உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
22. உள்ளம் சிலிர்த்தது!
எங்கே மாதர்களின் கையில் கமலம் லீலையுடன் தாங்கப்படுகிறதோ, கூந்தலில் கொடி மல்லிகை சேர்க்கப்பட்டிருக்கிறதோ, லோத்திரமலர்களின் மகரந்தம் படிந்து முகத்தில் வெண்மையான காந்தி வீசுகிறதோ, கொண்டையில் வாடாமல்லிகை சூடப்பட்டிருக்கிறதோ, அழகிய காதில் சீரிஷ மலர்கள் சூடப்பட்டிருக்கின்றனவோ, முன் வகிடில் உள்வரவைக் குறிக்கும் குங்குமம் கொழுந்தாகக் கிளை பிரிந்து நிற்கிறதோ, அந்த அழகு பூமியான அளகாபுரிக்கு விரகதாபத்தால் வருந்தும் எனக்காகத் தூது செல்வாய்! - காளிதாசன் ‘மேகதூதம்’ சுப்பராய ஓதுவார் ஆடல்வல்லான் அம்பலத்தரசன் நடராசப் பெருமானின் திருஉருவத்துக்கு முன் வந்து அமர்ந்து கொண்டார். ஐந்து முகங்கள் கொண்ட குத்துவிளக்கிறகுத் திரியிட்டு நெய்த்தீபம் ஏற்றப்பட்டிருந்தது. கணபதிக்கு வாத்திய முழக்கத்துடன் பூஜை நைவேத்தியங்கள் செய்த பிறகு, புவன மோகினியை அழைத்தார் ஓதுவார். “இந்த உலக முழுமையையும் சரீராபிநயமாகவும், நான்கு வேதங்கள், ஆறு சாத்திரங்கள், பதினெண் புராணங்கள் ஆகியவற்றைச் சொல்லபிநயமாகவும், சந்திரன், நட்சத்திரங்கள் முதலியவற்றை ஆசார்யபிநயமாகவும், தானே சாத்வீகபிநயமாகவும் எழுந்தருளியுள்ள ஈசுவரனைப் பிரார்த்தனை செய்து கொள் குழந்தாய்!” என்று சொல்லி புவன மோகினியை வணங்கச் செய்தார் அவர். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து நிமிர்ந்து கொண்டு, இரண்டு பாதங்களையும் ஒரு சேர வைத்து நிமிர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் சிகர முத்திரைகளாக்கி மார்பில் நிறுத்தி, கால்கள் இரண்டையும் உரமாகத் தட்டி, பிறகு இரு கைகளையும் கொண்டு பூமியைத் தொட்டு, நின்று நிமிர்ந்து வணங்கச் செய்தார். “குழந்தாய்! உனது தாய் கேரள நாட்டில் அரசவையில் நடனமணியாக விளங்குபவள். அவளுடைய வேண்டுகோளின்படி, பரதநாட்டியக் கலையை உனக்கு பயிற்றுவிக்க, மன்னர் எனக்குக் கட்டளை இட்டிருக்கிறார். ஏற்கெனவே ஓரளவு நடனக்கலையை நீ உனது தாயின் மூலம் அறிமுகம் செய்து கொண்டிருப்பதால், மூன்று ஆண்டுகளில் உனக்கு நான் இந்தக் கலையைப் பயிற்றுவிக்க விரும்புகிறேன். இந்த அற்புதமான கலையை அதன்பின் நீ உன் தாயின் ஆசியுடன் மேன்மேலும் வளர்த்துக் கொள்ளலாம். தொல்காப்பியர் காலத்தில் எட்டாக இருந்து பின்னர் ஒன்பதாக வளர்ந்த நவரசங்களையும் உணர்ந்து நீ ஆட வேண்டும். பத்து அடவுகளையும் அதன் பிரிவுகளையும் நீ பயில வேண்டும். அபிநயம் என்பது ஒலியாலான சொல்லற்றது. அந்த அபிநயமொழியை உனது எழிற்கைகளும், முக பாவங்களுமே உணர்த்த வேண்டும். கலைத் தெய்வமான கூத்தபிரானையும், தமிழ்த்தாயையும் மனத்துள் வணங்கி நீ பயில வேண்டும். தெய்வீகமான இந்தக் கலையைக் கற்றுக் கொள்ளும் உள்ளத்தில், மற்ற உணர்வுகளுக்கு இடந்தராமல் திடசித்தத்துடன், சித்த சுத்தியுடன் ஈடுபட வேண்டும். இந்த அற்புதமான கலைப்பணியை இறைவனுக்கே அர்ப்பணித்து, அவனருளாலே அவன் தாள் வணங்கி, இந்த நாட்டியானந்தத்தின் நயத்தால் அனைவரும் மகிழ்ச்சியும், மன அமைதியும் பெற நீ தொண்டு செய்ய வேண்டும் என நான் ஆசி கூறுகிறேன்” என்று சொல்லி முடித்தார் ஓதுவார். பின்னர் தனது மகன்களாகிய பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகிய நால்வரையும் அறிமுகம் செய்து வைத்தார். அனைவரையும் வணங்கி, தாயை மனத்துள் எண்ணி வணங்கி, குருநாதரைத் தாள் தொட்டு வணங்கி, நடனப் பயிற்சியைத் தொடங்கினாள் புவனமோகினி... திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி ஆலயத்தில், அறிதுயில் கொண்ட பெருமாளைத் தரிசித்து வணங்கிக் கொண்டிருந்தாள் சித்ரசேனா. ‘இன்றுதான் நடனப்பயிற்சி தொடங்கும் நாள். இந்த முகூர்த்த நேரத்தில் தான் என் மகள் புவனமோகினி, அந்த அருங்கலையைப் பயில ஆரம்பிக்கப் போகிறாள். அவளுக்குக் கலைச்செல்வம் குறைவின்றிக் கிடைக்க அருள்புரிய வேண்டும் சுவாமி!’ என்று பிரார்த்தனை செய்து கொண்டாள் சித்ரசேனா. ஆலயத்திலிருந்து திரும்பும் வழியெல்லாம் அவளுடைய மனம் அந்தச் சிந்தனையிலேயே லயித்திருந்தது. அவள் மன அரங்கத்தில் புவனமோகினி ஆடிக் கொண்டிருந்தாள். அவளுடைய செவிகளில் சலங்கை ஒலி கேட்ட வண்ணம் இருந்தது. அவளுடைய பாதங்கள், தஞ்சையில் தனது மகள் கற்றுக் கொள்ளும் பரத லட்சணங்களைக் கற்பனை செய்து துடித்தபடியே அசைந்தன. அவளுடைய விரல்கள் ஹஸ்தவினி யோகங்களை எண்ணி முகிழ்த்தும் பிரிந்தும் பலவித கற்பனை ரசனையில் ஈடுபட்டன. பத்மநாபசுவாமியை வணங்கி, மகாராஜா சுவாதித்திருநாள் இயற்றிய கீர்த்தனைகள் நெஞ்சில் அலைபுரண்டன. அதை மனத்தில் எண்ணியும், வாயால் பாடியும், அவர் முன்பே ஆடிக் காட்டிய நினைவுகளும் மன அரங்கில் ஊர்வலமாக வந்தன. கூடவே அன்று தன்னிடம் அரசர் எச்சரித்துக் கூறிய சொற்களும் நினைவிற்கு வந்தன. ஆலய வாசலுக்கு வந்து வண்டியில் அமர்ந்த பின்னும், அந்த எச்சரிக்கையின் நினைவால் நெஞ்சு குலுங்கிற்று. பத்மநாப சுவாமியின் ஆலய கோபுரத்தை நிமிர்ந்து நோக்கி வணங்கி, “சுவாமி! எனது மகள் அனாவசியமான சபலங்களிலிருந்து மீளத் தாங்கள் தாம் காக்க வேண்டும். ஒருநாள் அவள் இங்கே கலையரசியாகத் திரும்பி வருவாள். அப்போது தங்கள் திருச்சந்நிதிக்கு அவளை அழைத்து வந்து வணங்கச் செய்கிறேன்! புவனத்தையே மோகினியாகக் காத்த பெருமாளே! என்னுடைய மகள் புவன மோகினியையும் தாங்கள் தாம் காக்க வேண்டும்!” என்று வேண்டிக் கொண்டாள். அவள் மன அசைவைப் பிரதிபலிப்பதே போல, வண்டியும் அசைந்து அசைந்து சென்றது... அன்று பொங்கல் திருநாள்... தஞ்சை மண்ணில் காவேரியின் அருளால் பொன்னாக விளைந்த நெற்கதிர்களை, உழவர் மக்கள் அறுவடை செய்த பின், இயற்கையையும், இறையருளையும் நினைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாட முற்பட்டிருந்தார்கள். கிராமங்களிலிருந்து வண்டிகளில் வந்த உழவர்கள் கரும்பும், மஞ்சளும், வாழைக்குழையும், ஏழுவகைக் காய்கறிகளுமாக வண்டியில் வந்து கடைவீதியில் இறங்கி விற்பனை செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள். ராஜவீதியில் ‘பொல்’லென்று ஜனக்கூட்டம் விரிந்திருந்தது. சாலையின் இருபுறமும் தொங்க விடப்பட்டிருந்த ஆடைகளின் நேர்த்தி கண்ணைக் கட்டி நிறுத்திற்று. வெவ்வேறு ஜாதிக்குதிரைகளில் இளைஞர்கள் சென்ற வண்ணம் இருந்தார்கள். நான்கடி தண்டிகையிலிருந்து பத்தடிப் பல்லக்கு வரையில் வகை வகையான வாகனங்கள் குலுங்கிக் குலுங்கிச் சென்றன. அண்ணனின் அனுமதியுடன் பல்லக்கு ஒன்றில் கடைவீதிகளின் அழகைப் பார்க்க வந்திருந்தாள் சுலக்ஷணா. சீனப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருந்த கடையின் வாசலில் புவன மோகினி நிற்பதைக் கண்டதும் பல்லக்கை நிறுத்தச் சொன்னாள். துணைக்கு வந்த சேவகனிடம் சொல்லி, அவளை அழைத்து வரச் செய்தாள். இளவரசியை எதிர்பாராத வண்ணம் சந்தித்த வியப்பில், புவன மோகினியின் விழிகள் அழகாய் மிரண்டு அடங்கின. கடைவீதியில் தன்னை அவ்வாறு அழைத்துப் பேசும் தைரியம், அரசிளங்குமரிக்கு வந்துவிட்ட அதிசயத்தை எண்ணித் திகைத்துப் போனாள். பேசவும் வாய் இணங்கவில்லை. “என்ன புவனா? ஏன் அப்படித் திகைத்துப் போய்ப் பேசாமலேயே நின்று விட்டாய்? நாட்டியம் கற்றுக் கொள்பவர்கள் நயனமொழியில் தான் பேச வேண்டும் என்று உனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா?” என்று புன்னகையுடன் கேட்டாள் சுலக்ஷணா. “இல்லை சுலக்ஷணா! திடீரென்று என்னை இப்படி அழைத்ததால் திகைத்துப் போனேன். எனக்கு இந்த ஊரில் யாரையும் தெரியாது. எதையும் வாங்கியது கிடையாது. அதனால் விழாக்கோலம் பூண்டு நிற்கும் இந்த ராஜவீதியில் நடப்பதே பிரமிப்பாக இருக்கிறது. அதிலும் இங்கே ராஜகுமாரியிடம் நின்று பேசுவது என்றால் இன்னும் பிரமிப்பாகவே இருக்கிறது!” என்று கூறித் தன் முல்லை அரும்புப் பற்கள் பளீரிடச் சிரித்தாள் புவனா. “என்னுடன் வாயேன்! அரண்மனைக்குப் போகலாம். இன்று என்னுடன் தங்கிவிடேன்!” என்றாள் சுலக்ஷணா கெஞ்சும் குரலில். “வேண்டாம் சுலக்ஷணா! நான் அப்படி உன்னுடன் வருவது சரியல்ல! மேலும் நான் ஓதுவாரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டு வந்திருக்கிறேன். அதனால் நான் திரும்பிப் போக இயலாவிட்டால் அவர் கவலைப்படுவார். நாளைக்கு எனக்கு நாட்டியப்பாடம் இல்லை. நீ ஒரு காவலாளியை அனுப்பி வைக்க முடியுமானால், நாளை மாலை நான் வந்துவிட்டுத் திரும்பிவிடலாம்” என்றாள் புவனா. “அப்படியே ஆகட்டும்! நாளை மாலை நான்கு மணி அளவில் ஒரு காவலாளி, உன்னுடைய நாட்டிய மண்டபத்திற்கு வருவான். நீ தயாராக இரு!” என்று கூறிவிட்டு அவளுடைய கையைப் பற்றி விடைபெற்றுக் கொண்டாள் சுலக்ஷணா. மறுநாள் அந்தப்புரத்துக்கு சிவாஜி வருவதாக இருந்தது. சங்கராந்தியை முன்னிட்டு நடைபெறும் அரண்மனைப் பணியாளர்கள் விழாவில் இளவரசரும் பங்கு பெறுவதாக இருந்தது. அதைச் சொன்னால் புவனா வரக்கூடும் என்று எண்ணினாள் சுலக்ஷணா. ஆனால் அதே சமயம் அப்படி வந்து சந்திக்க புவனா தயங்கக்கூடும் என்று சந்தேகமும் கூடவே எழுந்தது. அதனால் அதை அவள் குறிப்பிடவில்லை. மறுநாள் மாலை சுலக்ஷணாவிடமிருந்து காவலாளி வந்துவிட்டான். ஓதுவாரிடம் இளவரசியார் அழைத்து வரக் கூறியதாகச் சொல்லி உத்தரவும் பெற்று, புவனாவைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து விட்டான். அரண்மனையின் பெரிய வாயிலை ஒட்டிய பூந்தோட்டத்துக்கு வந்ததும், புவன மோகினி ஒரு கணம் நின்றாள். சிறிது நேரம் பூந்தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவதாகவும், அதுவரையில் காவலாளியை குதிரைகள் கட்டப்படும் லாயத்தின் அருகே இருக்கும்படியும் கூறிவிட்டு, நந்தவனத்துக்குள் நுழைந்தாள் அவள். அழகான மலர்களின் வாசம் மனத்தை மயக்கியது. பூங்கொடிகளும் செடிகளும் நிறைந்திருந்த பகுதியின் நடுவில் மலர்த்தடாகம் ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் கட்டப்பட்டிருந்த படிகளில் ஆங்காங்கே அலங்காரமான மாடங்களில் தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. தடாகத்தில் அல்லி மலர்கள் நிமிர்ந்து தலைகாட்டி இதழ் விரிய முயன்று கொண்டிருந்தன. நிர்மலமான நீலவானத்தில் புள்ளினங்கள் ஒளி வீசிப் பறந்தன. நாரைக்கூட்டங்கள் மாலைப் பொன்னொளியில் விசிறிப் பறந்தன. அவற்றின் நிழல் அமைதியின் நீர்ப்பரப்பில் அழகாக விழுந்தது. அதன் இடையே அல்லி மலர்கள் இதழ் விரிக்கத் தொடங்கிய நிலையில் அசைந்தாடின. அந்தக் காட்சியின் இனிமை அவளைக் கவர்ந்து இழுத்தது. ஒரு மலரையாவது பறித்துக் கையில் வைத்து அழகு பார்க்கலாம் என்று ஆவலுடன் தடாகத்தின் படியில் இறங்கினாள். ஒன்று, இரண்டு, மூன்றாவது படியில் கால் சறுக்கிற்று. வழுக்கி நீரில் விழுந்து விடாமல் தன்னைச் சமாளித்துக் கொண்டாள். இருப்பினும் கருங்கற்படியில் உராய்ந்து கணுக்காலில் இரத்தம் பெருகிற்று. அதில் படிந்த கால் கொலுசு உறுத்திற்று. படிக்கட்டில் அமர்ந்து கொலுசைக் கழற்ற முயன்றாள். வலியில் நெற்றிப் புருவம் சுருங்கிற்று. பயத்தால் மார்பகம் விம்மி அடங்கி மூச்சு வாங்கிற்று. உடல் வியர்த்து விறுவிறுத்தது. “புவனா? நான் உனக்கு உதவட்டுமா?” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள் அவள். அவளுக்குப் பின்புறம் மிக அருகில் நின்று கொண்டிருந்தான் சிவாஜி. அவள் பதில் சொல்லுமுன் படிக்கட்டில் சுற்றுக் கீழே அமர்ந்து கொண்டு, கால் கொலுசை அவனே கழற்றிவிடத் தொடங்கினான். அவன் அப்படி அருகில் அமர்ந்ததும், கால்களைத் தொட்டதும், அவளுடைய வெட்கத்தைத் தூண்டிற்று. அதுவரை அவள் அறிந்திராத ஓர் உணர்வு மேனியெங்கும் பரவி அவளை மெய்சிலிர்க்க வைத்தது. “வேண்டாம் இளவரசே! என்னுடைய பாதங்களைத் தொடுவது பிசகு அல்லவா? அதுவும் என்னுடைய கால் கொலுசைத் தாங்கள் தொட்டுக் கழற்றலாமா?” என்று துடிதுடித்து சிவாஜியின் கையைப் பற்றிக் கொண்டாள் புவனா. என்ன செய்கிறோம் என்று உணராமல் அவசரத்தில் அவனுடைய கைவிரல்களைப் பற்றி விட்டதை எண்ணி மறுகணமே உடல் விதிர்விதிர்த்துப் போனாள். ஆனால் இளவரசனோ பாதங்களைப் பற்றிய கையையும் விடவில்லை; கைவிரல்களுடன் கலந்த கையையும் விடவில்லை. எழுந்து விலக மனம் இல்லாதவனாக அவளுடைய முகத்தையே கூர்ந்து கவனித்தபடி சிலையாக அமர்ந்துவிட்டான். அவ்வாறு மயங்கிய குரலில் சிவாஜி, “வயது வடிவம் இரண்டிலும் ஒத்து உன்னுடைய நட்பு ரமணீயமாக இருக்கிறது புவனா!” என்று புன்னகையுடன் கூறினான். அவளை அப்படிச் சீண்டுவதும் அவனுக்கு ஒரு விளையாட்டாகவே இருந்தது. ஆனால் புவனாவோ அதுவரை அனுபவித்திராத வினோதமான ஓர் உணர்வு தனது மனத்தைக் கவ்விக் கொள்வதை உணர்ந்தாள். அதை மேலும் அனுபவிக்க ஓர் ஆசை உள்ளத்தில் கள்ளத்தனமாக எட்டிப் பார்த்தது. கூடவே அப்படி அரசகுமாரனுடன் தனித்து நிற்கும் அனுபவமும் அவள் பயத்தைத் தூண்டிற்று. காலை உதறிக் கொண்டு எழுந்து நின்றாள். அங்கிருந்து ஓடிவிட முயன்றாள். சிவாஜியோ அவளைப் பின் தொடர்ந்தபடி, “புவனா! உன்னுடைய கொலுசு என் கையில் இருக்கிறது! அது உனக்கு வேண்டாமா?” என்று அவளைக் கனிவுடன் அழைத்தபடி பின் தொடர்ந்து வந்தான். பயத்தில் பெருமூச்சுவிட்டு அவளுடைய மார்பு படபடத்தது. பாதங்களில் ஒன்றின் கொலுசு மட்டும் ரகசியமாய் முணுமுணுத்து ஒலிக்க ஓடத் தொடங்கினாள். தலைகுனிந்தபடி எதையும் பாராமல் அங்கிருந்து அப்படி அவள் ஓடிவிட முயன்ற போது, அவளை யாரோ பிடித்துத் தடுத்து நிறுத்துவது புரிந்தது. வியப்பும் அதிர்ச்சியும் மேலிட அவள் தலை நிமிர்ந்தாள். “புவனா! அண்ணன் தரும் கொலுசையும் வாங்கிக் கொண்டு ஓடலாமே!” என்று புன்னகையுடன் கேட்டபடி தனது கைகளால் புவன மோகினியின் இடையை வளைத்துப் பிடித்தபடி நின்றாள் சுலக்ஷணா! புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|