'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

1

     நாட்டிலே இருக்கிற சாதி மதங்கள் போதாதென்று புதிதாக இல்லாத ஒன்றை பற்றி ஏன் எழுதுகிறாய்? என்று எடுத்த எடுப்பிலேயே மிகவும் கோபமாக பெரும்பாலனவர்கள் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்த தொடர் கட்டுரையின் முடிவில் அப்படி கேள்வி எழுப்பிய அனைவரும் தங்களின் கோபத்தை மறந்து, நான் சொல்லியுள்ளது உண்மைதான் என்று கட்டாயம் ஒப்புக் கொள்வீர்கள்.

     அடடா என்ன இது... நீங்கள் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டீர்கள். தலைப்பு தான் அப்படி மற்றபடி எல்லாமே நகைச்சுவை தான். என்ன மீண்டும் முறைக்கிறீர்கள்? அரசு ஊழியர்கள் என்றால் உனக்கு நகைச்சுவையாய் போய்விட்டதா? என்று மீண்டும் கோபப்படாதீர்கள். இது அரசு ஊழியர்களால் பாதிக்கப்பட்ட... உடனே நீங்கள் மீண்டும் ரொம்ப சீரியசாக அவர்களின் எதிரிகளைப் பற்றியெல்லாம் யோசிக்காதீர்கள்... நான் சொல்ல வந்தது அரசு ஊழியர்களால் பாதிக்கப்பட்ட அவர்களின் சொந்த மனைவி மக்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர், அவர்கள் வந்து போகும் இடங்களான டீக்கடை, போன்ற கடைகளின் வியாபாரிகள், பயணம் செய்யும் மின்சார ரயில் டவுன் பஸ் போன்றவற்றில் பயணம் செய்வோர் ஆகியோர்களின் கஷ்ட நஷ்டங்களை நகைச்சுவையோடு சொல்லப் போகிறேன். ஆகையால் அரசு ஊழியர்களோ அல்லது அவர்களின் அனுதாபிகளோ நிச்சயம் கவலைப்பட வேண்டாம்.

     இன்னும் என்ன விளக்கம் வேண்டிக்கிடக்கிறது... கட்டுரையைப் படிக்க படிக்க உங்கள் கோபம் தானாகக் குறைகிறாதா இல்லையா பாருங்கள். என் முன்னால் சிரிக்க வெட்கமாய் இருந்தால் தனியே போய் கெக்கே பிக்கே என்று சிரித்து விடுங்கள். சிரிப்பை அடக்கக் கூடாது. இனி கட்டுரையைத் தொடங்குவோம்...

     பொதுவாக இனம் என்பதற்கு உதாரணமாக, தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று கொள்ளலாம். அதனால் தான் "தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவருக்கோர் குணம் உண்டு" என்று பாடிச் சென்றார் நாமக்கல் கவிஞர்.

     இவர்களை எப்படி அடையாளம் காணுவோம்? பொது இடத்தில் இரண்டு பேர் சந்திக்கும் போது கன்னடத்தில் பேசிக்கொண்டால் அவர்களை கன்னடர்கள் என்றும், தெலுங்கில் பேசிக் கொண்டால் தெலுங்கர்கள் என்றும் மலையாளத்தில் பேசிக்கொண்டால் மலையாளிகள் என்றும் சொல்லுவோம். அதுவே இரண்டு பேர் சந்திக்கும் போது, தமிழ் நன்றாகத் தெரிந்திருந்தும், அரை குறை ஆங்கிலத்தில் பேசிக் கொண்டால் அவர்களை நாம் தமிழர்கள் என்று சொல்வதில்லையா?

     அது போல் இரண்டு பேர் பேசிக் கொள்வதை வைத்தே அவர்களை 'அரசு ஊழியர்' இனம் என்று உடனே முடிவு செய்து விடலாம்? அதுவும் அவர்கள் பேசும் விஷயம் பெரும்பாலும் ஒன்று தான்... அப்படி எதைப் பேசுவார்கள் என்று கேட்கிறீர்களா?

     "என்ன சார் டி.ஏ. அரியர்ஸ் வாங்கிட்டீங்களா?"

     அவர்களின் பேச்சில் டி.ஏ., அரியர்ஸ், சம்பள கமிஷன், தீபாவளி அட்வான்ஸ், பொங்கல் போனஸ், இன்கிரிமெண்ட் போன்ற வார்த்தைகள் கட்டாயம் இருக்கும். இதில் வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது. ரிடையர் ஆனவரும், நேற்று தான் புதிதாக சேர்ந்தவரும் ஒரே மாதிரிதான் பேசுவார்கள்.

     அரசு ஊழியர்கள் எந்த சூழ்நிலையில் சந்தித்தாலும், இந்த பேச்சு மட்டும் கண்டிப்பாக மாறாது. அது கல்யாண விசேஷமாக இருக்கலாம், சாவு வீடாக இருக்கலாம், சினிமா தியேட்டராக இருக்கலாம், அல்லது காதுகுத்து வைபவமாக இருக்கலாம். அவர்களுக்கு என்று ஒரு தனி உலகம் கண்டிப்பாக இயங்குகிறது என்று சொன்னால் அதில் தவறில்லை. அதில் அவர்களின் கவலை எல்லாம் மேலே சொன்ன அந்த வார்த்தைகளைச் சுற்றியே இருக்கும்.

     மத்திய அரசு டி.ஏ. ஏற்றியதாக அறிவிப்பு வந்ததுமே மாநில அரசு ஊழியர்கள் தங்களின் டி.ஏ. பேச்சை ஆரம்பித்து விடுவார்கள். அது மட்டுமா, எத்தனை மாத அரியர்ஸ் கிடைக்கும், அதில் தங்களுக்கு எவ்வளவு வரும். அது சம்பளத்தோடு சேர்த்து கிடைக்குமா, அல்லது சம்பள பில் போன பிறகு தனியாக பில் போட்டு பாஸ் செய்வார்களா? டிரசரியில் எத்தனை நாள் டிலே செய்வார்கள்? (கருவூலம் என்ற அழகிய தமிழ்ச் சொல் பெயர் பலகையில் மட்டுமே உள்ளது) அரியர்ஸ் தொகை வருவதற்கு லேட்டாகும் போல் தெரிந்தால் அந்த தொகைக்கு முன்கூட்டியே யாரிடம் கடன் வாங்கலாம்? இவை தான் அவர்களின் தினப்படி தாரக மந்திரமாக இருக்கும். அவர்கள் கைக்கு அந்த அரியர்ஸ் பணம் வந்து சேரும் வரை இதே நினைப்புதான். ஒருவேளை சீக்கிரம் அரியர்ஸ் கிடைத்துவிட்டால், அடுத்த வீட்டுக்காரருக்கோ, நண்பருக்கோ (அவர் வேறு டிபார்ட்மெண்டாக இருந்தால்) அரியர்ஸ் கிடைத்துவிட்டதா என்று விசாரணை தொடங்கி விடும். அந்த அரியர்ஸ் பணத்தை செலவு செய்த பிறகு தான் அவர்கள் மனம் நிம்மதி அடைந்து பழைய நிலைக்குத் திரும்பும்.

     இப்போது மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் எந்த அரசு ஊழியராவது டி.ஏ.வைப் பற்றி யாரிடமும், முக்கியமாக பிற அரசு ஊழியரிடம் பேசுவதே இல்லை என்று. ஐயா, அது அவர்களின் பிறப்புரிமை. அப்படி அவர்களில் யாராவது பேசவில்லை என்றால் தான் அவருக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

     வருடக்கணக்காக மேலே சொன்ன நிகழ்ச்சிகளை ஆறு மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் அனுபவித்திருக்கிறேன். (என்ன கொடுமை சரவணன்?) என்ன விழிக்கிறீர்கள்? என் அப்பாவும் ஒரு அரசு ஊழியர் தான்...



'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13