உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
31. மன்னருக்கு வரவேற்பு...
“வேதங்கன் ஆடமிகு ஆகமம் ஆடக் கீதங்கள் ஆடக் கிளரண்ட மேழும் ஆட பூதங்கள் ஆடப் புவனம் முழுதுமாட நாதங்கொண்டு ஆடினன் ஞானானந்தக்கூத்தே!” - திருமூலர் “அரசே! நம்முடைய வைத்தியர் லிட்டனின் உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. நினைவு தப்பிக் கொண்டிருக்கிறது. தங்களுக்குத் தகவல் கொடுக்கும்படி சர்ஜேராவ் காட்கே சொல்லி அனுப்பினார்!” என்றான் அவசரமாக வந்த குதிரை வீரன். உடனே புறப்பட்டார் சரபோஜி. போகும் வழியில் சுப்பிரமணிய கவசமந்திரங்களைச் சொல்லிக் கொண்டே போனார். உள்ளம் லேசாயிற்று. ஆனால் தெளிவு பிறக்கவில்லை. ஏதோ நடக்கப் போகிறது என்று உள்மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. டாக்டர் லிட்டன் அவருடன் காசிக்கு வர விரும்பினார். அதனால் இந்திய மருத்துவருடன் அவரையும் அழைத்து வந்தார் சரபோஜி. காசியாத்திரையில் இப்படி ஏதாகிலும் நேரும் என்ற சூசக உணர்வு மன்னருக்கு இருந்தது. அதை அன்றொரு நாள் மகன் சிவாஜியுடன் வசந்த மண்டபத்தில் உரையாடிய போது, மனம் நெகிழ்ந்து சொன்னது இப்போது நினைவிற்கு வந்தது. லிட்டனுக்கு நினைவு தப்பி விட்டது. மன்னர் வந்த போது அனைவரும் முகவாட்டத்துடன் இருந்தனர். பாதிரியார் ஒருவர் லிட்டன் அருகே இருந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். சில நிமிடங்களில் மார்பின் அசைவு நின்றுவிட்டது. சரபோஜி தனது முடித் தலைப்பாகையை எடுத்துவிட்டு, சிரந்தாழ்த்தி வணங்கினார். “காசியில் உயிரை விட வேண்டுமென்று இந்துக்கள் ஆசைப்படுவதுண்டு. இது அப்படிப்பட்ட புண்ணியபூமி என்று கருதப்படுகிறது. லிட்டன் துரை இந்து அல்ல. ஆயினும் நமது மத உணர்வுகளை மதிப்பவர். அதனால் தானோ என்னவோ, அவருடைய உயிர் இங்கே பிரிய நேர்ந்தது” என்றார் உடனிருந்த இந்திய மருத்துவர் வேலாயுத வாத்தியார். வங்காளத்தில் இருந்த கவர்னர் ஜெனரலுக்குத் தகவல் தெரிவிக்க ஏற்பாடாயிற்று. டாக்டர் லிட்டனுக்குப் பதிலாக இன்னொரு ஆங்கிலேய வைத்தியரை அனுப்பி வைக்கும்படி மன்னர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. டாக்டர் லிட்டனின் சம்பளப் பணமும், செலவுக்கான தொகையும் அவருடைய குடும்பத்தாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. வேலாயுதக் கவிராயர் எழுதி இருந்த ‘விஷரோக சிகிச்சை’ என்ற வைத்திய நூலில் டாக்டர் லிட்டனின் நோய்க்கு மருந்து குறிக்கப்பட்டிருந்தது. வேலாயுத வாத்தியார் அதைக் கொடுக்கவும் முன்வந்தார். ஆனால் லிட்டனுக்கு ஆங்கிலேய வைத்திய முறையில் தான் நம்பிக்கை. அதனால் எட்டு பெட்டிகளில் அத்தகைய மருந்துகளை எடுத்து வந்திருந்தார். ஆயினும், மருந்து பிடிபடவில்லை. ‘ஜோதிடன் தனது வருங்காலத்தைப் பற்றிக் கூறிக் கொள்ள முடியாது. வைத்தியன் தனக்கு மருத்துவம் செய்து கொள்ள முடியாது!’ என்று ஒரு வாசகம் உண்டு. அது லிட்டன் துரை விஷயத்தில் பலித்து விட்டதோ? மன்னர் இரண்டு நாட்களுக்கு ஆலயத்துக்குச் செல்லவில்லை. மனம் அமைதியாக இல்லை. மணிகர்ணிகா ‘காட்’டில் அமர்ந்து அரிச்சந்திரமயானத் துறையைப் பார்த்த போது என்னென்னவோ நினைவுகள் உள்ளத்தில் சூழ்ந்தன. ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் நூலின் அடிகள் நெஞ்சில் எதிரொலித்தன. மன்னர் காசியில் காசித் தம்பிரானின் மடத்தில் தங்கி இருந்தார். வந்தது முதல் மணிகர்ணிகையில் நீராடுவதும், விசுவேசுவரரைத் தரிசிப்பதுமாக இருந்தார். தினமும் மாதா அன்னபூரணியைத் தரிசித்த பின்பே மதிய உணவை அருந்தினார். பெற்றோருக்காகத் தீர்த்த சிரார்த்தமும் செய்தார். சுமார் நூறு நாட்கள் வரை காசியில் தங்கியும் அலுக்கவில்லை. புறப்படும்போது ஏன் போகிறோம் என மனம் ஏங்கிற்று. தங்கிய நூறு நாட்களும் ஏராளமான தானங்களைச் செய்தார். படித்துறைகளைப் புதுப்பிக்கப் பணம் கொடுத்தார். விசுவநாதர் ஆலயத்தில் பண்டாக்களுக்குச் சிறப்புத் தானங்களைச் செய்தார். சிறந்த நூல்களைப் படியெடுத்துத் தஞ்சை வாசக சாலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். கங்காதீர்த்தமும், கங்கோத்ரியிலிருந்து தீர்த்தக் காவடிகளும் தஞ்சைக் கோவிலுக்கு அனுப்பப்பட வகை செய்தார். மன்னரும் தேவியருமாக அமர்ந்து காசியில் தம்பதி பூஜை செய்து பசுமாடும் தானம் கொடுத்தார்கள். இவற்றால் மனத்தில் நிறைவு ஏற்பட்டாலும், தஞ்சையிலிருந்து வந்த கும்பெனியாரின் குறிப்புக் கடிதம் வேதனையைத் தந்தது. கும்பெனி சொற்படி தஞ்சை சார்க்கேல், “மன்னரின் தீர்த்தயாத்திரைச் செலவு ஒரு லட்ச ரூபாய்களைக் கடந்து விட்டது. சிக்கனமாக இருக்க வேண்டுமென்று ரெசிடென்ட் துரை விரும்புகிறார்!” என்று எழுதி அனுப்பி இருந்தார். ‘என்னுடைய செலவைப் பற்றிக் கும்பெனியார் குறிப்பிடுவதா? புண்ணிய யாத்திரைக்கு நான் எவ்வளவு செலவிட வேண்டும் என்று ரெசிடென்ட் துரை ஆலோசனை வழங்குவதா? இது என்ன நியாயம்?’ என்று எண்ணி மனம் புழுங்கினார் அரசர். ஆயினும் ரெசிடென்ட் துரையின் கூற்றுக்கு மதிப்பு தந்து சிக்கனமாக கவனத்துடன் செலவிடுவதாகப் பதில் எழுதச் செய்தார். பிரயாகைக்குப் போய் காவடிகளைக் கட்டி அன்னை மா அவுசாகேப் கிரிஜா பாயி அம்மா ஆகியோரின் நினைவாக இராமேசுவரத்துக்கு அனுப்பி வைத்தார். அங்கே இராமநாதசுவாமிக்குத் தானே தனது கையால் அபிஷேகம் செய்ய வேண்டுமென்று தனியாக கங்கை தீர்த்தத்தை அனுப்ப ஏற்பாடு செய்தார். தொடர்ந்து இரு மாதங்கள் பிரயாணம் செய்து புனிதயாத்திரையின் திருப்புமுகமாக நாகபுரி வந்து சேர்ந்தார். பொங்கல் பண்டிகை முடியும் வரையில் ஒன்பது நாட்கள் தங்கினார். தொடர்ந்து ஒரு மாதம் பிரயாணம் செய்து திருப்பதியை வந்து அடைந்தார். திருப்பதியில் அன்னையாரின் ஆணைப்படி வெங்கடாசலபதிக்கு வைரத்தில் நாமப் பட்டை செய்வித்துக் காணிக்கையாக அளித்தார். மூன்று நாட்கள் தங்கியிருந்து சுப்ரபாதம் முதல் நள்ளிரவுச் சேவை வரையில் கண்டுகளித்துப் புறப்பட்டார். காளஹஸ்தியில் அவருக்குத் தனி மரியாதை செய்யப்பட்டது. கவர்னர் ஜெனரலின் உத்தரவுப்படி, மணிமுடி, இடையில்வாள், மார்புக்கவசம் ஆகியவற்றுடன் ஆலயத்துக்குள் சென்று தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தனது விருப்பப்படி சேவை சாதித்து மகிழ்ந்தார் சரபோஜி மன்னர். தஞ்சையிலிருந்து புறப்பட்டு ஒன்றரை ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஊர் திரும்பவும், அப்படியே மேலும் ஒரு மாத காலம் புனிதப் பயணத்தைத் தொடர்ந்து இராமேசுவரம் போய்த் திரும்பிடவும் மன்னர் மிகுந்த ஆவலாக இருந்தார். மேலும் இளவரசன் சிவாஜியையும் இளவரசி சுலக்ஷணாவையும் சந்திக்க மனத்தில் ஆசை மிகுந்திருந்தது. ஏப்ரல் மாதத்தின் இடைப்பகுதியில் சிதம்பரம் வந்து சேருவதையும், அங்கே இளவரசர் தன்னை வந்து சந்தித்து அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் தஞ்சையில் இருந்த சார்க்கேலுக்குச் செய்தி அனுப்பினார். ரடணே என்ற முகாமிலிருந்து எழுதப்பட்ட கடிதத்தில் சரபோஜி மன்னர் சிதம்பரத்தை அடைந்ததும் செய்யப்பட வேண்டிய வரவேற்பு முறைகள், விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏப்ரல் மாதம் பதினான்காம் தேதி காலையில் சின்ன திவான் சாகேப் (இளவரசர்) மகாராஜாவைப் பார்க்க சிதம்பரத்திலிருந்து முன்னால் வரவேண்டும் என்றும், மன்னரின் சவாரிக்கு உரியவர்கள் ஒரு பக்கமும், சேனைகள் மறுபக்கமுமாக இருந்து வரவேற்க வேண்டும் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. நடுவில் உள்ள இடத்தில் இளவரசர் முன்னாள் கொடியுள்ள யானையுடனும், தனது சைனியம் பின் தொடர்ந்து வரவும் சென்று, வீரர்கள், ‘ஜோஹர் பரங்க ஜோஹர் யந்திர!’ என்று முழங்க, பீரங்கிகள் குண்டு முழங்க வரவேற்பார். பிறகு இளவரசர் கையைப் பிடித்து ரெசிடென்ட் துரை அரசர் கையில் ஒப்படைப்பார் என்றும், அப்போது எட்டு வெடிகுண்டுகள் முழங்கும் என்றும் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டன. மன்னர் ரெசிடென்ட்க்கு வைரக்கற்கள் அழுந்திய தங்க நகையைக் கொடுப்பார் என்றும், ரெசிடென்ட் துரை மன்னருக்கு சால்வை போர்த்தி கௌரவிப்பார் என்றும் ஏற்பாடாயிற்று. கவர்னர் ஜெனரல் மன்னருக்கு அளித்ததும், ‘கங்கா-ஜமுனா’ என்ற பெயர் உள்ளதுமான யானையை ஹௌதாவுடன் மன்னர் இளவரசருக்கு அன்பளிப்பாகக் கொடுப்பார் என்றும் ஏற்பாடாயிற்று. அப்போது சிப்பாய்கள் வாத்தியங்களை முழங்க, வேதியர்கள் வேதங்களை முழங்க, ஓதுவார் தேவாரம் - திருவாசகம் பாட, மன்னர் சிதம்பரம் தில்லையம்பலத்துக்கு வந்து சேருவார் என நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டன. அகல்யாபாய் இந்த நிகழ்ச்சிகளை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். மகளையும் மகனையும் சந்திக்கப் போகும் ஆர்வம் மனத்துள் கனிந்து நின்றது. அதே போலச் சுலக்ஷணாவும் தாயைச் சந்திக்க மிக்க ஆவலோடு காத்திருந்தாள். சிதம்பரத்தில் இளவரசர் மன்னரை வரவேற்கப் போவது பற்றிய நிகழ்ச்சிகளின் திட்டம், அரண்மனையில் அந்தப்புரத்துக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அதை விவரமாகப் படித்த சுலக்ஷணா அன்று மாலையிலேயே புவன மோகினிக்கு காவலாளை அனுப்பி அழைத்துவர ஏற்பாடு செய்துவிட்டாள். மாலை முதிர்ந்து விளக்குகள் ஏற்றப்படும் தருணத்தில் அந்தப்புரத்துக்கு வந்து சேர்ந்தாள் புவனா. வழியெல்லாம் மக்கள் கூட்டம். மன்னர் சரபோஜி காசியாத்திரையை நல்ல முறையில் முடித்துக் கொண்டு ஊர் திரும்புகிறார் என்பது அனைவருக்குமே மகிழ்ச்சி தரும் செய்தியாக இருந்தது. அந்தப்புரத்திலும் இந்த நிகழ்ச்சியின் மணம் எட்டி இருந்தது. புவனா வந்து சேர்ந்த வேளையில், அரண்மனை வாசலில் கும்மி அடித்துக் கொண்டிருந்தார்கள். பெரிய வட்டத்தில் இளங்குமரிகள் வரிசையாக ஓடி ‘சடக் சடக்’ கென்று கைகளை ஒன்றின்மேல் ஒன்றாக அடித்துப் பாடினார்கள். பின்னர் கோலாட்டத்தை வைத்துக் கொண்டும் கயிற்றுப் பின்னல் போட்டும் நாட்டுப் பாடல்களைப் பாடி மகிழ்ந்தார்கள். அவர்களைக் கடந்து, குத்துவிளக்குகளின் வரிசையைத் தாண்டி அந்தப்புரத்தின் மையப் பகுதிக்கு வந்து சேர்ந்தாள் புவனமோகினி. அங்கே இரத்தினக் கம்பளத்தின் மீது அமர்ந்து, புதிதாக வந்திருந்த தங்க வளையல்களை கைகளில் ஜோடி சேர்த்துப் போட்டு பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் இளவரசி. புவனாவைக் கண்டதும் அவளுடைய முகம் மலர்ந்தது. செம்பஞ்சுக் குழம்பினால் சிவக்கச் செய்த உள்ளங்கைகளின் அழகு தெரிய அவளை நோக்கிக் கரம் நீட்டினாள். “வா புவனா! உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த வளையல்களில் ‘உனக்குப் பிடித்த ஜோடி எது என்று தேர்ந்தெடு!” என்றாள் சுலக்ஷணா. “இவையெல்லாம் ஏது? இப்போது இவற்றை நீங்கள் அணியப் போவதன் காரணம் என்ன? நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டாள் புவனா. “காசி யாத்திரை முடிந்து மன்னர் தமிழகம் திரும்புகிறார். சிதம்பரத்தில் இளவரசர் அவளை வரவேற்கப் போகிறார். உனக்குத் தெரியாதா புவனா?” “தெரியும். மகிழ்ச்சிகரமான விஷயம் தான். மக்கள் எல்லோரும் ஆவலுடன் அந்த விழாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.” “ஆம். அதற்குரிய திட்டத்தை சார்க்கேல் அனுப்பி இருக்கிறார். சிதம்பரத்தில் வரவேற்கப் பிரமாதமான ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். நாங்கள் எல்லோரும் போகிறோம். நீயும் வருகிறாயா புவனா?” “நானா? உங்களுடனா?” என்று கேட்ட புவனாவுக்கு வேறு ஏதோ சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால் சீறி வந்து கரையைக் கண்டதும் பின்வாங்கும் அலைகளைப் போல, பேச்சு ஒடுங்கிப் பின் வாங்கிற்று. ”ஏன் வரக்கூடாது புவனா? நீ பரதநாட்டியம் கற்றுக் கொள்கிறாய்! சிதம்பரம் கோவிலில் வாசற் கோபுரத்தில் பரதநாட்டிய முத்திரைகளையெல்லாம் சிற்பங்களாகச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். உனக்கு அவற்றையெல்லாம் பார்க்க ஆசையாக இல்லையா?” என்று கேட்டாள் சுலக்ஷணா. “ஆசைகள் இருக்கலாம், ஆனால் சாத்தியம் என்பது இல்லையா இளவரசி?” என்று தயங்கி அவளையே கனிவும் கேள்விக்குறியுமாக மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள் புவனா. “உனக்கு என்ன ஆயிற்று? யாராவது ஏதாவது சொன்னார்களா? என்னிடம் சொல்லு! நான் அவர்களை கண்டிக்கிறேன்!” “உங்களால் கண்டிக்கப்பட முடியாதவராக இருந்தால்?” “யாரது? நான் தெரிந்து கொள்ளலாமா? சொல்லு புவனா!” “ஏன்? என் தாயார்தான்! பரங்கித் தபால் மூலம் திருவனந்தபுரத்திலிருந்து எனக்குக் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் அவர் எனக்கு விதித்திருக்கும் மூன்று கட்டளைகள், எங்கேயும் நான் வெளியில் போகக் கூடாது. இன்னும் ஓராண்டு காலத்துக்குள் பயிற்சியை முடித்துக் கொண்டு கேரளத்துக்குத் திரும்பி விடவேண்டும். மூன்றாவது அரச குடும்பத்தாருடன் நான் பழகக் கூடாது!” - அவள் குரலின் குழைவு சுலக்ஷணாவின் இதயத்தை நெகிழச் செய்தது. அவளை அருகே இழுத்துச் சேர்த்துக் கொண்டாள் அவள். “வருத்தப்படாதே புவனா! அம்மா என்றாலே இப்படித்தான் ஒரு கண்டிப்பு இருக்கும். என் தாயார் இளைய ராணியாரும் கூட இப்படித்தான். எனக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடு!” என்று சுலக்ஷணா முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டாள். அதைக் கண்டு புவனாவின் இதழ்களில் கேலிப் புன்னகை பிறந்தது. “ஆமாம் இளவரசி! அரசியார் திரும்பி வந்ததும் உங்களுக்கும் மணமகனைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். விரைவில் ஒரு ராஜகுல இளைஞர் உங்களைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டு விடுவார்...” “இருக்கலாம் புவனா! ஆனால் எனக்கென்னவோ உன்னைப் போலச் சுதந்திரமாகப் பரதநாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் ஆசை!” “எனக்குத் தெரியும்! ஆனால் ஆசைப்பட்டபடி எல்லாம் நடந்துவிட முடியுமா இளவரசி! உங்களுக்கோ நாட்டியம் கற்றுக் கொள்ள ஆசை, எனக்கோ உங்களுக்கு வாய்ப்பதைப் போல ஒரு அரசகுமாரனை மணந்து கொண்டு அமைதியாக வாழ்ந்தால் நல்லது என்ற ஓர் ஆசை...” அவளுடைய கண்களில் நீர் நிறைந்து ததும்புவதைப் பார்த்தாள் சுலக்ஷணா. அவள் கைகளைத் தனது கைகளால் பிடித்துக் கொண்டாள். அவளுக்கு மட்டுமே கேட்கக் கூடிய ரகசியக் குரலில், “அப்படி உன் மனத்தில் இடம்பெறக் கூடிய அரசகுமாரன் யார் புவனா?” என்று கேட்டாள். யாரோ தன்னைத் தாக்கிவிட்டது போல வெட்கத்தில் மெய்சிலிர்த்துப் போனாள் புவன மோகினி. தடுமாறும் குரலில், “அப்படி ஒன்றும் இல்லை! சும்மா விளையாட்டுக்காகச் சொன்னேன். அவ்வளவுதான்!” என்றாள். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் புறப்பட்டாள் புவன மோகினி. அவளுக்குள் ஒரு கனவு நிகழ்ந்து கொண்டிருந்தது. மெய் அல்ல என்றாலும், அந்த கற்பனையிலேயே அவளுடைய மனம் திளைத்தது. அரண்மனை வாயிலைக் கடந்து வந்த போது வீரர்கள் குதிரை மேல் வந்து கொண்டிருந்தார்கள். மலர்கள் விற்கும் கடை ஒன்றில் தனது துணையாக வந்த காவலாளுடன் ஒதுங்கினாள் புவனா. “இளவரசர் வருகிறார் அம்மணி!” என்றான் அந்தக் காவலாளன். அவளுடைய மனத்தில் மலர்க்கூட்டங்கள் செறிந்தன. இனிய, மயக்கும் இசை, இதயத்தை நெருடிற்று. விழிகள் ஆவலாகக் கவனித்தன. அலங்கார சாரட்டில் வந்து கொண்டிருந்தான் சிவாஜி. அவன் தன் புறம் திரும்பக் கூடாதா என்று புவனாவின் மனம் ஒரு கணம் ஏங்கிற்று; பார்த்துவிடப் போகிறானே என்ற அச்சமும் உள்ளத்தில் சூழ்ந்தது. வேகமாகச் சாரட்டு அவளைக் கடந்து போய்விட்டது. சட்டென்று ஓர் ஏமாற்றம் நினைவைக் கவ்விற்று. தாயின் கடிதத்தை நினைவு கூர்ந்தவளாய், கண்ணிமைகளில் துளிர்த்த நீர்மணியைத் தெறித்து விட்டு விட்டு, காவலாளுடன் இறங்கி நடந்தாள் புவன மோகினி. புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|