1

     பரமேஸ்வரமூர்த்தி ஆலமரத்தின் அடியில் தட்சிணாமூர்த்தியாக அசையாமல் இருந்தது. அதற்குச் ‘சம்பு’ என்று பெயர். ‘சம்’ என்றால் நித்ய சுகம் என்று அர்த்தம். நித்யசுகம் உற்பத்தியாகும் இடமே சம்பு. ஆனந்த ஊற்றே சம்பு. இந்த ஆனந்த ஊற்று இருந்த இடத்திலேயே இருக்கும். கண் பார்ப்பதில்லை. வாய் பேசுவதில்லை. உடம்பு அசைவதில்லை. ஒரே நிஷ்டை, சமாதி, மெளனம். ஆனால் அந்த மெளனத்திலிருந்தே ஸனகாதி யோகிகள் மகா உபதேசம் பெற்றுத் தாங்களும் பிரம்ம நிஷ்டை பெற்றனர். ஆனந்த ஊற்றைத் தேடிப்போய் இவர்கள் அதை மொண்டு குடித்தார்கள். மெளனம் தான் இவர்கள் பெற்ற மகா உபதேசம்.

     இப்படி தட்சிணாமூர்த்தியைப் பற்றிக் கூறுகிறார் உலககுருவாக ஒளிரும் ஸ்ரீகாஞ்சிப் பெரியவர்கள். இன்று காஞ்சிக்குச் சென்று அவர்களை தரிசிக்கும் ஒவ்வொருவரும் உணரும் அனுபவமும் அதுவே அல்லவா? நாற்காலியில் அமர்ந்த நிலையில் அவர்கள் பார்வையாலேயே அருள்மழை பொழிகிறார்கள்; கையை உயர்த்தாமலே தனது தரிசனத்தால் அருளாசி வழங்குகிறார்கள்; வாய் திறவாமலே நமது மனக்குறைகளை உணர்ந்து அதற்குப் பரிகாரமும் அருளி விடுகிறார்கள்.

     அந்தச் சந்நதியில் நின்று, கசிந்துருகி, கண்ணீர் மல்கி, கைகூப்பி வணங்கி, ஆசி வேண்டி நின்றவர்கள் அனைவருக்கும், துயர் துடைத்து அருட் பார்வையாலேயே ஆறுதல் கூறி அனுப்பி வைக்கிறார்கள், ஜகத்குரு ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரசுவதி சங்கராச்சாரிய சுவாமிகள்.

     உலக நன்மைக்காகவே நூறாண்டு வாழ்ந்து, மனித வாழ்வை வளப்படுத்தவும், புனிதப்படுத்தவும் பூஜைகளின் மூலமாகவும் உபதேசங்களின் வழியாகவும் அயராது அருட்தொண்டு செய்து வந்த பெரியவர்கள் அவர்கள். இந்த நூறு ஆண்டுகளில், அந்த அருள் வாழ்க்கையில் நிகழ்ந்த புனிதமான நிகழ்ச்சிகள் எத்தனை? நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்கள் எத்தனை? வாழ்க்கையில் நமக்குப் பாடம் புகட்டுவது போல வாழ்ந்து காட்டிய விதம்தான் எவ்வளவு புனிதமானது?

     அவற்றை எளிய முறையில் எடுத்து வைக்கும் முயற்சியே இது. உலகெங்கும் உள்ள அவர்களது கோடிக்கணக்கான பக்தர்களுக்கு இது மகா பெரியவர்களின் அருட்பிரசாதம். இந்து மதத்தைப் புரிந்துகொள்ள விரும்பும் இளைய தலைமுறையினருக்கு இது ஒரு வாழ்க்கை நடைமுறை நூல். ஆலயங்களுக்கும் ஆசிரமங்களுக்கும் சென்று அமைதியை நாடிவழிபட்டு நிற்கும் எளிய மக்களுக்கு, இது அன்பு வழிகாட்டி ஆறுதல் கூறும், அச்சு மையில் வடிந்த, அநுபவ அமுதம்.

     இந்த புனிதவாழ்க்கை 1894ம் ஆண்டு, மே மாதம் இருபதாம் தேதி, தமிழகத்தில், தென் ஆற்காடு மாவட்டத்தில், விழுப்புரம் என்ற ஊரில் தொடங்கிற்று...

     அன்று ஞாயிற்றுக்கிழமை. அது அனுஷ நட்சத்திரம் கூடிய சுபதினம். அக்கிரகாரத்தில் கோவிந்தராயர் வீடு என்ற பெயருடன் விளங்கி வந்த இல்லத்தில் இந்த சுப நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீசுப்பிரமணிய சாஸ்திரிகள் என்ற பெரியவருக்கும் ஸ்ரீமதி மகாலட்சுமி என்ற அம்மையாருக்கும் இரண்டாவது புதல்வராக அவர் பிறந்தார். அவர்கள் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட, ஹோஸைல கர்னாடக ஸ்மார்த்தப் பிரமண வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

     தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரிடம் புகழ்மிக்க அமைச்சராக விளங்கியவர் கோவிந்த தீட்சிதர். அவரும் இந்த வகுப்பைச் சேர்ந்தவரே. இந்த வகுப்பினில் ஒரு பிரிவினர் திருவிடைமருதூர் என்ற தலத்தில், தஞ்சை மாவட்டத்தில் குடியேறினார்கள். அவர்கள் வழிவந்த கணபதி சாஸ்திரிகள் என்பவரே சுவாமிகளின் தந்தை வழிப்பாட்டனார் ஆவார். அவர் கன்னடம், தெலுங்கு, தமிழ், மராட்டி ஆகிய மொழிகளில் தேர்ந்தவர். நிர்வாகத்திறமை மிகுந்தவர். காமகோடி பீடத்தின் அறுபத்துநான்காவது பீடதிபதியாக விளங்கிய ஸ்ரீசந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் அவரது திறமையைப் பாராட்டி, மடத்தில் சர்வாதிகாரியாக நியமனம் செய்தார்கள். தொடர்ந்து சுமார் ஐம்பது ஆண்டுகள் அவர் அந்த பணியில் திறமையுடன் ஈடுபட்டுச் சுவாமிகளின் ஆசிகளையும் பெற்றார்.

     அறுபத்துநான்காவது ஆசாரியசுவாமிகள் ஸ்ரீகாமாட்சி ஆலயத்தின் கும்பாபிஷேகத்தைக் காஞ்சியிலும், அகிலாண்டேசுவரியின் தாடங்க பிரதிஷ்டையை திருவானைக்காவிலும் செய்து வைத்தார். இந்த இரண்டு வைபவங்களையும் கணபதி சாஸ்திரிகள் திறமையுடன் நிர்வாகம் செய்து நிரைவேற்றி வைக்கப் பாடுபட்டார். அதற்கு ஆசாரிய சுவாமிகளின் ஆசிகளும் அவருக்குக் கிடைத்தன.

     அவருடைய மூத்தமகனே சுப்பிரமணிய சாஸ்திரிகள். அந்தக்கால வழக்கப்படி அவர் ஆங்கிலக்கல்வி பெற்று பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஆனார். அவர் அரசாங்கக் கல்வி இலாக்காவிலும் அதிகாரியாக வேலை பார்த்தார். தென் ஆற்காடு மாவட்டத்தில் அப்படி அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான், விழுப்புரத்தில் அவருக்குச் சுவாமிகள் மகனாகப் பிறந்தார்.

     சுவாமிகளின் தாயார் மகாலட்சுமி அம்மாள், தஞ்சை மாவட்டத்தில் காவேரிக்கரையில், திருவையாற்றிலிருந்து சுமார் நான்கு மைல்கள் தொலைவில் உள்ள ஈச்சங்குடி கிராமத்தில் பிறந்தவர். நாகேசுவர சாஸ்திரிகள் என்ற பெரியவருக்கும், மீனாட்சி அம்மையாருக்கும் புதல்வியாக அவர் பிறந்தார்.

     அந்தக்காலத்தில் குழந்தைப் பருவத்திலேயே கலியாணம் செய்து வைத்துவிடும் வழக்கம் இருந்தது. அப்படி மகாலட்சுமி அம்மாளுக்கு ஏழு வயதானபோது, பதினெட்டு வயதான சுப்பிரமணிய சாஸ்திரிகளுடன் திருமணம் நடைபெற்றது. சுப்பிரமணிய சாஸ்திரிகளின் குலதெய்வம், அறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் எழுந்தருளியுள்ள சுவாமிநாதன். அவருக்குப் பிறந்த முதல் புத்திரனுக்கு கணபதி என்று பெயரிட்டிருந்தார். அதனால் இரண்டாவது மகனுக்குச் சுவாமிநாதன் என்றே பெயரிட்டார். ஈச்சங்குடியில் இருந்த தாய்வழிப் பாட்டனாருக்கும் இது பெருமகிழ்ச்சியாக இருந்தது. சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள குமரப்பெருமானின் தரிசனத்தை அடிக்கடி பெற்றுவந்த அவர், தனது பேரனின் பெயர் அவருடைய திருநாமமாகவே இருக்க வேண்டும் என விரும்பியவர். அந்த விருப்பமும் கைகூடி வந்தது.

     சுவாமி மலையில் எழுந்தருளியுள்ள சுவாமிநாதப் பெருமான் ஞானபண்டிதர். தந்தைக்கே பிரணவத்தின் பொருளை உபதேசித்து அருளிய ஞானவான். உலகில் உள்ள அனைவருக்கும் ஞானகுருவாகத் திகழப்போகிற அவதாரப் புதல்வன் என்ற பொருத்தம் அமையும்படி, சுவாமிகளுக்கு அந்தத்திருப் பெயரையே வைக்கும் அருமையான சந்தர்ப்பமும் நேர்ந்தது. அந்தப் பெயற்கேற்பச் சுவாமிநாதனுக்கு, ஞானம் செறிந்த கல்வியைக் கற்பதில் மிகுந்த ஆர்வமும் இருந்தது.

     தந்தை அவரை எட்டாவது வயது வரை பள்ளிக்கு அனுப்பாமல் தானே கல்வி கற்றுக் கொடுத்துவந்தார். இளமைப் பருவத்திலேயே இசைப் பயிற்சியும் ஏற்பட்டது. தாயார் மகாலட்சுமி அம்மாள் தான் அறிந்த தோத்திரப் பாடல்களை அவருக்குச் சொல்லிக் கொடுப்பது வழக்கம். இப்படி அறிவு சார்ந்த பின்புலம் அமைய பெற்று, திண்டிவனத்தில் ஆற்காடு அமெரிக்கன் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் இரண்டாவது பாரத்தில் சுவாமிநாதன் சேர்ந்தார்.

     வகுப்பில் முதலாவதாகத் தேறிப் பரிசுகளை அவர் பெற்றுவருவார். ஒரு முறை கிறிஸ்துவ மதநூலான பைபிளில் தேர்ச்சி பெற்றதற்கு முதற் பரிசும் அவருக்குக் கிடைத்தது. இப்படிப் பல பரிசுகளையும் பெற்றுக்குவித்த அவருக்கு நடிப்பதிலும் நல்ல திறமை இருந்தது. மிஷன் உயர்நிலைப் பள்ளியில் ஷேக்ஸ்பிரயரது “ஜான் அரசர்” என்ற நாடகத்தை அவர்கள் நடத்தினார்கள். அதில் ஆர்தர் இளவரசன் என்ற பாத்திரத்தை நடிக்கச் சரியான மாணவன் கிடைக்கவில்லை. குழந்தையாக இருந்தாலும் முகப்போலிவுடன் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசிய சுவாமிநாதனையே, தலைமை ஆசிரியர் அந்த பாத்திரத்துக்குத் தேர்ந்தெடுத்தார்.

     தந்தை சுப்பிரமண்ய சாஸ்திரிக்கு மகன் இப்படி நடிக்க முற்படுவதில் விருப்பம் இல்லை. ஆனால் தலைமை ஆசிரியரின் வற்புறுத்தல் ஒருபுறமும், மகனின் ஆசை மற்றொரு புறமும், அவரை இணங்கும்படி செய்து விட்டன. மகனுக்கு அநுமதி கொடுத்ததுடன், நாடக பாத்திரத்துக்குரிய உடைகளையும் அவர் சொந்தச் செலவில்தயாரித்துக் கொடுத்தார். சுவாமநாதன் நாடகத்தில் பிரமாதமாக நடித்து, எல்லோருடைய பாராட்டுகளையும் பெற்று, நாடகத்தில் முதற்பரிசையும் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்!

     குழந்தைப் பருவத்திலேயே சுவாமிநாதனுக்குச் சில அபூர்வ அனுபவங்களும் ஏற்பட்டன. அவற்றை “வாழ்க்கை எனக்குப் புகட்டிய பாடம்” என்ற கட்டுரையில் ‘பவன்ஸ் ஜர்னல்’ இதழில், அவர் விவரிக்கிறார்...

     எங்கள் வீட்டில் இரவுநேரம் ஒரு மரநாய் புகுந்து விட்டது. உறியில் தொங்கிய வெல்லப்பாகின் வாசனையை முகர்ந்து, அதை ருசிபார்க்க விரும்பி, எப்படியோ மேலே ஏறி அந்தச் செம்புப் பாத்திரத்தில் தலையை விட்டுவிட்டது. அதன் தலை குறுகலான பாத்திரத்தின் வாயில் நன்றாகச் சிக்கிக்கொண்டுவிட்டது. தனது தலையை விடுவித்துக் கொள்ள மரநாய் இரவு முழுவதும் படாதபாடுபட்டது. பார்வை மறைக்கப்பட்டிருப்பதால் அதற்கு வெளியிலே போகவும் வழி தெரியவில்லை. அங்குமிங்கும் மோதிக் கொண்டு ரொம்ப சிரமப்பட்டது. அது எழுப்பிய சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், யாரோ ஒரு திருடன் வீட்டுக்குள் புகுந்து விட்டதாக எண்ணித் தடியை எடுத்துக் கொண்டு வந்து விட்டார்கள். சத்தம் கிளம்பக் காரணமாக இருந்தது மரநாய் தான் என்று தெரிந்து கொண்டதும் அதை விரட்டிப் பிடித்துக் கம்பத்தில் கயிற்றல் கட்டிவிட்டார்கள். கழுத்து வலியிலும், கட்டிப் போட்ட வேதனையிலும், அது புலம்பி ஊளையிட்ட வண்ணம் இருந்தது. காலையில் அநுபவம் வாய்ந்த சிலர் வந்து மரநாயின் தலையை எப்படியோ விடுவித்தார்கள். மிகுந்த வலியுடன் அது ஓடிப் பிழைத்து விட்டது! பேராசையால் அல்லவா அதற்கு அவ்வளவு வேதனை ஏற்பட்டது?

     இன்னொரு அநுபவம்... கையில் தங்க வளையலுடன் நான் வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்தேன். வளையல் என் கையில் இறுக்கத்துடன் படிந்திருந்தது. அதனால் அதை யாராவது கழற்றி விரிவுப்படுத்திக் கொடுப்பார்கள் என்று நான் காத்துக் கொண்டிருந்தேன். தெருவில் போய்க் கொண்டிருந்த ஒருவன் என்னையும் என் வளையலையும் பார்த்துவிட்டு, வீட்டுக்குள் வந்தான். என்னிடம் அன்பொழுகப் பேசினான். அவனிடம் என்னுடைய வளையலைக் கழற்றி சரி செய்து கொண்டு வந்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். அவனும் வளையலைக் கழற்றி எடுத்துக் கொண்டு போய் விட்டான். அவனுடைய பெயர் பொன்னுசாமி என்று மட்டும் நான் தெரிந்து வைத்துக் கொண்டேன். பெற்றோரிடம் நடந்ததைச் சொன்னேன். அவர்கள் பொன்னுசாமியைப் பிடிக்க வெளியே ஓடிப்போய்த் தேடினார்கள். அவன் அகப்படுவானா? பொன்னுசாமி ஆயிற்றே? தனக்குரிய பொன்னுடன் அவன் காணாமல் மறைந்து விட்டான்!

     “அதிக அளவு சுயநலம் படைத்த கண்ணோட்டத்துடன் பெரும்பாலனவர்கள் இன்று வாழ்கிறார்கள் என்பதை அப்போது நான் தெரிந்து முடிவு செய்துகொண்டேன். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்தக் கருத்தில் கொஞ்சம் வேறுபாடும் ஏற்பட்டது. நல்ல ஒழுக்கம், நெறிமுறைகள் ஆகியவற்றில் பற்றுவைத்து நேர்மையுடன் வாழும் ஒரு சிலரும், நம்மிடையே இருக்கின்றார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். அப்படிப்பட்டவர்கள் தங்களது உடைமைகளையும் செளகரியங்களையும் தியாகம் செய்வது மட்டும் இன்றி, மற்றவருடைய ஆன்மீக முன்னேற்றத்துக்காகத் தங்கள் சாதனைகளையும் அளிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்” என்று ஆசாரிய சுவாமிகள் இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

     குழந்தையாக இருந்தபோது, சுவாமிநாதனுக்கு இன்னொரு அநுபவமும் ஏற்பட்டது. தெய்வாதீனமாக ஒரு பேராபத்திலிருந்து அவர் உயிர் தப்பினார்! அப்போது அவருடைய தந்தை சிதம்பரத்துக்கு அருகில் உள்ள ‘போர்ட்டோநோவோ’ என்று அழைக்கப்படும் பரங்கிபேட்டையில் பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தார். சிதம்பரத்தில் இளமை ஆக்கினார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதைக் கேள்விப்பட்டு, அதைப் பார்க்கத் தனது மகனையும் அழைத்துக் கொண்டு போனார் அவர்.

     சிதம்பரத்தில் பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வாளராக இருந்த வெங்கடபதி ஐயர் என்பவரது வீட்டில் அவர்கள் தங்கினார்கள். இரவில் சுவாமி புறப்பாடும் ஊர்வலமும் சிதம்பரம் கோயிலில் நடப்பதாக இருந்தது.”இரவு உன்னை எழுப்பி அழைத்துக் கொண்டு போய்க் காட்டுகிறேன்!” என்று சொல்லிக் குழந்தையைத் தூங்கச் செய்துவிட்டார் தந்தை. காலையில் கண் விழித்த சுவாமிநாதன், தன்னை இரவு யாரும் எழுப்பி அழைத்துச் செல்லவில்லை என்று கூறி அழத் தொடங்கினான். “யாருமே எழுந்து போகவில்லை. அதனால்தான் உன்னையும் எழுப்பவில்லை!” என்று தந்தையார் எடுத்துக் கூறியும் சுவாமிநாதன் சமாதானம் அடையவில்லை. அப்புறம் உண்மை தெரியவந்தது. அது எல்லோருக்கும் பெரும் ஆறுதலாக அமைந்தது. இரவு ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது. அதில் அகப்பட்டுக் கொண்ட பலரும் பலத்த காயங்களுக்கு ஆளானார்கள். இதை அறிந்து வந்த தந்தை, அதைப்பற்றி விளக்கியதும் எல்லோரும் ஆறுதல் அடைந்தார்கள் - சுவாமிநாதன் உட்பட!

     சுவாமிநாதனின் தாய் ஊரில் படுத்து உறங்கியபோது, சிதம்பரம் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாகக் கனவு கண்டு விழித்து எழுந்தாள். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, அந்த கனவு உண்மைதான் என்பதும் தெரிய வந்தது. பயந்து கொண்டு கணவரையும், மகனையும் தேடிக்கொண்டு ரெயில்நிலைத்துக்கு வந்து சேர்ந்தார் அன்னை. அங்கே ரயில் வந்து நின்று, கணவரும் மகனும் கீழே இறங்கி வருவதைப் பார்த்து மிகுந்த ஆறுதல் அடைந்தார். “ஈசுவரன் காப்பாற்றினார்!” என்று சொல்லிக் கொண்டார். ஆமாம்; ஈசுவரன் காப்பாற்றினார். அன்னையை ஆறுதல் பெறச் செய்யக் குழந்தையைக் காப்பாற்றியது மட்டும் அல்ல - உலகத்துகே ஞானமும் ஒளியும் தரப்போகும் ஒரு குழந்தையைக் காப்பாற்றி மக்கள் எல்லோரையும் காப்பாற்றினார்! அதுவல்லவோ உண்மை?

     சுவாமிநாதனுக்கு உபநயனமும் செய்தாகிவிட்டது. பள்ளிக்கூடத்தில் மிகச் சிறப்பாகப் படித்துக் கொண்டுவந்த சுவாமிநாதனின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படும் வாய்ப்பும் அப்போது ஏற்பட்டது!

     காமகோடிபீடத்தின் அறுபத்தாறாவது பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகரேந்திர சரசுவதி, திண்டிவனத்துக்கு அருகில் உள்ள பெருமுக்கல் என்ற கிராமத்துக்கு வந்து தங்கி, சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டிருந்தார்கள். சுப்பிரமணிய சாஸ்திரிகள் தனது குடும்பத்தாருடன் அங்கே சென்று தரிசனம் பெற்று, சுவாமிகளின் ஆசிகளையும் பெற்றுத் திரும்பினார்கள். ஆசாரிய சுவாமிகளின் விஸ்வரூப யாத்திரையைத் தூரத்தில் இருந்தபடியே கண்டு ஆனந்தித்தபடி நின்றார் சுவாமிநாதன். அப்போது அந்தப் பெற்றோர் தமது மகன் அந்தப் பீடத்துக்கு அதிபதியாகத் துறவு பூண்டு விடுவான் என்று அவர்கள் நினைக்கவே இல்லை. சுவாமிநாதனுக்கும் அத்தகையதோர் எண்ணம் எழவே இல்லை!

     ஆசாரிய சுவாமிகள் மரக்காணம் கிராமத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்படச் செய்தார். பிறகு திண்டிவனத்திலிருந்து மதுராந்தகம் செல்லும் வழியில் அமைந்துள்ள சாரம் என்ற கிராமத்துக்கு வந்து தங்கி இருந்தார். அப்போது மாலை நேரத்தில் அவரைத் தரிசிக்கும் ஆவலுடன், தனது நண்பர்களுடன் சென்றிருந்தார் சுவாமிநாதன்.

     மாலை நேரத்தில் தரிசன நேரமும் வந்தது. மகத்தான அந்தப் பொழுதில் மகானின் அருட்பார்வை அருந்தவப்புதல்வன் மீது விழும் வேலையும் வந்து விட்டது. தன்னை வணங்கி எழுந்த செல்வனை அன்பு கனியப் பார்த்தார் சுவாமிகள். அவருடைய உள்ளத்தில் அந்தச் சிறுவன்பால் தனிப்பரிவு எழுந்தது. ”இங்கேயே தங்கிவிடேன்!” என்று கூறினார் சுவாமிகள். அங்கே உடனிருந்த இரண்டு பண்டிதர்களும் சுவாமிநாதனிடம் “சுவாமிகள் சொல்லும்போது நீ இங்கேயே தங்குவதுதான் சரி” என்று கூறினார்கள்.

     சுவாமிநாதனுக்குக் கலக்கம் ஏற்பட்டது. ”நான் இங்கே மடத்துக்குத் தரிசனம் செய்ய வந்திருப்பது என்னுடைய பெற்றோருக்குத் தெரியாது. அவர்கள் என்னைத் தேடுவார்கள். மேலும் நான் பள்ளிக்கூடத்துக்குப் போய்ச் சொல்லி விட்டு வந்திருக்க வேண்டும். அவர்களிடம் சொல்லவில்லை. அனுமதி பெறமல் வெளியூர் செல்வது தவறு!” என்று பலவிதமாகவும் மெதுவாக மறுத்துக் கூறினார் சுவமிநாதன். ஆசாரிய சுவாமிகள் அதன்பின் சுவாமிநாதன் திண்டிவனத்துக்குத் திரும்பிப் போக அனுமதி அளித்தார். மடத்தின் வண்டி ஒன்றிலேயே அவர் திருப்பி அனுப்பப்பட்டார். அதுவரையில் சுவாமிநாதனைக் காணாமல் தேடிக் கொண்டிருந்த பெற்றோர், மகன் திரும்பி வந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்கள். அதே சமயம் ஆசாரிய சுவாமிகள் தனது மடத்தைச் சார்ந்த இரண்டு பண்டிதர்களிடமும் “சுவாமிநாதனைக் கவனித்தீர்களா? காஞ்சி காமகோடி பீடத்துக்கு அதிபதியாக வரவேண்டியவன் அவனே!” என்று கூறிமகிழ்ந்து கொண்டிருந்தார்!

     அதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரம், காமகோடி பீடத்தின் அறுபத்து ஆறாவது பீடாதிபதியான சந்திரசேகரேந்திர சுவாமிகள் கலவையில் முகாமிட்டுருந்தார். அப்போது சுவாமிகள் அங்கேயே சித்தி அடைந்துவிட்டதாகவும் அவர்களிடம் சீடராக இருந்தவரும், ருக்வேதத்தை நன்கு பயின்றவருமான லக்ஷ்மிகாந்தன் என்ற பதினெட்டு வயது பிரம்மச்சாரி இளைஞருக்குத் தாம் சித்தி அடைவதற்கு முன் உபதேசம் செய்வித்து வைத்துவிட்டார் என்றும் திண்டிவனத்துக்குத் தகவல் வந்தது.

     இந்த இளைஞர் சுவாமிநாதனின் பெரியம்மாவின் மகன் ஆவார். கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருவிசைநல்லுரைச் சார்ந்தவர். அவரது பெற்றோருக்கு அவர் ஒரே புதல்வர். அவருக்குத் தந்தை சிறுவயதிலேயே மறைந்து விட்டார். சிதம்பரத்தில் சுவாமிநாதனின் குடும்பத்தினருடன் தங்கியிருந்து அவர் வேத பாடசாலையில் பயின்றவர். அதன்பின் மடத்திலேயே அன்னையுடன் தங்கிவிட்டார்.

     சுவாமிநாதனின் பெற்றோர் லக்ஷ்மிகாந்தன் துறவறத்தை மேற்கொண்ட செய்தியை அறிந்த்தும், ஒரளவு மனவருத்தம் அடைந்தார்கள். அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பீடாதிபதி ஆவது மகிழ்ச்சிக்கு உரியதுதான் என்றாலும், சுவாமிநாதனின் அன்னை தனது சகோதரிக்கு ஆதரவாக யாருமே இல்லையே என்று எண்ணி மனம் வருந்தினார்கள். அவளுக்கு ஆறுதல் சொல்ல விரும்பிய மகாலட்சுமி அம்மையாரை அழைத்துக் கொண்டு, குடும்பத்துடன் புறப்பட்ட சுப்பிரமணிய சாஸ்திரிகளுக்கு, திருச்சியில் ஒரு கல்வி மகாநாட்டில் கலந்து கொள்ளும்படி தந்தி மூலம் அழைப்பு வந்து சேர்ந்தது.

     “இரவு நேரத்தில் வண்டியில் தனியாகக் கலவை போவது உசிதமில்லை. உங்களுடன் வருவதற்கு நானும் இல்லை. அதனால் நீங்கள் எல்லோரும் காஞ்சிபுரத்துக்கு ரெயிலில் சென்று, அங்கிருந்து வண்டி மூலம் கலவைக்குப் போய்ச் சேருங்கள்!” என்று சொல்லி விட்டுத் தந்தை திருச்சிக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்.

     சுவாமிநாதன் கலவைக்குப் புறப்பட்டுச் சென்ற யாத்திரையே அவரது வாழ்க்கையில் மகத்தான திருப்பமாக அமைந்தது. அதைப்பற்றி அவரே தான் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

     “என்னுடைய தாய்வழிச் சகோதரர் காமகோடி பீடத்தின் அதிபதியாகப் பட்டம் ஏற்றுக் கொண்டுவிட்ட செய்தியை நாங்கள் திண்டிவனத்தில் தெரிந்து கொண்டோம். அவனுடைய தாயாருக்கு வேறு கதி ஏதும் இல்லை. அந்த நிலையில் தனது ஒரே மகனைத் துறவறம் பூணுவதற்குக் கொடுத்து விட்டதாய், ஆறுதலை நாடி ஏங்கிவிடுவாள் என்பதை எனது அன்னையார் புரிந்து கொண்டு மனம் நெகிழ்ந்து போனார். கலவைக்குச் செல்ல விரும்பிய எனது தாய்க்குத் துணையாக, தந்தையார் வரமுடியாமல் அவருக்குத் திருச்சியிலிருந்து வேலை நிமித்தம் மகாநாட்டுக்கு வரசொல்லி அழைப்பு வந்துவிட்டது. நானும் எனது தாயாரும் சகோதரர்களும் காஞ்சிபுரம் செல்லப் புறப்பட்டோம்.

     காஞ்சிபுரம் வரை ரெயிலில் சென்று, அங்கே இறங்கி மடத்தில் தங்கினோம். அங்கே குமாரகோஷ்ட தீர்த்தத்தில் எனது காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தயாரானேன். கலவையிலிருந்து மடத்தைச் சேர்ந்த வண்டி, ஆசாரிய பரமகுரு சுவாமிகள் சித்தியடைந்த பத்தவது நாள் நடைபெற வேண்டிய மகாபூஜைக்காகச் சாமான்களை வாங்கிச் சேகரிக்கக் காஞ்சிபுரத்துக்கு வந்திருந்தது. அவர்களுடன் வந்த மடத்தைச் சார்ந்த தலைமுறை வழிவந்த மேஸ்திரி பணியாளர் ஒருவர் என்னைத் தனியாக ஒரு வண்டியில் ஏற்றி விட்டார். எனது குடும்பத்தினரைத் தனியாக ஏற்றிக் கொண்டு மற்றொரு வண்டி எங்களைத் தொடர்ந்து வந்தது.

     அந்த எனது பயணத்தில் அவர் என்னிடம் நான் இனி வீடு திரும்ப முடியாத சந்தர்ப்பம் ஏற்படலாம் என்றும், மீதியுள்ள எனது வாழ்நாள் முழுவதும் நான் மடத்திலேயே இருக்க வேண்டிய நிலை உண்டாகலாம் என்றும் கூறினார். எனது தாய் வழிச் சகோதரர் அங்கே பீடாதிபதியாக அமர்ந்து விட்டபடியால், ஒரு வேளை நான் அவருடன் இருப்பதை அவர் விரும்பக்கூடும் என்று நான் அதைப் பொருட்படுத்திக் கொண்டேன். அப்போது எனக்குப் பதின்மூன்று வயது மட்டுமே! அதனால் அந்தநிலையில் நான் பீடாதிபதிக்கு எந்த வகையில் துணையாக இருக்க முடியும் என்று எனக்குச் சற்றும் விளங்கவில்லை.

     வண்டியில் பிரயாணம் தொடர்ந்தபோது அந்த மேஸ்திரி மெதுவாக என்னிடம் பூர்வாசிரமத்தில் எனது சகோதரராக இருந்த ஆசாரியருக்கு கடுஞ்சுரம் ஏற்பட்டு மயக்க நிலை உண்டாகி இருப்பதாகவும், அதனால் நான் கலவைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்படுவதாகவும் கூறினார். என்னைத் திண்டிவனத்துக்கே சென்று அழைத்துவரும்படி உத்தரவாகி இருந்ததாகவும், காஞ்சிபுரத்திலேயே என்னைச் சந்திதுவிட்டபடியால், அப்படியே என்னை அழைத்துக் கொண்டு திரும்புவதாகவும் அவர் கூறினார். நான் சற்றும் எதிர்பாராத இந்த நிகழ்ச்சிகளின் திருப்பம் என்னை அதிர்ச்சி அடையச் செய்துவிட்டது. நான் வண்டியிலேயே மண்டியிட்டு அமர்ந்து, எனக்குத் தெரிந்த இராமமந்திரத்தை மீண்டும் மீண்டும் சொல்லி வழிபடத் தொடங்கினேன். மிச்சமிருந்த பிரயாணம் முழுவதும் அப்படியே கழிந்தது.

     எனது தாயரும் அவரது மற்றக் குழந்தைகளும் கொஞ்சம் காலம் கடந்தே வந்து சேர்ந்தார்கள். தனது சகோதரிக்கு ஆறுதல் சொல்ல வந்த எனது அன்னைக்கு, மற்றவர் ஆறுதல் சொல்ல வேண்டிய தருணம் ஏற்பட்டு விட்டதை அவள் உணர்ந்து கொள்ள நேரிட்டது!”

     காமகோடி பீடத்தின் அறுபத்து ஏழாவது ஆசாரிய சுவாமிகளாகப் பொறுப்பேற்று எட்டு நாட்களே அதில் அமரும்படியான பாக்கியத்தைப் பெற்ற சுவாமிநாதனின் (பூர்வாசிரமத்தில்) தாய்வழிச் சகோதரரும், எதிர்பாராத விதமாகச் சித்தி அடைந்து விட்டார்கள். அவருக்குத் தமது குருவின் எண்ணம் தெரிந்திருந்தது. அதனால் சுவாமிநாதனே தனக்குப்பின் அறுபத்து எட்டாவது பீடாதிபதியாகப் பொறுப்பேற்க மனத்தில் சங்கற்பம் செய்து கொண்டார்கள். பின்னர் சுவாமிநாதனுக்கு முறைப்படி ஆசிரமும் கொடுக்கப்பட்டது.

     இந்த வைபவம் 1907 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி, புதன்கிழமையன்று நடைபெற்றது. அப்போது அவருக்கு வயது பதிமுன்று மட்டுமே! அவர்கள் ஏற்றுக் கொண்ட தீட்சாநாமம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரசுவதி என்பதாகும்.

     சுவாமிகள் அந்தச் சிறு வயதில் துறவு பூண்டு, மிகக் கடுமையான விரதம், தவம், ஆகாரநியமம் அகியவற்றை மேற்கொள்ள வேண்டி இருந்தது. அந்த நிலையில் அவர் வைரக்கியம் பெற்று, தியானம், பூஜை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டியவரானார். அருமையாகத் தமது புதல்வனை வளர்த்த பெற்றோருக்கு இது மனக்கலக்கத்தை அளித்தது. அதைக்கண்ட சுவாமிகள் தாமே அவர்களுடைய மனத்தைத் தேற்றும் விதமாகப் பேசினார்.

     “நீங்கள் ஏன் கலங்க வேண்டும்? எனக்கோ குருநாதரின் அருள் பூரணமாக இருக்கிறது. நான் எனது கடமையைச் செய்து பணியாற்றுவேன். நீங்கள் எனக்கு முழு மனத்துடன் அனுமதி கொடுங்கள்!” என்று வேண்டினார். குழந்தையின் இந்தச் சொற்கள் பெற்றோரின் மனத்தை நெகிழச் செய்தன. ஆயினும் அவர்கள் சுவாமிநாதன் மனம் தளர்ந்து போய்விடக் கூடாது என்பதற்காகத் தங்களைக் கட்டுப் படுத்திக் கொண்டார்கள். தமது புதல்வன் துறவறம் பூண்டு மடத்தில் பீடாதிபதியாகப் பொறுப்பேற்க அனுமதியும் வழங்கினார்கள்.

     இதுவரை சாமிநாதராக விளங்கியவர் முண்டனம், தண்டம், கமண்டலு, காஷாயம் ஆகியவைகளை ஏற்று ஆதிசங்கரரைப் போலவே, பால பருவத்தில் சன்னியாசம் மேற்கொண்டவராக ஒளிவீசி நின்றார். பெற்றோர், உறவினர் என்ற ஆசாபாசம் மறைந்து அந்த உள்ளத்தில் உலகுக்கு வழிகாட்ட முனையும் பொறுப்பை ஏற்கும் கடமை உணர்வே மிஞ்சிநின்றது.

     இளம் வயதிலேயே துறவறம் மேற்கொண்டு, ஆதிசங்கரர் இந்தியா முழுவதும் திக்விஜயம் செய்தார். அன்று இந்துமதம் நாடுமுழுவதும் கொஞ்சம் ஆடிப்போயிந்தது. அதை மீண்டும் உறுதியாக நிலை நாட்ட வந்து அவதரித்தார் ஆதிசங்கரர். அதேபோல இளம்வயதிலேயே துறவறம் மேற்கொண்டு, பாரதம் முழுவதும் அன்னியர் ஆட்சியும் அதன் பாதிப்பும், ஓரளவு மதப்பற்று விலகி நிற்கும் மனப்பான்மையும் தோன்றி இருந்த சமயத்தில், நமது சுவாமிகள் பீடத்தில் ஏறி வழிகாட்ட முன்வந்தார். அந்த அருளாட்சி எண்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் ஆரம்பமாயிற்று. இன்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது.

     விழுப்புரம் என்றால் விழிப்பு ஏற்படும் இடம் என்று பொருள். அங்கே நமக்கெல்லாம் விழிப்புத் தோன்ற அவதரித்தார் சுவாமிகள். வாழ்க்கையின் சாரம் என்ன என்பதை உணரத் தொடங்கிய பால பருவத்தில், சாரத்தில் குருசுவாமிகளின் தரிசனத்தைப் பெற்றார்கள். ஜீவாத்மாவும் பரமாத்மாவும் கலந்து நிற்பதற்கு உரிய தலம் கலவை. அங்கே அவரது புனிதமான துறவற வாழ்வு தொடங்கிற்று. பரமாத்மாவை உணர்ந்து கலந்து நின்ற ஜீவாத்மா, நம்மையெல்லாம் கடைத்தேற்றி வாழ்வளிக்கும் புண்ணியம் செறிந்த தொண்டினைத் தொடங்கிற்று.



ஜகம் புகழும் ஜகத்குரு : காணிக்கை 1 2 3 4