சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
செம்பருந்து (Brahminy Kite) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 27. உறையூர் முற்றுகை |
2 தில்லை எதுவும் பேசவில்லை. “இந்த மாதிரிப் போராட்டம்னா, எனக்கும் தெரிவிச்சிருக்கலாமே?...” ஆனந்தி முன்பே இவர்களைத் தெரியும் என்று காட்டிக் கொள்கிறாள். “மினிஸ்டர் ஊரில இல்லேன்னாங்க? செகரிடரி கிட்டத்தான் நீங்க கொடுக்கணும்...” தில்லை அவளை மதித்து ஒன்றுமே பேசவில்லை. அபிராமிக்கு அது எப்படியோ உவப்பாக இல்லை. “ஏம்மா? உங்க வீடு... எங்க இருக்கு?” “சிந்தாமணி கார்ட்ன்ஸ். பத்து நிமிஷ ட்ரைவ்...” ஆம். இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்தக் காகிதங்களைக் கொடுக்க அவள் எதற்கு? அவர்கள் கூப்பிட்டார்கள்; வந்தாங்க. இப்படி அவதிப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பது தேவைதானா? அவள் எழுந்து விடுகிறாள். “வசு என்னைக் கோபிச்சிப்பாங்க! உள்ள நல்ல வசதி இருக்கும்மா?” “இருக்கட்டுமே. நான் கூட்டிட்டுப் போயிட்டு, முணு மணிக்குள் இங்கேயே கொண்டாந்து விடறேன். இரண்டு பத்துத் தான் இப்ப...” ஆனந்தி அங்கேயே ஆள் ஏற்றி வரும் ஓர் ஆட்டோவைக் கைகாட்டி நிறுத்தி விடுகிறாள். உள்ளூற ஒரு பொருந்தாமை தலை காட்டிடவும், அபிராமி பொருட்படுத்தவில்லை. வசு எப்படியோ? தில்லை ஏற்கவில்லை. இவள் நாகரிகம் - பிடிக்காது கையில்லாத ரவிக்கை... ஆனால், அவள் என்ன, அவர்கள் கைதியா? “ஏம்மா, ஆனந்தி? சௌந்தரா இங்கே இருக்காளா, உனக்கு ஒரு மாமா இருப்பானே? ரங்கூன்லேந்து, இவரும், உங்கம்மாவும், நாலு வயசுப் பையனும் முன்னாடியே கப்பல்ல வந்திட்டாங்க. அவுருதான் ரங்கூன்லேந்து நடந்து வரப்ப, காய்ச்சல் வந்து பாதி வழியில உடம்பு சரியில்லாமக் கிடக்கிறார்னு தந்தி வந்தது. அப்ப இவங்க வீட்டிலேயே இல்ல. சௌந்தரா மீட்டிங்கெல்லாம் பயமில்லாமல் பேசுவா. இந்தி... இங்கிலீஷ்... வெடிப்பாப் பேசுவா! தந்தி வந்தப்ப அவ இல்ல. டிராமா, மீட்டிங்; வங்காளப் பஞ்ச நிவாரணம்னு போயிருந்தாங்க. அப்பல்லாம், சுஜாவும் தம்பியும் எங்கிட்டத்தான் இருப்பாங்க...” அவருக்கு அந்த நாட்களில் நினைவில் நெஞ்சு தழுதழுக்கிறது. இது வருத்தமா?... இல்லை... ஆற்றாமையா? தியாகியாகப் பெயர் பெற்றிருந்த அவள் கணவன், ஒன்று விட்ட மாமன் மகள் என்ற உறவை எந்த விதமாகப் பயன்படுத்திக் கொண்டார்? “அம்மாம்மா செத்துப் போய் அஞ்சு வருஷம் ஆகப் போகுது, ஆண்டி. மாமா கனடாவுக்குப் போய் அங்கேயே ஒரு பெண்ணைக் கட்டிக் கொண்டு செட்டிலாயிட்டார். எங்ககிட்டத்தான் வச்சிருந்தோம்...” “...இங்க ...உன் அப்பாம்மா... கூட இருக்கிறியாம்மா?” “இல்லே ஆண்டி, அம்மா எனக்குப் பன்னண்டு வயசிலியே செத்துப்போனா. எங்களை வளர்த்ததெல்லாம் அம்மம்மா தான்.” “அடடா! உனக்கு அண்ணன் தம்பியெல்லாம் இருக்காங்களா?” “நான் தான் மூத்தவள். ஒரு தங்கை, ஒரு தம்பி, ஆறு வயசில், பஸ் ஆக்ஸிடன்டில் போயிட்டான். அந்த ஷாக்... அம்மாவையும் கொண்டு போயிட்டது... உங்ககிட்டச் சொல்வதற்கென்ன ஆன்ட்டி? நாங்கள்... எங்கப்பாவுடன் இல்லை. என் அம்மாவுக்கு அப்படி எழுதிக் கொடுத்தது கூட அதிர்ச்சியாக இல்லை. பையன் போனதைக் தாங்க முடியவில்லை.” இச்செய்திகள், அபிராமியின் நினைவுக் குவியல்களைத் தோண்டிப் போடுகின்றன. அறிந்து செய்த துரோகமா? சௌந்தரா, கப்பலில் வந்த இறங்கிய போது, அரசகுமாரி, போல் அல்லவோ இருந்தாள்? ரங்கூனில் இருந்து, புதிய புதிய சாமான்கள், தையல் மிஷின், சுருள் சுருளான சாடின், ஆர்கன்டித் துணிகள்... அப்போது அவள் புருஷன் வேலூர் சிறையில் இருந்தார். சௌந்தராவை இவள் மாமியாரும், நாத்திமார்களும், மைத்துனிகளும் சூழ்ந்து கொண்டார்கள். ரோஜாவின் செம்மை பூத்த ஒரு சிவப்பு நிறம் அவளுக்கு. கண்கள் கருமை பாவாமல் பூனைக்கண்களாக இருக்கும். முடியும் அத்துணை கருமையாக இருக்காது. அந்தக் காலத்தில், பர்மாவில் நிச முடிச் சவுரி பிரசித்தம். பர்மியப் பெண்கள், முடி தரை பெருக்குமாம். அதை வெட்டிச் சவுரிக்குக் கொடுப்பார்களாம். அப்படிக் கருகருவென்ற சவுரியையும், சொந்த முடியையும் பின்னல் போடாமல் முறுக்கி, நாகபந்தனம் போல் கொண்டை போட்டு, முத்துத்தொங்கட்டான் உள்ள ஊசியைச் செருகிக் கொண்டிருப்பாள். சென்னையில் குண்டு விழப் போகிறதென்று குடும்பம் தஞ்சாவூருக்கும் திருக்கண்ணபுரத்துக்கும் பிரிந்து சென்றதெல்லாம் சில மாதங்கள் தாம். அந்தப் பெரிய வீட்டை, குண்டு விழப் போகிறதென்று வீட்டுக்காரர் கொள்ளை விலைக்கு விற்க வந்த போது, இவள் மைத்துனர், அதை வாங்கிப் போட்டிருந்தார். மீண்டும் அதே வீட்டில் குடிபுகுந்த நாட்களில் இவர் கணவர் சிறையிலிருந்து விடுதலையாகியிருந்தார். அப்போதெல்லாம் கூடச் சௌந்தராவின் கணவரைப் பற்றி ஒரு தகவலும் வந்திருக்கவில்லை. ஆனால் அதைப் பற்றி அவள் நினைத்து உருகினாளோ? இல்லை. இவள் புருஷன் சௌந்தரா, சௌந்தரா என்று அவளைச் சுற்றிக் கொண்டிருந்தான். சமூக சேவை, தேச சேவை எல்லாம் அவளுக்குப் பாடமாயின. வங்கப் பஞ்சத்துக்காகப் பம்பாய், நாகபுரி என்று வெளியூரெல்லாம் சுற்றினார்கள். கல்லுரலிலும், திரிகையிலும் ஆட்டவும், அரைக்கவும், பஞ்சகால அரிசியைப் பதமாக வடித்துப் போடுவதுமே வாழ்க்கையாக இருந்த அவளுக்கு. அவள் வாழ்க்கையின் அடிநாதமான உரிமையைப் பாதிக்கக் கூடிய சம்பவங்கள் நடந்து விட்டிருந்தது கூட அன்று பெரிதாக உறைக்கவில்லை. ஏறக்குறைய புருஷனைக் கண்டே இரண்டாண்டுகளாயிருந்த பின், அவள் உடலில் மாறுதல் கண்டிருந்ததும், பித்தம் என்று சோர்ந்து படுத்ததும் அத்தையை அழைத்துக் கொண்டு லேடி டாக்டரிடம் சென்றதும்... அக்கம்பக்கம் அரசல்பொரசலாகச் சில பேச்சுக்கள் எழுந்ததும், அவள் மாமியார், ஒரு சத்தம் போட்டு, அந்த வாய்களை அடக்கியதும்... படம் படமாக நினைவில் வருகின்றன. பிறகு, அவளையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பம்பாய்க்குச் சென்றார்கள். அங்கே பள்ளிக் கூடமொன்றில் அவளுக்கு வேலை கிடைத்ததென்றும், பின்னர்... ஃப்ளாட் வாங்கியதாகவும் தெரிந்து கொண்டாள். சுஜா கல்யானத்துக்கும் கூட அவர் போனார். “ஆண்டி...! இதான் வீடு... நிறுத்தப்பா!...” வாசல் முன், “வஸந்த் படிக்...” என்ற விளம்பரப் பலகை தொங்கியது. முன்பக்கம் தோட்டமுடைய அழகிய சிறு வீடு. அபிராமி உள்ளே கால் வைக்கக் கூசியவள் போல் தயங்கி நிற்கிறாள். வசுவையும் தில்லையையும் தமாவையும் விட்டு விட்டு, முன்பின் அறிந்திராத ஓரிடத்தில் வந்து நிற்பது சரியா? ஒரு கணம், அவளுக்கு இவளுடன் வருவதற்கான ஓர் அவசியத்தை முனைப்பாக்கிய உடல் உபாதையே மறந்து விட்டாற் போல் இருக்கிறது. கீழே பூப்போட்ட கம்பளி விரிப்பு. கண்ணாடிப் பலகை போட்ட நடு மேசையைச் சுற்றி மெத்து மெத்தென்று தோன்றும் சோபா, உறைகளில் அழகிய பூ வேலைப்பாடுகள்... மூலைகளில் பித்தளைக் காது வைத்த பளபளவென்ற பாத்திரங்களில், குறுந்தென்ன மட்டைகள் போல் பூரித்து விழும் பசுந்தோகைகள் - சன்னல் திரைகள். சுவர்ச் சித்திரங்கள் எல்லாமே பசுமையானதொரு பூங்காவினை அங்கே படைத்திருக்கின்றன. உள்ளே அடி வைத்ததும் திகைத்தாற்போல் பார்க்கிறாள். எதிரே பெரிய கண்ணாடி அலமாரியில் ஒன்றரை, இரண்டடி உயர அலங்காரப் பொம்மைகள், விதம் விதமான வேலைப்பாடுடைய உடை மாதிரிகளை அணிந்து நிற்கின்றன. சுவரில் மலர்த்தோட்ட வடிவில் ஒரு கடிகாரம் அதன் முள்காட்டி, பட்டாம் பூச்சிபோல் இருக்கிறது. திகைத்து நிற்கையில் ஆனந்தி பரபரவென்று உட்கதவுகளைத் திறக்கச் சென்றதைக் கவனிக்கவில்லை. அப்போது வாயில் மாடிப்படியில் இருந்து, ஓர் இளம் பெண் வருகிறாள். சுருட்டை சுருட்டையான முடியைப் பம்மென்று கத்திரித்து விட்டுக் கொண்டு, புருவங்களை வளைத்துக் கொண்டு அழகு செய்து கொண்டாலும், இயற்கையாக, சதைப்பிடிப்பாக இளமை திகழும் பெண், புடைவையும் இல்லை; சல்வர் கமீசும் இல்லை. முழங்கால் வரை அரை உடுப்பும், மேலே கோட்டுமில்லை சட்டையுமில்லை என்று பளிச்சென்ற சிவப்பும் பச்சையுமாக லேஸ் தைத்த உடை. “மேடம்...?” “என்ன சுநீதா? செட்டியார் மெடீரியல் அனுப்பினாரா?” “இல்ல மேடம், ரெமி... ஃபோன் பண்ணாங்க. நான் நீங்க இல்லென்னேன்...” “தபால் இருக்கா ஏதானும்...?” “இருக்கு மேடம். இங்கே கொண்டு வரட்டுமா?” அப்போது ஓரமாக வைக்கப்பட்ட தொலைபேசி ஒலிக்கிறது. அபிராமிக்கு இந்த ஒலியே அவள் கேட்டிராதபடி விசித்திரமாகப் படுகிறது. ஏதானும் சினிமாக் காட்சியோ? நிசமோ அவள் சினிமாக்களுக்குச் சென்றதே யில்லை. எப்போதோ ஓர் அவ்வையார் படம் பார்த்தாள். அந்தப் படத்தில், அப்போது பள்ளிக்கூடத்தில் நான்காவதோ, ஐந்தாவதோ படித்துக் கொண்டிருந்த குழந்தை சாரதா வந்திருந்தாள். ஏதோ ஓர் இடத்தில் - நாவல்பழம் கொடுக்கும் கட்டம் என்று நினைவு. அவள் வகுப்புக் குழந்தைகளை நடிக்க அழைத்துச் சென்றிருந்தார்கள். தலையைப் பின்புறமாக வாரி, இடுப்பில் துண்டு உடுத்தி, திறந்த மேனியில் பையனாக அவள் வந்தாள். “அம்மா, நல்லாப் பாரு... அதோ... நான்...” என்று பக்கத்தில் இருந்து குழந்தை காட்டியும், ஒரு சில நொடிகளே வந்து போன அந்தக் காட்சியில் சாரதாவை அவளால் அடையாளம் கூட கண்டுகொள்ள முடியவில்லை... கண்கள் கசிகின்றன. “ஆண்ட்டி! டாய்லெட்டுக்குப் போகணும்னீங்களே? வாங்க!” அவள் சட்டென்று நினைவு வந்தவளாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்திருக்கிறாள். ஆனந்தி, அவளை அந்தக் கூடத்துடன் ஒட்டிய படுக்கை அறைக் கதவைத் திறந்து, அங்கு இடம் பெற்ற குளியலறைக்கு அழைத்துச் செல்கிறாள். குளிக்கும் இடம் தனியாகத் தடுக்கப் பெற்று, விசாலமாக இருக்கிறது. இள நீலத்தில் பளிங்குக் கற்கள் பாவப் பெற்று குழாய்க் கைப்பிடிகள் வெள்ளி போல் மின்னுகின்றன. ஆனந்தி கதவைத் திறந்து, அவளை உள்ளே விட்ட பின் வெளிக் கதவைச் சாத்திக் கொண்டு போகிறாள். பழக்கமில்லாத உயரப் பீங்கான், தண்ணீர்ப் பாய்ச்சலைத் திறக்க எந்தக் குமிழை, கைப்பிடியை இயக்க வேண்டும் என்று புரியாத நிலை, எல்லாம் ஓர் அந்நியத் தன்மைக்குள் அவளைத் தள்ளுகின்றன. சமாளித்துக் கொண்டு பயனடைகிறாள். முகம் கழுவிப் புதுமை செய்து கொள்கிறாள். கண்ணாடியில் பார்த்துப் பிரிந்த முடியை ஈரத்தால் அமுக்கிக் கோதிக் கொள்கிறாள். கதவைத் திறந்து வெளி வருகையில் ஆனந்தி அங்கே புன்னகையுடன் நிற்கிறாள். “அப்பா! இப்பத்தான் உங்க முகம் ரிலாக்ஸாய்ருக்கு ஆண்டி!” என்று கையில் வைத்திருக்கும் மெத்தென்ற தேங்காய்ப் பூத்துவாலையைக் கொடுக்கிறாள். “தலைவாரிக் கொள்றீங்களா ஆண்டி? சீப்பு வேணுமா? இதோ...” “வேண்டாம்மா. இப்படியே கோதிக்கிட்டேன்...” “வாங்க...” முன்னறையின் கண்ணாடி மேசைப் பலகையில், ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் பழத்துண்டுகள் நறுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு ஸ்பூனும் கூட வைத்திருக்கிறாள். ஆரஞ்சுச் சுளைகள்... மணிமணியான விதையில்லாத் திராட்சை, வாழைப் பழத் துண்டுகள்... “என்னம்மா இதெல்லாம்?...” “ஒண்ணுமில்ல, ஆண்டி, சாப்பிடுங்க... வெறும் பழம் தான்... ரோஸ் மில்க் சாப்பிடுவீங்களா, ஆண்டி? சில்லுனு தரட்டுமா, சுமாரா இருக்கட்டுமா?” “இப்பத்தானேம்மா காபி சாப்பிட்டு வந்தேன்!” “அந்தக் காபி எப்போதோ போயிருக்கும்...” என்று உள்ளே செல்கிறாள். உயரமான எவர்சில்வர் தம்பளரில், ரோஸ் வாசனை கலந்த, மிதமான குளிர்ச்சியுடைய பால் வருகிறது. வாங்கிப் பருகுகிறாள். இதமாக நன்றாக இருக்கிறது. “பழம் சாப்பிடுங்க ஆண்டி!... ஏன் வச்சிட்டீங்க? இது உடம்புக்கு ஒண்ணும் கெடுதல் பண்ணாது!” வற்புறுத்தலுக்கு இணங்க வேண்டியிருக்கிறது. “உங்களை என்னோடு வைத்துக் கொள்ள ஆசைப் படுகிறேன், வருவீர்களா, ஆண்டி!” அடி மனத்திலிருந்து வரும் ஆர்வமாய் அபிராமிக்கு மனசைத் தொடுகிறது அக்குரல். “அதற்கென்னம்மா?... எனக்கு ஒரு பந்தமுமில்லை... ஏம்மா கேட்கிறேன்னு நினைக்காதே, எங்கள் காலத்தில் வீட்டு மூலை தவிர எதுவும் தெரிய வேண்டாம்னு ஒண்ணும் புரியாத பருவத்தில் கட்டி வைத்தாங்க. கசப்பு, புளிப்பு, எல்லாம் தான். இன்றைக்கும் அவரை வைத்துத்தான் எனக்குக் கௌரவமே இருக்கு. இது பிடிக்கலேன்னாலும் தேவையாக இருக்கு.” அவள் என்ன சொல்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு விடுகிறாள் போலும்! “ஆண்டி! நீங்கள் நினைப்பது போல் இல்லை. அம்மாம்மா, எனக்கு ஒரு கல்யாணம் ஆகிவிட்டதென்ற நிம்மதியில்தான் கண்ணை மூடினாள். ஆனால் அவள் கணக்குத் தப்பாகிவிட்டது!” “நீ என்னம்மா சொல்றே?” “ஆமாம் ஆண்டி. என் அப்பா, என் அம்மாவின் பேரில் இல்லாத பழியைப் போட்டு, வேறொருத்தி தொடர்பை நிலைப்படுத்திக் கொண்டான். என் கண் முன்பே, எனக்கு வந்தவனும் துரோகம் பண்ணிட்டிருக்கிறான். கல்யாணம் இல்லேன்னு ஆயிட்டது. மதிப்பில்லாமே...” அவளால் சீரணிக்க முடியவில்லை. “ஏம்மா, எல்லாத்துக்கும் இப்பல்லாம் சட்டம் இருக்கே? படிச்ச பொண்ணு, உனக்குத் தெரியாதா? வசு, இந்த மாதிரிப் பிரச்னைப் பெண்களுக்குச் சங்கம் மூலமா உதவி செஞ்சிருக்கிறாளே?” “அதெல்லாம் ஒண்ணும் சரிப்படும்படி இல்ல, என் விஷயத்தில், ஆண்டி...” “சரி, இப்ப போகலாமா?... மூணடிச்சிருக்கு...” கிளம்புகிறார்கள். ஆட்டோவில் அவர்கள் அமைச்சக வளைவுக்கு வந்து பார்க்கிறார்கள் மூன்றரை தானாகிறது. ஆனந்தி விசாரிக்கிறாள். தெரியவில்லை. “ஆண்டி, அவங்க தாஸ் காம்ப்ளெக்ஸ் ஹால் மீட்டிங்குக்குப் போயிருப்பாங்க. அங்கே பார்ப்போம். முடிஞ்சு வந்து என்னோடு ராத்திரி தங்கிட்டுப் போங்களேன்? காலம கொண்டு விடறேன்!” அபிராமியினால் மறுக்க இயலவில்லை. தாஸ் காம்ப்ளெக்ஸ் ஹாலுக்குச் செல்கிறார்கள். அந்த ‘ஹால்’ வாயிலிலேயே, இவர்கள் சங்கப் பெயரும், தாய்ச் சின்னத் துணிப் பதாகையும் கூட்டத்துக்கு வருபவர்களை வரவேற்கின்றன. தேவகிக்கும் ராதாவுக்கும் அவளைக் கண்டதில் மிக மகிழ்ச்சி - “ஓ, இவதான் கூட்டிட்டுப் போனாளா? ரொம்ப சந்தோஷம். ஆனந்தி... வாங்க...” தமா, மது, வசுவும் கூட வந்திருக்கிறார்கள். பின் வரிசையில் உட்காரப் போன அவளை, மது கையைப் பற்றி அழைத்துச் செல்கிறாள். அந்தக் கூட்டத்தில் இருநூறு பேர் அமரலாம். ஆனால், பாதி இடங்களுக்கு மேல் காலியாக இருக்கிறது. இந்தச் சங்கத்தில், படித்த பேராசிரியர்கள், வக்கீல்கள் அவளுக்குத் தெரிந்திராத அரசியல் சமூகப் பொருளாதார விஷயங்களைப் பேசுவார்கள். ராதாவும் தேவகியும், இவரைப் போல் ஆங்கிலம் நன்கு புரியாதவர்களுக்கு, தமிழகத்துக்கு அப்பாலிருந்து வரும் பேச்சாளரின் ஆங்கிலப் பேச்சுக்களைத் தமிழில் எடுத்துச் சொல்வார்கள். செம்பழுப்பாகச் சாயமிட்ட பாப் கூந்தலும் பெரிய பொட்டுமாக விளங்கும், ஐம்பது வயசுப் பெண்மணி ஒருத்தியை ராதா அழைத்துச் சென்று மேடையில் அமர்த்துகிறாள். கஞ்சி போட்ட வெள்ளைச் சேலை அணிந்திருந்த அவளை இதற்கு முன் பார்த்த நினைவு அபிராமிக்கு வருகிறது. ஓ... இவள் தான் காஞ்சன் தேத்தா? முன்பு, இவள் வந்து பேசிய விஷயம், அபிராமிக்கு மறக்கும்படியாகவே இல்லை. எப்போதோ ஐந்தாவது வரை படித்திருக்கும் அவளுக்கு, ஆங்கிலம் வெறும் எழுத்தறிவு தான். ஆனால், அந்தப் பெண்மணி உச்சநீதிமன்றத்து வக்கீல் என்று சொன்னார்கள். அந்தப் பேச்சை உடனுக்குடன் ஆர்த்தி மொழி பெயர்த்தாள். பலாத்காரக் குற்றம், சட்டம், தண்டனை பற்றிப் பேசினாள். அவள், “ஒரு பெண் வன்முறைக்கு ஆளாக்கப்படும் போது, அவள் எதிர்த்துப் போராடிய தடயங்கள் இல்லை என்றால் அவளும் அதற்கு உடன்பட்டிருக்கிறாள் என்றாகிறது. எனவே அது குற்றம் என்ற வரையறைக்கு உட்படாததாகி விடுகிறது” என்ற கருத்தை வைத்து அன்று பேசினார்கள். இப்படி ஒரு சட்ட நுணுக்கமா என்று அபிராமி அன்று திடுக்கிட்டுப் போனாள். “ஓர் ஆண் தன்னை இப்படித் தாக்க வருகிறான் என்று உணரும் போதே, தன் எதிர்ப்புச் சக்தி ஆவியாகி விட பெண் வெலவெலத்துப் போவாளே?” என்று அந்த அம்மாள் வாதம் செய்தாள். சட்டத் திருத்தங்களின் நுணுக்கங்கள் புரியாமலிருந்தும், அபிராமி, அடித்து வைத்த சிலையாக, நினைவுகள் உள்ளே அலைமோத உட்கார்ந்திருந்தாள். கை தட்டுபவர்களுடன் சேர்ந்து பலமாகத் தட்டினார்கள். சௌந்திராவுடன் அவர் உறவு புரிந்திருந்த நிலையில் அவள் அவர் முகத்தில் விழிக்கக் கூடக் கூடாது. தன் மீது அவர் கைபடக் கூட அனுமதிக்கக் கூடாது என்று இருந்தாளே? அந்த வகையில் அவளால் எதிர்ப்புக் காட்ட முடிந்ததோ? ஏன்... ஏன் அப்படி? அவள் அப்போது நினைத்தாள். ஒரு வேளை சௌந்தராவும் சூழ்நிலை காரணமாகவே சிக்கியிருப்பாளோ? துணையின் தொடர்பு இல்லாமல் தனியாக இருந்த நிலையில், அவள் உடம்பே அவளுக்கு எதிரியாகத் துரோகம் இழைத்திருக்கலாம். வேண்டாத வித்தையும் கூட வாங்கிக் கொள்ளும் உடம்பு... ‘இப்படி... அன்பே இல்லாத ஒருவர்... இது வேண்டாம், இதைச் சுமக்க மாட்டேன்...’ என்று அவளையுமறியாமல் அவள் உள் மனசில் புரையோடிய வெறுப்பே, அவள் வயிற்றில் முழு வளர்ச்சி பெறுவதை ஏற்றிருக்க வில்லையோ? இன்றைய அரங்கில், அவள், ‘மீடியா’ என்ற மக்கள் தொடர்புச் சாதனங்கள், பெண்கள் எவ்வாறு அறிவுபூர்வமாகச் சிந்திக்க வொட்டாமல் அழுத்தி வைத்திருக்கின்றன என்று பேசுகிறாள். ஆனால் அபிராமிக்கு அது மனசுக்கே எட்டவில்லை. |