ஜகம் புகழும் ஜகத்குரு - Jagam Pugazhum Jagathguru - எஸ். லட்சுமி சுப்பிரமணியம் நூல்கள் - S.Lakshmi Subramanian Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



4

     “கல்யாணம் என்றால் ஆடம்பரமாகச் செலவழிக்க வேண்டும் என்றாகிவிட்டது. இதைவிட முக்கியமாகப் பிள்ளை வீட்டார் வரதட்சிணையும் சீர்வரிசையும் ஏராளமாகக் கேட்கிறார்கள். அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டமாக இருக்கிற நிலையில், இத்தனை செலவுக்கு ஈடு கொடுத்துச் சேமித்து வைக்கப் பெண்ணைப் பெற்றோருக்கு முடியாமற் போகிறது பணக்கஷ்டம் காரணமாகவே குழந்தைகள் கல்யாணமாகாமல், மாறாத மனக்குறையுடன் நிற்கிறார்கள்...

     பெண்கள் உரியகாலத்தில் கலியாணமாகி கிருகலட்சுமிகளாக இருக்க வேண்டியது சமூக க்ஷேமத்திற்கு ரொம்பவும் அவசியம். இதற்கு ஒரு பெரிய முட்டுக் கட்டையாக இருக்கிற வரதட்சிணைப் பழக்கத்தை நாம் கைவிட்டே ஆக வேண்டும்.

     உங்களை இப்படியெல்லாம் செய்யப் பண்ணுவதற்கு எனக்கு எந்த அதிகார சக்தியும் இல்லை; என்னால் முடிந்தது, ஓர் ஆயுதப் பிரயோகம் பண்ணுகிறேன்; இப்போது ரொம்பப்பேர் கல்யாணப் பத்திரிக்கையில் “ஆசாரியசுவாமிகள் அனுக்கிரகத்தோடு நிச்சயிக்கப்பட்டிருக்கிறதாக” போடுகிறீர்கள் அல்லவா? இனிமேல் வரதட்சிணை வாங்குகிறவர்களும் கொடுக்கிறவர்களும் அப்படிப்பட்ட பத்திரிக்கைகளில் என் அனுக்கிரகத்தோடு நிச்சயித்ததாகப் போட வேண்டாம்!”

     இவ்வாறு சுவாமிகள் தனது அருளுரையில் கொஞ்சம் கடுமையாகவே சொல்லி இருக்கிறார். இந்தப் பழக்கத்தினால் சமூகத்தில் ஏற்படும் சீர்கேடுகள் பற்றிய தீவிரமான கருத்துக்கள், அவருக்கு அந்த நாளிலேயே இருந்திருக்கிறது. அதனால்தான் அண்ணாமலைச் செட்டியார் சொன்னபோது, சுவாமிகள் அதை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி ஆசியும் கூறி அனுப்பினார்.

     கரம்பக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்குச் சுவாமிகள் சென்று கொண்டிருக்கும்போது, அவரை வந்து தரிசித்து வணங்கியவர்களில் முஸ்லீம்களும் பலர் இருந்தனர். அவர்களில் ஒருவர் சுவாமிகளின் பல்லாக்கைத் தொட்டு வணங்கினபடியே, கூடவே வேகமாக நடந்து வந்தார். மூன்று மைல் தூரம் அப்படி அவர் நடந்து வந்ததைப் பார்த்த சுவாமிகள். அவரிடம் “என்ன வேண்டும்? உனக்கு என்ன மனக்குறைவு?” என்று அன்புடன் விசாரித்தார். அந்த முஸ்லீம் அன்பரின் உள்ளம் மடைதிறந்தது போல வெளிப்பட்டது. தனது மனக்குறைகளையெல்லாம் சொல்லி, சுவாமிகள் அவற்றுக்குத் தீர்வு காண ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தான் சுவாமிகளைப் பற்றி இயற்றிய கவிதைகளை எடுத்துக் கூறி மலர்களையும் மரியாதையுடன் கொடுத்தார். அவற்றைப் பொருளுடன் எடுத்துச் சொல்லும்படி சுவாமிகள் சொன்னபோது, அந்தப் பெரியவரின் கண்களில் நீர் ததும்பியது. அவர் கூறியபடியே எடுத்துச் சொல்லி விட்டு, அந்தப் பெரியவர் தழுதழுத்த குரலில் “சுவாமி! இது எனக்குக் கிடைத்த அபூர்வ தரிசனம். இங்கு நான் அல்லாவின் உருவத்தையே கண்டேன். இந்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்!” என்று கூறி விடைபெற்றுக் கொண்டார்.

     சுவாமிகள் சுமார் ஓர் ஆண்டு காலம் நகரத்தார் நாட்டிலும், புதுக்கோட்டை சமஸ்தானத்திலும் விஜயம் செய்தார்கள். அதற்குப்பின் உடையார் பாளையத்துக்கு வருகை தந்தார்கள். உடையார்பாளையம் காமகோடி பீடத்திற்கு மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த குறுநில மன்னர்கள் வாழ்ந்து வந்த இடமாகும். மடம் காஞ்சியிலிருந்து கும்பகோணத்துக்கு மாற்றப்பட்டபோது, அப்போது இருந்த ஆசாரிய சுவாமிகள் உடையார் பாளையத்தில் தங்கி இருந்தார். அங்கு ஆண்டுவந்த பாளையப்பட்டு அதிபர், சுவாமிகள் பிரயாணத்திற்கு வேண்டிய பாதுகாப்பையும் சௌகரியங்களையும் செய்து கொடுத்து, உடையார் பாளையத்திலேயே மடம் சிலகாலம் தங்குவதற்கும் ஏற்பாடு செய்தார்.

     காஞ்சியில் காமாட்சி அம்மனின் தங்க விக்கிரகம் இருந்தது. அதைப் பங்காரு காமாட்சியம்மன் என்று பக்தியுடன் அழைப்பார்கள். அதைப் பாதுகாப்பாகக் காஞ்சியிலிருந்து கும்பகோணத்துக்கு, மடம் மாற்றும் போது கொண்டுவர ஏற்பாடும் செய்யப்பட்டது. இதைச் சிலகாலம் உடையார் பாளையத்தில் வைத்திருந்து, பிறகு தஞ்சைக்குக் கொண்டு சென்று, மேலவீதியில் மன்னரால் கட்டிக் கொடுக்கப்பட்ட ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தார்கள்.

     சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரி இந்தப் பங்காருகாமாட்சியின் பேரருளைப் பெற்றவர். நிறைய கீர்த்தனைகளை அந்த அருளின் அடிப்படையில் உருவாக்கி பாடி இருக்கிறார். அவருடன் காமாட்சி பிரசன்னமாகி, இசையைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டியதாகவும் வரலாறு உண்டு. அத்தகையதோர் சந்திதியைத் தஞ்சையில் நிறுவ, அப்போது இருந்த சுவாமிகள் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார்கள். ஆனால் தஞ்சையிலேயே தங்கி இருக்க மனம் இல்லாமல், கும்பகோணத்தில் மடத்தை அமைக்க முடிவு செய்தார்கள். கும்பகோணத்தில் காவேரியின் தென்கரையில் மன்னரது மந்திரியாக இருந்த டபீர் சந்த என்பவர், அந்தணர்கள் வசிக்கும்படியாக நான்கு வீதிகளை உருவாக்கினார். இதுவே பின்னால் டபீர் தெரு என அழைக்கப்பட்டது. அன்றுமுதல் காமகோடி நிர்வாக ஸ்தானத்தைக் கும்பகோணத்திலேயே வைத்துக் கொண்டது. அன்று முதல் உடையார்பாளையம் ஜமீனின் குறுநில மன்னர்கள் மடத்துக்கு வேண்டிய உதவிகளை அவ்வப்போது செய்து வந்தார்கள்.

     இப்படி உடையார் பாளையத்துக்கும் மடத்துக்கும் ஒரு பக்தி மிகுந்த தொடர்பு இருந்து வந்தது. ஆகையால் சுவாமிகள் அங்கு வருகை தருவதை ஜமீன்தார் ஒரு பெருமை மிகுந்த நிகழ்ச்சியாகவே ஏற்றுக் கொண்டார். சுமார் பதினைந்து நாட்கள் அவரது அரண்மனையிலும் ஆலயத்திலும் சுவாமிகள் தங்கினார். பாதபூஜை, பிட்சை, ஊர்வலம் ஆகியவற்றைச் சிறப்பாக நடத்தி வைத்தார். மடத்துக்குத் தனது காணிக்கையாக, ஓர் யானைக் குட்டியையும், இரண்டு குதிரைகளையும், ஒட்டகத்தையும், பசுக்களையும் அளித்தார். இந்த நல்ல காரியங்களுக்கு நல்ல பலனும் கிடைத்தது. பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் மழையே இல்லாமல் மக்கள் தவிப்புக்கு ஆளாகி இருந்தார்கள். சுவாமிகளின் ஆசியால் நல்ல மழை பெய்து நிலவளமும் நீர்வளமும் பெருகியது.

     சுவாமிகள் திருப்பாதிரிப்புலியூரில் தங்கியபோது அசலாம்பிகை என்ற அம்மையார் அவரைத் தரிசிக்க வந்தார். அவர் சுவாமிகளைப் பூர்வாசிரமத்தில் குழந்தையாக அறிந்தவர். சுவாமிகளின் தந்தையிடம் மாணவியாக இருந்து பாடம் பயின்றவர். இப்போது சுவாமிகளைப் பீடாதிபதியாகக் காணும் போது, அந்த அம்மையாருக்கு அளவு கடந்த பெருமை உண்டாயிற்று. தனது குரு நாதரையே சுவாமிகளிடம் கண்டு மகிழ்ந்தார். சுவாமிகள், காந்தி மகான் சரித்திரத்தைச் செய்யுளாக இயற்றியுள்ளதாகக் கூறி, ஐந்து செய்யுட்களைப் படித்தும் காண்பித்தார். சுவாமிகள் மௌனத்தைக் கடைப்பிடித்திருந்தாலும், அந்த அம்மையாரின் பேரன்பை அருட் பார்வையால் ஏற்று ஆசி வழங்கினார். வடவாம்பலம் என்ற ஊரில், தென் பெண்ணையின் வடகரையில், காமகோடி பீடத்தின் பூர்வாச்சாரியாரின் சமாதி, சரியாகப் பராமரிக்கப் படாமல் இருந்தது. அதைச் சுவாமிகள் அறிந்து, அதைச் சீர்ப்படுத்தவும் தொடர்ந்து முறைப்படி பூஜைகள் நடைபெறவும் ஏற்பாடு செய்தார்கள்.

     பாண்டிச்சேரியில் அப்போது பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது. ஸ்ரீ காமகோடி பீடத்தின் ஆசாரிய சுவாமிகள் அங்கே விஜயம் செய்யும் போதெல்லாம், அரசாங்க மரியாதைகளுடன் வரவேற்பு கொடுப்பது வழக்கம். 1926 ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுவாமிகள் அங்கே விஜயம் செய்தபோது, அதை முன்னிட்டு ஊரே விழாக்கோலம் பூண்டது. அலங்கார வளைவுகள் போடப்பட்டுத் தோரணங்கள் கட்டப்பட்டன. முக்கியமான பதவிகளில் இருந்த பிரெஞ்சு அதிகாரிகள், ஜாதி மத பேதமின்றி, சுவாமிகளை வந்து தரிசித்து மகிழ்ந்தார்கள். ஜகத்குரு என்ற பெயரும் பட்டமும் அவருக்கு இந்த வகையில் முழுவதும் பொருத்தமாக இருந்ததை, பொதுமக்கள் கூறிப் பெருமைப் பட்டுக் கொண்டார்கள்.

     சுவாமிகள் ஈரோட்டிற்கு விஜயம் செய்தபோது இஸ்லாமிய அன்பர் ஒருவர் அவரைத் தரிசித்து வணங்கினார். “சுவாமி! தங்களைப் பற்றி சம்ஸ்கிருத மொழியில் நான் பாடிய சுலோகங்கள் இவை” என்று கூறித் தான் கொண்டு வந்த கவிதைகளை அவரது காலடியில் சமர்ப்பித்தார் அந்த அன்பர். அவற்றை எடுத்துப் பார்த்த சுவாமிகள் வியப்படைந்தார். சம்ஸ்கிருதத்தில் இயற்றிய சுலோகங்களைச் சித்திரத்தினால் வரையப்பட்ட சிவலிங்க உருவத்தில் கட்டங்கள் அமைத்து, அவற்றுக்குள் அடக்கி உருவாக்கி இருந்தார் அவர். சுவாமிகள் அவரிடம் “எப்படி உங்களுக்குச் சம்ஸ்கிருத மொழியில் இவ்வளவு புலமை ஏற்பட்டது?” என்று கேட்டார். “என்னுடைய முன்னோர் அனைவரும் சம்ஸ்கிருத மொழியில் புலமை மிகுந்தவர்கள். அந்த மொழியை என் தந்தையும் நன்கு கற்று எனக்கும் சொல்விக் கொடுத்தார். அவர் எனக்குத் தந்த இந்த மொழிப்புலமையைத் தங்களிடம் காட்டி ஆசி பெற வேண்டும் என்பது என்னுடைய வெகு நாளைய ஆசை” என்று மகிழ்ச்சியுடன் கூறிக் கண்களில் நீர் பெருகி நின்றார் அந்த முஸ்லீம் அன்பர். சுவாமிகள் அவரைப் பெரிதும் பாராட்டி, அதுவரை சம்ஸ்கிருதத்தில் அவ்வளவு தூரம் புலமைத் திறன் வாய்ந்த ஒருவரைத் தான் கண்டதில்லை. என்று கூறி “இதைத் தொடர்ந்து கற்றுத் தேர்ச்சி பெற்று வாருங்கள்” என்று ஊக்கமும் தந்து ஆசீர்வதித்தார்.

     மேட்டூர் அணையை அடைந்து அப்போது நடந்து வந்த அணைக்கட்டு வேலையைப் பற்றி அக்கறையுடன் இஞ்சினீயர்களிடம் விசாரித்தார் சுவாமிகள். தொடர்ந்து மைசூர்ப் பகுதியை ஒட்டிய மலையிலும் ஆவலுடன் ஏறி இயற்கைக் காட்சிகளை அனுபவித்தார்கள். பின்னர் சூலூர் மார்க்கமாகக் கோவைக்கு விஜயம் செய்தார்கள். அங்கே சிருங்கேரி மடத்தில் அவர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மறுநாள் காலையிலிருந்து நண்பகல் வரை பெரிய ஊர்வலமும் நடந்தது. பூஜை, அபிஷேகம் ஆகியவற்றை முடித்து, பிரசாதம் அருளியபோது, தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் சுவாமிகளிடம் உபதேக் மொழிகளைக் கேட்க வேண்டும் என்ற ஆசையை வெளியிட்டார்கள். சுவாமிகளும் அவர்களுடைய விருப்பப்படியே மாலையில் ‘சிவ விஷ்ணு அபேதம்’ என்ற தலைப்பில் சுமார் நான்கு மணி நேரம் எளிய தமிழில் உரை நிகழ்த்தினார்கள். ஆறு மாதங்களாக மழை இல்லாமற் போயிருந்த கோவை நகரில், அதைத் தொடர்ந்து அன்று மாலை நல்ல மழை பெய்து அனைவரையும் மகிழ்வித்தது.

     தொடர்ந்து சுவாமிகள் கேரளத்துக்கு விஜயம் செய்தார்கள். அது ஆதிசங்கரரை உலகினுக்கே தந்து புகழ் பெற்ற இடமாதலால், மக்கள் ஆச்சாரிய சுவாமிகளை வரவேற்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தார்கள். பாலக்காட்டிற்கு விஜயம் செய்த சுவாமிகள் அங்கே ஆசிரமத்தில் தங்கி இருந்தபோது, சீடர்களுடன் மலையாள மொழியில் சரளமாக உரையாடினார்கள். அதைக் கவனித்த பலரும் சுவாமிகளைக் கேரளத்தைச் சேர்ந்த மகான் என்றே எண்ணிக் கொண்டார்கள்! சென்னை வழக்கறிஞர் டிஎம். கிருஷ்ணசாமி ஐயர் தனது பஜனைக் குழுவுடன் சுவாமிகளைத் தரிசித்து, அங்கே திருப்புகழ் பாடல்களைப் பாடினார்கள். அதைக் கேட்டு மகிழ்ந்த ஆசாரிய சுவாமிகள் அவருக்குத் “திருப்புகழ் மணி” என்ற பட்டத்தை அளித்து, சால்வை போர்த்திப் பெருமைப் படுத்தினார்கள். குருநாதரிடமிருந்து கிடைத்த இந்தப் பெருமையை அவர் பெருமையுடன் ஏற்று ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்கள்.

     பாலக்காட்டைச் சேர்ந்த நல்லிச்சேரியில், சுவாமிகள் மகாத்மா காந்தியைச் சந்தித்தார்கள். இருவரும் ஒரு மாட்டுக் கொட்டகையில் தரையில் அமர்ந்து உரையாடினார்கள். மகாத்மாவுக்குச் சுவாமிகளின் எளிய தோற்றமும், அவர் கதர்த் துணியில் காவி உடை தரித்திருந்த பாங்கும் மிகவும் பிடித்திருந்தது. சுவாமிகளுக்குக் காந்தியடிகள் தெய்வப் பற்றுடன் பேசிய விதமும், வெளிப்படையான பேச்சும் மிகவும் பிடித்திருந்தன. சுவாமிகள் சம்ஸ்கிருதத்தில் உரையாட, காந்தியடிகள் இந்தி மொழியில் பேசினார். சுமார் ஒன்றரை மணி நேரம் இருவரும் மனம் விட்டுப் பேசினார்கள். அப்போது. இடையில் சுமார் ஐந்தரை மணி அளவில் உடன் வந்திருந்த ராஜாஜி உள்ளே வந்து “பாபுஜி! உங்கள் உணவு வேளை வந்துவிட்டது!” என்று கூறினார். காந்திஜி மாலை ஐந்தரை மணிக்குள் சாப்பிடவில்லையானால், அப்புறம் இரவு எதையும் சாப்பிடமாட்டார். அதனாலேயே ராஜாஜி அல்வாறு நினைவூட்ட வேண்டியதாயிற்று, ஆனால் காந்திஜியோ உரையாடலை நிறுத்த ஆனால் மனமின்றி “சுவாமிகளிடம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறேன் பார்த்தீர்களா? இதுவே உன்னதமான ஆகாரம்!” என்று கூறி விட்டார். எழுந்து செல்லும் போது அவருக்கு பம்பளீஸ் நார்த்தம்பழம் ஒன்றைக் கொடுத்தார் சுவாமிகள். காந்திஜி வழக்கமான குழந்தைப் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டு “இது எனக்கு மிகவும் பிடித்தமான பழமாயிற்றே” என்று கூறிவிட்டு, விடை பெற்றுக் கொண்டார்.

     கேரளத்தில் சுவாமிகள் தொடர்ந்து குருவாயூர், ஆலப்புழை, திருச்சூர் போன்ற தலங்களில் சுவாமி தரிசனம் செய்து கொண்டு கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தார்கள். வைகைக்கரையில் சோளவந்தானிலிருந்து மூன்று மைல்கள் தொலைவில் உள்ள திருவேடகம் என்ற தலத்தில் வியாசபூஜை செய்வதற்காகத் தங்கினார்கள். இந்தத் தலத்துக்கு ஒரு தனிச் சிறப்புண்டு. திருஞானசம்பந்தர் சமணர்களுடன் வாதம் செய்தபோது “வாழ்க அந்தணர்” என்ற பதிகத்தை எழுதி வைகையில் இங்கு இட்டார். அது நதியின் நீரோட்டத்தை எதிர்த்து நீந்தி வந்து அதன் புனிதத்தை நிரூபித்தது. அதனால் இந்தத் தலத்துக்குத் தனி மகிமை உண்டு. ஞானசம்பந்தர் வந்து அருளிய தலத்துக்கு ஞானசம்பந்தரைப் போலவே குழந்தைப் பருவத்தில் ஞானசித்தி பெற்ற பரமாச்சாரிய சுவாமிகளும் வந்து அருளியது மிகவும் பொருத்தம் அல்லவா?

     சுவாமிகள் அங்கே தங்கியபோது மைசூர் மகாராஜா அவர்களுக்கு ஒரு பெண் யானையைக் காணிக்கையாக அளித்தார்கள். புகழ் பெற்ற இசை மேதை மழவராயநேந்தல் சுப்பராம பாகவதர் சுவாமிகளுக்கு முன்பு மூன்று மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். சுவாமிகள் அதை அனுபவித்துக் கேட்டுப் பொன்னாடை போர்த்திச் சன்மானம் அளித்துக் கௌரவித்தார்கள்.

     மதுரையில் ஆச்சாரிய சுவாமிகள் தங்கி இருந்த போது, தேசபக்தர் தேஜ்பகதூர் சாப்ரூ அவர்களைத் தரிசிக்க வந்தார்கள். “தேசீயக் கட்சிகள் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு மகாநாடு நடத்த விரும்புகிறேன். அதில் நிறைவேறும் தீர்மானங்களைப் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் அளித்து அமைதியான முறையில், இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் போகிறேன். இதற்குத் தங்கள் ஆசி வேண்டும்” என்று வேண்டினார் சாப்ரூ. “அமைதியான வழியில், மக்களுக்குச் சிரமம் ஏற்படாமல், நல்ல முறையில் விடுதலை பெற முயலுங்கள். அப்படிப்பட்ட முயற்சிக்கு என்னுடைய ஆதரவு நிச்சயமாக உண்டு. இந்திய நாடு விடுதலை பெறுவது உறுதி!” என்று கூறி ஆசி அளித்து அனுப்பினார் சுவாமிகள்.

     “எவரிடமும் யுத்தம் செய்யாமல், எது நடந்தாலும் நடக்கட்டும் என்று துணிவோடு, தம் வழியில் கர்மானுஷ்டானங்களைச் செய்து கொண்டு, சீலர்களாக வாழ்கிற அகிம்சா சோல்ஜர்களே இன்று நமக்குத் தேவை. ‘சோல்ஜர்’ என்று ஏன் சொன்னேன் என்றால், அவன்தான் சாகத் துணிந்தவன். அப்படியே இவர்கள் பிராணத் தியாகத்தையும் பொருட்படுத்தாமல் ஸ்வதர்மங்களை அனுஷ்டிக்க வேண்டும். சண்டைபோடுவதில் சோல்ஜர் இல்லை; சாகத்துணிவதிலே சோல்ஜர் போல இருக்க வேண்டும். தங்களது வாழ்க்கையின் தூய்மையினால் தெய்வீகம் பெற்று, பிறர் அனைவரிடமும் காட்டும் அன்பினால் அவர்களது மதிப்பைப் பெற்று விளங்க வேண்டும்” என்று அகிம்சா தத்துவத்தைப் பற்றி அற்புதமாகச் சொல்லுகிறார் ஆசாரிய சுவாமிகள். இந்தக் கருத்தை அன்றே வலியுறுத்தி வந்து, அன்பு வழியில் நாட்டுப்பற்றைக் காட்ட வேண்டும் என்று சொல்லும் மனப்பாங்கு அவர்களுக்கு அப்போது இருந்து வந்தது.

     மதுரை, பழனி, கரூர், திருச்சி வழியாக, புண்ணியத் தலங்களில் ஆலயங்களுக்குச் சென்று தரிசித்தபடி சுவாமிகள் தென் ஆற்காடு மாவட்டத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே தண்டலம் என்ற கிராமத்தில், ஓர் ஏழைக் குடியானவன் தனது சொத்தாக இருந்த சிறு நிலத்தை விற்று, அந்தப் பணத்தைச் சுவாமிகளிடம் காணிக்கையாகக் கொடுக்க விரும்பினான். அவன் அப்படி ஒன்றுமே இல்லாதவனாகப் போய்விடுவதைச் சுவாமிகள் விரும்பவில்லை. அதனால் அவனுடைய கோரிக்கையை மறுத்து, திருப்பி அனுப்பி விட்டார். இருந்தாலும் அவன் தனது நிலத்தை மிராசுதார் ஒருவருக்கு விற்று, அந்தப் பணத்தைக் கொண்டு வந்து சுவாமிகளின் காலடியில் வைத்துவிட்டான். அவனுடைய அன்பையும் பக்தியையும் கண்டு சுவாமிகள் மனம் இளகினார். தாசில்தார் மூலம் புறம்போக்கு நிலத்தில் நான்கு காணி நிலம் அவனுக்கு அளிக்கும்படி ஏற்பாடு செய்தார்கள். அந்த ஏழைக் குடியானவனும் அதை மகிழ்ச்சியுடன் சுவாமிகள் தந்த பிரசாதமாகவே ஏற்றுக் கொண்டான்.

     1927 ம் ஆண்டு, திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையின் போது சுவாமிகள் விஜயம் செய்து தீப தரிசனம் செய்தார்கள். அங்கே ஒருமாதம் தங்கிப் பலமுறை கிரிப்பிரதட்சணம் செய்தார்கள். அங்கே ஆசிரமம் அமைத்துத் தங்கி இருந்த பகவான் ரமணரிடம் சுவாமிகளுக்கு தனியான மரியாதை உண்டு. அவரே எளிய முறையில் ஆன்மீக வழியைக் காட்ட முடியும் என்று, பின்னால் தன்னிடம் ஆசி பெற வந்த பால் பிரண்டன் என்ற ஆங்கிலேயரிடம் சுவாமிகள் கூறி வழிகாட்டினார் என்று வரலாறு கூறுகிறது. சுவாமிகள் திருவண்ணாமலையில் அருணாசலேசுவரரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தார்கள். பின்பு, செங்கம், தீர்த்தமலை வழியாக ஹொகனேக்கல்லுக்கும் சென்று வந்தார்கள். சுவாமிகளுக்கு நீர் வீழ்ச்சியில் ஸ்நானம் செய்வதில் மிகுந்த விருப்பம் உண்டு. தீர்த்தமலையில் காவேரியின் நீர் வீழ்ச்சியில் ஆனந்தமாக நீராடினார்கள். பின்னர் ஹொகேனகல்லுக்கு விஜயம் செய்தபோது, மேகதாட் என்னும் இடத்தில், ஓர் ஆடு தாவித் தாண்டி விடக்கூடிய அளவுக்கு, அகலம் குறைந்து காவேரி ஓடும் அதிசயத்தையும் கண்டு மகிழ்ந்து திரும்பினார்கள்.

     திருவண்ணாமலை விஜயத்தின்போது சுவாமிகள் ஆரணிக்கு அருகில் உள்ள அடையபாளையம் என்ற கிராமத்துக்கும் விஜயம் செய்தார்கள். அது அத்வைத தத்துவத்தை விளக்கிய மகான், சைவப்பற்று மிகுந்த சிலர் அப்பையதீட்சிதர், அதற்குச் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருத்தலம். அந்த மண்ணிற்கு வருகை தருவது சுவாமிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அத்வைத தத்துவத்தை உலகினுக்கே தந்த அவதார புருஷர் ஆதிசங்கரர் அல்லவா? ஆசாரிய சுவாமிகள் கிராம மக்களுக்கு அந்த மகிமையை எடுத்துச் சொன்னார். அப்பைய தீட்சிதரின் பெருமையை விளக்கினார். பிறகு அவர்களிடம் அந்த மகானின் ஜன்ம தின விழாவை ஆண்டுதோறும் கொண்டாடும்படியும், அவர்களுடைய நூல்களைப் பிரபலப்படுத்த முயற்சி எடுக்கும்படியும் அறிவுரை கூறினார்கள்.

     1930 ம் ஆண்டு காஞ்சிப் பெரியவர்கள் செங்கற்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றத்துக்கு விஜயம் செய்தார்கள். பட்சி தீர்த்தம் என்று போற்றப்படும் அந்தத் திருத்தலத்தில் அனைத்திந்திய சாதுமகாசங்கம் சுவாமிகளுக்கு வரவேற்பு அளித்தது. “ஆதிசங்கரர் வழியில் இந்து மதத்துக்கு இணையிலாத தொண்டு செய்து வரும் மகான்” என்று அவரைப் போற்றிப் பாராட்டியது. அதை ஒட்டி அடுத்தமாதம் சுவாமிகள் செங்கற்பட்டுக்கு வந்தபோது, ஊரில் இருந்த பக்த கோடிகள் அவரை வணங்கி மகிழ்ந்தனர். அந்த ஊர் சிவன் கோயிலில் ஒவ்வொரு இரவும் சுவாமிகள் ஆன்மீக உபதேசச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள்.

     பால்பிரண்டன் என்ற ஆங்கிலேயர் இங்குதான் சுவாமிகளைத் தரிசிக்க வந்தார்கள். அவர் அப்போது “அரிய இரகசியங்களைக் கொண்ட ஆன்மீக பாரதம்” என்ற தத்துவ ஆராய்ச்சி நூலை எழுதிக் கொண்டிருந்தார். தென்னிந்தியாவில் அதன்பொருட்டுப் பல இடங்களுக்கும் சென்று வந்தார். சென்னையில் அப்போது தங்கி இருந்த தேசபக்தர் கா.சி. வேங்கடரமணியிடம் தொடர்பு கொண்டார். வேங்கடரமணி ஆங்கிலத்தில் புலமை மிகுந்தவர். தேசப்பற்று மிகுந்து, கிராம மக்களிடம் தேசப்பற்றை வளர்க்கத் தொண்டு செய்து வந்த சிறந்த எழுத்தாளர். அவரைக் காண வந்த பால்பிரண்டன், அவர் மூலமாகச் சுவாமிகளைப் பற்றி அறிந்து கொண்டார். அவருடைய துணையுடன் சுவாமிகளைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார். அவரும் பால்பிரண்டனைச் செங்கற்பட்டுக்கு அழைத்துச் சென்றார்.

     செங்கற்பட்டில் அப்போது சுவாமிகளைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கிடையே ஓர் ஆங்கிலேயர் தரிசனம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்குமோ என்பதுகூட அதிகாரிகளுக்குச் சந்தேகமாகவே இருந்தது. அதனால் வேங்கடரமணி தாமே சுவாமிகளை அணுகி விஷயத்தைச் சொன்னார். “அழைத்து வாருங்களேன். அவர் நமது மதத்தின் தத்துவங்களைப் புரிந்து கொள்வதும் நல்லதுதான்!” என்று கூறி பால்பிரண்டனை வந்து தரிசிக்க அனுமதி கொடுத்ததுடன், அவருடன் உரையாடவும் ஒப்புக் கொண்டார் சுவாமிகள்.

     ஆச்சாரிய சுவாமிகள் பிற மதத்தினரையோ, வெளி நாட்டினரையோ, சந்திக்க மறுத்ததில்லை. அவர்களுடைய நோக்கம் புனிதமானதாக இருக்குமானால் அதை ஊக்குவித்து அதன்மூலம் நமது நாட்டின் புனிதப் பெருமையை மற்றவர்கள் அறியவும் செய்த மேன்மை சுவாமிகளுக்கு உரியது. அந்த உயர்ந்த பண்புக்கு அந்தச் சந்திப்பு ஓர் உயர்ந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. இன்னொரு வகையிலும் அது புகழ் பெற்ற சந்திப்பாக ஆயிற்று.

     சுவாமிகளைத் தரிசிக்க, தட்டில் மலர்கள், பழங்கள், மாலை ஆகியவற்றுடன் வந்து வணங்கினார் பால்பிரண்டன். ஒருகணம் அந்தப் புனிதம் பொங்கும் முகத்தில் வீசிய ஆன்மீக ஒளியையும், தவழ்ந்த அபூர்வ அமைதியையும் கண்டுப் பிரமித்துப் போனார். சுவாமிகளின் கூர்மையான கண்பார்வை அவரை லயிக்கச் செய்தது. பிரமையிலிருந்து விலக முடியாமல் அவரைப் பார்த்த வண்ணம் அமைதியாக நின்று விட்டார் பால்பிரண்டன். இந்த அபூர்வமான சந்திப்பைப் பற்றி அவர் பின்னால் தனது நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

     “என்னுடைய நினைவில் உள்ள மகாபுருஷர்களின் தோற்றங்கள் கொண்ட வரிசையில், சுவாமிகளுக்கு நான் நிச்சயமாக, பெருமை மிகுந்த இடத்தை அளிப்பேன். பிரெஞ்சு மொழியில் ‘ஸ்பிரிசுவேல்’ என்ற சொல் உண்டு. அதன் உண்மைப் பொருளை நான் அங்கே தரிசனமாகக் கண்டேன். அந்தப் பெரிய கரிய விழிகளில் அபூர்வ அழகும் அமைதியும் உறைந்திருந்தது. சிறிய நேரான மூக்கில் இலக்கியமயமான நேர்த்தியைக் கண்டேன். கறுத்த குறுந்தாடியும், முகவாயும், வாயும் சிற்பம் போன்ற உறுதியை எடுத்துக் காட்டின. முற்காலத்தில் மத்திய புராதன நிலையில் வாழ்ந்த மாபெரும் கிறிஸ்துவ மகான்களில் ஒருவரைக் கண்டது போன்ற உணர்வில் நான் மெய்ம்மறந்தேன். என்னைப் போன்ற மேலை நாட்டினர் அந்தக் கண்கள் கனவு காணும் அதிசய நிலையில் இருப்பதாக எண்ணக்கூடும். ஆனால் அங்கே நான் கண்டதும் அதனினும் பன்மடங்கு மேலான ஒரு புனிதப் பார்வை. அது என்னை ஆசிர்வதிப்பதை என்னால் உணர முடிந்தது!”

     சுவாமிகள் பால்பிரண்டனைத் தன்னுடன் உரையாட அனுமதித்தார். சுவாமிகள் தீர்க்கதரிசி என்றும் வரப்போவதை முன்னாலேயே உணர்ந்து சொல்லக் கூடியவர்கள் என்றும் வேங்கடரமணி அவரிடம் கூறி இருந்தார். அதனால் பால்பிரண்டனின் கேள்விகள் பெரும்பாலும் உலகின் எதிர்காலம் பற்றியதாகவே இருந்தது. அவற்றுக்குச் சுவாமிகள் சொன்ன பதில்களோ, அன்றைய நிலைமையைப் பிரதிபலிப்பதாக மட்டும் இன்றி, இன்றைய சூழ்நிலையையும் அன்றே எடுத்துக் காட்டுவதாகவும் இருந்தது. சுவாமிகளுக்குத்தான் எத்தகைய தீர்க்க தரிசனம்? அந்த நாளிலேயே ஆழ்ந்த அனுபவத்தில் நிலைத்து நின்ற அறிவு! அதில் அரசாட்சி, தற்காப்பு, ஆன்மீகம், மனோதத்துவம் ஆகிய பலவும் இடம் பெற்றிருந்தன. சுவாமிகள் சகல கலைகளையும் கற்றுணர்ந்த ஞானி என்பதைப் பால்பிரண்டன் அன்று புரிந்து கொண்டார்.

     பால்பிரண்டன் : உலகத்தின் இன்றைய அரசியல் நிலையிலும், பொருளாதார நெருக்கடியிலும் எத்தகைய நடைமுறை மூலம் தீர்வு காணலாம் என்று எண்ணுகிறீர்கள்?

     சுவாமிகள் : இந்த நிலை அவ்வளவு எளிதாகவோ, விரைவாகவோ சீர்பட்டு விடாதே? பெரிய நாடுகள் ஏராளமான செலவில் ஆயுதங்களைத் தயாரித்து வருகின்றன. அது நிறுத்தப்பட வேண்டும்.

     பால் : உலகில் ஆயுத ஒழிப்புப் பேச்சுகள் நடைபெற்று வருகின்றனவே? அதனால் ஏதாவது பயன்?

     சுவாமிகள் : அதனால் மட்டும் பயனில்லை. போரிடும் மனப்பான்மை ஒழிய வேண்டும். இல்லாவிட்டால் மனிதர்கள், ஆயுதங்கள் கிடைக்காவிட்டாலும், கம்புகளை ஏந்திச் சண்டை போடுவார்கள்.

     பால் : பின் இதற்கு என்னதான் வழி?

     சுவாமிகள் : ஆன்மீகத்துறையில் ஒருநாடு இன்னொரு நாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். பணக்காரர்கள் ஏழைகளைப் புரிந்து கொண்டு நல்லெண்ணத்துடன் செயற்பட வேண்டும்.

     பால் : எங்களுடைய நாட்டைப் போன்றவற்றில் உள்ளவர்களுக்கு, இந்த மனப்பான்மை எப்படி ஏற்படும்?

     சுவாமிகள் : அது சாத்தியமே. நம்மை ஆளும் கடவுள் சக்தியை நம்பி ஈடுபட வேண்டும்.

     பால் : கடவுள் என்று ஒருவர் இருந்தாலும் அவரை அடைவது எளிதான காரியம் அல்லவே?

     சுவாமிகள் : மனிதர்களிடையே அவர் அன்பு வடிவமாகவே இருப்பார். அன்புள்ள இடத்தில் கடவுளை நாம் காணலாம்.

     பால் : இன்று உலகில் அமைதி இன்மையும், அக்கிரமங்களும் மலிந்திருக்கின்றன. கடவுள் இதைப்பற்றிக் கவலைப் படுவதாகத் தோன்றவில்லையே?

     சுவாமிகள் : பொறுமையுடன் இருந்தால் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதைக் காணலாம். அக்கிரமங்களும், துன்பங்களும், நாத்திக உணர்வும் மிக அதிகமாகப் பரவும் போது தெய்வீக சக்தி வாய்ந்த மனிதன் ஒருவன் இந்த உலகில் தோன்றுவான். கடவுள் சக்தியுடன் அவன் உலகத்தைக் காப்பாற்ற முன்வருவான்.

     பால் : நமது காலத்திலேயே அப்படி ஒரு தெய்வீக, மனிதர் தோன்றுவார் நினைக்கிறீர்களா?

     சுவாமிகள் : ஆம். இந்த நாட்டிலேயே அவ்வாறு தோன்றலாம். அத்தகைய ஓர் அவதாரத்துக்கு அவசியமும் ஏற்பட்டு விட்டது. உலகில் அஞ்ஞான இருளும் வேகமாகப் பரவி இருக்கிறது.

     பால் : உலக மக்கள் இன்று மிகவும் கேவலமான நிலையை அடைந்து விட்டதாகத் தாங்கள் நினைக்கிறீர்களா?

     சுவாமிகள் : இல்லை. ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் ஆத்ம சக்தி இருக்கிறது. அந்தச் சக்தி அவனை முடிவில் கடவுளிடம் கொண்டுபோய் விட்டு விடும். இந்த உண்மை மேலை நாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும் ஒன்றேதான். உலகெல்லாம் ஓர் உயர்ந்த கொள்கை பரவ வேண்டும். தான் பார்ப்பதும் அனுபவிப்பதும் தான் உண்மை என்ற நினைப்பு மாறி, மனித சக்திக்கு மேல் தெய்வீக சக்தி ஒன்று இருந்து இயக்குவதை உணர வேண்டும்.

     பின் பால் பிரண்டன் சுவாமிகள் காமகோடி பீடத்தில் அமர்ந்து ஆற்றிவரும் தொண்டுகளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அதற்குப் பிறகு தான் கடைப்பிடிக்க வேண்டிய மார்க்கத்தைப் பற்றிக் கேட்டார். அதற்கு உரியவராக ஒரு குரு நாதரை அடைவது பற்றிக் குறிப்பாகக் கேட்டார். அதில் தனக்கு வெற்றி கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்றும் கேட்டார்.

     பால் : என் சொந்த முயற்சியில் பலன் கிடைக்காவிட்டால் தங்கள் உதவியை நாடலாமா?

     சுவாமிகள் : நான் ஒரு பொது ஸ்தாபனத்தின் தலைவன். இதன் நிர்வாக காரியங்களில் நான் ஈடுபட வேண்டியவனாக இருக்கிறேன். ஆகையால் தனிப்பட்ட உங்களுக்கு நேரம் ஒதுக்கக்கூடிய ஒருவரை நீங்கள் குருநாதராக நாடுவதே நல்லது.

     பால் : உண்மையான ஓர் ஆசாரியன் கிடைப்பது அரிது என்றும், அதிலும் என்னைப் போல ஒரு மேல் நாட்டவரை அவர்கள் எற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் கூறுகிறார்களே?

     சுவாமிகள் : உலகில் உண்மை இருக்கிறது. அதை நாம் காணவும் முடியும்.

     பால் : அப்படிப்பட்ட ஓர் ஆசாரியனிடம் என்னை அனுப்பி வைப்பீர்களா?

     சுவாமிகள் : அப்படிப்பட்ட இருவரை நான் மனத்திற் கொண்டுள்ளேன். அவர்களில் ஒருவர் இந்த நாட்டின் தென்பாகத்தில் அடர்ந்த காடுகளில் இருந்து வருகிறார். அவரை வெகு சிலரே கண்டிருக்கிறார்கள். இதுவரை ஐரோப்பியர் எவரும் அவரைக் கண்டதில்லை. ஓர் ஐரோப்பியரை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்துவிடக்கூடும்.

     பால் : மற்றொருவரைப் பற்றி அறிந்து கொள்ள நான் ஆவலாக உள்ளேன் சுவாமி!

     சுவாமிகள் : அவர் தமிழ் நாட்டிலேயே இங்கிருந்து சமீபத்திலேயே இருக்கிறார். அவர் ஒரு சீரிய ஞானி.

     பால் : அவரைப் பற்றிய விவரங்களை நான் தெரிந்து கொள்ளலாமா?

     சுவாமிகள் : அவரை மகரிஷி என்பார்கள். வட ஆற்காடு ஜில்லாவில், திருவண்ணாமலை என்னும் ஊரில் அவர் வசித்து வருகிறார். அவரை அடைய மேலும் விவரங்களை வேண்டுமானால் தருகிறேன்.

     பால் : தங்களுக்கு மிகவும் சிரமம் கொடுத்து விட்டேன். என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு விடை தருகிறீர்களா?

     சுவாமிகள் : திருவண்ணாமலைக்குப் போவீர்கள் என்று நினைக்கிறேன்.

     பால் : என்னுடைய தென்னிந்திய பயணம் இன்றுடன் முடிகிறது. நாளை திரும்ப முடிவு செய்து விட்டேன். இந்த நிலையில் என்ன செய்வது?

     சுவாமிகள் : உங்கள் பயணத் திட்டத்தை மாற்றிக் கொள்ளுங்கள். திருவண்ணாமலையில் மகரிஷி ரமணரைச் சந்தித்த பிறகே செல்லுங்கள். நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். உங்கள் விருப்பம் யாவும் நன்கு நிறைவேறும்.

     பால் பிரண்டன் சுவாமிகளின் விருப்பப்படியே ரமண மகரிஷியைத் தரிசிப்பதாக வாக்களித்தார். பின்னர் மனமின்றிச் சுவாமிகளிடம் விடைபெற்றுக் கொண்டார். அன்று மாலையிலும் அவர் செங்கற்பட்டை விட்டுப் போகவில்லை. ஊரைச்சுற்றிப் பார்த்துவிட்டு அங்கே உள்ள ஆலயத்துக்குப் போனார். அங்கே சுவாமிகள் அமர்ந்து சில உபதேச உரைகளை ஆற்றிக் கொண்டிருந்தார். அதை அவர் கூர்ந்து கவனித்தார். சுவாமிகளின் அழகிய உருவம் அவரைக் கவர்ந்தது. ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையுடன் அவரது சொற்பொழிவைக் கவனிக்கும் மக்களைக் கண்டு ஓரளவு பொறாமைகூட உண்டாயிற்று.

     பின்னர் செங்கற்பட்டிலிருந்து மோட்டார்காரில் சென்னைக்குத் திரும்பினார். வழியில் வேங்கடரமணி அவரிடம் “ஆசாரிய சுவாமிகள் ஐரோப்பிய எழுத்தாளர் ஒருவருக்குப் பேட்டி அளித்தது இதுவே முதல் தடவை. நீர் உண்மையில் ஓர் அதிருஷ்டசாலி. சுவாமிகளின் ஆசி உமக்குப் பரிபூரணமாகக் கிடைத்திருக்கிறது” என்று சொன்னார். அதைக்கேட்டு அவர் மனம் உறுதி அடைந்தது. சுவாமிகள் சொன்னபடி திருவண்ணாமலைக்குப் போவது என்று தீர்மானம் செய்து கொண்டார். அன்று இரவு வீட்டில், அவரைக் காணவந்த சுப்பிரமணியம் என்பவர் திருவண்ணாமலையிலிருந்து வந்த அன்பர். அவரை வரவேற்ற போது “நாம் இருவரும் திருவண்ணாமலைக்குப் போகப் போகிறோம். எனது பிரயாணத் திட்டத்தை மாற்றிக் கொண்டு விட்டேன்!” என்று சொன்னார். அந்த நண்பருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி உண்டாயிற்று.

     பால்பிரண்டன் சிறிது நேரம் படுத்து உறங்கினார். அந்த அறையில் இருட்டு பரவி இருந்தது. ஏதோ ஒரு காந்த சக்தி தன்னை இழுப்பது போல உணர்ந்து, கண்களை விழித்துக் கொண்டார். அப்போது மணி இரண்டே முக்கால். கால் மாட்டில் அவருடைய படுக்கையை ஒட்டி ஓர் ஒளி தெரிந்தது. அவர் உடனே எழுந்து அமர்ந்து அந்த ஒளியைக் கவனித்தார். அவர் மனத்திற் பரபரப்பு ஏற்பட்டது. அது சுவாமிகளின் உருவம்!

     சுவாமிகள் அங்கே எப்படி வந்தார்? அந்த நிலையில் அவருக்கு முன்னால் ஏன் காட்சி தந்து கொண்டிருக்கிறார்? எல்லாம் பிரமையா? அவருடைய சிந்தனையும் கற்பனையுமே அப்படி ஓர் உருவத்தைச் காட்டுகிறதோ? அவர் பிரமிப்புடன் எழுந்து அமர்ந்தார். அந்த உருவத்தைச் சுற்றிலும் ஒளி படர்ந்து நின்றது. அது செங்கற்பட்டில் அவர் தரிசித்த சுவாமிகளின் உருவமேதான்! அதில் சந்தேகமே இல்லை.

     கண்களை இறுக மூடிக் கொண்டார். கண்ணிமைக்குள் இருட் பாய் விரிப்பில் சுவாமிகளின் அதே ஒளி பொருந்திய முகம் தெரிந்தது. கருணையையும் அன்பையும் மறுபடி அவரிடம் காட்டவே சுவாமிகள் வந்திருக்கிறார் என்று புரிந்தது. அவருக்கு முடிவாக மனத்தெளிவை அருளவே, சுவாமிகள் அங்கே தோன்றித் தரிசனம் தருகிறார் என்பதும் புலனாயிற்று. கைகளைக் கூப்பிக் கொண்டு வணங்கினார். கண்களில் நீர் சுரந்தது.

     சுவாமிகளின் இதழ்களில் புன்னகை தோன்றியது. அன்புடன் அவருக்கு ஆசி கூறினார். அன்பு கனிந்த குரலில் “தாழ்மையுடன் இரு, நீ வேண்டியவை எல்லாவற்றையும் அடைவாய்!” என்று கூறியதைப் போல உணர்ந்தார். அவர் வணங்கிக் கொண்டிருந்தபோதே சுவாமிகளின் உருவம் மறைந்து விட்டது. அவர் மனம் விழித்துக் கொண்டது. அவரால் தூங்க முடியவில்லை. அன்று பகலில் சுவாமிகளைத் தரிசித்து உரையாடியதையும், சுவாமிகள் இரவில் அவருக்கு முன் தோன்றித் தரிசனம் கொடுத்து அருள்வாக்கு கூறியதையும், எண்ணியபடியே படுத்திருந்தார். அந்தச் சந்திப்பு அவருக்கு ஓர் மறக்க முடியாத அனுபவமாகத் தோன்றிற்று.

     பால் பிரண்டன் அதைத் தொடர்ந்து திருவண்ணாமலைக்குப் போனார். அங்கே ரமண மகரிஷியைத் தரிசித்தார். அவரிடம் அபூர்வமான ஆன்மீக அனுபவங்களையும் பெற்றார்...

     காமகோடி பீடத்தின் அதிஷ்டான ஸ்தலமாக விளங்குவது காஞ்சிபுரம். அது ஆதிசங்கரர் காமாட்சி அம்பிகையின் ஆலயத்தில் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்துள்ள திருத்தலம். மேலும் ஆதி சங்கரர் காஞ்சி காமாட்சி ஆலயத்தில் தான் சர்வக்ஞ பீடம் ஏறி, உட்புறத்தில் சித்தி அடைந்ததாக வரலாறு கூறுகிறது. அந்தக் காஞ்சி மாநகருக்கு விஜயம் செய்யச் சுவாமிகள் புறப்பட்டார். முதன்முதலாக அவர் அங்கே வருவதைப் பொது மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.



ஜகம் புகழும் ஜகத்குரு : காணிக்கை 1 2 3 4



புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247