35. சிவாஜியின் முடிவு

     “கஷ்டம் அனுபவிக்கும் போது துயரப்படுவதைப் போல நடந்து கொள்ளாதே! மற்றவர்களுடைய இரக்கத்தையோ பாராட்டுதலையோ விரும்பாதே! உலக வாழ்வின் நலனும் மனிதாபிமானமுமே உன் கருத்தில் இருக்க வேண்டும். அதை நிலைநாட்ட எந்தத் தியாகத்தையும் செய்ய நீ தயாராக இருக்க வேண்டும். அப்படி உள்ளம் தெளிவதே கஷ்டத்திலிருந்து நீ நீங்குவதற்கு மிகச் சிறந்த வழியாகும்!”

     - ரோமாபுரிச் சக்கரவர்த்தி மார்க்க அரேபியருடைய ‘ஆத்ம சிந்தனை’யிலிருந்து...

     மன்னர் சரபோஜி கங்கை நீரைக் கொடுத்து இராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்வித்தார். அக்னி தீர்த்தத்திலும், பிற நாழிக் கிணறுகளிலும் நீராடிய பின் இறைவனைப் பூஜித்தார். தனுஷ்கோடி சென்று நீராடி மூதாதையர்களுக்கு உரிய காரியங்களைச் செய்தார். பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு நவபாஷாணத்தில் நவக்கிரக பூஜைகளையும் முடித்துக் கொண்டு திரும்பினார்.

     ஒரு மாதம் முன்பு தஞ்சைக்குத் திரும்பியதும், தாம் தரிசித்த தலங்களைப் பற்றிய சிறப்புகளைத் தமது குடிமக்கள் கேட்டு அறிந்து இன்புறுவதற்காக, ‘திரிஸ்தல யாத்ரேச லாவண்ய’ என்ற நூலை மராத்தி மொழியில் இயற்றச் செய்தார். அதில் இளவரசர் தம்மை சிதம்பரத்தில் வரவேற்றது குறித்தும், தஞ்சைக்கு வந்ததும் தமது அன்புத் தாயைக் கண்டு வணங்கி அவருடைய ஆசியைப் பெற்றதையும் சேர்க்கச் செய்தார். அதன் இறுதிப் பகுதிகளில் இராமேசுவர யாத்திரையும் இடம்பெற வேண்டும் என இப்போது தீர்மானித்தார்.

     மன்னரும் தேவியரும் உடன் சென்றோரும் திரும்பி சாலுவநாயக்கன் பட்டணம், பட்டுக்கோட்டை வழியாக முக்தாம்பாள்புரத்தை அடைந்தனர். அங்கே சத்திரத்தில் அனைவரும் இறங்கவும், சாப்பிடவும் ஏற்பாடாயிற்று. மறுநாள் சைதாம்பாள்புரம் வழியாக இரவு தஞ்சையை அடைவது என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

     இளவரசர் சிவாஜி முக்தாம்பாள்புரத்திலேயே வந்து சேர்ந்து கொண்டார். தஞ்சையில் நகர்ப்பிரவேசம் செய்யும் போது விளக்கு அலங்காரங்கள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறித்து சொன்னார். கோட்டைக்கு வந்ததும், காலபைரவருடைய சமாராதனைக்கு ஏற்பாடு ஆகி இருப்பது குறித்தும் சொன்னார்.

     இரவு தங்கி மறுநாள் புறப்பட்ட போது, மன்னரும் இளவரசரும் தனியாக ஒரு சாரட் வண்டியில் ஏறிக் கொண்டார்கள். சிவாஜி இதை எதிர்பார்க்கவில்லை. ஆயினும், மன்னர் அழைத்த போது பதில் சொல்ல முடியாமல் உடன் ஏற வேண்டியதாயிற்று. வண்டி சிறிது தூரம் செல்லும் வரையில் மன்னர் பேசவில்லை. பிறகு சிவாஜியிடம், “முக்தாம்பாள் சத்திரத்தைச் சுற்றிப் பார்த்தாயா? சார்க்கேல் எல்லா விவரங்களையும் கூறினாரா?” என்று கேட்டார்.

     “அரசே! எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன். தாங்கள் மணம் செய்து கொள்வதற்கு முன் ஏற்றுக் கொண்ட அம்மையாரின் நினைவு உங்கள் மனத்தில் பசுமையாக இருப்பதையும் தெரிந்து கொண்டேன். நேற்று முக்தாம்பாளின் சத்திரத்துக்கு முன்னால் ஒரு நிமிடம் நின்று தாங்கள் மனம் நெகிழ்ந்து போனதையும் கண்டேன்!” என்ற நினைவு அவனை ஒரு கணம் அலைக்கழித்தது. அதனால் மேலும் பேச விரும்பிய தனது ஆர்வத்தை அடக்கிக் கொண்டான். ஆனால் அதை விட முக்கியமான விஷயங்களையும் பேச வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டு மனம் தேறினான்.

     “ஆம் சிவாஜி! அதைப்பற்றி நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சார்க்கேலிடம் உன்னிடம் விவரமாகப் பேசச் சொன்னேன். வாழ்க்கையில் முதற்காதல் என்பது மிக அருமையானது. வாழ்வில் பின் என்ன நேர்ந்தாலும் அதை மறக்க முடியாது! அது பத்திரமாகப் போற்றி வைக்கப்பட வேண்டிய நினைவு!” என்றார் சரபோஜி, உணர்ச்சி மிகுந்த குரலில்.

     “அதை நானும் உணருகிறேன் தந்தையே! தாங்கள் ஆணையிட்டபடி சார்க்கேல் வந்து, என்னை சிவகங்கைப் பூங்காவில் கண்காணித்த போது கூட நான் அதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்களிடம் தெரிவிக்க அவர் கேட்டபோது, நான் அவரிடம் உண்மை எதையும் மறைக்கவில்லை. ஆயினும், இதுபற்றி தாங்கள் என்னிடம் நேரில் பேசி இருக்கலாமோ என்று எண்ணி என் மனம் கொஞ்சம் வேதனைப்பட்டது...” என்றான் சிவாஜி மனக்குமுறல் தெரியும் குரலோடு.

     “அதற்கு வேளை வந்துவிட்டது மகனே! அதற்காகவே இப்போது உன்னை என்னுடன் தனியாக அழைத்து வந்தேன். உனக்குத் தெரிந்ததுதான் ஆயினும் மீண்டும் சொல்லுகிறேன். வாழ்க்கையில் காதல் வேறு கடமை வேறு. ஒரு வாலிபன் என்ற முறையில் நீ ஒரு பெண்ணைக் காதலித்திருக்கலாம். ஓர் அரசன் என்ற முறையில் அந்தக் காதலியை மணந்து ராணியாக ஆக்கிக் கொண்டு விட முடியாது. எனக்கும் முக்தாம்பாளுக்கும் இருந்த உறவை அதற்காகத்தான் உன்னிடம் எடுத்துக் கூறச் செய்தேன். புரிந்து கொண்டாயா?”

     “ஏன் அப்பா முடியாது? என் மனத்துக்குப் பிடித்த ஒரு பெண்ணை எனக்கு மணம் செய்து வைப்பதாக அன்று சிதம்பரத்தில் எனக்கு உறுதிமொழி அளித்தீர்களே?”

     “ஆமாம், இப்போதும் சொல்கிறேன். அரசகுலப் பெண்மணிகளிடையே உனக்குப் பிடித்த அழகான பெண்மணியாக யார் இருப்பினும் நான் மணம் செய்து வைக்கத் தயார். ஆனால் அவள் முறையாக அரசபரம்பரையில் வந்தவளாக இருக்க வேண்டும். அரசர் ஒருவரின் காமக்கிழத்தியின் மகளாக இருந்தாலும் பயனில்லை! இப்பொழுது புரிகிறதா மகனே? புவன மோகினியைப் பற்றி நீ முற்றும் அறிய மாட்டாய். நான் அறிவேன். அவள் இந்த வகையைச் சேர்ந்தவள்!”

     சிவாஜிக்கு அந்தச் செய்தி புதிதாக இருந்தது. அதிர்ச்சியில் மனம் தடுமாறியதால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. புவனா அரசர் ஒருவரின் மகளா? அவனுக்குத் தெரியவில்லையே? அந்த கம்பீரமான அழகுக்கும், அறிவு செறிந்த பேச்சுக்கும் அதுவா பொருள்? அதனால் தானோ அவளிடம் அவன் மனத்தைப் பறிகொடுக்க நேர்ந்தது?

     பதிலுக்கு அவன் பேசு முன், மன்னரே மீண்டும் பேசினார். “நீ தஞ்சை மராட்டிய மன்னர் பரம்பரையில் வருபவன். என்னுடைய வாரிசு! அரசுக்கு மட்டும் அல்ல சிவாஜி! நான் வளர்த்த அருங்கலைகளுக்கும் உன்னை வாரிசாக வளர்த்தேன். சரித்திரத்தில் தஞ்சையின் பெருமை அழியாத இடம் பெற வேண்டும் என அரும்பாடுபட்டேன். அந்தப் பணியை நீ என்னிடமிருந்து ஏற்று நீ தொடர்ந்து செய்ய வேண்டும். அந்த நம்பிக்கையுடன் தான் நான் வாழ்கிறேன்!”

     “கட்டாயம் செய்கிறேன் தந்தையே! அதற்காகத்தானே என்னைக் கலை உணர்வு ஊட்டி வளர்த்தீர்கள்? சிற்பம், ஓவியம், நாடகம், இசை, நடனம் எல்லாவற்றிலும் ஆர்வம் மிகுந்து ஈடுபாட்டை உண்டாக்கினீர்கள்? பல மொழிகளையும் கற்கச் செய்தீர்கள்? இந்த அரும் கலைகளுக்கு ஜாதி, மத, இன வேறுபாடுகள் இல்லை. அதன் உயர்வு எங்கிருந்தாலும் போற்றப்பட வேண்டியது தானே? கலைமகளின் அருள் இவை எல்லாவற்றிலுமே பரந்து கிடக்கிறது. இதற்கு புவனமோகினி மட்டும் விதிவிலக்காக முடியுமா தந்தையே? அவளுடைய கலையார்வத்தைத் தாங்கள் மதிக்கவில்லையா? அவள் அழகில் குறைந்தவளா? அவளிடம் என்ன குறையைக் கண்டீர்கள் அரசே?”

     “நான் முக்தாம்பாளிடம் கொண்ட காதல் நீ இன்று உணர்வதை விடக் குறைந்தது அல்ல! ஆயினும் என்ன? என்னால் அவளை அரசியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லையே? மனத்தளவில் கடைசிவரை மனைவியாக இருந்தாள். இன்றும் நான் அவளுடைய நினைவைப் போற்றி வருகிறேன். ஆயிரக்கணக்கான ஏழைகளும் குழந்தைகளும் அவளை நினைவுகூர்ந்து வாழ்த்தும்படி செய்திருக்கிறேன். நீயும் அப்படிச் செய்யலாம்! புவனமோகினியின் நினைவை நீ துறக்க வேண்டாம். ஆனால் அவள் ஒரு நாளும் ராணியாகவே முடியாது! உன்னுடைய அன்பிற்கு உரியவளாக, ஆசைக்கு உகந்தவளாக, தஞ்சையிலேயே வாழலாம். அதற்காக நான் ஒரு மாளிகையே கட்டித் தரத் தயார்!”

     “அந்த வாழ்க்கையை ஏற்க அவள் தயாராக இல்லையே? அந்த வாழ்க்கை எப்படிப்பட்டது என்பது புவனாவுக்குத் தெரியும்! அவளுடைய தாய் இன்னும் அத்தகைய வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இத்தகைய நிலையில் வாழ அவளுக்கு இஷ்டம் இல்லை. அதை விடப் பிரிந்து செல்வதே மேல் என்று அவள் கருதுகிறாள். தந்தையே! எங்களிடம் கருணை காட்டுங்கள். எங்களை வாழவிடுங்கள்! உங்கள் கருணைக்காக நாங்கள் ஏங்கி நிற்கிறோம்!”

     “மகனே! என்னால் கொடுக்க முடியாத ஒரு வரத்தை என்னிடம் நீ கேட்கிறாயே? புவனமோகினி ஒரு ராஜதாசியின் மகள். அவள் ஒருநாளும் உன்னை மணந்து ராணியாக அரியணை ஏற முடியாது. அவளை ஏற்கும் ஒருவன் தஞ்சைத் தரணியின் அரசனாக இருக்கவும் முடியாது. இதை நீ புரிந்து கொள்கிறாயா?”

     சிவாஜி தலையைக் குனிந்து கொண்டான். சகிக்க இயலாத ஒரு வேதனை அவனைத் தாக்கியது. எண்ண அலைகள் புரண்டெழுந்த வேகம் அவனால் அடக்கிக் கொள்ளக் கூடியதாக இல்லை. இப்படி ஒரு நேரம் வரக்கூடும் என்பது அவன் எதிர்பார்த்ததுதான். அதற்குரிய பதிலைச் சொல்லவும் அவன் தயாராக இருந்தான். மன உறுதி தெரியும் குரலில், “புரிகிறது தந்தையே! வாழ்க்கையில் கொள்கை முக்கியமா அல்லது பதவி முக்கியமா என்று நான் தீர்மானிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது என்பதை உணர்கிறேன். எனக்குக் கொள்கைதான் முக்கியம்! என்னால் புவனமோகினியைக் கைவிட முடியாது! அதைவிடத் தஞ்சையை ஆளும் வாய்ப்பைத் துறக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு முடிதுறக்க அனுமதி கொடுங்கள் அரசே! சாதாரணக் குடிமகனாக வாழ்ந்து என் மனதுக்கினியவளை முறைப்படி மணக்க எனக்கு வழிவிடுங்கள்!” என்று சொன்னான் சிவாஜி.

     சரபோஜி மன்னர் இதைக் கேட்டு அதிர்ந்து போனார். இப்படி ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவே இல்லை. மௌனமும் ஆழமும் நிறைந்த கண்களுடன் மகனை உற்றுப் பார்த்தார். தமது வாழ்நாள் முழுவதும் கட்டி உருவாக்கி வந்த ஒரு மனக்கோவில் கண்முன்னே சரிந்து விழுவதைப் போல உணர்ந்தார். அவர் முகத்தில் சோகத்தின் சாயை படர்ந்தது.

     தழுதழுத்த குரலில், “மகனே! என்ன சொல்கிறாய்? இதற்காகவா உன்னை அரும்பாடுபட்டு ஒரு கலையரசனாக வளர்த்தேன்? கும்பினியார் காத்துக் கொண்டிருக்கிறார்கள். முறையான வாரிசான நீ அரசனாக விரும்பாவிட்டால், அவர்கள் ஆட்சியை எடுத்துக் கொண்டு விடுவார்கள். தஞ்சைத் தரணி கை நழுவிப் போகும்! அந்த நிலைக்கு நாட்டை ஆளாக்க நான் பொறுப்பாளியாக வேண்டும் என்று நீ விரும்புகிறாயா? நான் வளர்த்த கலைச் செல்வங்களை நானே அழிக்கச் சொல்லுகிறாயா? நன்றாக யோசித்துச் சொல், எனக்காக நன்கு சிந்தனை செய்து கூறு. உனக்கு அவகாசம் தருகிறேன். அவசர முடிவுக்கு வந்துவிடாதே!” என்று கூறி மகனின் தோள் மீது தனது கையை வைத்துக் கண் கலங்கினார்.

     மேலே தொடர்ந்து வண்டி ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் அதற்குப் பின் பேசவேயில்லை. தஞ்சை வந்து சேரும் வரையில் மன்னர் கண் மூடி அமர்ந்திருந்தார். இருவருமே அவரவர் வழியில் நடக்க வேண்டியதைப் பற்றித் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

     நகர்ப்பிரவேசமும் பூஜைகளும் முடிந்தன. அரண்மனையில் வரவேற்பும் கோலாகலமான விழாவும் சேர்ந்து கலகலப்பை உண்டாக்கி இருந்தன. தளபதிகளும் பிரதானிகளும் மகிழ்வோடு இருந்தார்கள். மலர்களை வாரிச் சொரிந்து மங்கள வாத்தியத்தை முழக்கி, மக்கள் சமீப காலத்தில் கண்டிராத அளவு குதூகலத்துடன் கூடி இருந்தார்கள். மன்னரை வாழ்த்துக்களை முழங்கி வரவேற்றார்கள்.

     ஆனால் சிவாஜியின் முகத்தில் களை இல்லை. ஒரு சோகம் அங்கே படர்ந்து கிடந்தது. அரசர் வழக்கம் போல் இல்லை. வெளியிட முடியாத வேதனை அங்கே அசதியாக நிறைந்து நின்றது. இரண்டையும் அகல்யாபாய் கவனித்தாள். முக்கியமான ஒரு நிகழ்ச்சியைப் பற்றி அவர்கள் இருவரும் கலந்து பேசி இருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டாள்.

     சரபோஜி தனது தாயை வணங்கி ஆசி பெற்று, சபையோர்களின் நல்வாழ்த்துக்களை ஏற்று தேவியருடன் உள்ளே போகத் திரும்பிய போது, “சுவாமி! தங்களிடம் பேச நான் விரும்புகிறேன். இன்று இரவுப் பொழுதை அந்தப்புரத்தில் நீங்கள் என்னுடன் கழிக்க வேண்டுகிறேன்!” என்றாள் அகல்யா.

     மன்னர் தேவியை நிமிர்ந்து பார்த்தார்.


புவன மோகினி : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38