![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
3. கலைத்தேவிக்கு ஒரு மஹால்
நெய்திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல் தைலருமகர வீணை தண்ணுமை தழுவித் தூங்க கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல ஐய, நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு... - கவிச்சக்கரவர்த்தி கம்பன் அந்த அழகான பேழையிலிருந்து வெளியே எடுத்து வைக்கப்பட்ட தந்தத்திலான உருவத்தைப் பார்த்துச் சொக்கி நின்றாள் சுலக்ஷணா. “அண்ணா! இது யாருடைய உருவம்? இந்த நடனத்துக்கு என்ன பெயர்? உனக்கு இவற்றை அளித்தவர் யார்?” என்று வியப்புடன் கேட்டாள் அவள். “இது குறிப்பிட்ட பெண்ணின் உருவம் அல்ல. ஆயினும் கேரளத்தில் உள்ள நடனமாடும் பெண்கள் பலரும் இது போன்ற அழகிகள்தாம். அவர்களுடைய உருவம் தந்தத்தில் கடைந்தெடுக்கப் பட்டது போலவே இருக்கும். இந்த நடனத்திற்கு மோகினியாட்டம் என்று பெயர்!” என்று புன்சிரிப்புடன் கூறினான் சிவாஜி. அவனையும் அறியாமல் அவனுடைய கடைக்கண் பார்வை அன்னை அகல்யாபாயைக் குறும்பாகக் கவனித்தது. அகல்யாபாய் ஒரு கணம் கலங்கிப் போனாள். ‘இது என்ன விபரீதம்? இளவரசனே ஆனாலும் என் மகன் இன்னும் வாலிபப் பருவத்தையே எட்டவில்லையே? இவனா இப்படிப் பேசுகிறான்? கேரளத்து சிங்காரிகளின் அழகை வர்ணிக்கும் இவன், அப்படிப்பட்ட மோகினி யாரையாவது சந்தித்திருப்பானோ? அந்த மோகினி ஆடிய ஆட்டத்தையா இப்படி வர்ணிக்கிறான் அவன்?” என்று எண்ணினாள். “அம்மா! பயப்படாதீர்கள். எந்த மோகினியும் என்னைப் பிடித்து ஆட்டவில்லை. நீங்கள் பார்ப்பதையும் உங்கள் முகத்தில் தெரியும் பாவனையையும் கண்டால் எங்கே நீங்கள் அப்படிச் சந்தேகிக்கிறீர்களோ என்று நான் பயப்பட வேண்டியிருக்கிறது!” என்று சொல்லிச் சிரித்தான் சிவாஜி. அருகில் இருந்த சுலக்ஷணா அண்ணனின் முதுகில் தட்டி, கைகொட்டி ‘கலீர்’ என்று நகைத்தாள். குழந்தைகள் இருவரும் இப்படித் தன்னை மடக்கிய விதத்தில் ஒரு கணம் வெட்கம் சூழ எழுந்து நின்றாள் இளையராணி. “அண்ணா! உன்னை நான் முழுவதுமாக நம்பத் தயாரில்லை. மோகினி ஆட்டத்தை நீ கலைக் கண்களோடு பார்த்திருக்கலாம். ஆனால் அதை ஆடிய பெண்மணியை நீ கவனிக்காமல் இருந்திருப்பாயா? அவளுடைய ஓவியம் ஒன்று நீ கொண்டு வந்திருக்கும் கலைப் பொருட்களில் இடம் பெறாமல் இருக்குமா?” என்று குறும்பாகக் கேட்டாள் சுலக்ஷணா. “அம்மாவைக் கூட ஏமாற்றலாம். ஆனால் உன்னை ஏமாற்ற முடியுமா? அப்படி ஒரு ஓவியத்தை நான் கொண்டு வந்திருக்கிறேன். மிக ரகசியமாகவே இப்படி தன்னைப் படம் எழுத ஒப்புக் கொண்டாள் அந்த அழகு மங்கை. ஏனென்றால், கேரளத்தில் ஆடவர் தம்மைக் கண்டு படம் எழுத ஒப்புக் கொண்டு பெண்கள் உட்காருவதில்லை. அப்படிப் படம் எழுதுவதானால் ஆங்கிலேய சீமாட்டியையோ, அவர்களது தோழிகளையோதான் அழைக்க வேண்டும்!” என்றான் சிவாஜி. “அண்ணே! வீணே ஏன் என்னுடைய ஆவலைத் தூண்டி விடுகிறாய்? உன் கருத்தை அப்படிக் கவர்ந்த மங்கை யாரோ? நாங்களும் தெரிந்து கொள்கிறோமே?” என்று ஆவலுடன் கேட்டாள் சுலக்ஷணா. இந்தப் பேச்சைக் கேட்டு அகல்யா பெரிதும் வேதனை அடைந்தாள். அதுவரையில் அவளுடைய செல்லப்பிள்ளையாக வளர்ந்த இளவரசன், உலகம் அறியாத சிறுவனாக இருப்பதாகவே அவள் இதுகாறும் எண்ணி இருந்தாள். இப்போது அவன் ஏதேதோ பேசுவதைக் கேட்டு மனம் கலங்கினாள். அடுத்தபடியாக அவன் காட்டப் போகும் ஓவியத்தை எதிர்பார்த்துப் பிரமித்து நின்றாள். சிவாஜி அந்தப் பெரிய ஓவியத்தைப் பெட்டியிலிருந்து எடுத்தான். சுருளை விரித்து மற்ற இருவரும் பார்க்கும்படி சுவரில் வைத்தான். வாய்விட்டுச் சிரித்தான். “அம்மா! ஏமாந்து போனீர்களா? இந்தப் பெண்மணிக்கு முப்பது வயதுக்கு மேல் இருக்கும். கிட்டத்தட்ட என் அன்னையைப் போன்றவர்கள். இந்தத் தெய்வீகக் கலையைப் பயின்று அவர்கள் ஆடும் அழகையே நான் பார்த்துவிட்டு வியந்து திரும்பினேன். இது மதிப்புடன் ஆராதிக்க வேண்டிய அழகல்லவா தாயே? சித்திரசேனா என்ற இந்த மங்கை பண்டிகை நாட்களில் அரசவையில் ஆடுபவர்...” என்று சொல்லி நிறுத்தினான் சிவாஜி. அகல்யாபாயின் மனத்தில் ஆறுதல் விழுந்தது. மகனின் மனத்தில் எந்தவித மாசும் படியவில்லை என்ற எண்ணமே அவளுக்குப் பெரிய நிம்மதியாக இருந்தது. ஆயினும் பிற நாட்டு இளவரசனுக்கு தனது ஓவியத்தை எழுதிக் கொள்ள ஒயிலாக அமர்ந்து தோற்றம் கொடுக்கும் ஓர் இளம்பெண்ணை, வெறும் கலைப்பொருளாக மட்டும் பார்க்க இளையராணிக்கு மனம் இடம் தரவில்லை. “மகனே! நீ கலைக்கண்ணோட்டத்துடன் கண்டு, எழுதச் செய்து கொண்டு வந்த சித்திரத்தை நானும் பாராட்டுகிறேன். ஆனால் இங்கே இதுபோல ஒரு பெண்மணி பிறநாட்டு இளவரசன் முன் தோற்றம் அளிப்பதை நீ நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஏன்? நாட்டியம் ஆடும் பெண்களுக்குச் சில கட்டுப்பாடுகள் கூட உண்டு. வைர ராக்கொடி, பேசரி, அட்டிகை, வெள்ளிமெட்டி போன்ற ஆபரணங்களை அணியக்கூடாது. சில குறிப்பிட்ட ரவிக்கை, புடைவைகளை அணியக்கூடாது. கையில் உருமால் வைத்துக் கொள்ளக் கூடாது. இடையில் வேலைப்பாடு செய்த நாடா அணிதல் கூடாது. அரண்மனையில் நாட்டியம் ஆடும் போது தெய்வத்தின் மேல் பதம் பிடிக்கலாம். ஆனால் நரஸ்துதி கூடாது!” என்றாள் அகல்யாபாய். சுலக்ஷணா அந்த சித்திரத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பெண்மணியின் அழகு அவளைக் கவர்ந்தது. அழகு சித்திரமாக வந்து ஆடுவோருக்குக் கட்டுப்பாடு ஏன்? பலரும் பாராட்ட வேண்டிய கலைக்கு கட்டுப்பாடு ஏன்? அவளால் அன்னையின் வாதத்தை ஒப்புக் கொள்ள முடியவில்லை. “அம்மா, நீ என்னதான் சொன்னாலும் இந்தக் கலை என்னைக் கவர்ந்து நிற்பதை என்னால் மறுக்க முடியவில்லை! ஒருநாள் நானும் இதைப் போல் ஆடவேண்டும் என்ற ஆசையை என்னால் கைவிட முடியவில்லை. ஏன்? அண்ணா கொண்டு வந்து காட்டிய மோகினி ஆட்டத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருக்கிறது. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நீ இடந்தர மறுக்கக்கூடாது...” என்று கூறித் தாயின் முகத்தை தன் புறம் ஆதரவாகத் திருப்பிக் கொள்ள முயன்றாள் சுலக்ஷணா. அதைக் கேட்டு அகல்யாபாய் ஒரு கணம் பதறிப் போனாள். “மகளே! அரசகுலத்தில் பிறந்த நீயா இப்படிப் பேசுகிறாய்? நாட்டியம் என்பது நமக்கு உரிய கலை அல்லவே அல்ல! ராஜவம்ச மகளிர் தமது கணவரைத் தவிர பிறர் யாரையும் தம்மை ஏறிட்டுப் பார்க்கவும் அனுமதிப்பதில்லை. நட்டுவனாரிடம் ஆடிக் காட்டிக் கலையைப் பயிலவும், பின் பலர் முன்னாடி அரங்கேற்றம் செய்வதையும் நீ கனவிலும் எண்ணிப் பார்க்கக் கூடாது. அன்று நீ ஊர்வலத்தில் தொடங்கிய பேச்சையே நான் விரும்பவில்லை. இன்று அது மேலும் விபரீதமாக வளருவதை நான் ஒருக்காலும் அனுமதிக்க மாட்டேன். உனது ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள இப்போதே பழகிக் கொள்!” என்று தனது மனக்கிளர்ச்சியை சொல் மழையாகப் பொழிந்து தள்ளினாள் அகல்யாபாய். அதைக் கேட்டு சுலக்ஷணா வெயிலில் போட்ட பூப்போல முகம் சுருங்க, ஒருகணம் பிரமித்து நின்றாள். இளவரசன் சிவாஜியோ அந்தச் சர்ச்சையை மேலும் வளர்க்க விரும்பாதவனாக தந்தச் சிற்பம் வைத்த பேழையையும் ஓவியம் வரைந்த திரைச்சீலையையும் எடுத்து உள்ளே வைத்துவிட்டுப் பெருமூச்சு விட்டபடி அந்த இடத்தை விட்டு அகன்றான். பௌர்ணமி நிலவு, லேசாக குங்குமப்பூ போட்ட பாலைப்போல தெருவில் நீலமும் மஞ்சளும் வெண்மையும் கலந்த ஒளிபரப்பாக விழுந்திருந்தது. கலகலவென்ற பேச்சும் சிரிப்புமாக பட்டுடுத்த பெண்களும், குழந்தைகளுமாக தெருவில் நடமாடிக் கொண்டிருந்தனர். அரண்மனையின் கோட்டை வாயிலை ஒட்டிய தெருவில் கடைகளில் வர்ண விளக்குகள் உற்சவத்தின் உல்லாசத்துக்குப் பின்னணி தீட்டுவது போல அமைந்திருந்தன. விநாயக சதுர்த்தியை ஒட்டிக் கோட்டையில் இருபத்து இரண்டு நாட்கள் நாடகம் நடப்பதோடு நாடகத்தில் இடம் பெறும் பெண்கள் நாட்டியமும் ஆடுவார்கள். விநாயக சதுர்த்திக்கு வெளியூர்களிலிருந்தும் நாடகக் குழுவினரும் நடனம் ஆடும் பெண்களும் தஞ்சாவூருக்கு வருவார்கள். ஊரே அதனால் கோலாகலமான விழாக்கோலம் பூண்டு நிற்கும். கடைகளில் ஜாதிப்பூவும், கதம்பமும், மருவும் வாசனையை அள்ளிக் கொட்டியபடி பந்து பந்தாக அமர்ந்திருக்கும். அவற்றின் மீது தெளிக்கும் வெட்டிவேர் ஊறிய தண்ணீரில் கூடத் தனியான மணம் கமழும். மராத்தியப் பெண்கள் பத்துமுழச் சேலையைப் போர்த்தி, உடலை மூடி முகம் கூடத் தெரியாமல்தான் தெருவில் நடந்து போவார்கள். பூ வாங்க வரும் போது இலைகளுக்கிடையே அழகாக கனியின் வண்ணம் தெரிவது போல, அந்த முகங்கள் தற்செயலாக ஒளி வீசி பிறர் கண்களில் படும். விலைக்காக பணத்தை நீட்டும் கைகளில் குலுங்கும் வளைகளுக்கிடையே மாந்தளிர் மேனியின் மென்மை புலனாகும். விநாயக சதுர்த்தி விழா ஏற்பாடுகளைக் கவனித்து விட்டு வந்து, அரண்மனையை ஒட்டி நந்தவனத்தில் மலர்ப்பாத்திகளுக்கு நடுவே அமைந்திருந்த பூங்காக் குடிலில் மகாராஜா சரபோஜி அமர்ந்திருந்தார். அவர் தன்னைப் பார்க்க விரும்புவதாகச் செய்தி வந்து, மகன் சிவாஜி அங்கு வந்து உட்கார்ந்தான். தான் தனிமையாக இளவரசனுடன் பேச விரும்புவதாக மன்னர் ஜாடை காட்டவே, விசிறியை காற்றுக்காக வீசிய பெண்கள் ஒதுங்கிக் கொண்டனர். “உன்னை நான் இங்கே எதற்காக அழைத்தேன் என்று உனக்குத் தெரியுமா சிவாஜி?” என்று வினவினார் சரபோஜி. “தெரியாது தந்தையே! கேரள நாட்டுக்குச் சென்று வந்தது பற்றியும் நான் அங்கே தெரிந்து கொண்ட கலைகளின் நயம் பற்றியும் தங்களிடம் பேச வேண்டும் என்று நானே காத்துக் கொண்டிருந்தேன்...” என்று கூறி, தந்தையின் முகத்தை நோக்கினான் சிவாஜி. “அவ்வளவு தானா மகனே! அங்கிருந்து கலைநுட்பமும் நயமும் தவிர வேறு எதையும் அறிந்து கொண்டு வரவில்லையா? அங்கே சமஸ்தானங்கள் இருக்கின்றன. நம்மைப் போலவே அந்த அரசர்களுக்கும் கூடவே கும்பெனியாரின் ரெசிடெண்ட் துரைகள் இருக்கிறார்கள். அங்கே எப்படி ஆட்சி நடத்துகிறார்கள்? மன்னருக்கு சுதந்திரம் எந்த அளவில் இருக்கிறது? இதைப் பற்றிய நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள நீ ஆசைப்படவே இல்லையா?” “இல்லை அரசே! இறைவன் அருளால் தங்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாகவே இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பை இன்னும் நெடுங்காலம் தாங்களே செம்மையாக நிர்வாகம் செய்து வரப் போகிறீர்கள். அதைப் பற்றிய கவலை இந்த இளம் வயதில் எனக்கு எதற்காக? மேலும்...” “மேலும்...” “மற்ற அரசர்களைப் போல அல்ல தாங்கள்! மக்களின் வாழ்வில் குறை இல்லாமல் இருந்தால் போதும் என்றே நினைக்கிறீர்கள். போர் தொடுப்பது, பக்கத்து நாட்டு மன்னர் வளர முயன்றால் அவரை அடக்க முயலுவது, கும்பெனியாருடன் சேர்ந்து திட்டம் தீட்டுவது, கும்பெனியாரின் நடவடிக்கைகளையே உளவு பார்ப்பது இப்படிப்பட்ட செயல்களில் தங்கள் மனம் திரும்புவதில்லை. ஒவ்வொரு துறையிலும் தேர்ந்தவர்களை வைத்துக் கொண்டு நூல்களை எழுதச் சொல்லுகிறீர்கள். பழம்பெரும் நூல்களைச் சுவடிகளிலிருந்து பெயர்த்து எழுத வைக்கிறீர்கள். நுட்பமான கருத்துக்கள் அடங்கிய பிறமொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்க்கச் சொல்லுகிறீர்கள். தாங்களே கவிதையையும் புனைந்து, நாடகங்களையும் எழுதுகிறீர்கள். ஆகவே, தங்கள் ரசனை என்னவென்று எனக்குத் தெரியாதா? அதற்குத் தகுந்த தகவல்களையே நான் திரட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்!” “நன்று செல்வா! இவ்வளவு இனிமையாகப் பேச நீ எப்போது கற்றுக் கொண்டாய்? நீ கூறுவதும் ஓரளவு உண்மையே! ஆயினும் இவற்றுக்கெல்லாம் ஒரு பின்னணி உண்டு. அது உனக்குத் தெரியுமா? தெரியாதென்றே நான் நினைக்கிறேன். ஆகையால் அதை அறிமுகம் செய்யும் விதமாகப் பேசவே உன்னை நான் இங்கே வருமாறு அழைத்தேன்.” “என்னவென்று சொல்லுங்கள் தந்தையே! நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று, தாங்கள் கருதுவது எதுவாயினும் அது முக்கியமானதாகத்தான் இருக்கும். அதை இப்போது நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் நினைப்பதிலும் ஒரு முக்கியமான பின்னணி இருக்கத்தான் செய்யும். கேட்பதற்கு ஆவலுடன் நான் காத்திருக்கிறேன்.” “அருமை மகனே! இந்த மண் ஒரு காலத்தில் சுதந்திர பூமியாக இருந்தது. நம்முடைய முன்னோர்களில் ஏகோஜி என்பவர் பெருவீரனாகத் திகழ்ந்தார். கொள்ளிடத்துக்கு வடக்கேயும் நம்முடைய அரசின் எல்லை பரவி இருந்தத். அவருடைய மகன் சாஹஜி இந்தப் பெரும் நாட்டில் அமைதியைப் பரப்பி அரசாண்டார். பல மொழிகளிலும் இலக்கியங்கள் தோன்றின. அவரே பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார். அதன் பிறகு துக்கோஜி காலத்தில் ராமநாதபுரம், திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளை ஆண்டவர்களுடன் போரிட்டு, நமது நாட்டின் எல்லையை விரிவடையைச் செய்து உறுதிப்படுத்திக் கொண்டோம். ஆனால் சென்ற நூற்றாண்டில் ஆற்காட்டு நவாபுக்கு அடங்கி இருக்க வேண்டிய நிலை தஞ்சை மராட்டிய மன்னர்களுக்கு ஏற்பட்டது. நவாபுடன் அடிக்கடி போரிட வேண்டிய அவசியமும் ஏற்பட்டது!” “நம்முடைய நாடு சுதந்திரமாக இருப்பது ஆற்காட்டு நவாபுக்குப் பிடிக்கவில்லையா தந்தையே!” “ஆமாம்; எப்போதும் நவாப், ‘மராட்டிய அரசர் தமக்கு அடங்கியவர் என்றும்; அவர்கள் தமக்கு கப்பம் கட்டி வரவேண்டும்’ என்றும் வற்புறுத்திக் கொண்டே இருந்தார். அதனால் ஆட்சியிலும் அவருடைய தலையீடு அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. இதைப் பொறுக்க முடியாமல் துளஜா என்ற மன்னர் கிழக்கிந்திய கும்பெனியாருடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். நவாபின் தலையீடு நீங்கியது உண்மையானாலும், சுதந்திரம் பறிபோனதும் உண்மைதான்.” “ஏனப்பா? கும்பெனியார் அதிகாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்களா? நமக்கு இருந்த ஆட்சிப் பொறுப்பு அவர்கள் கைக்குப் போய்விட்டதா?” “அது உடனடியாக நடைபெறவில்லை. ஹைதர் படையெடுத்து வந்தார். அதன் பின் சுமார் ஆறு திங்கள் தஞ்சைத் தரணி ஹைதர் அலியின் ஆட்சியில் இருந்தது. அப்போது குடிமக்கள் அடைந்த இன்னல்களுக்கு அளவே இல்லை. பஞ்சம் ஒருபுறம் காட்ட, வரிச்சுமையும் பல மடங்கு ஏறிற்று. பல ஏக்கர் நிலங்கள் பயிரிடப்படாமல் அழிந்தன. நீர்ப்பாசன வசதிகளும் அழிக்கப்பட்டன. மேலும் பாவாபண்புட் என்பவர் கொண்டு வந்த சீர்திருத்தத்தினால் நிலவரி வசூல் கடுமையாக ஆயிற்று. தொடர்ந்து திப்புசுல்தான் படையெடுத்து வந்தார். தஞ்சைத் தரணியின் மதிப்பறிய முடியாத செல்வங்கள் பலவும் பறிபோயின!” “நம்மால் மக்களைக் காப்பாற்ற முடியவில்லையா தந்தையே?” “முடியவில்லை மகனே! திப்புவின் படைகள் திறமையான தேர்ச்சி பெற்றவை. நவீனமான ஆயுதங்கள் அவர்களிடம் இருந்தன. தஞ்சை மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி வாழ்ந்தவர்கள். கலை, இலக்கியம் என்ற பொழுதைப் பயன்படுத்தியவர்கள். அவர்களால் இந்த தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. தேர்ச்சி பெற்ற, வலிமை மிகுந்த படையும் தஞ்சை மராட்டிய மன்னர்களிடம் இல்லை. ஆகையால் ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர்களுடைய படைகள் தஞ்சையில் நிறுத்தப்பட்டன. அதனால் மராட்டிய மன்னர்கள் சேனை இல்லாத வெறும் அரசர்கள் ஆகிவிட்டனர்.” “தந்தையே! தாங்கள் சொல்வது...” என்று தடுமாறினான் சிவாஜி. “ஆமாம் சிவாஜி! இதுதான் நீ தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை. எனக்குச் சேனை இல்லை. ஆட்சியின் பொறுப்பிலும் இடமில்லை. ஆங்கிலேயர்களே தஞ்சையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரி வசூல் செய்கிறார்கள். எனக்கு ஒரு லட்சம் வராகனும் மொத்த நிலவரி வசூலில் ஐந்தில் ஒரு பங்கும் கொடுக்கிறார்கள். அவ்வளவுதான். மற்றபடி பெயரளவில் அரசன் ஆயினும் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு அடங்கியவன் தான் நான்!” சரபோஜி மன்னர் பேசுவதை நிறுத்தினார். அவருடைய கண்கள் கலங்கி இருந்தன. உணர்ச்சி மிகுதியினால் தொண்டை அடைத்துக் கொண்டு பேசமுடியாமல் போயிற்று. மகனின் தோள் மீது கையை வைத்து அவனையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். “தந்தையே! இதற்காக நீங்கள் மனம் கலங்க வேண்டாம். வாள்முனையிலும், வேல் முனையிலும் தஞ்சை பேரரசர்கள் சாதித்தவை பல என்பது உண்மைதான். ஆனால், கலை, இலக்கியம் ஆகியவற்றிற்கு தாங்கள் செய்து வரும் தொண்டு உங்கள் பெயரை வருங்காலம் என்றென்றைக்கும் சொல்லும் அளவுக்குத் தூக்கி நிறுத்தப் போகிறது. கேரளத்தில் நான் சென்ற இடம் எல்லாவற்றிலும் தங்களுடைய மகன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. தஞ்சையின் பெயரை இன்று பிற அரசர்கள் அறிவதைப் போல, ஒருநாள் உலகமே அறியும். அதற்குத் தாங்கள் செய்துவரும் அருந்தொண்டு பெரிதும் பயன்படும்!” என்றான் சிவாஜி. சரபோஜி மன்னர் ஒரு கணம் அவன் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தார். அவனுடைய முகத்தில் ததும்பி நின்ற பெருமிதத்தையும் குரலில் பொங்கியெழுந்த உணர்ச்சிப் பெருக்கையும் கவனித்தார். அவர் தனது மகனிடம் சொல்ல வந்த - சிறுமைப்பட்ட கதையை விவரிக்க வந்த முயற்சியைத் தொடருவதா, வேண்டாமா என்று கூட அவருடைய மனத்தில் ஒரு ஐயப்பாடு எழுந்தது. அன்புடன் தனது மகனை அணைத்துக் கொண்டார். “உண்மைதான் மகனே! நான் நூலகத்திற்குச் சென்று அமரும்போதும், மேடைகளில் நாடகம், நாட்டியம், பாகவத மேளா என்று பார்க்கும் போதும், தனிமையில் அமர்ந்து நானே கவிதையும், நாடகமும் புனையும் போதும் என்னை மறந்து விடுகிறேன். கலைகளுக்கெல்லாம் உரிய தெய்வமான கலைமகளைத் தரிசிப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது. அவளுடைய இருப்பிடமாகவே நான் உருவாக்கி வரும் சரசுவதி மஹாலைக் கருதுகிறேன். உனக்கு நான் விட்டுச் செல்லப் போகும் மிகப் பெரிய சொத்து அதுதான்!” என்றார் சரபோஜி. “தந்தையே! இவை எல்லாவற்றையும் இப்போது நீங்கள் எனக்கு அழைத்துக் கூறுவதற்கு என்ன காரணம்?” என்று கேட்டான் சிவாஜி. “செல்வா அதற்கு ஒரு முக்கியமான தருணம் இப்போது வந்திருக்கிறது. அதையும் சொல்லுகிறேன் கேள்!” என்று மேலும் சொல்லத் தொடங்கினார் சரபோஜி மன்னர். சிவாஜி அதைக் கேட்கத் தயாரானான்... புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|