33. மன்னர் கண்ட மங்கையின் மலர்ச்சி

     ‘தாரகைகாள்! இமைப்பின்றித்
     தரணியை நீர் நோக்குவதேன்?
     ஆரும் உங்கள் குழுவினின்றும்
     அவனி மிசை இறங்கினரோ?
     புவியகத்து வீதியினில்
     போந்தது ஒரு வான்சுடரோ?
     தவளமுல்லைத் தண்ணிலவில்
     தழைக்கின்ற இளநிலவோ?’

     -மகாகவி வள்ளத்தோள் நாராயண மேனனின் கவிதை

     அகல்யா அந்தப்புரத்தில் மஞ்சத்தின் மீது அமர்ந்திருந்தாள். விளக்குக் கம்பங்களிலிருந்து சிந்திய ஒளி, பட்டுத் திரையில் பட்ட போது, தரையில் நிழல்கள் கோலமிட்டன. இளவரசி சுலக்‌ஷணா வரும் கால் கொலுசு சத்தம் கேட்டதும் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

     “பெரியம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தேன். நீ அவசரமாகக் கூப்பிட்டதாக வந்து சொன்னார்கள். என்ன செய்தி அம்மா?” என்று கண்களை அகல விரித்து, புன்னகையை உதிர்த்தபடி கேட்டாள் சுலக்‌ஷணா! ஆனால் அகல்யாபாயின் இதழ்களில் புன்னகை அரும்பவில்லை.

     “உட்கார் சுலக்‌ஷணா! உன்னிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும். இதைச் சொல்ல நான் இந்த ஒன்றரை ஆண்டுகளாகவே காத்திக் கொண்டிருக்கிறேன்.”

     “அப்படியானால் அது முக்கியமானதாகத்தான் இருக்க வேண்டும். சொல்லுங்கள்! எனக்கு ஏதாவது அறிவுரை சொல்லப் போகிறீர்களா அம்மா?”

     “நிறைய சொல்லி ஆகிவிட்டது மகளே! ஆனால் நீ அவற்றைப் பின்பற்றவில்லை என்பதுதான் என்னுடைய குறை. இந்த அரசகுலத்தில் பிறந்தவர்களுக்குச் சில கட்டுப்பாடுகள், ஒழுக்க முறைகள் ஆகியவை இருக்கின்றன. நீ அவற்றை மீறிவிட்டாய் என்று தோன்றுகிறது...”

     “என்ன செய்துவிட்டேன் அம்மா? நீ சொன்னதைக் கேட்டு, நான் நாட்டியம் கற்றுக் கொள்ளக்கூட முற்படவில்லையே அம்மா.”

     “அது வேறு பாக்கியா? நாட்டியக்காரியின் மகளை இங்கே வரவழைத்திருக்கிறாய். அவளை ஆடவைத்துப் பார்த்து மகிழ்ந்திருக்கிறாய். அது போதாதா? அந்தப் பெண் புவனமோகினிக்கு அந்தப்புரத்தில் காலெடுத்து வைக்கும் தைரியம் எப்படி வந்தது? இதுவரையில் இதுபோன்ற பெண்கள் இங்கே வந்து இப்படிப் பேசிப் பழகியதுண்டா?”

     “அம்மா அப்படி எல்லாம் என்னிடம் பேசாதே. அவள் என்னுடைய அந்தரங்கத் தோழி. என்னிடம் சகோதரியைப் போலப் பழகியவள். அவளைப் பற்றித் தவறாக எதுவும் சொல்லாதே அம்மா, என் மனம் வேதனைப்படும்!”

     “என்னுடைய மனம் இப்போது வேதனைப்படுகிறதே... சிறிதாவது அதை நீ நினைத்துப் பார்த்தாயா? அரசர் உனக்கு உன் அண்ணனுடன் போக மட்டும் தானே அனுமதி கொடுத்தார்? ஆனால் அவளோடு செல்ல அனுமதித்தாரா? அந்தப்புரத்தில் நீ சுதந்திரமாக இருக்க இடம் கொடுத்தார். ஆனால் இப்படிப்பட்டவர்களை உள்ளே அழைத்து வரச் சொன்னாரா? யாரோடு யார் பழகுவது? உனக்கும் அந்தப் பெண்ணுக்கும் என்ன பொருத்தம்? இந்த அளவு நெருக்கத்தைத் தேடிக் கொள்ள அவளுக்கு ஏது அருகதை?”

     “ஏன் அருகதை இல்லை அம்மா? அவளுக்கு அழகும் இளமையும் இல்லையா? பாடவும் ஆடவும் கற்றவள் இல்லையா? நயமாகப் பழகத் தெரியவில்லையா? அவளுடைய தாய் ஒரு புகழ் பெற்ற ஆடலரசி அல்லவா? அவளிடம் என்ன குறையைக் கண்டாய் அம்மா?”

     இளையராணியின் உள்ளம் எகிறித் துடித்தது. கண்களில் ஆச்சரியம் விரிந்த வானம்போல் விஸ்தாரமாகப் படர்ந்தது. மகள் மீது கொண்ட அன்பும் புவனாவின் மீது எழுந்த கோபமும் மனத்தில் போட்டியிட்டு அலைமோதின. மகளை நயமாகவே திருத்த வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

     “நாம் அரச குலத்தில் பிறந்தவர்கள் சுலக்‌ஷணா! கணவரையும் ராஜ மாதர்களையும் தவிர வேற யாருடனும் பழகும் வழக்கம் நமக்கு இல்லை. அதுவும் செல்வந்தர்களையும் அரசர்களையும் நாடி அவர்களுடன் ஆசைநாயகியராக வாழும் தாசியரை நாம் அருகிலும் சேர்க்கக் கூடாது. அப்படிப்பட்ட ஒரு ராஜதாசியின் மகள் அந்த புவனமோகினி. அவளை நீ தோழியாக ஏற்கலாமா? அவள் ஆடுவதைக் கண்டு ஆசைப்பட்டு இங்கே அழைக்கலாமா? அருகில் வைத்துப் பழகலாமா? நேற்று நாங்கள் திரும்பும் போது எங்களை வரவேற்க வந்த மங்கலப் பெண்டிருடன், அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டாயே, இது நியாயமா? யோசித்து நீயே பதில் சொல்லு!” என்று கூறி மகளை ஆதரவாகத் தடவிக் கொடுத்தாள் அகல்யா.

     சுலக்‌ஷணா வீம்புடன் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள். முதுகை வருடிய அரசியின் கையை விலக்கிவிட்டு நகர்ந்து அமர்ந்தாள். மனத்தில் குமுறும் வேதனை தெரியும் குரலில், “அம்மா! நாம் யார் வயிற்றில் பிறக்கிறோம் என்பது நம் கையில் இல்லை. ஆனால் பிறந்த பின் எப்படி உருவாகி நற்பண்புகளுடன் பழகுகிறோம், வளருகிறோம் என்பதுதான் நம் கையில் இருக்கிறது. நீ சிலப்பதிகாரம் படிக்கவில்லையா அம்மா? மாதவியின் வயிற்றிலேதானே உலகம் போற்றிய உத்தமி மணிமேகலை பிறந்தாள்? புவனாவின் கலைத்திறனுக்கு நான் மரியாதை கொடுக்க வேண்டாமா? அரச குடும்பத்தில் பிறந்துவிட்டேன் என்பதைத் தவிர, எனக்கு அவளை விட உயர்ந்தவள் என்று சொல்லிக் கொள்ள என்ன அருகதை இருக்கிறது?” என்று கேட்டாள் சுலக்‌ஷணா.

     இதைக் கேட்ட அகல்யா சீறும் சிறுத்தையாக மாறினாள். அவளுடைய கண்கள் கனலைக் கக்கின. “ஓ! நீ அந்த அளவுக்கு அறிவாளி ஆகிவிட்டாயா? இதையெல்லாம் பேச அந்தக் கணிகையின் மகளிடம் கற்றுக் கொண்டாயா? உலகமே தெரியாதவளாக நீ எப்படி வளர்ந்தாய்? போனால் போகட்டும் என்று அரசர் கொஞ்சம் சலுகை கொடுத்ததில், நீ என்னையே கேள்வி கேட்டு மடக்கும் அளவுக்குத் துணிச்சல் பெற்று விட்டாயா? நல்லது! உன்னை வழிக்குக் கொண்டு வரும் முறை எனக்குத் தெரியும். விரைவிலேயே உனது திருமணம் நிச்சயமாகிவிடும். நாங்கள் ராமேசுவர யாத்திரையை முடித்துத் திரும்பியதும் உன்னை உரிய இடத்தில் வைத்து விடுகிறேன். நீ அப்புறம் அடங்கி வாழக் கற்றுக் கொள்வாய். அருமை மகள் என்று இடம் கொடுத்தது அனர்த்தமாயிற்று!” என்று பொங்கி, நெருப்பெனச் சொற்களை அள்ளி வீசினாள் அகல்யா.

     சுலக்‌ஷணாவுக்கு அழுகை வந்தது. விம்மிக் கொண்டே தாயிடம், “அப்படி எல்லாம், சொல்லாதே அம்மா! நான் என்றுமே உனக்கு அடங்கிய பெண் தான். ஆசைப்பட்டேனே தவிர உன் சொல்லை மீறிச் செய்ததில்லை. நான் உன்னுடன் இருப்பது உனக்குப் பாரமாகத் தோன்றினால் என்னை மணம் செய்து கொடுத்துவிடு. கணவனுக்கு அடங்கி இருந்து, கும்டா அணிந்து அந்தப்புரத்தில் ஒளிந்து வாழக் கற்றுக் கொள்கிறேன். குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு குடும்பத்தில் ஒருத்தியாக வாழ முற்படுகிறேன். உனக்குத் தொந்தரவு கொடுக்க மாட்டேன் அம்மா! ஆனால் இதுபோல நீ அண்ணன் சிவாஜியிடம் பேசிவிடாதே!” என்று எச்சரிப்பது போலச் சொல்லி நிறுத்தினாள்.

     “ஏன் பேசக்கூடாது? என்ன செய்துவிட முடியும் உன் அண்ணனால்?”

     “எதுவும் செய்யக்கூடும்! அவனுடைய ஆசைகளை நான் அறிவேன். அவனை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது!”

     “என்ன சொல்லுகிறாய் மகளே! விவரமாகச் சொல்லேன்!” என்று பதறியபடி அவளுடைய கைகளைப் பற்றிக் கொண்டாள் அகல்யா.

     “அண்ணன் புவனமோகினியை அடைய ஆசைப்படுகிறான். அவளையே அவன் மணந்து கொள்வான். நீங்கள் தடுத்தாலும் அந்த ஆசையை அணைபோட்டு நிறுத்திவிட முடியாது. ஆகையால் சிவாஜியிடம் புவனாவைப் பற்றி இதைப் போலப் பேசிவிடாதே!” என்றாள் சுலக்‌ஷணா.

     “ஆ! என்ன சொன்னாய்? கடவுளே! இப்படி ஒரு விபரீதம் நடக்கக் காத்திருக்கிறதா?” என்று வாய்விட்டுக் கூவியபடியே மூர்ச்சையானாள் அகல்யா. அதைக் கண்டு திகைத்து, என்ன செய்வதென்று அறியாதவளாய் மூத்த ராணியை அழைக்க வெளியே ஓடினாள் சுலக்‌ஷணா.

     குளிர்ந்த வேளையில் ரங்க மண்டபத்தில் அமர்ந்திருந்தார் சரபோஜி மன்னர். அருகே இருபுறமும் தேவியர் அமர்ந்திருந்தனர். இளவரசர் சிவாஜியும் இளவரசி சுலக்‌ஷணாவும் சற்று தள்ளி அமர்ந்திருந்தனர்.

     “சுவாமி! எதற்காக எங்களை இங்கே வரவழைத்தீர்கள்? ஏதோ ஒரு கலை நிகழ்ச்சி என்று மட்டும் சார்க்கேல் ராமோஜி ராவ் சூசகமாகச் சொன்னார். அது என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?” என்று பணிவுடன் கேட்டாள் யமுனாபாய்.

     “இன்னும் சற்று நேரத்தில் நீங்களே பார்க்கப் போகிறீர்கள். இது, நீங்கள் இதுவரை கண்டிராத ஒன்று! காணும் போது உங்களுக்கே வியப்பாக இருக்கும்” என்று கூறிப் புன்முறுவல் செய்தார் மன்னர். குறும்பாகவே சிவாஜியையும் பார்த்தார். அவனுடைய இதழ்கடையிலும் இளநகை அரும்பிற்று.

     மேடையில் விளக்குகள் ஏற்றப்பட்டன. வாத்தியக்காரர்கள் கருவிகளுடன் வந்து அமர்ந்தனர். நட்டுவாங்கம் செய்ய ஓதுவார் மேடையின் மீது அமர்ந்தார். தீபம் ஒளிவிட்டது. இசை முழங்கத் தொடங்கிற்று. அரசர் ஜாடை காட்ட, ஓதுவார் திரும்பிப் பார்த்தார். திரைமறைவிலிருந்து பட்டுத் துணியைப் போர்த்தி முகத்தை மூடிய வண்ணம், அந்த இளம் பெண் துள்ளி நடந்து வந்து அரசரை வணங்கினாள். ஒளி தெளிக்கும் பட்டுத்திரை நழுவிக் கீழே விழுந்தது. குமிழ்ச் சிரிப்பை உதிர்த்து முகம் நிமிர்ந்தாள் புவனமோகினி.

     இளையராணி திடுக்கிட்டுக் குலுங்கி நிமிர்ந்தாள். மூத்த ராணி கண்களில் வியப்பெழப் பார்த்தாள். சிவாஜியும் சுலக்‌ஷணாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மன்னர் கணீரென்ற குரலில் பேசினார்...

     “குழந்தாய்! நீ நல்ல முறையில் பாடம் கற்றுக் கொண்டிருப்பதாக ஓதுவார் கூறினார். நீ கற்றறிந்திருப்பது எவ்வளவு என்பதைக் காண ஆசைப்பட்டே இன்று உன்னை இங்கே வரவழைத்தேன். உனக்கு நன்றாகப் பாடமாகி உள்ள ஓரிரு பாடல்களை அபிநயித்துக் காட்டு. அதிலிருந்து உன் திறமை எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்!” என்றார் மன்னர்.

     புவனமோகினி ஆசிரியரின் பாதத்தைத் தொட்டு வணங்கி நிமிர்ந்தாள். பாடல் கணீரென்ற குரலில் கேட்கத் தொடங்கிற்று. புவனா இடையில் கையை வைத்துக் கம்பீரமான அழகுடன் நிமிர்ந்தாள். அவளுடைய பார்வை ஒரு கணம் சிவாஜியின் மீது பட்டு ஒதுங்கிற்று. நாட்டியம் ஆரம்பமாயிற்று...

     கணபதி வணக்கத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், தொடர்ந்து திருவாசகமும் வந்தது. பின் முத்துத்தாண்டவரின் தோடி ராகப் பதமும் ஒட்டி வந்தது...

     “தெண்டனிட்டேன் என்று சொல்வீர் நடேசர்க்கு நான்
     தெண்டனிட்டேன் என்று சொல்வீர்...”

பாடப் பாடப் பக்தியுடன் காதல் உணர்வும் பொங்கி வந்தது. நாயகி, நாயக பாவம் நிறைந்து பரிணமித்தது. சிருங்கார ரசம் ததும்பிற்று. மதனாவஸ்தையின் பாவமும் வேதனைப் பெருமூச்சு விடுதலும், கண்ணீர் விடுதலும் தத்ரூபமாகத் தெரிந்தன. பிரிவினால் படும் விரகதாபம், ஏக்கம், சகிப்பற்ற தவிப்பு ஆகியவையும் நாயகனைக் கண்டதும் படும் இன்பத் துடிப்பும் நயபேதத்துடன் தெரிந்தன.

     “பொருந்தும் காதல் கொண்டு
     பொன்னிதழ்த் தேனுண்டு
     இருந்தோம் சொல்லவோ விண்டு
     ஏகாந்தம் தனிற் கண்டு”

               (தெண்டனிட்டேன்...)

     என்ற சரண அடிகளைப் பாடும் போது, ஒவ்வொரு முறையும் மன்மதக் கலையை பூஜாமகோற்சவமாகவே உணர்ந்து காட்டும் முழுமை தெரிந்தது. அவற்றைக் காணக் காண மன்னரின் மனத்தில் அதிசயிப்பும், கூடவே சிறு அச்சமும் கிளர்ந்தெழுந்தன. அவருடைய கண்களுக்கு புவனமோகினி இளமையை எட்டுப் பார்க்கும் குழந்தைப் பெண்ணாக அன்று தோன்றியதுண்டு. ஆனால் இன்றோ அவள் முழுமையான மலர்ச்சி பெற்று, மணம் பரப்பும், சிருங்கார ரசம் ததும்பும் காவிய நாயகியாவே தோன்றினாள். மண உறவைப் புரிந்து கொண்ட மங்கையாகவே காட்சி அளித்தாள்.

     மஞ்சம் துறந்து நித்திரையற்றுத் தவிக்கும் தவிப்பும், பிரிவால் இளைத்து அனுபவிக்கும் விரகதாபமும், காதலன் வந்ததும் களிப்படைந்து மெய் புல்லரிக்க அனுபவித்த சுகமும், பின் அந்த இன்பத்தையும் பிரிவின் துன்பத்தையும் சகியிடம் சொல்லிப் புலம்பும் ஆற்றாமையும், நடிப்பாகவோ அபிநயமாகவோ இன்றி, மெய்யாகவே - முழுமையாகவே அந்த இளநங்கையின் உள்ளத்திலிருந்து பீறிட்டு வருவது போலத் தோன்றியது.

     ‘கிளிக்கண்ணி’ ஒன்றுக்கு அபிநயித்து நிகழ்ச்சியை முடித்தாள் புவனமோகினி.

     அத்தனை நேரமும் விழி ஆடாது அதனைப் பார்த்து ரசித்தாள் சுலக்‌ஷணா. அவளுடைய பார்வையின் வீச்சிலும், பாதத்தின் துள்ளலிலும், அங்க அசைவுகளிலும், மனத்தைப் பறிகொடுத்தவனாக அமர்ந்திருந்தான் சிவாஜி. இரண்டையும் பார்க்கப் பார்க்க மன்னரின் மனத்தில் ஒரு முடிவு திரண்டெழுவது புரிந்தது.

     ஆடி முடித்த புவனாவை அருகில் அழைத்துப் பாராட்டி, காசி மன்னர் கொடுத்த வைரப்பதக்கம் ஒன்றைப் பரிசாக அளித்தார் சரபோஜி. பிறகு கனிவுடன் குழையும் குரலில், “குழந்தாய்! ஒரு சிறந்த ராஜநர்த்தகியின் மகள் என்பதை நீ எடுத்துக் காட்டி விட்டாய்! குறுகிய காலத்திலேயே இந்த நுண்கலை, உனக்கு ஏற்கெனவே அடிப்படையாக இருந்த ஆடற்கலையின் சிறப்பால் மெருகேறி விட்டது. நான் வணங்கும் கலைமகளின் ஆசி உன்னிடம் நிறைந்து நிற்பதைக் காண்கிறேன். என் மனம் பெருமகிழ்ச்சி அடைகிறது. நீ ஒரு சிறந்த ஆடலரசியாக உருவாவதற்கு உதவுவேன் என்று உன் தாய்க்கு நான் கொடுத்த வாக்குறுதியைப் பெரும் அளவு நிறைவேற்றி விட்டேன். என்றே தோன்றுகிறது. இனி நீ கற்க வேண்டியது மிக அதிகம் இல்லை. உன் தாய் இந்த வளர்ச்சியை விரைவில் பார்த்து மகிழ வேண்டும். அதுவே என் ஆசை! அதற்கேற்ப ஆவன எல்லாவற்றையும் செய்து முடிக்க விரும்புகிறேன். தஞ்சை பெருவிடையாரின் திருவருள் உனக்கு துணை நிற்கட்டும்!”

     அது பாராட்டு என்ற எல்லையுடன் நிற்கவில்லை. ஒரு கலை மன்னனின் பெருமித உணர்வும் அதில் தெரிந்தது. கூடவே புவனமோகினியின் ஆடல் திறமையைப் பாராட்டும் போது அவள் புரிந்து கொள்ள வேண்டிய எதிர்காலத்தை வலியுறுத்தி உணர்த்துவது போலவும் தோன்றிற்று...

     மன்னர் அவ்வளவையும் உணர்ந்துதான் பேசினார். அதைக் கேட்க இளைய ராணிக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது. ஆனால் சிவாஜிக்கோ அந்தப் பேச்சைக் கேட்டதும் உள்ளம் அஞ்சிற்று; கலங்கிற்று! அலைந்து அலைந்து தவித்தது.


புவன மோகினி : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38