உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முன்னுரை சுமார் இருபத்துநான்கு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கே வந்திருந்த பிற நாட்டு நல்லறிஞர்கள் பலரிடமும் மனம் கலந்து பேசினேன். தமிழ் நாட்டுப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், பாகவதமேளா ஆகியவற்றில் தனி அக்கறை காட்டினார், ரஷிய நாட்டுப் பெண்மணி பஃப்ரினா. தமிழகத்தின் தலைசிறந்த இசைக் கருவியான நாதஸ்வரத்தில் ஈடுபாடு கொண்டு அதன் நுட்பங்களைக் கேட்டறிந்து கொண்டிருந்தார். ருமேனியாவைச் சேர்ந்த டெருட்ரியஸ். தமிழக இசையைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்து எழுதி இருந்தார், ஸ்வீடன் நாட்டு அறிஞர் திரு. டீகில். திராவிட மொழிகள், சமயங்கள் ஆகியவை பற்றிய ஆராய்ச்சியில் திளைத்து ஊறி இருந்தவர், இத்தாலிய மாது ஜோன்புள்ளோ. இவர்கள் அனைவரிடமும் நான் தெரிந்து கொண்ட உண்மை, அவர்களுடைய ஆர்வத்துக்கும் ஆராய்ச்சிக்கும் பின்புலமாக விளங்கியது, தஞ்சை சரசுவதி மகால் கலைக் களஞ்சியம் என்பதுதான். அந்த அரும் பெரும் கலைத் தொண்டுக்கு உரியவராக இருந்த தஞ்சை மன்னர் சரபோஜியிடம் அப்போதே எனக்கு அளவு கடந்த மரியாதை ஏற்பட்டது. அங்கே உள்ள மோடி ஆவணக் குறிப்புகள், தஞ்சை மராத்திய அரசர்களைப் பற்றிப் பேராசிரியர் ஹிக்கி எழுதிய நூல், திரு.ரெங்கசாமிராவ் தொகுத்த தஞ்சாவூர் மாவட்டக் கையேடு, திரு.பியர்ஸன் எழுதிய ‘பேராயர் ஷ்வார்ட்ஸின் நினைவுகள்’ ஆகியவை சிறந்த கலை மன்னரைப் பற்றி நுட்பமான செய்திகள் பலவற்றைக் கூறுகின்றன. ராஜா சரபோஜி தனது ஆட்சிக்கு உதவிய அதிகாரிகளையும், உடன் இருந்த ஆங்கிலேய அலுவலர்களையும் கூட கலைரசனையில் ஈடுபடுத்தியவர். தனது காசிப் பயணத்தையும் கூடக் கலைச் சேவைக்கு ஏற்ப அமைத்துக் கொண்டவர். கலைக்காகத் தமது வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்டவர். தஞ்சை சரசுவதி மகால் கலைக் களஞ்சியம் அவருடைய தொண்டின் பெருமையை இன்றும் எடுத்துச் சொல்லுகிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் நூற்றெட்டுச் சிவலிங்கங்களை நிறுவிய பெருமை, தேவேந்திரக் குறவஞ்சி போன்ற நாடக நூல்களை எழுதிய சிறப்பு, வீணைகுப்பையர், ஜகந்நாத பக்தகோஸ்வாமி போன்ற இசைக் கலைஞர்களை ஆதரித்த பெருந்தன்மை, கிரிராஜகவி, முத்துசாமிக் கவிராயர், திரியம்பகபட், சிவக்கொழுந்து தேசிகர் போன்ற கவிஞர்களை ஊக்குவித்த கலைஞானம் ஆகிய பல போற்றத் தகுந்த பண்புகளுக்கும் உரிய பெருந்தகை, கலைவள்ளல் சரபோஜி. ஒரு வேலி நன்செய்நிலம் 165 ரூபாய்க்கு விற்ற, கலம் நெல்லின் விலை பதினோரணாவாக இருந்த பொற்காலம் அவருடையது. மக்கள் குறையின்றி காவிரித்தாயின் மடியில் பயிர் செய்த பொன்விளையும் நாடாகத் தஞ்சைத் தரணி விளங்கிய காலம் அவருடையது. அந்தக் காலக்கட்டத்தில் தான் திருவையாற்றில் தியாகராஜ சுவாமிகளும், திருவாரூரில் முத்துசாமி தீட்சிதரும், தஞ்சையில் சியாமா சாஸ்திரியாரும், தஞ்சையில் பரதநாட்டியத்துக்கு வடிவம் தந்த பொன்னையா, சிவானந்தம், வடிவேலு சகோதரர்களும் வாழ்ந்து இசையையும் நடனத்தையும் செழிக்கச் செய்தார்கள். அந்தப் பொற்காலத்து நிகழ்ச்சிகளைப் பின்னணியாக வைத்து, தஞ்சையில் நாடகம் பயில வந்த கேரளத்துப் பெண்மணி புவனமோகினியைப் பற்றி இந்தச் சரித்திரப் புதினத்தைப் படைத்திருக்கிறேன். தஞ்சை மண்ணில் வளர்ந்து செழித்த இசை, நடனம், நாடகம், தெருக்கூத்து போன்ற கலைகள் இதன் பின்னரங்கில் வண்ணக்கோலமாக மிளிர்கின்றன. தஞ்சை மண்ணின் இந்தக் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் வானதி பதிப்பக உரிமையாளர் திருநாவுக்கரசு அவர்கள். திருவையாற்றில் தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்பவர். திருவாரூரில் தீட்சிதர் விழாவில் முனைந்து ஈடுபட்டுப் புத்தகம் வெளியிடுபவர். தமிழக நுண்கலைகளில் தனி ஈடுபாடு கொண்ட கலைச்செல்வர் அவர். இந்த அரிய நாவல் அவருடைய முயற்சியால் புத்தக வடிவில் வெளிவருவது தனிப் பொருத்தம் என்றே நான் கருதுகிறேன். புதிய கண்ணோட்டத்தில் இந்தச் சரித்திரப் புதினத்தை எழுதும்படி என்னைப் பணித்த ஆசிரியர் மணியனுக்கும், இந்தப் புத்தகத்தை அழகாக வெளியிட்டு உதவிய வானதி திருநாவுக்கரசு அவர்களுக்கும், இந்த நாவல் வெளியிடப்படும் தருணத்தில் எனது இதயங்கனிந்த நன்றியை எடுத்துரைக்கக் கடமைப்பட்டுள்ளேன். தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் அறிஞர் பெருமக்கள், கலைஞர்கள், கோடிக்கணக்கான கலைஞர்கள் ஆகியோர் இந்த நாவலின் நயமிகுந்த கலைப் பின்னணியைப் பாராட்டி வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த நூலைச் சமர்ப்பிக்கிறேன். எஸ். லட்சுமி சுப்பிரமணியம் எம். 89/2, பெசன்ட் நகர், சென்னை - 90. 8-12-91 புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|