ஏழாம் திருமுறை

சுந்தரமூர்த்தி சுவாமிகள்

அருளிய

தேவாரம்

7.1. திருவெண்ணெய்நல்லூர்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

1  பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா
       எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
       வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
       அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. 7.1.1

2  நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்
       பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்
       வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
       ஆயாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. 7.1.2

3  மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப்
       பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி
       மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
       அன்னேஉனக் காளாயினி அல்லேன்என லாமே. 7.1.3

4  முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ
       கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ
       செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
       அடிகேளுனக் காளாயினி அல்லேன்என லாமே. 7.1.4

5  பாதம்பணி வார்கள்பெறும் பண்டமது பணியாய்
       ஆதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளா
       தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
       ஆதீஉனக் காளாயினி அல்லேன்என லாமே. 7.1.5

6  தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ
       எண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்
       மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
       அண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. 7.1.6

7  ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய்
       வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய்
       தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
       ஆனாயுனக் காளாயினி அல்லேன்என லாமே. 7.1.7

8  ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய்
       தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர்
       ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
       ஆற்றாயுனக்* காளாயினி அல்லேன்என லாமே. 7.1.8

* ஆற்றாவுனக்

9  மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்கா
       தொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலே
       செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
       அழகாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. 7.1.9

10  காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையாற்
       பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச்
       சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
       ஆரூரனெம் பெருமாற்காள் அல்லேன்என லாமே. 7.1.10

திருச்சிற்றம்பலம்

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமி - தடுத்தாட்கொண்ட நாதர்
தேவி - வேற்கண்மங்கையம்மை

7.2. திருப்பரங்குன்றம்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

11  கோத்திட்டையுங் கோவலுங் கோயில்கொண் டீருமைக்
              கொண்டுழல் கின்றதோர் கொல்லைச் சில்லைச்
       சேத்திட்டுக் குத்தித் தெருவே திரியுஞ்
              சில்பூத மும்நீ ருந்திசை திசையன
       சோத்திட்டு விண்ணோர் பலருந் தொழநும்
              அரைக்கோ வணத்தோ டொருதோல் புடைசூழ்ந்
       தார்த்திட்ட தும்பாம்பு கைக்கொண்ட தும்பாம்
              படிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. 7.2.1

12  முண்டந் தரித்தீர் முதுகா டுறைவீர்
              முழுநீறு மெய்பூசு திர்மூக்கப் பாம்பைக்
       கண்டத்தி லுந்தோளி லுங்கட்டி வைத்தீர்
              கடலைக் கடைந்திட்ட தோர்நஞ்சை உண்டீர்
       பிண்டஞ் சுமந்தும் மொடுங்கூட மாட்டோம்
              பெரியா ரொடுநட் பினிதென் றிருத்தும்
       அண்டங் கடந்தப் புறத்தும் இருந்தீர்
              அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. 7.2.2

13  மூடாய முயலகன் மூக்கப் பாம்பு
              முடைநா றியவெண் டலைமொய்த்த பல்பேய்
       பாடா வருபூதங் கள்பாய் புலித்தோல்
              பரிசொன் றறியா தனபா ரிடங்கள்
       தோடார் மலர்க்கொன்றை யுந்துன் னெருக்குந்
              துணைமா மணிநா கம்அரைக் கசைத்தொன்
       றாடா தன* வேசெய் தீர்எம் பெருமான்
              அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. 7.2.3

* றாடாதென

14  மஞ்சுண்ட மாலை மதிசூடு சென்னி
              மலையான் மடந்தை மணவாள நம்பி
       பஞ்சுண்ட அல்குல் பணைமென் முலையா
              ளொடுநீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர்
       நஞ்சுண்டு தேவர்க் கமுதங் கொடுத்த
              நலமொன் றறியோமுங் கைநாக மதற்
       கஞ்சுண் டுபடம் அதுபோக விடீர்
              அடிகேள்* உமக்காட் செயஅஞ் சுதுமே. 7.2.4

* அடியோம்

15  பொல்லாப் புறங்காட் டகத்தாட் டொழியீர்
              புலால்வா யனபே யொடுபூச் சொழியீர்
       எல்லாம் அறிவீர் இதுவே அறியீர்
              என்றிரங் குவேன்எல் லியும்நண்* பகலுங்
       கல்லால் நிழற்கீழ் ஒருநாட்கண் டதுங்
              கடம்பூர்க் கரக்கோயி லின்முன்கண் டதும்
       அல்லால் விரகொன் றிலம்எம் பெருமான்
              அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. 7.2.5

* என்றிரங்கு வெனல்லியும்

16  தென்னாத் தெனாத்தெத் தெனாவென்று பாடிச்
              சிலபூ தமும்நீ ருந்திசை திசையன
       பன்னான் மறைபா டுதிர்பா சூர்உளீர்
              படம்பக்கங் கொட்டுந் திருவொற்றி யூரீர்
       பண்ணார் மொழியாளை யோர்பங் குடையீர்
              படுகாட் டகத்தென்று மோர்பற் றொழியீர்
       அண்ணா மலையே னென்றீரா ரூருளீர்
              அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. 7.2.6

17  சிங்கத் துரிமூடு திர்தே வர்கணந்
              தொழநிற்றீர் பெற்றம் உகந்தே றிடுதிர்
       பங்கம் பலபே சிடப்பாடுந் தொண்டர்
              தமைப்பற்றிக் கொண்டாண் டுவிடவுங் கில்லீர்
       கங்கைச் சடையீர் உங்கருத் தறியோங்
              கண்ணுமூன் றுடையீர் கண்ணேயாய்* இருந்தால்
       அங்கத் துறுநோய் களைந்தாள கில்லீர்
              அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. 7.2.7

* கருத்தாய்

18  பிணிவண் ணத்தவல் வினைதீர்த் தருளீர்
              பெருங்காட் டகத்திற் பெரும்பேயும் நீருந்
       துணிவண்ணத் தின்மேலு மோர்* தோல் உடுத்துச்
              சுற்றும்நா கத்தராய்ச் சுண்ணநீறு பூசி
       மணிவண்ணத் தின்மேலு மோர்வண்ணத் தராய்
              மற்றுமற் றும்பல் பலவண்ணத் தராய்
       அணிவண்ணத் தராய்நிற் றீர்எம் பெருமான்
              அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. 7.2.8

* துணிவண்ணத்து நீருமொர்

19  கோளா ளியகுஞ் சரங்கோள் இழைத்தீர்
              மலையின் றலையல் லதுகோயில் கொள்ளீர்
       வேளா ளியகா மனைவெந் தழிய
              விழித்தீர் அதுவன் றியும்வேய் புரையுந்
       தோளாள் உமைநங்கை யோர்பங் குடையீர்
              உடுகூறை யுஞ்சோறுந் தந்தாள கில்லீர்
       ஆளா ளியவே கிற்றீர்* எம் பெருமான்
              அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. 7.2.9

* கற்றீர்

20  பாரோடு விண்ணும் பகலு மாகிப்
              பனிமால் வரையா கிப்பரவை யாகி
       நீரோடு தீயும் நெடுங்காற் றுமாகி
              நெடுவெள் ளிடையாகி நிலனு மாகித்*
       தேரோ டவரை எடுத்த அரக்கன்
              சிரம்பத் திறுத்தீர் உமசெய்கை எல்லாம்
       ஆரோடுங் கூடா அடிகேள் இதுவென்
              அடியோம்# உமக்காட் செயஅஞ் சுதுமே. 7.2.10

* நெடுவெள்ளடையாகி நிழலுமாகித்
# அடிகேள்

21  அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமென்
              றமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி
       முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே
              மொழிந்தாறு மோர்நான்கு மோரொன் றினையும்
       படியா இவைகற் றுவல்ல அடியார்
              பரங்குன்ற மேய பரமன் அடிக்கே
       குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக்
              குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே. 7.2.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது
சுவாமி - பரங்கிரிநாதர்
தேவி - ஆவுடைநாயகியம்மை

7.3. திருநெல்வாயில் அரத்துறை

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

22  கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங்
              கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்
       நெல்வா யில்அரத் துறைநீ டுறையும்
              நிலவெண் மதிசூ டியநின் மலனே
       நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
              நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்
       சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்
              தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.1

23  கறிமா மிளகும் மிகுவன் மரமும்
              மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
       நெறிவார் குழலா ரவர்காண நடஞ்செய்
              நெல்வா யில்அரத் துறைநின் மலனே
       வறிதே நிலையாத இம்மண் ணுலகில்
              நரனா கவகுத் தனைநா னிலையேன்
       பொறிவா யிலிவ்வைந் தினையும் மவியப்
              பொருதுன் னடியே புகுஞ்சூழல் சொல்லே. 7.3.2

24  புற்றா டரவம் மரையார்த் துகந்தாய்
              புனிதா பொருவெள் விடையூர் தியினாய்
       எற்றே ஒருகண் ணிலன்நின்னை யல்லால்
              நெல்வா யில்அரத் துறைநின் மலனே
       மற்றேல் ஒருபற் றிலனெம் பெருமான்
              வண்டார் குழலாள் மங்கைபங் கினனே
       அற்றார் பிறவிக் கடல்நீந்தி யேறி
              அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.3

25  கோடுயர் கோங்க லர்வேங் கையலர்
              மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
       நீடுயர் சோலை நெல்வா யிலரத்
              துறைநின் மலனே நினைவார் மனத்தாய்
       ஓடு புனற்க ரையாம் இளமை
              உறங்கி விழித்தா லொக்குமிப் பிறவி
       வாடி இருந்து வருந்தல் செய்யா
              தடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.4

26  உலவு முலகிற் றலைகற் பொழிய
              உயர்வே யோடிழி நிவவின் கரைமேல்
       நிலவு மயிலா ரவர்தாம் பயிலும்
              நெல்வா யிலரத் துறைநின் மலனே
       புலனைந் தும்மயங் கியகங் குழையப்
              பொருவே லோர்நமன் றமர்தாம் நலிய
       அலமந்து மயங்கி அயர்வ தன்முன்
              அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.5

27  ஏலம் இலவங் கம்எழிற் கனகம்
              மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
       நீலம் மலர்ப்பொய் கையிலன் னம்மலி
              நெல்வா யிலரத் துறையாய் ஒருநெல்
       வாலூன் றவருந் தும்முடம் பிதனை
              மகிழா தழகா வலந்தேன் இனியான்
       ஆலந் நிழலில் அமர்ந்தாய் அமரா
              அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.6

28  சிகரம் முகத்திற் றிரளார் அகிலும்
              மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
       நிகரில் மயிலா ரவர்தாம் பயிலும்
              நெல்வா யிலரத் துறைநின் மலனே
       மகரக் குழையாய் மணக்கோ லமதே
              பிணக்கோ லமதாம் பிறவி இதுதான்
       அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய்
              அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.7

29  திண்டேர் நெடுவீ தியிலங் கையர்கோன்
              றிரள்தோ ளிருப· தும்நெரித் தருளி
       நெண்டா டுநெடு வயல்சூழ் புறவின்
              நெல்வா யிலரத் துறைநின் மலனே
       பண்டே மிகநான் செய்தபாக் கியத்தாற்
              பரஞ்சோதி நின்னா மம்பயிலப் பெற்றேன்
       அண்டா வமரர்க் கமரர் பெருமான்
              அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.8

30  மாணா வுருவா கியோர்மண் ணளந்தான்
              மலர்மே லவன்நேடி யுங்காண் பரியாய்
       நீணீள் முடிவா னவர்வந் திறைஞ்சும்
              நெல்வா யிலரத் துறைநின் மலனே
       வாணார் நுதலார் வலைப்பட் டடியேன்
              பலவின் கனி வீந்தது* போல் வதன்முன்
       ஆணோடு பெண்ணா முருவாகி நின்றாய்
              அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.9

* ஈந்தது, ஈயது

31  நீரூ ரும்நெடு வயல்சூழ் புறவின்
              நெல்வா யிலரத் துறைநின் மலனைத்
       தேரூர் நெடுவீதி நன்மா டமலி
              தென்னா வலர்கோ னடித்தொண்டு பண்ணி
       ஆரூ ரனுரைத் தனநற் றமிழின்
              மிகுமாலை யோர்பத் திவைகற்று வல்லார்
       காரூர் களிவண் டறையானை மன்ன
              ரவராகி யோர்விண் முழுதாள் பவரே. 7.3.10

திருச்சிற்றம்பலம்

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமி - அரத்துறைநாதர்
தேவி - ஆனந்தநாயகியம்மை

7.4. திருஅஞ்சைக்களம்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

32  தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே
              சடைமேற்கங் கைவெள்ளந் தரித்த தென்னே
       அலைக்கும் புலித்தோல்கொண் டசைத்த தென்னே
              அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னே
       மலைக்குந் நிகரொப் பனவன் றிரைகள்
              வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
       டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை
              அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.1

33  பிடித்தாட்டி யோர்நாகத் தைப்பூண்ட தென்னே
              பிறங்குஞ் சடைமேற் பிறைசூடிற் றென்னே
       பொடித்தான்கொண் டுமெய்ம்முற் றும்பூசிற் றென்னே
              புகரே றுகந்தேறல் புரிந்த தென்னே
       மடித்தோட் டந்துவன் றிரையெற் றியிட
              வளர்சங்கம் அங்காந்து முத்தஞ் சொரிய
       அடித்தார் கடலங் கரைமேன் மகோதை
              அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.2

34  சிந்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியே
              சிறியார் பெரியார் மனத்தேற லுற்றால்
       முந்தித் தொழுவார் இறவார் பிறவார்
              முனிகள் முனியே அமரர்க் கமரா
       சந்தித் தடமால் வரைபோற் றிரைகள்
              தணியா திடறுங் கடலங் கரைமேல்
       அந்தித் தலைச்செக்கர் வானே ஒத்தியால்
              அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.3

35  இழைக்கு மெழுத்துக் குயிரே ஒத்தியால்
              இலையே ஒத்தியால் இணையே ஒத்தியாற்
       குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால்
              அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால்
       மழைக்குந் நிகரொப் பனவன் றிரைகள்
              வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
       டழைக்குங் கடலங் கரைமேல் மகோதை
              அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.4

36  வீடின் பயனென் பிறப்பின் பயனென்
              விடையே றுவதென் மதயா னைநிற்க
       கூடும் மலைமங் கைஒருத் தியுடன்
              சடைமேற் கங்கையாளை நீசூடிற் றென்னே
       பாடும் புலவர்க் கருளும் பொருளென்
              நிதியம் பலசெய் தகலச் செலவில்
       ஆடுங் கடலங் கரைமேல் மகோதை
              அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.5

37  இரவத் திடுகாட் டெரியாடிற் றென்னே
              இறந்தார் தலையிற் பலிகோட லென்னே
       பரவித் தொழுவார் பெறுபண்ட மென்னே
              பரமா பரமேட் டிபணித் தருளாய்
       உரவத் தொடுசங்க மோடிப்பி முத்தங்
              கொணர்ந்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
       டரவக் கடலங் கரைமேல் மகோதை
              அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.6

38  ஆக்கும் மழிவும் ஐயநீ* என்பன்நான்
              சொல்லுவார் சொற்பொரு ளவைநீ யென்பன்நான்
       நாக்குஞ் செவியுங் கண்ணும்நீ யென்பன்நான்
              நலனே இனிநான் உனைநன் குணர்ந்தேன்
       நோக்கும் நிதியம் பலவெத் தனையுங்
              கலத்திற் புகப்பெய்து கொண்டேற நுந்தி
       ஆர்க்குங் கடலங் கரைமேல் மகோதை
              அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.7

* அமைவுநீ

39  வெறுத்தேன் மனைவாழ்க் கையைவிட் டொழிந்தேன்
              விளங்குங் குழைக்கா துடைவே தியனே
       இறுத்தாய் இலங்கைக் கிறையா யவனைத்
              தலைபத் தொடுதோள் பலஇற் றுவிழக்
       கறுத்தாய் கடல்நஞ் சமுதுண்டு கண்டங்
              கடுகப் பிரமன் றலையைந் திலுமொன்
       றறுத்தாய் கடலங் கரைமேல் மகோதை
              அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.8

40  பிடிக்குக் களிறே ஒத்தியா லெம்பிரான்
              பிரமற் கும்பிரான் மற்றைமாற் கும்பிரான்
       நொடிக்கும் அளவிற் புரமூன் றெரியச்
              சிலைதொட் டவனே உனைநான் மறவேன்
       வடிக்கின் றனபோற் சிலவன் றிரைகள்
              வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
       டடிக்குங் கடலங் கரைமேல் மகோதை
              அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.9

41  எந்தம் அடிகள் இமையோர் பெருமான்
              எனக்கென் றும்அளிக் கும்மணி மிடற்றன்
       அந்தண் கடலங் கரைமேல் மகோதை
              அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனை
       மந்தம் முழவுங் குழலு மியம்பும்
              வளர்நா வலர்கோன் நம்பியூ ரன்சொன்ன
       சந்தம் மிகுதண் டமிழ்மாலை கள்கொண்
              டடிவீழ வல்லார் தடுமாற் றிலரே. 7.4.10

திருச்சிற்றம்பலம்

இத்தலம் மலைநாட்டிலுள்ளது.
சுவாமி - அஞ்சைக்களத்தீசுவரர்
தேவி - உமையம்மை

7.5. திருஓணகாந்தன்தளி

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

42  நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
              நித்தல்* பூசை செய்ய லுற்றார்
       கையி லொன்றுங் காண மில்லைக்
              கழல டிதொழு துய்யி னல்லால்
       ஐவர் கொண்டிங் காட்ட ஆடி
              ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
       குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
              ஓண காந்தன் றளியு ளீரே. 7.5.1

* நித்தம்

43  திங்கள் தங்கு சடைக்கண்* மேலோர்
              திரைகள் வந்து புரள வீசுங்
       கங்கை யாளேல் வாய்தி றவாள்
              கணப தியேல் வயிறு தாரி
       அங்கை வேலோன் குமரன் பிள்ளை
              தேவி யார்கொற் றட்டி யாளார்#
       உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
              ஓண காந்தன் றளியு ளீரே. 7.5.2

* சடையின்
# கோல்தட்டி யாளால்

44  பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
              பேணி யுங்கழல் ஏத்து வார்கள்
       மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி
              மதியு டையவர் செய்கை செய்வீர்*
       அற்ற போழ்தும் அலந்த# போழ்தும்
              ஆபற் காலத்$ தடிகேள் உம்மை
       ஒற்றி வைத்திங் குண்ண லாமோ
              ஓண காந்தன் றளியு ளீரே. 7.5.3

* செய்யீர்
# அலர்ந்த
$ ஆவற்காலத்

45  வல்ல தெல்லாஞ் சொல்லி யும்மை
              வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்
       றில்லை என்னீர் உண்டும் என்னீர்
              எம்மை ஆள்வான் இருப்ப தென்னீர்*
       பல்லை யுக்கப் படுத லையிற்
              பகலெ லாம்போய்ப் பலிதி ரிந்திங்
       கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
              ஓண காந்தன் றளியு ளீரே. 7.5.4

* இருப்பதேநீர்

46  கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
              கொண்ட பாணி குறைப டாமே
       ஆடிப் பாடி அழுது நெக்கங்
              கன்பு டையவர்க் கின்பம் ஓரீர்
       தேடித் தேடித் திரிந்தெய்த் தாலுஞ்
              சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
       ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்
              ஓண காந்தன் றளியு ளீரே. 7.5.5

47  வாரி ருங்குழல் வாணெ டுங்கண்
              மலைம கள்மது விம்மு கொன்றைத்
       தாரி ருந்தட மார்பு நீங்காத்
              தைய லாளுல குய்ய வைத்த
       காரி ரும்பொழிற் கச்சி மூதூர்க்
              காமக் கோட்டம் உண்டாக நீர்போய்
       ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே
              ஓண காந்தன் றளியு ளீரே. 7.5.6

48  பொய்ம்மை யாலே போது போக்கிப்
              புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
       மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்
              மேலை நாளொன் றிடவுங் கில்லீர்
       எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்
              ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர்*
       உம்மை என்றே எம்பெ ருமான்
              ஓண காந்தன் றளியு ளீரே. 7.5.7

* ஓரீர்

49  வலையம் வைத்த கூற்ற மீவான்
              வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
       சிலைய மைத்த சிந்தை யாலே
              திருவ டிதொழு துய்யி னல்லாற்
       கலைய மைத்த காமச் செற்றக்
              குரோத லோப மதம வருடை
       உலைய மைத்திங் கொன்ற மாட்டேன்
              ஓண காந்தன் றளியு ளீரே. 7.5.8

50  வார மாகித் திருவ டிக்குப்
              பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே
       ஆரம் பாம்பு வாழ்வ தாரூர்
              ஒற்றி யூரேல் உம்ம தன்று
       தார மாகக் கங்கை யாளைச்
              சடையில் வைத்த அடிகேள் உந்தம்
       ஊருங் காடு உடையுந் தோலே
              ஓண காந்தன் றளியு ளீரே. 7.5.9

51  ஓவ ணமேல் எருதொன் றேறும்
              ஓண காந்தன் றளியு ளார்தாம்
       ஆவ ணஞ்செய் தாளுங் கொண்ட
              வரைது கிலொடு பட்டு வீக்கிக்
       கோவ ணமேற் கொண்ட வேடங்
              கோவை யாகவா ரூரன் சொன்ன
       பாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப்
              பறையுந் தாஞ்செய்த பாவந் தானே. 7.5.10

திருச்சிற்றம்பலம்

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமி - ஓணகாந்தீசுவரர்
தேவி - காமாட்சியம்மை

7.6. திருவெண்காடு

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

52  படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்
              பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
       அடங்க லார்ஊர் எரியச் சீறி
              அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
       மடங்க லானைச் செற்று கந்தீர்
              மனைகள் தோறுந் தலைகை யேந்தி
       விடங்க ராகித் திரிவ தென்னே
              வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.1

53  இழித்து கந்தீர் முன்னை வேடம்
              இமைய வர்க்கும் உரைகள் பேணா
       தொழித்து கந்தீர் நீர்முன் கொண்ட
              உயர்த வத்தை அமரர் வேண்ட
       அழிக்க வந்த காம வேளை
              அவனு டைய தாதை காண
       விழித்து கந்த வெற்றி யென்னே
              வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.2

54  படைகள் ஏந்திப் பாரி டமும்
              பாதம் போற்ற மாதும் நீரும்
       உடையோர் கோவ ணத்த ராகி
              உண்மை சொல்லீர் உம்மை யன்றே
       சடைகள் தாழக் கரணம் இட்டுத்
              தன்மை பேசி இல்ப லிக்கு
       விடைய தேறித் திரிவ தென்னே
              வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.3

55  பண்ணு ளீராய்ப் பாட்டு மானீர்
              பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்
       கண்ணு ளீராய்க் கருத்தி லும்மைக்
              கருது வார்கள் காணும் வண்ணம்
       மண்ணு ளீராய் மதியம் வைத்தீர்
              வான நாடர் மருவி யேத்த
       விண்ணு ளீராய் நிற்ப தென்னே
              வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.4

56  குடமெ டுத்து நீரும் பூவுங்
              கொண்டு தொண்டர் ஏவல் செய்ய
       நடமெ டுத்தொன் றாடிப் பாடி
              நல்கு வீர்நீர் புல்கும் வண்ணம்
       வடமெ டுத்த கொங்கை மாதோர்
              பாக மாக வார்க டல்வாய்
       விடம்மி டற்றில் வைத்த தென்னே
              வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.5

57  மாறு பட்ட வனத்த கத்தில்
              மருவ வந்த வன்க ளிற்றைப்
       பீறி இட்ட மாகப் போர்த்தீர்
              பெய்ப லிக்கென் றில்லந் தோறுங்
       கூறு பட்ட கொடியும் நீருங்
              குலாவி ஏற்றை அடர ஏறி
       வேறு பட்டுத் திரிவ தென்னே
              வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.6

58  காத லாலே கருதுந் தொண்டர்
              கார ணத்தீ ராகி நின்றே
       பூதம் பாடப் புரிந்து நட்டம்
              புவனி யேத்த ஆட வல்லீர்
       நீதி யாக ஏழி லோசை
              நித்த ராகிச் சித்தர் சூழ
       வேத மோதித் திரிவ தென்னே
              வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.7

59  குரவு கொன்றை மதியம் மத்தங்
              கொங்கை மாதர் கங்கை நாகம்
       விரவு கின்ற சடையு டையீர்
              விருத்த ரானீர் கருத்தில் உம்மைப்
       பரவும் என்மேல் பழிகள் போக்கீர்
              பாக மாய மங்கை யஞ்சி
       வெருவ வேழஞ் செற்ற தென்னே
              வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.8

60  மாடங் காட்டுங் கச்சி யுள்ளீர்
              நிச்ச யத்தால் நினைப்பு ளார்பாற்
       பாடுங் காட்டில் ஆடல் உள்ளீர்
              பரவும் வண்ணம் எங்ங னேதான்
       நாடுங் காட்டில் அயனும் மாலும்
              நணுகா வண்ணம் அனலு மாய
       வேடங் காட்டித் திரிவ தென்னே
              வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.9

61  விரித்த வேதம் ஓத வல்லார்
              வேலை சூழ்வெண் காடு மேய
       விருத்த னாய வேதன் றன்னை
              விரிபொ ழிற்றிரு நாவ லூரன்
       அருத்தி யாலா ரூரன் தொண்டன்
              அடியன் கேட்ட மாலை பத்துந்
       தெரித்த வண்ணம் மொழிய வல்லார்
              செம்மை யாளர் வானு ளாரே. 7.6.10

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - சுவேதாரணியேசுவரர்
தேவி - பிரமவித்தியாநாயகியம்மை

7.7. திருஎதிர்கொள்பாடி

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

62  மத்த யானை ஏறி மன்னர்
              சூழவரு வீர்காள்
       செத்த போதில் ஆரும் இல்லை
              சிந்தையுள் வைம்மின்கள்
       வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
              வம்மின் மனத்தீரே
       அத்தர் கோயில் எதிர்கொள் பாடி
              என்ப தடைவோமே. 7.7.1

63  தோற்றம் உண்டேல் மரணம் உண்டு
              துயரம் மனைவாழ்க்கை
       மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு
              நெஞ்ச மனத்தீரே
       நீற்றர் ஏற்றர் நீல கண்டர்
              நிறைபுனல் நீள்சடைமேல்
       ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி
              என்ப தடைவோமே. 7.7.2

64  செடிகொ ளாக்கை சென்று சென்று
              தேய்ந்தொல் லைவீழாமுன்
       வடிகொள் கண்ணார் வஞ்ச னையுள்
              பட்டு மயங்காதே
       கொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர்
              கோவண ஆடையுடை
       அடிகள் கோயில் எதிர்கொள் பாடி
              என்ப தடைவோமே. 7.7.3

65  வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர்
              வஞ்ச மனத்தீரே
       யாவ ராலும் இகழப் பட்டிங்
              கல்ல லில்வீழாதே
       மூவ ராயும் இருவ ராயும்
              முதல்வன் அவனேயாம்
       தேவர் கோயில் எதிர்கொள் பாடி
              என்ப தடைவோமே. 7.7.4

66  அரித்து நம்மேல் ஐவர் வந்திங்
              காறலைப் பான்பொருட்டாற்
       சிரித்த பல்வாய் வெண்ட லைபோய்
              ஊர்ப்பு றஞ்சேராமுன்
       வரிக்கொ டுத்திவ் வாள ரக்கர்
              வஞ்ச மதில்மூன்றும்
       எரித்த வில்லி எதிர்கொள் பாடி
              என்ப தடைவோமே. 7.7.5

67  பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர்
              பொத்தடைப் பான்பொருட்டால்
       மையல் கொண்டீர் எம்மோ டாடி
              நீரும் மனத்தீரே
       நைய வேண்டா இம்மை யேத்த
              அம்மை நமக்கருளும்
       ஐயர் கோயில் எதிர்கொள் பாடி
              என்ப தடைவோமே. 7.7.6

68  கூசம் நீக்கிக் குற்றம் நீக்கிச்
              செற்ற மனம்நீக்கி
       வாசம் மல்கு குழலி னார்கள்
              வஞ்ச மனைவாழ்க்கை
       ஆசை நீக்கி அன்பு சேர்த்தி
              என்பணிந் தேறேறும்
       ஈசர் கோயில் எதிர்கொள் பாடி
              என்ப தடைவோமே. 7.7.7

69  இன்பம் உண்டேல் துன்பம் உண்டு
              ஏழை மனைவாழ்க்கை
       முன்பு சொன்ன மோழை மையான்
              முட்டை மனத்தீரே
       அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை
              அடிக ளடிசேரார்
       என்பர் கோயில் எதிர்கொள் பாடி
              என்ப தடைவோமே. 7.7.8

70  தந்தை யாரும் தவ்வை யாரும்
              எட்டனைச் சார்வாகார்
       வந்து நம்மோ டுள்ள ளாவி
              வான நெறிகாட்டுஞ்
       சிந்தை யீரே நெஞ்சி னீரே
              திகழ்மதி யஞ்சூடும்
       எந்தை கோயில் எதிர்கொள் பாடி
              என்ப தடைவோமே. 7.7.9

71  குருதி சோர ஆனையின் றோல்
              கொண்ட குழற்சடையன்
       மருது கீறி ஊடு போன
              மாலய னும்மறியாச்
       சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச்
              சோதியெம் ஆதியான்
       கருது கோயில் எதிர்கொள் பாடி
              என்ப தடைவோமே. 7.7.10

72  முத்து நீற்றுப் பவள மேனிச்
              செஞ்சடை யான்உறையும்
       பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப்
              பரமனை யேபணியச்
       சித்தம் வைத்த தொண்டர் தொண்டன்
              சடைய னவன்சிறுவன்
       பத்தன் ஊரன் பாடல் வல்லார்
              பாதம் பணிவாரே. 7.7.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - அயிராவதநாதர்
தேவி - மலர்க்குழல்நாயகி

7.8. திருவாரூர்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

73  இறைகளோ டிசைந்த இன்பம்
              இன்பத்தோ டிசைந்த வாழ்வு
       பறைகிழித் தனைய போர்வை*
              பற்றியான்# நோக்கி னேற்குத்
       திறைகொணர்ந் தீண்டித் தேவர்
              செம்பொனும் மணியுந் தூவி
       அறைகழல் இறைஞ்சும் ஆரூர்
              அப்பனே அஞ்சி னேனே. 7.8.1

* பார்வை
# பத்தியால்

74  ஊன்மிசை உதிரக் குப்பை
              ஒருபொரு ளிலாத மாயம்
       மான்மறித் தனைய நோக்கி*
              மடந்தைமார் மதிக்கும் இந்த#
       மானுடப் பிறவி வாழ்வு
              வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
       ஆனல்வெள் ளேற்ற ஆரூர்
              அப்பனே அஞ்சி னேனே. 7.8.2

* நோக்கம்
# செல்வ

75  அறுபதும் பத்தும் எட்டும்
              ஆறினோ டஞ்சு நான்குந்
       துறுபறித் தனைய நோக்கிச்
              சொல்லிற்றொன் றாகச் சொல்லார்
       நறுமலர்ப் பூவும் நீரும்
              நாடொறும் வணங்கு வார்க்கு*
       அறிவினைக் கொடுக்கும் ஆரூர்
              அப்பனே அஞ்சி னேனே. 7.8.3

* வாருக்கு

76  சொல்லிடில் எல்லை இல்லை
              சுவையிலாப் பேதை வாழ்வு
       நல்லதோர் கூரை புக்கு
              நலமிக அறிந்தே னல்லேன்
       மல்லிகை மாடம் நீடு
              மருங்கொடு நெருங்கி யெங்கும்
       அல்லிவண் டியங்கும் ஆரூர்
              அப்பனே அஞ்சி னேனே. 7.8.4

77  நரம்பினோ டெலும்பு கட்டி
              நசையினோ டிசைவொன் றில்லாக்
       குரம்பைவாய்க் குடியி ருந்து
              குலத்தினால் வாழ மாட்டேன்
       விரும்பிய கமழும் புன்னை
              மாதவித் தொகுதி என்றும்
       அரும்புவாய் மலரும் ஆரூர்
              அப்பனே அஞ்சி னேனே. 7.8.5

78  மணமென மகிழ்வர் முன்னே
              மக்கள்தாய் தந்தை சுற்றம்
       பிணமெனச் சுடுவர் பேர்த்தே
              பிறவியை வேண்டேன் நாயேன்
       பணையிடைச் சோலை தோறும்
              பைம்பொழில் விளாகத் தெங்கள்
       அணைவினைக் கொடுக்கும் ஆரூர்
              அப்பனே அஞ்சி னேனே. 7.8.6

79  தாழ்வெனுந் தன்மை விட்டுத்
              தனத்தையே மனத்தில் வைத்து
       வாழ்வதே கருதித் தொண்டர்
              மறுமைக்கொன் றீய கில்லார்
       ஆழ்குழிப் பட்ட போது
              வலக்கணில் ஒருவர்க் காவர்
       யாழ்முயன் றிருக்கும் ஆரூர்
              அப்பனே அஞ்சி னேனே. 7.8.7

80  உதிரநீர் இறைச்சிக் குப்பை
              எடுத்தது மலக்கு கைம்மேல்
       வருவதோர் மாயக் கூரை
              வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
       கரியமால் அயனுந் தேடிக்
              கழலிணை காண மாட்டா
       அரியனாய் நின்ற ஆரூர்
              அப்பனே அஞ்சி னேனே. 7.8.8

81  பொய்த்தன்மைத் தாய மாயப்
              போர்வையை மெய்யென் றெண்ணும்
       வித்தகத் தாய வாழ்வு
              வேண்டிநான் விரும்ப கில்லேன்
       முத்தினைத் தொழுது நாளும்
              முடிகளால் வணங்கு வார்க்கு
       அத்தன்மைத் தாகும் ஆரூர்
              அப்பனே அஞ்சி னேனே. 7.8.9

82  தஞ்சொலார் அருள் பயக்குந்
              தமியனேன் தடமு லைக்கண்
       அஞ்சொலார் பயிலும் ஆரூர்
              அப்பனை ஊரன் அஞ்சிச்
       செஞ்சொலால் நயந்த பாடல்
              சிந்தியா ஏத்த வல்லார்
       நஞ்சுலாங் கண்டத் தெங்கள்
              நாதனை நணுகு வாரே. 7.8.10

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - வன்மீகநாதர்
தேவி - அல்லியங்கோதையம்மை.

7.9. திருஅரிசில் கரைப்புத்தூர்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

83  மலைக்கு மகள்அஞ்ச மதகரியை உரித்தீர்
              எரித்தீர் வருமுப் புரங்கள்
       சிலைக்குங் கொலைச்சே வுகந்தேற் றொழியீர்
              சில்பலிக் கில்கள்தோறுஞ் செலவொழியீர்
       கலைக்கொம் புங்கரி மருப்பும் இடறிக்
              கலவம் மயிற்பீலியுங் காரகிலும்
       அலைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
              அழகார் திருப்புத்தூர் அழகனீரே. 7.9.1

84  அருமல ரோன்சிரம் ஒன்றறுத் தீர்செறுத்
              தீரழற் சூலத்தில் அந்தகனைத்
       திருமகள் கோனெடு மால்பல நாள்சிறப்
              பாகிய பூசனை செய்பொழுதில்
       ஒருமலர் ஆயிரத் திற்குறைவா* நிறை
              வாகவோர் கண்மலர் சூட்டலுமே
       பொருவிறல் ஆழி புரிந்தளித் தீர்பொழி
              லார்திருப் புத்தூர்ப் புனிதனீரே. 7.9.2

* குறைவாசல்

85  தரிக்குந் தரைநீர் தழற்காற் றந்தரஞ்
              சந்திரன் சவிதாவிய மானனானீர்
       சரிக்கும் பலிக்குத் தலையங்கை யேந்தித்
              தையலார் பெய்யக்கொள் வதுதக்கதன்றால்
       முரிக்குந் தளிர்ச்சந் தனத்தொடு வேயும்
              முழங்குந் திரைக்கைக ளால்வாரிமோதி
       அரிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
              அழகார் திருப்புத்தூர் அழகனீரே. 7.9.3

86  கொடியுடை மும்மதில் வெந்தழி யக்குன்றம்
              வில்லா நாணியிற் கோலொன்றினால்
       இடிபட எய்தெரித்தீர் இமைக்கும் அளவில்
              உமக்கார் எதிரெம் பெருமான்
       கடிபடு பூங்கணை யான்கருப் புச்சிலைக்
              காமனை வேவக் கடைக்கண்ணினாற்
       பொடிபட நோக்கிய தென்னை கொல்லோ
              பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே. 7.9.4

87  வணங்கித்தொழு வாரவர் மால்பிர மன்மற்றும்
              வானவர் தானவர் மாமுனிவர்
       உணங்கற்றலை யிற்பலி கொண்ட லென்னே
              உலகங்கள் எல்லாமுடை யீர்உரையீர்
       இணங்கிக் கயல்சேல் இளவாளை பாய
              இனக்கெண்டை துள்ளக்கண் டிருந்தஅன்னம்
       அணங்கிக் குணங்கொள் அரிசிற் றென்கரை
              அழகார் திருப்புத்தூர் அழகனீரே. 7.9.5

88  அகத்தடி மைசெய்யும் அந்தணன் றான்அரி
              சிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
       மிகத்தளர் வெய்திக் குடத்தையும் நும்முடி
              மேல்விழுத் திட்டு நடுங்குதலும்
       வகுத்தவ னுக்குநித் தற்படி யும்
              வருமென்றொரு காசினை நின்றநன்றிப்
       புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்
              பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே. 7.9.6

89  பழிக்கும் பெருந்தக்கன் எச்சம் அழியப்
              பகலோன்முத லாப்பல தேவரையுந்
       தெழித்திட் டவரங்கஞ் சிதைத்தரு ளுஞ்செய்கை
              என்னைகொலோ மைகொள் செம்மிடற்றீர்
       விழிக்குந் தழைப்பீலி யொடேல முந்தி
              விளங்கும் மணிமுத்தொடு பொன்வரன்றி
       அழிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
              அழகார் திருப்புத்தூர் அழகனீரே. 7.9.7

90  பறைக்கண் நெடும்பேய்க் கணம்பாடல் செய்யக்
              குறட்பா ரிடங்கள்பறை தாம்முழக்கப்
       பிறைக்கொள் சடைதாழப் பெயர்ந்து நட்டம்
              பெருங்கா டரங்காகநின் றாடலென்னே
       கறைக்கொள் மணிகண் டமுந்திண் டோள்களுங்
              கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப்
       பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும்
              பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே. 7.9.8

91  மழைக்கண்மட வாளையோர் பாகம்வைத் தீர்வளர்
              புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர்
       முழைக்கொள் அரவோ டென்பணி கலனா
              முழுநீறு மெய்பூசுதல் என்னைகொலோ
       கழைக்கொள் கரும்புங் கதலிக் கனியுங்
              கமுகின் பழுக்காயுங் கவர்ந்துகொண்டிட்
       டழைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
              அழகார் திருப்புத்தூர் அழகனீரே. 7.9.9

92  கடிக்கும் அரவால் மலையால் அமரர்
              கடலைக் கடையவெழு காளகூடம்
       ஒடிக்கும் உலகங் களைஎன் றதனை
              உமக்கேயமு தாகவுண் டீருமிழீர்
       இடிக்கும் மழைவீழ்த் திழித்திட் டருவி
              இருபாலுமோடி இரைக்குந் திரைக்கை
       அடிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
              அழகார் திருப்புத்தூர் அழகனீரே. 7.9.10

93  காரூர் மழைபெய்து பொழியரு விக்கழை
              யோடகி லுந்திட் டிருகரையும்
       போரூர் புனல்சேர் அரிசிற் றென்கரைப்
              பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதர்தம்மை
       ஆரூரன் அருந்தமி ழைந்தினோ டைந்தழ
              காலுரைப் பார்களுங் கேட்பவருஞ்
       சீரூர் தருதேவர் கணங்க ளொடும்
              இணங்கிச் சிவலோகம தெய்துவரே. 7.9.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - படிக்காசு வைத்த பரமர்
தேவி - அழகம்மை

7.10. திருக்கச்சிஅனேகதங்காவதம்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

94  தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு
              மானதி டந்திகழ் ஐங்கணையக்
       கோனை யெரித்தெரி யாடி இடங்குல
              வான திடங்குறை யாமறையாம்
       மானை இடத்ததோர் கையனி டம்மத
              மாறு படப்பொழி யும்மலைபோல்*
       யானை யுரித்த பிரான திடங்கலிக்
              கச்சி அனேகதங் காவதமே. 7.10.1

* மலைமேல்

95  கூறு நடைக்குழி கட்பகு வாயன
              பேயுகந் தாடநின் றோரியிட
       வேறு படக்குட கத்திலை யம்பல
              வாணன்நின் றாடல் விரும்புமிடம்
       ஏறு விடைக்கொடி யெம்பெரு மான்இமை
              யோர்பெரு மான்உமை யாள்கணவன்
       ஆறு சடைக்குடை அப்ப னிடங்கலிக்
              கச்சி அனேகதங் காவதமே. 7.10.2

96  கொடிக ளிடைக்குயில் கூவுமி டம்மயி
              லாலுமி டம்மழு வாளுடைய
       கடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக்
              கண்டனி டம்பிறைத் துண்டமுடிச்
       செடிகொள் வினைப்பகை தீருமி டந்திரு
              வாகும்* இடந்திரு மார்பகலத்
       தடிக ளிடம்அழல் வண்ண னிடங்கலிக்
              கச்சி அனேகதங் காவதமே. 7.10.3

* வாரும்

97  கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங்
              கங்கையுந் திங்களுஞ் சூடுசடை
       மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப்
              பங்கினிற் றங்க உவந்தருள்செய்
       சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள்
              பாய வியாத்தழல் போலுடைத்தம்
       அங்கை மழுத்திகழ் கைய னிடங்கலிக்
              கச்சி அனேகதங் காவதமே. 7.10.4

98  பைத்த படத்தலை ஆடர வம்பயில்
              கின்ற இடம்பயி லப்புகுவார்
       சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ்
              கின்ற இடந்திரு வானடிக்கே
       வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள
              வைத்த இடம்மழு வாளுடைய
       அத்தன் இடம்அழல் வண்ண னிடங்கலிக்
              கச்சி அனேகதங் காவதமே. 7.10.5

99  தண்ட முடைத்தரு மன்தமர் என்றம
              ரைச்செயும் வன்துயர் தீர்க்குமிடம்
       பிண்ட முடைப்பிற வித்தலை நின்று
              நினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம்
       கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த*
              பிரான திடங்கடல் ஏழுகடந்
       தண்ட முடைப்பெரு மான திடங்கலிக்
              கச்சி அனேகதங் காவதமே. 7.10.6

* நஞ்சுகரந்த

100  கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழு
              தேத்து மிடங்கதி ரோன்ஒளியால்
       விட்ட இடம்* விடை யூர்தி யிடங்குயிற்
              பேடைதன் சேவலோ டாடுமிடம்
       மட்டு மயங்கி அவிழ்ந்த மலரொரு
              மாதவி யோடு மணம்புணரும்
       அட்ட புயங்கப் பிரான திடங்கலிக்
              கச்சி அனேகதங் காவதமே. 7.10.7

* விட்டவிடம்

101  புல்லி இடந்தொழு துய்துமெ னாதவர்
              தம்புர மூன்றும் பொடிப்படுத்த
       வில்லி இடம்விர வாதுயிர் உண்ணும்வெங்
              காலனைக் கால்கொடு வீந்தவியக்
       கொல்லி இடங்குளிர் மாதவி மவ்வல்
              குராவகு ளங்குருக் கத்திபுன்னை
       அல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக்
              கச்சி அனேகதங் காவதமே. 7.10.8

102  சங்கை யவர்புணர் தற்கரி யான்றள
              வேனகை யாள்தவி ராமிகுசீர்
       மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை
              நட்டம்நின் றாடிய சங்கரன் எம்*
       அங்கையி னல்லனல் ஏந்து மவன்கனல்
              சேரொளி யன்னதோர் பேரகலத்
       தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக்
              கச்சி அனேகதங் காவதமே. 7.10.9

* சங்கரனே

103  வீடு பெறப்பல ஊழிகள் நின்று
              நினைக்கும் இடம்வினை தீருமிடம்
       பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு
              மேவினர் தங்களைக் காக்கும்இடம்*
       பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன்
              உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்
       கூடு மிடஞ்சிவ லோகன் இடங்கலிக்
              கச்சி அனேகதங் காவதமே. 7.10.10

* பீடுபெறப் பெரியோன திடம்கலிக்
கச்சி அநேக தங்காப் பனிடம்

திருச்சிற்றம்பலம்

இத்தலம் தொண்டை நாட்டிலுள்ளது.
சுவாமி - காவதேசுவரர்
தேவியார் - காமாட்சியம்மை



ஏழாம் திருமுறை : சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் : 1