உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
எஸ். லட்சுமி சுப்பிரமணியம் நூல்கள் |
எழுத்தாளர் எஸ். லட்சுமி சுப்பிரமணியம் அவர்களின் இயற்பெயர் ஆர்.சுப்பிரமணியம். இவர் 1930 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி பிறந்தார். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, நமது சுதந்திர தினத்தன்று இவரது முதல் சிறுகதை ‘காவேரி’ மாத இதழில் வெளிவந்தது. ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், தினமணி, கதிர், தீபம், அமுதசுரபி, இதயம் பேசுகிறது, மங்கையர் மலர், ஞானபூமி, மயன், காலைக்கதிர், உங்கள் நலம், ஹெல்த் போன்ற பத்திரிகைகளில் இவரது நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், பேட்டிக் கட்டுரைகள், தொடர்கதைகள் வெளிவந்துள்ளன. இவரது சுமார் 20 நாவல்கள், 40 குறுநாவல்கள், 1000 சிறுகதைகள், 1500 கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கற்பனை இலக்கியம், ஆன்மிகம், மருத்துவம், மனோ தத்துவம், பயணக் கட்டுரை, இலக்கியம், சுயசரிதம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எண்பத்தைந்து புத்தகங்களை எழுதியுள்ளார். ஆனந்த விகடன் வெள்ளி விழா, கல்கி வெள்ளி விழா ஆகியவற்றில் சிறுகதைப் பரிசுகளையும், கலைமகள் இதழின் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசையும் பெற்றுள்ளார். ‘இலக்கிய சிந்தனை’ இவரது சிறுகதையைப் பாராட்டிப் பரிசு அளித்திருக்கிறது. அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் 1998ஆம் ஆண்டு இவரது ஐம்பத்தோர் ஆண்டு தமிழ் எழுத்துப் பணியைப் பாராட்டி விழா நடத்திக் கௌரவித்தது. எஸ்.எஸ்.வாசன், கி.வா.ஜகந்நாதன், நா.பார்த்தசாரதி, மணியன், ரா.கணபதி போன்றோரிடம் நெருங்கிப் பழகியவர் இவர். ஆன்மீக உலகில் காஞ்சி மகாப் பெரியவர்கள், ஜகத்குரு ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள், அஹோபில மடம் 44வது ஜீயர் சுவாமிகள், உடுப்பி பேஜாவர் மட சுவாமிகள், சுவாமி சின்மயானந்தர், சுவாமி தயானந்த சரஸ்வதி ஆகியோருடன் இருந்து ஆன்மிகப் பணியாற்றியவர். காஞ்சி மகா பெரியவர்களின் வாழ்க்கைச் சரிதத்தை (ஜகம் புகழும் ஜகத்குரு), சுவாமிகளின் 100வது ஆண்டு தொடக்கத்தில் தொகுத்து எழுதியுள்ளார். இந்நூலை காஞ்சி காமகோடி மடத்தின் ஆசிகளுடன் ஓமாந்தூரில் அன்றைய பாரதப் பிரதமர் திரு.பி.வி.நரசிம்மராவ் வெளியிட்டார்கள். ஆன்மிகத் துறையில் சுமார் 200 ஆன்மிகப் பெரியோர்களைத் தரிசித்து, அவர்களுடன் உரையாடல் நடத்தி ‘ஞானமன்றம்’ என்ற தலைப்பில் ஞானபூமியில் சுமார் 20 ஆண்டுகள் தொடர்ந்து எழுதி உள்ளார். 2003-04ம் ஆண்டுகளில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளின் நூல்கள் ஆறு (தெய்வ வாக்கு - 1, 2, 3 பாகங்கள், அருளுரைகள் 1, 2 பாகங்கள், அருளாசிக் கட்டுரைகள் - 1) இவரால் தொகுக்கப்பட்டு ஸ்வர்ண ஜெயந்தி பீபிரோகண விழாவின் போது வெளியிடப்பட்டது. சுமார் 2000 வாசகர்கள் கேள்விகளுக்கு, ‘இந்து மதம் பதிலளிக்கிறது’, ‘மகான்கள் பதிலளிக்கிறார்கள்’ என்ற தலைப்புகளிலும், ‘அமைதியான வாழ்க்கைக்கு ஆன்மிக வழிகாட்டி’ என்ற தொகுப்பிலும், ஞானியர்களின் பதில்கள் மூலம் தெளிவுரை அளித்துள்ளார். ‘ஞானபூமி’ ஆன்மிக மாத இதழில் துணை ஆசிரியராகவும், பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார். ‘உங்கள் நலம்’ மருத்துவ மாத இதழின் ஆசிரியராக இரண்டரை ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். சுமார் 100 மருத்துவ நிபுணர்களைப் பேட்டி கண்டு கட்டுரைகளைத் தொகுத்துள்ளார். ‘ஞானச்சுடர்’ ஆன்மிக மாத இதழின் ஆசிரியராகச் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் பணியாற்றி உள்ளார். பகவான் ஸ்ரீசத்ய சாயிபாபாவின் தொண்டனாக நாற்பது ஆண்டுகளாகப் பணியாற்றி, அவரது அருளுரைகளைத் தொகுத்துள்ளார். சமுதாய நலப்பணிகளிலும் பங்கெடுத்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலத்தைப் புதுப்பிக்கும் பணி, ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை உருவாக்கும் பணி ஆகியவற்றின் தலைமைப் பொறியாளராக திறம்பட பணியாற்றியுள்ளார். எஸ். லட்சுமி சுப்பிரமணியம் படைப்புக்கள் |