1

     பஸ்ஸை விட்டிறங்கிய அபிராமி, ஒரு சைக்கிள் தன்னை உராய்ந்து கொண்டு செல்வதை உணர்ந்து திடுக்கிட்டு நடைபாதையில் ஏறினாள். கைப்பை ஜிப் பிளந்திருக்கிறது. சட்டென்று, உள்ளே பர்ஸ் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டு, சுற்று முற்றும் கண்களை ஓட்டுகிறாள். சபா கட்டிடத்துக்குப் பக்கத்தில் என்று சொன்னார்கள்... எங்கே?

     காலை நேரத்தின் நெருக்கடிச் சந்தடி... ஈ தேன் கூட்டில் மொய்ப்பது போல் பஸ்களை மக்கள் மொய்க்கிறார்கள். பூதம் பூதமாக ஆங்காங்கே இருந்த வண்டிகளும், இடையே அலறிக் கொண்டு செல்லும் இரண்டு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கரம் பல்வேறு வண்டிகளும் வண்ணங்களும், வடிவங்களும் உருப்பிரியா பேரிரைச்சலும்...

     மகாப்பிரளயத்தின் ஒரு சிதிலம் விழுந்திருக்கிறதா? நடைபாதையில் நின்றபடி, அவள் தெரிந்த முகங்களுக்காகத் துழவுகிறாள். பழம், பை, பிளாஸ்டிக் கூடை, கண்ணாடிச் சாமான், செருப்பு என்று ஓராயிரம் நுகர்பொருட்கள் நடைபாதைக் கடைகளாக விரிந்திருக்கின்றன.

     அங்கே... வட்ட வட்டமான தட்டிகள் - கோவில் திருவிழா புறப்பாட்டின் முன் அந்தக் காலங்களில் இது போன்ற பட்டு வட்டங்களில் நந்திச் சின்னம், சக்கரச் சின்னம் கொண்டு செல்வார்கள்... அப்படி வட்டமாக மகளிர்க் கூட்டணி - ஆர்ப்பாட்ட முழக்கம். எட்டு அமைப்புக்களின் கண்டன முழக்கம்... என்று எழுதப்பட்ட தட்டிகள்.

     ‘பெண்களை இழிவாகச் சித்தரிக்கும் மக்கள் தொடர்புச் சாதனங்களின் போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்...’

     பெண்கள் சம உரிமைக் கழகம் - பெண்கள் முற்போக்கு இயக்கம்; பின் தங்கிய சமூகப் பெண்கள் சங்கம், யுவதிகள் சம்மேளனம், தொண்டூழிய பெண்கள் அமைப்பு, சிறுபான்மைச் சகோதரிகள் போராட்ட அமைப்பு, மாதர் சேவா சங்கச் சென்னைப் பிரிவு... ஆகிய ஏழு அமைப்புகளின் தலைவிகள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டக் கூட்டம்...

     வெளியூர், உள்ளூர்ப் பிறநகர்ப் பேருந்துகள் வந்து இறங்குபவர்களும், செல்பவர்களுமாகக் கசகசக்கும் கும்பலிடையே ஆர்ப்பாட்டமா? அபிராமி இதுவரையிலும் இது போன்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றதில்லை. கூட்டங்களுக்குப் போய் வருவது உண்டு தான். சொல்லப் போனால், இந்த மாதிரியான சங்கங்கள், செயல்முறைப் போராட்ட இயக்கங்கள் சம்பந்தப்பட்ட பெண்களுக்கும், கூட அவள் அந்நியமானவள் தான். எழுபதை எட்டிக் கொண்டிருக்கும் அவள் வயதுக்கு, அண்மையில் - நாலைந்து ஆண்டுக் காலமாகத்தான் இவர்களுடன் உறவாடுகிறாள்.

     இந்த அமைப்புக்களைச் சார்ந்த வசுந்தரா, ராதா, தேவகி, மோகனா, சைலஜா எல்லாரும் அவளைப் பெரிதும் மதித்து அழைக்கிறார்கள். இந்தக் கூட்டத்துக்கு, வசுந்தரா எங்கோ இருக்கும் அவள் வீடு தேடி வந்து, “அம்மா, நீங்க வருவது எங்களுக்குப் பலம்” என்று அழைத்தாள். “இதில் அரசியல் - கட்சிச் சார்பு எதுவும் இல்லை. இன்று சினிமா, டி.வி. பத்திரிகை எல்லாம் பெண்களை வியாபாரச் சரக்காக, கடைப் பொருள் போல் சித்திரிக்கும் கொடுமையை எதிர்த்து, கண்டனம் செய்து, அமைச்சரிடம் சென்று மெமொரான்டம் கொடுக்கப் போகிறோம். எல்லாப் பெண்களும் கூடும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பற்றித் தியாகம் செய்த ஒரு பெருந்தியாகி, நாதனின் மனைவி - பொதுவானவர், தலைமையாக இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்கள்.

     காலையில் எட்டு மணி வரையிலும் அவளை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை. அவளாகவே பஸ் ஏறி வந்து விட்டாள்.

     காலஞ்சென்ற சுதந்தரப் போராட்டத் தியாகி வழித்துணை நாதனின் எழுபத்து ஐந்தாவது பிறந்த நாளைக் கொண்டாடி, அவளை அரசு கௌரவித்தது. அவளுக்குப் பயணச் சலுகை, ஓய்வூதியம், தாமிரப்பட்டயம் எல்லாம் அவர் சேவைக்காக அளித்திருக்கிறது. இந்தப் பெண்களும் தியாகியின் மனைவி என்று பெருமைப்படுத்துகிறார்கள்.

     “அட... அம்மா! இங்கே தான்! வாங்க! வாங்கம்மா! சைலுவைக் குரோம்பேட்டையிலிருந்து வரப்ப அம்மாவைக் கூட்டிட்டுவான்னேன். வரலை?” என்று கேட்டு, வசு... மாநிறமாக உயரமாக, இறுக்கமான கொண்டையும் கழுத்தில் வெறும் மெல்லிய மணிமாலையுமாக அவள் கையைப் பற்றி அழைத்துச் செல்கிறாள்.

     “பார்த்தேன், பஸ் நேராகக் கிளம்பித்து, பஜாரிலேருந்து உட்கார்ந்தேன்; வந்தேன். சைலுவைப் பார்க்கலியே?”

     வரிசையாகப் பத்து நாற்காலிகளில் சில பெண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். இவளைக் கண்டதும் மரியாதையாக எழுந்து வணக்கம் தெரிவிக்கிறார்கள்.

     “தியாகி நாதன் சம்சாரம், அபிராமி அம்மா...”

     “உட்காருங்கம்மா!...”

     கைகுவிப்பு மரியாதைகள், கனிவான முகமன்கள்...

     ஒரு சிலரைத் தவிர, அங்கு வந்திருந்த மற்ற ஏழெட்டுப் பேர்கள் அபிராமிக்குப் பரிச்சயம் இல்லாதவர்கள்.

     அவருடன் வாழ்ந்த நாட்களில், அவளுக்கு வெளி உலகம் தெரியுமா? பதினான்கு வயசில், கல்யாணமாகி, மாமி நாத்தி மைத்துனர் என்ற கூட்டுக் குடும்பத்தில் ஓர் ஊழியராகவே அவள் மண் அடுப்பு, சாணி - பித்தளை, ஈயம் பூசிய பாண்டங்கள், கற்சட்டிகலங்கள் என்று கையாண்டு, கல்லுரல், அம்மி, திரிகை என்று இடித்தும் அரைத்தும் குத்தியும் புடைத்தும் தேய்ந்திருக்கிறாள். கணவனைச் சில இரவுகளில் சந்திக்கலாம். விளைவு, நாற்பது நாட்கள் நழுவியதும், கழுவும் அரிசியை அள்ளித்தின்ன மணக்கும்; கட்டியான முட்டைச் சாம்பலும் மணக்கும். ஆனால் முழுப்பிள்ளையாக முதிர்ந்து வந்ததில்லை. நான்கு மாசம், ஆறு மாசம், அதற்கு மேல் உயிருடன் பிறந்தது திருவல்லிக்கேணி கோஷா ஆசுபத்திரியில், அதைப் பஞ்சு சுற்றி வைத்துப் பாதுகாத்துக் கொடுத்தார்கள். கூட்டுக் குடும்பத்தின் சொச்சமிச்சத் தேய்வுகளில், சித்தப்பா, அத்தை என்று துணி வாங்கிக் கொடுக்க, சம்பளம் கட்டிப் புத்தகம் வாங்கிக் கொடுத்துச் சீராட்ட, படித்தாள்.

     அவரோ சுதந்தரத்துக்குப் பிறகு ஆளும் கட்சியிலில்லாமல், எதிர்க்கட்சியானார். குடும்பத்தில் செரித்து விட்ட சொத்துக்கள் போன மிச்ச சொச்சங்களை விற்றுத் தேர்தலுக்கு நின்று தோற்றுப் போனார்...

     தமா - தமயந்தி - இருபதுகளில் நிற்கும் இளம் பெண், சிரித்துக் கொண்டு, ஒரு கூல்ட்ரிங் கொண்டு வந்து கொடுக்கிறாள். அபிராமிக்கு அவளைப் பிடிக்கும்.

     “ஏன் தமா? ரூமா பாய் வருவாங்களா?...”

     தமா புன்னகை செய்கிறாள்... “ராதா, தேவகி எல்லாம் தாஸ் காம்ப்ளக்ஸில் ஹால் மீட்டிங் போட்டிருக்காங்க. இன்னிக்கே சாயங்காலம்?”

     “அதுதான் புரியலை... எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்து ஒரே புர்ரோகிராமா நடத்தினால், நமக்கும் சவுகரியமாக இருக்குமே?...”

     சற்று எட்ட எட்டுப் பத்துப் போலீஸ்காரப் பெண்கள், கூடி அவர்களுள் சிரித்துக் கொள்கிறார்கள்.

     இந்தக் கூட்டத்துக்குத்தான் அவர்கள் காவலா?

     எத்தனை மாறுதல்கள்?

     தமா, சைலு, மது... எல்லாரும் எப்படித் துணிவாக இருக்கிறார்கள்? கல்யாணம் என்பதே, எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது. அவள் வயிற்றில் பிறந்த ராதா கல்யாண வயசில் நின்றாள். நூறு ரூபாய் சம்பளத்தில் டைப் படிக்கச் சென்ற ஓரிடத்தில் காதல் வந்தது. எப்போதேனும் அந்தக் குழந்தையைத் தந்தை என்று அன்பும் அனுசரணையுமாகச் சீராடியிருந்தால்தானே அருமை தெரியும்?

     அந்தப் பையன், வேறு சாதி; அதுவுமல்லாமல் அவரைத் தோற்கடித்த அரசியல் கட்சிக்காரனின் உறவுக்காரப் பிள்ளை.

     அவனை வெட்டிப் போடுவேன் என்று போராட்டம் ஆடினார்.

     அந்தப் பாவிப் பெண் எங்கேனும் அவனையும் கூட்டிக் கொண்டு ஓடிப் போயிருக்கக் கூடாதா?

     அந்த அப்பனை மீறத் தெரியாமல், கட்டும்படாமல் அதிகாலையில் வீட்டை விட்டுப் போய் ரயில் தண்டவாளத்தில் குதித்து யமனைத் தேடிக் கொண்டாள்.

     தான் ஆடாவிட்டாலும், சதை ஆடிற்றோ, இல்லை, தோல்வியினால் துவண்டு போன துயரமோ? அடுத்த சில மாதங்களில், தலை சுற்றுகிறது என்று சொன்னவருக்கு அவள் இஞ்சிக் கசாயம் கொண்டு வருமுன் யமன் வந்து விட்டான்...

     பிறகு... பிறகு...

     “என்ன மதுமதி, இத்தனை வேட்டு?...”

     “ஆபீஸ் உண்டு வசு. சாயங்காலம் வேற மீட்டிங். மணி பன்னிரண்டடிக்கப் போகுது, நீங்க இன்னும் ஆரம்பிக்கல?”

     மது அவளருகில் வந்து கையைப் பற்றிச் சந்தோஷம் தெரிவிக்கிறாள்.

     “வந்தவங்க போதும்! ஆரம்பியுங்க!”

     அம்மா...

     “போராட்டம் ஏன்!” என்று தலைப்பில் அச்சிட்ட பிரசுரம் ஒன்றை வசு அவளிடம் கொடுக்கிறாள்.

     “அன்பார்ந்த சகோதரிகளே!...”

     வசுவுக்கு தொண்டை பெரிது. இந்தச் சந்தைச் சந்தடியிலும் அது, பலரைத் திரும்பிப் பார்க்கச் செய்கிறது.

     “நாம், ஏழு பெண்கள் அமைப்புகள், இன்று, ஒரு முக்கியமான பிரச்சனையை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி, மெமொரன்டம் கொடுக்க இருக்கிறோம்! இன்றைக்குப் பத்திரிகைகள், தொலைக்காட்சி, சினிமா ஆகிய மக்கள் தொடர்புச் சாதனங்கள், பெண்களைக் கடைச்சரக்காக்கி, பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கு ஆதரவளிக்கின்றன. அந்தப் போக்கை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்?

     “இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்க, சகோதரி, அபிராமி அம்மாளைக் காட்டிலும் பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது!”

     எல்லாரும் கைத்தட்டுகிறார்கள்.

     பிறகு வசு, தேச விடுதலைப் போராட்டத் தியாகிகளைப் பற்றிப் பேசுகிறாள். பெண்களை முன்னுக்குக் கொண்டு வர, அவர்கள் குரல் கொடுத்ததைப் பேசுகிறாள். பாரதியின் பாடலடிகளை மேற்கொள் காட்டுகிறாள்.

     அபிராமிக்கு, இரைச்சலான அந்தச் சூழலில், கட்டுக்களகன்று விடுதலையாகி ஒரு பீடத்தில் உட்கார்ந்திருப்பதாகத் தோன்றுகிறது. அவள் யார்? எங்கிருந்தாள்? எங்கு வந்திருக்கிறாள்? இந்தப் பெண்கள் எல்லோரும் யார்? இவர்களுடன் அவளுக்கு என்ன உறவு? ஒட்டு? குடும்பம் என்ற கூட்டுக்குள் இறகு இருக்கிறதென்று உணர்வே இல்லாதவளாக, பசி, பட்டினி, நோவு, போன்ற பல துன்பங்களும் கூட உறைக்காமலே மரத்துப் போயிருந்த அவள், இன்று, நலிந்த உடலின் உந்துதலாகக் கிளம்பி இருக்கும் ஒரு பரவசத்தில் கிளர்ச்சியுற்றிருக்கிறாள்.

     மேடிட்ட சாம்பாருக்குள், எத்தனை நிறைவுப் பொறிகள் முதிர்கின்றன! யார் யாரோ வீட்டில் வருவார்கள், உள்ளே சாப்பாடு இருக்குமா? அரிசி, உப்பு, புளி வாங்கிப் போடட்டுமா என்ற பிரக்ஞை இருக்குமா? அது “சாப்பிட்டு விட்டுப் போகலாமே? சீனு! பெரியம்மாவை இலை போடச் சொல்!” என்று சொல்லும் தியாகிக்கு இருக்காது.

     இரவு பன்னிரண்டு மணிக்கு மேல், யாருக்கோ சுரம் என்று கஞ்சிக்கு உடைத்துக் கஞ்சி காய்ச்சியிருக்கிறாள். புளியைக் கரைத்துப் பருப்பை அரைத்து ஊற்றிக் குழம்பு, ரசம் என்று ஒப்பேற்றி இருக்கிறாள்.

     குறைப்பிள்ளை கவிழ்ந்து ஒரு முப்பது கூட ஆகவில்லை என்று சொல்லத் துணிந்திருக்கிறாளா? அவர் வந்து கை வைத்தால் அவள் பலியாடு மாதிரி உடன்பட வேண்டியது தான்.

     ஒரு பூ, ஓர் இனிப்பு, ஒரு ரவிக்கைத் துண்டு, ஒரு பாட்டுக் கச்சேரி... ஹும்... எதுவும் அவளுக்குத் தெரியாது.

     ‘நீ சாப்பிட்டாயோ...’ என்று என்றைக்கேனும் கேட்டதுண்டா? யாருக்குத் தெரியும்?

     அவர் தியாகி! நாட்டுக்காக உழைத்தார்! வசு முழக்குகிறாள்...

     “அத்தகையா ஒரு தியாகியின் மனைவி, திருமதி அபிராமி நாதன்...”

     அங்கே நடமாடும் மக்கள் கூட அவளைப் பார்த்துக் கொண்டு செல்கிறார்கள்.

     ‘வசு, போதும்மா! போதுமே!’ என்ற அபிராமி அவள் சேலையைப் பற்றி சமிக்ஞை செய்கிறாள். பிறகு மது பேச வருகிறாள்.

     “ஏன் போதும்? அவர்கள் தியாகம் எப்படி வந்தது? இந்தப் பெண்களால், இவர்களுக்குத் ‘தியாகி’ என்ற தனிக் கவுரவம் கிடையாது? இயற்கையிலேயே தியாகிகளாம்? அவள் பொறுப்பாள்? அவள் தலையில் எதை வேண்டுமானாலும் வைக்கலாம்? பட்டினி போடலாம்? தரையில் தேய்க்கலாம்? பூமிதேவி அவள்; கற்சிலை அவள். பூ அவள். அறைத்து சென்ட் எடுக்கலாம்.

     இப்படியெல்லாம் சக்தி வாய்ந்த மக்கள் தொடர்புச் சாதனங்கள் வலிமையாக அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றன? இதன் விளைவு, நாம் இன்னமும் பூச்சிகளாக அழுத்தப்படுகிறோம். சுதந்தரம் வந்து 45 ஆண்டுகளாகியும் வரதட்சணைச் சாவு, கற்பழிப்பு எல்லாம் பெருகி, சகஜமாகிக் கொண்டிருக்கின்றன. இதை இனிப் பொறுக்க மாட்டோம்! பொங்கி எழுவோம்!”

     கை தட்டுகிறார்கள்.

     “மது சீக்கிரம் முடிச்சிடுங்க!”

     “மணி ஒண்ணு.”

     “சிக்கு ஸ்கூலிலேந்து வந்திடும்!”

     “பஸ் பிடிச்சிப் போயாகணும்!”

     அவசரங்கள், கைதட்டல்கள்.

     தில்லை கோஷம் எழுப்புவதில் பெருந்தொண்டைக்காரி. மஞ்சள் குங்குமம், தாலிச்சரடு என்று மரபுவழி வந்தவள். இவளுக்கு நான்கும் ஆண் பிள்ளைகள். எனவே ‘வீட்டில் தண்ணீர் கொடுக்க நாதியில்லை அம்மா?’ என்பாள். இவள் கோஷம் எழுப்புகிறாள்.

     “பெண்கள் கூட்டணி! வாழ்க!”

     “பெண்கள் ஒற்றுமை! ஓங்குக!”

     “ஆபாசப் பத்திரிகைகள்... ஒழிக!”

     “திரையிடாதே! திரையிடாதே! ஆபாசப் படங்களைத் திரையிடாதே!” முட்டியை உயர்த்திக் கொண்டும் வீசிக் கொண்டும் இவர்கள் கத்திய கத்தல்கள், சுற்றுப் புறச் சூழலில் மடிந்தாலும் அபிராமிக்கு உற்சாகமாக இருக்கிறது.

     அவசரமாக எல்லோரிடமும் டைப் செய்த தாளில் கையெழுத்து வாங்குகிறார்கள்.

     “எல்லாரும் மூணரை மணிக்கு தாஸ் காம்ப்ளெக்ஸ் ஹாலுக்கு வந்திடுங்கம்மா! டில்லிலேந்து காஞ்சன் வராங்க! பெரிய கூட்டம்!” என்று அழைப்பு விடுக்கிறாள் மது.

     “தமா, ஆட்டோ பேசு! அமைச்சகத்துக்குப் போகணும்...” என்று கூறிக் கொண்டு, காவல் துறைப் பெண்களிடம் ஏதோ கேட்கப் போகிறாள் வசு.

     “லஞ்ச் அவர்ல நீங்க எங்கூட வந்து தங்குங்கம்மா... லஞ்ச் முடிச்சிட்டு ரெஸ்ட் எடுத்திட்டு, அந்த மீட்டிங்குக்கும் போகலாம்” என்று ரேணு அவள் கையைப் பற்றுகிறாள்.

     வசு ஓடி வருகிறாள்.

     “அம்மா, எங்கே போறீங்க? நீங்க இப்ப எங்க கூட, ஆட்டோவில் அமைச்சகத்துக்கு வரீங்க... அம்மா முக்கியமா மெமொரண்டம் குடுக்க வராங்க!”

     ஆட்டோ கூலி பேசித் தீர்த்து, அவர்கள் அமைச்சகத்துக்குச் செல்கையில், மணி ஒன்றரை ஆகி விடுகிறது.

     அமைச்சக வளைவுக்குள் பகலுணவு நேரத்தின் நெருக்கடி விழி பிதுங்குகிறது. “தமா, அம்மாவை ஓரமாகக் கூட்டிப் போய் இருங்க, நான் போய் பாஸ் வாங்கிட்டு வந்திடறேன்!” என்ற வசு ஓடுகிறாள்.

     “போலீஸ்காரிங்க கூட வரணும். அவங்க டூட்டி இல்லேன்னு கழன்டுக்கிட்டாங்க!... எனக்கு வயிற்றைப் பசி கிள்ளுது...” என்று தில்லை முணமுணக்கிறாள்.

     குளிர்ப்பானக் குப்பிகளை ஏற்றிக் கொண்டிருக்கும் இராட்சத வண்டி ஒன்று குறுக்கே நிற்கிறது. கார்கள், ஆட்டோக்கள்... நீள நெடுக, சிற்றுண்டிக் கடைகளில் தென்படும் கூட்டம்... ஒரே அவசரங்கள்...

     வசு விரைந்து வருகிறாள்.

     “மூணரை மணிக்குத்தான் பார்க்கலாமாம் - பாஸ் மூணு மணிக்குக் கிடைக்கும். நாம் போய் ரெஸ்டாரண்டில் எதானும் சாப்பிடலாம்!”

     அங்கே சென்று, எண்ணெய்ப் பிசுக்கு இல்லாத ஒரு தோசையை மென்று தின்று சர்க்கரைத் தண்ணீர் போன்ற காபியைக் குடித்து விட்டு வருகிறார்கள். வசுவும் தமாவும், இன்னொரு மிக முக்கியமான இடத்தைப் தேடிப் போகிறார்கள்.

     அபிராமிக்கும், அந்த அவசியம் இருக்கிறது.

     வீட்டை விட்டுக் கிளம்பி எத்தனை நேரம் ஆகி விட்டது?

     உடல் கழிவை வெளியேற்ற வேண்டாமா?

     பொதுக் கழிப்பறைகளை நினைத்தாலே குமட்டி வருகிறது. குளத்துப் படிக்கட்டுகள் போல் அமைச்சக வாயில்களைச் சுற்றி அமைந்திருந்த படிக்கட்டில் உட்கார்ந்து கிடந்த நூற்றுக்கணக்கான மக்களில் தானும் ஒருத்தியாக, தில்லையுடன் அபிராமி அமர்ந்திருக்கிறாள்.

     தன் முதுமைக்கால வாழ்க்கையில் கிடைத்த பந்தகமில்லாத இந்த நட்புறவுகளில் - அந்தப் பங்குனி வெயிலிலும் குளிர்ச்சியை அனுபவிப்பவளாகச் சுற்று முற்றூம் பார்க்கிறாள்.

     அப்போது சுருட்டையாகப் பம்மென்ற நாகரிகத்தலை அலங்காரமும், கறுப்புக் கண்ணாடியுமாக ஒரு பெண், அவளை நோக்கி வருகிறாள்.

     “மேடம்! நீங்க, தியாகி நாதன் மனைவி, அபிராமி அம்மாதானே!”

     கையில்லாத கருகுமஞ்சள் சோளி. கத்தரிப்பூ வண்ணத்தில் மஞ்சள் பூக்கள் அச்சிட்ட சேலை... ஒல்லியாக, உயர, ஏதோ பார்த்த சாடையாக...

     “ஆமாம்... யாரம்மா நீ?...”

     “ஆன்ட்டீ! நான்... சௌந்தரம்மாவின் கிரான்ட் டாட்டர். எங்கம்மா... சுஜா!”

     ஒரு கணம் அவளுக்கு இதயம் துடிக்க மறந்து போனது போல் இருக்கிறது.

     சௌந்தரா...!

     “உங்களைப் பத்தி அம்மாம்மா, நிறையச் சொல்லி இருக்காங்க, ஆன்ட்டீ! நாதன் அங்கிள் போட்டோ கூட எங்க வீட்டு ஆல்பத்தில் இருந்து பார்த்திருக்கிறேன்...”

     அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

     சௌந்தரா... அவள் மகளின் மகள்... இப்படி வந்து திடீரென்று...

     “இவங்க சங்கம் முன்ன அண்ணா சாலை ஹால் கூட்டம் நடத்தினப்ப, அதான் - சட்ட உதவி பத்தி... நடத்தினப்ப நான் வந்திருந்தேன். உங்க கிட்ட வந்து பேசணும்னு ஆசை. ஆனால் உள்ளே புகுந்து வரத் தயக்கமா இருந்தது... இங்கே எங்கேஎ உட்கார்ந்திருக்கிறீங்க?”

     தில்லை சொல்கிறாள்.

     “ஓ... ஆன்ட்டீ!... நீங்க இப்ப எங்க கூட என் வீட்டுக்கு வரீங்களா? நீங்க... ரெஸ்ட் எடுத்துக்குங்க... மூணரைக்குள் உங்களை இங்க கொண்டு விட்டுடறேன்?...

     அபிராமி, தில்லையைப் பார்க்கிறாள்.

     இந்த நேரத்துக்கு ஏதோ சுவர்க்கலோகத்துக் கன்னி போல அவள் வந்து அழைப்பதாகப் படுகிறது. போகக் கூடாதா? “ஏம்மா? உன் பேர் சொல்லலியே?”

     “ஆனந்தி... ஆன்ட்டீ... ஆணின்னுதான் கூப்பிடு வாங்க.”

     “வரீங்களா, ஆன்ட்டீ?”

     மிகவும் பாசமாக, எத்தனையோ நாட்கள் பழகினவள் போன்ற கனிவுடன் நிற்கிறாள்.



கோபுர பொம்மைகள் : 1