19. நேசம் மறக்கவில்லை நெஞ்சம்

     ‘எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
     பழிகாணேன் கண்ட விடத்து.’

          - திருக்குறள்

     (மை தீட்டும் நேரத்தில் தீட்டும் கோலைக் காணாத கண்களைப் போல் காதலனைக் கண்டபோது மட்டும், அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகிறேன்.)

     தஞ்சை மாநகரின் எல்லையை நீங்கி அந்தக் குதிரை வண்டி சென்று கொண்டிருந்தது. சித்திரசேனா மெத்தைகள் தைத்த அந்தப் பெட்டி வண்டியின் சிறு ஜன்னலைத் திறந்து பார்த்தாள். தூரத்தில் பெரிய கோவில் கோபுரம் வானத்து மேகச் சிதறல்களின் பின்னணியில் சித்திரமாக உயர்ந்து நின்றது. அவள் கண்களை மூடிக் கொண்டாள். அவளையும் மீறி ஒரு களைப்பு அவளை ஆட்கொண்டது. அந்தச் சோர்வில் மனமும் நொந்தது. கண்கள் வழியே நீர் வழிந்தது.

     ‘இளவரசரிடம் போய் முறையிடுவேன். அவர் என்னைப் பார்த்துக் கொள்வார். என்னிடம் அவர் அன்பாகப் பேசுகிறார்’ என்றெல்லாம் சொன்னாளே புவனமோகினி? பாவம்! அவள் இன்னமும் ஓர் குழந்தைதான். உடலில் தோன்றிய வளர்ச்சி அளவு, இன்னும் உள்ளத்தில் ஏற்படவில்லை. அதனால் தான் அப்படிப் பேசுகிறாள்.

     சித்திரசேனா வெளிப்படையாகத் தனது மகளை எச்சரிக்க முடியவில்லை... ‘ஆண்டவன் நம்மைப் போன்றவர்களுக்கு அழகைக் கொடுத்தது, நம்முடைய வாழ்க்கை நல்ல விதமாக அமைய வேண்டும் என்பதற்காக இல்லை. செல்வந்தர்களும், பிரபுக்களும், மன்னர்களும் கூட அந்த அழகை நாடி வருவார்கள். அதுவும் அந்த அழகை ஆராதிப்பதற்கோ, மதிப்பதற்கோ அல்ல. அழகான மலர்களை நாடி வரும் வண்டு தான் விரும்பும் தேனைத்தான் அங்கே நாடுகிறது. மலரின் அழகைப் போற்றுவதற்காக அங்கே வரவில்லை. அதைப் போல நாம் பிறருடைய இன்பத்திற்காகப் படைக்கப்பட்டவர்கள். அப்படியே நான் வாழ்ந்து விட்டேன்... நீ அப்படி வாழ வேண்டாமென்று நான் நினைக்கிறேன்!’ என்று சொல்ல அவளுடைய மனம் துடித்தது. ஆனால் இனம் புரிந்து கொள்ள முடியாத, கள்ளமற்ற அந்த பிஞ்சு உள்ளத்தில், தன்னைப் பற்றித் தவறான எண்ணம் படிந்துவிடுமோ என்ற அச்சம் அவளைத் தடுத்து நிறுத்திற்று.

     “எனது தந்தை யார்?” என்று இதுவரை அவள் தாயைக் கேட்டதில்லை. கேட்டிருந்தாலும் மன்னர் பெருமான் தான் அவளுடைய தந்தை என்று அவளால் துணிந்து சொல்லி இருக்க முடியுமா? கலைகளை ரசிக்கத் தெரிந்த மன்னருக்கு அவளுடைய அழகையும் அணு அணுவாக ரசிக்கத் தெரிந்தது. அவளுடைய எழில் சிந்தும் நடனங்களில், அவருடைய மனமும் நாட்டியமாடியபடியே கைகோத்துக் கொண்டது. மன்னர் அவளுக்காக அளித்த மாளிகையிலும், மஞ்சத்திலும், முறுவலும் மகிழ்தலுமாக, அவர்களுடைய இனிய பொழுதுகள் கழிந்தன. மனம், உடல், ஆவி எல்லாம் புளகித்து ஓர் இன்ப சாகரத்துள் மூழ்கித் தத்தளித்தது. அதில் பிறந்த நல்முத்துத் தான் புவனமோகினி. ஆயினும் அதை இன்றுவரை அவள் தன் மகளிடம் சொன்னதில்லை. தான் இழந்ததைத் தனது மகளும் இழந்துவிடக் கூடாது என்பதே அவளுடைய நோக்கமாக இருந்தது. அதனால் கலையார்வத்தை மட்டும் வளர்த்து மகளை உருவாக்கினாள். மற்ற எந்த ஆசையையும் வளரவிட சித்திரசேனா அனுமதிக்கவில்லை. கலை உலகில் அவள் அரசியாகத் திகழலாம். ஆனால் சொந்த வாழ்வில் அவளைப் பொறுத்தவரையில் அவள் எந்த உரிமையும் இல்லாத ஆசைநாயகி மட்டுமே. அந்த நிலை அவளுடைய மகளுக்கும் வந்து விடக்கூடாது. அதுதான் அவளுடைய ஆசை, வாழ்க்கையில் வெளியிட முடியாத தவிப்பு, எல்லாமே! அப்படி அவளைக் கண் இமை காப்பதைப் போலப் போற்றிப் போற்றி வளர்த்தாயிற்று. இப்போது கண் காணாமல், பல நூறு மைல்களுக்கப்பால் விட்டுவிட்டுத் திரும்பிச் செல்கிறாள். அவளுடைய கண்மணி வாழும் தஞ்சை மாநகர் பின் தங்கி மறைந்து கொண்டிருக்கிறது...

     சுவாதித்திருநாள் மகாராஜா ஒருக்காலும் சித்திரசேனாவை மீண்டும் தஞ்சைக்கு வரவோ, அங்கு தங்கவோ அனுமதிக்க மாட்டார். அவர் அவளைப் பிரிந்து இருந்ததே இல்லை. அவளுடைய அந்தரங்க இன்பங்களைப் பகிர்ந்து கொள்ளாத நாட்கள், அவருக்கு இனிமை மறந்த நாட்களே! அவளை அவர் எப்படிப் பிரிந்திருப்பார்?

     அதுமட்டுமல்ல; திருவையாறு தந்த தியாகராஜ சுவாமிகள், சுவாதித்திருநாள் மகாராஜாவின் அழைப்பை மதித்து ஏற்கவில்லை. மகாராஜாவைப் போலவே சமஸ்கிருதத்தில் அரிய கீர்த்தனைகளை உருவாக்கிய முத்துசாமி தீக்ஷிதர், மன்னர் விருப்பப்படி கேரளத்துக்கு விஜயம் செய்தார். சபரிமலைக்கு வந்து வளந்தா ராகத்தில் ‘ஹரிஹரபுத்ரம்’ என்ற கிருதியைப் பாடினார். திருவனந்தபுரத்துக்கே வந்து மத்திய மாலதி ராகத்தில் ‘பன்னகசயனா’ என்ற கிருதியைப் பாடினார். ஆனால் மகாராஜா எவ்வளவோ வேண்டியும், ஆஸ்தான வித்துவானாக அங்கேயே தங்க ஒப்புக் கொள்ளவில்லையே? அப்படிப்பட்ட தஞ்சை மண் அவருக்கு எப்படி இனிக்கும்? அவருடைய மனத்துக்கு இனியவளை அங்கே விட்டு வைக்க எப்படி அவர் ஒப்புக் கொள்ளுவார்?

     கோடிப் பொன் தரக் கூடிய கோமான்கள் அவளை நாடி வந்தார்கள். பெரும் நிலப்பிரபுகள் கிராமங்களையே அவள் பெயரில் எழுதி வைக்க முற்பட்டனர். குறுநில மன்னர்கள் அவளுடைய காதலை நாடினார்கள். ஆனால் அவள் எதையுமே லட்சியம் செய்யவில்லை. தன்னுடைய கலைச்சேவை அனைத்தையும், அந்தக் கலை மன்னருக்கே கொடுத்துவிட்டதைப் போல, தன்னுடைய வாழ்வின் சுகம் அவ்வளவையும், அவருக்கே ஈந்து விட்டாள். அங்கே வேறு யாருக்கும் இடம் இல்லை...

     ஆயினும், அந்த வாழ்க்கையில் ஏதோ ஒரு பகுதி முற்றுப் பெறாமல் இருந்ததாகவே அவளுக்குத் தோன்றியது. இரவில் மட்டுமே தோன்றி, குளுமையாக ஒளி தந்து மகிழும் நிலவுக்குப் பகலில் வரத் தைரியம் இல்லாது போனதைப் போல, அரசரின் அன்பைக் கொள்ளை கொண்ட அவள் உள்ளத்துக்கு, அதைப் பகிரங்கமாகப் பலர் முன்னிலையில் ஏற்கும் அருகதையும் உரிமையும் இல்லாமல் போய்விட்டதே?

     அந்த நிலை மகள் புவனமோகினிக்கு ஏற்படலாமா? வேண்டவே வேண்டாம்! அதற்காகவே மகள் கேரளத்தில் கலைப்பயிற்சி பெறுவதையும் கூட அவள் விரும்பவில்லை. தஞ்சைத் தரணியில் புகழ்பெற்று விளங்கும் பரதநாட்டியத்தில் அவள் பயிற்சி பெறுவதையே சித்திரசேனா விரும்பினாள். அந்தக் கலையில் அவள் அரசியாகத் திகழ வேண்டும் என்று விரும்பினாள். அதற்காக தன்னுடைய தாய் அன்பையும், மகள் அண்மையில் இருக்கும் இனிய உணர்வையும் கூடத் தியாகம் செய்யத் தயாராக இருந்தாள். இதோ! அந்த வேளை வந்துவிட்டது...

     சித்திரசேனாவின் உள்ளத்தில் தீக்குமுறியது. நெஞ்சு அதன் காய்ச்சலில் வதங்கியது. இனி அவள் தனது அருமை மகளைச் சந்திக்க முடியாது. ஆறு ஆண்டு காலத்துக்கு அவள் முகத்தைக் கூடப் பார்க்க முடியாது. அந்த நீண்ட இடைவெளியில் அவளுடைய வாழ்வில் என்னென்ன மாறுதல்கள் நேருமோ? புவனாவைப் பற்றி யாராவது வந்து சொன்னாலொழிய அவளால் எந்தத் தகவலையும் அறிந்து கொள்ள முடியாது. யாரையாவது தஞ்சைக்கு அனுப்பி வைக்க எண்ணினாலும் கூட, அதை மகாராஜா எப்படி ஏற்றுக் கொள்வாரோ?

     அவ்வளவு காலம் மகளை மறந்து, அடியோடு துறந்து அவள் வாழ்க்கை எப்படி நடத்தப் போகிறாள்? கலையும் காவிய உணர்வும் தாய்ப்பாசத்துக்கு மாற்றாகி விட முடியுமா? வாழ்க்கையின் பள்ளங்களையும், ஆண்களின் நெருக்கத்தால் ஏற்படக் கூடிய விளைவுகளையும், முற்றிலும் சரியாகக் கூடப் புரிந்து கொள்ளாத அறியாப் பெண்ணாயிற்றே அவள்? யார் அவளுக்கு வழிகாட்டப் போகிறார்கள்? எண்ணும் போதே மனம் துடித்தது.

     ஏதோ ஓர் உள்ளுணர்வு புவனமோகினி மீண்டும் பத்திரமாக வந்து சேர்ந்து விடுவாள் என்று சொல்லிற்று. அப்படித் திரும்பி வரும் போது கலைகளில் வல்லவளாகவும் வருவாள் என்ற நம்பிக்கையும் மனத்தில் துளிர்த்தது. முழுமையான அழகும் ஆற்றலும் நிறைந்த மங்கையாக, பரதநாட்டியக் கலையில் வல்ல பாவையாக, அழகின் மெருகும் நிருத்தியக் கலையின் நயமும் கூடிய நங்கையாக, அவளுடைய அருமை மகள் அவளிடம் ஒருநாள் வந்து சேர்ந்திடுவாள்...

     அப்படி அவள் வந்து சேரும் போது, அந்தக் கலைச் செல்வியை பரத நாட்டியக் கலைக்கே அவள் அர்ப்பணித்து விடுவாள். கேரள நாட்டில் அந்த அருங்கலையைக் கற்றுக் கொடுக்கக்கூடிய நாட்டியப் பள்ளியையும் மன்னரின் ஆசியுடன் அவள் தோற்றுவிக்கலாம். தனது வாழ்நாளில் நிறைவேறாத ஒரு கனவை அவள் தனது மகளின் வாழ்நாளிலாவது நனவாகச் செய்வாள். அது நிச்சயம்.

     அந்த எண்ணமே பசுமையாக இருந்தது. மகளின் பால் வடியும் முகம், கண்களின் துறுதுறுப்பு, கனியும் குரல், குழந்தை உள்ளம் ஒவ்வொன்றும் நினைவில் வடிவெடுத்தது. மனமார அந்த மகளுக்குத் தனது ஆசியைக் கூறி வாழ்த்தினாள் அந்தத் தாய்.

     ஆறு நாட்கள் தொடர்ந்து பயணம் செய்த களைப்பும் கூட மீண்டும் கேரளத்துக்கு வந்து விட்டோம் என்ற நினைவில் மறைந்து விட்டதைப் போலத் தோன்றியது. சித்திரசேனாவுக்கு. வந்த ஒரு பொழுது இளைப்பாறி முடித்ததும், தாதி மூலம் மன்னர் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு வரச் சொல்லி அனுப்பினாள். அவரிடம் தனது மகளைப் பற்றிக் கூறி, அவருடைய ஆசியையும் பெற விரும்பினாள். ஆனால் கூடவே புவனாவைத் தஞ்சையில் விட்டு வந்தது பற்றி அவர் கோபிப்பாரோ என்ற சந்தேகமும் எழுந்தது. ஏனென்றால், அந்த முடிவை அவள் மகாராஜாவிடம் முன்னால் சொல்லவும் இல்லை; அனுமதி பெறவும் இல்லை.

     மன்னர் மலை மீது உள்ள கலா மண்டபத்தில் ஏகாந்தமாக இருப்பதாகத் தகவல் கிடைத்தது. காவலாளியின் துணையுடன் அவள் அங்கே வந்து பார்க்கலாம் என்றும் சொல்லி அனுப்பி இருந்தார். தஞ்சை மன்னர் கொடுத்த சில பரிசுகளுடன் மாலைப் பொழுது முதிர்ந்தவுடன் கிளம்பி விட்டாள்.

     அரசருடன் யாரும் இல்லை. மண்டபத்தில் கல்மேடை ஒன்றின் மேல் அமர்ந்து அவர் வீணை வாசித்துக் கொண்டிருந்தார். அவளைக் கண்டதும் பார்வையின் சமிக்ஞையில், அருகில் வந்து அமரும்படி சொன்னார். அவள் மெதுவாகச் சென்று அருகில் அமர்ந்தாள். மன்னர் மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தார். வீணையின் நாதமும் அந்தக் குரல் நயமும் அவளை மயக்கிற்று.

     பாட்டு நின்றது. சித்திரசேனா குலுங்கி நிமிர்ந்தாள். அரசர் ஓர் அர்த்தம் நிறைந்த புன்னகையுடன், “சித்ரா! உனது அருமை மகளைத் தஞ்சையிலேயே விட்டு விட்டு வந்து விட்டாய் போலிருக்கிறதே?” என்றார். திடுக்கிட்டவளாய் அவள், “சுவாமி! அது தங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள்.

     “தஞ்சையிலிருந்து வடிவேலு என்ற நாட்டியக்கலை வல்லுனர் பரதநாட்டியத்தில் வல்ல பெண்மணி ஒருத்தியையும் அழைத்துக் கொண்டு இங்கே வந்திருக்கிறார். அவர் சொன்ன தகவல் இது!” என்றார் மகாராஜா. அர்த்தம் நிறைந்த புன்னகை ஒன்று அவருடைய இதழ்கடையில் அரும்பியது.

     பேச வகை அறியாது திகைத்தவளாய் அமர்ந்துவிட்ட சித்திரசேனாவை முதுகில் மெல்ல தட்டிக் கொடுத்து, “ஒரு தாயின் மனக்கவலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆயினும் இந்த முடிவைப் பற்றி என்னிடம் நீ ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் அல்லவா? எந்த நம்பிக்கையில் அந்த அரசரின் ஆதரவில் விட்டுவிட்டு வந்தாய்?” என்று கேட்டார்.

     “ஏன் மகாராஜா? அவள் பத்திரமாக இருப்பாள் என்ற நம்பிக்கை தங்களுக்கு இல்லையா?” என்று கலங்கியவளாய்க் கேட்டாள் அவள்.

     “நான் அப்படிச் சொல்லவில்லை. ஆயினும் அந்த இளவரசன் இன்னும் இளமையின் ஜாடை படியாத சிவாஜி அவனுடைய காந்தக் கண்களை நீ கவனித்தாயா சித்ரா? கலைமீதும், அழகின்பாலும், அவனுக்கு உள்ள தாகத்தை நீ நன்கு உணர்ந்தாயா? உன்னுடைய மகளை அவன் அருகில் விட்டுவிட்டுத் திரும்ப உனக்கு எப்படித் தைரியம் வந்தது?” என்று கேட்டார் மன்னர்.

     அதைக் கேட்டு சித்திரசேனா உடைந்து போனாள். மன்னரின் மீது சாய்ந்து கொண்டு கண்ணீர் விடத் தொடங்கினாள். அரசர் அவளைத் தேற்றும் வகையில் வீணையை மீட்டினார். மிருதுவான இசை எழுந்து அவள் மனத்தைத் தொட்டது.

     குறிஞ்சி ராகத்தில் பத்மநாப சுவாமி மீது அவர் இயற்றிப் பாடிய, ‘அலிவேணி என் செய்யும்?’ என்ற மலையாளப் பாடல், தன்னைத் தேற்றி ஆறுதல் சொல்லுவது போல உணர்ந்தாள் சித்திரசேனா...


புவன மோகினி : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38