என்னுரை

     கண்ணால் கண்டு, காதால் கேட்டு, தீர விசாரித்துத் தெளிந்த நிகழ்ச்சிகளுள் ஒரு சிலவற்றின் ஒட்டுமொத்தமான உருவமே இந்த நாவல். நிலப்பிரபுத்துவத்தின் ஆணவமும், முதலாளித்துவத்தின் கபடமும், அரசாங்க 'யந்திர வாதிகளின்' ஏனோதானோப் போக்குகளும், கிராமங்களில் இப்போது நடைபெறும் நவீன சுரண்டலின் ஒருங்கிணைந்த மையமாக இருப்பதையும், ஏழைகள் கோழைகளாய் இருக்கும் வரை, ஏய்ப்பவர்கள் தான் 'மேய்ப்பவர்'களாக இருப்பார்கள் என்பதையும் விளக்கும் வகையில் இந்த நாவலை எழுதியிருப்பதாக நினைக்கிறேன். முற்போக்கு இலக்கியவாதிகள், இதை வரவேற்பார்கள் என்று கூறுவதைவிட, இந்த நாவலை வரவேற்பவர்கள் தான் முற்போக்கு இலக்கியவாதிகளாக இருக்க முடியும் என்று சொல்லத் தோன்றுகிறது. நாவலின் முடிவு ஓரளவு மிகையானது என்பதை அறிவேன். அதே சமயம், 'ஜாதிக்' குடிசைகளும், 'சேரிக்' குடிசைகளும் சேரும் நேரமே விடியல் நேரம் என்பதையும், அந்த விடியலை உணராத மக்களின் தூக்கத்தைக் கலைக்கும் சேவலொலியாக இந்த நாவல் ஒலிக்கும் என்றும் நம்புகிறேன். பிரக்ஞை, பாதிப்பு, அடிமன வருடல், தேடல் என்பன போன்ற இலக்கிய ஜாலங்களைப் போட்டு, கௌதம முனிவரை திசை திருப்பும் 'இந்திர' சேவலல்ல இது. விடியு முன்னாலே கண்விழித்து, காடு கழனிக்குச் சென்று, கடுமையாய் உழைத்தும் விடிவு காணாத ஏழையினத்தின் நெற்றிக் கண்ணைத் திறக்கக் கூவும் வெற்றிச் சேவல் இந்த நாவல் என்று மனதார நம்புகிறேன்.

     நான் முதன் முதலாக எழுதிய 'ஒரு கோட்டுக்கு வெளியே' என்ற நாவலில், பாதி பார்வையாளனாகவும், பாதி பங்காளியாகவும் இருந்தேன். அடுத்த எழுதிய 'சோற்றுப் பட்டாளத்'தில், சற்று ஒதுங்கி நின்றேன். ஆனால் இந்த நாவலில் முதற் பகுதியில் விலகி நின்ற என்னால், இறுதிவரை அப்படி விலகி நிற்க முடியவில்லை. ஆண்டியப்பனையும், சின்னானையும், காத்தாயியையும் நான் படைத்தேன் என்பதை விட, அந்தப் பாத்திரங்களே என்னைப் படைப்பாளியாக்கின என்று சொல்லலாம். இது, பலமா அல்லது பலவீனமா என்பதை வாசகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆரம்பத்தில் என்னால் படைக்கப்பட்ட இந்தப் பாத்திரங்களே, பின்னர் எனக்கு எப்படி எப்படி எழுத வேண்டும் என்று உத்தரவிட்டன! பாத்திரங்களுக்கே ஒரு பாத்திரமானேன் என்றாலும், எந்தக் கட்டத்திலும், யதார்த்தத்தை மறைக்கவில்லை. காரணம், இந்தப் பாத்திரங்கள், கிராமங்களில் பல்வேறு மனித வடிவங்களாக நிற்கின்றன.

     'தேவி' வாரப் பத்திரிகையில், ஆரம்பத்தில் நான்கைந்து அத்தியாயங்களுக்குள் தொடர்கதையாக முடித்து விட வேண்டும் என்ற ஏற்பாட்டின்படி, எழுதத் துவங்கினேன். வாசகர்களிடையே இந்தத் தொடர்கதைக்கு ஏற்பட்ட வரவேற்பைக் கருதி, தேவி பத்திரிகை ஆசிரியர் திரு. பா. இராமச்சந்திர ஆதித்தன் அவர்கள், நான் எத்தனை அத்தியாயங்கள் வரை வேண்டுமானாலும் எழுதலாம் என்று தெரிவித்தார். அவர் கொடுத்த உற்சாகத்தில், பதினேழு அத்தியாயங்கள் எழுதி, அவர் முடிக்கச் சொல்லு முன்னாலேயே, கண்ணோட்டங் கருதி முடித்துக் கொண்டேன். வாரா வாரம் வாசகர்களின் கடிதங்களை எனக்கு அனுப்பி வைத்து, ஒரு எழுத்தாளனிடம் பத்திரிகையாசிரியர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழும் திரு. பா. ராமச்சந்திர ஆதித்தன் அவர்களுக்கும், அவ்வப்போது என்னுடன் தொடர்பு கொண்டு, கதையின் நலங்களையும், குறைகளையும் சுட்டிக் காட்டிய உதவி ஆசிரியர் ஜேம்ஜுக்கும் என் மனமார்ந்த நன்றி. கடிதங்கள் மூலம் பாராட்டிய தேவி வாசகர்களுக்கும் நன்றி.

     தொடர்கதை வந்து கொண்டிருந்த போதே, அதை விமர்சித்து எனக்குக் கடிதங்கள் எழுதியவர் திரு. வல்லிக்கண்ணன். ஆரம்ப அத்தியாயங்கள், கருத்துக்களைச் சொல்லிக் கொண்டு போகிறதேயன்றி, கலையம்சமாக இல்லை என்றும், பிறகு சிறப்பாகப் பரிணாமப்பட்டதாகவும் கருத்துத் தெரிவித்தார். உண்மைதான். குறிப்பிட்ட அத்தியாயங்களுக்குள் கதையை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் அப்படி எழுதினேன். இந்த நூலில் கூட, அந்தக் குறையை முற்பகுதியில் அதிகமாகச் செப்பனிடாமல் மெத்தனமாக இருந்துவிட்டேன். இளைய தலைமுறையை, காய்தல் - உவத்தலின்றி ஆய்வு செய்து அடையாளங் காட்டும் திரு. வல்லிக்கண்ணன் அவர்களுக்கு என் நன்றி.

     தொடர்கதை என்பது வேறு. நாவல் என்பது வேறு. அதே சமயம், விசுவாசத்துடனும், சமூகப் பிரக்ஞையுடனும் எழுதப்படும் ஒரு தொடர்கதையை, சிறந்த நாவலாகவும் ஆக்கிவிடலாம் என்று எனக்கு வழிகாட்டியவர், திரு. ஆர்.கே. கண்ணன். தேவியில் வெளியான பதினேழு அத்தியாயங்களையும் படித்துவிட்டு, புரட்சிக்குரிய களம் வலுவாக இல்லை என்று கருத்துத் தெரிவித்தார். இதை அறிந்து நான் எழுதி வைத்திருந்த 'லிங்குகளை'ப் படித்துவிட்டு, அவற்றை 'ரிப்போர்ட்டாக'ச் சொல்லாமல், கதையாகச் சொல்ல வேண்டும் என்று சொல்லி தளத்தைக் களமாக்கினார். இந்த நாவலை முழுமைப்படுத்திய அந்த முழுமையான இலக்கிய ஞானவானுக்கு என் நன்றி.

     தேவியில் நான் தொடர்கதை எழுதியே ஆகவேண்டும் என்று என்னை வற்புறுத்தியவர் இலக்கிய வீதி அமைப்பாளரான, என் எழுத்தாள நண்பர் இனியவன். தொடர்கதையாக எழுதும்போது, சொல்ல வேண்டிய விவகாரங்கள் விடுபட்டுப் போகலாம் என்று நினைத்து நான் தயங்கியபோது, கிட்டத்தட்ட அடிக்காத குறையாகப் பேசி எழுத வைத்தவர் நண்பர் இனியவன். இவர் உருவாக்கியிருக்கும் இளந் தலைமுறையினரான வெங்கடேச ரவி, மது, ராஜேந்திரன், எம்.வி. குமார் போன்ற கவிஞர்களும், எழுத்தாளர்களும் (இரண்டையும் செய்யக்கூடியவர்கள்) தொடர்கதையை காரசாரமாக விமர்சித்து என்னைக் கதாநாயகனாக்கினார்கள்.

     'தாமரை' உதவி ஆசிரியர் சோமு அவர்கள், இந்த நாவல் வெற்றிகரமாக வெளிவருவதற்கு எல்லாவகையிலும் உதவினார். மிகச் சிறந்த எழுத்தாளரும், கவிஞருமான திரு. இளவேனிலை, எனக்கு அறிமுகப்படுத்தி, அவரையே ஒரு அற்புதமான அட்டைப்படத்தை வரையச் செய்தார். நான் தனியாக எழுதிய நான்கு அத்தியாயங்களைப் படித்து, அவற்றை மேலும் செம்மையாக்க பல ஆலோசனைகளை வழங்கினார். எனது நூல் வெளி வருவதை, தனது சொந்தப் படைப்பு வெளிவருவது போல் பெருமிதப்படும் எழுத்தாளரான சோமுவுக்கு என் நன்றி. இதுவரை வெளியான எனது படைப்புகள் அத்தனையிலும் சம்பந்தப்பட்டதுடன், அவை எந்தவிதமான வரவேற்பைப் பெறும் என்று துல்லியமாகக் கணிப்பதில் வல்லவர் சோமு. என் படைப்பில் பெருமைப்படுபவர். எழுத்தாளர்களில், இப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள்? விரல் விட வேண்டிய அவசியமே இருக்காது.

     இந்த நாவலின் இறுதிக் கட்டத்தில் ஓரளவு 'பிரசார வாடை' வீசுவது போல் ஒரு கருத்துத் தோன்றியது. எனக்கு அது சரியெனப் பட்டது. பாத்திரங்கள், தங்கள் கொள்கைகளைச் செயலாக்கும்போது, அவை 'பேச வேண்டுமா' என்ற நியாயமான சந்தேகம் வலுப்பெற்று, நான், 'பேச்சைக்' குறைக்கப் பேனாவை எடுத்தபோது, 'நாவலின் ஆன்மாவே இதுதான், இது பிரசாரம் அல்ல... எதைச் சொல்வதற்காக நாவல் எழுதினீர்களோ... அதுதான் இது' என்று வாதாடி வெற்றி கண்டவர், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சென்னைக் கிளையின் செயலாளர் கவிஞர் இளையபாரதி.

     பிரபல பத்திரிகைகளில் அழுத்தமான பாத்திரங்களைப் படைப்பது கடினமான காரியம். வியாபாரப் பத்திரிகைகளில் எழுதுபவர்கள், விற்பனைப் பொருளாகி, நாளடைவில் வெறும் பொருளாய்ப் போனதுக்குக் காரணமே, இந்தச் சூழல்தான். இந்த நிலை எனக்கு வராமல் போனதற்குப் பெருங்காரணம் தாமரைப் பத்திரிகையே. அந்தப் பத்திரிகையில் நான் பெற்ற பயிற்சி, பிரபல பத்திரிகைகளிலும் எதிரொலிப்பதை அறிவீர்கள். இந்தப் பயிற்சியை அளித்தவர், கவிஞர் கே.ஸி.எஸ். அருணாசலம் அவர்கள். 'கவிதை என் கைவாள்' என்று அவர் சொன்ன ஒரு வரியை, நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஓராயிரம் வரிகளை எழுதியிருக்கிறேன். இலக்கியத்தை, நான் போர்ப் பரணியாகக் கருதுவதற்கு உருத்தந்தவர் கே.ஸி.எஸ். எனது எல்லாக் கதைகளையும் வரிக்கு வரி படித்து, ஒளிவு மறைவு இல்லாமல் விமர்சித்து ஒளி பாய்ச்சியவர். அவர் மூலமாகவே, முற்போக்கு இலக்கிய அறிமுகம் கிடைத்தது. கவிதை உலகில் என்னை அறிமுகப்படுத்தியவரும் அவரே. நான் எப்படி என் படைப்புகளை நினைத்துப் பெருமைப் படுகிறேனோ அப்படி, அவர் என்னை நினைத்துப் பெருமைப்படுபவர். இந்த நாவலின் பாத்திரங்கள் அழுத்தமாக உள்ளன என்றால், அதற்கு அவரளித்த அழுத்தமான பயிற்சியே காரணம்.

     இந்த நாவலை, மறைந்த பேரறிஞர் நா. வானமாமலை அவர்களுக்குக் காணிக்கையாக்கி இருக்கிறேன். இளந்தலைமுறையினருடன், 'தலைமுறை இடைவெளி' இல்லாமல் பழகிய அந்த இனிய அறிஞர், இந்த நூலைப் படிப்பதற்கு இல்லையே என்று நினைக்கும் போது சங்கடமாக இருக்கிறது. நான் 'ஆய்வுக்' கதைகள் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்த அவருக்கு என் புரட்சி வணக்கங்கள். என் படைப்புகளில், வாசகர்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை.

     நான் யார்?
     இந்த சமூக விடுதியில் ஒரு சர்வர்.
     இவர்கள் சமையல்காரர்கள்.
     நீங்கள்?
     சாப்பிடப் போகிறவர்கள்.

     சாப்பாட்டிற்காக வாழ்கிறீர்களா, வாழ்வதற்காக சாப்பிடுகிறீர்களா என்பதைச் சொல்லப் போகிறவர்கள்.

     கடிதங்கள் மூலமாகச் சொல்லுங்கள்.

     பத்திரிகை ஆசிரியர்கள், வெறும் வியாபாரிகளாக மாறிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இந்தக் கதையைத் துணிந்து பிரசுரித்த திரு. ராமச்சந்திர ஆதித்தனுக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பன்,
சு. சமுத்திரம்