உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
27. கைதூக்கி ஆள் தெய்வமே!
பொருந்தும் காதல் கொண்டு - பொன்னிதழ்த் தேனுண்டு இருந்தோம் சொல்லவோ விண்டு - ஏகாந்தம் தனிற்கண்டு, கண்டால் வரும்பேச்சு - கன்னி வயதில் ஏச்சு கண்டு சொன்னதும் போச்சு - பார்வை அதன் மேலாச்சு தெண்டனிட்டேன் என்று சொல்லுவீர் - நடேசர்க்கு நான் தெண்டனிட்டேன் என்று சொல்லுவீர். - முத்துத்தாண்டவர் பாடல் அன்று இரவு நிலவொளியில் குளித்திருந்த புல்வெளியில், இளையராணி அகல்யாவுடன் அமர்ந்திருந்த போது, மன்னர் சார்க்கேலிடமிருந்து வந்திருந்த அந்தக் கடிதத்தைப் பற்றி குறிப்பிட்டார்... “நாம் தல யாத்திரை தொடங்கி சுமார் ஆறு மாதங்களாகி விட்டன. அவ்வப்போது நமக்கு சார்க்கேல் கடிதம் மூலம் தகவல் அனுப்பிக் கொண்டிருக்கிறார். இதுவரை அவர் இப்படி எழுதியதில்லை...” என்று சொல்லி நிறுத்தினார். அகல்யாவின் முகத்தில் லேசான கலவரம் உண்டாயிற்று. நெற்றியில் வேதனை உழுத வரியாகப் படிந்தது. கலக்கத்துடன், “என்ன தகவல் சுவாமி? நம்முடைய குழந்தைகளைப் பற்றி ஏதேனும் எழுதி இருக்கிறார்களா?” என்று கேட்டாள். மெல்லச் சிரித்தபடி மன்னர், “அவர்கள் இன்னும் சின்னக் குழந்தைகள் அல்ல அகல்யா! சொல்லப் போனால் இளமைப் பருவத்துக்கு உரிய ஆசைகள், அவர்களுக்கு சற்று முன்னதாகவே தோன்றிவிட்டதாகக் கூடச் சொல்லலாம். அதனால் அவர்கள் சுதந்திரமாகப் பழகவும், பொழுது போக்காக வெளியே செல்லவும் விரும்புகிறார்கள்...” “என்ன... சிவாஜியா? அதுவும் குழந்தை சுலக்ஷணாவையும் அழைத்துக் கொண்டா? எனக்கொன்றும் புரியவில்லையே பிரபு!” “ஏன் பதறிப் போகிறாய் அகல்யா? அப்படி நடக்கக் கூடாதது எதுவும் நடந்து விடவில்லை. சார்க்கேஸ் நமக்கு தகவல் அளிக்க வேண்டியது கடமை என்று எண்ணி எழுதி அனுப்பி இருக்கிறார், அவ்வளவுதான்! இளவரசன் சிவாஜியும், இளவரசி சுலக்ஷணாவும் அடிக்கடி வெளியே சென்று வருகிறார்கள். அதுவும் இளவரசன் வெளியே போனால் இரவு வேளைகளில் தாமதமாகவும் அரண்மனைக்குத் திரும்புகிறான், எங்கே செல்கிறான் என்பதோ, எதைச் செய்கிறான் என்பதோ தெரியவில்லை...” “அதைக் கண்காணிக்க வேண்டாமா? சார்க்கேல் என்ன தான் செய்கிறார்? தெளிவில்லாமல் இப்படி ஒரு கடிதத்தை அனுப்பி ஏன் குழப்புகிறார்?” “அவர் மீது கோபிக்காதே தேவி! சிவாஜி இப்போது இளவரசன் மட்டும் அல்ல; நாட்டின் அரசர் ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்யும் பொறுப்பும் அவனுக்கு இருக்கிறது. அவன் ஆட்சியைக் கவனிக்க வேண்டும். மக்களின் குறையைக் கேட்க வேண்டும். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக அவன் மாறு வேடத்தில் கூட போக வேண்டி இருக்கலாம்.” “என்னென்னவோ சொல்லிக் கொண்டு போகிறீர்களே சுவாமி? இதெல்லாம் தங்களுடைய ஊகம் தானா?” “அப்படி அல்ல அகல்யா! சார்க்கேல் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கோயிலுக்குச் செல்லும்போது இளந்துறவியாக வேடம் அணிந்து செல்கிறானாம்...” “பார்த்தீர்களா அரசே? என்னுடைய மகன் அப்படித் தவறாக எதையும் செய்ய மாட்டான். அந்தத் தைரியம் எனக்கு இருக்கிறது. கோயிலுக்குப் போகும் என் மகன் அங்கே காவி உடை தரித்துச் செல்கிறான் என்றால், அது எவ்வளவு நல்ல காரியம்? பரவாயில்லை... போய்விட்டு வரட்டும்! ஆனால் இரவில் காலம் தாழ்த்தி அரண்மனைக்கு திரும்பக் கூடாது என்று மட்டும் எழுதி அனுப்புங்கள். சுலக்ஷணா மட்டும் வெளியே தலைகாட்டவே வேண்டாம்!” “நல்லது தேவி! அப்படியே செய்வோம். சிவாஜிக்கு கூட பாதுகாப்பிற்காக யாரேனும் ஒருவர் அவனுக்குத் தெரியாமலேயே பின் தொடர்ந்து செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு எழுதுகிறேன். திருப்திதானே?” “பரிகாசம் வேண்டாம் பிரபோ! அவனுடைய எதிர்காலத்தில் தங்களுக்கு மிகுந்த அக்கறை இருக்கிறது. அதையும் நான் அறிவேன். கவர்னர் ஜெனரலிடம் தாங்கள் கூறியவற்றைப் பற்றி எனக்கும் தகவல் கிடைத்தது” என்று சொல்லி குறும்பாக முறுவலித்தாள் அகல்யா. தாயின் பெருமையைக் கண்ட முகத்தில் இப்போது காதல் மனைவியின் சாகசமும் தெரிவதைப் பார்த்து, மனத்துள் பெருமிதம் கொண்டார் மன்னர். கடிதத்தின் முழு விவரங்களையும் அவர் தேவியிடம் சொல்லவில்லை. வேண்டுமென்றுதான் அவர் அப்படிச் செய்யவில்லை. அனாவசியமாக இளையராணி கலங்கிப் போய்விடக் கூடும் என்று எண்ணினார். அதுவும் அவர் கண்ட நிலையில், அகல்யாவின் மன அமைதியைக் குலைக்கும் விதமாக எதுவுமே பேசக்கூடாது என்று எண்ணிப் பேசாமல் இருந்துவிட்டார் அவர். மறுநாள் விடியற்காலை பாரசீகச் செயலாளர் வந்து பதக்கம், சால்வை முதலியவற்றை எல்லோருக்கும் கொடுத்தார். பிற்பகல் மன்னர் மகாகாளியைத் தரிசனம் செய்தார். அன்னையின் அபூர்வ தரிசனம் வைகறைப் பொழுதில், தாயின் சுப்ரபாத நிகழ்ச்சியின் போது மிகச் சிறப்பாக இருக்கும் என்று அரசர் கேள்விப்பட்டார். அதன்படி மற்றொரு தடவை விடியற்காலையில் தரிசனம் செய்யப் போக வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டார். கல்கத்தா கோட்டையையும், கங்கை பாய்ந்து நிரம்பிய அகழியையும் பார்வை இட்டார். ஆயுதசாலையில் நவீனமான பீரங்கிகளும், துப்பாக்கிகளும், குண்டுகளும் செய்யப்படுவதைப் பார்வை இட்டார். மாலையில் கப்பல் கட்டும் தளத்தைப் பார்வை இடப் போனார். கப்பல் கட்டுதல் கப்பற் படைக்குரிய பொருட்கள் வைத்திருத்தல் ஆகிய செயல்களுக்குரிய கப்பல் துறைமுகத்தை மன்னர் பார்த்தார். கப்பல் கட்டும் இடம் மிகநுட்பங்களோடு அமைந்திருந்தது. கப்பல் உள்ளே வரும்போது மிதந்து வரக் கங்கை நீரை உள்ளே விடுவதும், பிறகு வெளியே அனுப்ப கங்கை நீரை இறைத்து வடிப்பது ஆகிய செயல்களுக்கேற்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தது. ஆட்கள் இறங்கி வேலை செய்யப் போதுமான அளவு காற்றும் வெளிச்சமும் இருந்தன. கப்பல் கட்டுவதற்குரிய மரவகைகளைத் தேர்ந்து பக்குவப்படுத்தும் துறைகளையும் மன்னர் பார்வை இட்டார். ‘சிவாஜியை இங்கே அனுப்பி வைக்க வேண்டும். இவற்றைப் பார்த்து நுட்பங்களை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று தமக்குள் எண்ணிக் கொண்டார். பின்னர் ஸ்ரீராம்பூருக்கு மன்னர் சென்று காகிதம் செய்யும் தொழிற்சாலையையும் பார்வை இட்டார். அங்கே ஆங்கிலம், பிரெஞ்சு, பார்சி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, தமிழ், வங்காளி, நாகரி ஆகிய எழுத்துக்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. அந்த அச்சகத்தைப் பார்வை இடும்போது, அவருக்குத் தரங்கம்பாடியிலிருந்து தஞ்சைக்கு வரவழைத்த அச்சகம் நினைவுக்கு வந்தது. இங்கிலாந்திலிருந்து வரவழைத்த சிறப்பு எழுத்துக்களும் நினைவுக்கு வந்தன. “தஞ்சையையும் சரசுவதிமகால் நூல் நிலையத்தையும் விட்டு வந்து எவ்வளவு நாட்களாயிற்று? சரசுவதி தேவிக்குப் பூஜை செய்து உணவும் நீரும் சாப்பிட்டு எவ்வளவு நாட்களாயிற்று? அண்ணாசாமி சிரௌதிகளும், வாசுதேவ பட்டும் சாமவேதம் ஓதுவது எவ்வளவு நயமாக இருக்கும்? நவவித்யா கலாநிதி சாலாவில் சொக்கலிங்கம்பிள்ளை திருவாசகம் பாடுவது எத்தனை இனிமையாக இருக்கும்? எல்லாவற்றையும் விட்டு விட்டு எங்கேயோ வந்துவிட்டேனே? என்று எண்ணி மறுகினார் அரசர். தஞ்சையில் ஈசனைத் தரிசித்த நினைவு வந்தது. கூடவே சிதம்பரத்தில் அம்பலத்தே ஆடும் ஆனந்த நடராஜப் பெருமானின் ஞாபகம் வந்தது. மன அரங்கில் ஒரு கணம் சித்ரசேனாவும், அவளுடைய மகள் புவனமோகினியின் நினைவும் தோன்றி மறைந்தது. கூடவே சிவாஜியின் நினைவும் ஏனோ வந்தது? தஞ்சையிலிருந்து சார்க்கேல் எழுதிய கடிதம்... அதில் இருந்த குறிப்பு... அவருடைய மனம் அதை எண்ணி வேதனைக்கு ஆளாயிற்று. தன்னைத்தானே தேற்றிக் கொண்டார். காசி யாத்திரை முடிந்து ஊர் திரும்ப இன்னும் ஓர் ஆண்டு காலத்துக்கு மேல் ஆகும். ஆனால் அதற்குள் விபரீதம் ஏதும் நேர்ந்து விடாது... பிரகதீசுவரர் காப்பாற்றுவார். அவரையே நம்பிய தன்னைக் கைவிடமாட்டார்... கங்கையில் குளிக்கப் போகும்போதும், காசியை நினைக்கும்போதும், கயை செல்லுவது பற்றிப் பேசும் போதும், இந்த நினைவு சுழன்று சுழன்று வந்தது. காலையிலும் மாலையிலும் மனத்தைக் கவ்வி அலைபாய வைத்தது. மனத்தை ஒரு நிலைப்படுத்தித் தியானம் செய்வது பெரும்பாடாக இருந்தது. மீண்டும் கவர்னர் ஜெனரலைப் பார்த்து விடைபெற்றுக் கொண்டார். அவரிடம் காளத்திகோவிலில் நடந்ததைக் குறிப்பெழுதிக் கொடுத்துத் திரும்ப தமிழ்நாட்டுக்கு செல்லும் போது, சகல ராஜ மரியாதைகளுடன் தரிசனம் செய்ய அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். புனிதப் பயணம் செய்யும் குழு கயையை நோக்கிப் புறப்பட்டது. திலகவதி அம்மையார் வெயில் தாங்காமல் குளிர்ச்சி பெறும் பொருட்டு, ஜவ்வாறு பூனைக்கு இளநீர் வைத்துக் கொண்டிருந்தார். அதை வேடிக்கை பார்க்க அருகே வந்து அமர்ந்தாள் புவன மோகினி. “புவனா! இன்று ஐயாவுடன் நான் சரபேந்திரப் பட்டணம் போகிறேன். அங்கே கோயிலில் சிதம்பரேசுவர சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. காலையில் திரும்பி விடுவேன். நீ தனியாக இருப்பாயா? துணைக்கு வேலைக்காரப் பெண் வந்து படுத்துக் கொள்வாள்!” என்று நயமாக மசிய வைக்கும் குரலில் கேட்டார் அம்மையார். “வேண்டாம் அம்மா! நான் தனியாகவே இருந்து தூங்கியதில்லை. என்னை விட்டுவிட்டு எங்கேயும் போய் விடாதீர்கள். அப்படிப் போவதென்றால் நானும் கூடவே ஓடி வந்து விடுவேன்!” என்றாள் புவனா. “ஓடி வரவேண்டாம் புவனா! மெல்ல நடந்தே வரலாம். அப்படி அங்கே அவசரமான காரியம் எதுவும் நடந்து விடப் போவதில்லை! வழக்கமான காரியம்தான். அதையெல்லாம் நீ பார்க்க வேண்டாமே என்று யோசனை செய்தேன்...” என்று தயக்கத்துடன் சொன்னார் அம்மையார். “அம்மா! நான் கட்டாயம் வந்துதான் ஆகவேண்டும். எதையோ நீங்கள் மறைக்கப் பார்க்கிறீர்கள். அதனால் அவசியம் தான் அதைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். அப்படி என்ன நடக்கப் போகிறது அம்மா?” என்று ஆவலுடன் கேட்டாள் புவன மோகினி. “வந்து தான் பாரேன்! சொன்னால் சுவாரசியம் போய்விடும். ஆனால் கடைசி வரை நீ என்னுடன் புறப்பட்டு வரும் தகவல் ஐயாவுக்குத் தெரிய வேண்டாம். தெரிந்தால் ஒரு நாளும் அனுமதிக்கமாட்டார்!” என்றார் திலகவதி அம்மையார். அவர் அவசரமாகச் சொன்ன விதமும், அந்த இரகசியக் குரலும் புவனாவை மருட்டின. அதனால் நிகழ்ச்சியில் நடக்கப் போவதை ஆவலுடன் பார்க்கக் காத்திருந்தாள் அவள். திலகவதி அம்மையார் தான் ஏறிச்சென்ற பல்லக்கில், பிறர் பாராத வண்ணம் புவனாவை இரகசியமாகவே ஏற்றிக் கொண்டு போனார். கோயில் மண்டபத்தை மலர்களால் அலங்கரித்திருந்தார்கள். சரவிளக்குகள் தொங்கி ஒளிபரப்பின. நாதசுவர இசை மாலை நேரத்தை மனோகரமாக நினைவு செய்திருந்தது. ஆண்களும் பெண்களுமாகக் கூடி இருந்தனர். கோலமிட்டு, மணைப்பலகை மீது அந்தப் பெண்ணை அமரச் செய்திருந்தனர். பட்டாடை உடுத்து, நகைகள் அணிந்து, தலை குனிந்தபடி அவள் உட்கார்ந்திருந்தாள். மலர்களால் கூந்தல் ஜடை பின்னப்பட்டிருந்தது. அனைவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்ததுபோல நெற்றியில் வியர்வை முத்துமுத்தாக அரும்ப, இதழ்கள் துடிக்க, கால் விரல்கள் வளைந்து சுருங்க, அவள் நிலத்தை நோக்கியவாறு அமர்ந்திருந்தாள். வாத்தியம் முழங்கிற்று. சுவாமி பிரசாதமும் மாலையும் வந்தது. மாலையை அணிவித்துப் பிரசாதத்தை கையில் கொடுத்தார்கள். அந்தப் பெண்ணின் தாய் வீரலட்சுமி வந்து அவளை ஈசன் சந்நிதியை வணங்கச் சொன்னாள். கூடி இருந்த பெரியவர்கள் வணங்கச் செய்தாள். ஆலய நிர்வாகி அவளை அன்னம்மாள் என்று பெயரிட்டு அழைத்து, ஆலயப் பொறுப்பில் விடப் போவதாக அறிவித்தார். அன்னம்மாளுக்கு பொட்டு கட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ‘மாதச் சம்பளம் ஐந்து பணமும், இரண்டு கலம் நெல்லும்’ என்று எழுதிக் கொடுக்கப்பட்டது. பின்னர் மஞ்சள் கயிற்றில் தங்கப் பொட்டு வைத்த தாலி அவளுக்குக் கட்டப்பட்டது. வாத்தியம் வாசித்து ஆரத்தி எடுத்தார்கள். அன்னம்மாளின் முன் வைத்த தாம்பாளத்தில், ஊர்ப் பெரியவர்கள் தங்க வெள்ளிக் காசுகளைப் போட்டார்கள். அவளுக்கு ஆலயத்திலிருந்து பணமுடிப்பும் பிரசாதத்துடன் கொடுக்கப்பட்டது. அன்னம்மாள் சுப்பராய ஓதுவாரையும், திலகவதி அம்மையாரையும் வணங்கினாள். புவனமோகினியை ஒரு விநாடி நிமிர்ந்து பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள் அந்தப் பெண். எல்லாம் முடிந்து கூட்டம் கலைந்தது. திலகவதி அம்மையார் புவனாவுடன் பல்லக்கில் ஏறிக் கொண்டார். இரு புறமும் பட்டுத் திரைச்சீலை தொங்கிற்று. பல்லக்கு அசைந்து செல்லத் தொடங்கிற்று. புவனமோகினியின் மனமும் அந்த நினைவில் மெல்ல மெல்ல அசைவது போல இருந்தது. அதற்கு மேல் பொறுமை இல்லாதவளாகக் கேட்டுவிட்டாள் புவனா... “அம்மா! அந்தப் பெண் யார்? இங்கே என்ன நடந்தது?” என்று தவிப்புடன் கேட்டாள் புவன மோகினி. அம்மையார் அதற்குப் பதில் சொல்லவில்லை. புவனாவின் நினைவில் அந்தப் பெண்ணின் முகம் மீண்டும் மீண்டும் தெரிந்தது. அந்திச் சூரியன் போன்ற சோகமான அழகு ததும்ப, அவள் குனிந்தவாறு அமர்ந்திருந்த தோற்றம் மன அரங்கில் உலாவிற்று. “அம்மா! அந்தப் பெண்ணை என்ன செய்தார்கள்? இந்த சடங்கிற்கு என்ன அர்த்தம்? சொல்ல மாட்டீர்களா?” என்று மீண்டும் கேட்டாள் புவனா. அம்மையார் அவளை ஆதுரத்துடன் தலையைத் தொட்டு வருடிக் கொடுத்தார். “வேண்டாம் புவனா! எதுவும் கேட்காதே! இதற்குத் தான் உன்னை வரவேண்டாம் என்று சொன்னேன். நீ கேட்கவில்லை. நீ இதைப்பற்றித் தெரிந்து கொண்டால் மன வேதனை அடையக்கூடும். அதற்காகத்தான் சொல்லுகிறேன்” என்று கெஞ்சும் குரலில் கூறினார் திலகவதி அம்மையார். புவன மோகினியின் கண்கள் தீபம் ஏற்றியதுபோல ஒளிர்ந்தன. முகம் கடுகடுத்தது போல... “அம்மா! விவரமாகச் சொல்லுகிறீர்களா? இல்லாவிட்டால் நான் இந்தப் பல்லக்கிலிருந்து குதித்து விடட்டுமா?” என்றாள் அசாத்தியமான குறும்புடன். திலகவதி அம்மையார் பாய்ந்து அவளுடைய இருதோள்களையும் பற்றிக் கொண்டு, “சொல்லுகிறேன்! அப்படி ஏதும் செய்துவிடாதே!” என்று கூறி மேலே பேசத் தொடங்கினார். புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|