![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
32. சிவாஜிக்கு அறிவுரை
தில்லைத்தலம் போலே - சொல்லப்புவி மீதினில் தெய்வத் தலங்களுண்டோ - நாளும் சொல்லும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றி ஒன்பது தூயகலை நிறை பாத்திரம் எங்கும் போய் வருமோர் கலைமாத்திரம் ஆகவாயிரமாம் சிவக்ஷேத்திரம். - அருணாசலக் கவிராயர் நடராசப் பெருமாள் ஆனந்தக் கூத்தாடும் தில்லையம்பதி விழாக்கோலம் பூண்டிருந்தது. கேளிக்கைகள் எங்கும் பூத்து வழிந்த வண்ணம் இருந்தன. முந்தைய நாள் இரவே நாடகங்களும் கூத்துகளும் தீவர்த்தி வெளிச்சத்தில் நடந்தன. சிதம்பரம் ஆயிரம்கால் மண்டபத்தில் கவியரங்கம் நடைபெற்றது. இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திருவிடைமருதூர் ராமதாசர் இந்துஸ்தானி இசையைப் பாடினார். தோடி சீதாராமையா தோடி ராகத்தை இசைத்து மூன்று மணி நேரம் பாடினார். குப்புசுவாமி ஐயாவின் சிருங்காரச் சுவை கொண்ட பதங்களுக்கு ரமாமணியின் நடனம் சந்நிதித் தெரு மேடையில் நடந்தது. இரங்கநாதகவியின் மீனாட்சிக் கல்யாணம் நாடகமும் நடிக்கப் பெற்றது. சுதண்டி மகாகவி, சரபோஜி மன்னரின் காசியாத்திரை நிகழ்ச்சிகளைப் பற்றிய வருணனையை, இலக்கியப் பேருரையாக நிகழ்த்தினார். அரசரை தர்மவான் என்றும் கருணைக் கடல் என்றும் பாராட்டினார். அரசரின் காசிப் பயணத்தை ‘திவ்யதேச யாத்திரை’ என்னும் நூலாக எழுதப் போவதாகக் கூறினார். இரவு முழுவதும் மக்கள் கூட்டம் கூட்டமாய் நடந்து கொண்டிருந்தார்கள். எங்கும் விளக்குத் தூண்களில் பந்தங்கள் எரிய விடப்பட்டு, இரவு நேரம் பகல்போலக் காட்சி அளித்தது. சுலக்ஷணா பல்லக்கில் அமர்ந்து சிதம்பரம் நகரத்தை வலம்வந்து சுற்றிப் பார்த்தாள். நகரின் கோலாகலக் காட்சிகள் அவளைப் பெரிதும் கவர்ந்தன. ஆயினும் உடன் இருந்து அனுபவிக்கப் புவன மோகினியைப் போன்ற ஒரு தோழி இல்லையே என ஏங்கினாள். சிவாஜி தனது தங்கையுடனும், அரசு அதிகாரிகளுடனும் நடராசப் பெருமானைத் தரிசித்தான். அம்பல் மேடையில் அமர்ந்து அர்ச்சனையைக் கண்டு மகிழ்ந்தான். தீபமேற்றி சிதம்பர ரகசியப் பின்னணியைத் தில்லை அந்தணர் காட்ட, தரிசித்து மெய்ம்மறந்தான். ஓதுவாரின் தேவாரப் பதிகங்கள் ஒலிக்கக் கேட்டு இன்புற்றான். தில்லை ஆலய வாசற் கோபுரத்தில் செதுக்கப்பட்டிருந்த நாட்டிய முத்திரைகளை சுலக்ஷணாவுக்கு காட்டி விளங்கச் செய்தான். இருவருக்கும் அந்த வேளையில் புவன மோகினியின் நினைவு வந்தது. தோழி என்ற அளவில் அவள் வர இயலாததை எண்ணி வேதனைப்பட்டாள் சுலக்ஷணா. அவ்வளவு பேர் சுற்றிலும் இருந்தும் தனிமையில் அவளுடன் இருந்து அந்த நுட்பமான நடன முத்திரைகளைக் காட்டி மகிழும் இன்பத்தைக் கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தான் சிவாஜி. புவனாவின் நினைவு அவன் மனத்தில் எங்கே போனாலும் சுழன்று சுழன்று வந்தது. வாழ்க்கையில் இளமைக் காதலுக்கு எவ்வளவு வலிமை என்று எண்ணி எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்து போனான். இரவு தூங்கும் போதும் புவனாவின் நினைவாகவே இருந்தது. புற உலகம் கரைந்து கனவுலகில் மிதந்தான். அவன் இதயத்தில் புவனாவின் பேச்சும் சிரிப்பும் நட்சத்திரப் பூக்களாகச் சொரிந்தன. அவனுடைய கனவில் அவள் அழகு சிந்தும் எழில் நங்கையாக, அங்க நெளிவுகளையும் அசைவு நளினங்களையும் காட்டி நடனமாடினாள். ஏதோ ஒரு மாயத்தில் கட்டுண்டதைப் போல அவன் அதில் மயங்கி நின்றான். அந்த உணர்வில் அனுபவித்த இனிமை மறுநாள் விழாவிற்கு வரும்போதும் அவன் இதயத்தில் படிந்து நின்றது. சிதம்பரம் நகரத்தின் எல்லையில் சரபோஜி மன்னரை வரவேற்க விழாப் பந்தலும் மேடையும் அமைக்கப்பட்டிருந்தன. இருபுறமும் தோரணங்கள் கட்டிய சாலையில் யானைகளும் குதிரைகளும் அலங்கார முகபடாம் அணிந்து வரிசையாக நின்றன. வேனிற்காலமாதலால் சாலை நெடுகிலும் தண்ணீர் இறைத்துக் குளுமைப்படுத்தி வைத்திருந்தார்கள். சரபோஜி மன்னர் தேவியருடன் மண்டப அமைப்பில் வந்து அமர்ந்தார். லெப்டினன்ட் கர்னல் வில்லியம் பிளாக் பர்ன், ரெசிடெண்ட் துரை, இளவரசர் சிவாஜி ஆகியோர் மன்னரிடம் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்கள். பீரங்கிகள் முழங்க இளவரசரின் கையை ரெசிடெண்ட் துரை பிடித்து மன்னர் கையில் ஒப்படைத்தார். அப்போது எட்டு குண்டுகள் முழங்கின. மன்னர் வில்லியம் பிளாக்பர்ன் துரைக்கும், ரெசிடெண்ட் துரைக்கும் வைர, தங்க அணிகளைப் பரிசாக வழங்கினார். சிவாஜிக்கு இரத்தினமாலை சூட்டி மகிழ்ந்தார். இளவரசர் வாளை உருவித் தந்தையை வணங்கி அடிபணிய, அரசர் அதை ஏற்று மரியாதை தெரிவித்தார். கேரளத்திலிருந்து வந்த கலெக்டரும், மக்லோப் துரையும் மன்னர் சுவாதித்திருநாள் அனுப்பி இருந்த தந்தப் பேழையைப் பரிசாக அரசரிடம் சமர்ப்பித்தார்கள். கொடியேற்றிய யானையில் இளவரசர் முன் செல்ல தொடர்ந்து திறந்த சாரட்டில் மன்னரின் ஊர்வலம் வந்தது. சிதம்பரம் நகரை அடைந்ததும் அரசர் இங்கிலாந்து தேசத்து குதிரையில் சவாரி செய்து வந்தார். பாரசீகர்களும் கில்லேதார்களும் தொடர்ந்து குதிரைகளில் வந்தனர். பின்னர் பல்லக்குகளில் தேவிமாரும் இளவரசியாரும் வந்தனர். விழாவை ஏற்பாடு செய்த வஜராத்மா பாபுராவ், அமிருதராவ் இங்களே ஆகிய இருவருக்கும் மன்னர் பரிசளித்து, விருது கொடுத்துப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். விழாவின் போது இளையராணி அகல்யாபாய் மகிழ்ச்சியில் திளைத்துப் போயிருந்தாள். சிவாஜியும், சுலக்ஷணாவும் இளமையின் மலர்ச்சி பெற்று அழகுறத் தோற்றமளித்ததைக் கண்டு அவளுடைய உள்ளம் பூரித்துப் போயிருந்தது. மகளை அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள். மகளை ஆசி கூறி பரிவுடன் தடவிக் கொடுத்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள். அவ்வளவு பேரிடையேயும் அவளுடைய கண்கள் புவனாவைத் தேடிய வண்ணம் இருந்தன. அவள் வராததே அகல்யாவுக்குப் பெருமகிழ்ச்சியாக இருந்தது. தனி மாளிகையில் அரச குடும்பத்தினர் தங்கினார்கள். யமுனாபாய் அகல்யாபாயும் மகளுக்கு வாங்கி வந்திருந்த பட்டுச் சேலைகளையும் அணிகலன்களையும் காட்டி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். அரசருடன் பயணத்தில் உடன் வந்தவர்களுடைய குடும்பத்தினர் தேவியரை வந்து தரிசித்து மலர்மாலைகளையும், மஞ்சள் குங்குமத்தையும் கொடுத்துச் சென்ற வண்ணம் இருந்தனர். இரவு நடராஜ தரிசனமும் அரச குடும்பத்தினருக்கு ஏகாந்தமாக ஏற்பாடு செய்யப்பட்டது. நடராசப் பெருமானுக்கும் சிவகாமி அம்மையாருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. திருவெழுந்தூரிலிருந்து வந்திருந்த நாயனக் கலைஞர்கள் இசை மழை பொழிந்தனர். அனைவரும் மாளிகைக்குத் திரும்ப நெடுநேரம் ஆயிற்று. நாள் முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளின் அலுப்பில் அயர்ந்து தூங்கி விட்டார்கள். வைகறைப் பொழுதில் கண்விழித்து சிவாஜி உப்பரிகைக்கு வந்து நின்றான். அங்கே அந்த வேளையிலேயே நீராடி, நீறணிந்து, மன்னர் தியானத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு அவனுக்கு வியப்பு மேலிட்டது. மன்னரின் அருகே அமர்ந்து அவர் கண் திறந்து பார்க்கக் காத்திருந்தான். கங்கை மென்புனல் படிந்து, காசி விசுவேசுவரரை தரிசித்து, கயையில் முன்னோருக்கு கடன்களை முடித்து, அமைதியாகத் திரும்பிய அரசரின் முகத்தில் ஏற்பட்டிருந்த மெருகும், தனிக்களையும் அவனை அதிசயிக்க வைத்தன. வைகறைப் பொழுதின் புள்ளினங்களின் கூவலும், இளங்காற்றின் குளிர்ச்சியும், ஆலயமணியின் ஓசையும் அவனுடைய மனத்தில் அபூர்வமானதோர் நிறைவை ஏற்படுத்திற்று. அரசர் கண் திறந்து பேசும் நேரத்துக்காக அவனுடைய உள்ளம் விழிப்புடன் காத்திருந்தது. அரசர் கண் திறந்து பார்த்ததும் சிவாஜி தனது காலடியில் உட்கார்ந்திருந்ததை உணர்ந்தார். இளவரசனை அன்புடன் ஆசிகூறி, தலையைப் பரிவுடன் தடவிக் கொடுத்து மகிழ்ந்தார். கருணை உள்ளம் கண்களில் ஒளியாக மிதந்தது. மகனின் இளமைப் பெருமையில் திளைத்தது. ஆசையுடன் சிவாஜியைத் தட்டிக் கொடுத்தார். இருவரும் எழுந்து உப்பரிகையில் உலாவிய வண்ணம் பேசினார்கள்... மன்னர் தனது காசியாத்திரை அனுபவங்களைக் கூறினார். வழிநெடுகச் சேகரித்த அரிய நூல்களைப் பற்றிக் கூறினார். தஞ்சைக்கு அனுப்பியிருந்த அபூர்வமான செடி கொடி மரங்களைப் பற்றி குறிப்பிட்டார். தஞ்சையில் கடலோரப் பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படுவதற்குரிய திட்டத்தையும் சூசகமாக உணர்த்தினார். ஆட்சியைப் பற்றியும் மக்களைப் பற்றியும் விசாரித்தார். பேசி முடித்ததேபோல ஒரு கணம் அவருடைய குரல் அடங்கி நின்றது. சிவாஜியை அருகே இழுத்து ஆசையுடன் அணைத்துக் கொண்டபடி, “இப்போது நான் ஒரு தந்தையாக எனது அருமை மகனுடன் பேசப் போகிறேன்” என்றார். அந்த அன்புப் பார்வையும், இளகிய குரலும், புன்சிரிப்பும் சிவாஜியை மனம் நெகிழச் செய்தன. “சொல்லுங்கள் தந்தையே! எதுவானாலும் கேட்கவும் தங்கள் அன்புக் கட்டளையை நிறைவேற்றி வைக்கவும் காத்திருக்கிறேன்!” என்றான் சிவாஜி. “நீ இப்படிச் சொல்லுவாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆயினும் அடுத்த சில மாதங்களில் நடக்க இருப்பதையும், அது பற்றிய எனது திட்டங்களையும் உன்னிடம் கூற விரும்புகிறேன். இளவரசர் என்ற முறையில் நீ அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஆசை!” என்று உணர்ச்சி மிகுதியால் கம்மிய குரலில் சொன்னார் சரபோஜி. அவர் கூறப்போவதை மிகுந்த ஆவலுடன் கேட்கக் காத்திருந்தான் சிவாஜி... “நமது அரசகுல வழக்கப்படி பெண்கள் பூப்படைவதற்கு முன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதன்படி சுலக்ஷணாவுக்கு மிக விரைவில் திருமணம் செய்விக்க விரும்புகிறேன். அவள் இன்னும் குழந்தைப் பருவத்தினாள் அல்லள். ஆனால் அவளுடைய இனிய ஆசைகளில் குறுக்கிடவும் நான் விரும்பவில்லை. திருமணம் செய்துவிட்டால் அவளுக்குத் தேவையான பாதுகாப்பு கிடைத்துவிடும்.” “சுலக்ஷணாவைக் கேட்டீர்களா அப்பா? அவள் என்னென்னவோ கற்பனையில் ஈடுபட்டிருக்கிறாளே!” “கற்பனையெல்லாம் வாழ்க்கையில் உண்மையான உருவம் எடுக்க முடியாது. அதுவும் நம்முடைய பெண்டிர் கட்டுப்பாட்டுடனும் காவலுடனும் வாழப் பழகியவர்கள். அதனால் அவளை நான் வெளியே போய்வர, உன்னுடைய துணையோடு அனுமதித்ததையும் உன் தாயினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சுலக்ஷணா தனது பொறுப்புகளை உணரும்படி செய்வது பெற்றோரின் கடமை. அத்துடன் உனக்காகவும்...” “எனக்காகவா?” “ஆம் சிவாஜி! சுலக்ஷணாவைக் காட்டிலும் உன்னைப் பற்றிய பொறுப்புகள் இன்னும் சிக்கலானவை. நீ வருங்கால அரசன். என்னிடமிருந்து அரசாட்சியை ஏற்கப் போகிறவன். சரித்திரத்தில் நீ இடம்பெற வேண்டியவன். அதற்குரிய தலைவனாக உன்னை ஆக்கி, நான் பொறுப்புக்களைக் கொடுத்து விட வேண்டும். உனக்கு மணம் செய்விக்க வேண்டியதும் எங்களுடைய கடமை!” “அப்பா! அதற்கு என்ன இப்போது அவசரம்?” “அவசரம் இல்லையாயினும், அது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. நீ விரும்பி ஏற்கக்கூடிய ஓர் அழகான பெண்ணை உரிய முறையிலேயே தேர்ந்தெடுப்போம். வா! நாம் புறப்படலாம். நன்றாக விடிந்து விட்டது!” என்று எழுந்தார் சரபோஜி மன்னர். மனத்துள் பல்வேறு சிந்தனைகளும் அலைமோத சிவாஜி உடன் சென்றான். தான் விரும்பி ஏற்கக் கூடிய ஓர் அழகான பெண்ணையே தேர்ந்தெடுப்பேன் என்று மன்னர் கூறியது அவனுக்கு நம்பிக்கையை அளித்தது. தன்னுடைய விருப்பத்தை மெல்ல மெல்லச் சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தான். ***** மன்னர் காசியாத்திரையைத் தொடர்ந்து இராமேசுவரத்துக்குப் போய்வர விரும்பினார். தொடர்ந்து சுமார் நாற்பது நாட்கள் யாத்திரைக்குப் பின் வைகாசி மாதம் இரண்டாம் வாரம் அரண்மனைக்குத் திரும்ப நாள் குறிக்கப்பட்டது. கங்கை நீர்க் காவடிகளை இராமேசுவரத்துக்குக் கொண்டு சென்று இராமநாதபுரம், நவபாஷாணம், உத்தரகோசமங்கை ஆகிய தலங்களில் தரிசனம் செய்து, முக்தாம்பாள்புரம், மோகனாம்பாள்புரம், திரௌபதாம்பாள் புரம் வழியாக நகர்ப் பிரவேசம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது. திரும்பும் வழியில் முக்தாம்பாள்புரம் சத்திரத்தில் தங்குவதென்றும் தீர்மானம் செய்து நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்டது. இந்த யாத்திரைக்குச் செல்லும் வழி, தங்குமிடங்கள் ஆகியவற்றுக்கு முன்னோடியாக ஹர்காராவை அனுப்பி விவரங்களைச் சேர்த்துக் கொண்டார்கள். முன்னோர்களின் வழிபாட்டிற்காக, தேவியரும் உடன் செல்ல வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. திருவையாறு வழியாகத் தஞ்சையை வந்தடைந்துவிட்டு உடனே இராமேசுவர யாத்திரையை மேற்கொள்வதாகத் திட்டமிடப்பட்டது. இராமேசுவர யாத்திரை முடிந்து மன்னர் அரண்மனைக்குத் திரும்பி வந்து சேரும் நாளும் நேரமும் குறிக்கப்பட்டது. திரும்ப அவர் கோட்டைக்கு வந்து சேரும் சமயம் காலபைரவரின் சமாராதனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இரவில் நகர அலங்காரத்திற்கும் அரண்மனையில் விருந்திற்கும் தயார் செய்யும்படி உத்திரவிடப்பட்டது. மன்னர் திருவையாறு வழியாகத் தஞ்சை வந்து சேர்ந்தார். அரண்மனையில் தோரணம், வாழைமரம் கட்டிப் பூரணகலசம் வைத்து அலங்காரம் செய்தார்கள். இரவில் அரண்மனைக்கு விளக்குகள் பொருத்தப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. மாடியில் நாற்காலிகள் போட்டு, சபை சித்தமாக இருந்தது. மலர்கள், நெட்டி, சந்தனம், வெற்றிலை, பன்னீர் ஆகியவற்றுடன் வரவேற்க அதிகாரிகள் காத்திருந்தனர். பொதுமக்களிடையே புலவர்கள், கலைஞர்கள், மதகுருமார்கள் ஆகியோரும் வந்திருந்தனர். அரசரும், அரசமாதேவியரும் அரண்மனையில் நுழைந்த போது மங்கள வாத்தியம் முழங்கிற்று. தூபதீபங்கள் ஏற்றப்பட்டன. சுமங்கலிகள் மஞ்சள் நீர் தெளித்தார்கள். தீபத்தட்டுடன் பெண்கள் வாசலில் வந்து வரவேற்றார்கள். அவர்களிடையே புவனமோகினியும் இருந்தது, இளையராணி அகல்யாபாயின் கண்களை உறுத்திற்று! புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|