குருத்து ஏழு

     சுழல் நாற்காலியில் சாய்ந்த வண்ணம், மேஜை விளிம்பைக் கால்களால் உந்தி முன்னும் பின்னுமாக ஆடியபடியே தீவிரச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் சேதுபதி, கல்கத்தாவிலுள்ள ஒரு வர்த்தக ஸ்தாபனத்துடன் ‘டிரங்’ டெலிபோன் மூலம் தொடர்பு கொள்வதற்காகக் காத்திருக்கும் போது அந்தப் பொன்னான நேரத்தை வீணாக்காமல் தம்முடைய மோட்டார் தொழிற்சாலையின் எதிர்காலத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்.

     யோசனையின் தீவிரத்தில் அவர் தம்முடைய அகன்ற நெற்றிக்கும் வலது உள்ளங்கைக்குமிடையே சிக்கியிருந்த பென்சிலை இப்படியும் அப்படியும் உருட்டிக் கொண்டிருந்த சமயம், “அப்பா! இன்றைக்கு எனக்குப் பிறந்த நாள்!” என்று குதூகலத்தோடு கூறிக்கொண்டு அவருடைய அருமை மகள் பாரதி அவர் எதிரில் வந்து நின்றாள்.

     “அப்படியா? ரொம்ப சந்தோஷம்! இன்றைக்கு உனக்கு எத்தனையாவது பிறந்த நாள்?” சேதுபதி கேட்டார்.

     “இருபதாவது...”

     “வெரிகுட்! உன் அத்தையிடம் சொல்லி முதல் தரமான விருந்து தயாரிக்கச் சொல்லு... உனக்குப் பால் பாயசம் ரொம்பப் பிடிக்குமே! உன் சிநேகிதிகளை யெல்லாம் சாப்பிடக் கூப்பிடுவதுதானே?”

     “கூப்பிடாமல் இருப்பேனா? அவர்கள் எல்லோரும் மாடியில் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பத்து நிமிஷத்தில் விருந்து தயாராகிவிடும். அப்பா ! நீங்களும் இன்று என்னோடு சாப்பிட வேண்டும்...”

     “அப்படியா சங்கதி? எல்லா ஏற்பாடும் நடந்து கொண்டிருக்கிறதா? இந்த வீட்டில் நடப்பது ஒன்றுமே எனக்குத் தெரிவதில்லை...”

     “உங்களுக்குத்தான் எதிலேயுமே அக்கறை கிடையாதே! எந்த நேரமும் வேலைதான். அதே ஞாபகம்தான்! உங்க வயசே உங்களுக்கு நினைவில் இருப்பதில்லையே!”

     “நான் எல்லாவற்றையும் மறந்து விடுகிறவன் என்று தீர்மானித்துவிட்டாயா? சின்ன வயசிலே நடந்ததெல்லாம் கூட எனக்கு ஞாபகம் இருக்கிறது. நான் பிறந்தபோது எனக்கு வைத்த பேரைக்கூட. இன்னும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறேன், தெரியுமா?...”

     “அடேயப்பா! ரொம்ப ஆச்சரியமாயிருக்கே! அது சரி; உங்களுக்கு இப்போது என்ன வயசாகிறது தெரியுமா?...”

     “அதுதான் மறந்து போச்சு. உள்ளே போய் அத்தையைக் கேட்டுப் பாரு. சரியாகச் சொல்லுவாள். அவளைவிட எனக்கு நாலு வயசு கூட. அவளுக்கு இப்போ...”

     “நாற்பத்தெட்டு ஆகிறது.”

     “அப்படின்னா எனக்கு இப்ப ஐம்பத்திரண்டு ஆகியிருக்கணுமே!... ஓ... அவ்வளவு வயசாகி விட்டதா எனக்கு?”

     “அப்பா, அம்மாவையும் உங்களையும் சேர்ந்தாப் போல நிற்க வைத்து நமஸ்காரம் செய்ய முடியலையே என்று எனக்கு ரொம்ப நாளாகக் குறை. கொஞ்சம் எழுந்து அம்மா படத்துக்குப் பக்கத்திலே நில்லுங்கப்பா... நமஸ்காரம் செய்யறேன்...”

     கண்களில் தளும்பிய கண்ணீரைத் துடைத்தபடியே சேதுபதி தமது மனைவியின் படத்தைப் பார்த்தார். அந்தக் களைபொருந்திய முகம் தெய்வத்தன்மை பெற்று விளங்கியது.

     திருமணத்தன்று சேதுபதி அவளுக்கு மாலை சூட்டிய போது அவள் வெட்கம் சூழத் தலை குனிந்த வண்ணம் தம் எதிரில் நின்ற காட்சி அவர் நினைவுக்கு வந்தது.

     அன்று கல்யாண கோலத்தில் நின்ற சரஸ்வதியின் அழகிய வடிவத்துக்கும் இப்போது எதிரில் நிற்கும் பாரதியின் தோற்றத்துக்கும் அதிக வித்தியாசம் இல்லை. சேதுபதியின் நெஞ்சத்தில் உணர்ச்சி அலைகள் பொங்கின.

     சரஸ்வதியைப் பிரிந்து இன்று பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இத்தனை காலமும் வைராக்கிய புருஷராக, சலனமற்ற தபசியாக, திடசித்தம் வாய்ந்தவராக வாழ்ந்து விட்ட சேதுபதியின் உள்ளத்தில் பார்வதி பெரும் புயலைக் கிளப்பியிருந்தாள்.

     “பாரதி! நீ போய்ச் சாப்பிடு! எனக்காகக் காத்திருக்க வேண்டாம். காலேஜுக்கு நேரமாகிவிடும் உனக்கு. நான் கல்கத்தாவுக்கு டிரங்க்கால் புக் செய்திருக்கிறேன்.”

     “பிறந்த நாளன்றுகூட என்னோடு சாப்பிடக் கூடாதா அப்பா! எப்போது பார்த்தாலும் வேலைதானா?” சலிப்போடு கூறினாள் பாரதி.

     “இன்றைக்கு உனக்குப் பிறந்த தினம் என்று நீ என்னிடம் நேற்றே சொல்லியிருந்திருக்கக் கூடாதா?”

     “நேற்று நான் சொன்னபோது ‘பேஷ் பேஷ்’ என்றீர்களே! அதற்குள் மறந்து விட்டீர்களா?”

     “நீ என்ன சொன்னாய் என்பதே இப்போது என் ஞாபகத்தில் இல்லை. நான் ஏதோ கவனமாக பேஷ், சொல்லியிருக்கிறேன்! பரவாயில்லை உன் சிநேகிதிகளெல்லாம் வந்திருக்கிறார்கள் இல்லையா! அவர்களை யெல்லாம் சாப்பிடச் சொல்லு” என்றார் சேதுபதி.

     “அப்பா, உங்களுக்கு வர வர ஞாபக மறதி அதிகமாகிக் கொண்டே போகிறது. நான் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் மறுபடியும் மறந்து போனாலும் போவீர்கள். ஆகையால் எனக்கு இப்போதே ‘பர்த்டே பிரசன்ட்’டைக் கொடுத்து விடுங்கள்” என்றாள் பாரதி.

     “பிரசன்ட்டா! என்ன பிரசன்ட் கொடுக்கிறது?”

     “ஜப்பானிலிருந்து நாய் பொம்மை ஒன்று வந்திருக்கிறதாம். யாராவது கூப்பிட்டால் அந்தப் பொம்மை நாய் தானாகவே வாலை ஆட்டிக் கொண்டு ஓடி வருகிறதாம்.”

     “தானாகவே எப்படி ஓடி வரும்? யாராவது கீ கொடுத்து வைத்திருப்பார்கள்.”

     “அதுதான் இல்லை; கூப்பிடறவர்களின் சத்தத்தைக் கேட்டுத் தானாகவே ஓடி வருகிறதாம்.”

     “விஞ்ஞானம் அவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது. அந்த நாய் என்ன விலையாம்?”

     “அறுநூறு ரூபாயாம்!”

     “ரொம்ப அதிகம்...”

     “கூப்பிட்டால் ஓடி வருகிறதே! அதுக்கு இது ஒரு விலையா?”

     “தெருவிலே போகிற நாய்க்கு ஒரு பக்கோடாவைக் காட்டிக் கூப்பிட்டால் போதுமே! உன் கூடவே ஓடி வருமே! இதுக்குப் போய் அறுநூறு ரூபாய் செலவழிப்பார்களா?” என்று சிரித்தார் சேதுபதி.

     பாரதியும் சிரித்து விட்டாள்.

     “நான் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் அறுநூறு ரூபாய் ரெடியா இருக்கணும்” என்று சொல்லிக் கொண்டே ஓடினாள் பாரதி.

     “பாரதி!” என்று அழைத்தார் சேதுபதி. வேகத்துடன் புறப்பட்ட பாரதி, சேதுபதியைத் திரும்பிப் பார்த்து “என்னப்பா?” என்று கேட்டாள்.

     “ஆமாம், உங்க பிரின்ஸிபாலைக் கூப்பிடலையா?”

     “அழைச்சிருக்கேன், அநேகமா, இப்ப வந்தாலும் வருவாங்க.”

     பிரின்ஸிபால் வரப் போகிறாள் என்னும் சேதி சேதுபதிக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. ஆயினும், அவர் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை.

     நேற்று கூடப் பார்வதியைச் சந்தித்தபோது பொதுவாகப் பல விஷயங்களைப்பற்றி அவர் வெகுநேரம் விவாதித்துக் கொண்டிருந்தார். எல்லா விஷயங்களிலும் அவளுக்குத் தெளிவான, நிச்சயமான அபிப்பிராயம் இருந்தது. ஆழ்ந்த படிப்பும், படிப்புக்கேற்ற பண்பும், எதையும் சூட்சுமமாகப் புரிந்து கொள்ளும் அறிவுக் கூர்மையும் வாய்ந்த பார்வதியுடன் பேசிக் கொண்டிருப்பதில் சேதுபதிக்கு ஒரு வெறியே இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு முறை சந்திப்பதாலும் பேசுவதாலும் தீர்ந்து போகிற வெறி அல்ல அது. தாகத்துக்கு உப்புத் தண்ணீர் குடிக்கிற மாதிரிதான். குடிக்கக் குடிக்க, மேலும் மேலும் தாகம் எடுத்துக் கொண்டே இருக்கு மல்லவா? தன்னுள் புகுந்து தன்னை ஆட்டி வைக்கும் அந்த மயக்கத்தைப்பற்றி அவரே ஆராய்ந்து பார்த்தார். அதன் இரகசியம், மர்மம், மாயம் எதுவுமே அவருக்கு விளங்கவில்லை.

     தம் வாழ்நாளில் அவர் எத்தனையோ அழகிகளைச் சந்தித்திருக்கிறார். அறிவாளிகளுடன் பழகியிருக்கிறார். அவர்களிடமெல்லாம் காணாத கவர்ச்சியும் மயக்கமும் பார்வதியினிடத்தில் மட்டும் எப்படி வந்தன? இந்த முதிர்ந்த பிராயத்தில் உடல் உறவு சம்பந்தமான இச்சைகளுக்கெல்லாம் முடிவு காண வேண்டிய பருவத்தில் இந்த மயக்கம் எதற்கு?

     ஆற்றலும் அனுபவமும் மிக்க சேதுபதி, திடசித்தம் வாய்ந்த இலட்சியவாதி தடுமாறி நின்றார். மனைவியின் படத்தைக் கண்டபோது அவருக்குப் பழைய நினைவுகளெல்லாம் ஞாபகத்துக்கு வந்தன.

     ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தாய்ப்பாசம் ஒன்றையே ஆதரவாகக் கொண்டு வாழ்க்கையில் பெரும் போராட்டங்கள் நிகழ்த்தி வெற்றி கண்டவர் அவர். உழைப்பால் உயர்ந்த உத்தமர். சரஸ்வதியை மணந்த பின்னரே, அவருடைய வாழ்க்கை விரிவாக மலரத் தொடங்கியது. ஆயினும், அந்த வாழ்வின் பூரண இன்பத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை அவளுக்கு. பாரதியைப் பெற்றெடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அவள் காலமாகி விட்டாள். அதற்குப் பிறகு சேதுபதி இல்லற வாழ்க்கையில் விரக்தி அடைந்து மறுமணம் செய்து கொள்வதில்லை என்ற முடிவுடன் வைராக்கிய புருஷராக இருந்து விட்டார்.

     அடுத்த ஆண்டிலேயே அவருடைய தங்கை சாரதாம்பாள் கட்டிய கணவனை இழந்து கைம்பெண்ணாகிக் கண்ணீரும் கம்பலையுமாகச் சேதுபதியின் வீட்டோடு வந்து சேர்ந்தாள். ஆதரவற்றுக் கிடந்த சேதுபதியின் குடும்பப் பொறுப்பை அவளே ஏற்க வேண்டியதாயிற்று. சமயம் நேரும்போதெல்லாம் அவ்வப்போது சேதுபதியை மறுமணம் செய்து கொள்ளும்படி அவள் தூண்டிக் கொண்டிருந்தாள். சேதுபதி அதற்கு இணங்கவில்லை.

     “குழந்தை பாரதியிடம் அன்பும் ஆதரவும் காட்டி வளர்க்க நீ இருக்கும்போது நான் எதற்கு மறுமணம் செய்து கொள்ள வேண்டும்?” என்று கூறிவிட்டார்.

     அந்தப் பிடிவாதம், தீவிர விரதம், திடசித்தம், உறுதி மொழி எல்லாம் இப்போது பார்வதியின் முன்னால் ஆட்டம் கண்டுவிட்டன.

     நினைவுச் சுழலிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நாற்காலியை விட்டு எழுந்து நின்றார், சேதுபதி. ‘பார்வதி வரும் நேரமாகிறது. இந்த நேரத்தில் நான் இங்கே இருப்பதைக் கண்டால் என்னைப்பற்றி என்ன நினைத்துக் கொள்வாள்? தனக்காகக் காத்துக்கொண்டிருப்பதாக, தன் வரவை எதிர்பார்த்து உட்கார்ந்திருப்பதாக அல்லவா எண்ணுவாள்? அம்மாதிரி அவள் தன்னைப்பற்றி எண்ணுவதற்கு இடம் தரக்கூடாது. அவள் வருவதற்குள் நான் வெளியே போய் விட வேண்டும். அப்போது என்னைப்பற்றி பாரதியிடம் விசாரிப்பாள். மாலையில் டியூஷனுக்கு வரும்போது ‘காலையில் சந்திக்க முடியவில்லையே’ என்று என்னிடம் கூறுவாள். தன் மீது அவள் கொண்டுள்ள அன்பும் அக்கறையும் அப்போது அவள் முகத்தில் வெளிப்படும்.’

     கல்கத்தாவிற்குப் போட்டிருந்த டிரங்க் காலை ரத்து செய்துவிட்டு, ‘பாரதி’ என்று அழைத்தார்.

     “என்ன அப்பா?” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் பாரதி.

     “எனக்கு அவசரமாக வேலை இருக்கிறது. நான் வெளியே போய்விட்டுப் பன்னிரண்டு மணிக்கு வருகிறேன்...”

     “பிரின்ஸிபால் சாப்பிட வருவதாகச் சொல்லியிருக்கிறாரே! நீங்க இல்லைன்னா...”

     “பரவாயில்லை; முடிந்தால் சாய்ந்திரம் பார்க்கிறேன். எனக்காகக் காத்திருக்க வேண்டாம். அவரைச் சாப்பிடச் சொல்லு...”

     உண்மையில் சேதுபதிக்கு எந்த அவசர வேலையும் இல்லை. அவசரமாக அவருக்கிருந்த வேலை கல்கத்தாவுக்கு டெலிபோனில் பேச வேண்டியதுதான். அந்த அவசர வேலையையும் அவசரம் அவசரமாக ரத்து செய்துவிட்டு வெளியே புறப்பட்டுச் செல்வதற்கு ஒரே ஒரு காரணம் பார்வதியைச் சந்திக்கக்கூடாது என்பதுதான். அவளுடன் பேச வேண்டும் என்று எவ்வளவுக்கெவ்வளவு அவர் மனம் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்ததோ அவ்வளவுக்கு அவர் அந்த ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டு வெளியே கிளம்பிப் போய்விட்டார்.

     அவர் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் டெலிபோன் மணி அடித்தது. பாரதி ரிஸீவரைக் கையிலெடுத்துப் பேசிய போது பிரின்ஸிபால் பார்வதியின் குரல் கேட்டது.

     “பாரதி! எனக்கு இப்போது அவசரமாகக் கொஞ்சம் வேலை இருக்கிறது. ஆகையால், நீ எனக்காகக் காத்திருக்க வேண்டாம். மாலையில் நான் வரும்போது உன்னைப் பார்க்கிறேன். விஷ்யூ ஹாப்பி பர்த்டே !” என்றாள்.

     உண்மையில், பார்வதிக்கும் எந்த அவசர வேலையும் இல்லை. சேதுபதி தனக்காகக் காத்திருப்பார். அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது நான் அங்கே போகக் கூடாது. நான் வரப் போவதில்லை என்று தெரிந்ததும் அவர் பாரதியிடம் விசாரிப்பார். மாலையில் தன்னைச் சந்திக்கும் போது ‘ஏன் வரவில்லை?’ என்று கேட்பார். அப்படிக் கேட்கும்போது அவருக்குத் தன் மீதுள்ள அன்பும் அக்கறையும் வெளிப்படும்! - பார்வதியின் அவசரமான ஜோலிக்குக் காரணம் இதுதான்!

     தொழிற்சாலையில் சேதுபதிக்காகப் பல அலுவல்கள் காத்துக் கிடந்தன. ஆனால் அவை எதிலுமே சேதுபதியின் மனம் செல்லவில்லை. மீண்டும் மீண்டும் பார்வதியின் நினைவு ஒன்றே அவர் உள்ளத்தை அலைத்துக் கொண்டிருந்தது.

     உள்ளத்தில் வெகு நாட்களாகப் புழுங்கிக் கொண்டிருந்த ஓர் எண்ணம் இமயமாக வளர்ந்து அழுத்துவது போல் தோன்றியது.

     ‘இந்த மனப் போராட்டத்துடன் எத்தனை நாட்கள் வேதனைப் படுவது? மனதிற்குள்ளாகவே அடக்கி வைத்திருக்கும் அந்த எண்ணத்தை இன்று வெளியிட்டுவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்து கொண்டார். அடுத்த கணமே ‘சே! பார்வதி என்னைப்பற்றி எவ்வளவு உயர்வாக எண்ணிக் கொண்டிருக்கிறாள்? என்னிடம் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறாள். இப்படி நான் ஓர் அற்ப ஆசை வைத்திருக்கிறேன் என்று தெரிந்தால் என்னைத் தாழ்வாக எண்ணிக் கொள்வாளோ? எண்ணிக் கொள்ளட்டுமே! தெரியட்டுமே. தெரிந்து தான் போகட்டுமே. ஒரு நாளைக்கு இல்லா விட்டால் ஒரு நாள் தெரிய வேண்டியதுதானே? இதற்கு ஒரு முடிவு ஏற்பட வேண்டியதுதானே. இன்று மாலையே பேச்சுக் கிடையில் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இருக்கிறதா?’ என்று தெளிவாகத் தைரியமாகக் கேட்டு விடுகிறேன். கேட்டு நிச்சயமாக ஒரு பதிலை அறிந்து கொண்டு விடுகிறேன்.’

     ஒரு தீர்மானத்துக்கு வந்தவராய் நாற்காலியை விட்டு எழுந்தார், சேதுபதி. அன்று மாலை ஐந்து மணி இருக்கும். தம்முடைய பங்களா வாசலில் மரத்தடி ஊஞ்சலில் உட்கார்ந்து லேசாக ஆடியபடியே ஒவ்வொரு விநாடியும் பார்வதியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

     எங்கோ ஒலிக்கின்ற ஹாரன் சத்தங்களெல்லாம் பார்வதியின் காராயிருக்குமோ என்ற பிரமையை உண்டாக்கின. கடைசியில், காம்பவுண்டுக்கு வெளியே ஒரு கார் வந்து நின்றது. சேதுபதி ஆவலுடன் அந்தக் காரை நோக்கினார். ஆனால் அதில் பார்வதியைக் காணவில்லை. பாரதி மட்டுமே இறங்கி வருவதைக் கண்ட சேதுபதிக்குப் பெரும் ஏமாற்றமாயிருந்தது.

     “என்ன பாரதி! இன்றைக்கு டியூஷன் இல்லையா?” என்று கேட்டார் சேதுபதி.

     “உண்டு அப்பா. பிரின்ஸிபாலுக்கு ரொம்ப வேலை இருக்கிறதாம். ஆறு மணிக்கு மேல் வருவதாகச் சொல்லி யிருக்கிறார்” என்றாள் பாரதி.

     “அப்படியா?” என்றவர் ‘வரட்டும். நீண்ட நாட்களாக என் உள்ளத்தில் புகுந்து உடைத்து கொண்டிருக்கும் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டி விடுகிறேன்’ என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டவராய் ஊஞ்சலை வேகமாக ஆட்டினார்.