23. மனோராவில் ஒரு மாலைப்பொழுது

     நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
     யாப்பினுள் அட்டிய நீர்.

          ‘குறிப்பறிதல் : திருக்குறள் - களவியல்

     என்னை நோக்கினாள்; யான் கண்டதும், நோக்கித் தலை குனிந்தாள்; அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

     சுலக்‌ஷணா புவன மோகினியை அணைத்துப் பிடித்து அமைதிப் படுத்தினாள். ஆயினும், புவனாவின் நெஞ்சு சிட்டுக்குருவி அடித்துக் கொள்வதைப் போலப் பதைபதைத்த வண்ணம் இருந்தது. சிவாஜி அவளுக்குப் புதியவன் அல்ல. ஆனால் அவன் தன்னைப் பார்வையாலும் தொடுவதாலும் ஏற்படுத்திய மனக்கிளர்ச்சிகள், அதுவரை அறிந்திராத ஒரு புது உணர்வாக இருந்தது.

     “அண்ணன் சிவாஜிதானே உன்னோடு விளையாடினான்? அதற்காகவா இப்படிப் பயந்து போய்விட்டாய்? அந்தப்புரத்துக்குப் போகலாம் வா!” என்று அவளை அழைத்துப் போனாள் சுலக்‌ஷணா.

     சிவாஜிக்கும் அந்த அனுபவம் புதுமையாகவே இருந்தது. கைகளை உதறித் தடுத்த அந்தப் பெண்ணிடம், சீண்டி விளையாடிய தன்னுடைய உணர்ச்சி வேகத்தை எண்ணிப் பார்க்க, அவனுக்கே வெட்கமாக இருந்தது. செந்தளிர் போன்ற அவளுடைய அதரமும், இளங்கிளை போன்ற கைகளும், மலர் போல மலரும் இளமை அவள் அங்கமெல்லாம் பொங்கி வழிந்த மெருகும். அவனைக் கவர்ந்து இழுத்ததை, அவனால் மறுக்க முடியவில்லை. ஆனால் அப்படி நினைத்துப் பார்க்கவும் சிறிது தயக்கமாக இருந்தது.

     மூவரும் சேர்ந்தே நடந்து போனார்கள். இளவரசரைக் கண்டதும் வாத்தியக்காரர்கள் வாத்தியங்களை மேலே தூக்கி மூன்று முறை சுற்றி வாசித்து மரியாதை செலுத்தினார்கள். அதைப் பார்க்க புவனாவிற்கு வேடிக்கையாக இருந்தது.

     மாலை நேரம் முதிர்ந்து இருள் லேசாகப் பொடித் தூவலாகப் பரவ ஆரம்பித்திருந்தது. சற்றே வெட்கமடைந்தவளாக, இந்திர நீலவிழிகள் அலைபாய, சுந்தரமான வதனம் காற்றில் கனவு போல லேசாகத் தடுமாறிக் குனிய, மென்னடை நடந்து வந்தாள் புவனமோகினி. அந்த அழகைக் கண்டு, மனம் லேசாகக் கலங்கி நிற்கப் பின் தொடர்ந்து சென்றான் சிவாஜி.

     அந்தப்புர மாடங்கள் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நறுமணப்புகை எங்கும் பரவி மனத்தை மயக்கிற்று. நறுமலர்களால் கட்டிய தோரணங்கள் அழகாக அசைந்தன. பொங்கலை முன்னிட்டு வந்திருந்த செந்நெல்லும், காய்கறிகளும், பழங்களும், பல பூ வகைகளும் சீர்வரிசையாக விஹாரத்தில் வைக்கப்பட்டிருந்தன. கண்களில் அதிசயிப்பெழ, அவற்றை உற்றுப் பார்த்து அனுபவித்த வண்ணம் நடந்து வந்தாள் புவனா.

     பெரிய பூக்கோலம் ஒன்றின் முன் ரத்தினக் கம்பளத்தை விரித்து அமர்ந்தார்கள். பணிப் பெண்கள் பலகார வகைகளையும், பசும்பாலையும் கொண்டு வந்து வைத்தார்கள். பணியாளர்கள் மலர்க்கொத்துக்களைக் கொண்டு வந்து அழகு படுத்தினார்கள். பாட்டுக்களும், சுலோகங்களும், கீர்த்தனைகளுமாக அறையில் நாதம் நிறைந்தது. சுமார் ஒரு மணி நேரம் மெய்ம்மறந்து அமர்ந்திருந்தாள் புவனமோகினி.

     “புவனா! நீ ஒரு பாட்டுக்கு நடனம் ஆடேன்!” என்றாள் சுலக்‌ஷணா திடீரென்று. அதைச் சற்றும் எதிர்பாராத புவனா அதிர்ச்சியடைந்து நிமிர்ந்தாள்.

     “ஆமாம் புவனா! உனக்குப் பிடித்த பாட்டு எதுவானாலும் அதற்கு ஏற்ப ஆடலாம்...” என்றான் சிவாஜி.

     புவனா வெட்கிப் போனாள். அவளுக்கு என்னவோ இப்போது சிவாஜியைப் பார்க்கவே நாணமாக இருந்தது. அதுவும் அவன் முன்னிலையில் நடனம் ஆடுவது என்ற எண்ணத்திலேயே உள்ளம் கூசிற்று. சுலக்‌ஷணாவின் புறம் ஒதுங்கி மறைந்து கொள்ள முயன்றாள்.

     “நீ பரத நாட்டியம் ஆட வேண்டாம் புவனா! நீ இப்போதுதான் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறாய். ஆனால் உன் தாய் நடனக் கலையில் தேர்ந்தவர். உனக்கு ஓரளவு நடனமாடக் கற்றுக் கொடுத்திருப்பார்கள் அல்லவா? அதை ஆடு போதும். நீ பாட்டைச் சொன்னால் நான் பாடுகிறேன். நீ ஆடலாம். எங்கே எழுந்திரு பார்க்கலாம்!” என்று அவளுடைய தோளைத் தொட்டு உசுப்பி விட்டாள் சுலக்‌ஷணா.

     சுற்றிலும் நின்ற பணியாளர்களும், தோழிகளும் வியப்புடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அரண்மனைக்கு வெளியில் உள்ளவர்கள் விழா நாட்களில் அதைப் போல உள்ளே - அதுவும் அந்தப்புரத்துக்கு வந்து அவர்கள் பார்த்ததே இல்லை. இன்று இங்கே இந்தக் கேரளத்துப் பெண் உள்ளே வந்து சமமாக அமர்ந்ததும் அல்லாமல் நடனமும் ஆடப் போகிறாள்...

     “கிருஷ்ணா நீ பேகனே பாரோ” - கணீரென்ற குரலில் புரந்தரதாசரின் கிருதியைப் பாடத் தொடங்கினாள் சுலக்‌ஷணா. முதலில் சற்று நாணத்துடன் தயங்கித் தயங்கி ஆட ஆரம்பித்து, பிறகு தன்னை மறந்தவளாக விறுவிறுப்புடன் ஆடத் தொடங்கினாள் புவனா.

     அங்கே இளம் பெண்ணின் மயக்கம் தெரிந்தது. ஆசை கனியும் உள்ளம் தெரிந்தது. வானத்தில் சிறகு விரித்துப் பறக்க நினைக்கும் பறவையின் சுதந்திர தாகம் தெரிந்தது கண்ணனை அழைத்துக் கனிந்து கனிந்து உள்ளம் உருக நாடும் தாபமும் வெளிப்பட்டது...

     அந்த அழகையே பருகுவது போலப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் சிவாஜி. மற்றவர் தன்னைக் கவனிப்பதையும் பொருட்படுத்தாதவனாக, அவளுடைய சிறு அங்க அசைவுகளையும் ரசித்தவனாக, மெய்ம்மறந்து உட்கார்ந்து கொண்டிருந்தான் அவன்.

     ஆடலும் பாடலும் முடிந்து, உணவருந்தி, காவலாள் மூலம் புவனாவை வீட்டுக்கு அனுப்பி வைத்த பின்னும், அந்த உணர்வு அவனுடைய உள்ளத்தை அலைத்துக் கொண்டிருந்தது. இருட்பாய் விரிப்பில் சிமிட்டிய விண் சுடர்களைப் போல, புவனாவின் பார்வை தன் மீது பட்ட இனிய அனுபவத்தை, மீண்டும் மீண்டும் அவனுடைய உள்ளம் எண்ணி எண்ணிப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தது.

     தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தில் தரிசனம் செய்துவிட்டுப் பிரகாரத்தில் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள் புவனா. தீபங்கள் ஏற்றிய பிராகாரத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய் கொண்டிருந்தார்கள். தலை குனிந்த வண்ணம் புவனா தனது தாயைப் பற்றி எண்ணியபடி நடந்தாள். அவளுடன் அதே போல லட்சதீபத்தன்று ஆலயத்துக்குப் போன நினைவு மனத்தில் தலை காட்டிற்று. பண்டிகை நாளன்று நெய்ச்சோறும், சக்கைப் பிரதமனும் தட்டில் வைத்துக் கொண்டு, தாயின் அருகில் அமர்ந்து சாப்பிட்ட நினைவு வந்தது.

     அம்மா எவ்வளவு நல்லவள்? அவ்வளவு அருமையாக நடந்து கொள்ள வேறு யார் அவளுக்கு இருக்கிறார்கள்? அவளுக்கென்று இருந்த அம்மாவையும் விட்டுவிட்டு, அவள் தன்னந்தனியாக இங்கே வந்து இருக்க நேர்ந்து விட்டதே? கள்ளமில்லாச் சிரிப்பு பூக்கள் போல உதிர, புவனா அம்மாவை அணைத்துக் கொள்வாள். பதிலுக்கு அம்மா அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்தபடி அவளுடைய கூந்தலைப் பரிவுடன் தடவிக் கொடுப்பாள். அந்த அன்பும் ஆதரவும் இப்போது அவளுக்கு வேறு யாரிடம் கிடைக்கும்? எண்ணிப் பார்த்த போது மனம் தவிதவித்தது. எதிரே வருவோரையும் நிமிர்ந்து பார்க்காமல், ஒரு தடுமாற்றாம் நடையில் தெரிய வந்து கொண்டிருந்தாள் புவனா. யாரோ தடுக்க முயலுவது புரிந்து, குலுங்கி நிமிர்ந்தாள்.

     “புவனா! என்னைப் பார்! அடையாளம் தெரியவில்லையா உனக்கு?” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள். தலையில் முண்டாசு கட்டிய அந்த இளந்துறவியை அவளால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஆயினும் அந்தக் குரல் அவளுக்குப் பழக்கமானதாகவே இருந்தது.

     அந்த இரவு வேளையில் முன்பின் அறியாத ஓர் இளந்துறவியுடன் பேசுவதற்கு அவளுக்குத் தயக்கமாக இருந்தது. இருப்பினும், அந்த முகத்தை நிமிர்ந்து பார்க்கும் விருப்பத்தை அவளால் தவிர்க்க முடியவில்லை. சூரியகாந்திக் கல்லைப் போல ஒளி வீசிய அந்த முகத்தை, குறும்பு தவழும் பார்வையை, கண்ணாலேயே சிரித்துக் கவர்ந்திருக்கும் குறும்பை, எங்கேயோ நன்றாகத் தெரிந்து அனுபவித்திருந்த ஞாபகம்...

     சட்டென்று நீர் மேலெழுந்து வருபவளின் பார்வை தெளிவதைப் போல அவளுடைய நினைவிலும் தெளிவு பிறந்தது. அந்த முகம் - அந்தக் குரல் - இளவரசர் சிவாஜிக்கு உரியதுதான்!

     “புரிகிறதா புவனா?”

     புன்னகை அரும்புகின்ற உதட்டைத் திருகிக் கொண்டே, “புரிகிறது இளவரசே! ஆமாம் - இது என்ன புதுவேடம்?” என்று கேட்டாள்.

     “இரவு நேரத்தில் இப்படி நான் அடிக்கடி மாறு வேடத்தில் நகர்வலம் வருகின்றேன். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள இது உதவியாக இருக்கிறது. ஏன்? நீ கூட கொஞ்ச நேரம் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லையே புவனா?” என்று கேட்டான் சிவாஜி.

     “அடையாளம் தெரிந்து கொண்டாயிற்று. இனிமேல் நான் நழுவிச் செல்வதுதான் நல்லது!”

     “ஏன் புவனா? எதற்காக நீ போய்விடத் துடிக்கிறாய்?”

     “இல்லையென்றால் நீங்கள் தனியே உட்கார்ந்து பேசக் கூப்பிடுவீர்கள். பார்ப்பவர்களோ ஓர் இளந்துறவி அழகான இளம் பெண்ணுடன் நெருங்கி அமர்ந்து பேசுவதைப் பார்த்துத் தவறாக எண்ணிக் கொள்வார்கள். செய்தி பரவி இளவரசர் காதை எட்டும்! இளவரசர் தம்மையே தம்முடைய விசாரணைக்கு அழைக்க வேண்டிய நிலைமையும் வந்து விடும்...” என்று கூறிச் சிரிப்பை அடக்க வாயைப் பொத்திக் கொண்டாள் புவன மோகினி.

     “தேவலையே! ரொம்ப சாதுரியமாகப் பேசுகிறாயே? சரி. நீ சொன்னபடியே பிரிந்து செல்வோம். ஆனால் ஒரு நிபந்தனை...”

     “என்ன அது?”

     “அடுத்த வெள்ளிக்கிழமையன்று நானும் சுலக்‌ஷணாவும் மனோராவுக்குப் போகிறோம். நீயும் எங்களுடன் வர வேண்டும்.”

     “வேண்டாம் இளவரசே! அது நன்றாக இராது. அரச குடும்பத்தினர் தனியே உல்லாசப் பொழுது போக்காகப் போகும் இடத்தில் எங்களைப் போன்றவருக்கு என்ன வேலை?”

     “அப்படி நீ என்ன குறைந்து போய்விட்டாய்? நான் ஒரு சிறு நிலப்பகுதிக்கு இளவரசன். நீயோ புவனத்துக்கே மோகினி!”

     “ஐயே! போதுமே பரிகாசம்!” என்று சுவாதீனமாக ஒரு செல்லச் சீண்டல் அவளிடமிருந்து உதிர்ந்தது. நீட்டிய வலது கரத்தில் ஒரு நாட்டிய முத்திரை ஒளிர்ந்தது. அதன் மணிக்கட்டில் கொஞ்சுவது போலத் தொங்கிய குஞ்சலங்கள் ஊஞ்சலாடின. அந்த அழகைப் பார்த்தபடி சொக்கி நின்றான் சிவாஜி.

     “நான் போகலாமா புவனா?”

     “நான் தங்களைத் தடுத்து நிறுத்தவில்லையே இளவரசே!”

     “உண்மைதான்! ஆயினும் தனக்கு இசைவான பதிலைப் பெறாமல் இங்கிருந்து போக என்னுடைய மனம் மறுக்கிறது!” என்று கண்களை மூடி நடித்தான் சிவாஜி.

     கலகலவென்று சிரித்தபடியே புவனா, “ஆகட்டும்! நான் வருகிறேன். ஆனால் இது வெளியே யாருக்கும் தெரிய வேண்டாம். நானே நகரின் எல்லையில் கல் மண்டபத்துக்கு வந்துவிடுவேன்...”

     கண்களில் கனிவு தெரிய, கரங்கள் நீண்டு துடிக்க, தன்னைத் தனது வேடத்துக்கேற்பக் கட்டுப்படுத்திக் கொண்டு, திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வெளியேறினான் சிவாஜி.


புவன மோகினி : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38