![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
17. சிவாஜிக்கு முடிசூட்டு விழா
ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே யாகக் குணமொரு மூன்றும் திருந்து சாத்து விகமேயாக இந்து வாழ்சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்த பேரின் பத்து வெள்ளத்தில் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார். - சேக்கிழாரின் பெரிய புராணம் அகல்யாபாயினுடைய கலக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு ஒரு விளிம்பு வரை போய்த் திரும்பியது போல இருந்தது... இனி சிறிது நேரம் அந்த நடனமாது அரசருடன் பேசுவதையும் கூடப் பொறுக்க மாட்டாள் போலத் தோன்றியது. அதை முகம் வெளிப்படுத்துமுன், தனது உணர்ச்சிகளை அடக்கிப் பார்வையை மெல்ல இழுத்துத் திரும்பினாள். திடீரென்று ஒரு சோகமும் சூன்யமும் அவளைக் கவ்விக் கொண்டது; கண்ணில் நீர் கொதித்து வந்தது. மன்னர் எழுந்து போய்விட்டார். அவளை அழைப்பதற்கு நிற்கவும் இல்லை. ஆதரவுடன் அந்தக் கணிகையின் குரலைக் கேட்டு அதுவரை அமர்ந்திருந்தவர், அவளை ஒரு முறையேனும் பரிவுடன் பார்க்கவுமில்லையே? செயலோய்ந்து போய் அமர்ந்திருந்த இளையராணியை யமுனாபாய் உசுப்பி, உணர்வை எழுப்பித் தெளிய வைத்தாள். “அகல்யா! புறப்படு, எல்லோரும் கிளம்பிப் போய் விட்டார்கள். குழந்தைகள் இருவரும் உனக்காகக் காத்து நிற்கிறார்கள். நானும் கிளம்பியாக வேண்டும்!” என்று தோளைப் பற்றி உலுக்கினாள் யமுனா. எழுந்து நின்ற அகல்யா ஒரு பிரயத்தனத்துடன் கிளம்பினாள். சிவாஜியும், சுலக்ஷணாவும் இரு கைகளையும் பிடித்தபடி வந்ததே ஓர் ஆறுதலாக இருந்தது. பௌர்ணமி நிலவு. குழந்தைகளை அனுப்பிவிட்டு அகல்யாபாய் தனது சயன அறைக்கு வெளியே உள்ள நிலா முற்றத்துக்கு வந்து அமர்ந்து கொண்டாள். சிந்தனையில் நழுவியதில் கண் ஒளி உள்ளுக்கு இழுத்தாற்போல் மயங்கிற்று. கண்களை மூடி இமைகளில் நிலா வெள்ளம் தவழச் சலவைக்கல் திண்டுமேல் சாய்ந்து கொண்டாள். அன்று முன்னிரவில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் நெஞ்சில் ஊர்வலமாக வந்தன... அந்த அழகியின் இளநிலவு முகம், ஆதரவைத் தேடும் பார்வை, கெஞ்சும் குரல், அந்தப் பணிவிலும் கலையாத இளமையின் இறுமாப்பு - எல்லாமே நினைவில் மிதந்தன. தாயை ஒட்டி நின்ற அந்த சிறுபெண்ணிடம் அரும்பும் இளமை, விண்ணென்று இழுத்துக் கட்டியது போன்ற உடற்கட்டு, பெரிய விழிகளில் மிதந்த உல்லாசம் யாவும் படலங்களாக எழுந்தன. நெஞ்சில் இரத்த நாளங்கள் புடைத்தெழுந்தன. நெற்றியில் வியர்வை முத்திட்டது. யாரோ தன்னைத் தொட்டு அழைக்கும் உணர்வில் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். அரசரை அங்கே கண்டதும், உணர்வு தன் யோகம் கலைந்து எழுந்து சிறகு விரித்தது. அவருடைய மடிமீது முகத்தைப் புதைத்துக் கொண்டாள். மன்னர் அவளை வாரி அணைத்துக் கொண்டார். நகமெல்லாம் சதையில் அழுந்துவதைப் போல அவளது இரு கைகளும் அவருடைய தோளைப் பற்றிக் கொண்டன. இளையராணியின் உள்ளங்கையில் உணர்வின் கொதிப்பு தெரிந்தது. சதையின் திரட்சியுள், மென்மையும், தண்ணென்று உடற்செழுமையும், நெருக்கிக் கட்டிய ஜலந்தி மாலையைப் போல அவருடைய மார்பின் மீது அழுந்திற்று. அரசியின் கூந்தல் அவருடைய கன்னத்தில் உராய்ந்தது; புருவம் உயர்ந்தது; இதழ்கள் கலந்தன. ஒரு குழந்தையைத் தேற்றுவதுபோல, அவளைக் கூந்தலிலிருந்து உடல் முழுவதும் தடவிக் கொடுத்தார் அரசர். அந்த அயர்விலும், ஏதோ ஒரு நுண் உணர்வில், தூண்டிவிடப்பட்ட தாபத்தின் சூட்டில், அவர் மீது சாய்ந்து பின்னிக் கொண்டாள் அகல்யா. “அன்பே! உன்னை நாடித்தான் வந்தேன். இன்று உன்னிடம் இந்த அணைப்பைக் கண்டிராவிட்டால் என்னுடல் கொதித்துப் போயிருக்கும்” என்று பளபளத்த மேனி மேல் விரல்கள் விளையாடச் செய்தார் அவர். “இப்போது தான் என்னுடைய நினைவு வந்ததா, அரசே? மாலையில் நேர்ந்த மயக்கம் தீர்ந்து விட்டதா?” என்று அவருடைய கன்னத்தைக் கிள்ளினாள் அகல்யா. மன்னர் விலகி நிமிர்ந்தார். அவருடைய பார்வை அவளுடைய முகத்தைத் தேடிற்று. “உனக்கும் இந்தப் பலவீனமா? என்னிடம் நம்பிக்கை இல்லையா உனக்கு?” என்று கேட்டு அவளுடைய முகத்தை நிமிர்த்தினார். நீர் பூத்த விழிகளில் உள்ள நீரை மெல்லத் துடைத்தார். “உங்களுடைய உள்ளத்தின் உறுதியில் உள்ள நம்பிக்கையை, அந்த கயல் விழியின் கொள்ளை அழகு கலைக்கிறது அரசே! எனக்கு உள்ளத்தில் உறுதி இல்லாமல் போகவில்லை. ஆயினும், அந்த அழகுக்கு ஈடு கொடுக்க என்னால் இயலாது என்றே அஞ்சுகிறேன்” என்று சொன்னாள். தன் மீதே நேர்ந்த இரக்கத்தில் அரசியின் முகம் வாடிற்று; விசும்பல் பொங்கி வந்தது. இதழ்களைக் கடித்துக் கொண்டாள். நொந்த இதழ்களை ஒற்றி எடுத்தார் மன்னர். “எனதன்பே! உன் கவலை நியாயமற்றது. என் பொறுப்புகள் எனக்குத் தெரியும். ஆயினும், நான் மற்ற அரசர்களைப் போல அல்ல. அரிய கலைகளைப் போற்றுவது என் உயிர் மூச்சு. கலையை வணங்கும் அந்தப் பெண்ணை நான் வெகுவாக மதிக்கிறேன். அதனாலே அவளுக்கு அந்த வாக்குறுதியை அளித்தேன். அதில் தவறு ஏதும் இல்லை. அந்தப் பெண்ணின் மகள் சுப்பராய ஓதுவார் என்ற நட்டுவாங்கத்தில் வல்லவரின் ஆதரவில் கலை பயிலுவாள். தத்தாஜி அப்பாவின் நிலங்களை மேற்பார்வையிடும் பாபண்ணாவின் இல்லத்தில் அவள் தங்குவாள். அவளுக்கு ஏதேனும் சிரமம் இருந்தால் என்னிடம் வந்து முறையிடலாம் என்று நான் ஏற்பாடு செய்யப் போகிறேன். நான் காசியாத்திரை செல்லும் போது நிர்வாகப் பொறுப்பில் இருக்கப் போகும் சிவாஜியிடம் வந்து சொல்லலாம்!” “அரசே! அந்தப் பெண் புவனமோகினியை நமது மகனுடன் தொடர்பு கொள்ள வழி செய்யப் போகிறீர்களா? அவளால் நேரக்கூடிய தீங்கைத் தாங்கள் புரிந்து கொள்ளவில்லையோ என்று அஞ்சுகிறேன். எதற்கும் எண்ணித் துணிவது நல்லது!” “என்ன அகல்யா? அந்த அறியாப் பெண்ணின் மீது உனக்கு ஏன் இவ்வளவு கோபம்? அந்தச் சிறுபெண் உன்னை என்ன செய்தாள்? பரத நாட்டியம் கற்றுக் கொள்ள விரும்புகிறாள். அவ்வளவுதானே?” “அரச குடும்பத்தை எட்ட அது ஓர் ஏணி என்றே எனக்குத் தோன்றுகிறது. தாங்கள் நினைப்பது போல அந்த சித்திரசேனா அவ்வளவு எளிமையானவள் அல்ல. மிகச் சாதுரியமாக அவள் ஆடும் ஆட்டத்தில், அவளுடைய அழகு மகள் ஒரு பகடைக்காய் என்பதே உண்மை. ஆட்டத்தை ஜெயிப்பது பகடைக்காய்தான். ஆனால், அதைப் பயன்படுத்துபவரின் சாமர்த்தியத்தில்தான் வெற்றி அடங்கி இருக்கிறது!” “நீ என்னைப் பற்றி கவலைப்பட்டதைப் போல, இப்போது உனது மகனைப் பற்றி கவலைப்படுகிறாய் என்று எண்ணுகிறேன். அவன் இன்னும் இளமையைக் கூட முழுமையாக எட்டவில்லை என்பதை நினைத்துப் பார்த்தாயா?” “அரசே! அவனை அந்த உணர்வுக்கு இழுக்கக் கூடியவள் தான் அந்தப் பெண். அந்த சௌந்தரவல்லியின் மகளும் ஒரு மோகவல்லியாகவே இருக்கப் போகிறாள். நான் கவனித்தேன். துருதுருவென்று அலையும் அந்தக் கண்கள் யாரையும் கவரக் கூடியவை!” “உன் மனத்தைச் சந்தேகப் புகை மூண்டு மறைக்கிறது அல்லவா? உன்னால் உண்மையைப் புரிந்து கொள்ள முடியாது. அந்தப் பிரமையிலிருந்து நீ முதலில் விடுபட வேண்டும். அதுவரை உன் குழப்பம் தீராது!” “இல்லை சுவாமி! நீங்கள் தான் சரியான நிலைமையை உணர்ந்து கொள்ளவில்லை. இரும்புத் துண்டு உள்ள இடத்தில் காந்தத்தைக் கொண்டு வந்து அருகில் வைக்கிறீர்கள். இரும்பு வேண்டாமென்றாலும் அது இழுக்காமல் விட்டுவிடுமா?” “நான் உறுதி கூறுகிறேன். என் மகனை நான் நல்ல முறையில் வழிப்படுத்தி வளர்ப்பேன். யாரும் அவனை அவ்வளவு எளிதில் வசப்படுத்தி விட முடியாது. உனக்குக் கவலை வேண்டாம். என்னை மீறி அவன் எதுவும் செய்ய மாட்டான்!” “எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறீர்கள் சுவாமி!” “அவனிடம் நான் கொண்டுள்ள நம்பிக்கை தான் என்னை அவ்வாறு சொல்ல வைக்கிறது. தாயைத் தெய்வமாக மதித்த மகாவீரரின் பெயரை அவனுக்கு நான் வைத்திருக்கிறேன். அவன் உனக்குப் பிடிக்காதது எதையும் செய்ய மாட்டான். அவனுடைய பொறுப்புகளை அவன் உணர வேண்டும் என்பதற்காகவே, அடுத்த வாரம் அவனை இளவரசனாக அறிவித்து முடி சூட்டப் போகிறேன். அவன் இந்தத் தஞ்சைத் தரணியின் நாளைய அரசனாக விளங்கப் போகிறான்!” என்றார் அரசர். “முடிசூட்டு விழாவா? நமது அருமை மைந்தன் சிவாஜிக்கா?” என்று முகமலர்ந்து கேட்டாள் இளையராணி. ஆவல் மிகுந்து அரசரை ஆரத் தழுவிக் கொண்டாள். அவள் முகம் அவருடைய மார்பில் பதிந்தது. குரல் செல்லமாகச் சிணுங்கிற்று. அரசரின் விரல்கள் அவளுடைய பளிங்கு முதுகை மெல்ல வருடிற்று. ஒரு குழந்தையைப் போல அவளை அள்ளித் தூக்கி அணைத்தபடியே, உள்ளே சென்று சயன மஞ்சத்தில் கிடத்தினார் மன்னர். ஊடலுக்குப் பின் இனிதே நேர்ந்த அந்த நெருக்கத்தைக் காண நாணி, வெண்ணிலவும் கருமுகிலுள் மறைந்தது! புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|