’ ஏவுகணை, விண்வெளி ஆய்வு, வீரிய விதைக் கண்டுபிடிப்பு என்ற சாதனையாளரால் மட்டும் பெருமை பெறவில்லை. இத்தகைய தொழில் நுட்பங்கள், உலகளாவிய மோசடிகளாலும், பெண் வாணிபங்களாலும் ‘வாணிபம்’ நடத்தும் அளவுக்கும் ‘பெருமை’ பெற்றிருக்கின்றன.

     இந்தச் சூழலிலும், அரசியல் கட்சிகளின் பதவி பிடிப்புக் கூட்டணிச் சதுரங்க ஆட்டக் காய் நகர்த்துதலின் இடையே ஒரு முக்கியப் புள்ளியாக, சுதந்தரப் பொன்விழா அரங்கேற்றப்பட்டது. புத்தாயிரம், புதிய நூற்றாண்டு என்ற எதிர்பார்ப்பும் இந்தக் கொண்டாட்டங்களுக்கு ஒரு விறுவிறுப்பூட்டியது. அரசு சார்ந்தும், சாராமலும், சோர்ந்து கிடந்த மேற்பரப்புக்கு, ஒரு ‘காபி’ குடிக்கும் விறுவிறுப்பு உற்சாகம் ஊட்டியது. சின்னத்திரை, பெரிய திரைகள், பத்திரிகைகள், நட்சத்திர இரவுகளை உருவாக்கி, தேசபக்திப் பாடல்களை அரங்கேற்றின. கண் பார்வையும் மங்கி, செவிப்புலனும் கூர்மை குறைந்து, இக்கால நடப்பியலுக்குச் சிறிதும் தொடர்பில்லாமல், வாழும், சுதந்தரப் போராட்ட கால முதியவர்களைத் தேடிப் பிடித்து, அவர்கள் அரை குறையாக உதிர்க்கும் நினைவுகளைப் பதிவு செய்து மக்கள் தொடர்பு சாதனங்கள் கடமையை நிறைவேற்றின. இந்தக் கொண்டாட்டங்களில், சுதந்தரப் போராட்ட நாட்களில் இருந்து தொடர்ந்து பொது வாழ்விலும், அரசியல் வாழ்விலும், ஒரே இலட்சியத்துடனும் வேகத்துடனும் செயல்பட்டு வரக்கூடிய ஒரு மனிதரைக் கூட அடையாளம் காண முடியவில்லை. ஏனெனில், ‘சுதந்தரம் வரும்’ என்ற விடிவெள்ளி உதயமாகும் போதே, நாடு துண்டாடப்பட்டதும், குறிக்கோள்களை எட்டும் பாதைகளில் இருந்து குறுகிய இடைவெளிகளில் போராளிகள் தள்ளப்பட்டதும் குழுக்களாகப் பிளவுகள் ஏற்பட்டதும் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாயின.

     காந்தியடிகள் கண்ட சுயராச்சிய, கிராம ராச்சியக் கனவுகள், தனிமனிதத் தூய்மை, ஒழுக்கப் பண்புகளின் அடிப்படையில் அமைந்தவை. ஆனால் அந்த வரையறைகள் மெல்ல மெல்ல, தனனலம், பதவி, புகழ் ஆகிய பூச்சிகளால் அழிக்கப் பெற்றன. அதே பூச்சிகள், மனித வாழ்வியலின் அனைத்து நல்லணுக்களையும் விழுங்கி, புற்று வளர்ச்சி போன்றதொரு சமுதாய வளர்ச்சியை, மேன்மையைத் தோற்றுவித்திருக்கிறது. வாழ்க்கை வசதிகள் ஏராளம். ஆனாலும் அடிப்படை வாழ்வாதாரங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.

     இந்தப் பின்னணியில், நான் இந்தப் புதினத்தை எழுதுவதற்கான உந்துதல் பெற்றதற்கொரு காரணம் உண்டு.

     ‘ஸ்டாலின் குணசேகரன்’ என்ற ஈரோட்டு வழக்கறிஞர், தம் தொழிலை ஒதுக்கி வைத்துவிட்டு, ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ என்ற தலைப்பில், ஓர் அரிய நூலைத் தொகுக்கும் முயற்சியில் இறங்கினார். அந்த நண்பர், இதற்காக நாடு முழுதும் மக்களைச் சந்தித்தும், நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள் என்று அலைந்து திரிந்து தேடியும் தகவல்கள் திரட்டுகையில் அவ்வப்போது வந்து என்னைச் சந்திப்பார். ஆர்வமுடன் விடுதலைப் போராட்ட வீரர்களை, தியாகிகளைப் பற்றிய செய்திகளை விவரிப்பார். தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற வீரர்களைப் பற்றிய நூல்கள், நாடு தழுவியும், பல்வேறு பிராந்தியங்கள் சார்ந்தும் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த நூல்களிலெல்லாம், தமிழகம் சார்ந்த வீரர்களின் போராட்டம் பற்றிய விவரங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை என்ற உண்மை புலனாயிற்று. எனவே அவருடைய பெருமுயற்சியின் பயனாக, பல்வேறு சான்றோர்களால் எழுதப்பட்ட நூறு கட்டுரைகள், சுமார் ஆயிரத்து இருநூறு பக்கங்களைக் கொண்ட நூல் இரு தொகுப்புகளாகப் பதிப்பிக்கப்பட்டு விடுதலை வேள்வியில் தமிழகம் என்ற தலைப்பில் 2000ம் ஆண்டில் வெளிவந்தது.

     இந்த அரிய தொகுப்பு நூலைப் படித்த பின், சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்போ, அனுபவங்களோ எதுவும் இல்லை என்ற நிலையிலும், என் சிறுமிப் பருவத்திலிருந்து, எழுபத்தெட்டு வயதை எட்டியிருக்கும் இந்நாள் வரை, இந்நாட்டில் பிறந்த ஒரு பெண்ணாய், பார்வையாளராய், ஓர் எழுத்தாளராய் மலர்ந்த உணர்வுகளுடன் இந்த தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறேன் என்ற தன்னுணர்வு ஏற்பட்டது. நான் அறிந்த பழகிய பலரும் என் மன அரங்கில் உயிர் பெற்றார்கள்.

     இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது, உலகிலேயே முதன் முதலாக, அஹிம்சை நெறியில் மக்களை ஒன்று திரட்டி, அந்தப் பேருணர்வில் விளைந்த ஆற்றலினாலேயே அந்நிய ஆதிக்கத்தை எதிர்கொள்ளத் துணிந்த வரலாறாகும். அதைச் சாதித்தவர், இந்த இருபதாம் நூற்றாண்டின் மாமனிதராகிய காந்தியடிகள். அந்த 1947ம் ஆண்டு, ஆகஸ்ட் -14-15 நள்ளிரவுக் கொண்டாட்டங்கள் நடந்த போது நான் சென்னையில் இருந்தேன். புதிய இளமை; புதிய விடிவெள்ளி, மக்களின் அந்த மகிழ்ச்சியை, அந்த ஆரவாரங்களை, எதிர்பார்ப்பை, நம்பிக்கையை, குடிசையில் இருந்து கோமான் வரையிலுமான மகிழ்ச்சிப் பிரதிபலிப்பை நானும் அநுபவித்தேன்.

     இந்நாட்களில் கொண்டாட்டம் என்றால், குடி, கூத்து விரசமான ஆட்டபாட்டங்கள் என்பது நடைமுறையாகி இருக்கிறது. குற்றமற்ற அந்த மகிழ்ச்சி ஆரவாரங்களை, ‘ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று’ பாடல் முழங்கும் சூழலை மறக்கவே இயலாது.

     1972 இல், நாம் சுதந்திரத் திருநாட்டின் வெள்ளி விழாவைக் கொண்டாடினோம். ஆனால் விடுதலைப் போராட்டத்தில் ஆக்க சக்தியாகப் பரிணமித்த அஹிம்சைத் தத்துவமும், மொழி, சமயம், சாதி, இனங்கள் கடந்த நாட்டுப் பற்றும், இந்நாள், முற்றிலும் வேறுபட்டு, பிரிவுகளும், பிளவுகளும், சாதி - சமய மோதல்களாகவும், வன்முறை அழிவுகளாகவும் உருவாகியிருந்தன. 72 இல், இந்தச் சறிவை அடிநாதமாக்கி, காந்தியக் கொள்கைகள் இலட்சியமாக ஏற்க இயலாதவையாக, இந்நாட்டின் மேம்பாட்டுக்கு அக்கொள்கைகளைச் செயல்படுத்துவது மதியீனமா, என்ற வினாக்களை எழுப்பினேன். ‘வேருக்கு நீர்’ என்ற புதினம் காந்தி நூற்றாண்டும், தீவிரவாதமும் முரண்படும் சூழலில் உருவாயிற்று.

     காந்தியடிகள், சமுதாயத்துக்கும் அரசியலுக்குமாக ஏழு நெறிகளைக் குறிக்கிறார். 1. கொள்கையோடு கூடிய அரசியல், 2. பக்தியோடு இணையும் இறைவழிபாடு. 3. நாணயமான வாணிபம், 4. ஒழுக்கம் தலையாய கல்வி, 5. மனிதநேய அடிப்படையிலான அறிவியல் வளர்ச்சி, 6. உழைப்பினால் எய்தும் செல்வம், 7. மனச்சாட்சிக்குகந்த இன்பம். இந்த ஏழு நெறிகளில் ஒன்று பழுதுபட்டாலும், சமுதாயமாகிய மரத்தில் பூச்சிகள் மண்டி பயன் நலும் உயிர்ச்சத்தை உறிஞ்சி விடும் என்றார்.

     இந்த நெறிமுறைகளில் - வழிமுறைகளில் சிற்சில வேற்றுமைகள் பிரதிபலித்த போதிலும், அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபடும் இலட்சியம் ஒன்றுபட்ட குரலாக ஓங்கி, அதைச் சாதித்தது.

     பொது உடமைச் சித்தாந்தம் ‘தனிமனித’ அடிப்படையில் உருவாகவில்லை. அது ஓர் இயக்கமாகவே செயல்படுத்தும் தத்துவமாகிறது.

     ஆனால் தனிமனித ஒழுக்கத்தை முன்னிறுத்தியே ‘சத்தியாக்கிரகப் போர்’ செயல்படுத்தப்பட்டது.

     வறுமையும், எழுத்தறியா அறியாமையும் பல்வேறு சமய கலாசாரங்களும் இருந்தாலும், ‘பாரத கலாச்சாரம்’ என்ற பண்பாடு - இந்தத் துணைக் கண்டத்து மக்களை ஓர் ஆலமரமாக, விழுதுகளாக, ஒன்றுபடுத்தித் தாங்கி நின்றது.

     இந்நாள், முப்பது கோடிகளாக இருந்தவர்கள், நூறு கோடியைத் தாண்டி விட்டவர்களாக மக்கள் பெருகியிருக்கிறோம். இந்தப் பெருக்கமும், அறிவியல் காரணமாக பலதுறை வளர்ச்சிகளும், மக்களை ஒருங்கிணைக்கும், சமுதாய மேம்பாட்டு எல்லைகளைத் தொட்டாலும், நடப்பியல் வாழ்வில் குரோதங்களும், வன்முறை அறிவுகளும், மனித நேயம் மாய்ந்து விடும் வாணிப அவலங்களும் இரைபடுவதற்கு என்ன காரணம்? கிராமங்கள் தன் நிறைவு கண்டு, மக்களை வாழவைத்து, நலங்களைப் பெருக்கி, அவசியமான நகரங்களுக்கும் வளங்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படைப் பொருளாதாரம் என்னவாயிற்று? இயற்கை தரும் கொடையை என்னுடையது ‘உனக்கில்லை’ என்று சகமனிதரைச் சாகவைக்கும் பிளவுகளில், அரசியலும் ஆதாயம் தேடுகிறது. ஏவுகணைகளை வெற்றிகரமாகச் செலுத்தும் சாதனை நிகழும் களத்திலேயே, பட்டினியாலும், குண்டு வெடிப்புகளாலும் எந்தப் பாவமும் அறியா மனிதர், ஊருக்குச் சோறு போடும் தொழில் செய்பவர் மடிகின்றனர்.

     இந்த அவலங்களுக்குத் தீர்வு இல்லையா? எங்கு தொடங்கி எப்படிச் செயல்படுவோம்? எதிர்கால இந்தியாவுக்கு நம்பிக்கை உண்டா? உண்டு. அழிவுகளிலும், சில நல்ல விதைகள் தோன்றியிருக்கின்றன. அடிமைப்பட்டுக் கிடந்த நாட்களில், பாரத விடுதலையைப் பற்றிய ஊக்கம் பெற்ற தலைவர்கள், அந்நிய மண்ணில் தான் கிளர்ச்சி பெற்றனர். வெளிச்சத்தில் நின்று பார்க்கும் போது தான், இருள் துல்லியமாகத் தெரிகிறது. நம் வேர்களை உணர்ந்து, சுயநம்பிக்கையும் எழுச்சியும் பெற்று, இலட்சியத்துக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் முன் வைத்தார்கள்.

     இந்நாட்களில், புதிய கல்வியும் தொழில் நுட்பமும் பெற்ற இளைஞர் பலர், நம் வேர்களைத் தேடப் புத்துணர்வு பெற்றிருக்கின்றனர். பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் இயக்கங்கள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அறியாமையையும் வறுமையையும் அகற்ற, அவற்றுக்குக் காரணமான ஊற்றுக் கண்களைத் தகர்க்க, செயல்படத் தொடங்கி இருக்கின்றன. நலிந்த இடங்களில் எல்லாம், புதிய ஊக்கமும், விழிப்புணர்வும் ஊட்ட, இந்த இயக்கங்கள் செயல்படுகின்றன. ‘சிப்கோ’ இயக்கத்தில் இருந்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள், எழுத்தறியாமை ஒழிப்பு, சிறார் தொழில் சிறுமைகளைதல், சாதி சமய மோதல்களில் நிகழும் குரூர வன்முறைகளைக் கண்டறிந்து, அவற்றுக்குக் காரணமான சமூக அவலங்களைக் களைதல், என்றெல்லாம் பல இலக்குகளில் இளைஞர் பலர் செயல்படத் தொடங்கியுள்ளனர். புலம் பெயர்ந்து அந்நாட்களில் கூலித் தொழில் செய்து சிறுமைப் படச் சென்ற தலைமுறையில் இருந்து, இந்நாள் புலம் பெயர்ந்து சென்றிருக்கும் இளைஞர் வேறுபட்டவர்கள். இந்நாட்களில் தலையெடுத்து நிமிரும் இளைஞர் நம்பிக்கைக்குகந்தவர்களாய், புதிய புதிய துறைகளில் சாதனைகள் செய்பவர்களாய்த் திகழ்கிறார்கள். அவர்கள் தம் வேர்களைக் கண்டறிந்து, புதிய ஆற்றலுடன், பாரதத்தை மீண்டும் புத்துயிர் பெறச் செய்வார்கள்.

     மகாபாரதமும், இராமாயணமும், பாரதத்தின் பெருமை சொல்லும் இதிகாசங்கள். நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம் இவ்வுலகில் இடைவிடாமல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அழிவு, உயிர்ப்பு இரண்டையும் மாறி மாறிக் காட்டும் காலத்துக்கு முடிவோ எல்லையோ இல்லை.

     இராமாயணம், இராமனின் முடிசூடுதலுடன் முடிந்து விடுவதில்லை. அதே போல் குருட்சேத்திரப் போருடன் மகாபாரதம் நிறைவு பெற்று விடவில்லை. சீதை வனவாசம் தொடருகிறது; யாதவர்களின் அழிவும் நிகழ்கிறது. நம் சுதந்தரப் போராட்டமும் ஒரு காப்பியம் போன்றதுதான். அரசியல் விடுதலையைத் தொடர்ந்து இந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் சரிவுகளும் மோதல்களும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. காரிருள் கவியும் போதே, விடிவெள்ளி தோன்றும் என்பது நிச்சயமாகிறது. உறைபனியில் கருகும் பசுமைகள் மீண்டும் உயிர்க்கின்றன. எனவே, ‘உத்தர காண்டம்’ என்ற தலைப்பிட்ட இந்தப் புதினத்திலும் அந்த நம்பிக்கை விடி வெள்ளிகளைக் காட்டியிருக்கிறேன். இந்தப் புனைகதை, சற்றே வித்தியாசமாக, முன்னும் பின்னுமாகப் புனையப்பட்டிருந்தாலும், என் சிறுமிப் பருவத்திலிருந்து இந்நாள் வரையிலும் நான் கண்டு பேசிப் பழகி, அறிந்து உணர்ந்த பாத்திரங்களையே உயிர்ப்பித்திருக்கிறேன். தன்னார்வத் தொண்டியக்கங்கள் வாயிலாக, இந்நாட்டின் வேர்களைக் கண்டு புத்துயிரூட்ட முனைந்துள்ள இளைய தலைமுறையினரும் கற்பனையில் உதித்தவரல்லர்.

     இந்நூலை அச்சிட்டு வெளியிடும் பதிப்பகம் தமிழகத்தில் பெருமைக்குரியதாகும். இப்பதிப்பகத்தைத் துவங்கிய அமரர் கண. முத்தையா அவர்கள் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்; சிறந்த இலக்கிய அறிஞர்; இந்தப் பதிப்புத் தொழிலின் வாயிலாக, மொழிக்கும், இலக்கியத்துக்கும் சேவை செய்தவர் மட்டுமல்லாமல், தம் உயர் பண்புகளையும் அச்சேவையின் வாயிலாக உணர்த்தியவர். விடுதலைப் போராட்டத்தை அந்நிய மண்ணில் செயல்படுத்திய இந்திய தேசிய இராணுவம் அமைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அணுக்கத் தொண்டராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் திகழ்ந்த அவர், இலக்கிய மேதை ராஹுல் சாங்க்ருத்யாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலைத் தமிழாக்கம் செய்து தமிழருக்கு அந்த இலக்கிய மேதையை அறிமுகப்படுத்தியவர். அவருடைய நினைவலைகள் ‘முடிவுகளே தொடக்கமாய்’ நூல், இந்நாட்களின் சாதி மதப் பூசல்களால் நொந்து போன இதயங்களுக்கு நன்னீரலைகளாகத் திகழ்கின்றன. சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பு, அப்பெரியார், என் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்து ஆதரவளித்தார். அந்த ஊக்கமும், பேராதரவும், இந்நாள் வரை, என் இலக்கிய வாழ்வில், புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், வணிக நோக்குடன் வெளியாகும் பத்திரிகைகளை நாடாமலிருக்கவும் எனக்குத் தெம்பளித்திருக்கின்றன. அவருடைய வழித் தோன்றல்களாக, இந்தப் பதிப்பகப் பணியைச் செம்மையுடன் தொடரும், திருமிகு, மீனா, அகிலன் கண்ணன், செல்வி உமா ஆகியோர் இந்நாள் என் நூல்களைத் தொடர்ந்து பதிப்பித்திருப்பது போன்றே, இந்த ‘உத்தர காண்டம்’ நூலையும் அருமையாக அச்சிட்டு வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களனைவருக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். தமிழ் வாசகப் பெருமக்கள், இதை வரவேற்று ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

நன்றி, வணக்கம்.

-ராஜம் கிருஷ்ணன்