10. மகளின் வேண்டுகோள்

     மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
          மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
     கருங்கயற்கண் விழித்தொல்கி
          நடந்தாய் வாழி காவேரி!
     கருங்கயற்கண் விழித்தொல்கி
          நடந்தவெல்லாம் நின் கணவன்
     திருந்து செங்கோல் வளையாமை
          அறிந்தேன்; வாழி காவேரி!

               -சிலப்பதிகாரம்

     மன்னரின் காசி யாத்திரைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. காசி யாத்திரையின் போது மன்னர் சென்று தரிசிக்கும் திருத்தலங்களின் வரிசை பட்டியலாகப் போடப்பட்டது. ஆங்கிலேய அரசாங்கக் கவர்னரின் ஆணைப்படி மன்னருக்குப் போகும் இடங்களில் ஆங்காங்கு தங்கும் வசதிகள் செய்துதர ஏற்பாடு செய்யப்பட்டது.

     மன்னரும் பரிவாரங்களும் யாத்திரை செல்லும் போது ஆகக்கூடிய பெரும் சிலவினங்களுக்கு, ஆங்காங்கே தங்கும் இடங்களில் பற்றுச் சீட்டுப் பெற்று அவர் கேட்ட தொகைகளை, அவ்வக் கோட்ட அலுவலர்கள் அளிக்க ஏற்பாடாயிற்று. மகாராஜாவின் தேவைக்கேற்ப அந்தந்த இடங்களில் உரிய சாமான்களை வாங்கிக் கொண்டு வந்து கொடுக்க தாசில்தார்களுக்கு முன்கூட்டியே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

     பொங்கற் பண்டிகைக்கு பூரி ஜகந்நாத தரிசனமும் சூரியக் கிரணத்தை ஒட்டி கல்கத்தாவில் மகாகாளி தரிசனமும், கயையில் காரியங்கள் செய்ய ஐம்பது நாட்கள் முகாமிடவும், மூன்று மாதங்கள் காசி மாநகரில் தங்கவும், பின் அத்துடன் பிரயாகைத் தல ஸ்நானத்தையும் முடித்துத் திரும்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வரும் வழியில் திருப்பதி, காளத்தி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய தலங்களில் தரிசனம் செய்து தஞ்சாவூருக்கு வரவும், அங்கிருந்து ராமேசுவரத்துக்குச் சென்று யாத்திரையை முடித்துத் திரும்பவும் திட்டமிடப்பட்டது.

     மொத்தம் சுமார் பதினெட்டு மாதங்கள் யாத்திரை செய்வதாகத் திட்டமிட்டு, அதற்குரிய எல்லா வசதிகளையும் கூடிய விரைவில் உடன் எடுத்துச் செல்ல ஏற்பாடாயிற்று. ஏறத்தாழ மூவாயிரம் பேருடன் செல்லும் இந்தக் குழுவின் உடல் நலத்தைக் கவனிக்க ஓர் ஆங்கிலேய மருத்துவரும், ஒரு தமிழ்நாட்டு மருத்துவரும் உடன் செல்லுவது என ஏற்பாடு செய்யப்பட்டது. மன்னரே தம்முடன் எட்டு பெட்டிகளில் ஆங்கில மருந்துகளையும், கர்நாடக மருந்துகளையும், மாத்திரைகளையும் ரஸ மருந்துகளையும் கொண்டு செல்ல பட்டியல் வகுத்துக் கொடுத்தார்.

     ஆங்காங்கு தங்கிச் செய்ய வேண்டிய பூஜை, நீராடல், தானம் வழங்குவது பற்றிய குறிப்புகளுடன் வேத விற்பன்னர்களும், ஓதுவார்களும், பண்டிதர்களும், உடன்வர ஏற்பாடு செய்யப்பட்டது. முக்கியமான தலங்களில் மூர்த்திகளுக்கு மன்னர், தங்க - வைர நகைகளும், அணி - ஆபரணங்களும் செய்து போட, அந்தந்த தலங்களிலேயே பொற்கொல்லர்கள் மூலம் தயார் செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

     கல்கத்தாவில், கங்கையின் மறுகரையில் தார்ஹஜீரில் கவர்னர் ஜெனரலைப் பார்க்கவும், கயைக்கு அருகில் சாஹேப் கஞ்ச் அரண்மனையில் மன்னருடன் தங்கவும், காசியில் ராம் நகரில் காசி ம்காராஜாவைச் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. கல்கத்தாவில் அச்சகம் ஒன்றைப் பார்வையிட்டு அச்சிட இயந்திரங்களைப் பெறவும், வங்கத்திலும் ஆந்திரத்திலும் டெல்டா பகுதிகளில் பயிரிடும் முறைகளைக் கவனிக்கவும், ஒரிஸாவில் தேக்கு மரங்களைச் சேகரித்து கப்பல் கட்டும் பணிகளைப் பார்வை இடவும், ஏற்பாடு செய்யப்பட்டது.

     இந்த ஏற்பாடுகளைக் கவனிக்க, தினமும் மன்னர் இரவு பன்னிரண்டு மணி வரையில் விழித்திருப்பார். முக்கியமான ஆணைகளைப் பெற அலுவலர்களும் காத்திருப்பார்கள். அதனால் அரசர் அந்தப்புரத்துக்கு வருவதும் அருமை ஆயிற்று. அவரது மகள் சுலக்‌ஷணாவைப் பார்ப்பதும் இயலாமற் போயிற்று. இதனால் மகள் வருத்தப்படுவதாக, மன்னருக்கு அகல்யாபாய் தகவல் சொல்லி அனுப்பினாள்.

     மன்னர் அந்தப்புரத்துக்கு வருவதானால் முன்கூட்டியே செய்தி அனுப்புவது வழக்கம். அன்று அவ்விதம் தகவல் எதுவும் தெரிவிக்காமல், திடீரென்று வந்து சேர்ந்தார் அரசர். மகள் சுலக்‌ஷணாவுக்கு மூக்குக் குத்தி பேசரி அணிவிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள் அகல்யா. அரசர் வந்த போது குமாரியின் மூக்கில் நகை பொருத்தத் துளை இட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த அமர்க்களத்தில் சற்றே கலங்கி இருந்த இளையராணிக்கு, திடீரென்று மன்னர் வந்ததும் கொஞ்சம் வெட்கமாகப் போய்விட்டது.

     “அகல்யா! என்ன இந்த திடீர் ஏற்பாடு? எனக்குக் கூட தெரிவிக்கவில்லையே? சொல்லி இருந்தால் மகளுக்கு வலி தெரியாமல் இருக்க, நானே மருந்து அனுப்பி இருப்பேனே?” என்றார் சரபோஜி.

     “சுவாமி! தங்களைப் பார்ப்பதும் பேசுவதும் அவ்வளவு எளிதாகவா இருக்கிறது? மந்திரிகளும் பிரதானிகளுமே பேச நேரமின்றி அலைவதாகக் கேள்விப்பட்டேன். நான் அனுப்பிய தகவலுக்கும் தங்களிடமிருந்து பதில் இல்லை. மகளுக்கு மூக்குக் குத்தும் சமாசாரத்தை நான் சொல்லி அனுப்புவது அவ்வளவு முக்கியமானதா; அல்லது சாத்தியமானதா?” என்று பெண்களுக்கே உரிய மனத்தாங்கலைக் காட்டும் குரலில் கூறினாள் இளையராணி.

     “என் மகளுக்காகச் செய்யப்படவிருக்கும் பேசரியின் தோற்றத்தை நான் பார்க்கலாமா? தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வைரக் கற்களையாவது நான் பார்க்கலாமா?” என்று புன்னகையுடன் கேட்டார் மன்னர்.

     “அவசியம் பார்க்கலாம் சுவாமி! அது மட்டும் அல்ல; அதை அணியும் ஆவல் ஒருபுறமும், மூக்கைக் குத்துவதால் ஏற்படும் வேதனையின் பயம் மற்றொரு புறமுமாக, தவித்துக் கொண்டிருக்கும் குமாரத்தியையும் பார்க்கலாம்!” என்று கூறி முறுவலித்தாள் அக்லயா.

     தேவியின் கொழுவிய கன்னங்களை ஆசையுடன் கிள்ளிவிட்டு அணைத்தவாறு உள்ளே அழைத்துச் சென்றார் மன்னர். மஞ்சத்தில் சுலக்‌ஷணா கண்ணை மூடிக் கொண்டிருந்தாள். முகம் அழுது அழுது சிவந்து போயிருந்தது. அவளை ஆசுவாசப்படுத்த விசிறிக் கொண்டிருந்த தாதிப் பெண்களும் மன்னரைக் கண்டதும் விலகி ஒதுங்கினார்கள்.

     “சுலக்‌ஷணா... எழுந்திரு! உன்னைப் பார்ப்பதற்காக முக்கியமான பணிகளை விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறேன். கண்ணைத் திற குழந்தாய்!” என்றார் சரபோஜி.

     சுலக்‌ஷணா கண்ணைத் திறக்கவில்லை; எழுந்து அமரவுமில்லை. சிணுங்கியபடியே, “வரும் பௌர்ணமியன்று எனக்குப் பிறந்தாள் என்பது தங்களுக்குத் தெரியும் அல்லவா? அன்று முழுவதும் என்னோடு இருப்பதாக தாங்கள் எனக்கு உறுதிமொழி கொடுங்கள். அப்புறம் கண்களைத் திறக்கிறேன்!” என்றாள் அவள்.

     “இவ்வளவுதானே? கட்டாயம் உன்னோடு இருக்கிறேன். புத்தாடைகள் அணிந்து புதிய நகைகளைப் போட்டுக் கொண்டு, அன்று நீ சந்திரமௌளீஸ்வரர் ஆலயத்தில் அம்மாவுடன் குலதர்ம பூஜை செய்து திரும்புவதை நான் பார்க்க வேண்டாமா? இது மட்டுமா...? வேறு என்ன வேண்டும்? தாராளமாகக் கேள்!” என்று கையைக் கட்டிக் கொண்டு பொய் மரியாதையுடன் நின்றார் மன்னர். இளையராணி ‘கொல்’லென்று சிரித்துவிட்டாள்.

     சிரிப்பொலி கேட்டு சற்றுக் கண்ணைத் திறந்து பார்த்து, மீண்டும் இறுக மூடிக் கொண்டு, “இன்னும் ஒரு வேண்டுகோள்! அன்று தங்களுடைய சபைக்கு தியாகராஜ சுவாமிகளை திருவையாற்றிலிருந்து வந்து பாட ஏற்பாடு செய்ய வேண்டும்!” என்றாள் சுலக்‌ஷணா.

     மன்னர் ஒரு கணம் அதிர்ச்சியடைந்து பேசாமலிருந்தார்.


புவன மோகினி : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38