12. ராமன் சேவையே போதும்!

     ராம பக்தி சாம்ராஜ்யமே      மானவுல கப்பேனோ மனளா!

          - தியாகராஜ சுவாமிகள்

     (இராமபிரான் பக்தி என்னும் சாம்ராஜ்யம் யாருக்குக் கிடைக்கிறதோ, அவர்களுடைய தரிசனமே மிகுந்த பரவசத்தைக் கொடுக்கக் கூடியது.)

     வீட்டிற்குள் தரையில் நிலப்பிரபுக்கள் அமர்ந்திருந்தனர். வீணை பெருமாளையரும், பிற வித்துவான்களும் வந்திருந்தார்கள். திருவையாற்றின் தாசில்தார் உட்கார்ந்திருந்தார். அவ்வளவு பிரமுகர்கள் அந்த வீட்டுக்கு ஒரு சேர அதுவரையில் வந்து கமலாம்பாள் பார்த்ததே இல்லை. அதனால் அவர்களைச் சமாளிக்க முடியாமல் திக்குமுக்காடிப் போனாள்.

     தட்டுகளில் பழங்கள், தின்பண்டங்கள், உலர்ந்த பருப்பு வகைகள், கற்கண்டு, பட்டாடைகள், பூமாலைகள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. வந்திருந்தவர்களை உட்கார வைக்கவே ஒரு நல்ல பாய் கூட இல்லாத அந்த வீட்டில், அவற்றை வைக்க வேறு இடமேது? தரையிலே அறையில் சுவர் ஓரமாக அவை வைக்கப்பட்டிருந்தன.

     தியாகராஜ சுவாமிகள் உள்ளே வந்ததும் அனைவரும் எழுந்து நிற்க முயன்றார்கள். அவரோ தலையைக் குனிந்து கைகுவித்து அவர்களை வணங்கியபடி ராமபட்டாபிஷேக விக்கிரகம் வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகில் பணிவுடன் உட்கார்ந்து கொண்டு, “என்ன வேண்டும்? எதற்காக இவ்வளவு பெரியவர்கள் இந்த எளியவன் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள்?” என்று மென்மையான குரலில் கேட்டார்.

     வித்துவான்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டார்கள். எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று புரியாமல் ஒருவரையொருவர் கண் ஜாடைக் காட்டிக் கொண்டார்கள். மெதுவாக தாசில்தார் பேச்சைத் தொடங்கினார்.

     “தங்கள் குடும்பத்தின் மீது தஞ்சை மகாராஜா வம்சவழியாகக் கொண்டுள்ள பற்றும் அன்பும் தங்களுக்குத் தெரிந்ததுதான். தங்களுடைய தந்தை ரமாபிரும்மம், திருவாரூரிலிருந்து குடும்பத்தினருடன் இடம் பெயர்ந்து இந்த ஊருக்கு வந்து சேர்ந்த போது, திருமஞ்சன வீதியில் இந்த இல்லத்தைக் கொடுத்தவர் மகாராஜா துளசிங்கம் அல்லவா? திருவையாற்றுக்கே தங்கள் குடும்பம் பெருமை சேர்த்துக் கொடுத்திருக்கிறது. தமிழ் நாடெங்கும் ராம பக்தர்களும், இசை மேதைகளும் மனம் கனிந்து பாடும்படியான அற்புதமான கீர்த்தனைகளைத் தாங்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறீர்கள்...”

     “நான் ரொம்ப எளியவன். ராமபக்தியே சாம்ராஜ்யம் என்று நினைப்பவன், வேறு எதுவுமே எனக்குத் தெரியாது. நீங்கள் ஏதோ பெரிய வார்த்தைகளையெல்லாம் சொல்லுகிறீர்கள்!” என்று பணிவான குரலில் சொன்னார் சுவாமிகள்.

     “அப்படிச் சொல்லக் கூடாது. ராமபக்தியை இவ்வளவு இனிமையாக மக்களிடையே பரப்பிய பக்தர் வேறு யார்? ஆந்திரம் தங்கள் தாயகமாக இருக்கலாம். தெலுங்கு தங்கள் தாய்மொழியாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் அல்லவா தங்களுடைய பக்திரசம் சொட்டும் கீர்த்தனைகள் அத்தனையையும் அரங்கேற்றியிருக்கிறீர்கள்... தங்களுடைய பக்தி மணம் கழமும் அழைப்பை ராமபிரானே ஏற்றுக் கொண்டு தரிசனம் தந்திருப்பதை உலகமே அறியுமே!” என்றார் தாசில்தார் மீண்டும்.

     “அபச்சாரம்! நான் யார் அப்படிப்பட்ட பெருமையை ஏற்பதற்கு? ராமனைக் கூப்பிடும் போதெல்லாம், ‘தெலிய லேது ராமா பக்திமார்க்கமு’ என்றல்லவா நான் சொல்லுகிறேன்? நாதோபாசனை எனக்கு மன நிம்மதியை அளிக்கிறது. நான் பாடும் போதெல்லாம் அன்னை ஜானகி என்னை ஒரு குழந்தையாக ஏற்றுக் கொண்டு, அபயகரம் நீட்டி கண்களில் அன்பு சொரிய நிற்பதாக உணருகிறேன். அவ்வளவு தான்! அதற்கு மேல் நான் எதையும் கேட்கவில்லை. வேறு எதையுமே நாடவில்லை!”

     “தாங்கள் எதையும் நாடாமல் இருக்கலாம். ஆனால் மக்கள் தங்களை நாத முனிவரின் அவதாரமாக அல்லவோ நினைக்கிறார்கள்? காதுக்கு இனிமையாக எத்தனையோ பேர் பாடக் கேட்கலாம். ஆனால் தங்களைப் போல் பக்தி நிறைந்த பாடல்களால் நெஞ்சை மீட்டுவதற்கு எத்தனை பேரால் முடியும்?” என்று குறுக்கிட்டுக் கேட்டார் பெருமாளையர்.

     “பக்தி ஒவ்வொருவர் மனத்திலும் இருப்பது! இராமச்சந்திரமூர்த்தி இடம் தராத உள்ளம் எங்கேயாவது இருக்க முடியுமா? அதை நான் மெல்ல கதவு திறந்து விடுகிறேன். அவ்வளவுதான்! நாம் எல்லோருமே ‘மாஜானகியின் குழந்தைகள் தாமே?’ நாம் கூப்பிட்டால் அன்னை வராமல் இருப்பாளா? அந்தப் பெருமையை அந்த சீதா பிராட்டிக்குக் கொடுங்கள். எனக்கு எதற்கு இந்த உபசார வார்த்தைகள்?”

     “உண்மைதான் சுவாமிகளே! அப்படி இராமபிரானிடம் பக்தியும் - அதனால் தங்களிடம் மரியாதையும் கொண்ட மக்கள் எத்தனையோ பேர் இந்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் தலைசிறந்த ஒருவர் இந்த தஞ்சைத் தரணியை ஆளும் சரபோஜி மகாராஜா. அவர் தான் எங்களைத் தங்களிடம் அனுப்பி வைத்திருக்கிறார்!” என்று தொடர்ந்தார் தாசில்தார்.

     “என்னிடமா? உங்களைப் போன்ற பெரியவர்களையா? என்னிடம் என்ன இருக்கிறது. மகாராஜாவுக்கு கொடுக்க? ராமச்சந்திரனிடம் கொண்ட பக்தியைத் தவிர, அரசர்கள் நாடும்படியான வல்லமை எதுவுமே என்னிடம் இல்லையே? நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்?” என்று கேட்டார் சுவாமிகள். சொல்லும்போதே இனம் புரியாத ஒரு தவிப்பு அவருடைய உள்ளத்தே ஆட்டி வைத்தது. ராமபிரானை எண்ணிப் பார்த்துத் தானே சமாதானம் செய்து கொண்டார்.

     “மன்னரின் மகளுக்கு இந்த வாரக் கடைசியில் பிறந்த நாள் வருகிறது. மன்னர் காசியாத்திரை செல்ல இருக்கிறார். அதற்கு முன் மகளின் பிறந்த நாள் விழாவை நல்லவிதமாகக் கொண்டாடிவிட்டுச் செல்ல விரும்புகிறார். எங்கள் எல்லோருக்கும் இந்த ஆசை இருக்கிறது; தாங்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும்!” என்றார் தாசில்தார். கூட இருந்த பிரபுக்களின் முகம் மலர்ந்த காட்சி சுவாமிகளுக்கு அமைதியைக் கொடுத்தது.

     “குழந்தைக்கு என்னுடைய ஆசீர்வாதம் உண்டு. கருணாமூர்த்தியான ராமபிரானின் அருளால் அவளுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கட்டும். அரசரிடம் எனது பணிவு கலந்த பிரார்த்தனையைச் சொல்லுங்கள். ஆனால் அரண்மனைக்கு வரவோ, விழாவில் கலந்து கொள்ளவோ என்னால் முடியாது. அது என் வழக்கமிலொலை. திருவாங்கூரிலிருந்து கூட அரசர் கோவிந்த மாராரை அனுப்பிக் கூப்பிட்டார். நான் போகவில்லை! எனக்குப் போக மனம் இடம் தரவில்லை!” என்றார் லேசான மறுப்புத் தெரியும் குரலில்!

     “உண்மைதான் சுவாமிகளே! ஆனால் இவர் நம் தேசத்து ராஜா. என்னைப் போன்ற வித்வான்கள் பலர், அவருடைய அன்புள்ளத்தின் ஆதரவில் இருந்து சேவை செய்து வருகிறோம். சரபோஜி மகாராஜா தங்களையும் அதைப்போல கௌரவிக்க விரும்புகிறார். தங்களுடைய பக்திக்கும் சேவைக்கும் இதனால் எந்த இடையூறும் வராது. தங்கள் விருப்பப்படி பாடிக் கொண்டிருக்கலாம். விரும்பும் போதெல்லாம் திருவையாற்றுக்கு வந்து போகலாம். அங்கே அரசர் செய்து கொடுக்கும் சௌகரியங்களுடன் தாங்கள் அமைதியாக வாழலாம். எங்களுக்கும் தங்களுடன் அரசவையில் கூட இருந்து சங்கீத ஞானத்தைத் தேடிக் கொண்ட பெருமை கிடைக்கும். தாங்கள் மாட்டேன் என்று சொல்லிவிடக் கூடாது!” என்று கெஞ்சும் குரலில் கேட்டார் பெருமாளையர்.

     “மன்னிக்கவேண்டும். எத்தனை பணம் கொடுத்தாலும் நான் இந்தக் காவேரிக்கரையை விட்டு நகரமாட்டேன். அரசரின் அன்புக்கு ரொம்ப நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் அந்த வாழ்க்கை எனக்கு ஏற்றது அல்ல. முடியைத் துறந்து கானகம் சென்ற தியாகராமனின் பக்தன் நான். ஜானகியை மீண்டும் காட்டுக்கு அனுப்ப நேர்ந்த பிறகு தரையில் படுத்து உறங்கிய அரசன் ரகுராமனின் சேவகன் நான். வேறு யாரையும் நான் எனது எஜமானனாக எடுத்துக் கொள்ள இயலாது. எளிய வாழ்க்கையைக் கைவிடவும் முடியாது...!”

     சுவாமிகளின் அண்ணன் ஜபேசன் இப்போது குறுக்கிட்டார்: “தியாகு! என்ன பேசுகிறாய்? உனக்கு அழைப்பு அனுப்பியிருப்பது யார்? அதைச் சரியாகப் புரிந்து கொண்டாயா? எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்? நாம் எல்லோருமே சரபோஜி மகாராஜாவின் குடிமக்கள் அல்லவா? அரசர் ஆணை இட்டால் ஏற்க வேண்டியவர்கள் அல்லவா நாம்? அவருடைய அன்பான அழைப்பை மறுக்க நமக்கு உரிமை ஏது?” என்று கேட்டார்.

     “அண்ணா! என்னை மன்னியுங்கள். இந்த பஞ்சநதீஸ்வரர் சந்நிதியையும், புஷ்பமண்டபப் படித்துறையையும் விட்டுப் போக எனக்கு மனம் இடம் தராது. இந்த நான்கு மாடவீதிகளிலும் உஞ்ச விருத்தி பஜனை செய்து கிடைப்பதிலிருந்து வாழும் வாழ்க்கையே எனக்கு அமைதியைக் கொடுக்கும்!” என்றார் சுவாமிகள்.

     “அரசர் உனக்கு அளிக்கப் போவதை எண்ணிப் பார்த்தாயா தியாகு! எப்பேர்ப்பட்ட பெருநிதி உனக்காகக் காத்திருக்கிறது? உன்னுடைய குடும்பமும் நாங்களும் அதனால் எவ்வளவு நன்மையை அடைவோம்? ஏன்? உன்னுடைய பெண்ணுக்கே அதை வைத்து நீ எத்தனையோ விதமான சீர்வரிசைகளை அனுப்பலாம் அல்லவா? கொஞ்சம் யோசித்துப் பார்டா? உனக்காக இல்லாவிட்டாலும் எங்களுக்காகவாவது எங்களுக்கு கிடைக்கக் கூடிய சுகத்துக்காகவாவது உன்னுடைய பிடிவாதத்தை விட்டுவிட மாட்டாயா?” என்று அருகில் வந்து தோளில் கை வைத்துக் கேட்டார் ஜபேசன். அவருடைய கண்களில் நீர் ததும்பி நின்றது.

     தியாகராஜ சுவாமிகள் அவரைப் பார்த்தார். அறையில் வைத்திருந்த வெகுமதிப் பொருட்களைப் பார்த்தார். தாசில்தார் தட்டில் எடுத்துக் கொட்டிக் காட்டிய தங்கக் காசுகளைப் பார்த்தார். தர்ம வழியில் வாழ்ந்து காட்டிய தசரதராமனின் திருவுருவத்தைப் பார்த்தார். தலையை அசைத்துக் கொண்டார்.

     “என்னை மன்னியுங்கள் அண்ணா! இந்த நிதியா சாசுவதமானது? இதுவா சுகம் தரக்கூடியது? ‘நிதி சால சுகமா? ராமுடு சந்நிதி சேவா சுகமா?’ என்று நான் பாடிக் கொண்டிருந்து விடுவேன். அதுதான் எனக்கு மன நிம்மதியைக் கொடுக்கும். அந்த எளிய வாழ்க்கை எனக்குப் போதும் அண்ணா! வெங்கட்ராமனைப் போன்ற சிஷ்யர்கள் உடன் இருந்து பாட, நான் இந்தக் கூட்டத்தில் மண் தரையில் அமர்ந்து பாடுவேன். காவேரியின் படித்துறையில் பாடுவேன். புழுதி மண்ணில் கால் அளைய உஞ்சவிருத்தி செய்து பாடுவேன். அதுதான் எனக்குத் திருப்தியைத் தரும். அப்படித்தான் என்னால் பாட முடியும். வேறு எப்படியும் - எங்கேயும் என்னால் பாட முடியாது அண்ணா! என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் எல்லோருமே என்னை இப்படிச் சொல்வதற்காக மன்னிக்க வேண்டும். அரசரின் மனம் புண்படாமல் இதை எப்படி எடுத்துச் சொல்ல வேண்டுமோ, அப்படிச் சொல்லி விடுங்கள்!” என்று கைகூப்பியபடி எழுந்திருந்தார் சுவாமிகள்.

     “அரசரின் மகள் சுலக்‌ஷணா தாங்கள் வந்து ராஜசபையில் பாட வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்படுகிறாள். அந்தக் குழந்தைக்காகவாவது தாங்கள் மனம் இரங்கக் கூடாதா? தாங்கள் பாடிக் கேட்க அந்த கள்ளங்கபடம் அறியாத மனம் ஏங்குகிறது. அதற்காகவாவது தாங்கள் ஒருமுறையேனும், அவளுடைய பிறந்த நாளன்றைக்காவது அரண்மனைக்கு வந்து பாட ஒப்புக் கொள்ளக் கூடாதா?” என்று உடைந்த குரலில் தாசில்தார் கேட்டார்.

     தியாகராஜ சுவாமிகள் கண்களில் நீர் கசிந்தது. கை கூப்பிய வண்ணம், “ஐயா! எப்போது வேண்டுமானாலும் அந்தக் குழந்தையை திருவையாற்றுக்கு பஞ்சநதீசுவரர் ஆலயத்துக்கு அழைத்து வாருங்கள். நான் பாடுகிறேன். சங்கீதத்துக்கு மட்டுமல்ல; அந்தக் குழந்தையின் அன்புக்கும் காட்டுகிற மரியாதையாக அது இருக்கட்டும். ஆனால், அதற்காக எனக்கு இந்தப் பரிசுகள் எதுவும் வேண்டாம். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய்விடுங்கள். மன்னரிடம் இதன் மூலம் நான் எந்த விதமான அவமதிப்பையும் காட்டவில்லை என்று சொல்லுங்கள்!” என்று சிரம் தாழ்த்திக் கூறினார் அவர்.

     தாசில்தார் எழுந்து தலைகுனிந்தபடி வெளியே சென்றார். பிரபுக்களும், வித்துவான்களும் பின் தொடர்ந்து சென்றார்கள். கூட வந்த ஆட்கள் உள்ளே வந்து அலங்காரத் தட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு போனார்கள். வீடு காலி ஆயிற்று. ஜபேசன் கோபத்துடன் துண்டை உதறித் தோள் மீது போட்டுக் கொண்டு வெளியேறினார். கமலாம்பாள் ராமவிக்கிரகத்துக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, அங்கே எதுவுமே நடக்காததைப் போல உள்ளே போனாள்.

     சீடர்கள் புடை சூழ தியாகராஜ சுவாமிகள் அங்கேயே அமர்ந்து கொண்டார். கண்கள் உருகப் பாடத் தொடங்கினார். நாத அலைகள் நிறைந்து மணம் எழுப்பின.

     சிப்பாய்களும், சீர்வரிசைகளை ஏந்திய ஆட்களுமாக வண்டிகளும், குதிரைகளும் பல்லக்குகளும் திரும்பிச் சென்ற காட்சியைப் பார்த்து மக்கள் வியந்து நின்றார்கள். திண்ணையில் நின்றபடி வாயில் துணியை வைத்து மனக்குமுறல் எழுப்பிய விசிப்பை அடக்கிக் கொண்டு சிலையாகிப் போனார் சுவாமிகளின் தமையன் ஜபேசன்.

     அந்தப்புரம் விழாக்கோலம் பூண்டிருந்தது...

     பெரியம்மா யமுனாபாயும் அன்னை அகல்யாபாயும் சுலக்‌ஷணாவின் பிறந்த நாளை ஒட்டி வந்திருந்த பல்வேறு பரிசுப் பொருட்களைப் பிரித்து வைத்துக் கொண்டிருந்தார்கள். மன்னர் சரபோஜி அங்கே வருவதாகக் கூறி இருந்தார். அதை எதிர்பார்த்து சுலக்‌ஷணாவும் சற்று நேரத்துக்கு ஒரு தடவை ஓடிப்போய் சாளரத்தின் வழியே சாரட்டு வண்டி வந்து நிற்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

     பரிசாக வந்த பொருட்களில் பலவிதமான நகைகள் இருந்தன. ராக்கொடி, பேசரி, அட்டிகை, மோதிரம், காதுப்பட்டை, கொலுசு போன்ற நகைகள் தங்கத்திலும் வெள்ளியிலும் மின்னின. நவரத்தினங்கள் வைத்து இழைத்த அட்டிகை எங்கு நின்று பார்த்தாலும் கண்ணைக் கவரும் விதமாகத் தோற்றமளித்தது. பதக்கம் தொங்கவிட்ட நல்ல முத்து மாலை ஒன்றும் வந்திருந்தது.

     விதம் விதமான பட்டுத் துணிகளும் வந்து குவிந்திருந்தன. கும்பகோணத்தை அடுத்த திரிபுவனத்தில் இளையராணி விரும்பிய வண்ணமே நெய்து தயாரிக்கப்பட்ட சிற்றாடை ஒன்றும் அதில் இருந்தது. காசிப்பட்டு, காஞ்சிவரம் பட்டு, தர்மாவரம் பட்டு என்று பலவிதமான பட்டுத்துணிகளும் பல வண்ணங்களில் வந்திருந்தன. எதை முதலில் எடுத்து உடுத்துவது என்பதே சுலக்‌ஷணாவுக்குப் பெருங்குழப்பமாக இருந்தது.

     பலரும் தஞ்சை ஓவியர்கள் அமைத்த தங்க, வெள்ளி ஜரிகைகளை வைத்து இழைத்த ஓவியங்களை அனுப்பி இருந்தார்கள். ருக்மிணி சத்யபாமாவுடன் கிருஷ்ணன், இராம பட்டாபிஷேகம், ஆலிலை கிருஷ்ணன், வினாயகர், வெண்ணெய்க் குடத்துடன் பாலகிருஷ்ணன் இப்படிப் பல ஓவியங்களும் அவற்றிடையே காணப்பட்டன.

     சாளரத்துக்குப் போய் சலிப்புடன் எட்டிப் பார்த்து, வெளியே நோக்கிய சுலக்‌ஷணா புன்னகை ததும்ப, முகமலர்ந்து பெரியம்மாவை ஓடி வந்து கட்டிக் கொண்டு, “அப்பா வருகிறார்! எல்லோரும் எழுந்து நின்று கொண்டு வரவேற்க வேண்டும். யாரும் பேசக்கூடாது!” என்று சொல்லி விட்டு, கைகளைக் கட்டிக் கொண்டு வாய்மூடி நின்று கொண்டாள். யமுனாபாயும் அகல்யாபாயும் இந்தச் சிறு குறும்பை ரசித்தபடி, மன்னரை வரவேற்க வாயில் அருகே போய் நின்று கொண்டார்கள்.

     படியேறி அறைக்குள் வந்த மன்னர் முகத்தில் ஏனோ வழக்கமான முறுவலைக் காணவில்லை. அறையில் ரத்தினக் கம்பளத்தின் மீது வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்களும் அவருக்கு முகமலர்ச்சியை அளிக்கவில்லை. ஏதோ ஒரு பொறுப்பை நிறைவேற்ற அங்கே வந்து சேர்ந்தவரைப் போல் காணப்பட்டார். எப்போதும் நுழையும் போதே இரு கைகளையும் நீட்டி மகளை அழைத்து ஆர்வத்துடன் அணைத்துக் கொள்வார். இன்று அப்படிச் செய்யவில்லை.

     இதைக் கண்ட சுலக்‌ஷணா ஒதுங்கி நின்று கொண்டாள். மூத்தராணியும் இளையராணியும் ஒரு பக்கமாக விலகி நின்று கொண்டார்கள். மன்னர் பேசும் வரை யாரும் பேச வேண்டாம் என்றிருந்தார்கள். இதைப் பார்த்ததும் அரசர் தனது உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு மகளை வம்புக்கு இழுக்கும் குரலில், “அரசிளங்குமரிக்கு என் மீது என்ன கோபம்? ஏன் வழக்கம் போல் ஓடி வந்து என் மடியில் உட்காரவில்லை?” என்று கேட்டார். திரையின் மறைவிலிருந்து சுலக்‌ஷணா மெல்ல வந்து அரசரின் மடி மீது அமர்ந்து கொண்டால். அவருடைய விசாலமான மார்பில் தவழ்ந்த முத்து மாலைகளை விரலால் தடவி நெருடியபடி, “அப்பாவுக்கு மகள் மீது என்ன கோபம்? ஏன் வழக்கம் போல் இரு கைகளையும் நீட்டி அழைக்கவில்லை,” என்று கேட்டு உதட்டைப் பிதுக்கிக் கொண்டாள். அதைக் கேட்ட மன்னரும், அரசியர் இருவரும் சிரித்து விட்டார்கள்.

     “சுவாமி! தங்களுக்கு இன்று என்ன மனக்கவலை? ஏன் இந்த முகவாட்டம்? ஏதாவது எதிர்பாராத செய்தி வந்து விட்டதா? காசியாத்திரைக்கு ஏதேனும் தடையா? கும்பெனியார் ஏதாவது புதிய ஆணை பிறப்பித்திருக்கிறார்களா?” என்று கேள்விகளை வரிசையாக அடுக்கினாள் யமுனாபாய்.

     அரசர் அந்த மூவரையும் ஒருமுறை பார்த்தார். பிறகு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு, “அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. எங்கே? இளவரசியாருக்கு வந்துள்ள பரிசுப் பொருட்களைப் பார்க்கலாமா?” என்று ஒவ்வொன்றையும் தொட்டுப் பார்க்கத் தொடங்கினார். சுலக்‌ஷணா சிரித்தபடி அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, “அப்பா! இதில் உங்களுக்குப் பிடித்தது எது? சொல்லுங்கள் பார்க்கலாம்!” என்றாள்.

     மன்னர் அவளை உற்றூப் பார்த்துவிட்டு நாளை மறுநாள் பிறந்தநாள் விழாவில் இதே கேள்வியை நான் உன்னிடம் கேட்கப் போகிறேன். பால் பணியாரம், தேனில் செய்தவை, சர்க்கரையில் செய்த தின்பண்டம், நெய்யும் சேர்த்துச் செய்தவை இப்படிப் பலவும் அங்கே இருக்கும். அதில் எது உனக்குப் பிடித்தது என்று நான் கேட்பேன். ருசித்துப் பார்த்துவிட்டு நீ பதிலே சொல்ல முடியாமல் திண்டாடுவாய்!” என்றார் சிரித்தபடி.

     “உண்மைதான். எல்லாமே நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் உங்களுக்குப் பிடித்தவை என்று தேர்ந்தெடுத்து அனுப்பியிருப்பார்கள் அல்லவா? அவற்றை மட்டும் சொல்லுங்களேன். எங்களுக்கும் கேட்க ஆவலாக இருக்கிறது!” என்றாள் அகல்யா பாய்.

     பேழையிலிருந்து மன்னர் பதக்கம் சேர்த்த முத்துமாலையைக் கையில் எடுத்து அழகு பார்த்தார். பிறகு, “இதை அனுப்பி இருப்பது ராமநாதபுரம் சமஸ்தானத்து சேதுபதி அரசர்” என்றார். பின் ஜரிகைகள் மின்னிய பட்டாடையை எடுத்து விரித்து, “இது காசி ராஜா அனுப்பி வைத்தது. காசி யாத்திரையின் போது நாம் அவரைச் சந்திப்போம்” என்றார். வினாயகரின் படத்தைக் காட்டி, “இது புதுக்கோட்டை மன்னர் அனுப்பி வைத்தது! இதைத் தயாரிக்க இந்த ஊரிலிருந்து ஓவியரை அழைத்துச் சென்றார் அவர்!” என்றார்.

     அப்படி அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இராம பட்டாபிஷேக படத்தைக் கையில் எடுத்தாள் சுலக்‌ஷணா! “அப்பா! அப்பா! இதை அனுப்பி வைத்தது யார்? திருவையாற்றுக்கு அருகில் இருக்கும் நிலப்பிரபு யாராவது கொடுத்த பரிசா இது? இதைப் போன்ற படத்தைத்தான் தியாகராஜ சுவாமிகள் பூஜையில் வைத்து தினமும் பாடுகிறாரா?” என்று கேட்டாள் ஆவலோடு.

     அந்தக் கேள்வியைக் கேட்டதும் மன்னரின் முகம் வாடிற்று. கண்கள் சோர்ந்து மூடின, நெற்றிப் புருவம் விரிந்து சுருங்கிற்று. நிதானமாக நெடிய பெருமூச்சு ஒன்றை விட்டபடி மகளைத் தம்முடன் சேர்த்து அணைத்துக் கொண்டார் அவர்.

     “அப்பா! உங்களுக்கு ஏன் இந்த மனவருத்தம்? என் பிறந்த நாளன்று சபையில் வந்து பாடும்படி தியாகராஜ சுவாமிகளுக்கு அழைப்பு அனுப்பினீர்களா? அவர் வர ஒப்புக் கொண்டாரா? சொல்லுங்கள் அப்பா!” என்று அவருடைய முகத்தைத் திருப்பி ஆவலுடன் கேட்டாள் சுலக்‌ஷணா.

     அரசியர் இருவரும் அரசர் சொல்லப்போகும் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து நின்றனர்...


புவன மோகினி : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38