![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
21. காசியாத்திரை தொடக்கம்
கெண்டை கொண்டலர்ந்த கண்ணினார்கள் கீதவோசை போய் அண்டரண்டம் ஊடலுக்கும் அந்தன் ஆரூரென்பதே; நிரைத்த மாளிகைத் திருவின் நேராளர்கள் வெண்ணகை அரத்த வாய் மடந்தையர்கள் ஆரூர் என்பதே! - திருஞானசம்பந்தர் மறைந்து நின்றபடி, தந்தை சொல்லுவதையே கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் சுலக்ஷணா. அரசரின் அருகே அமர்ந்து அவரையே உற்றுப் பார்த்தபடி கேட்கத் தொடங்கினாள் அகல்யாபாய். அரசர் கண்களை மூடி, பக்தி பூர்வமாக அந்த நிகழ்ச்சியை எண்ணி, மனத்திரையில் கொண்டு வந்து நிறுத்திக் கதையாகக் கூறத் தொடங்கினார். “முத்துசாமி தீட்சிதர் திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசப் பெருமானின் சந்நிதிக்குப் போய் நின்று தனது கிருதிகளைப் பாடுவது வழக்கம். அந்த ஆலயத்தைச் சார்ந்த கமலம் என்ற தேவதாசி மிகுந்த சங்கீத ஞானம் படைத்தவள். தீட்சிதரின் பக்திமணம் கமழும் பாடலை மறைந்து நின்று கேட்டு, மனம் உருகிக் கண்ணீர் வடிப்பாள். தீட்சிதர் திரும்பிய பின் அவர் நின்ற இடத்தைத் தொட்டு வணங்குவாள். மானசீகமாக அவரைத் தனது குருநாதராகவே எண்ணி வழிபட்டு வந்தாள் கமலம். தீட்சிதர் எந்த வேலைக்கும் போகவில்லை. பிரபுக்களிடம் போய் அவர்களைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெறும் வழக்கமும் அவருக்கு இல்லை. அதனால் வீட்டில் தெய்வீக மணம் கமழ்ந்தாலும், அடுப்பில் சமைக்கக்கூடப் போதுமான பொருள் இன்றியே இருந்தது. ஒருநாள் தீட்சிதரின் மனைவி இதைப் பற்றி தனது கணவரிடம் கூறி முறையிட்டாள். அவரோ புன்னகையுடன், ‘நான் மகாலட்சுமியைப் பூசித்து வணங்குகிறேன். அவள் என் அன்னை அல்லவா? குழந்தைக்கு எப்போது சோறு போட வேண்டும் என்று தாய்க்குத் தெரியும்!’ என்று சொல்லிவிட்டார். இந்தச் செய்தி கமலத்தின் காதை எட்டிற்று. அவள் தனது நகை நகைகளைக் கடைக்குச் சென்று அடகு வைத்தாள். அந்தப் பணத்தில் சமைப்பதற்குரிய பொருட்களை நிறைய வாங்கி வண்டியில் வைத்து அனுப்பி விட்டாள். வீட்டு வாசலில் வண்டி வந்து நின்றது. தீட்சிதரின் மனைவி அதைக் கண்டு அகமகிழ்ந்து போனாள். ஆனால் தீட்சிதரோ அதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. வண்டிக்காரன் உள்ளே வந்து அவரை அடிபணிந்து வணங்கி, ‘ஐயா, இதைத் தங்கள் சிஷ்யையான தேவதாசி கமலம் அனுப்பி வைத்தார்கள். இதைத் தனது காணிக்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்!’ என்று கூறினான். தீட்சிதர் புன்னகையுடன், ‘அப்பா, அந்தப் பெயருள்ள மாது யாரையும் எனக்குத் தெரியாது. மேலும் நான் யாரிடமும் கைநீட்டி எதையும் பெறும் வழக்கமும் இல்லை. இதை அவர்களுடைய வீட்டிலேயே கொண்டு போய் இறக்கி விடு!’ என்று சொல்லி விட்டார். தீட்சிதரின் மனைவி எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. வண்டி திரும்பிப் போய்விட்டது. அவள் அழுது கொண்டே, ‘நாளைக்குச் சாப்பிட மணி அரிசி இல்லையே சுவாமி! என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்டாள். ‘கவலைப்படாதே! கமலம் கொடுத்து நாம் சாப்பிட வேண்டாம். அன்னை கமலாம்பிகை கொடுப்பாள். பார்த்துக் கொண்டே இரு!’ என்று சொல்லி விட்டார். தஞ்சாவூரிலிருந்து திருவாரூருக்கு அரசு அதிகாரி ஒருவர் வருவதாக இருந்தது. அது கடைசி நிமிடத்தில் நின்று போய் விட்டது. அவர் வருகையை முன்னிட்டு விருந்து வைக்க உள்ளூர் அதிகாரி நிறைய சமையல் சாமான்களை வாங்கிப் போட்டிருந்தார். மேலதிகாரி வராமற் போகவே, ‘இதை நம்முடைய ஊரில் உள்ள மிக உயர்ந்த மனிதர் ஒருவருக்குக் கொடுத்து விடலாம்!’ என்று எண்ணினார். யோசித்துப் பார்த்த போது முத்துசாமி தீட்சிதரே அந்த மரியாதைக்கு உகந்தவ எனத் தோன்றிற்று. தான் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மாட்டார் என்று ஆலய நிர்வாகிகளை அழைத்து, அவர்கள் மூலம் அனுப்பி வைத்தார். வீட்டு வாசலில் வண்டி வந்து நின்றது. தீட்சிதருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆலய நிர்வாகிகள் உள்ளே வந்து வணக்கம் கூறினார்கள். ‘என்ன விஷயம்? எதற்கு இதெல்லாம்?’ என்று கேட்டார் தீட்சிதர். ‘சுவாமி, தங்கள் அன்னை இந்த திவ்விய தலத்தில் எழுந்தருளியுள்ள அம்மன் - கமலாம்பிகை இதனை அனுப்பி வைத்திருக்கிறார்கள். மறுக்காமல் இதனைப் பிரசாதமாகக் கருதி ஏற்றுக் கொள்ள வேண்டும்!’ என்று சொன்னார்கள். தீட்சிதர் கண்களை மூடிக் கொண்டு, கரங்குவித்து, கமலாம்பிகையை வணங்கிப் பாடிவிட்டு, அந்த சாமான்களைக் கொண்டு வந்து வைக்க அனுமதித்தார். தீட்சிதரின் மனைவி அந்தத் தெய்வீக அருளை எண்ணி எண்ணி மனம் உருகிப் போனாள்” என்று நிறுத்தினார் அரசர். “சுவாமி! என்னிடம் கூறிய போது அந்தத் திருவாரூரில் தாசிக்கு மகான் அருளியதாகக் கூறினீர்களே? கதை முடிந்து விட்டதா?” என்று கேட்டாள் அகல்யாபாய். “பொறு அகல்யா! கதை இன்னும் முடியவில்லை. மேலே சொல்லுவதைக் கேள்! மேலே சொல்லுவதைக் கேள்! தாசி கமலத்துக்கு இந்தச் செய்தி தெரிந்தது. அவரை நாடி அவருடைய இல்லத்துக்கு வந்து வணங்கினாள். ‘சுவாமி! எப்படியோ தங்கள் சிரமம் தீர்ந்தது. தாங்கள் கஷ்டப்படக்கூடாது என்று என்னுடைய ஐயனையும் தேவியையும் வேண்டிக் கொண்டேன். அவர்கள் கருணை கூர்ந்து தங்களுடைய சிரமத்தைப்போக்கி விட்டார்கள்!’ என்று சொல்லிக் கண்ணீர் உகுத்தாள். தீட்சிதர் கருணை நிறைந்த குரலில், ‘நான் திரும்பி அனுப்பியதற்காக வருத்தப்பட வேண்டாம் அம்மணி! உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கியே தியாகராசப் பெருமானும் கமலாம்பிகையும் எனக்கு அருளியதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். உங்களுக்கு என்ன வேண்டுமோ, கேளுங்கள்!’ என்றார். ‘சுவாமி! தாங்கள் எப்போதும் சம்ஸ்கிருத மொழியிலேயே கிருதிகளை உருவாக்குகிறீர்கள். நான் அவ்வளவு தூரம் படித்தவள் அல்ல! எனது தாய்மொழி தெலுங்கு. அந்த மொழியில் எனக்குப் புரியும்படி தாங்கள் இரண்டு கிருதிகளை எனக்காக இயற்றி அருள வேண்டும்!’ என்று கேட்டுக் கொண்டாள். தீட்சிதர் அவ்வாறே தோடி ராகத்தில் ‘ரூபே மூஜுச்சி’ என்ற வர்ணத்தையும் ‘நிசதி’ என்ற ஸ்ரீரஞ்சனி ராக தெலுங்குதாருவையும் இயற்றித் தெலுங்கு மொழியில் பாடியும் காட்டினார். அவள் தேவதாசியாக இருக்கலாம். ஆனால் அவளுடைய தெய்வப் பற்றும், குருபக்தியும் அவரை மிகக் கவர்ந்து விட்டது. அதற்காகவே காலம் எல்லாம் கமலத்தின் பெயர் நிலைத்து நிற்கும்படி இரண்டு கிருதிகளை அபூர்வமாகத் தெலுங்கில் இயற்றிவிட்டார்! யாரையும் அவர்களுடைய குலத்தை வைத்து மதிப்பிடக் கூடாது அகல்யா! சேற்றிலும் செந்தாமரை முளைக்கிறது அல்லவா? தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று மணிமேகலை. அந்த அம்மையார் யார்? கோவலனுக்கும் தாசியான மாதவிக்கும் பிறந்த மகள் அல்லவா? சித்திரசேனா அந்தக் குலத்தில் பிறந்தவளாக இருக்கலாம். ஆனால் அவளுடைய அபூர்வக் கலைத்தொண்டை நாம் நன்கு மதிக்க வேண்டாமா? கலைமகளின் அருள்பட்ட இடம் எதுவானாலும் அது எனக்குச் சொர்க்கம் அகல்யா! அதனால் தான் தினந்தோறும் நான் சரசுவதி மஹால் நிலையத்தில் நுழையும் போதெல்லாம் அங்கே வரும் அறிஞர்கள் காலடிபட்ட படியைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்கிறேன். அது வெறும் நூல் நிலையம் அல்ல அகல்யா! கலைமகள் வாழும் திருக்கோயில்!” என்று கூறி, உணர்ச்சிப் பெருக்கால் நாத்தழுதழுக்க நிறுத்திக் கொண்டார் சரபோஜி. அகல்யாதேவியின் விழிகளும் அதை உணர்ந்து நீரில் மிதந்தன. “சுவாமி! நான் கூறியதில் தவறு ஏதேனும் இருப்பின் என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறி அரசரின் தாளைத் தொட்டு வணங்கினாள். அரசர் அவளை அள்ளி எடுத்து, முதுகில் தட்டி ஆறுதல் கூறினார். அவ்வளவையும் இரகசியமாகவே நின்று கவனித்துக் கொண்டிருந்த சுலக்ஷணா, கண்களில் துளிர்த்த நீரை மெல்லத் துடைத்தபடி அங்கிருந்து நழுவிப் போனாள். மன்னரின் காசி யாத்திரைக்கான ஏற்பாடுகள் முடிந்து விட்டன. தனது அதிகாரிகளை அழைத்து, மகன் சிவாஜியையும் வைத்துக் கொண்டு தாம் காசி யாத்திரையை முடித்துத் திரும்பும் வரையில் சிறப்பாக விழாக்கள் எந்தெந்த வகையில் நடக்க வேண்டுமோ அவற்றுக்கான உத்தரவுகளை அளித்தார் மன்னர். அரண்மனையில் விழாக்கள் எப்படி நடைபெற வேண்டும்? ரெசிடெண்ட் துரை அவற்றில் என்னென்ன விதத்தில் பங்கு பெற வேண்டும்? கிறிஸ்துமஸ், ஜனவரி முதல் தேதி ஆகிய பண்டிகைகளுக்கு ரெசிடெண்ட் துரைக்கும் மற்ற ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் என்னென்ன மரியாதைகள் செய்யப்பட வேண்டும்? சமஸ்தான அதிகாரிகளுக்கு சிமோலங்கணமான இரண்டாவது தினத்தில் என்னென்ன மரியாதைகள் செய்யப்பட வேண்டும்? காசி யாத்திரைக்கு அரசருடன் செல்லும் அதிகாரிகள், பணியாளர்களின் இல்லங்களில் சம்பளத்தைக் கொடுத்துவிட்டு, மேலும் எந்தவிதமாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்? அரச குடும்பத்தில் இளவரசன் சிவாஜியும் அவனது தங்கை சுலக்ஷணாவும் வெளியே செல்ல எப்படி ஏற்பாடு செய்ய வேண்டும்? எவ்வளவு நாட்களுக்கு அவர்கள் ஒன்றாக வெளியே சென்று தங்கலாம்? அரசரின் பிறந்த நாள், வளந்த பஞ்சமியன்று நடக்கும் தர்பார், தேவஸ்தானங்களில் ரத உத்ஸ்வம், மடங்களில் வியாசபூஜை ஆகியவை எப்படி கொண்டாடப்பட வேண்டும்? பௌர்ணமி இரவில் தானதர்மம், சமஸ்தானத்திற்காகப் பாக பூஜை ஆகியவை எப்படி நடைபெற வேண்டும்? *இத்தனை விவரங்களையும் எழுத்து மூலமாக எழுதி உத்தரவுகளை அளித்தார் மன்னர் சரபோஜி. யாத்திரைக்குத் தன்னுடன் எடுத்துச் செல்ல எட்டுப் பெட்டிகளில் மருந்துகள், பெயர்கள், அளவு ஆகியவற்றை கட்டி வைக்கச் செய்தார். சமஸ்தான மருத்துவரைத் தவிர டாக்டர் எட்டன் என்ற ஆங்கிலேய மருத்துவரையும் அழைத்துக் கொண்டார். (* தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும் - கே.எம்.வெங்கட்ராமய்யா.) சென்னை சென்று ஆந்திர மாநிலம் வழியாகப் பூரி ஜெகந்நாதரின் திருத்தலத்தைப் பொங்கல் பண்டிகையன்று அடையுமாறு திட்டமிடப்பட்டது. அரசர் தனிப் பல்லக்கிலும் அரச மாதேவியர் தனித்தனிப் பல்லக்கிலும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. கூடவே காவலுக்கு குதிரையில் ஆயுதங்களும் துப்பாக்கியும் ஏந்திய வீரர்கள் வந்தார்கள். ஆட்களும் சாமான்களை வைத்த வண்டிகளும் தொடர்ந்து வர ஏற்பாடாயிற்று. செல்லும் வழியில் ஆங்காங்கே தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க, கும்பெனி சர்க்கார் அந்தந்த ஊரில் உள்ள தாசில்தார்களுக்கு ஆணை பிறப்பித்தது. மன்னர் திரும்பி வர சுமார் இரண்டரை ஆண்டு காலத்துக்கு மேல் ஆகும் எனக் கணிக்கப்பட்டு, அதுவரையில் அவருக்கு அவ்வப்போது தஞ்சையைப் பற்றிய செய்திகள் குதிரை வீரர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. மன்னரின் யாத்திரை நன்கு முடிந்து திரும்பி வரச் சிறப்பு வழிபாடுகள் வெவ்வேறு ஆலயங்களிலும், கிறித்துவத் தேவாலயங்களிலும், தர்க்காக்களிலும் நடத்தப்பட்டன. குறுநில மன்னர்கள் தஞ்சைக்கு வந்து தங்கி இருந்து அரச குடும்பத்தினரை வழி அனுப்பி வைத்தார்கள். எவ்வளவோ உறுதியுடனிருந்தும் சுலக்ஷணாவைப் பிரிந்து விடைபெறும் போது யமுனாதேவியும், அகல்யாதேவியும் கண்ணீர் விட்டு விட்டனர். கூட இருந்த சிவாஜி தனது தங்கையைச் சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று. சற்று விலகிக் கூட்டத்தினரிடையே இருந்த புவனமோகினியைப் பார்த்து விட்டாள் அரசி அகல்யாதேவி. ஆனால் அவளை அழைக்கவோ, ஏதும் சொல்லவோ முற்படவில்லை. மன்னர் சரபோஜி இதைக் கவனித்தார். அவளை அருகே அழைத்து ஆசி கூறினார். அவளுக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளச் சொல்லி சார்க்கேலிடமும் கூறினார். யாத்திரைக் குழு ஊர்வலமாகப் புறப்பட்டது. திரையிட்டு மூடிய பல்லக்கில் அமர்ந்து கொண்டாள் அகல்யாபாய். அவள் மனதில் என்னென்னவோ நினைவுகள் சுழன்று சுழன்று வந்தன. சிறிது தூரம் போனதும் திரையை விலக்கிப் பார்த்தாள். தூரத்தில் அரண்மனை வாயிலில் சிவாஜியும், சுலக்ஷணாவும் நின்று கையசைப்பது தெரிந்தது. கூடவே அவர்களுடன் நின்று புவனமோகினியும் அவர்களைப் பார்த்துக் கையை அசைப்பதுத் தெரிந்தது. அதைக் கண்டதும் அகல்யாவின் மனம் அதிர்ச்சி அடைந்தது. கண்களை மூடிக் கொண்டு, பிருகதீசுவரரை மானசீகமாக வணங்கி, ‘எல்லாம் நல்லபடியாக நடந்தேறத் தாங்கள் தான் அருள்புரிய வேண்டும் சுவாமி!’ என்று வேண்டிக் கொண்டாள் இளையராணி... புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|