உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
விசிறி வாழை முன்னுரை இக் கதை 'வாஷிங்டனில் திருமணத்தை'ப் போன்ற ஒரு நகைச்சுவைத் தொடர் அல்ல என்பதை வாசக நேயர்களுக்கு முன் கூட்டியே தெரிவித்துவிட விரும்புகிறேன். இது ஒரு தனித் தன்மை வாய்ந்த புதுமையான காதல் நவீனம். இதில் நகைச்சுவைக்கும் இடம் உண்டு. இதற்கு முன் எத்தனையோ விதமான காதல் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு, சாகுந்தலம் போன்ற காதல் இலக்கியங்கள் அழிவில்லாத அமரத்வம் பெற்றவை. ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் தனிச் சிறப்பு வாய்ந்தவை. அந்த மாபெரும் இலக்கியங்களுடன் இந்தக் காதல் நவீனத்தை நான் ஒப்பிட்டுப் பேசவில்லை. இதுவரை தோன்றியுள்ள காதல் கதைகளுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட முறையில் இந்தக் கதை அமைந்துள்ளது என்பது என் கருத்து. ஒரு காதல் கதையின் வெற்றிக்கு இன்றியமையாத அம்சங்கள் எத்தனையோ உண்டு. அந்த உத்திகள் எதுவும் இதில் கையாளப்படவில்லை. காதலுக்குரிய சூழ்நிலை, கதாபாத்திரங்கள், இவை இல்லாமலே இதை ஒரு காதல் நவீனம் என்று தைரியமாகக் கூறுகிறேன். ஆயினும், கதையின் முடிவில் தான் நேயர்கள் இதைப்பற்றி முடிவு செய்ய வேண்டும். ஆனால் என்னைப் பொறுத்த மட்டில் இந்தக் காதல் கதையைப் படித்து முடித்த பிறகு யாராவது ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவார்களானால் அதையே இந்தக் கதையின் வெற்றியாகக் கொள்வேன். இந்தத் தொடரின் பின்னுரையில் நேயர்களுக்காக ஒரு முக்கிய விஷயம் காத்திருக்கிறது. அது இக் கதையில் வரும் கதாபாத்திரங்களையோ நிகழ்ச்சிகளையோ பற்றி அல்ல. அதை இப்போதே கூறிவிட்டால் சுவாரசியம் கெட்டுவிடு மாகையால் இப்போது கூறாமல் கதையைத் தொடங்குகிறேன். சாவி |