![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
18. இளவரசரின் முடிசூட்டு விழா!
ஏன் பள்ளி கொண்டீர் ஐயா? - ஸ்ரீரங்கநாதா நீர் ஏன் பள்ளி கொண்டீர் ஐயா? ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே அவதரித்த இரண்டாற்று நடுவிலே (ஏன்) கோசிகன் சொல் குறித்ததற்கோ - அரக்கி குலையில் அம்பு தெரித்ததற்கோ ஈசன் வில்லை முறித்ததற்கோ - பரசு ராமன் உரம் பறித்ததற்கோ? (ஏன்) - அருணாசலக் கவிராயர் பாடல் இளவரசரின் முடிசூட்டு விழாவை ஒட்டி, அரண்மனையில் புதுப்பொழிவு தோன்றி இருந்தது. வழக்கமாக விஜயதசமி, வசந்த பஞ்சமி, அரசரின் பிறந்தநாள், காமன் பண்டிகை (ஹோலி), மராத்தி வருடப் பிறப்பு. நாகபஞ்சமி ஆகிய நாட்களில் தான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு புத்தாடைகள் வழங்குவார்கள். அதைப் போல இந்த நன்னாளிலும் எல்லோரும் புத்தாடை அணிய வேண்டும் என்று மன்னர் ஏற்பாடு செய்திருந்தார். திருவையாற்றில் சிவராமபுரி வாஜபேயர் ‘சர்வதோமுகம்’ என்ற சிறப்பு வேள்வி செய்து பிரசாதம் அனுப்பி இருந்தார். விரதம், யாகம் ஆகியவற்றுக்கும், வெண்குடை செலவும் அளித்து, மன்னர் வேதவிற்பன்னர்களின் ஆசியை நாடிப் பெற்றிருந்தார். தஞ்சைப் பெரிய கோவிலில் பன்னிருநாட்கள் ருத்ராபிஷேகம் செய்ய, திருவுருத்திர மந்திரத்தை ஓதி வழிபட ஏற்பாடு செய்யப்பட்டது. பட்டாபிஷேக நாளன்று ஆலயத்தில் லட்சதீபம் ஏற்றவும் சுலக்ஷணாபாய் நேர்ந்து கொண்டிருந்தாள். அன்று காசியில் கேதார கட்டத்தில் உள்ள கேதாரேசுவர் கோவிலில் விளக்கேற்றவும், திருப்பனந்தாள் காசிமடத்துத் தம்பிரான் ஏற்பாடு செய்திருந்தார். பட்டாபிஷேக நாள் முதல் பத்து நாட்களுக்கு, ஏழைகளுக்கு அன்னம்பாலிப்பு நடத்தவும், ஊரெங்கும் தண்ணீர்ப் பந்தல்களில் இனிப்பு வழங்கவும், பெண்களுக்கு நீராட எண்ணெய்த் தானம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. பட்டாபிஷேக நாளன்று அரசவை வாயிலில் மங்கள நீர் ஏந்தி வரும் சுமங்கலிகளுக்கும், பால் செம்புகள் கொண்டு வரும் யாதவப் பெண்டிருக்கும், சகுனம் நல்லவிதமாக அமைய உதவுவதற்காக, பொற்காசுகள் வழங்கவும் ஏற்பாடாயிற்று. அரண்மனை ஊழியர்கள் அனைவருக்கும், ஒரு மாதச் சம்பளம் சன்மானமாக அளிக்கப்பட்டது. தவறு செய்த ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை நீக்கப்பட்டது. இளவரசரின் நாவிதர், வண்ணான், குதிரைக் காவலர், பாதரட்சை தைப்பவர், ஜாம்தர்கானா தலைவர், கவாத்து கானா பயிற்சியாளர், வேட்டைமகால் உதவியாளர், இளவரசரின் மருத்துவர் ஆகியவர்களுக்குப் பட்டாடைகள் வழங்கப்பட்டன. பட்டாபிஷேக நாளன்று நாட்டியம் ஆட திருவாரூர், திருவாழப்புத்தூர், தேவிகாபுரம் ஆகிய ஊர்களிலிருந்து, ஆடல்கலையில் சிறந்து விளங்கிய கணிகையர் வரவழைக்கப்பட்டனர். அவர்களில் பலர் தஞ்சை மாநகரில் முக்கிய வீதிகளில் அமைந்த அரங்குகளில் ஆடவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அன்று அரண்மனையில் ராஜசபையில் சௌந்தரவல்லி என்ற ராஜதாசி நடனம் ஆட ஏற்பாடு செய்யப்பட்டது. வாத்தியம் இசைக்க, நாதசுரம், முகவீணை, புல்லாங்குழல், சுத்தமத்தளம், வீரகண்டி, கொத்துமணி, வீணை ஆகியவை உரிய கலைஞர்களுடன் வரவழைக்கப்பட்டது. ரெசிடெண்ட் துரை பிளாக்பர்ன் அன்று இளவரசர் சிம்மாசனத்தில் அமரும் போது ‘ஹிஸ் ஹைனஸ்’ என்ற பட்டத்தை வழங்கிக் கைகுலுக்குவார். பல்வேறு தளபதிகளும், பிரபுக்களும், பெருநிலக்கிழார்களும் மரியாதை செலுத்துவார்கள். முடிசூட்டு விழாவில் கலைஞர்களும், இசைப்புலவர்களும், சிற்பிகளும் கௌரவிக்கப்படுவார்கள். கேரள மன்னர் சுவாதித்திருநாள் மகாராஜாவின் சார்பில் மக்லோட் துரை பங்கு பெற்று, இளவரசருக்குத் தந்தப்பிடி அமைந்த அலங்கார வாளை வழங்குவார். இத்தனை ஏற்பாடுகளையும் சரபோஜி மன்னரே, மந்திரிப் பிரதானிகள், அலுவலர்களின் துணையுடன் முன்னின்று கவனித்தார். நாள்தோறும் பரிசுகளுடன் ஓவியம், சிற்ப வகைகளுடன் வந்து மரியாதை செலுத்தியவர்களுக்குப் பதில் மரியாதை செய்து அனுப்பிய வண்ணம் இருந்தனர். அரசரும் அரசமாதேவியரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்தத் திருநாளும் வந்தது. அன்று அரசவை தனி அழகுடன் விளங்கிற்று. அலங்கார விளக்குகளும், பூமாலைத் தோரணங்களும், நெட்டி பொம்மை வேலைப்பாடுகளும், அரிசி மாலைகளும் மண்டபத்திற்கு எழிற்கோலம் தந்தன. பட்டு விரிப்பும் அலங்கார நாற்காலிகளும் வண்ணத்திரைச் சீலைகளும் காண்போரைக் கவர்ந்தன. தஞ்சையின் புகழ் மிகுந்த அத்தர், புனுகு வாசனைத் திரவியங்களும் சுகந்த புகையும் தனிமணம் ஊட்டின. திருவாழப்புத்தூர் மாணிக்கவண்ணர் ஆலயத்து நாதசுரக் கலைஞர்களும், வாயிலில் மங்கள இசை முழங்கச் செய்தார்கள். அரசவைக்கு வருகை தந்த பிரமுகர்களுக்குச் சந்தனமும், மலர்களும், கற்கண்டும் அளிக்கப்பட்டன. மங்கல நீர் ஏந்திய சுமங்கலிகள் வாயிலருகே நின்று வரவேற்றனர். ரெசிடெண்ட் துரை சாரட்டில் வந்து இறங்கிய போது மன்னர் வாயிலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். கேரளத்திலிருந்து வந்த மக்லோட் துரையும், சென்னையிலிருந்து வந்திருந்த கும்பெனியின் பிரதிநிதியும் பல்லக்குகளில் வந்து சேர்ந்தார்கள். ஆலயங்களிலிருந்தும், நாகூர் ஆண்டவர் தர்க்காவிலிருந்தும், கிறித்துவத் தேவாலயங்களிலிருந்தும், மடங்களிலிருந்தும் ஆசியுரை ஏற்றுப் பிரதிநிதிகள் வந்து கூடி இருந்தார்கள். வேதமந்திரங்கள் ஓதப்பட, தேவாரம், திருவாய்மொழி தொடர்ந்து முழங்க மங்கல நீராடி, புத்தாடை புனைந்து, அலங்கார அணிகள் பூட்டிக் கொண்டு, சிவாஜி வந்து அமர்ந்தான். வாயிலில் குண்டுகள் முழங்கின. ராணுவ வீரர்கள் அணி வகுத்தனர். வாத்தியக்காரர்கள் வாத்தியங்களை மேலே தூக்கி மூன்று முறை சுற்றி வாசித்தார்கள். அரண்மனை மீது கொடி ஏற்றப்பட்டது. வாத்தியங்கள் முழங்க ரெசிடெண்ட் துரை இளவரசரை அழைத்து, விரலில் மோதிரம் அணிவித்தார். கும்பெனியாரின் பிரதிநிதி ‘விரகவாஸினி’ என்ற அரச முத்திரையை வழங்கினார். மராட்டியர் போற்றிய பவானி அம்மனின் குங்குமம் திலகமாக இடப்பட்டது. வேதியரின் மந்திரங்கள் ஒலிக்க, மணிமுடையை ஏந்தி வர, முடிசூட்டுதல் நடைபெற்றது. மண்டபத்தில் கூடி இருந்த ஆயிரம் பேரும் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். அரண்மனை வாயிலில் வெடிகள் முழங்க, வாணவேடிக்கைகள் நடந்தன. அவையோர் முன் ராஜதாசி சொர்ணவல்லி, அருணாசலக் கவிராயர் அழகிய மணவாளரான திருவரங்கப் பெருமானைத் துதித்துப் பாடிய, புகழ்மிகு ‘ஏன் பள்ளி கொண்டீர் ஐயா?’ என்ற மோகனராகப் பாடலை அபிநயித்து ஆடினாள். அந்தப் பாடலில் இராமசரிதம் எடுத்துக் காட்டப்படுவதை, ஆங்கிலேயப் பெருமக்களுக்கு துபாஷி மொழி பெயர்த்துக் கூறினார். விழாவிற்கு சித்திரசேனாவும் புவனமோகினியும் வந்திருந்தனர். விழா ஏற்பாடுகளையும், மண்டபத்தின் பொலிவையும் இளவரசனின் அலங்காரத்தையும் சிறப்பு விருந்தினர் பகுதியிலிருந்து புவனமோகினி கண்கொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்தாள். சொர்ணவல்லியின் நடனத்தை மிகுந்த ஆவலுடன் சித்திரசேனா கவனித்தாள். இசைப் புலவர்களுக்கும், நடனக் கலைஞர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்ட போது, நட்டுவாங்கத்தில் வல்லவரான சுப்பராய ஓதுவாருக்கும் பொன்னாடை அளிக்கப்பட்டது. அதை ஆவலுடன் கவனித்த சித்திரசேனா, தனது மகளிடம், “அதோ பார் புவனா! அந்தப் பேராசிரியர் தாம் உனக்குப் பரதநாட்டியம் கற்றுத் தரப் போகிறார். அவருடைய மக்களான, பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகிய நால்வரும் உனக்குத் துணையாக இருப்பார்கள்!” என்று கூறினாள். அதைக் கேட்டு புவனமோகினிக்கு ஒரு புறம் பெருமையும், மறுபுறம் தனியே இருக்கப் போவதால் இயல்பாக ஏற்படும் அச்சமும் உண்டாயிற்று. பல்லவி கோபாலய்யர், தோடி சீதாராமையா, சங்கராபரணம் நரசய்யா, கவிமாத்ரு பூதண்ணா, இரங்கநாத கவி, வீணை பெருமாளையர் போன்ற இசைப்புலவர்கள் பலரும் கௌரவிக்கப்பட்டார்கள். புகழ்மிகு தஞ்சை ஓவியக் கலைஞர்களும், சிற்பிகளும் பரிசு பெற்றார்கள். தாடி சாயேபு, பிரதான கலெக்டர் காட்டன் துரை, இஞ்சினீயர் மைக்கேல் துரை ஆகியோருக்கும் அபூர்வச் சிற்பங்கள் பரிசாக வழங்கப்பட்டன. முடிசூட்டு விழாவை ஒட்டி, தர்பார் ஹாலுக்கு வெளியே திறந்த மண்டபத்தில் விருந்து நடைபெற்றது. வந்திருந்த பிரமுகர்களும், துரைகளும், சீமாட்டியரும் கலந்து கொண்டனர். அரசரும் அரச மாதேவியரும் சுற்றி வந்து அனைவரையும் விசாரித்து கவனித்தனர். இளவரசன் சிவாஜி அலங்கார ஆசனத்தில் அமர்ந்து பரிசுகளைப் பெற்ற வண்ணம் இருந்தான். மாலையில் சரபோஜி மன்னரின் ‘மீனாட்சி பரிணயம்’ நாடகமாக நடிக்கப்பட்டது. தர்பார் ஹாலுக்கு வந்த பிரமுகர்கள் பலரும் அதில் கலந்து கொண்டார்கள். விளையாட்டு மைதானத்தில் ஆட்டுக்கிடா சண்டை, மல்யுத்தப் போட்டி, சிலம்ப விளையாட்டு, பொய்க்கால் குதிரையாட்டம் ஆகியவை நடைபெற்றன. இரவு முழுவதும் வாண வேடிக்கை நடைபெற்றது. காரிருளைக் கலைத்து வண்ணப் பூமழை பெய்த வண்ணம் இருந்தது. விழாவைப் பற்றிய பசுமையான நினைவுகள் நீங்கு முன்னரே சித்திரசேனா ஊருக்குக் கிளம்பி விட்டாள். அருமை மகளை விட்டுப் பிரிவது அவளுக்குப் பெரிய துயரமாக இருந்தது. பிறந்ததிலிருந்து அவள் புவனமோகினியைத் தனியே விட்டுச் சென்றதில்லை. இன்னும் இளமையின் எல்லையை முழுவதும் தொடவில்லை என்றாலும், வயதுக்கு வந்துவிட்ட பெண் அவள். அதனால் அவளைத் தனியே விடுவதும் அவளுக்குக் கவலையைத் தந்தது. அதனாலேயே சரபோஜி மன்னரிடம் அப்படி வேண்டிக் கொண்டாள் சித்திரசேனா. மன்னர் செய்திருந்த ஏற்பாடு ஓரளவு அவளுக்கு நிம்மதியாக இருந்தது. தஞ்சை நகரில் பிரமுகராக விளங்கிய பாபண்ணாவும் அரசரின் உத்தரவுப்படி புவனா தங்குவதற்கு எல்லா வசதிகளையும் அளித்திருந்தார். அவருடைய வயதான தமக்கை சீதம்மா, தன்னைப் போலவே புவனாவை நன்றாகப் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை இருந்தது. அதே போலத் தனது மகளுக்குப் பரதநாட்டியம் கற்பிக்கப் போகும் சுப்பராய ஓதுவாரிடம் அவளுக்குத் தனியான மரியாதை ஏற்பட்டிருந்தது. அவருடைய நான்கு மகன்களும் அந்தக் கலையில் மிகவும் வல்லவர்கள் என்பது அவளுக்குத் திருப்தி அளித்தது. தஞ்சையில் கர்நாடக இசையைப் போல இந்துஸ்தான் இசையும் கற்றுத் தரப்பட்டது. தமிழ் இசையைப் போல, முத்துசாமி தீக்ஷிதரின் சமஸ்கிருத மொழி இசைய்ம் பிரபலமாக இருந்தது. அதுபோலவே பரதநாட்டியம் புகழ்பெற்ற அந்த நகரில் இந்துஸ்தானி நாட்டியமும் கற்பிக்கப்பட்டது. ஒரு நல்ல நாளில் புவனமோகினியை ஓதுவாரின் நடனப் பள்ளிக்கு அழைத்துச் சென்று, முதற்பாடத்தையும் தொடங்கச் செய்தாள் அவள். கூடவே இருந்து குருநாதருக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளையும் செய்து, வினாயகர் பூஜையையும் செய்யும்படி ஏற்பாடு செய்து திரும்பினாள். “இந்தக் கலை காலத்தால் அளவிட முடியாதது. ஈசனாலேயே கையாளப்பட்டது. சிதம்பரம் போன்ற பெருங்கோவில்களில் இடம் பெற்றிருப்பது. சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய ஒரு கலையை உங்கள் மகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பி இருப்பது புவனமோகினி பெற்ற தனிப்பேறு. அதுவும் மகாராஜாவின் ஆசியுடன் இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பது, கலைமகள் அளித்துள்ள தனிப்பிரசாதம்” என்று ஓதுவார் சொன்னபோது அவளுடைய உள்ளம் நெகிழ்ந்தது. தனக்குக் கிடைக்காமல் போய்விட்ட அந்தப் பெரும்பேறு தன்னுடைய மகளுக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து போனாள். இருப்பினும், ஊருக்குக் கிளம்பிய நாளன்று, காலையில் அவளுடைய மனம் சொல்லொண்ணாத வருத்தத்தால் தவிதவித்தது. புவனமோகினி எப்படிப் பிறருடன் பழக வேண்டும் என்றும், எந்தெந்த விதத்தில் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டுமென்றும் எடுத்துச் சொன்னாள். “உனக்கு இன்னும் கள்ளம் கபடம் தெரியாது. ஆகையால் நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உன்னுடைய அழகுக்காக உன்னை நாடி வருபவர்கள் பலர் இருப்பார்கள். அவர்களிடம் நீ மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உன்னுடைய கருத்து முழுவதும் இந்தக் கலையின் பால் மட்டுமே இருக்க வேண்டும். வேறு ஜனரஞ்சகமான பொழுது போக்கில் உன் மனம் ஈடுபடக்கூடாது. நான் உன்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்து கொண்டிருப்பேன். என்னுடைய மனம் கலங்கும் விதமாக நீ எதுவும் செய்துவிடக் கூடாது!” என்று கனிவுடன் சொன்னாள் சித்திரசேனா. புவனமோகினியால் தாயின் கவலையை முழுவதும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் தாயின் மன அமைதியின்மை மட்டும் அவளுக்குத் தெரிந்தது. பேரழகியான தனது தாய், கலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்தாலும், வாழ்க்கையில் மனநிறைவு பெறாதவள் என்பதை, அவளால் ஊகித்துக் கொள்ள முடிந்தது. தன்னுடைய செயலால் அவளுடைய மன அமைதி மேலும் குலையக் கூடாது என்றே எண்ணினாள் புவனமோகினி. “அம்மா! நீ நிம்மதியாகப் போய் வா! என்னை சீதம்மா நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். நான் பாடமே கவனமாக இருப்பேன். அப்படியும் எனக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் உடனே மகாராஜாவிடம் போய் முறையிடுவேன்!” என்றாள் அவள். “மகாராஜாவிடமா? நீ அங்கேயெல்லாம் அப்படிப் போகக்கூடாது. அதற்கேற்றவர்கள் அல்ல நாம்!” என்று திடுக்கிட்டவளாகச் சொன்னாள் சித்திரசேனா. “சரி! மகாராஜாவுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாதுதான்! இளவரசரிடம் சொல்லலாம் அல்லவா? அவர் என்னிடம் மிகவும் அன்பாகத்தானே பழகுகிறார்? அவரிடமே நான் சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறிச் சிரித்தாள் புவனா. மகளின் அந்தப் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனாள் அந்தத் தாய். புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|