![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 06 அக்டோபர் 2025 06:00 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 16 |
முன்னுரை இது ஒரு காந்தீய சகாப்த நாவல்; ஆனால் ஒன்றல்ல இரண்டு சகாப்தங்களை நீங்கள் இந்த நாவலில் சந்திக்கிறீர்கள். ஒரு தலைமுறையின் தேசபக்தர்கள் அனைவருமே இந்த நாவலின் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். உப்புச் சத்தியாக்கிரகத்திலிருந்து நேற்று வரை உள்ள நிலைமைகளினூடே இந்தக் கதை பாய்கிறது; வளர்கிறது, நிறைகிறது. தேச சுதந்திர வரலாறும் போராட்டங்களும், பின்னணியாக அமைய உருவாக்கப்பட்ட இக்கதையை ஒரு தேசீய சமுகத்தின் புதிய வகைச் சரித்திர நாவலாக நான் கருதுகிறேன். அது எந்த அளவிற்குச் சரியான கருத்து என்பதைப் படிக்கிறவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில், இது ஒரு சத்தியாக்கிரகியின் கதை. அபிப்பிராயங்களை வற்புறுத்தி எதிர்பார்க்க விரும்பவில்லை. சுதந்திரமடைந்த ஒவ்வொரு மண்ணின் சுபீட்சமும் அந்த சுதந்திரத்தை அடையப் போராடியவர்களை உரமாகக் கொண்டு பெற்ற சுபீட்சம் தான் என்பதை மறந்து விடலாகாது. சுதந்திரப் போராட்டத்தின் போது இல்லாத இயக்கங்கள், சுதந்திரமே வேண்டாமென்ற இயக்கங்கள் எல்லாம் கூட இன்று நமது சுதந்திரத்தின் பயனை அநுபவிக்கின்றன. அன்று சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் யாரோ, அவர்கள் மரித்து மண்ணடியிலே மக்கி, என்றோ உரமாகி விட்டார்கள். ஆனால், சுதந்திரம் இன்னும் இருக்கிறது. தியாகமும், தேச பக்தியும் சராசரி இந்தியனின் விரதமாக மாறிய சுதந்திர வேள்வித் தீயில் கலந்து, அதன் பின் அதையடுத்த பதவிகளின் பரபரப்பான காலத்தில் தனியே விலகி வாழ்ந்த ஒரு தேசபக்தரின் கதை இது. ஒரு சத்தியாக்கிரக யுகத்து நாவல் என்றே இதை வகுத்துக் கொண்டு எழுதியிருக்கிறேன். மகாத்மாவின் குரலையும், இந்திய சுதந்திரப் போரின் சங்கநாதத்தையும் இந்த நாவலிலும் கேட்கிறீர்கள். ஒரு மகத்தான தலைமுறையின் மங்கிய முடிவையும், மற்றொரு பரபரப்பான தலைமுறையின் ஆரம்பத்தையும் இக்கதை நிகழ்ச்சிகளாகப் பெற்றிருக்கிறது; இந்தக் கதை நடந்த காலத்து உண்மைத் தேசபக்தர்கள் சிலர் இன்னும் நம்மிடையே இருக்கின்றனர். இதில் வரும் கற்பனைக் கதாபாத்திரங்களை அறியவும், உணரவும் அந்த உண்மைத் தேச பக்தர்கள் தான் நமக்கு உரைகல். உலகறிய ஊரறிய நாட்டுக்குத் தியாகம் செய்த ஒருவரும், உலகறியாமல், ஊரறியாமல், அந்தரங்கமாக அவருக்காகத் தியாகம் செய்த ஒருத்தியும், அவர்களுடைய ஆத்மராகங்களும் இந்த நாவல் முழுவதும் சுருதி சுத்தமாக ஒலிக்கின்றன. இந்தியாவில் 'காந்தியுகம்' பிறந்து ஒரு நூறாண்டுகள் நிறையும் நல்ல வேளையில் இந்த நாவல் வெளிவருகிறது. இது ஒரு காந்தி யுகத்துக் கதை. ஆனால் காந்தி சகாப்தம் நிறையும் போது வெளி வருகிறது. 'சத்தியாக்கிரகம்' என்ற பதமும் பொருளும் தவத்துக்கு இணையானவை. அந்தத் தேசீய மகாவிரதம் நிகழ்ந்த காலத்தில் நிகழும் கதை இது. இதற்குள்ள பெருமைகள் என இதை எழுதியவன் கருதி கணக்கிடுவனவற்றுள் அதுவே முதன்மையானது; முக்கியமானது. உடம்பை விடப் புலன்கள் உயர்ந்தவை; புலன்களை விட மனம் உயர்ந்தது. உடம்பு, புலன்கள், மனம் எல்லவற்றையும் விட ஆத்மா மிக உயர்ந்தது; மிகப் பரிசுத்தமானது - என்கிறது பழைய வேதவாக்கியம். உடம்பாலோ, மனத்தாலோ, புலன்களாலோ மட்டுமே வாழாமல் அவற்றில் நின்று, அவற்றிலும் மேம்பட்டு ஆத்மாவினால் வாழ்ந்த ஒருத்தியின் தியாகத்தினாலும், சுதந்திரப் போர் என்ற பவித்திரமான நோன்பினாலும், முழுமையடைந்த ஒருவரின் இந்தக் கதையில் நீங்கள் இதுவரை கேட்டிராத ஆத்மாவின் இனிய பண்புகள் ஒலிக்கின்றன. இந்நாவலின் இரண்டாவது பதிப்பைத் தமிழ்ப் புத்தகாலயத்தார் வெளியிடுகிறார்கள். தமிழ்ப் புத்தகாலய உரிமையாளர் திரு. கண. முத்தையா அவர்களும், கோவை புக் சென்டர் டி.வி. எஸ். மணி அவர்களும், 'எழுத்து' ஆசிரியர் சி.சு.செல்லப்பா அவர்களும் இந்நாவலை எழுதும் போது சில அரிய குறிப்புகளை அளித்து உதவியிருக்கிறார்கள். அவர்களுக்கும், 'வாசகர் வட்டத்' தாருக்கும், இதை எழுதும் போது உடனிருந்து படித்து ரசித்து உதவிய சகோதரர் ஆர். பாலசுப்ரமணியத்துக்கும், இதை வெளியிடும் போது நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். நாட்டின் இன்றைய சுபீட்சத்துக்கு உரமாகி நிற்கும் நேற்றைய தியாகிகள் அனைவரின் திருவடிகளுக்கும், தேசபக்தர்களின் நினைவுகளுக்கும் அஞ்சலியாக இந் நாவலைச் சமர்ப்பிக்கிறேன்.
நா. பர்த்தசாரதி
"தீபம்", சென்னை - 227.7.70 |