8. அரசருக்குத் துரோகம்

     நாம் ஆர்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
     நரகத்தில் இடர்ப்படோம்! நடலை இல்லோம்;
     ஏமாப்போம்; பிணியறியோம்; பணிவோமல்லோம்.
     இன்பமே எந்நாளுந் துன்பமில்லை.
     தாமார்க்குங் குடியில்லாத் தன்மையான
     சங்கரன் நற்சங்க வெண்குழையோர் காதில்
     கோமார்க்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
     கொய்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே!

               - திருநாவுக்கரசர் திருப்பதிகம்

     சுலக்‌ஷணா இசைக்கருவிகள் இருந்த மண்டபத்தை விட்டு வெளியே வரவில்லை. நாதசுரம், சுருதி, ஜாலர், உடுக்கை, சந்திர-சூரிய வாத்தியங்கள் ஆகியவற்றை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். புல்லாங்குழல், தித்தி, காகனம், இந்துஸ்தானி நகாரா, கர்ணா, டக்கா ஆகிய இசைக்கருவிகளைத் தொட்டுத் தொட்டு அனுபவித்துக் கொண்டிருந்தாள். மிருதங்கம், ஸாரங்கி, ஸாபத் ஆகியவற்றை வியப்புடன் இசைத்து அந்த நாதத்தை ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள். புகழ்பெற்ற தஞ்சாவூர் வீணையைச் சற்று பயத்துடன் விலகி நின்று, பக்தியுடன் மானசீகமாக வணங்கிக் கொண்டிருந்தாள்.

     “குழந்தாய்! இவற்றை நீ ரொம்பவும் அனுபவித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். ஆகையால் கொஞ்ச நேரம் இங்கேயே நீ இருக்கலாம். தஞ்சாவூர் வீணையில் பல அளவுகளில் இங்கே வீணைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. உனக்கு ஏற்ற ஒன்றை நீ வாசித்துப் பார்க்கலாம்!” என்றார் மன்னர்.

     “அப்பா! என்ன சொல்லுகிறீர்கள்? இவற்றை நான் எடுக்கலாமா? விலை மதிப்புள்ள பொருட்கள் பலவற்றைப் போற்றுவதைப் போல அல்லவா இங்கே கொலுவிருக்கச் செய்திருக்கிறீர்கள்? நான் தொடுவதும், வாசிப்பதும் தவறு அல்லவா?” என்று கேட்டாள் சுலக்‌ஷணா.

     “அப்படியல்ல அருமை மகளே! எந்த இசைக் கருவியும் அதைச் செய்பவனிடம் கலைப் பொருளாகத்தானிருக்கிறது. அதை வாசித்து நாதத்தை எழுப்பும் கலைஞனிடம் தான் அது தெய்வீகம் பெறுகிறது. குழந்தையே ஆனாலும் நீ நாதப் பிரும்மத்தை பயபக்தியுடன் வணங்குபவள். நீ எடுத்து வாசித்துப் பார்க்கலாம். நான் வணங்கும் சரசுவதி அதைப் பரிவுடன் கவனிப்பாள்!” என்று கூறி அவளை உற்சாகப்படுத்தினார் சரபோஜி.

     சுலக்‌ஷணா சிறிய வீணை ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்கத் தொடங்கிவிட்டாள். அந்த அமைதியான வேளையில், அந்த விசாலமான மண்டபத்தில் அந்த நாதம் கம்பீரமாக எழுந்து பரவிற்று. இரவு முதிர்ந்த அந்த வேளையில் துயிலைத் தூண்டக்கூடிய நீலாம்பரி ராகத்தை அழகுற வாசித்தாள் சுலக்‌ஷணா. ‘குழந்தை அப்படியே வீணையின் மீது சாய்ந்து தூங்கி விட்டாலும் வியப்பில்லை’ என்று எண்ணியவாறே சிற்பப் பகுதியை நோக்கி நகர்ந்தார் சரபோஜி. சிவாஜியும் உடன் வந்தான்.

     அப்போதுதான் அந்தப் பளிங்குக் கல் சிற்பத்தைப் பார்த்து அவருடைய கண்கள் கலங்கின...

     “தந்தையே! இவரைப் பார்த்தால் ஆங்கிலேயரைப் போலத் தோன்றுகிறது. நோயுற்றுப் படுக்கையில் படுத்திருப்பது போலவும் தோன்றுகிற மாதிரி காட்டியிருக்கிறார்கள். இதைப் பார்த்து நீங்கள் கண் கலங்குகிறீர்களே. இவர் உங்களுக்கு வேண்டியவரா? இந்த நிகழ்ச்சி உங்கள் மனத்தில் பழைய நினைவுகளைத் தூண்டி வேதனைப் படுத்துகிறதா? அதைப் பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று சிறிது தயக்கத்துடன் கேட்டான் சிவாஜி.

     “நிச்சயமாக நீ தெரிந்து கொள்ள வேண்டும் மகனே! ஒரு விதத்தில் இதை உனக்குச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இன்று உன்னை நான் இந்த மஹாலுக்கு அழைத்துக் கொண்டு வந்தேன் என்று சொன்னாலும் கூடப் பொருந்தும். குழந்தை சுலக்‌ஷணாவுக்கு இதைப் புரிந்து கொள்ளக்கூடிய மனப்பக்குவம் ஏற்படவில்லை. அதனால் உன்னைத் தனியே அழைத்துப் பேசவே காத்துக் கொண்டிருந்தேன். இந்தப் பாதிரியாரின் முகத்தைப் பார்! அருகில் வந்து கருணை ததும்பும் அந்த முகத்தைப் பார்! அதில் ஒரு சரித்திரமே அடங்கி இருக்கிறது...” என்று உணர்ச்சி ததும்பும் குரலில் சொன்னவர் சரபோஜி.

     “கூறுங்கள் அப்பா! அவர் தங்களுக்கு மிகப்பெரிய உதவி ஒன்றைச் செய்திருக்க வேண்டும். அதைப் பற்றிச் சொல்லுங்கள்...” என்று தூண்டினான் சிவாஜி.

     “வெறும் உதவியல்ல சிவாஜி! எனக்கு வாழ்வு கொடுத்தவரே இவர்தாம். ஸ்வார்ஷ் என்ற இவர் ஒரு ஜெர்மானியப் பாதிரியார். இந்திய மண்ணிற்கு வந்து தொண்டு செய்ய ஆசைப்பட்டார். மயிலாடுதுறைக்கு அருகில் தரங்கம்பாடி என்ற துறைமுக நகரம் இருக்கிறதல்லவா? அங்கே பதினோரு ஆண்டுகள் இருந்தார். பிறகு திருச்சிக்கு வந்து, தஞ்சைக்கு வந்து சேர்ந்தார்.”

     “தங்களுக்கு எப்படி அவர் பழக்கமானவர் ஆனார்?”

     “எனது தந்தையார் துளஜா மகாராஜாவுக்கு அவர் ஆப்த நண்பர். துளஜா மகாராஜாவிற்கு இறைவன் அருளால் நல்ல வாழ்க்கை கிடைத்திருந்தது. அழகான மனைவியர் இருந்தனர். அவருக்கு இசையிலும் பிற கலைகளிலும் நல்ல ஈடுபாடு இருந்தது. ஆனால் நிம்மதியாக வாழத்தான் முடியவில்லை!”

     “ஏன் தந்தையே?”

     “அவர் விவாகம் செய்து கொண்டு பெற்ற பிள்ளைகள், பேரன்கள், பேத்திகள் அவர் உயிருடன் இருக்கும் போதே இறந்து போய் விட்டார்கள். தனது உடம்பின் மேலேயே அவருக்குப் பற்று போய்விட்டது. சரியான உணவு கூட இல்லாமல் சன்னியாசியைப் போல வாழ்ந்து வந்தார். அரண்மனை வாழ்வும், அரச போகமும் அவருக்குப் பிடிக்காமற் போய்விட்டன. அந்த நிலையில் அவருடைய ஆட்சிக்கும் அபாயம் ஏற்பட்டுவிட்டது...”

     “ஆங்கிலேயர்களின் படையெடுப்பா தந்தையே?”

     “இல்லை மகனே! நவாப் ஹைதர் அலிகான் என்பவர் ஆற்காடு, சென்னைப்பட்டினம் ஆகிய பகுதிகளின் மேல் படையெடுத்து வந்து பிடித்துக் கொண்டார். தஞ்சையையும் அவருடைய படை முற்றுகையிட்டது. கோட்டையில் துளஜா மகாராஜாவுக்குத் துணையாக இருந்த ஆங்கிலேயர் படை கூட அதை ஒன்றும் செய்யமுடியவில்லை. மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். தஞ்சை நகருக்குள் தண்ணீர் கூட வர முடியாமல் செய்துவிட்டார்கள். பெரிய உணவுப் பஞ்சமும் ஏற்பட்டது. அறுநூறுக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் அவதியுற்று இறந்து போனார்கள்...”

     “மகாராஜா அந்த நவாப்புடன் சமாதான உடன்படிக்கையாவது செய்து கொண்டு மக்களைக் காப்பாற்றி இருக்கலாமே அப்பா?”

     “அவர் அப்படிச் செய்யவில்லை! அதற்குப் பதிலாக ஆங்கிலேயர்களுக்குத் தனது அதிகாரத்தையும் உரிமைகளையும் விட்டுக் கொடுத்தார். அவர்களும் நவாப்பின் படைகளைக் கடைசியில் விரட்டியடித்து தஞ்சையைக் காப்பாற்றினார்கள். ஆனாலும் என்ன? மன்னரின் மனம் நொந்து போயிற்று. அதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருந்தது...”

     “என்ன காரணம் தந்தையே?”

     “துளஜா மகாராஜாவின் தந்தை பிரதாபசிம்ம மகாராஜா. அவர் தனக்குப் பின் அரசாள மகன் துளஜாவைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் துளஜா அவருடைய பட்டத்து ராணிக்குப் பிறந்தவர் அல்ல; ஆசை நாயகிக்குப் பிறந்தவர். அதனால் துளஜா மகாராஜாவுக்கு எவ்வளவோ பெருமைகள் இருந்தும், மன்னரை முறையாக மணந்து கொண்ட அரசிக்குப் பிறவாதவர் என்ற அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது. கடைசி வரையில் இது ஒரு வேதனையாக அவரை உறுத்திக் கொண்டே இருந்தது. அதனால் தனக்குப் பின் அரசாள வேண்டிய ஒருவன் முறைப்படி சுவீகாரம் எடுத்துக் கொள்ளப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வேறு யாருமில்லை மகனே... நான் தான்!”

     “என்ன? தாங்கள் சுவீகாரப் புத்திரரா? இதுவரையில் என்னிடம் அப்படி யாரும் சொன்னதில்லையே?”

     “சாதாரணமாக அரசகுல இரகசியங்களை வேறு யாரும் பேசும் பழக்கம் இல்லை. அப்படியே தெரிவதானாலும் அதைத் தந்தை சொல்லித்தான் மகன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற சம்பிரதாயமும் இருக்கிறது. அதனால் தான் உன்னிடம் யாருமே இதைப் பற்றி பேசவில்லை. நானும் கூட உனக்கு வயது வந்த பிறகுதான் இவற்றைச் சொல்ல வேண்டும் என்று காத்திருந்தேன்...”

     “மேலே சொல்லுங்கள் அப்பா!”

     “போன்சலே வம்சத்தில் பிறந்த அரச வம்சத்தினரில் ஒருவரான ஷாஹஜிராஜா என்பவருக்குப் பிறந்தவன் நான். உத்தம வம்சத்தைச் சேர்ந்தவன் என்று என்னைத் தேர்ந்தெடுத்து, சாஸ்திரப்படி சுவீகாரம் எடுத்துக் கொண்டார் துளஜா மகாராஜர். யானை மேல் அமர்ந்து ஊர்வலம் வந்து சகல வாத்திய வைபவங்களுடன் அரண்மனையில் நான் காலடி எடுத்து வைத்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அரசர் ஊரில் எல்லோருக்கும் சர்க்கரை வழங்கி, சுற்றத்தார் அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்தார். பெரியதொரு கல்யாணம் போலவே அது நடந்தது. அப்புறம் என்னை அரச பதவிக்குத் தயார் செய்யத் தொடங்கினார் மகாராஜா...”

     “இந்த ஸ்வார்ஷ் துரை அப்போதுதான் தஞ்சைக்கு வந்தாரா?”

     “ஆமாம் மகனே! நீ சரியாகவே ஊகித்து விட்டாய். அப்போது ஆங்கிலேயக் கும்பெனியாரின் பிரதிநிதியாகத் தஞ்சைக் கோட்டையில் மாஸ்டர் ஜான்ஹடா லேப்ஸன் என்பவர் இருந்தார். அவரிடமும் மற்றும் சேனைத் தலைவர்களாக இருந்த கர்னல் இப்ஸ்ஸி, கமாண்டர் உஷ்டோட் என்பவரிடமும் என்னைப் பாதுகாத்து வளர்க்குமாறு மகாராஜா ஒப்படைத்தார். ஏனென்றால் அவருக்கு மகனாகப் பிறவாத எனக்கு அரசு பதவி கிடைப்பது உறவினர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் எங்கே என்னைக் கொன்றுவிட முயல்வார்களோ என்ற பயம் அவருக்கு இருந்தது. என்னைப் பாதுகாக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டாலும், கல்வியறிவு தந்து முறைப்படி நல்ல பண்புகளுடன் என்னை உருவாக்க வேண்டிய பொறுப்பை, ஸ்வார்ஷ் துரையிடமே ஒப்படைத்தார் மகாராஜா!”

     “பாதிரியார் தாத்தாவுக்கு நெருங்கிய நண்பரா தந்தையே?”

     “ஆம் மகனே! ஸ்வார்ஷ் பாதிரியார் தன்னலம் இல்லாதவர். மிக நல்ல குணம் படைத்தவர். அவர் கற்றுத் தேர்ந்த அறிவாளியும் கூட. ஆங்கிலமும், ஜெர்மானிய மொழியும் தவிர, பாரஸிக மொழியையும், உருது, மராத்தி போன்ற இந்திய மொழிகளையும் கற்றறிந்தவர். நூல்கள் பலவற்றையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். கலைகளில் ஈடுபாடு கொண்டிருந்த மன்னருக்கு அதனால் அவர் நெருங்கிய நண்பர் ஆனார். எனக்கும் என்னை வளர்க்கும் தந்தையைப் போன்ற அருளாளர் ஆனார்.”

     “மகாராஜா தனது விருப்பத்தைச் சொன்னாரா தந்தையே?”

     “ஆம். அந்த நிகழ்ச்சி எனக்கு இன்னும் நினைவில் பசுமையாகவே இருக்கிறது. கும்பெனியாரின் பிரதிநிதியும், படைத்தலைவர்களும், பாதிரியாரும் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டார்கள். அரசர் அவர்களுக்கு விருந்து கொடுத்து என்னை அறிமுகம் செய்து வைத்தார். ‘ஈசன் எனக்குச் சந்ததியாக ஒரு மகனையோ, பேரப்பிள்ளையையோ கொடுக்கவில்லை. அதனால் முறைப்படி ஒரு வாரிசை உருவாக்க நான் விரும்புகிறேன். அதற்காகவே சரபோஜியை நான் சுவீகாரம் எடுத்துக் கொண்டேன். நாலைந்து நாளில் ஒரு சுபமுகூர்த்தத்தில் அவனுக்குப் பட்டம் சூட்டும் விழாவும் நடக்கப் போகிறது. இந்த அரசுக்கும் அதன் செல்வங்களுக்கும் அவனே அதிபதியாக இருக்கப் போகிறான். ஆனால் இது எனது உறவினர்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை. எனது அமைச்சர்கள் சிலரும் இதை எதிர்த்து சூழ்ச்சி செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள். நீங்கள் நால்வரும் தான் எனது மகன் சரபோஜியைக் காப்பாற்ற வேண்டும். அவனை ஒரு நல்ல அறிவாளியாகப் பாதிரியார் வளர்த்து உருவாக்க வேண்டும்’ என்று சொல்லிக் கண்ணீர் விட்டுவிட்டார். அப்போது ஸ்வார்ஷ் பாதிரியார் என்னை அணைத்துக் கொண்டு முத்தமிட்டது எனக்கு நினைவிருக்கிறது. கருணைக் கடலான அந்தப் பெரியவர் தான் கொடுத்த வாக்கைக் கடைசி வரையில் மிகவும் சிரமப்பட்டுக் காப்பாற்றினார்!”

     “அப்படிப்பட்ட சிரமங்கள் தாத்தா எதிர்பார்த்தபடியே ஏற்பட்டனவா தந்தையே?”

     “ஆமாம் மேலே கேள்! இது நடந்த ஐந்தாவது நாள் வசந்த பஞ்சமியன்று சுபமுகூர்த்தத்தில் ஸ்ரீ பிரதாப ராமசுவாமி மஹாலில் தர்பார் நடத்தினார் மகாராஜா. சிங்காதனம் போடும்படி செய்து அதில் என்னை உட்கார வைத்து எனக்கு முடி அணிவித்தார். தர்பாருக்கு வந்திருந்த பிரதானிகள், பிரபுக்கள் எல்லோரிடமும் நான் தான் அடுத்த அரசர் என்பதையும் எடுத்துச் சொன்னார். இதைச் சென்னையில் இருந்த அரசாங்கத்தாருக்கும் விவரமாகக் கடிதம் எழுதி அனுப்பினார். ஆனால் இவ்வளவு நடந்த பிறகும், நான் அரசனாக முடியவில்லை!”

     அதைக் கேட்டதும் சிவாஜிக்கு மிகுந்த அதிர்ச்சி உண்டாயிற்று. இன்னும் வாலிபப் பருவத்தை எட்டாத அவனால் தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதைப் பற்றி தந்தை விவரிக்கப் போவதை எதிர்பார்த்து அவனுடைய உடல் நடுநடுங்கிற்று. வியர்வையினால் உடல் தெப்பமாக நனைந்தது.

     சரபோஜி அவனைத் தட்டிக் கொடுத்தார். “மகனே! சுலக்‌ஷணா தூங்கிவிட்டாள் என நினைக்கிறேன். வீணை ஒலி கேட்கவில்லை. இந்தக் கதையைப் பிறகு தொடர்ந்து சொல்லட்டுமா...? நீயும் மனம் சோர்ந்து போயிருப்பது போலத் தோன்றுகிறது?” என்றார் சரபோஜி.

     “இல்லை அப்பா. இப்போதே தொடர்ந்து சொல்லுங்கள். இல்லாவிட்டால் என்னால் இன்று இரவு தூங்க முடியாது என்று தோன்றுகிறது...” என்று தனது பதட்டத்தை அடக்கிக் கொள்ள முயன்றான் சிவாஜி...

     “சரி மகனே; வெளியே வா! நிலா முற்றத்தில் அமர்ந்து பேசுவோம். உனக்கும் அந்தத் தென்றல் காற்று சற்று மாறுதலாக இருக்கும்” என்று அவனை அழைத்துக் கொண்டு போனார் சரபோஜி. காவலாளியை அனுப்பி சுலக்‌ஷணாவை மஞ்சம் ஒன்றில் படுக்க வைக்கும்படி ஆணையிட்டுவிட்டுப் போனார்.

     நிலா வெளிச்சத்தில் பளிங்கு ஆசனத்தில் அமர்ந்து தனது மகனுடன் பேச ஆரம்பித்தார் மன்னர் சரபோஜி...

     “துளஜா மகாராஜா சாஸ்திரப்படியும், சட்ட ரீதியாகவும் இவ்வளவும் செய்து முடித்திருந்த போதும், அவருடைய மந்திரி பிரதானிகள் சிலர் அவருக்கு துரோகம் செய்ய முற்பட்டார்கள். அவருக்குத் தெரியாமல் அவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள். ‘துளஜா மகாராஜாவுக்கு முடிவு காலம் சமீபித்து விட்டது. மேலும் பிள்ளை இல்லாத குறையால் அவருடைய மனம் பேதலித்து விட்டது. யாரோ சொல்லுவதையெல்லாம் ஏற்றுக் கொள்கிறார். ஆங்கிலேயர்கள் சொல்லுவதைக் கேட்டுக் கொண்டு, சரபோஜியை சுவீகார மகனாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்’ என்று பேசிக் கொண்டார்கள்.”

     “சுவீகாரம் எடுத்துக் கொள்வது என்பது அரசபரம்பரையினருக்கு ஒன்றும் புதிது அல்லவே தந்தையே?”

     “இதில் அது மட்டும் பேசப்படவில்லை. என்னை அரசனாக நியமித்து ஆங்கிலேய சர்தார்களிடம் அரசர் ஒப்படைத்து விட்டபடியால், அவர்களுடைய போதனைகளைக் கேட்டுக் கொண்டு வளரும் நான், ஆங்கிலேயருக்கு சாதகமாகத்தான் இருப்பேன் என்றும், படிப்படியாக இந்த இராஜ்ஜியம் முழுவதும் ஆங்கிலேயர்கள் கைக்குப் போய் சேர்ந்துவிடும் என்றும் பிரசாரம் செய்யத் தொடங்கினார்கள். ஸ்வார்ஷ் பாதிரியார் என்னை வளர்த்ததும், பாடம் சொல்லிக் கொடுத்ததும் அதற்குச் சாதகமாக அமைந்தது. எனக்கு மாற்றாக இன்னொருவரை அரசராக்கவும் முயற்சி எடுத்துக் கொண்டார்கள்.”

     “என்ன நடந்தது?”

     “அரசருக்கு முறைப்படி விவாகம் ஆகாத பெண்களில் ஒருத்தியின் வயிற்றில் பிறந்த அமரசிங் என்பவரைத் தேர்ந்தெடுக்க நிச்சயித்தனர். அமரசிங்கிற்கு ஆட்சி அனுபவம் இல்லை. அரண்மனை விவகாரங்களும் தெரியாது. ஆனால் வயதில் சற்றுப் பெரியவர். அதனால் அவரை அலங்காரம் செய்து கொண்டு வந்து அரசரிடம் நிறுத்தினார்கள். அவரிடம், ‘இவன் அல்லவா உங்களுக்குப் பிறந்தவன்? முறைப்படி விவாகம் ஆகாவிட்டால் என்ன? உங்கள் இரத்தம் இவன் உடம்பில் ஓடுகிறது அல்லவா? இவனுக்கு நீங்கள் முடிசூட்டி மகிழ வேண்டாமா?’ என்று விவாதித்தார்கள். அரசரின் மனம் இளகிய வேளையில் அவரிடம் அதைப் போல ஒரு கையெழுத்தும் வாங்கிவிட்டார்கள். அதைத் தேதியிட்டுச் சென்னையில் உள்ள அரசாங்கத்துக்கும் அனுப்பிவிட்டார்கள். இதற்கு மறுநாள் துளஜா மகாராஜா காலமாகிவிட்டார். அவருடைய இறுதிக் கடன்களைச் செய்ய என்னை அனுமதிக்கவில்லை. பாவனைக்காக என்னை உடன் வைத்துக் கொண்டு அமரசிங்கே எல்லாக் காரியங்களையும் செய்து விட்டார். இப்படி ஊரார் முன்னிலையிலும் அமரசிங் தான் அடுத்த வாரிசு என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்தி விட்டார்கள்!”

     “ஆனால் அரசர் தங்களை ஏற்கெனவே இளவரசனாக முடிசூட்டிவிட்டார் அல்லவா? அதைப் பற்றிச் சென்னையில் உள்ள அரசாங்கத்துக்கும் தெரிவித்து விட்டாரே? தஞ்சையில் உள்ள பிரதிநிதி ஜான் ஹடாலேப்ஸனுக்கும் சொல்லி, அவர் முன்னிலையில் உங்களுக்கு முடிசூட்டு விழாவும் நடந்து விட்டது அல்லவா? இவ்வளவையும் எப்படி மீற முடியும்?” என்று கேட்டான் சிவாஜி.

     சரபோஜி மகனின் முதுகில் தட்டிக் கொடுத்தார். “மகனே நீ நன்றாகத்தான் கவனித்துக் கேட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். அது மட்டும் அல்ல. நுட்பமான அரசியல் பிரச்சினைகளைப் பற்றி சரியான கேள்விகளையும் கேட்கிறாய். இதை நான் பாராட்டுகிறேன். இந்த வரலாற்றை உனக்கு நான் இவ்வளவு விவரமாகச் சொல்லத் தொடங்கியதற்கு காரணமே இதுதான். அரசர்களுக்கு எந்தெந்த வகையில் துரோகம் செய்ய முடியும் என்றும், அந்தச் சூழ்நிலையை வெளிநாட்டினர் எவ்வாறெல்லாம் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் நீ தெரிந்து கொள்ள வேண்டாமா? மேலும் சொல்லுகிறேன் கேள். இந்தியா முழுவதையும் அடைய விரும்பிய ஆங்கிலேய கும்பெனியாரின் தலைமை அலுவலகம் அப்போது கல்கத்தாவில் இருந்தது. சிராஜ்வல்காமல் என்பவர் சென்னையில் அதிகாரியாக இருந்தார். லேடி சிராஜ்வல்காமல் ஓர் ஆங்கிலேயப் பெண்மணி. அவளுக்கு நமது நகைகள் என்றால் கொள்ளை ஆசை. தஞ்சையில் உள்ள கைதேர்ந்த பொற்கொல்லர் ஒருவரை வைத்து நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட ஓர் அட்டிகை ஒன்றைச் செய்யச் சொல்லி, அதைப் பத்தரை மாற்றுப் பொன்னால் செய்த சங்கிலியில் பூட்டி, முக்கியமான நிலப் பிரபுக்கல் தமது பரிசாகச் சென்னைக்கு எடுத்துக் கொண்டு போனார்கள். பரிசாக அளிக்கப்பட்ட அந்த நகையைக் கண்டதும் லேடி காமல் மயங்கிப் போனாள். அவர்களுக்கு உதவுவதாகச் சொன்னாள்...”

     “அதற்காக ஏற்கெனவே சட்டப்படி நடந்தவற்றைப் புறக்கணிக்க முடியுமா தந்தையே?”

     “அப்படி அல்ல! பெண்கள் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள். மேலும் என்ன நடந்துவிட்டது? மன்னர் துளஜா ஏற்கெனவே என்னை இளவரசனாக அறிமுகப்படுத்தி, சென்னை அரசாங்கத்துக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். பின்னர் இந்தப் பிரதானிகளும் பிரபுக்களும் சொன்னபடி அமரசிங்கையே தனது வாரிசு என்று அறிவித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதை அவர்களும் முறைப்படி சென்னை அரசாங்கத்திடம் சேர்த்து விட்டார்கள். இதில் பின்னால் வந்த கடிதம் எது? அமரசிங்கிற்கு ஆதரவானதுதானே? அதைத் தானே அரசாங்கம் இறுதி முடிவாக ஏற்றுக் கொள்ளும்?”

     “அது எப்படித் தந்தையே? தங்களை வைத்து ஒரு முடிசூட்டு விழா நடந்த பின்னர், திடீரென்று ஏன் மனம் மாறினார் என்பதை விசாரித்து அறிய வேண்டாமா? தஞ்சைக்கு அந்த அதிகாரி வந்திருக்கலாம் அல்லவா?”

     “வந்திருக்கலாம். ஆனால், அதற்குள் மறுநாளே மன்னர் துளஜாவின் ஆயுள் முடிந்து விட்டதே. மன்னரின் முடிவு ஏன் அப்படி திடீரென நேர்ந்தது? அது இயற்கையான மரணம் தானா? நாங்கள் சிலர் இப்படிச் சந்தேகப்பட்டது உண்டு. ஆனால் மன்னரின் மரணத்தை என்னைப் போல ஒரு சாதாரண குடிமகன் எப்படி ஆராய முடியும் மகனே?”

     “அப்பா! தாங்கள் ஒரு சாதாரண மகனா? அப்படி இன்னொரு முறை சொல்லாதீர்கள்!” என்று குரல் தழுதழுக்கக் கூறினான் சிவாஜி.

     “நான் சொல்லுவது உனக்குப் பிடித்திருந்தாலும், பிடிக்கவில்லை என்றாலும் உனது நிலை அப்படித்தான் ஆயிற்று! லேடி காமல் தனது கணவனிடம் சாமர்த்தியமாய்ப் பேசி, அமரசிங்கே துளஜா மன்னரின் உண்மையான வாரிசு என்று கல்கத்தாவில் உள்ள தலைமையகத்துக்கு அறிக்கை அனுப்பச் செய்து விட்டாள்...”

     “அங்கே என்ன ஆயிற்று? அவர்களாவது உண்மையான நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள முயலவில்லையா அப்பா?”

     “அப்படி ஒரு முயற்சி நடந்தது. இதுவரை வரலாறு கண்டிராத முறையில் ஒரு வினோதமான ஆலோசனையும் நடந்தது. நானும் அவர்களது முடிவைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருந்தேன்!” என்று சொல்லிவிட்டு நிறுத்தினார் மன்னர் சரபோஜி.

     “அப்பா! எந்தக் காரணத்தைக் கொண்டும் இதை இப்படியே நிறுத்திவிடாதீர்கள். இந்த உண்மையை மீண்டும் எனக்கு விவரமாகச் சொல்லக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்பதை நான் அறியேன். அதனால் தொடர்ந்து சொல்லிவிடுங்கள்!” என்று படபடத்த குரலில் சொன்னான் சிவாஜி.

     சரபோஜி மன்னர் தொடர்ந்து சொல்லத் தொடங்கினார்...


புவன மோகினி : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38