![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
30. இரவில் இணைந்த இரு உள்ளங்கள்
“உனதுள்ளம் நான் அறியேன் பிரியே! உன்னிடம் ஆசை கொண்ட அங்கங்களை இரவும் பகலும் கருணையின்றி காமன் காய்கிறான் அத் துன்பத்திற்கு காரணம் காமதேவன் - அதைத் தீர்ப்பவனும் அவனே ஆகிறான் - உலகத்தைக் கோடையில் கொளுத்தும் பகல், அதன் முடிவில் நீலமேகங்களால் சகிப்பது போலவே.” - காளிதாஸனின் சாகுந்தலம் சுலக்ஷணாவின் குரல் கேட்டு நீருள் பாய்ந்தான் சிவாஜி. தான் ஓர் இளவரசன் என்பதோ, தான் ஓர் இளம்பெண்ணைச் சுமந்து அனைவர் முன்னிலையிலும் நீந்திக் கரையேற வேண்டும் என்பதோ, அவனுக்கு முற்றிலும் மறந்து போயிற்று. எவ்வாறாகிலும் புவனமோகினியைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற ஓர் எண்ணம் மட்டிலுமே மனத்தில் மேலோங்கி நின்றது. கைகள் துடிக்க, சுழலில் பம்பரமாகச் சுழன்றவளின் கூந்தலைப் பற்றிப் பிடித்தான். மூழ்க இருந்தவளைப் பற்றிக் கொண்டு ஆவேசத்துடன் கை வீச்சைப் போட்டபடி அலைகளை எதிர்த்தான். மூக்கமான அலைகள் இருவரையுமே தாலாட்டிற்று. இடித்துச் செல்லும் ஆற்றின் வேகத்தைச் சமாளிப்பதும் ஒருகணம் சிரமமாகத் தோன்றிற்று. இந்த நிலையைத் தடுக்க முற்படுவது போலவே, காவலுக்கு வந்திருந்த வீரர்கள் நால்வர் ஆற்றில் கீழ்புறம் குதித்து எதிர் நீச்சல் போட்டு வருவது தெரிந்தது. ஆனால், அவர்களுடைய உதவிக்கு அவசியம் ஏற்படவில்லை. நினைவிழந்து கொடி போலத் துவண்டவளை அள்ளி அணைத்தபடி நீந்திக் கரையேறினான். சொட்டச் சொட்ட நனைந்த உடல் வாழைத்தண்டு போல குளிர்ந்து, நீராலும் தைலத்தாலும் வழுவழுத்து நழுவிற்று. அவளைச் சிறிது ஆயாசத்துடன் கரை சேர்த்துப் புற்றரையில் கிடத்தினான். மலர்மாலை நழுவிக் கீழே விழுந்ததைப் போலக் கிடந்தாள் புவனா. அந்த நிலையிலும் அவள் அழகும், இளமையும் கண்ணைக் கவர்ந்தன. அவளைச் சகடத்தில் வைத்துச் சுற்றினார்கள். வைத்தியர் மூலிகைகளைக் கொண்டு வந்து முகரச் செய்தார். தோழிகள் உலர்ந்த துகிலைக் கொண்டு வந்து போர்த்தினார்கள். மெல்ல மெல்ல அவளுடைய நினைவு திரும்பிற்று. சுலக்ஷணா அவளுடைய கையைப் பற்றி மெல்ல தூக்கி அமரச் செய்தாள். தோழி ஒருத்தி வந்து அவளைத் தாங்கிக் கொண்டாள். “நான் எங்கே இருக்கிறேன்?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் புவனா. “பத்திரமாக இருக்கிறாய். ஆற்றின் சுழலிலிருந்து தப்பி விட்டாய். இனி பயமில்லை!” என்று சிறிது நடுங்கும் குரலில் ஆறுதல் கூறினாள் சுலக்ஷணா. “மூழ்கிவிட்டேன் போல இருந்ததே? யார் எப்படிக் காப்பாற்றினார்கள்?” என்று ஆயாசத்துடன் கேட்டாள் புவனா. “பயமில்லை அம்மணி! உங்களை இளவரசரே நீந்தித் தூக்கி எடுத்து வந்து கரைசேர்த்து விட்டார்!” என்றாள் அவரைத் தாங்கி இருந்த தோழி. அதைக் கேட்டதும் அந்தப் பொன்னுடல் வெட்கத்தால் சிலிர்த்து நடுங்கி ஒடுங்கியது. கைகள் இயற்கையான கூச்சத்துடன் மார்பில் குறுக்காகப் படிந்து இறுகின. விழிகள் பார்க்க இயலாமல் துடித்துத் தாழ்ந்தன. சுலக்ஷணா அதைப் புரிந்து கொண்டாள். எல்லோரையும் விலகிப் போகச் சொல்லி, உடைகளை மாற்றினாள். அவள் காதோடு, “என் அண்ணன் ஒருவனே உன்னை இறுகப் பிடித்து தூக்கிக் கொண்டு வந்து கரை சேர்த்தான். போதுமா?” என்று குறும்பாகக் கேட்டாள். புவனமோகினியின் முகம் சிவந்தது. பார்வை மாறிற்று. கைகள் துவண்டன. தன்னை அணைத்துக் கொண்ட இளவரசியைப் பின்னித் தன்னோடு சேர்த்து இழுத்துக் கொண்டாள். நினைவு திரும்பத் திரும்ப, தன்னைப் பலர் முன்னிலையில் இளவரசன் தழுவிச் சுமந்து வந்த ஞாபகம், மனத்துள் மகிழ்வையும், அவஸ்தையையும் ஒருசேரத் தூண்டின. அதுவரை அவள் அறிந்திராத ஒரு சுகமான உணர்வு அவள் உடல் முழுவதும் பரவி நின்றது. “திருப்திதானே? உன்னை வேறு யாரும் தீண்டவில்லை போதுமா?” என்று கொழுவின அவள் கன்னத்தைக் கிள்ளினாள் சுலக்ஷணா. மீண்டும் மயங்கியது போல் நடித்து அவளுடைய மடியில் சொகுசாகப் படுத்துக் கொண்டாள் புவனா. மாலை முதிர்ந்து இருள் சூழத் தொடங்கிவிட்டது. கண்கள் சிவந்து, கூந்தல் கலைந்து, உடல் முழுவதும் சிறாய்ப்பும், இரத்தக் கீறல்களுமாக வந்திருந்த புவனா மோகினியைப் பார்த்துப் பதறிப் போனார் திலகவதி. சாம்பிராணிப் புகையில் தலைக் கூந்தலை ஆற்றி எடுத்தார். நெற்றிக்கு மஞ்சளும், திப்பிலியும், சுக்கும் கலந்து பற்றுப் போட்டாள். மனக்கொம்பையும் ருத்திராட்சத்தையும் இழைத்து உள்ளுக்குக் கொடுத்தாள். அவ்வளவு வைத்தியத்தையும் மீறி, தலையில் நீர் கோர்த்துக் கொண்டு சீதம் நிறைந்துவிட்டது. கட்டுக் கடங்காமல் சீதசுரம் கண்டுவிட்டது. கஞ்சி மட்டும் அருந்தியபடி, எங்கும் நடமாடாமல் கட்டிலிலேயே படுத்துக் கொண்டிருந்தாள் புவனமோகினி. மெல்ல மெல்லச் சுரம் நீங்கினாலும் உடலில் அசதி மேலிட்டது. மூன்று நாட்கள் எங்கேயும் போகாமல், யாரையும் பார்க்காமல் பொழுதைப் போக்கினாள். இரவு முற்றிவிட்டது. உப்பரிகையில் சாளரங்களை மூடி வைத்துவிட்டுக் கட்டிலில் படுத்துக் கொண்டாள் புவனா. கிடந்து தேறியதில் கண்களில் கருவட்டம் சூழ்ந்திருந்தது. இளைத்துப் போன உடலில் புதுமெருகு மங்கினாலும், நளினம் சற்றே கூடி இருந்தது. லேசான வியர்வை நெற்றியில் முத்து முத்தாகப் பூத்தது. மேல்துகில் எடுத்து நெற்றியில் ஒற்றிக் கொண்டாள். காற்றுப்பட சற்று நின்றால் தேவலை போல இருந்தது. திலகவதியார் பார்த்தால் அனுமதிக்க மாட்டார். ஆனால், அவருக்கு முன்னிரவுத் தூக்கம் ஆழ்ந்திருக்கும். இந்த வேளையில் லேசில் எழுந்திருக்க மாட்டார். அந்த தைரியத்தில் மெல்ல எழுந்து வந்து, தாமரை வடிவச் சாளரத்தின் கதவுகளைத் திறந்து விட்டாள். குளிர்ந்த காற்று கண்ணிமைகளை ஒற்றி எடுத்தது. சுகமான உணர்வுடன் கண்களை மூடிக் கொண்டாள். சாளரத்தின் வழியே அந்த மாதுளம் பிஞ்சு வந்து அவள் மீது விழுந்தது. திடுக்கிட்டவளாய்ச் சாளரத்தின் வழியே வெளியே எட்டிப் பார்த்தாள். கீழே சோலையில் அடர்ந்த இருளில் நிழலாட்டமாக யாரோ அசைவது புரிந்தது. நெஞ்சில் அச்சம் புகுந்து கொள்ள வேகமாகச் சாளரத்தை மூட முயன்ற போது, அந்தச் சிறு சந்தேகம் தலைகாட்டிற்று. மீண்டும் குனிந்து பார்த்தாள். சிப்பாயின் உருவத்தில் முண்டாசு அணிந்து நின்ற அந்த இளைஞன் தலைப்பாகையை எடுத்து உயர்த்தி, ஜாடை காட்டினான். சந்தேகமில்லை; அது இளவரசர் சிவாஜிதான்! சொல்லவொண்ணாத பயமும் நாணமும் கலந்து குழப்ப அங்கேயே ஒருகணம் நின்றாள். சிவாஜியின் கை உயர்ந்து காற்றில் அலைந்தது. அவளைக் கீழே இறங்கி வரும்படி அழைத்தது. அவளுக்குப் போக பயமாக இருந்தது. வீட்டில் யாரேனும் விழித்துக் கொண்டிருக்கலாம். அவள் வெளியே செல்வதைப் பார்த்துப் பின் தொடர்ந்து வரலாம். இளவரசருடன் அவள் தனித்திருப்பதை அவர்கள் பார்த்துவிட்டால்? நினைக்கும் போது நெஞ்சு கழைக்கொடியாய் சுழன்றது... அதற்காக வீடு தேடி வந்த இளவரசரை மறுத்து அனுப்பி விடலாமா? எவ்வளவு ஆதங்கத்துடன் அவளைப் பார்த்து விசாரிக்க வந்திருக்கிறாரே? அன்று அவர் துணிந்து ஆற்றில் குதித்துக் காப்பாற்றி இராவிட்டால் இந்த உயிர் ஏது? அவளை நாடி அவ்வளவு தூரம் வந்தவர் ஏமாற்றம் அடைந்து திரும்பிப் போகவா? அவளுடைய நினைவு இருவிதமாகவும் வாதிட்டது. எது மேலென்று புரியாமல் உணர்வுகள் அவளை இருபுறமும் இழுத்தன. ஒரு சீலையை முகத்திரையாகப் போட்டு மூடிக் கொண்டு, மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து, பூனை போல நடந்து வந்தாள். பின் கதவைத் திறந்து பொடி தூவினாற்போல் சூழ்ந்திருந்த இருளில் அடியெடுத்து வைத்தாள். அவள் வெளியே வரக் காத்திருந்ததே போல அந்தக் கரம் அவளை இடையைச் சுற்றிப் பிடித்து இழுத்தது. “ஐயோ!” என்று அலறப் போனவளின் வாயை மற்றொரு கரத்தின் விரல்கள் இறுக மூடின. முகத்தருகே வந்த முகம் கன்னத்தை ஒற்றி எடுத்தது. “நான் தான் புவனா! பயப்படாதே!” என்று காதருகே பேசிற்று அந்த ரகசியக் குரல். காதில் அது விழுந்ததும் இடையைச் சுற்றி அணைத்த கரங்களின் தொட்டுணர்வில் சுகம் கண்டு மெய் மறந்து போனாள் புவனமோகினி. அவளை மெல்லத் தூக்கி அழைத்தபடி நடந்து சென்றான், சிவாஜி. இருவரும் மரத்தடியில் இருளில் கருப்புக் கட்டமாகத் தெரிந்த கல்மேடை மீது அமர்ந்தார்கள். தூரத்தில் நடுச்சாமப் பூஜை மணி அடித்து ஓய்ந்தது. இருவரும் சிறிது நேரம் பேசவில்லை. அணைப்பில் இணைந்த இருவருமே மெய்மறந்து போனார்கள். சிறிதும் அசங்காமல் ஆடாமல் சித்திரம் போல் இருந்தாள் புவனா. இருவருடைய பார்வைகளும் நெடுநேரம் கலந்து நிற்க, அந்த மகிழ்ச்சியின் இனிய அனுபவமாக இருவரும் வாய்மூடி இருந்தனர். “உன் சுரம் தெளிந்துவிட்டதா? உன்னைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதனால் வந்தேன். உன்னை இரவு நேரத்தில் எழுப்பித் தொந்தரவு கொடுத்து விட்டேன் புவனா!” “இது இன்பத் தொந்தரவு இளவரசே!” “ஆற்றில் மூழ்கியதும் நடிப்புத்தானோ? அதுவும் நான் தழுவிச் சுமந்து இன்புற வேண்டும் என்று அளித்த இன்பத் தொந்தரவுதானோ?” “அது நினைவு மூழ்கிய நிலை. இது நிலை மறந்த நினைவு இளவரசே!” “உனக்குப் பாடவும் ஆடவும் தான் தெரியும் என்றிருந்தேன். கேரளத்துக் குயிலுக்கு கவிதையும் வருமா?” “கவிஞர்களை ஆதரிக்கும் அரசன் ஆளும் மண்ணில் கால் பட்டதும், கவிதையும் மலரத் தொடங்கிவிட்டது இளவரசே!” “உன்னை வெல்ல என்னால் முடியாது புவனா!” “உங்களை விலக்க எனது நெஞ்சிலும் வலுவில்லை இளவரசே! உங்கள் மனத்தில் வாழ நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!” என்று அவனது கைவிரல்களைக் கோத்து எடுத்து மார்பில் வைத்துக் கொண்டாள் புவனா. சிறிது நேரம் அவன் பேசவே இல்லை. திடுக்கிட்டவளாய் அவன் முகத்தைப் பிடித்து உயர்த்தி, “இளவரசே! ஏன் பேசவே இல்லை?” என்று கன்னத்தை இதழ்களால் ஒற்றினாள் புவனா. “இதற்காகவே தான் அன்பே! இப்படி ஒரு சுகம் விழையாமலே வரவேண்டும் என்று தான்!” என்று சிறிது தாபத்துடன் கூறிவிட்டு, “நான் இளவரசனா?” என்று கேட்டு விலகினான் சிவாஜி ஒரு பொய்க் கோபத்தோடு! “ஆம்! எந்த நாட்டுக்கு இல்லாவிடினும் என் இதயத்தின் இளவரசர் நீங்கள் தாம்!” என்று கனிவுடன் புரண்டு குழைந்தாள் புவனமோகினி. மகிழ்ச்சிக் கடலில் மிதந்தவர்களாய் ஒருவரை ஒருவர் அணைய, அங்கே சுவர்க்கமே இறங்கிப் படிந்தது. நேரம் போவது தெரியாமல் நெகிழ்ந்து நழுவிற்று... “திரும்பி விடு என் அன்பே! குளிர்காற்றில் உனது பூவுடல் சுரம் காணும். அதற்கு நான் காரணமாக இருக்கக் கூடாது. புறப்படுகிறாயா?”என்று கேட்டான் சிவாஜி. தன்னைப் பிரித்துக் கொண்டு, சிறிதே நகர்ந்தவள், மீண்டும் ஓடி வந்து அவனுடைய அணைப்பில் புகுந்து கொண்டாள். அவளை அப்படியே அள்ளித் தூக்கியபடி கதவுவரை சேர்த்துவிட்டு, விடைபெற்றுக் கொண்டான் சிவாஜி. குதிகாலைப் படியவிடாமல் மெல்ல மெல்ல அவள் நடந்து சென்ற அழகைக் குத்துவிளக்கின் முத்தொளியில் பார்த்தவண்ணம் நின்றான். அவளுடைய உருவம் படிகளில் ஏறி மறைந்த பின், பெருமூச்சு விட்டபடி திரும்பி நடந்து வந்தான். மீண்டும் சிப்பாயின் உடையுடன், சோலையின் எல்லையில் இருந்த சுவரைத் தாண்டி மறுபுறம் குதித்து கயிற்றால் மரத்தில் கட்டப்பட்டிருந்த குதிரையை அவிழ்த்து, முதுகில் தாவி ஏறினான். குதிரையின் கழுத்தை ஆதரவுடன் தடவிக் கொடுத்தான். அதுவும் அன்புடன் கனைத்துவிட்டுப் புறப்பட்டது. அதுவரை இளவரசனின் அடியொற்றி, அவருக்குத் தெரியாமல் ரகசியமாக மறைவிலிருந்து கவனித்திருந்த குதிரை வீரனும், தனது மறைவான இடத்தில் கட்டி இருந்த குதிரையைப் பற்றி ஏறிக் கொண்டு, பின்னாலேயே புறப்பட்டுச் சென்றான். கயைக்கு வந்து சேர்ந்த சரபோஜி மன்னரையும் மனைவிமார்களையும் தமது அரண்மனையிலேயே தங்கச் செய்தார் கயை அரசர் மித்ரஜித்சிங். அங்கே ஐம்பது நாட்கள் தங்கி, ‘அக்ஷயதிருதியை’யிலிருந்து தொடர்ந்து நாற்பத்தேழு நாட்கள் சரபோஜி அரசர் தனது முன்னோர்களை வழிபட்டு அஷ்டகயை செய்தார். வழி நெடுக அவர் பல்வகைப் பயிர்கள், செடிகள், மரங்களையும் பார்த்துக் குறிப்புகள் எடுத்து வந்தார். தமிழ் நாட்டில் தஞ்சைத் தரணியில் கிடைக்காத சிலவற்றின் விதைகளைச் சேகரித்து தஞ்சை அரண்மனைக்கு அனுப்பி வைத்தார். மிர்ஜாபூரிலிருந்து ‘அங்குர்’ என்ற திராட்சைப் பழத்தின் விதையையும், ‘சேவ்’ என்னும் பழ விதைகளையும், மாதுளம் பழ விதைகளையும் தஞ்சைக்கு அனுப்பினார். விதம்விதமான பாக்கு வகைகளையும், ‘மசூரா’ என்ற தான்ய விதை மூட்டையையும் அனுப்பி வைத்தார். அபூர்வமான பறவை இனங்களையும், விதம் விதமான காட்சி ஓவியங்களையும் அனுப்பி, தஞ்சை அரண்மனையை அலங்கரிக்கச் செய்தார். அங்கங்கே கிடைத்த பல்வேறு நாணயங்களையும் சரசுவதி மகாலில் காட்சிப் பொருளாக வைக்கும்படி உத்தரவிட்டு அனுப்பினார். பட்டுப்பூச்சிகளைப் பற்றிய நுட்பமான தகவல்களையும் சேர்த்து தஞ்சையில் வளர்ப்புப் பண்ணை தொடங்குவதற்கு ஏற்பாடு செய்தார். ‘சாரஸ்’ என்ற பட்சி வகைகளைத் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்தார். தாஸ்தான் மகால் தோட்டத்திலும், சிவகங்கை தோட்டத்திலும் வளர்க்க ஏற்பாடு செய்தார். அவற்றுக்கு உரிய உணவு வகைகளையும் குறிப்பிட்டு அனுப்பினார். ‘சாமா’ என்னும் பட்சியைத் தஞ்சை அரண்மனையில் சுலக்ஷணாவுக்காக அனுப்பி வைத்தார். தொடர்ந்து காசிக்கு வந்து சேர்ந்த போது காசித் தம்பிரானுடைய மடத்தில் தங்கினார். மூவாயிரம் பேர்கள் கொண்ட அவரது குழுவிற்கு தங்க இடமும் உணவு வசதிகளும் ஏற்பாடு செய்வது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. ஏறத்தாழ பத்து மாதங்கள் தொடர்ந்து பிரயாணம் செய்தமையினால், அலுப்பு மேலிட்டு பலருக்கும் நோய் கண்டது. அவற்றை மருத்துவர்களைக் கொண்டு கண்டுபிடித்து உரிய வைத்தியம் செய்ய வேண்டியதாயிற்று. மூத்த ராணியாருக்கு உடல் நலம் குன்றியபோது ஆங்கில வைத்தியரிடம் கையும் முகமும் காட்ட மறுத்துவிட்டார். மன்னர் உடனிருந்து ராணியாரை ஒப்புக்கொள்ள வைத்து மருந்துகளை வாங்கிக் கொடுத்தார். அன்று பரங்கித் தபால் மூலம் இளவரசரைப் பற்றிய ஒரு குறிப்பு தஞ்சையில் இருந்த சார்க்கேலிடமிருந்து வந்தது. அதில் எழுதப்பட்டிருந்த தகவல் மன்னருக்கு அதிர்ச்சியை உண்டாக்கிற்று. “இளவரசர் மாலைக்கு முன் அரண்மனைக்கு வருவதில்லை. இரவில் உணவுக்கு வராமல் கட்டமுது எடுத்துக் கொண்டு போகிறார். மாறுவேடமணிந்து பல இடங்களுக்குச் செல்கிறார். இரவு பதினோரு மணிக்குமேல் திரும்புகிறார். கடைசியாக அவர் இவ்வாறு சென்ற இடம் சுப்பராய ஓதுவாரின் நடன மண்டபத்துக்கு எனத் தெரிவிக்கப்படுகிறது” என்று அவர் எழுதி இருந்தார். மாலையிலிருந்து இரவு படுக்கப் போகும் வரை, பாடங்களை ஆசிரியர்களிடம் கற்க வேண்டும் என்பது மன்னர் செய்து விட்டுப் போன ஏற்பாடு. ஆனால் அந்த வேளையில் சிவாஜி உலாவப் போய்விடுகிறான் என்பது புரிந்தது. அதுவும் சுப்பராய ஓதுவாரின் இல்லத்தை ஒட்டிய நடன மண்டபத்துக்கு என்பதும் தெரிய வந்தது. சிவாஜி அங்கே என்ன செய்கிறான்? புவனமோகினியின் ஒப்பற்ற அழகு அவனை ஈர்க்க ஆரம்பித்து விட்டதா? தனது கடமைகளையும் பொறுப்புகளையும் துறந்து அவன் காதல் மயக்கத்தில் தன்னை இழக்கத் தொடங்கிவிட்டானா? திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகுமே? அதுவரை சிவாஜியை எப்படிக் கட்டுப்படுத்துவது? இவற்றையெல்லாம் எண்ணி எண்ணி மன்னரின் உள்ளம் குமுறியது. தஞ்சைக்குத் திரும்ப இன்னும் பத்து மாதங்கள் ஆகலாம். அதற்குள் விபரீதம் ஏதும் நேர்ந்துவிடாமல் இருக்க வேண்டும். எத்தனையோ விதமாகத் தன்னை சமாதானம் செய்து கொண்டும் மன்னரின் கவலை அடங்கவில்லை. இரவு நெடுநேரம் தூங்காமல் விழித்திருந்தார். சார்க்கேலுக்கு கடிதம் ஒன்று எழுதி வைத்துவிட்டு, விளக்குகளை அணைக்கப் போகும் தருணத்தில், அந்தக் கெட்ட செய்தி வந்து சேர்ந்தது! புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|