2

     “நான் துறவறத்தை ஏற்றதும் இப்படி ஒரு சந்தர்ப்ப வசமானதுதான். நான் நீண்டகாலம் சன்னியாசத்தை மேற்கொள்வதற்கு முன்பாக என்னைத் தயார் செய்து கொள்ளவும் இல்லை. தொடர்ந்து ஒரு குருநாதரின் உபதேசத்தைப் பெறும் வாய்ப்பும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் சன்னியாசத்தை ஏற்ற முதல் நாளிலிருந்தே ஒரு பிரமிப்பூட்டக்கூடிய தலைமையும், அதன் பொறுப்புகளும், அதற்காகக் கிடைக்கும் செளகரியங்களும் என்னை வந்த அடைந்துவிட்டன.”

     இவ்வாறு தனது அனுபவத்தை எழுதுகிறார் சுவாமிகள். அவருக்குத் துணையாக இருந்து உதவ, அனுபவம் வாய்ந்த இரு கல்விமான்கள் இருந்தனர். ஒருவர் தும்முலூரு இராமகிருஷ்ணையா; மற்றொருவர் அடையப்பாளம் பசுபதி ஐயர். இருவரும் சுவாமிகள் துறவறம் மேற்கொள்ளும்போது உடன் இருந்தார்கள். அவருக்கு உதவியாக இருப்பதைத் தமது பாக்கியமாகவே எண்ணினார்கள். இருவருமே சுவாமிகளின் குருவுக்குக் குருநாதரிடம் சீடராக இருந்தவர்கள். அதனால் அவர்கள் இருவருக்குமே சுவாமிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற உறுதி இருந்தது.

     “இராமகிருஷ்ணையா எதிலும் பற்றில்லாதவராக இருந்தாலும், குடும்பச் சுமையை நினைத்து, அதன் பாரத்தை எண்ணி, பெரிதும் கவலைப்படுவார். அதனால் அவரால் என்னைப் பெரும் அளவுக்குப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. பசுபதி ஐயர் தனிமையாக இருந்து தியானம் செய்வதிலும், வேதாந்தப் புராணங்களைப் படிப்பதிலும், ஸ்ரீசங்கராச்சாரிய சுவாமிகளின் பாஷ்யங்களை ஊன்றிப்படிப்பதிலும், மனத்தைச் செலுத்துவார். இருவருமே அரசாங்க வேலையில் இருந்து ஒய்வு பெற்றவர்கள். அதனால் நிர்வாகப் பொறுப்புகளையும் கவனிக்க வல்லவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

     குறிப்பாகப் பசுபதி ஐயர் என்னுடனேயே இருப்பார். என்னுடைய ஒவ்வொரு செயலையும், பேச்சையும், கண்பார்வையின் அசைவையும் கூடக் கவனிப்பார். தனது தியானத்தைக் கூட ஒரளவு குறைத்துக் கொண்டு, மடத்தின் நிர்வாகத்தை அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருவார்.

     அவர் என்னைத் தனியாகச் சந்தித்து, என்னிடம் அவர் காணும் சிறு பலவீனங்களைக் குறிப்பிட்டுக் காட்டுவார். அவற்றை நான் எப்படியாவது சரி செய்து கொண்டு முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொள்வார். என்னிடம் சிலசமயம் கடுமையாகப் பேசும்படி நேருவது அவருக்கு வருத்தமாக இருக்கும். அதற்காகத் தனது வாழ்நாளில் நான் ஞானியாக முழுமை பெற்றபின், பிராயச்சித்தங்களை மேற்கொள்ளப் போவதாகக் கூறுவார்.”

     இப்படித் தனக்கு அந்த நாளில் துணையாக இருந்தவர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் சுவாமிகள். அவர்கள் தம்மிடம் காட்டிய அன்பு கலந்த மரியாதையையும், தன்னலமில்லாத சேவையையும் குறிப்பிட்டுப் பாராட்டுகிறார்.

     சுவாமிகள் 1907 ம் ஆண்டு இவ்விதம் கலவையில் பீடாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, கும்பகோணத்துக்குப் பயணமானார்கள். அங்கே அவருக்கு முறைப்படி பட்டாபிஷேகம் செய்வித்து, விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று சீடர்கள் விரும்பினார்கள். அதை ஏற்றுச் சுவாமிகளும் புறப்பட்டார். வழியில் அவர்கள் கல்விகற்று, கடைசியாக ஒரு மாணவனாக வழ்ந்த திண்டிவனத்தைக் கடந்து வரவேண்டி இருந்தது. அங்கே அவர் வரப்போவதை அறிந்ததும் திண்டிவனத்தில் உள்ள மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். அவருடன் படித்த மாணவர்களுக்கும், அவருக்குக் கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும், இது மிகுந்த பெருமையாகவே இருந்தது.

     சுவாமிகள் அங்கே வந்து சேர்ந்தபோது அவர்களுடைய மகிழ்ச்சி வியப்பாகவும், பெருமிதம் புனிதமான பக்தியாகவும் மாறியது. அவர்கள் அதுவரை அறிந்திருந்த பாலகனை அங்கே காண முடியவில்லை. அபூர்வமான முக ஒளியும், ஞானம் ததும்பும் பார்வையும், தேஜஸ் நிறைந்த உருவமுமாக, சுவாமிகளை அவர்கள் கண்டார்கள். பாலசூரியனைக் கண்டது போன்ற உணர்வு அவர்களுக்கு உண்டாயிற்று. ஊரில் உள்ள மக்கள் அனைவருக்கும், சுவாமிகள் தமது ஊரில் தம்முடன் வாழ்ந்தார்கள் என்ற நினைப்பே பெருமையை அளித்தது. அவர்கள் கல்வி பயின்ற அமெரிக்க மிஷன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், கிறிஸ்தவர்களானாலும் அவரைத் தரிசிப்பதிலும் அவரிடம் வந்து பேசுவதிலும் தனி மரியாதை காட்டினார்கள். உடன் பயின்ற மாணவர்கள் பயபக்தியுடன் நடந்து கொண்டார்கள். சுவாமிகள் அவர்கள் ஒவ்வொருவருடனும் உரையாடி மகிழ்ந்தார்கள். தக்க வெகுமதிகளை அளித்து, யாவருக்கும் சிற்றுண்டிகளைக் கொடுத்து, அன்புடன் பேசி மகழ்ந்தார்கள்.

     ஆசாரிய சுவாமிகள் சன்னியாசிகள் என்றாலும், உலகத்தின் ரட்சகராக இருந்து, மக்களுடன் கலந்து அருள் வாழ்க்கையை நடத்திக் கொடுக்கவும் வேண்டி இருந்தது. அதனால் ஆதிசங்கரர் காலத்திலிருந்தே மன்னர்கள் அவர்களுக்குப் பக்தியுடன் பல அரசாங்க விருதுகளை அளித்திருந்தார்கள். காஞ்சியில் அரசாண்ட இராஜசேன மன்னர் காலத்திலிருந்தே, யானை, அதன் மீது அமர்ந்து வரும் அம்பாரி, தந்தச் சிவிகை, வெண்சாமரம், வெண்பட்டுக்குடை, முழங்கும் வாத்தியகள், இசைக்கருவிகள் ஆகியவை ஒரு சமஸ்தானத்தில் இருப்பது போலவே காஞ்சி மடத்திலும் இருந்தன.

     ஆகையால் சுவாமிகள் ஓர் ஊருக்கு விஜயம் செய்தால், இவை எல்லாமே அந்த விஜயத்துக்கு முன்னோடியாக வரும். ஊர்முழுவதும் மக்கள் அந்த விஜயத்துக்கு உண்டான ஏற்பாடுகளையும் செய்வாகள். சுவாமிகள் வந்து தங்குமிடத்தில் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருக்கும். எங்கும் வேதகோஷமும், வாத்திய முழக்கமும் ஒலிக்கும் சுவாமிகள் யானை மீதோ, பல்லக்கிலோ பவனி வரும் காட்சியைக் கண்டு மகிழ, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கூடுவார்கள். யானை, குதிரை, ஒட்டகம் ஆகியவற்றைக் காண, குழந்தைகளும் வந்து கூடுவார்கள்.

     பாலசூரியனாகத் தான் அதுவரை வாழ்ந்த திண்டிவனத்துக்கே சுவாமிகள் இவ்வாறு விஜயம் செய்தபோது, மக்கள் அதைக்கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். சுவாமிகள் அனைவருக்கும் தரிசனம் கொடுத்தபோது, அவர்களுடைய பெருமிதம் கரை ததும்பி நின்றது. அவர்களை வாழ்த்தி ஆசிகளை வழங்கிய பின் சுவாமிகளுடைய அருள் யாத்திரை தொடர்ந்தது. கும்பகோணம் மடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

     அங்கு 1907 ம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி பட்டாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தஞ்சையை ஆண்ட சிவாஜி மன்னரின் அரசிகளாக விளங்கிய மாட்சிமை பொருந்திய ஜீஜாம்பா பாய்சாஹேப், இராமகுமராம்பா பாய்சாஹேப் ஆகிய இருவரும் அரசாங்க மரியாதைகளை முறைப்படி அனுப்பி வைத்தார்கள். மல்லிகை மலர்களால் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. முதலில் பங்காரு காமாட்சி, காமாட்சி, அகிலாண்டேசுவரி ஆகிய ஆலயங்களின் பிரதிநிதிகள் அபிஷேகம் செய்தார்கள். இதைத் தொடர்ந்து ஜமீன்தார்கள், அரச பாரம்பரியம் உள்ளவர்கள், பெரியோர்கள் அகியோர் இதில் ஈடுபட்டனர். பண்டிதர்களும், வேத விற்பன்னர்களும் வந்து கலந்து கொண்டார்கள். சிங்காதனத்தில் அமர்ந்து சுவாமிகள் அனைவருக்கும் அருளாசி வழங்கினார்கள்.

     விழாக்கோலம் பூண்ட நகரத்தில் ஊர்வலம் நடந்தது. சுவாமிகள் யானைமீது அம்பாரியில் ஏறி அமர்ந்து ஊர்வலம் வந்தார்கள். முக்கியமான ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்தார்கள். அங்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. மூன்று நாட்கள் நடந்த விழாவில் மங்கள வாத்தியமும், இன்னிசைக் கருவிகளும் இசைக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் செய்யப் பட்டது. அவர்களுடைய பட்டினப் பிரவேசக் காட்சியைக் கணக்கில் அடங்காத மக்கள் கண்டு தரிசித்தார்கள். அவர்களுக்குக் கங்கா ஜலத்தினால் அபிஷேகம் நடந்த திருக்கோலத்தைக் கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். தமது பதின் மூன்றாவது வயதிலேயே ஜகத்குரு என்ற பட்டத்தைத் தாங்கிய ஞானியின் திரு உருவத்தைக் கண்டு, தரிசித்து, உள மகிழ்ந்து பக்தர்கள் பரவசம் அடைந்தார்கள்.

     சுவாமிகள் இதன்பின் விஜய யாத்திரையை மேற்கொண்டார்கள். இந்த யாத்திரையில் சுவாமிகள் நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று தங்கி, பக்தர்கள் தமது பூஜையில் ஈடுபடச் செய்வார்கள். மடத்தின் அதிஷ்டான தெய்வமாகிய ஸ்ரீசந்திர மெளளீசுவரர், ஸ்ரீதிரிபுர சுந்தரி அம்மன் அகிய தெய்வங்களுக்குச் சுவாமிகள் செய்யும் பூஜையைப் பக்தி சிரத்தையுடன் அனைவரும் இருந்து கவனிப்பார்கள். சுவாமிகள் ப்ரசாதம் வழங்கி, ஆன்மீகக் கருத்துக்கள் நிறைந்த சொற்பொழிவுகளை ஆற்றி அவர்களையும் வழிப்படுத்துவார்கள். அந்தந்த ஊரில் கூடும் பக்தர்கள் அபிஷேக தீர்த்தத்தையும் பிரசாதத்தையும் பெற்று அருந்தி மனத்தூய்மையும், உடல்தூய்மையும் பெறுவார்கள். அடியவர்கள் பலரும் கூடிப் பஜனை செய்வார்கள். புலவர்கள் சுவாமிகளைத் தரிசித்து, தமது புலமையைக் காட்டி ஆசி பெற்றுப் பொன்னாடையும் பொற்காசுகளும் பரிசாக அடைந்து செல்வார்கள். ஊரில் உள்ள செல்வந்தர்கள் ஸ்ரீ ஆதிசங்கரரின் பொற்பாதுகைகளுக்குப் பொற்காசுகளினாலோ, நாணயங்களினாலோ, அர்சனை செய்வார்கள். இது பாத பூஜை என்று அழைக்கப்படும். விழாபோல நடைபெறும் இந்த விஜய யாத்திரையில் கலந்து கொண்டு பக்தர்கள் மன அமைதி பெறுவதுடன், ஊரிலேயே ஒரு தூய உணர்வு பிறக்கும்.

     சுவாமிகள் இவ்வாறு மேற்கொண்ட முதல் விஜய யாத்திரை, பஞ்சபூதத்தலங்களில் ஒன்றான, அன்னை அகிலாண்டேசுவரி கொலுவிருக்கும் திருவானைக்கா என்ற ஜம்புகேசுவரம் என்ற ஊர் ஆகும். ஆதிசங்கரர் இங்குதான் அன்னை அகிலாண்டேசுவரிக்குத் தாடங்கம் என்ற காதணிகளை அணிவித்தார். அந்த ஆலயத்துக்கு 1908 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த மகோற்சவத்துக்குச் சுவாமிகள் அழைக்கப்பட்டார்கள். அந்த ஆலயத்துக்கு உரிய ஸ்தானிகர்களும், நிர்வாகிகளும் அவ்வாறு சுவாமிகள் விஜயம் செய்து மகோற்சவத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று, வந்து பணிவுடன் கேட்டுக் கொண்டார்கள். கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க, விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீ சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்மபாரதி சுவாமிகள் கும்பாபிஷேகம் நடைபெற்ற மறுநாள் வந்து சிறப்பித்தார்கள்.

     சுவாமிகள் அங்கிருந்து இராமநாதபுரம் மாவட்டதிதில் உள்ள இளையாத்தன்குடி என்ற தலத்துக்கு விஜயம் செய்தார்கள். அது ஸ்ரீகாம கோடி பீடத்தின் அறுபத்தைந்தாவது அதிபதியான ஸ்ரீமகாதேவேந்திர சரசுவதி சுவமிகள் சித்தி அடைந்த தலமாகும். அங்கு செல்லும் வழியில் புதுக்கோட்டையில் சுவாமிகள் சில நாட்கள் தங்கினார்கள். அங்கிருந்து இளையாத்தங்குடிக்குச் சென்று தனது முன்னோர்களின் அதிஷ்டானத்தில் தனது அஞ்சலியைச் செலுத்தினார்கள். அங்கிருந்து சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொள்ள மீண்டும் ஜம்புகேசுவரத்துக்கே வந்து சேர்ந்தார்கள்.

     பின் திரும்பி சிறிது காலம் தஞ்சாவுரில் இருந்து விட்டு, கும்பகோணம் போய்ச் சேர்ந்தார்கள். அது 1909 ம் ஆண்டு. மகாமகம் நடைபெறும் ஆண்டு. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகத்தான உற்சவத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். மகாமகக் குளத்தில் புண்ணிய காலத்தில் நீராடுவது விஷேசம். அந்த நீராடலில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்களுடன் ஆசாரிய சுவாமிகளும் செல்லுவது காண்பதற்கு அரிய காட்சி. நமது ஆசாரிய சுவாமிகள் அதைப்போல, யானையின் மீது அம்பாரியில் அமர்ந்து ஊர்வலமாகச் சென்று மகாமகக் குளத்தில் நீராடினார்கள். அப்போது அவருக்கு வயது பதினைந்து மட்டும்தான்.

     கும்பகோணத்திலேயே தங்கிச் சுவாமிகள் சம்ஸ்கிருதப் பாடங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்கள். அதற்குக் கும்பகோணம் மடத்தில் உள்ள கூட்டமும் சப்தமும் பொருத்தமாக அமையாது என்று கருதி, அகண்ட காவேரியின் வடகரையில் இருந்த மகேந்திர மங்கலம் என்ற ஊரைத் தேர்ந்தெடுத்தார்கள். அங்கே காவேரிக்கரை ஓரமாகப் பர்ணசாலை அமைத்துக் கொண்டு, சுவாமிகள் தனது ஞானக்கல்விப் பயிற்சியை மேற்கொண்டார்கள். சுமார் மூன்று ஆண்டுகாலம் இந்தப் பயிற்சி நடைபெற்றது. அவருக்குப் பாடம் கற்பித்தவர்கள் மடத்தைச் சேர்ந்த சீடர்களே. ஆனாலும் சுவாமிகள் அவர்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொண்டார். அவர்களும் சுவாமிகளுக்குப் பயிற்சி அளிக்கும் பாக்கியம் தங்களுக்குக் கிடைத்ததை, பணிவுடனும் பெருமையுடனும் ஏற்றுக் கொண்டார்கள்.

     சுவாமிகள் ஞானக்கல்வி மட்டும் பயிலவில்லை. இசைக்கலைஞர்கள் அவரைத் தரிசிக்க வந்தபோது அவர்களுடன் பேசி, இசையின் நுட்பங்களைத் தெரிந்து கொள்ள முற்பட்டார். காவேரியில் ஆங்காங்கு இருந்த தீவுப் பகுதிகளுக்குப்போய், அங்கே வந்து தங்கும் பறவை இனங்களைக் கூர்ந்து கவனிப்பார். அவற்றைப் புகைப்படம் எடுக்க முற்படும் காமிரா நிபுணர்களிடம், புகைப்படக் கலையைப் பற்றி விசாரிப்பார். கணிதம், வான்கணிதம் போன்ற நுட்பமான விஞ்ஞானக் கலைகளிலும் அவர் நிறைய ஆர்வம் காட்டி, விஷயங்களைத் தெரிந்து கொள்ள முயன்றார்.

     1914 ம் ஆண்டு ஆசாரியசுவாமிகள் கும்பகோணம் மடத்துக்குத் திரும்பி வந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது இருபது. நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவருக்கு நிறைய இருந்தது. தன்னைத் தரிசிக்க வரும் விஞ்ஞானிகளிடமும், நிபுணர்களிடமும் நுட்பமான பல கேள்விகளைக் கேட்பார். கும்பகோணத்தில் இருந்தவரை, ஒவ்வொரு ஆண்டும் அவர் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குப் போவது வழக்கம். அங்கே உள்ள அபூர்வச் சிற்பங்களையும், கல்வெட்டுகளையும் நுட்பமாக ஆராய்ந்து பார்ப்பார். ஆலயத்தின் நுட்பமான கட்டிடக் கலையைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் முயலுவ்வார். இப்படிப் பலவகையான கலை நுட்பங்களையும் அறிந்து கொள்வதிலும், கல்வி கேள்வி ஞானங்களில் முழுமையை அடைவதிலும், அவர் தனியான அக்கறை கொண்டு முழுத் தேர்ச்சியை அடைந்தார்.

     ஆசாரியசுவாமிகளுக்கு இருபது வயது நிறைந்தது. இருபத்தோரு வயது நிறைந்து மேஜர் ஆனபிறகுதான் மடத்தின் மேலாட்சிப் பொறுப்பை அவர் ஏற்க முடியும். அதுவரை கோர்ட் ஆணைப்படி அவருடைய பொறுப்பை உரிய குழு ஒன்று ஏற்று நிர்வாகம் செய்து வந்தது. 1915 ம் ஆண்டு, இருபத்தோரு வயது ஆனதும் அவர் இந்தப் பொறுப்பை நேரடியாக மேற்கொண்டார். இருந்தாலும் உரிமைப் பத்திரங்களில் அன்று இருந்த வழக்கப்படி அவர் கையெழுத்திடவில்லை. முறைப்படி நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் ஏஜெண்டுகளும் இவற்றைக் கவனித்துக் கொண்டார்கள். அதிகாரம் வழங்கும் பத்திரங்களிலும் மடத்தின் முத்திரையே இடப்பட்டுச் சான்றாக அமைந்தது.

     அந்த ஆண்டு சங்கர ஜயந்தி விழா மிகச்சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

     “ஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தியானது மற்ற ஜயந்திகளை விடப் புண்ணிய மிருந்தது என்று நான் நினைப்பது வழக்கம். இப்படி நான் சொல்லுவதற்கு இரண்டு காரணங்கள் உங்களுக்குத் தோன்றலாம். ‘நம்முடையது’ என்ற அபிமானத்தினால் சொல்லுகின்றானோ என்பது ஒன்று. இப்போது பேசப்படும் விஷயம் ஸ்ரீசங்கர ஜயந்தியாதலால் அதைச்சற்று உயர்த்திப் பேசுகிறானோ என்பது இரண்டாவது. இந்த இரண்டும் இல்லாமல், வேறு ஒரு முக்கியமான காரணத்தாலேயே ஸ்ரீசங்கர ஜயந்தியை ஸர்வ உத்திருஷ்டமான புண்ணிய காலம் என்கிறேன்.

     அது என்ன காரணம்? ஸ்ரீசங்கர அவதாரத்துக்கு முன் வைதிக மதம் ஆட்டம் கண்டபோது, அதுவரை வேத புராணங்களால் விதிக்கப்பட்ட புண்ணிய காலங்கள் எல்லாம் தத்தளித்தன. ஒரு மதத்தில் நம்பிக்கை போனால், அந்த மதப்பண்டிகைளை யார் கொண்டாடுவார்கள்? வேத தர்மத்துக்கு ஆபத்து வந்தபோது அம்மதப் பண்டிகைகள் எல்லாவற்றுக்குமே ஆபத்து வந்துவிட்டது. அப்போது ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்ததால்தான், அந்தப் புண்ணிய காலங்கள் எல்லாம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டன. ஸ்ரீசங்கர ஜயந்தி நிகழ்ந்திராவிட்டால், இன்று ஸ்ரீராமநவமியும், கோகுலாஷ்டமியும், சிவராத்திரியும், நவராத்திரியும் மற்ற புண்ணிய தினங்களும் கொண்டாடப்படுமா என்பதே சந்தேகம். மற்ற ஜயந்திகளையெல்லாம் நிலை நாட்டிய ஜயந்தியாகவே இது இருக்கிறது. ஆகையானால்தான் ஸ்ரீசங்கர ஜயந்தியை மிகமிகப் புண்ணிய காலமாக நான் சொல்லுகிறேன்.”

     என்று கூறுகிறார் பரமாச்சாரிய சுவாமிகள். அந்த இளமைப் பருவத்திலேயே, மிகுந்த ஈடுபாட்டுடன் ஸ்ரீ ஆச்சார்யாருடைய ஜயந்தியைக் கொண்டாடும் பக்தியும் பற்றும் அவருக்கு இருந்தது. “ஆரியதர்மம்” என்ற புதிய சஞ்சிகையைத் திருமடம் அப்போது வெளியிடத் தொடங்கிற்று. ஸ்ரீமடம் கொண்டாடும் பல்வேறு பண்டிகைகளுக்கும் புண்ணிய தினங்களுக்கும் அது சுபமான ஆரம்பமாகவே அமைந்தது. அந்த வருடம் நவராத்திரி விழாவை மடத்தில் மிகசிறப்பாகக் கொண்டாடினார்கள். அது லோகமாதாவை லட்சுமி, சரசுவதி, துர்க்கா ஆகியோரின் இணைந்த மகாசக்தியாக வைத்துக் கொண்டாடும் பண்டிகை. மடத்தில் அதற்கு என்றுமே தனியான சிறப்பு உண்டு. அந்த ஆண்டு விழாவின் போது இந்தியா முழுவதிலுமிருந்து பண்டிதர்கள் வந்து கலந்து கொண்டார்கள். சுவாமிகள் சதஸிற்குத் தலைமை வகித்து அனைவரையும் பாராட்டிப் பரிசளித்தார்கள். சுவாமிகளின் முன்னலையில் இசைக்கலைஞர்கள் பக்திமணம் ததும்பும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். விழா முடிவின் போது பத்தாவது நாள் இரவு அன்று, சுவாமிகள் வண்ண ஊர்வலம் ஒன்றில் கலந்துகொண்டு, நகர்வலம் வந்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. மகாகவி திரு. சுப்ரமிணிய பாரதியார் அந்த நவராத்திரி வைபவத்தைப் பாராட்டி, மிகச்சிறப்பாக ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஸ்ரீமடத்தில் இந்த உன்னதவிழா அந்த ஆண்டு மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட விதத்தை மிகவும் புகழ்ந்து எழுதி இருந்தார்.

     ஆசாரியசுவாமிகளுக்குச் சமுக சேவையிலும், கலைகளை ஊக்குவிப்பதிலும் தனியான ஆர்வம் இருந்தது. வருங்காலத்தில் அதுவே தமிழ் நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் மிகச்சிறந்த நற்பலன்களைக் கொடுத்தது. சாஸ்திரங்களில் வல்லமை மிகுந்த பெரியோர்கள் ‘சாஸ்திர ரத்னாகர’ என்ற பட்டம் அளிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்கள். நமது தர்மத்தைப் பற்றிக் கல்லுரி மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டுப் பரிசுகள் அளிக்கப்பட்டன. பள்ளிக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் படிக்க உதவிப்பணம் அளிக்கும் திட்டமும் செயற்படுத்தப்பட்டது. மடத்தின் சார்பில் இலவச ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றும் தொடங்கப்பட்டது. இவை எல்லாம் இன்று அரசாங்கத்தால் செய்யப்படுகிறது. எளியவர்க்கு உதவும் திட்டங்களாக அறிவிக்கப்பட்டு, விளம்பரங்களும் செய்யபடுகின்றன. ஆனால் அன்று அந்த மகான், இவை எல்லாவற்றையும் அமைதியாக மிக எளிய முறையில் அந்த நாளிலேயே செய்து காட்டி இருக்கிறார். நாடு நல்ல முறையில் வளர வேண்டும் என்று ஜகத்குரு எடுத்துக் கொண்ட அக்கறைதான் எத்ததைகையது? பிரிட்டிஷார் அரசாண்ட அந்த நாளிலேயே, இத்தகைய ஓர் எதிர்காலத்தை எதிர் நோக்கிய தீர்க்க தரிசனம்தான் என்னே?

     ஆசாரியசுவாமிகள் 1914 முதல் 1918 வரை கும்பகோணம் மடத்திலேயே தங்கினார்கள். அந்த நான்கு ஆண்டுகாலமும், தினந்தோறும் மாலையில் மடத்தில் கலை நிகழ்ச்சிகளோ, இலக்கியப் பேருரைகளோ நடப்பது வழக்கம். பண்டிதர்களும் கலைஞர்களும் சுவாமிகளின் அருளாசியைப் பெறப்போட்டி போட்டிக் கொண்டு வருவார்கள். பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், இஞ்சினீயர்கள், ஆட்சியார்கள் ஆகிய பலரும் அவர்களை நாடிச் சென்று அறிவுரை பெறுவதும் வழக்கமாக இருந்தது. சுவாமிகளும் அவர்களுக்கு யோசனைகள் சொல்லி ஊக்குவித்து, வழிகாட்டுவது வழக்கம். பிற மதத்தினருக்கும் அவர்களிடம் தனியான மதிப்பும் மரியாதையும் இருந்தது. எல்லாமதங்களையும் பாராட்டக்கூடிய மிகசிறந்த ஞானியாக அவரை ஏற்க அவர்கள் அனைவருமே ஒப்புக் கொண்டார்கள். அதனால் அவரை வந்து தரிசிப்பதும் ஆசியுரை பெறுவதும் அவர்களுக்கு மனத்துக்கு இசைந்த ஒன்றாகவே இருந்தது.

     பரமாச்சாரிய சுவாமிகளை நாடி இன்றும் பல மதத்தினரும் வருகிறார்கள். வெளி நாட்டிலிருந்து வரும் அரசர்களும், அரசிகளும், பேரறிஞர்களும் அவருடைய நல்லுரைகளைக் கேட்கக் காத்திருக்கிறார்கள். நாட்டின் மிகப் பெரிய பதவிகளை வகிப்பவர்களும் அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற வந்து நிற்கிறார்கள். இப்படி ஒரு பிரசித்தமான, மகிமை மிகுந்த பின்னணிக்கு அன்றே அந்த நிகழ்ச்சிகள் ஓர் ஆரம்ப சூசகமாக அமைந்தன. அவர்களது ஆசியினைப் பெற வந்த அரசர்களும் அவரை உலக குருவாகவே மதித்தார்கள். ஜகத்குரு என்ற பட்டத்துக்கு எல்லா விதத்திலும் பொருத்தமாக அவர்கள் விளங்குவதை அன்றே அனைவரும் உணர்ந்து கொண்டார்கள்.

     சுவாமிகளின் திக்விஜயம் மார்ச்சு மாதம் 1919 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று ஆதிசங்கரர் செய்த திக்விஜயம் பற்றி பரமாச்சாரிய சுவாமிகள் இவ்விதம் கூறுகிறார்.

     “தனிமனிதராக இருந்து கொண்டு அந்தச் சாமானிய பிராம்மண சந்நியாசி தேசம் முழுவதிலும் ஒரு இடம் பாக்கி வைக்காமல் திக்விஜயம் செய்து இந்து மதத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தினார். ‘திக்விஜயம்’ என்றால் அவர் செய்தது தான் திக்விஜயம்.

     இன்று நம்மிடையே சிறிய, பெரிய அனுஷ்டானங்கள் பலவற்றையும் ஞாபகம் காட்டுகிற அளவுக்காக செய்துவைத்த, ஸ்ரீ ஆதீ ஆச்சாரியாரை என்றைக்கும் மறக்ககூடாது. நவராத்திரி, கோகுலாஷ்டமி போல ஸ்ரீ ஆசாரிய ஜயந்தியைக் கோலாகலமாகக் கொண்டாட வேண்டும். ஆசாரிய பாதுகையைத் தினமும் பூஜிக்க வேண்டும். ஸ்ரீஆசார்யாள் அனுகிரகத்தில் சகல மங்களமும் உண்டாகும்.”

     சுவாமிகள் திக்விஜயம் மேற்கொண்ட சமயமும் ஓரளவு இதைப்போலவே நாட்டில் கொந்தளிப்பும், அமைதி இன்மையும் நிலவிய சமயமே ஆகும். 1919 முதல் 1939 வரை, இருபத்தோரு ஆண்டுகள் சுவாமிகள் திக்விஜய யாத்திரையை மேற்கொண்டார்கள். அந்தக் கால கட்டத்தில் தான் இந்தியா முழுவதும் சுதந்திரப் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்திருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் பயனாக இந்துமதம் அரசின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் பெறாமல் நசித்திருந்தது. இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களிடையே ஒற்றுமையும் குலைந்திருந்தது. சுவாமிகளின் தேசயாத்திரை இவற்றுக்கெல்லாம் தகுந்த மாற்றாக அமைந்தது. 1918 ம் ஆண்டு கதராடை இயக்கம் பிரபலமான நாளிலிருந்து ஆசாரிய சுவாமிகள் கதராடையே அணியத்தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

     ஆசாரியாரின் திக்விஜய யாத்திரை 1919 ம் ஆண்டு மார்ச்சு மாதம் தொடங்கிற்று. அன்று சிவராத்திரி அமாவாசை. கும்பகோணத்திலிருந்து திவ்ய தலங்களைத் தரிசிக்கவும், தீர்த்தங்களில் நீராடவும், சீடர்களுக்கு நல்லுபதேசம் செய்யவும் சுவாமிகள் இந்த யாத்திரையை மேற்கொண்டார்கள். இந்த யாத்திரையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இடம்பெற்றார்கள். முப்பது மாட்டு வண்டிகளும், யானை, குதிரை, ஒட்டகம், பசு முதலான கால்நடைகளும் தொடர்ந்து வந்தன. தந்தச் சிவிகை போன்ற விருதுகளும் வந்தன.

     அன்று காலை சுவாமிகள் மடத்தின் தென் பிரகாரத்தில் உள்ள வினாயகருக்குப் பூஜை செய்தார்கள். மடத்தின் தோட்டத்தில் அமைந்துள்ள மூன்று ஆச்சாரியர்களின் பிருந்தாவனங்களையும் தரிசித்தார்கள். அந்தணர்களுக்கு யாத்திராதானம் வழங்கி, காவேரிக் கரையில் பகவத் படித்துரை என்ற நீராடும் இடத்துக்கு மேற்குப் புறமாக அமைந்துள்ள தருமக் கட்டிடத்தில் முதல்நாள் சந்திர மெளளீசுவர பூஜையைச் செய்தார்கள். இதைத்தொடர்ந்து சுமார் நான்கு மாதங்கள், கும்பகோணத்தில் இருந்த பக்தர்கள் சுவாமிகளை, அவரவர் இல்லங்களுக்கு அழைத்துப் பாதபூஜை செய்து ஆசிகளைப் பெற்றார்கள்.

     சுவாமிகள் தங்கிய இடமெல்லாம் பக்தர்கள் ஏராளமாகக் கூடி, அவர்களது ஆசிகளைப் பெற, உடன் தங்கி இருப்பது வழக்கமாக இருந்தது. பக்தி வெள்ளம் ததும்பும் அந்தச் சூழ்நிலையில், பூஜைகளும், பிரசாதங்கள் வழங்குவதும், பஜனைகளும், பக்திமணம் கமழும் உபதேசங்களுமாக, அந்த இடமே கலகலப்பாக இருக்கும். வரவேற்பும், மக்கள் வந்து வணங்குவதும், பாதபூஜையில் பங்கு பெறுவதுமாக, கோலாகலமான சூழ்நிலை உண்டாகி இருக்கும். இவை எல்லாவற்றுக்கும் நடுவில் சுவாமிகள் சொற்பமான உணவை அருந்தி, பூஜை விரதங்களை முடித்துக் கொண்டு, இன்முகத்துடன் அவ்வளவு பேருக்கும் தரிசனம் தந்து அருளாசி வழங்கும் காட்சி ஆபுர்வமானதாக இருக்கும். உலகியலை ஒட்டி உபதேசம் செய்து அவர்களை உய்விக்கவந்த மகான், அதன் சூழ்நிலை தன்னைப் பாதிக்காத வண்ணம் தூய்மையுடனும் மன உறுதியுடனும் இருக்கும் நிலை யாரையும் வியந்து பரவசம் அடையச் செய்வதாக இருக்கும்.

     அந்த ஆண்டு வியாச பூஜையைச் சுவாமிகள் கும்பகோணத்துக்குக் கிழக்கே ஐந்து மைல்கள் தொலைவில் உள்ள வேப்பத்தூரில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள். அந்த ஊர் காவேரியின் வடகரையில் அமைந்தது. சுவாமிகள் தங்குவதற்கு இடவசதியும், பூஜை, ஸ்நானம் ஆகியவற்றுக்கு ஏற்ற வசதிகளும் இயல்பாகவே அமைந்திருந்தன.

     வியாசபூஜை என்பது என்ன? ஆனி அல்லது ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமியை வியாச பூர்ணிமா என்று கூறுகிறோம். வேதங்களை இயற்றிய வியாசபகவான், உலக ஆசாரியராகக் கருதப்பட்டு, அன்று அவருக்குப் பூஜை செய்யப்படுகிறது. இந்தப் பூஜையைப் பொதுவாகச் சந்நியாசிகளே செய்வது வழக்கம். வியாசர் வேதங்களுக்குச் சாகை பிரித்து இயற்றியவர். பிரம்மசூத்திரங்கள் ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியத்தைப் பற்றிப் போதிக்கின்றன. அந்தச் சூத்திரங்களுக்கு சங்கரர், இராமானுஜர், மாத்வர் ஆகிய மூன்று ஆசாரியர்களும் பாஷ்யங்களை இயற்றினார்கள். இந்த மூவருக்கும் முதல்வராக அமைந்தவர் வியாசபகவான். ஆகையால் அந்த நாளை அத்வைத, துவைத,விசிஷ்டாத்வைத சம்பிரதாயங்களைச் சார்ந்த சந்நியாசிகள் அனைவரும் கொண்டாடிப் பூஜை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

     ஸ்ரீகாமகோடி மடத்தில் இது வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தனி மண்டபம் அமைத்து, அதில் முழுமையாக அட்சதை பரப்பிய வெள்ளிப் பீடத்தில் கிருஷ்ண விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து, சுற்றிலும், தேவதைகளையும், ரிஷிகளையும், குரு பரம்பரையில் வந்த ஆசார்யர்களையும் எலுமிச்சம்பழ உருவில் ஆவாகனம் செய்து, அவர்களுக்குத் தனித்தனியே பூஜை செய்வார்கள். வேதவியாசருக்கு செய்யப்படும் இந்த பூஜை கிருஷ்ண பகவானுக்கே உரியதாகச் செய்யப்படுகிறது. சுமார் ஆறுமணி நேரம் சுவாமிகளே இந்தப் பூஜையைச் செய்து முடிப்பது வழக்கம்.

     இந்தப் பூஜையை முதன்முறையாக ஆசாரிய சுவாமிகள் வேப்பத்தூரில் செய்தபோது, ஏராளமான பிரமுகர்களும், ஜமீன்தார்களும், அலுவலர்களும் வந்து தரிசனம் செய்தார்கள். நாட்டின் முக்கியமான தேவாலயங்களிலிருந்து பிரசாதங்கள் வந்து சேர்ந்தன. தொடர்ந்து சாதுர்மாஸ சங்கல்பத்தை ஒட்டி, சுவாமிகள் அங்கு மேலும் இரண்டு மாதங்கள் தங்கினார்கள். அந்த இரண்டு மாதங்களும் வேப்பத்தூர் விழாக்கோலம் பூண்டிருந்தது. பக்தர்கள் சுவாமிகளின் பரிவாரங்களுக்கும், தரிசிக்க வருவோருக்கும் ஏராளமான செலவில் செளகரியங்களைச் செய்து கொடுத்து மகிழ்ந்தார்கள்.



ஜகம் புகழும் ஜகத்குரு : காணிக்கை 1 2 3 4