2. ஒரு தாயின் கலக்கம்

     வன்புலால் வேலும் அஞ்சேன்
     வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
     என்பெலாம் உருக நோக்கி
     அம்பலத்தே ஆடுகின்ற
     என்பொலா மணியை ஏத்தி
     இனிது அருள் பருகமாட்டா
     அன்பு இல்லாதவரைக் கண்டால்
     அம்ம! நான் அஞ்சுமாறே...

               - திருவாசகம்

     திரும்பி வரும் வழியில் நெடுந்தூரம் சுலக்‌ஷணா பேசவேயில்லை. அவளுடைய கருவிழிகள் மட்டும் பல்லக்கில் இருந்த திரையில் உள்ள சிறு துவாரத்தின் வழியே ஆவலுடன் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. மருண்டு நிற்கும் ஒரு மான்குட்டியைப் போன்ற அந்தப் பெண்ணின் சிறு கலக்கமும் பார்க்க ஒரு விதத்தில் அழகாகவே இருந்தது. இளமைப் பொலிவு இதழ் விரியக் காத்திருக்கும் அவளது தோற்றத்தைக் கண்டு ஒரு கணம் பூரித்துப் போனாள் அகல்யாபாய்.

     “அம்மா! அதோ பார். ஊர்வலத்தில் நாட்டியமாடிய பெண்கள் செல்வதைப் பார்!” என்று ஆவலில் கண்கள் விரிய கூறினாள் சுலக்‌ஷணா. அவள் பார்வை சென்ற திசையில் பார்த்தாள் இளையராணி. ஆடலழகிகளாகத் திகழ்ந்த கணிகையர் இருவர் அங்கே இளைஞர்கள் மத்தியில் சிரித்த வண்ணம் நின்று கொண்டிருந்தார்கள். செல்வந்தர்களான அந்த இளைஞர்கள் அந்த அழகிகளின் கடைக்கண் பார்வைக்காகக் காத்து நின்றார்கள். அந்த இளம்பெண்கள் விரும்பினால் முத்தும் பவழமும் அவர்கள் மீது சொரியக் காத்திருந்தன.

     “அவர்கள் ஏனம்மா அந்த இளைஞர்கள் மத்தியில் வரவேண்டும்? அந்த இளைஞர்கள் பார்க்கும் பார்வையை என்னால் கூடப் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே? அவர்கள் எதற்காக அம்மா அந்த இளைஞர்களுடன் சிரித்துப் பேசிய வண்ணம் நடந்து வருகிறார்கள்?” என்று மனக்குமுறலுடன் கேட்டாள் சுலக்‌ஷணா.

     “உனக்கு இப்போது நான் சொன்னால் புரியாது மகளே! இது போன்ற இளைஞர்களின் உல்லாசத்துக்காகவும், மகிழ்ச்சிக்காகவுமே பிறந்த அழகிகள் அவர்கள். பேசினாலும், சிரித்தாலும், ஆடினாலும், பாடினாலும் அவர்கள் கவர்ச்சியைக் காட்டி மயக்கக் கூடியவர்கள். அதனாலேயே பணம் படைத்தவர்கள் அவர்களை நாடிச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள்!” என்றாள் அகல்யாபாய்.

     “அம்மா! என்னால் இதைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அவர்களுடைய அழகும், அவர்களுடைய நடனமும் ஆராதிப்பதற்கு உரியவை. தெய்வீகமான அந்த எழில், அற்பமான ஆசைகளுக்காக ஏற்பட்டதல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. என்னை எப்படி நீ பிறர் கண் பார்வையும் படக்கூடாது என்று கட்டிக் காத்து வருகிறாயோ, அதேபோல அந்த எழில் மங்கையரைப் பெற்ற தாய்மார்களும் அந்தப் பேரழகிற்கு மதிப்பும் மரியாதையும் தரவேண்டும் என்றே நான் எண்ணுகிறேன்” என்றாள் சுலக்‌ஷணா.

     உலகந்தெரியாத அந்தப் பெண்ணின் மன உணர்வுகள் தாயின் நெஞ்சத்தைத் தொட்டன. மேலும் அதைப் பற்றி அவளிடம் பேசுவது சரியல்ல என்று புரிந்து கொண்டாள். பேச்சைத் திசை திருப்ப விரும்பியவளாய், “உன் அண்ணன் சிவாஜி கேரள நாட்டிலிருந்து நாளை திரும்பி வருகிறான். உனக்காக அவனிடம் என்ன கொண்டு வர வேண்டும் என்று சொல்லி அனுப்பினாய்? தந்தப் பொம்மையா? தங்க நகையா? போர்த்துக்கீசியர் அங்கே கொண்டு வந்து விற்பனை செய்யும் மிக மெல்லிய பட்டுத்துணிகளா?” என்று கேட்டாள்.

     இளமைப் பருவத்தை எட்ட நினைக்கும் அந்தப் பெண்ணின் முகம் சட்டென்று ஒளி நிறைந்து ததும்பிற்று. “உன்னிடம் சொல்ல மாட்டேன் அம்மா! அது எனக்கும் என் அண்ணனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அது தஞ்சையிலே நீ காணமுடியாத ஓர் அபூர்வப் பொருள்! இதுவரை நான் உபயோகித்தே இராத அழகுப் பொருள்!” என்று சொல்லிக் கையைக் கொட்டி ‘கலீர்’ என்று நகைத்தாள் சுலக்‌ஷணா.

     மகளின் கள்ளமற்ற சிரிப்பைக் கண்டு பெருமையும், அவளுடைய உள்ளத்தில் தோன்றியுள்ள ஆசை எப்படிப்பட்டதோ என்ற வியாகூலமும் கலந்து நிற்க, மேலே பேசத் தோன்றாதவளாய் அப்படியே அமர்ந்து விட்டாள் இளையராணி. அந்தப்புரத்துக்கு வந்து பல்லக்கு இறக்கப்பட்டு, உள்ளே செல்லும் வரையில் வாயைத் திறக்கவே இல்லை.

     முதன் முறையாக அரண்மனைக்கு வெளியே சென்று நகரின் அழகையும், ஊர்வலத்தின் சிறப்பையும், ஈசன் தரிசனத்தையும் கண்டு திரும்பிய பெருமிதம் முகத்தில் ததும்பி நிற்க, தாயின் பின் கால் மெட்டி ஒலி எழுப்ப உள்ளே ஓடி வந்தாள் சுலக்‌ஷணா.

     தெய்வ சந்நிதியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த பிரசாதத்தையும், பழங்களையும், மலர்மாலைகளையும், சந்தன-குங்கும வகைகளையும் பெரிய வெள்ளித் தாம்பாளம் ஒன்றில் கொண்டு வைத்தான் பணியாள். அதிலிருந்து குங்குமத்தை மட்டும் தேர்ந்தெடுத்து மகளின் நெற்றியிலிட்டாள் அகல்யாபாய். “ஈசனே! இந்தக் குழந்தையின் வாழ்வில் ஒரு குறையுமின்றித் திகழத் தாங்கள் தாம் அருள் புரிய வேண்டும்!” என்று மனத்தினுள் வேண்டிக் கொண்டாள்.

     “அம்மா! இன்று முதன் முறையாக வெளியே வந்து பெருவுடையார் கோவிலைப் பார்த்துவிட்டுத் திரும்பிய பிறகு, என்னுடைய மனத்தில் ஓர் ஆசை அரும்பி நிற்கிறது. உன்னிடம் மனம் விட்டுப் பேசலாமா?” என்று கேட்டாள் சுலக்‌ஷணா.

     “கேள் மகளே! என்னிடம் கேட்பதற்கு உனக்கு என்ன தயக்கம்? நீ விரும்புவது விலையுயர்ந்த நகைகளா? புதுமையான பட்டாடையா? மனத்தை மயக்கும் வாசனைத் திரவியங்களா? அல்லது...” என்று மேலே எதைச் சொல்லிக் கேட்கலாம் என்று எண்ணித் தயங்கி நின்றாள் அகல்யாபாய்.

     “அவை எதுவுமே இல்லை அம்மா! அந்த அழகான பெண்கள் இன்று நடனமாடிய காட்சியைப் பார்த்த பிறகு, எனக்கும் பரதநாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஓர் ஆசை தோன்றி இருக்கிறது. நான் கற்றுக் கொள்ளலாமா? நீ ஏற்பாடு செய்வாயா?” என்று கூறிச் செல்லமாகத் தாயை அணைத்துக் கொண்டு, கழுத்தைச் சுற்றி நிற்க, முகத்தை அருகே இழுத்துக் கொண்டாள் அவள்.

     சட்டென்று இளையராணிக்கு முகத்தில் இருந்த மென்மை கடுமையாக மாறிற்று. மகளின் விபரீத ஆசையைப் பொறாத மனத்துடிப்பு முகத்தில் தெரிய, “சீ! கண்டவாறெல்லாம் பேசாதே! இந்த ஆடலும் பாடலும் அதுபோன்ற பெண்களுக்கே உரியவை. அரசகுலத்தில் பிறந்த நீ அவர்களைப் பார்த்து இவ்வாறு ஆசைப்படுவதா? இன்னொரு முறை இதுபோன்ற சிந்தனை கூட உனது மனத்தில் எழக்கூடாது மகளே!” என்று கண்டித்துவிட்டு, கழுத்தை அணைத்த மகளின் கரங்களைப் பிடுங்கி எறிந்தாள் இளைய ராணி.

     தாயின் கோபத்தைச் சற்றும் எதிர்பாராத அவளால் அந்தச் சுடு சொற்களைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முகத்தில் தவழ்ந்த குறுநகை நொடியில் மறைந்து போயிற்று. தாங்கவொண்ணாத ஏமாற்றம் முகத்தில் தெரிய, கண்களில் நீர் அரும்பி நிற்கச் சட்டென்று திரும்பி உள்ளே ஓடிவிட்டாள் சுலக்‌ஷணா.

     என்னனென்னவோ எண்ணிக் கொண்டு ஈசனின் திருஊர்வலக் காட்சியைக் காண இந்தப் பெண்ணை அழைத்துச் சென்றேன். ‘அவளுடைய மனத்தில் விபரீதமான ஆசைகள் தோன்ற இதுவே காரணமாக ஆகிவிட்டதே. இதன் விளைவுகள் எப்படி இருக்குமோ?’ என்று கலங்கியவளாய் பிரசாதத் தட்டைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டு தனது அறைக்குச் சென்றாள் அகல்யாபாய்.

     முன்னிரவு நேரம். மாடத்தின் ஓரமாக அமர்ந்த வண்ணம் அகல்யாபாய் வெளியே தெரிந்த நிலவொளியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நிலவின் கதிர்கள் பின்புறமிருந்த நிலைக்கண்ணாடியில் பட்டு, கிரணக்கற்றையாக அவளைச் சூழ்ந்து நின்றன. ஆலயத்துக்குச் செல்ல அணிந்திருந்த விலையுயர்ந்த பட்டுப் புடவையை அவிழ்த்து மாற்றிக் கொண்டு, மெல்லிய நூல் சேலை ஒன்றையே உடுத்துக் கொண்டிருந்தாள் இளையராணி. அவளுடைய சிற்றிடையை அலங்கரித்த ஒட்டியாணத்தைக் கழற்றி வைத்துவிட்டு, மெல்லிய அங்கி ஒன்றையே இடையைச் சுற்றி அணிந்திருந்தாள்.

     தாம்பூலம் தரித்த செவ்விதழ்களும், லேசாகச் சிவந்த ரோஜா நிறக் கன்னங்களும் முகத்தின் அழகிற்கு மெருகேற்ற கண்களை மூடியவண்ணம் தான் அமர்ந்திருந்த ஆசனத்தில் மெத்தையில் சாய்ந்து கொண்டாள் அவள். அன்று அவள் எதிர்பார்த்திருந்த அந்த அபூர்வ மணம் பின்புறமிருந்து காற்றில் மெல்லத் தவழ்ந்து வந்தது. வேண்டுமென்றே கண்களைத் திறவாமல், மெத்தையில் சரிந்த முகத்தை சிறிதும் அசைக்காமல் அப்படியே சிலையாக அமர்ந்திருந்தாள் அகல்யாபாய்.

     இரத்தினக் கம்பளத்தில் மெல்ல அழுத்தியவண்ணம் நடந்துவந்த காலடி, இளையராணியின் பின்புறம் வந்து நின்றது. மோதிரங்கள் அணிந்த விரல்கள் ராணியின் கொழுவிய கன்னங்களைப் பிடித்து நிமிர்த்தின. முகம் அருகே வந்து குனிந்தது. அப்போதும் கண்களைத் திறவாமல் இதழ்களில் மலர்ந்த புன்னகை மாறாமல் அமர்ந்திருந்தாள் அவள்.

     “அன்பே! என் மீது உனக்கு ஏதாவது கோபமா?” என்று கேட்டார் அரசர் சரபோஜி. இளையராணி பதில் சொல்லவில்லை. ஆனால் பதில் கூறுவதைப் போல முகம் நளினமாக அசைந்தது.

     “இந்த மென்மையான கோபமும் அதைக் காட்டும் அழுந்தி நின்ற இதழ்களும் உனது அழகுக்கு மெருகூட்டத் தான் செய்கின்றன அகல்யா!” என்று கூறி அவளைத் தூக்கி நிறுத்தினார் அரசர். இளையராணியின் கண்ணிமைகள் திறந்தன. முகத்தை நெருங்கி அரசரின் முகத்தைப் பார்க்க இயலாமல் ஒரு நாணம் அவளைச் சூழ்ந்தது. மனத்துள் ஏதோ ஒரு குமுறல் தெரிய அரசரிடமிருந்து விலகி நிற்க அவள் மென்மையான உடல் சிலிர்த்துத் துடித்தது.

     அவள் சற்றும் எதிர்பாராத வண்ணம் மன்னர் அவளுடைய இரு தோள்களையும் இறுகப் பற்றி அருகே இழுத்துக் கொண்டார். இளையராணியின் மென்மையான உடல் அவருடைய பரந்த மார்பில் அழுந்திப் புதைந்தது. இன்னும் யௌவனத்தின் மெருகு மங்காத அந்த மேனியைத் தழுவி அனுபவித்த வண்ணம், தனது வலது கரத்தால் முகத்தைப் பிடிவாதமாக நிமிர்த்தினார் அரசர் சரபோஜி.

     இதழ்கள் கலந்தன. தழுவிய இடது கரம் முதுகில் கோலமிட்டது. ஒயிலாக வளைந்த மெல்லுடலை அப்படியே பற்றித் தூக்கிக் கொண்டார் அரசர். தன்னுள் ஓர் ஆசைத்தீ பரவி அணு அணுவாக விரவி நிற்பதை உணர்ந்தாள் அவள். அவருடைய ஆர்வத் துடிப்பில் மூழ்கித் தன்னை மறந்துவிடத் துடித்தாள் இளையராணி.

     “அன்பே! உன்னுடைய கோபந்தான் என்ன? எனக்குத் தெரியக்கூடாதா?” என்று கேட்டார் மன்னர்.

     “தங்களுக்குத் தெரியாதது இல்லை. கல்யாண மகால் பெண்கள் இப்போது யாவரும் அறிந்த மகளிர் ஆகிவிட்டனர். அரண்மனையிலேயே அஞ்சுமாடி கட்டப்படப் போவதாகப் பேசிக் கொள்கிறார்கள். தங்களைப் போன்ற பேரரசர்களின் ஆசையைப் பகிர்ந்து கொள்ளப் பலர் இருக்கலாம். ஆனால் அந்தரங்கமாக இருக்க வேண்டிய விஷயம் இப்படி பகிரங்கமாக வெளிவர தாங்கள் இடந்தரலாமா?” என்று கேட்டாள் அகல்யாபாய். பேசும்போதே குரலில் உறுதி தளர்ந்தது. கண்களைப் போல கலங்கி, இழுத்தாற் போல நின்றது.

     “இதில் நீ மனம் வருந்த ஒன்றும் இல்லை அன்பே! சிறிது நேரம் மணம் வீச மார்பில் மரியாதையாக அணியும் மலர் மாலைகளைப் போன்றவர்கள் அவர்கள். எப்போதும் அழகும் கம்பீரமும் தர மார்பில் துலங்கும் முத்துமாலையைப் போன்றவள் நீ. இந்த வேறுபாடு உனக்குப் புலப்படவில்லையா?” என்று கேட்டார் சரபோஜி.

     “எனக்குத் தெரியும். உங்கள் மகளுக்குத் தெரியுமா? அவளால் புரிந்து கொள்ள முடியுமா? அரசே! அவளுக்கு விவரம் தெரிந்து கொள்ளும் வயது வந்துவிட்டது. அதைத் தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டாமா? நான் அவளுடைய கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லுவேன்?” என்று கலங்கினாள் இளையராணி. புலுபுலுவென்று கண்ணீர் மாலையாகக் கன்னங்களிலிருந்து இறங்கி அவரது மார்பைச் சுட்டது.

     “உனக்கு உறுதி கூறுகிறேன் அகல்யா! என்னுடைய அந்தரங்க வாழ்க்கை என் குழந்தைகளுக்கு ஒரு நாளும் தெரியாது. இன்று சுலக்‌ஷணா கேட்ட கேள்வியை நானும் கேட்டேன். ஓரளவு என்னை உலுக்கிய அந்தக் கேள்விக்கு விடை தேடியே உன்னை நாடி வந்தேன்” என்று அவளை அன்புடன் அணைத்துத் தூக்கி மஞ்சத்தில் மெல்ல அமர்த்தினார் சரபோஜி மன்னர். அவருடைய வலிய கரங்கள் அவளுடைய இடையை வளையமாகச் சூழ்ந்தன. பெருமிதம் ததும்ப புது மலர்ச்சியுடன் முகம் நிமிர்ந்த அகல்யாபாயின் பார்வை ஒரு கணம் அறை வாசலின் புறம் திரும்பி குத்திட்டு நின்றது. விவரிக்கவொண்ணாத நாணம் சூழ, குலுங்கி நிமிர்ந்து எழுந்து நின்றாள். அங்கே அறைவாசலில் கண் வைத்த பார்வை மாறாது நின்று கொண்டிருந்தாள் சுலக்‌ஷணா.

     தாயின் பார்வை தன் மீது விழுந்ததும் பட்டுப் பாவாடையை முழங்கால் வரை உயர்த்திய வண்ணம் அந்த இடை கழியைக் கடந்து தனது அறையை நோக்கி ஓடினாள் அவள். அறையின் கதவை மூடித் தாழிட்டாள். ஆடை நிலைகுலைய மஞ்சத்தில் ஏறிக் குப்புறப்படுத்துக் கொண்டாள். முகம் தலையணையில் அழுந்திற்று.

     பார்க்கக்கூடாத ஒரு காட்சியை கண்டுவிட்டது போலவும், இனம் தெரியாத கிலேசமும் வெட்கமும் தன்னைச் சூழ்ந்து கொண்டது போலவும் உணர்ந்தாள் சுலக்‌ஷணா. கண்களிலிருந்து நீர் சொரிய இமைகளை இறுக மூடிக் கொண்டு விசும்பலை அடக்கிக் கொண்டாள். நித்திரையின் இருட்போர்வை மெல்ல மெல்ல அவளை மூடி அணைத்துக் கொண்டது. கன்னங்களில் நீர்க்கறை காயுமுன் துயிலில் மெல்ல மெல்லத் தன்னிலை மறந்து போனாள்...

     அரண்மனை விழாக்கோலம் பூண்டிருந்தது...

     அரசரும் அகல்யாபாயும் வசந்த மண்டபத்தில் அமர்ந்திருந்தார்கள். மூத்த ராணியார் யமுனாபாய் கேரளத்திலிருந்து திரும்பிவரும் இளவரசன் சிவாஜியை வரவேற்கத் தயாராகக் காத்துக் கொண்டு வாயிலில் நின்றிருந்தாள். மெத்தென்ற நடைபாதை விரிப்பு வாயிலிலிருந்து வசந்த மண்டபம் வரையில் நீண்டது. இருபுறமும் வெள்ளிக் கலசங்களில் மலர்கள் ஏற்றிய தாதிப் பெண்கள் காத்து நின்றார்கள்.

     இடையில் குடத்தில் மங்கல நீரும் இடையில் செருக்குமாக இரு பெண்கள் வாயிலில் தெளிக்கக் காத்து நின்றார்கள். இளமையின் கீதமாக இசையை முனகியபடி ஆரத்தி எடுக்க மங்கையர் இருவர் தயாராக நின்றார்கள். மங்கல தீபம் கொழுந்தாக ஒளிவிட ஒரு சுமங்கலிப் பெண் படிக்கட்டில் எதிர்பார்த்து நின்றாள்.

     சுலக்‌ஷணா வாயிலில் விரிந்த பூவாகப் போடப்பட்டிருந்த வண்ணக் கோலத்தின் நடுவே நின்றிருந்தாள். அண்ணன் சிவாஜி வரப் போகும் நிகழ்ச்சியை எதிர்நோக்கி அவள் முகத்தில் ததும்பிய பொலிவு தனிக்கவர்ச்சியுடன் மிளிர்ந்தது.

     பெரிய கோவிலிலிருந்து ஆலயமணியின் கார்வை காற்றில் தீர்க்கமாக இறங்கிற்று. வாத்தியங்கள் ஒலிக்க சாரட் வண்டி வாசலில் வந்து நின்றது. பணியாட்கள் கதவைத் திறந்து விட, மங்கள ஆரத்தி எடுக்கும் பெண்கள் நெருங்கிவர, தூபதீப வரவேற்புக்கு நடுவே இளவரசன் சிவாஜி கீழே இறங்கினான்.

     யமுனாபாய் படி இறங்கி வந்து அவனைக் கைலாகு கொடுத்து உள்ளே அழைத்துக் கொண்டாள். சுலக்‌ஷணா ஓடி வந்து அவன் இடது கரத்தின் மோதிர விரல்களைப் பற்றிக் கொண்டாள். பெற்றோரின் பெருமிதம் ததும்பும் பார்வையோடு சரபோஜியும், அகல்யாபாயும் மகனைப் பரிவுடன் வரவேற்றனர். மங்கள இசை ஒலிக்க, மலர்கள் தூவிய விரிப்பில் நடந்து வந்து சிவாஜி அவர்கள் முன் மண்டியிட்டு இடைவாளை உருவிக் கீழே படிய வைத்து வணங்கினான். தந்தையின் ஆசியைப் பெற்றவனாய் நிமிர்ந்தான்.

     “உன் ஆவல் தீர கேரளப் பிரதேசத்தை சுற்றிப் பார்த்தாயா சிவாஜி?” என்று கேட்டார் சரபோஜி.

     “வெயிலில் நிறைய அலைந்து களைத்திருக்கிறான். அவனுடைய செப்பு நிற மேனியில் அது தெரிகிறது” என்று பெருமையுடன் கூறிக் கொண்டாள் அகல்யாபாய்.

     அண்ணனின் அருகே வந்து நின்று, கழுத்தைக் கீழே வளைத்து, கொஞ்சும் குரலில், “எனக்கு என்ன வாங்கி வந்தாய் அண்ணா?” என்று கேட்டாள் சுலக்‌ஷணா.

     “பின்னாலேயே பெட்டியில் வருகிறது. விரைவில் நீயும் அதைப் பார்க்கப் போகிறாய். அதுபோன்ற அழகான பொருளை நீ இதுவரை பார்த்திருக்க மாட்டாய்!” என்றான் சிவாஜி ரகசியக் குரலில்!

     “அழகான பொருளா?” என்று ஆவலோடு கேட்டாள் சுலக்‌ஷணா.

     “ஆமாம்... அழகானது மட்டுமல்ல; எதற்கும் கேள்விகள் கேட்டு உன்னை வாய் மூடி மௌனியாக்கிவிடக் கூடிய அளவுக்கு, அதற்கு சொக்க வைக்கும் கவர்ச்சியும் உண்டு!” என்று அவள் கன்னத்தில் கிள்ளினான் சிவாஜி.

     கிடைக்கப் போகும் பரிசை எதிர்பார்த்து நின்றாள் சுலக்‌ஷணா. அவர்கள் இருவருடைய ரகசியப் பேச்சையும் சிறிது மனக்கலக்கத்துடன் கவனித்தபடி அமர்ந்திருந்தாள் இளையராணி அகல்யாபாய்.


புவன மோகினி : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38