![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
29. தவித்து நின்ற தாயும் மகளும்...
வாழி ஆதன்! வாழி ஆவினி! வேந்து பகை தணிக! யாண்டு பல நந்துக! எனவேட்டோனே, யாயே; யாமே, “மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண் டுளை ஊரன் வரைக! எந்தையும் கொடுக்க!” எனவோட்டேமே! - ஓரம்போகியார் (ஐங்குறுநூறு) “அரும்பும் தாமரையை உடைய, குளிர்ந்த நீர் அலைமோதும், ஆற்றின் துறையை உடைய, ஊர்க்குத் தலைவன் இந்த அரசன். அவனுக்கு அணியாகும் வண்ணம் இவளை விரும்பித் தந்தையும் கொடுப்பானாக! அவனும் ஏற்பானாக!” என்று தோழியர் வேண்டினர். சில நாட்களாகவே சுவாதித்திருநாள் மகாராஜா சித்ரசேனாவை நாடி வரவே இல்லை. தஞ்சையிலிருந்து வடிவேலு என்ற நடனக் கலைஞருடன் வந்த சுகந்தவல்லி என்ற பெண்மணி, அரசருடைய மனத்தில் இடம்பிடித்துக் கொண்டதாகப் பேசிக் கொண்டார்கள். மகாராஜா சித்ரசேனாவைக் காட்டிலும் இரண்டே வயதுதான் பெரியவர். அவளுடைய இளமைக்கு லேசான வாட்டம் காணத் தொடங்கிவிட்டது. செப்புச்சிலை போன்ற மேனியில் சிறு தளர்ச்சி தென்பட ஆரம்பித்துவிட்டது. மகாராஜாவின் மனம் இந்த இளம் நடனமணியை நாடியதில் வியப்பு ஒன்றுமில்லை. மகாராஜா வந்த போது அவள் தோழியின் பின்பாட்டுக்கு ஏற்ப நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தாள். அது தில்லை விடங்கன் மாரிமுத்தா பிள்ளை இயற்றிய தமிழ்ப் பாடல்.
“காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே - என்னைக் கைதூக்கி யாள் தெய்வமே!” என்ற யதுகுல காம்போதி ராகப் பாடல். அவள் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தாள். அவளுடைய நினைவெல்லாம் அம்பலத்தரசன் நடராஜன் மீது தோய்ந்து நின்றது. “சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னி மேற்கரம் தூக்க...” என்று பாடியதற்கு ஏற்ப ஆடிய போது ஆனந்தத்துடன் அஞ்சலி ஹஸ்தம் காட்டிச் சுழன்று திரும்பிய போது, வாயில் அருகே மன்னர் அவளை வியந்து பார்த்தபடி நிற்பது தெரிந்தது. வெட்கிப் போய்த் தலையைக் குனிந்து கொண்டு நின்றுவிட்டாள்... “மேலே ஆடு சித்ரா! பாட்டு இன்னும் முடியவில்லை. எனக்காக நடராஜப் பெருமானுக்குச் செய்யும் அஞ்சலி நிற்க வேண்டாம்!” என்றார் அவர். சித்ரசேனா மிச்சத்தையும் பாடச் சொல்லி ஆடி முடித்தாள். மன்னர் உள்ளே வரவும் தோழி வணங்கி விட்டு வெளியே சென்று விட்டாள். கதவை மூடிவிட்டு வந்து, மஞ்சத்தில் அமர்ந்திருந்த மன்னரின் மார்பில் சாய்ந்து கொண்டாள் சித்ரசேனா. “எங்கே கற்றுக் கொண்டாய் சித்ரா, இந்தப் பாடலை?” “தஞ்சைக்குப் போனபோது, சுப்பராய ஓதுவார் சொல்லிக் கொடுத்தார். நீங்கள் இதை ஏற்கெனவே கேட்டதுண்டா?” “உம்!” “வடிவேலுப்பிள்ளை பாட, சுகந்தவல்லி நாட்டியம் ஆடினாளா?” மகாராஜா குலுங்கி நிமிர்ந்து உட்கார்ந்தார். சுழன்ற மாலையாகச் சரிந்த மஞ்சத்தில் விழுந்தாள் சித்ரசேனா. ஏதும் பேசவில்லை. மன்னர் புறப்படத் தயாராவது தெரிந்தது. “நான் சொன்னது குற்றமானால் மன்னித்து விடுங்கள்!” அவர் பதில் ஏதும் கூறவில்லை. நிலைக்கண்ணாடி அருகே நின்று ஜரிகைத் தலைப்பாகையைச் சரி செய்து கொண்டார். அவள் எழுந்து போய் அவர் முதுகில் சாய்ந்து கொடி பின்னுவதைப் போலப் பின்னிக் கொண்டாள். “நான் பேசியது தவறுதான்! எனக்கு அப்படிக் கேட்கும் உரிமை இல்லை. நீங்கள் இந்நாட்டு மன்னர், நானோ வெறும் ராஜதாசி!” அவள் குரல் குமுறி உடைந்தது. மன்னர் திரும்பி அவளை இழுத்து மார்புறத் தழுவிக் கொண்டார். அள்ளித் தூக்கி மஞ்சத்தில் படுக்க வைத்தார். சித்ரசேனா அவருடைய தலைப்பாகையைக் கழற்றி கட்டிலின் அழகுப் பிடியில் மாட்டினாள். மன்னரின் மார்பில் இருந்த முத்துமாலைகளுடன், கண்ணில் சிந்தாத நீர்முத்து பூத்து நிற்க விளையாடினாள். “இப்போதுதானே சிவபெருமானைப் பற்றிப் பாடினாய்? அங்கத்தில் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கிய பெருமான், கங்கையையும், திங்களையும் தரித்த சடையில் தூக்கி இருப்பதைப் பற்றி? நான் சாதாரண மானுடன் அல்லவா சித்ரா? எனக்கு சுகந்தவல்லியின் பால் ஒரு மயக்கம் இருப்பதில் என்ன தவறு? மேலும்...” “மேலும்?” “வடிவேலு முத்துசாமி தீட்சிதரின் சீடர். அவருடைய கிருதிகளை அழகாகப் பாடுவார். தீட்சிதரின் கிருதிகள் தியான சுலோகங்களைப் போல் இருக்கும். மூர்த்திகளை அப்படியே வருணிப்பார். அவருடைய லட்சண கீதங்கள் பலவும் ராகமூர்த்தியை, மென்மையான ராக நெருடல்களாக அர்ச்சிக்கும். இசையில் அவர் மன்னர்; நான் வெறும் மாணாக்கன்! அப்படிப்பட்டவரின் சீடரை நீ லேசாகக் குறிப்பிட்டு விட்டாயே?” சித்ரசேனா இரு கைகளையும் அவருடைய கழுத்தைச் சுற்றி மாலையாகப் போட்டு அருகே இழுத்துக் கொண்டாள். அவரது வஜ்ரதேகத்தில் பூக் காவடியைப் போல நெளிந்து படுத்துக் கொண்டாள். அவரது கை அவளுடைய முதுகை மிருதுவாக வருடிக் கொடுத்தது. அவளது சுகமான அழுத்தம் அவருடைய உடம்பில் படிந்து, மகிழ்ச்சி பொங்கும் உணர்வை மேனியெங்கும் பரப்பிற்று. சில நிமிடங்கள் கற்பனைகளும், கனவுகளும், பிரமைகளும், பிரமிப்புகளும் அந்தச் சுகானுபவத்தில் மாறி மாறி மிதந்து மறைந்தன. “என் அன்பே! உன்னுடைய மனக்குறை என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார் அரசர். மெள்ள தொய்வாகக் கண்களைத் திறந்து சித்ரா பதில் கூறினாள்: “இந்த நிலையில் என்னைக் குறை ஏதும் சொல்லச் சொல்லாதீர்கள். நீங்கள் அருகே இருக்கையில் எனக்கு என்ன குறை?” “உன் முக ரேகைகளைப் பார்த்தேன். அவற்றில் ஏதோ ஒரு கவலையின் சாயை தென்பட்டது... ஒன்று மட்டும் சொல்வேன், எனது இதயத்தில் என் சித்ராவுக்கு என்றும் இடம் உண்டு!” சித்ரா கண்களை மூடிக் கொண்டாள். அந்த கண் இமைகளில் இருட்பாய் விரிப்பில் புவனமோகினியைக் கண்டாள். அவளுடைய குலுங்கும் இளமை, அந்த எழிலின் பசுமை அவளை ஒரு கணம் மயங்கி இருக்கச் செய்தது. “அரசே! உங்களை நான் முதன் முதலில் கண்டு காதலித்த போது எனக்கு வயது பதினைந்து கூட இராது. உங்களுக்கு என்னைக் காட்டிலும் இரண்டே வயதுதான் கூட. அப்போது காதல் என்ற சொல்லுக்கு எனக்குச் சரியாகப் பொருள் கூடத் தெரியாது! அது உணர்ச்சிகள் மொட்டாகவே இருந்த பருவம்!” மன்னர் அவளது இதழ்களில் விரலை வைத்து மூடினார். “மேலே சொல்லாதே சித்ரா. உன் பேச்சை ரசித்து அனுபவிக்க விரும்புகிறேன். உனது சொல் ருசியில் என் நெஞ்சம் தித்திப்பை உணருகிறது!” “சொல்லின் செல்வர் தாங்கள் அல்லவா சுவாமி? தங்களுடைய பாடல்களில் இல்லாத பொருட்செறிவா? இது ஒரு பேதை மயக்கத்தில் உதிர்க்கும் பிதற்றல் அல்லவா? நான் மேலே கூறலாமா?” “சொல்லு சித்ரா!” “இப்போது நமது மகளுக்கு - புவன மோகினிக்கு - அதே வயது! தஞ்சை இளவரசன் சிவாஜியும் தங்களைப் போலவே வயது உள்ள பருவத்தில் இருக்கிறான். தஞ்சையிலிருந்து நான் கேள்வியுறும் செய்திகள் என்னைக் கலங்கச் செய்கின்றன...” “காந்தமும் இரும்பும் விலகி இருக்குமா சித்ரா?” என்றார் மன்னர் புன்னகையுடன். “அதுவேதான் எனது கவலையும் கூட சுவாமி! காந்த சக்தி உள்ளவரையில் தான் அந்த ஒட்டுதலுக்கும் மதிப்பு இருக்கும். அதன் பின் துண்டு கைவிடப்பட்டு கீழே விழுந்து விடும்... என் மகளுக்கு அந்த நிலை ஏற்படக்கூடாது!” “நான் ஏதாவது செய்ய வேண்டுமா?” “அரசகுமாரனின் அன்பு, கோபம், ஆவேசம், ஆவல் எல்லாமே என்னைப் பொறுத்தவரையில் கவலைக்கு என்னை உள்ளாக்குபவைதான்! அவற்றின் வேகம் பூங்கொடியான எனது மகளை நிலைகுலையச் செய்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். என் மகளை என்னிடம் என்றாவது ஒரு நாள் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்ப்பேன் என எனக்கு உறுதிமொழி கொடுங்கள்!” என்று மன்னரின் மார்பில் துவண்டாள் சித்ரசேனா. “கவலைப்படாதே சித்ரா! மன்னர் சரபோஜி இன்னும் ஓராண்டு காலத்தில் திரும்பிவிடுவார். திரும்பியதும் நான் அவருடன் தொடர்பு கொண்டு நடக்க வேண்டியதைக் கவனிக்கிறேன்!” “அதற்குள் ஏதும் விபரீதம் நிகழ்ந்து விடாதே சுவாமி?” “கவலை இல்லை. இளவரசனின் அன்பும் நேயமும் இன்னும் தென்றலாகத் தான் இருக்க முடியும். அது புயலாக முற்றுவதற்குள் தடுத்து விடலாம்...” சித்ரசேனா கண்களை மூடிக் கொண்டாள். மன்னரின் அணைப்பில் மூழ்கி மெய் மறந்து போனாள். அவருடைய உணர்ச்சி அலைகள் பொங்கும் கரங்கள் அவளை மெல்ல மெல்லத் தாலாட்டின... வெண்ணாற்றங்கரையில் அந்த வெண்புரவி நின்று கொண்டிருந்தது. சிறிது தூரம் தள்ளி பல்லக்குக் கீழே இறக்கி வைக்கப்பட்டிருந்தது. வீரர்களும் தாதியரும் மரத்தடியில் விலகி அமர்ந்திருந்தார்கள். வனபோஜனத்தை ஒட்டி இறைந்திருந்த சுவையான உணவுப் பொருட்களைக் கொத்தித் தின்ன பறவைகள் உலாவித் திரிந்தன. சேஷய்யர் விரட்டிய போது அவை வானில் வில்லைப் போலச் சேர்ந்து விரிந்து பறந்தன. வெகு நாட்களுக்குப் பின் புவன மோகினி அங்கே சுலக்ஷணாவின் வலுக்கட்டாயமான அழைப்பின் பேரில் வந்திருந்தாள். அப்போதும் அவளிடம் பழைய கலகலப்பான பேச்சையோ, சிரிப்பையோ காணோம். பழகுவதில் கூட இனம் தெரியாத ஒரு பயம் இருந்தது. அது அவளுடைய பார்வையின் மருட்சியிலும், நடையின் தடுமாற்றத்திலும் தெரிந்தது. சிவாஜி அவளை வம்புக்கு இழுக்கவில்லை. தூர இருந்து பார்ப்பதிலேயே திருப்தி அடைந்தவனாக இருந்து விட்டான். பலவகையான சிற்றுண்டிகளும் கனிவகைகளும் பரிமாறப்பட்ட போதும், அவள் எதை விரும்பிச் சாப்பிடுகிறாள் என்பதைக் கவனித்துக் கொண்டே இருந்தான். அதே போல புவனாவும் அவன் பாராத போது அவனுடைய முக உணர்ச்சிகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவன் கள்ளத்தனமாகவேனும் தன்னை உற்றுப் பார்க்க வேண்டும் என்பதையே அவளுடைய மனம் விரும்பிற்று. சுலக்ஷணா ஒரு மான்குட்டியைத் துரத்திக் கொண்டு ஓடிப் போய் விட்டாள். தனித்து விடப்பட்ட புவனாவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவ்வளவு பேரும் பார்த்துக் கொண்டிருந்த போது சிவாஜி தன்னை நெருங்கிப் பேச ஆரம்பித்து விடுவானோ என்ற பயம் அவளை அங்கிருந்து எழுந்து செல்லத் தூண்டிற்று. கரைக்குக் கரை நீர் ததும்ப ஓடிக் கொண்டிருந்த, வெண்ணாற்றின் கரையோரமாகச் செழித்து வளர்ந்திருந்த பூஞ்செடிகளை நாடிப் போனாள். சுற்றிலும் செடி - கொடிகளின் இருள் கப்பியது. பின்னாலேயே தன்னை இளவரசர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார் என்ற உணர்வு அவளை விரட்டிற்று. அந்தத் தனிமையிலிருந்து விலகி ஓட எண்ணியபோது நீண்ட வேலி முள் ஒன்று பாதத்தில் குத்திற்று. எதிர்பாராத வண்ணம் முள் ஆடிப் பாய்ந்த வேதனையில் வாய்விட்டுக் கூவியபடி, ஒற்றைக் காலைத் தூக்கி நின்றவாறு தடுமாறினாள் புவனா. தொடர்ந்து வந்த சிவாஜி ஓடி வந்து உயரத் தூக்கிய பாதத்தைத் தன் கையில் ஏந்திக் கொண்டான். அரசகுமாரன் தனது காலைத் தொட்டதால் ஏற்பட்ட மனத்தவிப்பில் துடித்துப் போனாள் புவனா. பாதங்களை விலக்கிக் கொள்ளவும் முடியவில்லை; அவள் விழுந்து விடாதபடி மற்றொரு கையால் இடையை வளைத்துப் பிடித்த வண்ணம், பாதத்தில் பாய்ந்த முள்ளைப் பக்குவமாக எடுத்து எறிந்தான் சிவாஜி. வலி நீங்கிய புவனா நன்றி உணர்வு ஒருபுறமும், அவன் தனது இடையை வளைத்துப் பிடித்த அணைப்பினால் ஏற்பட்ட வெட்க உணர்வு மறுபுறமும் பொங்க, அவன் பிடியிலிருந்து விலக முயன்றாள். ஆனால், பாதம் இன்னும் கீழே சரியாக ஊன்றாத நிலையில் மேலும் தள்ளாடி அவன் மீதே சாய்ந்து விட்டாள். அந்த அணைப்பிலிருந்து விலக அவளுடைய மனம் இசையவில்லை. ஆவல் பொங்கித் ததும்பும் அவனது விழிகள் தனது முகத்தை நெருங்குவதையும் அவளால் தடுக்க முடியவில்லை. அவனுடைய முகம் அவளுடைய முகத்தின் மேல் அழுந்த, இதழ்கள் கலந்த வேளையில் தன்னால் கட்டுப்படுத்த முடியாத உணர்வின் பெருக்கில் அமிழ்ந்து போனாள் புவனா. அதுகாறும் அவள் அனுபவித்திராத ஓர் இன்ப உணர்ச்சி அலை அலையாக உடல் முழுவதும் படர்ந்து அவளைப் புளகாங்கிதம் அடையச் செய்தது. தன்னிலை புரியாமல் அப்படிச் சில நொடிகளே இருந்திருப்பாள். சுலக்ஷணாவின் சிரிப்பொலி நெருங்கிவர, இருவருமே சட்டென்று விலகினார்கள். பெருகிவந்த ஆற்றின் அலைகள் கரையில் மோதிக் குலுங்கி விலகியதைப் போல அவர்களுடைய இளமை வேகத்தின் இன்ப அதிர்ச்சிகளும் கரை ததும்பிக் கலந்து பிரிந்தன. போகும் இடம் தெரியாமல் விலகி ஓடி வந்த புவனாவைப் புன்சிரிப்புடன் கவனித்தாள் சுலக்ஷணா. அவர்கள் இருந்த நிலையைக் காணாவிடினும், அவளுடைய மனத்தவிப்பை அவளால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. புவனாவைச் சமாதானப்படுத்தும் விதமாக, “என்ன புவனா? ஆறு எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தாயா? நீ கேரளத்தில் புழையில் நீந்தி விளையாடி வளர்ந்தவள் தானே? குளிக்கலாம் வருகிறாயா?” என்று கேட்டாள். நாணமும் பயமும் மேலிட, “ஐயோ வேண்டாம்! நான் மாற்று உடை கூடக் கொண்டு வரவில்லை!” என்று ஒதுங்கினாள் புவனா. “பரவாயில்லை. நான் இரண்டு மாற்று உடைகள் கொண்டு வந்திருக்கிறேன். யாரும் வராத இந்தப் புதர் மறைவில் அழகானதோர் சிறப்புத்துறை இருக்கிறது. இறங்கிக் குளிக்கலாம் வா! மறுபடியும் இதைப் போன்றதொரு சந்தர்ப்பம் இருவருக்குமே கிடைக்காது!” என்று கையைப் பற்றி இழுத்தாள் சுலக்ஷணா. அவள் சற்று தயங்கி யோசிப்பதற்குள் இரண்டு சிற்றாடைகளும் பாவாடைகளுமாக வந்து விட்டாள் சுலக்ஷணா. அடர்ந்த செடிகளின் மறைவில் உடைகளை மாற்றிக் கொண்டு இருவரும் ஆற்று நீரிலும் இறங்கி விட்டார்கள். தங்கையின் வரவைக் கண்டு தயங்கி, ஒதுங்கிப் போயிருந்த சிவாஜி ஆற்று நீரில் இருவரும் இறங்குவதைப் பார்த்து விட்டதும், மீண்டும் அந்தப் பகுதிக்கே வந்தான். இளம் பெண்கள் இருவரும் தோகைக் கூந்தல் நனைய அமிழ்ந்து விளையாடினார்கள். சிறு அலைகள் அவர்களைச் சுற்றிச் சுற்றி வந்து மோதி, வட்டங்களாய் விரிந்து விலகின. செப்பு வார்ப்படங்களைப் போன்ற இளமேனியின் யௌவனமும் இறுக்கமும் மாலைப் பொன்னொளியில் தகதகத்தன. பொருளற்ற பேச்சுக்களை அள்ளி வீசிக் கொண்டு, கூவிச் சிரித்த வண்ணம் இருவரும் தண்ணீரை ஒருவர் மேல் மற்றவர் அள்ளி அடித்து விளையாடினார்கள். நீர் விளையாட்டில் சுலக்ஷணாவின் மேல் துகில் நழுவி நீரோடு ஓடியது. “புவனா! அதைப்பிடி!” என்று கூவினாள் அவள். ஆற்றின் வேகத்தையும், ஆழத்தையும் லட்சியம் செய்யாமல், துகிலைப் பிடிக்க நீந்திப் பாய்ந்தாள் புவனா. மறுகணம் சுழலில் அவள் அகப்பட்டுக் கொண்டாள்! அதைக் கண்டு, “ஐயோ! புவனாவை ஆற்று நீர் இழுத்துக் கொண்டு போகிறதே? அவளை யாராவது காப்பாற்றுங்களேன்!” என்று பெருங்குரல் பாய்ச்சி அழத் தொடங்கினாள் சுலக்ஷணா... புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|