24. மலர்ந்த உள்ளம்

     கணை வென்ற கண் மடவார் புனல் கலவித்துளை தோறுந்
     துணை மெல்லடி படியும் புனல் தோய்ந் தோமென நடையின்
     பிணை யன்ன முலை தோய்ப்புனல் பெற்றோமென முலையின்
     இணை யுன்னிய நேமிக்குரு கினமுங்களி கூறும்.

          - பேரூர்ப்புராணம் : திருநகரப் படலம்

     பொருள்: பெண்கள் புனலாடுந்தோறும், அவர்கள் அடியிற்பட்ட நீரில் தோய்ந்தோம் என்று, அவர்கள் நடையினால் பிணைபட்ட அன்னப்பறவைகளும், மார்பில் படிந்த நீரைப் பெற்றோம் எனச் சக்கரவாகப் பறவைகளும் களிப்பு மிகும்.

     சாரட்டு வண்டி மனோராவை நெருங்கிக் கொண்டிருந்தது. சாளரத்தை மறைத்த பட்டுத் துணியை விலக்கிப் பார்த்த வண்ணம், ஆவலில் கண்கள் விரிய, ஒவ்வொரு காட்சியையும் கவனித்தபடி வந்து கொண்டிருந்தார்கள் சுலக்‌ஷணாவும் புவன மோகினியும். எதிரே அமர்ந்து வந்த சிவாஜி எதையும் வெளியே பார்க்கவில்லை; தனது தங்கையின் புறம் திரும்பவும் இல்லை. அவன் பார்வை புவனாவின் மீதே படிந்திருந்தது.

     நீராடி உலரவிட்ட கூந்தலை அவள் பின்னிக் கொள்ளவில்லை. அருவி போன்ற கூந்தல், தந்தம் கடைந்தது போன்ற முதுகில் சாகசமாக அலைந்தது. கேரளத்துப் பாணியில் இடையில் பாவாடையும் மேலே கச்சும் மட்டுமே அணிந்திருந்தாள் அவள். அந்தப் பொன்னிற மேனிக்குத் தங்கக் கரையிட்ட துகில் எல்லை வகுப்பது போல அமைந்தது. கன்னத்தில் கைவிரல்கள் படிய அவள் கவனித்தபோது, பெரிய தாமரை மலரை சின்னத் தண்டு விரிந்து தாங்குவது போல இருந்தது.

     சட்டென்று உள்ளே திரும்பிப் பார்த்த புவனா, சிவாஜி தன்னையே பார்ப்பதை உணர்ந்ததும், நாணிப் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள். அந்த வெட்கத்தைக் கலைக்க, சிவாஜி மனோரா கட்டடத்தைப் பற்றி வருணிக்கத் தொடங்கினான்.

     “இந்தக் கட்டடம் ‘கபோதிகா’ என்ற புறாக்கள் வந்து தங்கும் கூண்டு அமைப்பைக் கொண்டது. அதன் உள்ளே கிரேக்க, ரோமானியர்களின் கலையமைப்பைப் பார்க்கலாம். வழவழப்பான சாந்து பூசிய சுவர்கள், தொட்டால் வழுக்கிச் செல்லும். கூரையில் அமைந்த மலர் வடிவங்கள் மொகலாயரின் கட்டடக்கலைப் பாணியில் அமைந்தவை!” என்று கூறி நிறுத்தினான் சிவாஜி.

     “அண்ணா! இதையெல்லாம் கூறி அவளை ஏன் தொந்தரவு செய்கிறாய்? உயரமான கட்டடத்திலிருந்து கடல் அலைகளைப் பார்ப்பதற்காகவே உன்னுடன் வந்தோம். வளைவான படிக்கட்டுக்களின் வழியே ஏறிச் செல்லும் வேடிக்கைக்காகவே இங்கே வந்திருக்கிறோம். புவனா கட்டடக்கலையில் வல்லவளாக ஆகப் போவதில்லை. பரத நாட்டியத்தில் திறமைமிக்க ஒரு நாட்டியமணியாக விளங்கவே விரும்புகிறாள். அதனால் உன்னால் முடியுமானால் எங்களைப் பத்திரமாகக் கட்டடத்தின் உச்சிக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டுத் திரும்பி கொண்டு வந்து சேர்த்து விடு. அது போதும்!” என்று விரலை ஆட்டிக் கண்டிப்பான பொய்க் குரலில் பேசினாள் சுலக்‌ஷணா.

     சாரட்டு வண்டியின் குதிரைகள் கனைத்து நின்றன. மூவருமே சாளரத்தின் வழியே வெளியே பார்த்தனர். நிலைமாடத்தைச் சுற்றி அமைந்திருந்த அகழியை நெருங்கியதும் வண்டி நின்றுவிட்டது. கூட வந்த குதிரை வீரர்கள் கொடியை உயர்த்தியதும், உள்ளே இருந்து வாத்தியம் முழங்கிற்று. அலங்கார வாயிற்கதவு திறக்கத் தொடங்கியவுடன், மேலிருந்து தூக்குப் பாலம் சங்கிலியால் மெல்ல இறக்கப்பட்டது.

     உள்ளிருந்த குதிரை வீரர்கள் வெளியே வந்து வாத்தியங்களைத் தூக்கி முழங்கினார்கள். உடுப்பணிந்த வீரர்கள் துப்பாக்கியை உயர்த்தி வணங்கினார்கள். இந்தக் கோலாகலக் காட்சிகளையெல்லாம் வைத்த கண் வாங்க்காமல் பார்த்தாள் புவன மோகினி.

     “என்ன புவனா! இதையெல்லாம் பார்த்தால் உனக்கும் ஒரு மகாராணியாக ஆகிவிட வேண்டும் என்று ஓர் ஆசை தோன்றுகிறதா?” என்று விளையாட்டாகவே சிரித்தவாறு கேட்டாள் சுலக்‌ஷணா.

     குறும்பாகவே அவள் கேட்டிருந்தாலும், அது காதில் விழுந்ததும் சிவாஜியும் புவனாவும் ஓர் அதிர்ச்சியுடன் அவளைத் திரும்பிப் பார்த்து, மேலே பேச முடியாமல் திகைத்துப் போனார்கள்!

     சுலக்‌ஷணாவுடன் கையைக் கோத்துச் சிரித்தபடியே இறங்கி நடந்தாள் புவனமோகினி. சம வயதுள்ள இளம் பெண்கள் இருவரும் அப்படித் துள்ளி நடந்தது கண்ணைக் கவரும் விதமாகத் தோன்றிற்று. கொழித்த இளமை தெரியும் பூரித்த கன்னங்களும், நிமிர்ந்து வளைவுடன் சரிந்த தோள்களும், உறுதியான தனங்களும், சுருங்கிய இடையும், செழுமையான தொடைகளும், கொலுசுகள் கொஞ்சும் கால்களுமாக, அவர்கள் இணைந்து நடந்த விதம், அழகிய சிற்பங்கள் உயிர்பெற்று வந்ததைப் போல இருந்தது.

     மனோரா கோட்டையின் மையப் பகுதியில் உள்ள ஒன்பது நிலை மாடத்துக்கு வந்ததும், சிவாஜிக்கும் முன்னதாகவே விரைந்து, படிகளில் குதித்து ஏறத் தொடங்கினார்கள் இருவரும். அதன் ஒவ்வொரு மாடத்திலும் உள்ள ஆறு வளைவுச் சன்னல் வழியே, வெளியே தெரிந்த காட்சியைப் பார்த்தபடியே மேலே சென்றார்கள். குன்றிமணி உதிர்ந்தது போன்ற சிரிப்பும், அருவியின் சலசலப்பாய்க் கொஞ்சும் கொலுசுகளும், அந்த நடையையும் நடனமாகவே ஒலிக்கச் செய்தன.

     வழவழப்பான சங்குநிறச் சுவர்களின் மென்மையைத் தடவிப் பார்த்து அதிசயித்தபடி மேலே சென்றார்கள். மேல் மாடிச் சுவரின் கீழ்ப்பகுதியில் கல்லில் வடிக்கப்பட்ட அலங்கார வளைவை புவனமோகினி எட்டிப் பார்த்த போது, சுலக்‌ஷணா பயந்து போய் அவளைத் தூக்கிப் பிடித்து இறக்கினாள். அந்த வேகத்தில் அவளுக்கு இடுப்பில் பிடிப்பு ஏற்பட்டது. அங்கேயே உட்கார்ந்து விட்டாள். சிவாஜியும் புவனமோகினியும், இடுப்பைப் பிடித்து தளர்த்தி ஆசுவாசப்படுத்தியும் வலி குறையவில்லை. கூட வந்த காவலாளிகள் மருத்துவரை அழைக்க ஓடினார்கள். “எனக்காக நீங்கள் இருவரும் நிற்க வேண்டாம். அண்ணா! புவனாவிற்கு மறுபடியும் இதுபோல இங்கே வந்து பார்க்கும் வாய்ப்பு கிடைப்பது அரிது. அவளை மேலே உப்பரிகைக்கு அழைத்துக் கொண்டு போய்க் காட்டு. அங்கிருந்து தெரியும் அழகான கடற்கரைக் காட்சியை அவள் பார்க்கட்டும். கீழே குனிந்து அகழியைப் பார்க்கட்டும். ஆனால், அவள் எட்டிப் பார்க்காமல் கவனித்துக் கொள். அவள் பயமே அறியாதவளாக இருக்கிறாள்” என்றாள் சுலக்‌ஷணா.

     வயது வந்த பெண்மணியைப் போல அவள் ஒரு தாய்மை உணர்வுடன் பேசிய விதம் புவனாவின் நெஞ்சைத் தொட்டது. அவளை அன்புடன் அணைத்துக் கொண்டாள். சிவாஜிக்கோ எல்லாமே வேடிக்கையாகத் தோன்றியது. சுலக்‌ஷணாவைக் கிண்டல் செய்த வண்ணம் இருந்தான். மேலும் அவள் தூண்டவே, “இருட்டுவதற்கு முன் மேலே போய்விட்டுத் திரும்பலாம் வா!” என்று கூறிப் புவனாவை அழைத்துக் கொண்டு கடைசிப் படிகளில் ஏறினான்.

     படிகள் குறுகலாக இருந்தன. இருவர் சேர்ந்து செல்ல அங்கே அகலம் போதவில்லை. மேலும் படிகள் சிறியதாக இருந்ததால் கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டி இருந்தது. சிவாஜி இயல்பாகவே அவளுக்குத் துணை கொடுப்பது போலப் புவனாவை அணைத்துப் பிடித்துக் கொண்டான். அவளால் மறுக்க முடியவில்லை. ஆயினும், நாணத்தால் அவள் மெய் சிலிர்த்தது.

     உப்பரிகையிலிருந்து பார்த்த காட்சி மனத்தை மயக்குவதாக இருந்தது. மாலைக் கதிரவன் மறையத் தொடங்கும் வேளை. மனோகரமான அந்த வேளையில் அதன் பொன்னொளி கோட்டையின் பகுதிகளுக்கு முலாம் பூசியது போலத் தோன்றியது. கடல் அலைகள் சுருண்டு வந்த போது மாலைக்கதிர்பட்டு, அவற்றின் வெண்ணிற முடிகள் வெள்ளிக் கரைகளாக ஒளிர்ந்தன.

     கீழே அகழியில் நீர் சிற்றலைகளுடன் சிலிர்த்து நழுவியது. அதன் மீது தனது தலைப்பூவைக் கிள்ளி விட்டெறிந்தாள் புவன மோகினி. அது பறந்து போய் நீரில் விழும் அழகைப் பார்க்கக் காலை உந்தி எட்டிப் பார்த்தாள். அவளைப் பின் இருந்து, இடையில் கைகொடுத்துப் பிடித்துக் கொண்டான் சிவாஜி.

     “எட்டிப் பார்க்காதே புவனா! அது ஆபத்தானது. ஏற்கெனவே சுலக்‌ஷணாவுக்கு இடுப்பிப் பிடிப்பு ஏற்படச் செய்துவிட்டாய். எனக்கும் அப்படி ஒரு பாதிப்பு ஏற்பட இடம் தரமாட்டேன்!” எனச் சிரித்துக் கொண்டே அவள் இடையை வளைத்து நெருக்கினான். புவனாவின் முகம் சிவந்தது. இமைகள் படபடத்து நிற்க, அவனை நிமிர்ந்து நோக்கி விட்டுப் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள். அந்தக் கண்கள் தேங்கி நின்றன. அவளுக்குள் ஓர் கனவு நிகழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தான் சிவாஜி. அவனுடைய நெஞ்சிலும் அது அலைமோதிற்று.

     எட்டிப் பார்த்த புவனா கீழே இறங்கி விட்டாள். ஆனால், இளவரசனின் கைகள் அவளை விடுவிக்கவில்லை. முன்னடியின் பாரமும், பின்னடியின் வளைவும் அவள் மெல்லுடலைக் கரும்பு வில்லாக வளைந்து நிற்கச் செய்தன. அதனைத் தாங்கிய இன்பச் சுமை தன்னைத் தாக்க, மெய்ம்மறந்து நின்றான் சிவாஜி.


புவன மோகினி : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38