உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
9. கைகொடுத்த பாதிரியார்
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலத்தைப் போல, தம்மை இகழ்வோரையும் பொறுப்பதே தலையாய பண்பாகும்.) - திருக்குறள் (பொறையுடைமை) அந்த நிலாமுற்றம் உருகி வெள்ளி போன்ற ஒளி வெள்ளத்தில் குளித்திருந்தது. குளிர்ந்து வந்த காற்றில் அந்தக் கலை மண்டபத்தைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த மலர்ச் செடிகளின் மணம் மிதந்து வந்தது. அதே போல சரபோஜி மன்னரின் மனத்திலும் அந்த நாளைய நினைவுகளின் மணம் நிறைந்திருந்தது. உணர்ச்சி மிகுந்த குரலில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவர் பேசத் தொடங்கினார்... “கல்கத்தாவில் இருந்தவர்கள் சென்னையில் இருந்த அதிகாரி சிராஜ் கமாலைத் தஞ்சைக்குப் போய் நேரில் விசாரித்து அறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்கள். தஞ்சையிலுள்ள ஆங்கிலேய சர்தாரையும் இதில் கலந்து கொள்ளும்படி அவர்கள் யோசனையும் கூறி இருந்தார்கள். சென்னையிலிருந்து துரை தனது மனைவியுடன் தஞ்சாவூருக்கு வந்து சேர்ந்தார். சகல மரியாதையுடன் அவரை வரவேற்று, காவேரிக் கரையிலேயே ஓர் அழகான மாளிகையில் அமர்த்தி, இங்கே இருந்த சர்தாரும் அமர்சிங்கின் துணைவர்களும் அவருடைய மனப்பாங்கைத் தங்களுக்குச் சாதகமாக உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்...” “தந்தையே! தங்களைப் பற்றி எடுத்துச் சொல்ல இங்கே யாருமே இல்லையா? உண்மையையும் நியாயத்தையும் எடுத்துக் கூறி தங்கள் சார்பில் வாதாட எவருமே இல்லையா? பதவிப் பற்றும் பணத்தாசையும் அந்த அளவுக்கா எல்லோருடைய கண்களையும் மறைத்து விட்டன?” என்று மனக் குமுறலுடன் கேட்டான் சிவாஜி. “ஆம் மகனே! இந்த நாட்டின் சரித்திரத்தைப் பற்றி பழைய நூல்கள் பலவும் இந்த சரசுவதி மகாலில் இருக்கின்றன. ஆங்கிலேயர் வந்த பிறகு நடந்தவற்றையும் எழுதத் தொடங்கி இருக்கிறோம். இவற்றை நான் காசிக்குப் போன பின்பு, உனக்கு அவகாசம் கிடைக்கும் போது, படித்துப் பார். அவற்றில் பல முடி மன்னர்களுடைய நல்ல ஆட்சியும், அவர்களைச் சார்ந்தவர்களுடைய சூழ்ச்சியாலேயே கவிழ்க்கப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்வாய்! வெளிநாட்டிலிருந்து படை எடுத்து வந்தவர்களுடன் சேர்ந்து கொண்டு, நம் நாட்டினரிடையே உள்ள வெகுசிலரே துரோகிகளாக மாறியதைத் தெரிந்து கொள்வாய். அப்படியெல்லாம் நாட்டில் பற்றும், நன்றி உணர்வும் இல்லாதவர்கள் நடந்து கொண்ட விதத்தினால் தான், இன்று இந்தியா முழுவதும் ஆங்கிலேயர்கள் வேரூன்றி விட்டார்கள். நல்ல உள்ளம் படைத்த சிலர் ஒதுங்கி மறைந்து செயலற்று வாழ வேண்டிய துர்ப்பாக்கியமான நிலையும் ஏற்பட்டிருக்கிறது!” “இங்கே அப்படி நடந்த சூழ்ச்சி என்ன தந்தையே?” “அமர்சிங்கின் பக்கத்தில் உள்ளவர்களையும், என் பக்கத்தில் உள்ளவர்களையும் கூப்பிட்டு விசாரணை நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பெயர் அளவில் தான் அப்படிச் சொன்னார்களே தவிர, என்னுடைய சார்பில் பேசக்கூடிய எவரையுமே அவர்கள் அழைக்கவில்லை. நடுநிலைமையில் உள்ளவர்களையும், ஆட்சிக்கலை தெரிந்தவர்களையும் துளஜா மன்னருடன் நெருங்ஞ்கிப் பழகியவர்களையும் அழைக்கப் போவதாகச் சொன்னார்கள். ஆனால் அங்கே போய் சாட்சி சொல்ல முன் வந்தவர்களோ, அரசியலைப் பற்றி ஏதும் தெரியாத சாஸ்திர பண்டிதர்கள். அவர்கள் அமர்சிங்கிற்குச் சாதகமாகவே கூறினார்கள். மரணத்துக்கு முன்பு, துளஜா மகாராஜா தனக்கு வாரிசாக அமர்சிங் வர வேண்டும் என்று விரும்பியதாகவும் கூறினார்கள். அந்த உண்மையை யாரும் விசாரித்து அறியக் கூடிய வாய்ப்பும் இல்லை. ஏனெனில் துளஜா மகாராஜா உயிர் துறந்த போது யாருமே அவருடன் இல்லை...” “ஒரே ஒரு சந்தேகம்! தங்களை அன்புடன் வளர்த்தவர் ஆயிற்றே ஸ்வார்ஷ் பாதிரியார்? அவர் ஆங்கிலேயருக்கு வேண்டியவராகவும் இருந்திருப்பார் அல்லவா? அவரையுமா விசாரிக்கவில்லை?” “சரியான கேள்வி கேட்டாய் மகனே! அவர் ஒருவர் மட்டுமே என் சார்பில் வாதாடக் கூடியவராக இருந்தார். இருப்பினும் அவரை அவர்கள் கூப்பிடவில்லை. இந்த நிகழ்ச்சிகள் நடந்த விவரமே அவருக்குப் பின்னர் தான் தெரியும். அதற்குள் விசாரணையை முடித்து, சிராஜ்காமல் தனது அறிக்கையை கல்கத்தாவுக்கு அனுப்பிவிட்டார். அங்கே இருந்தவர்களும் அவருடைய பரிந்துரையை ஏற்றுக் கொண்டு அமர்சிங்கையே அரசராக ஏற்றுக் கொண்டு விட்டார்கள்!” “தாங்கள் அப்போது யாருடைய வசம் இருந்தீர்கள்!” “அரண்மனையில் தான் இருந்தேன். அதனால் அமர்சிங்கிற்கு வேண்டியவர்கள் என்னை மடக்கி மறைத்து வைத்திருந்தார்கள். நாட்டில் எனக்குச் சாதகமாகப் பேசக் கூடியவர்கள் யாரையும் நான் சந்திக்கவும் முடியவில்லை. அமர்சிங்கும் என்னைப் பொறாமையினால் உபத்திரவம் செய்து கொண்டே இருந்தார். இருப்பினும் என்னைக் கொன்றுவிடக் கூடிய துணிச்சல் யாருக்கும் வரவில்லை. ஆலகால நஞ்சையும் உண்ட ஈசுவரன், உலகத்தையே ஆளும் பெருவுடையாராக இந்த ஊரில் கொலுவிருந்தது, என்னையும் - என் போன்ற எளியவர்களையும் காப்பாற்றுவதற்காகவே அல்லவா? அந்த இறையருளே எனக்கும் நல்லகாலம் பிறக்க வழி காட்டிற்று.” “அதற்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று தந்தையே?” “என்னுடைய கல்வி அறிவு எனக்கு வழி காட்டிற்று. என்னை ஆளும் அன்னை கலைமகளே என்னை நல்வழிப் படுத்தி, அரச பதவியில் அமர்த்தினாள். நான் எழுதிய குறிப்புக்களையும், இயற்றிய சில நூல்களையும் தஞ்சையில் அப்போது இருந்த சர்தாரிடம் கொடுத்தேன். அவர் அதைப் பற்றி மதிப்புரை தருமாறு ஸ்வார்ஷ் பாதிரியாரிடம் கொடுத்தார். அதன் அருமையை உணர்ந்த பாதிரியார் அவற்றை நகல் எடுத்துக் கும்பெனியாரின் தலைமையகத்துக்கு அனுப்பி வைத்தார். ‘இப்படிப்பட்ட அறிவாளியான ஒருவர் அரசர் ஆக முடியாதபடி துரோகம் நடந்து வருகிறது. இதைக் கும்பெனி நன்கு விசாரிக்க வேண்டும்!’ என்று மீண்டும் மீண்டும் கடிதம் எழுதினார். அதற்கேற்றபடி தஞ்சையிலும் ஒரு நல்ல திருப்பம் ஏற்பட்டது!” “என்ன ஆயிற்று தந்தையே? அமர்சிங்கிற்கு ஏதாவது ஆபத்தா?” “இல்லை சிவாஜி! ஆங்கிலேயர்கள் கெட்டிக்காரர்கள். அப்படி ஒரு வம்பில் அவர்கள் நேரடியாக மாட்டிக் கொண்டதாகச் சரித்திரமே இல்லை. எனக்கும் அவர்கள் நேர்முகமாகத் தலையிட்டு உதவ விரும்பவில்லை. தஞ்சையில் இருந்த ரெசிடெண்டு துரையை மாற்றி, புதியவர் ஒருவரை நியமித்தார்கள். மாஸ்டர் ராம் என்ற பெயருடைய அவர் ஸ்வார்ஷ் பாதிரியாரிடம் மிகுந்த மரியாதை காட்டினார். அதனால் அவருடைய ஆலோசனையை ஏற்று ஒரு விரிவான அறிக்கையை சீமையில் இருந்த அதிகாரிகளுக்கே அனுப்பி வைத்து விட்டார். சாதாரணமாக மக்கள் நியாயம் கோரி முறையிட, அப்போதெல்லாம் ‘தர்பார் பிரசங்கம்’ என்ற நியாய சபை இருந்தது. ஆனால் என் போன்ற அரச குடும்பத்தினர் அங்கே போவது வழக்கம் இல்லை. ஆகையால், இது லண்டனில் இருந்த கோர்ட்டிலேயே விசாரிக்கப்பட்டது. அவர்கள் தீர விசாரித்ததுடன் ஸ்வார்ஷ் பாதிரியாரிடமும் தொடர்பு கொண்டார்கள்.” “கடைசியில் லண்டனிலிருந்தே தங்களுக்கு சாதகமான முடிவு அறிவிக்கப்பட்டதா, தந்தையே!” “ஆம் சிவாஜி! அவர்களுடைய உத்தரவுப்படி மாஸ்டர் ராம் என்னை அமர்சிங்கின் பிடியிலிருந்து விடுவித்தார். நானே அரசராக வேண்டும் என்ற ஆணையையும் பிறப்பித்தார். ஏற்கெனவே எனக்கு எதிராக சாட்சி சொன்ன பண்டிதர்கள், தமக்கு ஒன்றும் தெரியாதென்றும், கட்டாயத்தின் பேரில் அப்போது அவ்வாறு எழுதிக் கொடுத்து விட்டதாகவும் கூறினார்கள். இந்த வாக்குமூலத்தையும் ரெசிடெண்டு துரை வாங்கி மேலே அனுப்பி, கும்பெனியாரின் முடிவை உறுதிப்படுத்தினார். நானும் எனது தாயாரும் சென்னைக்குப் போய், அங்கிருந்த அதிகாரிகளுக்கு நன்றி சொல்லிவிட்டுச் சில நாட்கள் அங்கேயே தங்கிவிட்டுத் திரும்பினோம். எனக்கு அமர்சிங் மீது எந்தக் கோபமும் எழவில்லை. நான் அவரைப் பதிலுக்குத் துன்புறுத்த எண்ணவும் இல்லை!” “ஸ்வார்ஷ் பாதிரியார் தாங்கள் பட்டாபிஷேகம் செய்து கொண்ட போது உடன் இருந்தாரா தந்தையே?” “அது தான் நடக்கவில்லை மகனே! தான் நேர்மையானது என்று நினைத்ததைச் செய்து முடித்த அந்தக் கடமை வீரர் பிப்ரவரி மாதமே இறந்து போய் விட்டார். அதற்கு நான்கு மாதங்களுக்குப் பிறகு ஜூன் மாத இறுதியில் தான் நான் அரசராக முடிசூட்டப்பட்டேன். என்னை ஒரு மாணவனாக ஏற்று, என்னை உயர்த்தி உரிய பதவியில் அமர்த்தி வைத்த அந்தப் பெரியவர் அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு உயிருடன் இருக்கவில்லை. அதனாலேயே அவர் மரணப் படுக்கையில் இருந்த சிற்பமும், அவர் என்னை மாணவனாக அழைத்து வந்த சிற்பமும் சரசுவதி மகாலில் இடம் பெற்றிருக்கின்றன. அவரை அடக்கம் செய்த இடத்தையும் நான் ஒரு நினைவு இல்லமாக அமைத்திருக்கிறேன். வருங்காலத்தில் நல்ல உள்ளம் படைத்த இந்தப் பெரியவரைப் பற்றி தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள இவை உதவும். அவற்றை நினைத்துத் தான் நான் இன்று கண் கலங்கினேன்!” என்று கூறி முடித்தார் மன்னர். சிவாஜியின் தோள் மீது கையை வைத்து அமைதிப்படுத்திவிட்டு எழுந்து நின்றார். இரவு முதிர்ந்து விட்டது. காவலாளியிடம் சொல்லி சுலக்ஷணாவைத் தூக்கி வரச் சொன்னார் சரபோஜி. சிவாஜியுடன் சுலக்ஷணாவை அந்தப்புரத்தில் கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்தார். குதிரையில் ஏறித் தனது இருப்பிடத்திற்குத் திரும்பினார். இரவு வெகுநேரம் அவரால் தூங்க முடியவில்லை. அமர்சிங் இழைத்த கொடுமைகளும், ஸ்வார்ஷ் பாதிரியார் காட்டிய பேரன்பும் அவருடைய நினைவில் மாறி மாறி வந்து கொண்டே இருந்தன. தன்னை அரசனாக்க விரும்பிய துளஜா மன்னன் வஞ்சிக்கப்பட்டதை எண்ணி மனம் குமுறிய வண்ணம் படுத்திருந்தார். பொழுது புலருவதற்கு முன்பே எழுந்திருந்து, நந்தவனத்தில் உலாவத் தொடங்கினார். அந்த வைகறைப் பொழுது ஏற்படுத்திய இதமான சூழ்நிலை, மெல்ல மெல்ல அவர் மனம் அமைதி அடையச் செய்தது. திருவையாற்றில் திருமஞ்சன வீதியில் அந்த இல்லம் அன்று கலகலப்புடன் விளங்கிற்று. தஞ்சையில் நடைபெற இருக்கும் ஒரு திருமணத்திற்காக மணமகளின் தந்தை ஜாதகத்துடன் நாள் குறிக்க வந்திருந்தார். காலையில் நீராடிவிட்டு மனையில் அமர்ந்து பூஜை செய்து கொண்டிருந்த தியாகராஜ சுவாமிகள் வெளியே வருவதற்காக அவர் காத்துக் கொண்டிருந்தார். தியாகராஜ சுவாமிகளுக்கு ஜோதிடமும் மந்திர சாஸ்திரமும் தெரியும். அதனால் அவரை நாடிப் பலரும் வருவது உண்டு. வருபவர்கள் எல்லோருக்குமே அவர் உதவுவார். ஏழை என்றோ, செல்வந்தர் என்றோ வித்தியாசம் பார்த்தது கிடையாது. பூஜை முடிந்து தியாகராஜ சுவாமிகள் எழுந்து வந்தார். அந்தச் செல்வந்தர் அவருக்கு வணக்கம் கூறி ஜாதகத்தை எடுத்துக் கொடுத்து நாள் குறித்துத் தரும்படி வேண்டிக் கொண்டார். மணமகனின் ஜாதகத்தையும் எடுத்துக் கொடுத்தார். சிறிது நேரம் மணமகனின் ஜாதகத்தை உற்றுக் கவனித்தார் சுவாமிகள்... “இந்த ஜாதகத்துக்கு உரியவன் உங்களுக்குப் பழக்கமானவனா?” என்று கேட்டார். “ஆமாம்; எனக்கு நெருங்கிய உறவினனும் கூட...” “உங்கள் மகள் சௌக்கியமாக இருப்பாள். பையனின் ஜாதகத்தில் பாக்யாதிபதி செவ்வாயும், ஜீவனாதிபதி சுக்கிரனும் இணைந்து ‘தர்மகர்மாதிபதி’ யோகத்தை ஏற்படுத்துகிறார்கள். அதனால், அரசரிடம் பெரிய பதவிகள் வகிக்கக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது. பல நாடுகளுக்குப் பயணம் செய்யக்கூடிய சந்தர்ப்பமும் கிடைக்கும். தினமும் ராமச்சந்திரமூர்த்தியை பூஜை செய்யச் சொல்லுங்கள்! என் ஐயன், உங்கள் மகளையும் மருமகளையும் எல்லா சௌபாக்கியங்களையும் தந்து சிறப்பாக வைப்பான்...” “சுவாமி! முகூர்த்தத்துக்கு ஒரு நாள் பார்த்துச் சொல்லுங்கள்!” “வரும் திங்கட்கிழமை சதயம் சித்தயோகம். பத்து மணிக்குமேல் அமிர்தயோகம். ஒன்பதரைக்கு மேல் ஜாதகர்களுக்கு திருமணம் செய்யப் பொருத்தமான முகூர்த்தம்!” என்றார் சுவாமிகள். செல்வந்தரின் முகத்தில் திருப்தி நிறைந்தது. கொண்டு வந்திருந்த பட்டுப் பையிலிருந்து பொற்காசுகளை எடுத்தார். வெற்றிலை பாக்கு, பழத்துடன் கதம்ப மாலையையும் வைத்து, சுவாமிகளின் பாதத்தில் வைத்து வணங்கினார். சுவாமிகள் மலர்மாலையை மட்டும் எடுத்து பட்டாபிஷேகக் கோலத்தில் இருந்த இராமபிரானுக்குச் சாத்தினார். செல்வந்தரையும் படத்துக்கு முன்னால் விழுந்து வணங்கச் சொன்னார். “இந்த அழகான கோதண்டராம சுவாமியின் படம், ராயலேலூர் பல்லவி எல்லய்யா எழுதியது. அவர் என்னுடைய சீடர் வெங்கட்ரமண பாகவதரிடம் இசை பயின்றவர். என்னுடைய குமாரத்திக்கு, அம்பாள் அக்கிரஹாரம் குப்புசாமி ஐயருடன் கல்யாணம் நடந்த போது, பரிசாகக் கொடுத்தார். அற்புதமான சித்திரம்...” என்று உணர்ச்சி பொங்கக் கூறி நிறுத்தினார் சுவாமிகள். “சுவாமிகள் ஒரு கீர்த்தனம்பாடி வாங்கிக் கொண்டிருப்பீர்களே?” என்று கேட்டார் அந்தச் செல்வந்தர். “ஆமாம், மோகனராகத்தில் ‘நன்னா பாலம்ப வசித்திலோ’ என்ற கீர்த்தனையைப் பாடினேன். சுவாமியைப் பாருங்கள். இந்திர நீலமணியைப் போன்ற தேகப்பொலிவுடன், அழகிய மார்பில் அசைந்தாடும் முத்துமாலைக் குவியலுடன், கையில் பற்றியுள்ள கோதண்டத்தின் பிரகாசத்துடன், எப்படி எழுந்தருளியிருக்கிறார் பார்த்தீர்களா? இதைத்தான் ‘சுரபதி நீலமணி நிபதனுவுதோ!’ என்று பாடினேன். ‘என் ஐயன் என்னைக் காக்க நடந்து வந்தானோ?’ என்று கூறி மனம் நெகிழ்ந்து பாடினேன்...” என்று சொன்னார். “சுவாமிகள் அந்தப் படத்துக்கு நான் கொண்டு வந்த மாலையைப் போட்டு என்னை வணங்கச் சொன்னது என்னுடைய பாக்கியம் அல்லவா? தங்கள் மகளுடைய திருமணத்துக்கு அளிக்கப்பட்ட சித்திரத்துக்கு என்னுடைய மகளின் திருமணத்துக்கு நாள் குறிக்க வந்தவன் வணங்குவது எவ்வளவு பொருத்தம்?” என்று நெகிழ்ந்து போனார் அவர். “எல்லாம் நன்றாக நடக்கும், போய் வாருங்கள்! இந்தப் பொற்காசுகளைத் தயவு செய்து திரும்ப எடுத்துச் செல்லுங்கள்...” “சுவாமி! அது நான் ஒரு நல்ல காரியத்துக்காக தங்களை நாடி வந்து ஆசீர்வாதம் பெற்ற போது சமர்ப்பித்தது அல்லவா?” “இருக்கலாம். இரண்டு பழங்களை மட்டும் வைத்துவிட்டுச் செல்லுங்கள். சீடர்கள் வரும் போது பிரசாதமாக நறுக்கிக் கொடுக்கலாம். பொற்காசுகள் வேண்டாம்.” “அதைத் தாங்கள் ஏற்றுக் கொண்டால், எனக்கு தங்கள் பூரண ஆசீர்வாதம் கிடைத்ததாக எண்ணிக் கொள்வேன்!” “என் அப்பன் இராமபிரான் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பான், அதுபோதும்! இடையில் இந்த எளியவனுக்கு என்ன வேலை? என்னை மன்னித்து விடுங்கள். நான் யாரிடமும் எந்த சன்மானத்தையும் ஏற்பதில்லை. இராமபிரானின் அருள் மட்டுமே நான் பெறும் மிகப்பெரிய செல்வம்!” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார் சுவாமிகள். செல்வந்தர் தயங்கினார். தியாகராஜ சுவாமிகள் இரண்டு பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, தட்டை அவரிடமே ராமநாமத்தைச் சொல்லியபடி திருப்பிக் கொடுத்தார். செல்வந்தரின் கண்களில் நீர் முத்து ஒளிர்ந்தது. “போய் வாருங்கள். உங்கள் மகள் சகல சௌபாக்கியங்களுடன் தீர்க்க சுமங்கலியா யிருப்பாள்!” சுவாமிகளை மீண்டும் கீழே விழுந்து வணங்கினார் அவர். “சுவாமி! தங்களைப் போன்றவர்களை நான் இதுவரைப் பார்த்ததில்லை. தங்களைத் தரிசித்தது என்னுடைய பாக்கியம்! என்னை ஆசீர்வதியுங்கள்” என்றார். “மங்களானிபவந்து!” என்று கூறி, கைகூப்பி விடை கொடுத்து அனுப்பினார், தியாகராஜ சுவாமிகள். வாசல் வரை வந்து அவரை வழி அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். “கமலாம்பா! செம்பைக் கொண்டுவா, நான் உஞ்ச விருத்திக்குப் போக வேண்டும்” என்று உள்ளே திரும்பிச் சொன்னார். கமலாம்பாள் செம்பைக் கொண்டு வந்து சுவாமிகளின் காலடியில் வைத்து வணங்கினாள். மஞ்சள் பற்றிய முகத்தில் குங்குமம் ஜொலித்தது. பொன்னை வெறுத்து ஒதுக்கிவிட்டு, பிட்சையை நாடி செம்பும் கையுமாகப் புறப்படும் கணவரின் செல்வத்தைப் பெரிதாக மதித்து, அவளுடைய உள்ளம் பூரித்தது. சுவாமிகள் தம்பூரும் கையுமாகப் பாதக்குறடுகளை மாட்டிக் கொண்டு புறப்பட்டார். முடியைத் துறந்து கானகம் நாடிப் புறப்பட்ட கோசலைச் செல்வனை எண்ணி எண்ணி, “சித்தமு நா பாக்கியமு ஐயா!” (உன் சித்தம் என் பாக்கியம் ஐயா!) என்று பாடியபடி படி இறங்கினார். வாசல் வரையில் வந்து வழி அனுப்பினாள் கமலாம்பா. அவளுடைய கண்களில் நீர் துளிர்த்தது. உள்ளே சமையலுக்கு மணி அரிசி கூட இல்லை. ஆயினும் அந்தப் பெண்மணியின் உள்ளத்தில் அபூர்வமானதோர் அமைதி நிறைந்து நின்றது அப்போது. புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|