![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
பொற்பாதங்களில் சமர்ப்பிக்க ஒரு சிறு காணிக்கை உலக முழுவதும் தலைவணங்கும் ஜகத்குருவான ஒரு மகானின் வாழ்க்கையை, ஒரு நூலில் தொகுப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அதுவும் பதின்மூன்று வயதிலேயே பீடாரோஹணம் செய்து, எண்பத்தாறு ஆண்டுகள் அந்த மகா பீடத்துக்கு மகிமை தந்து, நூறாவது ஆண்டை அடைந்துள்ள, ஜகம் புகழும் ஜகத்குருவின் வாழ்க்கையைத் தொகுப்பது சாத்தியமான காரியமா? அதுவும் பெரியவருடைய வாழ்க்கை எத்தகையது? ஒவ்வொரு நாளும் ஆன்மீகப் பேரொளி பரப்பும், அபூர்வமான சாதனைகள் நிறைந்தது அல்லவா? “மகா பெரியவாளுடைய நூறாவது ஆண்டு, இந்த ஆண்டு மே மாதம் தொடங்குகிறது. அந்தச் சமயத்தில் அவர்களுடைய வாழ்க்கை பற்றிய குறிப்புகள் முழுமையாக அடங்கிய புத்தகம் ஒன்று வெளிவர வேண்டும். இதற்கான பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும். ஸ்ரீ காஞ்சி மடத்துப் பெரியவர்கள் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளின் அருளாசியுடன் நீங்கள் இதில் ஈடுபட வேண்டும்” என்று என்னிடம் வானதி பதிப்பக உரிமையாளர் திருநாவுக்கரசு கூறினார். மகாப் பெரியவர்களுடைய பாதங்களில் நான் சமர்ப்பிக்கும் சிறு காணிக்கையாக, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றுவதாக, எண்ணிக் கொண்டு என்னை இந்தப் பணியில் அர்ப்பணித்துக் கொண்டேன். மகாப் பெரியவர்களுடைய வாழ்க்கைச் சரித்திரத்தை முதலில் விரிவாக உருவாக்கியுள்ள பெருமை ஸ்ரீ எஸ்.சாம்பமூர்த்தி சாஸ்திரிகள் அவர்களையே சாரும். பூர்வாசிரமத்தில் ஸ்ரீ ஆஞ்சனேயர் என்ற பெயரில் அழைக்கப்பட்ட ஸ்ரீ அனந்தானேந்திர சரஸ்வதி சுவாமிகளால் எழுதி வைக்கப்பட்டிருந்த நாட்குறிப்பும், ஸ்ரீ காமகோடி பிரதீபத்தில் பிரசுரமாகி இருந்த விஷயங்களும், இதைத் தொகுத்து அளிக்க உதவியது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மகாப் பெரியவர்களிடம் பெரும் பக்தியும் மரியாதையும் கொண்டிருந்த அவர்கள் இதை ஒரு தவமாகவே செய்திருக்கிறார்கள். ஸ்ரீ மகாப் பெரியவர்களுடைய வாழ்க்கையை 1957-ம் ஆண்டு வரையில் இந்த நூல் சுமார் 650 பக்கங்களில் விரிவாக வருணிக்கிறது. குறிப்பாக அவர்கள் நிகழ்த்திய புனிதமான விஜய யாத்திரையை மிக நுட்பமாகக் குறிக்கிறது. ஓரளவு இதை ஒட்டியும், தனது அனுபவங்களையும், நேரில் தரிசித்தும், ஆசிகளைப் பெற்றும் உணர்ந்ததையும் வைத்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த ஸ்ரீ டி.எம்.பி. மகாதேவன் அவர்கள், மகாசுவாமிகளின் அறுபதாவது ஆண்டு நிறைவை ஒட்டி ‘ஸ்ரீ காஞ்சி முனிவர்’ (Sage of Kanchi) என்ற நூலை எழுதியிருக்கிறார். இது சுமார் 1963-ம் ஆண்டு வரையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறது. ஸ்ரீ ஆசாரிய சுவாமிகளின் உபந்நியாசங்களை, 1960-ம் ஆண்டு வரை மூன்று பாகங்களாகக் கலைமகள் காரியாலயம் தொகுத்து வெளியிட்டுள்ளது. இவைதாம் பெரும்பாலும் இந்த நூலுக்குரிய ஆதாரக் குறிப்புகளை நல்கியவை. இவற்றை அளித்துள்ள பெரியோர்களுக்கு நான் தலைவணங்கி நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். அதற்குப் பிறகு இன்று வரையில் நிகழ்ந்துள்ள முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுப்பது எப்படி? ‘கல்கி’ இதழ்களிலும் தீபாவளி மலர்களிலும் மகா பெரியவர்களுடைய அமுத மொழிகளும், சிறு குறிப்புகளும் நிறைய வெளிவந்துள்ளன. கடந்த முப்பது ஆண்டுகளாக வெளிவரும் வெவ்வேறு பத்திரிக்கைகளின் தீபாவளி மலர்களில், அவர்களைப் பற்றிய கட்டுரைகளும், படங்களும், அனுபவங்களும் விரவிக் கிடக்கின்றன. ஆன்மீக அனுபவங்களை எழுதுவதில் தனக்கென்று ஓர் உயரிய இடத்தைத் தேடிக் கொண்டுள்ள பழம்பெரும் எழுத்தாளர் ஸ்ரீ பரணிதரன் எழுதியுள்ள புனிதப் பயணக் கட்டுரைகள் பலவற்றிலும், மகாப் பெரியவர்களைப் பற்றி எழுதியுள்ள அநுபவக் கட்டுரைகளிலும் அரிய விஷயங்கள் கிடைக்கின்றன. 1976 முதல் 1992 வரை வெளிவந்த, ஸ்ரீ ரா.கணபதி தொகுத்துள்ள ‘தெய்வத்தின் குரல்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள, ஐந்து அரிய தொகுப்புகளில் மகாபெரியவர்களுடைய உபதேசங்களும், கருத்துக்களும் சில நிகழ்ச்சிகளின் குறிப்புகளும் கூடக் கிடைக்கின்றன. ‘இல்லஸ்டிரேடட் வீக்லி’, ‘பவன்ஸ் ஜானல்’ போன்ற இதழ்களிலிருந்தும், பவன்ஸ் வெளியீடுகளிலிருந்தும் உரையாடல்கள், அனுபவங்கள், மகாபெரியவர்கள் தாமே எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றின் மூலமாக, பல அபூர்வ விஷயங்கள் கிடைக்கின்றன. ஸ்ரீ காமகோடி ஆய்வுமையம் (கும்பகோணம்) வெளியிட்டுள்ள ‘ஸ்ரீ காஞ்சி பெரியவர்களுக்குக் கனகாபிஷேகங்கள்’ என்ற நூல் பயனுள்ள சரித்திரக் குறிப்புகளையும், ஸ்ரீ மடத்தில் நிகழ்ந்த பல்வேறு புனித விழாக்களையும் அளிக்கிறது. கடந்த பதினோரு ஆண்டுகளாக இந்து மதத்தின் வளர்ச்சிக்காகவே சேவை செய்து வரும் ‘ஞான பூமி’ மாத இதழில் தொடர்ந்து, பல்வேறு கட்டுரைகள், பயணக் குறிப்புகள், விழாக்கள், மகாபெரியவர்களின் அருளாசிகள், ஆகியவை வெளிவந்துள்ளன. மகாபெரியவர்களைப் பற்றி ஏறத்தாழப் பதினைந்து எழுத்தாளர்கள், கலை நிபுணர்கள், பதிப்பகத்தார், கவிஞர்கள், விஞ்ஞானிகள், அதிகாரிகள் ஆகியோர் நூல்கள் வாயிலாகவும் கட்டுரைகள் மூலமாகவும் அருமையான விஷயங்களைக் கொடுத்திருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு நான் ஒரு புனித மணம் நிறைந்த அழகிய மலர் மாலையைத் தொடுக்கும் பணியில் ஈடுபட்டேன். ‘ஞான பூமி’ மாத இதழில் அது தோன்றிய நாளிலிருந்து இதுவரை பதினோரு ஆண்டுகளாக நான் பெற்ற அனுபவமும், அதற்கு முந்தைய சுமார் முப்பத்தைந்து ஆண்டு கால எழுத்து அனுபவமும் எனக்கு வலிமையைத் தேடிக் கொடுத்தன. என்னுடைய எழுத்துக்களைத் தொடர்ந்து ஊக்கி வந்த ஆசிரியர் மணியன் மகாபெரியவர்களுடைய வாழ்க்கைச் சரித்திரத்தைத் திரைப்பட வடிவில் தயாரிக்கும் பணியை மேற்கொண்டார். அவருக்கு உதவும் வழியில் நான் சேகரித்த விஷயங்களும், பல்வேறு வாசகர்கள் அனுப்பிய குறிப்புகளும், எனக்குப் பெரிதும் பயன்பட்டன. மகாபெரியவர்களுடைய வாழ்க்கையை ஒரு நூலாக எழுதுகிறோம் என்ற உணர்வே எனக்கு மாபெரும் எழுத்து பலத்தை அளித்தது. என்னை ஆசீர்வதித்து இப்பணியில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் ஈடுபடுத்தி இருக்கிறார் என்ற நினைப்பே என் முயற்சிக்கு இணையிலாத ஊக்கத்தைக் கொடுத்தது. குறுகிய காலத்தில் பல்வேறு நூல்களையும், குறிப்புகளையும், கட்டுரைகளையும், விஷயங்களையும் கலந்து தேர்ந்து தொகுக்கக் கூடிய முயற்சி, நான் ஆற்றி வந்த எழுத்துப் பணியாலும், பொறுப்பினாலும் சற்று எளிதாக நேர்ந்தது. ஏறத்தாழ நூறு நாட்களில், சுமார் நூறு ஆண்டுகளில் நிகழ்ந்த ஸ்ரீ மகாப்பெரியவர்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை, சுமார் முந்நூற்றைம்பது பக்கங்களில் எழுதி முடிக்கும் முயற்சியில் முனைந்தேன். அதில் நான் ஓரளவேனும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை எனக்குக் கொடுத்தது, முழுக்க முழுக்க நான் ஒவ்வொரு நாளும் வேண்டிப் பிரார்த்தித்துக் கொண்ட ஸ்ரீ மகாபெரியவர்களின் அருளாசிதான். அவர்களுக்காக, அவர்களுடைய பொற்பாதங்களில் பணிந்து நான் மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு, எல்லோருக்குமே கனிந்தருளும் அந்த அவதார புருஷரின் அருளும் ஆசீர்வாதமும் எனக்குக் கிடைப்பதாக, எழுதும் ஒவ்வொரு கணமும் நான் உணர்ந்தேன். ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளின் அருளாணையை நிறைவேற்றுகிறோம் என்ற உணர்வு, இருளையும், மருளையும் நீக்கி எனக்குத் துணை செய்தது. இந்த முயற்சியில் எனக்கு ஊக்கம் கொடுத்து உதவிய ஆசிரியர் மணியனுக்கும், இந்த நூலை எழுதும் போது ஒவ்வொரு நிலையிலும் எனக்கு உதவிகளை அளித்து, வாய்ப்பை அமைத்துக் கொடுத்து, ஊக்கிய நூல் வெளியீட்டாளர் வானதி திருநாவுக்கரசு அவர்களுக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஸ்ரீ மகாபெரியவர்களின் வாழ்க்கை பற்றிய குறிப்புகளைத் தொடர்ச்சியாக 1993-ம் ஆண்டுவரை சேர்த்துத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள முதல் நூல் என்ற வகையில், இது எதிர்கால இளைய தலைமுறையினருக்கும், மகாபெரியவர்களின் பக்தர்களாக உலகெங்கும் நிறைந்து நிற்கும் மக்கள் பலருக்கும் புனித விஷயங்களை அளிக்கப் பெரிதும் உதவியாக இருக்கும். பூஜ்யஸ்ரீ காஞ்சி மகாபெரியவர்களின் பாவன சரணங்களில் இந்தச் சிறு காணிக்கையைச் சமர்ப்பிப்பதை, அவர்களுடைய நூறாவது ஆண்டுவிழா தொடங்கும் தருணத்தில் இதை ஒரு வாய்ப்பாகப் பெற்றதை, அவர்களே உள்ளம் கனிந்து எனக்கு அருளிய ஆசியாக எண்ணிக் கண்ணீர்ப் பூக்களை உதிர்த்துத் தலை வணங்குகிறேன். எஸ். லட்சுமி சுப்பிரமணியம் சென்னை - 90 14.4.93 |