![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
36. அரங்கேற்ற ஏற்பாடுகள்
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சம் துணையல் வழி. - திருக்குறள் / இன்பத்துப்பால் (நெஞ்சொடு புலத்தல்) (ஒருவருக்குத் துன்பம் வரும்போது நெஞ்சாரச் சொல்லிச் சொல்லிப் புலம்பி ஆறுதல் பெறுகிறோம். ஆனால் அப்படித் தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே நிலைகுலைந்து துணையாக மறுத்துவிட்டால், வேறு யார் தாம் துணையாவார்?) தூங்காவிளக்கைத் தூண்டி வைத்துவிட்டு உறக்கம் பிடிக்காமல் மஞ்சத்தில் அமர்ந்திருந்தாள் அகல்யாதேவி. அவள் மனத்தில் ஆயிரம் கேள்விகள் குமுறின. நடக்கப் போவதை எண்ணி எண்ணி மனம் பலவாறாகவும் துடித்துத் தவித்தது. அரசரின் காலடி ஓசை மெல்லக் கேட்டதும் கோல்பட்ட ராஜநாகம் போல் துள்ளி நிமிர்ந்து எழுந்தாள் இளையராணி. மன்னர் நிதானமாக வந்து அமர்ந்தார். அரசி வைத்திருந்த பாலை எடுத்து மெல்லப் பருகினார். ஏதும் பேசாமல் சாளரத்தின் அருகில் போய் அசையாது நின்று கொண்டார். இளையராணி அவருக்கு மிகவும் அருகில் வந்து நின்று கொண்டாள். தொட்ட அவளிடமிருந்து ஒரு விசிப்பு தெறித்தது. “சுவாமி! தங்கள் மனவேதனையின் காரணம் என்ன? நான் அந்தத் தவிப்பைப் பகிர்ந்து கொள்ளலாமா? என்னுடைய மகன் தங்கள் மணம் புண்படும்படி ஏதாவது பேசிவிட்டானா? என்னிடம் சொல்லுங்கள் அரசே?” என்று கலங்கி உடைந்த குரலில் கேட்டாள் அகல்யா. மன்னர் அவளை அன்புடன் அணைத்துக் கொண்டார். கூந்தலை வருடிக் கொடுத்துத் தேற்ற முயன்றார். தவிப்பில் அவருடைய உதடுகள் துடிப்பது தெரிந்தது. “சுவாமி, எனக்குக் கட்டளையிடுங்கள்! தாங்கள் சொல்லுவது எதுவானாலும் நான் செய்யத் தயாராக இருக்கிறேன். தயவு செய்து என்னுடன் மனம் திறந்து பேசுங்கள். தாங்கள் கலங்கி நிற்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை” என்று மீண்டும் சொன்னாள் தேவி. “தேவி! என்னுடைய வாழ்க்கையின் சுக - துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள என்னை மணந்து கொண்டவள் நீ! எனக்குப் பின் இந்த நாட்டை ஆள சிவாஜியைப் போன்ற ஒரு வீர மகனை எனக்கு அளித்தவள் நீ! உன்னிடம் கூறாமல் இந்தச் சிக்கலைப் பற்றி நான் வேறு யாரிடம் சொல்லுவேன்? நீயும் அதைத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். ஏனென்றால் அது இந்த நாட்டின் தலைவிதியையே நிச்சயம் செய்யக்கூடிய அளவு முக்கியமானது. ஆனால்...” என்று நிறுத்தினார் அவர். “ஆனால் என்ன சுவாமி!” என்று மருட்சியுடன் கேட்டாள் இளையராணி. “உன் நெஞ்சை நீ திடப்படுத்திக் கொள்ள வேண்டும். நான் சொல்லுவதைக் கேட்டு மனம் தளர்ந்து குலைந்து போய்விடாமல் எனக்கு யோசனை சொல்ல முன் வர வேண்டும், செய்வாயா தேவி?” என்று கேட்டார் மன்னர். “சொல்லுங்கள் சுவாமி! அது என் கடமை...” “அப்படியானால் கேள், அகல்யா! நம்முடைய மகன் சிவாஜி நம்மையும் நாட்டையும் துறக்கத் தயாராகிவிட்டான். தன்னுடைய காதலி புவனமோகினியை மணந்து கொண்டு இல்லறம் நடத்த, இளவரசன் சாதாரண குடிமகனாக மாறி விட மனம் துணிந்து விட்டான்!” என்று சொல்லி நிறுத்தினார் சரபோஜி. அகல்யாவின் கண் முன்னால் அந்த அறை சுழன்றது. ஆடிய தீபங்களும் அலங்கார ஸ்தம்பங்களும் சுழன்றன. மன்னரின் முகமும் வெளியே ஒளி சிந்திய நிலவும் சுழன்றன. “சுவாமி! தாங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லையே” என்று கூறி அலறியவாறு மன்னரின் கைகளில் மூர்ச்சை போட்டு விழுந்தாள் இளையராணி. இளையராணியின் முகத்தில் நீர் தெளித்து மூர்ச்சையைத் தெளிய வைக்கச் சிறிது நேரம் ஆயிற்று. கண் விழித்தெழுந்த அகல்யாபாய் மன்னரின் மடியிலிருந்து மனம் கலங்கியவளாய் நிமிர்ந்து உட்கார்ந்தாள். “சுவாமி! தாங்கள் கடைசியாக என்ன சொன்னீர்கள்? என் நெஞ்சில் இடியைப் போலத் தாக்கும் செய்தி எதையோ கூறினீர்களே? அது என்ன? யாரைப் பற்றி?” என்று உடைந்து போன குரலில் கேட்டாள். “அகல்யா! நீ மீண்டும் இப்படி நிலைகுலைந்து போகாமல் இருப்பதாக உறுதிமொழி கூறினால் நான் சொல்லத் தயாராக இருக்கிறேன்...” “சொல்லுங்கள் சுவாமி! தாங்கள் என்னருகில் இருக்கும் போது எனக்கென்ன பயம்? நான் எதற்காக, யாருக்காக அஞ்சி நிலைகுலைய வேண்டும்?” “அப்படியானால் கேள் தேவி! நம்முடைய மகன் சிவாஜி, கேரளத்திலிருந்து வந்த அந்தப் பெண் புவனமோகினியிடம் மனத்தைப் பறிகொடுத்து விட்டான். அந்த நாட்டு மன்னரின் ஆசைக்கிழத்தியின் மகள் என்பதால், அவளை மனைவியாக ஏற்க அரசகுல சம்பிரதாயம் இடம் தராது. அதனால் அவனுடைய காதலே பெரிது என்று சிவாஜி அரசனாகும் வாய்ப்பைத் துறந்து சாதாரணக் குடிமகனாக வெளியேற மனம் துணிந்து விட்டான்! நான் எவ்வளவு கூறியும் அவன் தனது முடிவை மாற்றிக் கொள்ளச் சம்மதிக்கவில்லை!” என்றார் அரசர். அகல்யா இம்முறை கண் கலங்கவில்லை. அகம் துடித்து மயங்கி விழவும் இல்லை. அவளுடைய பார்வையில் பொறி பறந்தது. கைவிரல்கள் எதையோ எண்ணிப் பிசைந்து இறுகின. “நல்லது சுவாமி! வைரத்தை வைரத்தால் தான் அறுக்க வேண்டும். நான் எதையும் செய்யத் தயாராகி விட்டேன். எனக்கு உயிர் பெரிதல்ல; மானம் தான் பெரிது! இந்த நிலைக்கு என் மகன் இறங்க நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்” என்றாள் உறுதியான குரலில். “என்ன செய்யப் போகிறாய் அகல்யா? அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்து விடாதே!” “அவசரப்படவில்லை அரசே! இப்படி ஓர் இக்கட்டான நிலை ஏற்படும் என்பது நான் எதிர்பார்த்த ஒன்றுதான். அப்போது எப்படித் தீர்வு காண வேண்டும் என்பதையும் என் மனம் முடிவு செய்துவிட்டது. புவனமோகினியை நான் அந்தப்புரத்துக்கு அழைப்பேன். அலங்காரம் செய்து அழகு பார்ப்பேன். வாய் குளிரப் பேசிப் பாராட்டுவேன். ஆனால், அதுவே அவளுடைய கடைசிப் பயணத்துக்குரியதாக இருக்கும். அந்தப்புரத்திலிருந்து அவள் திரும்பவே மாட்டாள்...” “என்ன? என்ன சொல்லுகிறாய் தேவி?” என்று பதறித் துடிக்கும் குரலில் கேட்டார் சரபோஜி. “ஆமாம்! என்னுடைய மகனின் வாழ்வில் நஞ்சு கலந்தவளை நானும் பாலில் நஞ்சைக் கலந்து கொன்று விடுவேன். அதற்குரிய தண்டனையை நானே விதித்துக் கொள்வேன். நானும் நஞ்சு அருந்தி உயிரை மாய்த்துக் கொள்வேன். மராட்டிய மங்கையர் மானங்காத்துக் கொள்ள உயிர்விடத் தயங்கியதில்லை. நானும் இந்த அரசகுலத்தின் பெருமையைக் காக்க உயிரை விடத் தயாராக இருக்கிறேன்!” என்றாள் அகல்யா. “நீ ஒரு நாளும் அப்படி நினைக்கக் கூடாது. புவனமோகினியை அவளுடைய தாய் என்னிடம் ஒப்படைத்த போது நான் அவளுக்குக் கொடுத்த உறுதிமொழி உனக்கு நினைவிருக்கிறதா? அந்தப் பெண்ணை நான் முறைப்படி பரதநாட்டியக் கலையில் பயிற்சி பெறச் செய்து, பத்திரமாகத் தாயிடம் அனுப்பி வைப்பேன் என்று கூறியது ஞாபகமிருக்கிறதா? அந்த உறுதியை நானே கைவிட்டுவிட்டால் அப்புறம் நான் கடைப்பிடிக்கும் அரசநெறி என்ன ஆவது? புவனா அவளுடைய தாயிடம் பத்திரமாகப் போய்ச் சேருவாள். உன் மகனும் முறைப்படி மணந்து அரசனாவான். கவலைப்படாதே!” “சுவாமி! தாங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? நடக்கவே முடியாத இரண்டு விஷயங்களைச் சேர்த்து சாத்தியமான ஒன்றாக உருவாக்கப் போவதாகக் கூறுகிறீர்களே? என்னை அமைதிப்படுத்துவதற்கான சமாதானமா இது? என்னை ஏமாற்ற நினைக்காதீர்கள்!” “அப்படி அல்ல! இது நடைபெறும் என்றே நான் எண்ணுகிறேன். நான் வணங்கும் கலைமகளின் அருளால் அந்தக் கலைச்செல்வி காப்பாற்றப்படுவாள். அதே சமயம் பெருவுடையார் திருவருளால் இந்தத் தஞ்சைத் தரணியின் எதிர்காலமும் காப்பாற்றப்படும். அதுவரை நீ உனது மகனிடம் எதுவும் பேசாதே. நான் கூறியது எதையும் தெரிந்து கொண்டது போல் காட்டிக் கொள்ளாதே!” என்று இளைய ராணியைத் தேற்றினார் சரபோஜி. பௌர்ணமி தினத்தை ஒட்டித் தஞ்சைப் பெரிய கோவிலில் மழை பெய்வதற்காக நந்தி தேவருக்கு மிளகு அபிஷேகம் செய்ய ஏற்பாடு ஆயிற்று. வருண ஜபம் செய்யவும் ஏற்பாடாயிற்று. கோவிலில் சுமார் பத்து நாட்கள் தொடர்ந்து இலக்கியப் பேருரை நடத்தவும், கடைசி நான்கு நாட்களில் நாட்டிய நாடகத்தில் விராட பருவத்தை நடித்துக் காட்டவும் முடிவு செய்யப்பட்டது. சுப்பராய ஓதுவாரை அழைத்து அந்த நாட்டிய நாடகங்களுக்கு ஏற்பாடு செய்யுமாறு சார்க்கேலைப் பணித்தார் மன்னர். அத்துடன் கடைசியாக ஒருநாள் புவனமோகினியின் பரதநாட்டிய அரங்கேற்றத்துக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார். புவனமோகினியின் பரத நாட்டிய அரங்கேற்றம் செவ்வனே நடைபெற ஓதுவார் முனைந்து ஈடுபட்டிருந்தார். தாயின் கலை நுட்பமும் சொன்னவுடன் புரிந்து கொள்ளும் திறமையும், ஆடல்நயமும் மிகுந்த புவனாவுக்குப் பரத நாட்டியக் கலை பயிலுவிப்பது, அவருக்கு எளிதாகவே இருந்தது. இன்னும் ஓராண்டு காலம் பயிற்சி பெற்றிருந்தால் அவள் அபூர்வமானதோர் கலையரசியாக விளங்குவாள் என்றே அவர் எண்ணினார். ஆயினும் என்ன காரணத்தாலோ, மன்னர் அரங்கேற்றத்தை விரைவில் முடிக்கும்படி கூறிவிட்டார். இப்போது நாளும் குறித்து மக்களைத் திரளச் செய்து, மலர்களாலும் பதுமைகளாலும் மணிகளாலும் அலங்கரித்த மண்டப மேடையும் தயாராகிவிட்டது. அரசரின் ஆணையை ஏற்று புவனமோகினியை நடன அரங்கேற்றத்துக்குத் தயார் செய்வதில் மும்முரமாகவே முனைந்தார் ஓதுவார். ஆனால் புவனமோகினியின் மனமோ அமைதி இன்றித் தவித்தது... மன்னர் இராமேசுவர யாத்திரையை முடித்துத் திரும்பியதும் ஏதேனும் ஒன்று நடக்கலாம் என்பது அவள் நினைத்திருந்ததுதான். ஆனால் இப்போது அரங்கேற்றத்துக்கு விரைந்து செய்யப்படும் ஏற்பாடு, அவளைத் தஞ்சையிலிருந்து தாமதமின்றி உடனே அனுப்பி வைப்பதற்கு உரியது தான் என்பதை அவளால் ஊகிக்க முடிந்தது. அதை எண்ணி உள்ளம் புலம்பிற்று... தஞ்சையை விட்டு நீங்கிச் செல்வதா? அப்படியானால் அரசகுமாரரின் காதலைத் துறந்துவிட்டு போவதா? அப்படிப் போய் அவளால் உயிர் வாழ முடியுமா? அவ்விதம் இல்லையானால் மன்னர் மகனை அவள் மணம் செய்து கொள்வதென்பது சாத்தியமாகுமா? அரசர் சரபோஜி ஒப்புதல் கொடுப்பாரா? அரசகுலச் சம்பிரதாயங்கள் இடம் கொடுக்குமா? புவனாவின் மனம் பல்வேறுவிதமாகவும் எண்ணி எண்ணி அலைபாய்ந்தது. அவளால் நடனப் பயிற்சியில் முழு மனத்துடன் ஈடுபட முடியவில்லை. ஆடும் போது சிறு தவறுகள் நேர்ந்து ஓதுவாரின் கடுமையான சொல்லுக்கு ஆளாகவும் வேண்டியதாயிற்று. ஏனோ இனி தான் தஞ்சைக்கு வரவே மாட்டோம் என்ற உணர்வு அவள் உள்ளத்தில் பெருகி நின்றது. அதற்குக் காரணம் சொல்ல முடியாவிட்டாலும் அதுவே உறுதியானது என்று அவளுக்குத் தோன்றிற்று. ஆனால் அப்படி நினைக்கும் போது மனத்தில் துயரம் பொங்கிக் குமுறிக் கொண்டு வந்தது. உலக வாழ்க்கையின் அனுபவம் ஏதும் இல்லாத அந்த இளம் பெண்ணுக்கு, அதை மறைத்துக் கொள்ளக் கூடத் தெரியவில்லை. தனியே ஒரு மூலையில் உட்கார்ந்து கண்ணீர் பெருக்கினாள். இதைக் கவனித்த திலகவதி அவளை ஆதரவுடன் அணைத்துக் கூந்தலை நீவிக் கொடுத்துச் சமாதானப்படுத்தினாள். “உனக்குத் தெரியாதா புவனா? கலைஞர்கள் தஞ்சைக்கும் திருவனந்தபுரத்துக்கும் போய் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். சிவானந்தம் கூட அப்படிப் போயிருக்கிறார். உன் அம்மாவே இங்கு வருவார்கள். அப்போது கட்டாயம் உன்னையும் அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்று சொல்லி அனுப்புகிறேன்!” என்று ஆறுதல் கூறினாள். திலகவதி அம்மையாருக்குத் தெஇர்யுமா அவளுடைய உண்மையான மனவேதனை? சிவாஜியைப் பார்க்கக் கூடத் தன்னால் இயலாது என்ற நிலையில் தஞ்சைக்கு வருவதால் என்ன பயன்? அங்கே அவள் பரதநாட்டியம் மட்டுமா கற்றுக் கொண்டாள்? கள்ளமறியாது வளர்ந்த அந்தப் பெண்ணின் மனத்தில் எத்தனையோ எண்ணங்கள் புகுந்து விட்டனவே? எத்தனையோ சாகசமாகப் பேசவும் விளையாடவும் அவள் கற்றுக் கொண்டு விட்டாளே? அவற்றையெல்லாம் அவளுக்குக் கற்றுக் கொடுத்தவர் இளவரசர் அல்லவா? தஞ்சையை மட்டுமா அவள் துறக்கிறாள்? இளவரசரின் காதலையும் அல்லவா மறந்து விலகிச் செல்லுகிறாள்? இதைத் திலகவதியாரால் எப்படிப் புரிந்து கொள்ள முடியும். அது முன்னிரவு நேரம். இரண்டு நாட்களில் அரங்கேற்றம். நடனமண்டபத்தில் நாடக விழா நடந்து கொண்டிருந்தது. திலகவதியார் நாடகம் பார்க்கப் போயிருந்தார்கள். பௌர்ணமியை ஒட்டித் தோட்டத்தில் நிலாவொளி வெள்ளியின் உருக்காய்ப் பரவி நின்றது. மணம் நிறைந்த மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து புவனா நினைவுகளில் லயித்திருந்தாள். அங்கே கல்மேடையில் அமர்ந்து கூந்தலைப் பின்னிக் கொண்ட நாட்கள் நினைவுக்கு வந்தன. மயிலோடும் புறாவோடும் விளையாடியது ஞாபகத்துக்கு வந்தது. தோட்டத்துச் செடிகளுக்கு நீர் வார்த்தபடியே பூத்த மலர்களுடன் கொஞ்சிப் பேசிய நினைவு நெஞ்சில் ஊர்வலமாக வந்தது... அவளுடைய தாய் மேடையில் ‘சாகுந்தலம்’ நாட்டிய நாடகத்தில் சகுந்தலையாக நடிப்பாள். சகுந்தலை கண்வமுனிவரின் ஆசிரமத்தை விட்டுச் செல்லும் போது, கொடித் தங்கையான வன வெண்ணிலாவிடம் நந்தவனத்தில் விடைபெறுவதை அவள் பார்த்திருக்கிறாள். அந்த பூங்கொடியைத் தழுவிக் கொண்டு, “வன வெண்ணிலா! மாமரத்தோடு படர்ந்திருந்தாலும் உனது கிளைக் கைகளால் என்னைக் காட்டிக் கொள். இன்று முதல் நான் வெகுதூரத்தில் இருப்பவளாவேன்!” என்று கூறிக் கண்ணீர் விடுவாள் சகுந்தலை. ‘இது என்ன பைத்தியக்காரத்தனம்? கொடியுடன் பேசிப் புலம்புவதாவது? என்று அவள் அப்போது எண்ணியதுண்டு. ஆனால் இப்போது அத்தகையதோர் உணர்வு அவளிடமே பொங்கியது. அந்தப் பூஞ்செடிகளைக் கட்டி அணைத்துக் கொண்டு கண்ணீர் பெருக்க வேண்டும் போலத் தோன்றியது. சுமை ஏறிய நெஞ்சுடன் பூஞ்செடிகளை நோக்கி நடந்த அவளைப் பின்னாலிருந்து யாரோ பிடிப்பது தெரிந்தது. அவள் வாய்விட்டு அலற நினைக்கும் முன் கைவிரல்கள் அவள் இதழ்களை அழுந்த மூடின. புவனாவின் கண்களைத் துணியால் மறைப்பதும் புரிந்தது. புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|