உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
25. சிவாஜியின் காதல் சிவாஜி அணைத்துத் தூக்கியதால் உள்ளுக்குள் பொங்கிய இன்ப உணர்வு ஓயாத அலைகளாய் அடித்த வண்ணமிருந்தது... புவன மோகினி சொக்கி நின்றாள்... “நான் இறங்கி விட்டேனே? என்னை விட்டு விடுங்கள் இளவரசே!” கொஞ்சும் குரலில் சொன்னாள் புவனா. ஆனால் தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. அப்படிச் செய்யும் பாவனையில் அவளுடைய கைவிரல்கள் அவனுடைய கைவிரல்கள் மீது படிந்து மூடின. தலை பின்புறமாக அவனுடைய அகன்ற மார்பின் மீது சாய்ந்து படிந்தது. கண்களை மூடிக் கொண்டாள். ஒரு கணம் அவளை அப்படியே தாங்கி நின்றபடி, அந்த மென்மையான உடல் அணைப்பால் வந்த சுகத்தை அனுபவித்தவாறு நின்றான் சிவாஜி. அவன் நெஞ்சில் அதுவரை அனுபவித்திராத மகிழ்ச்சி அருவியாகச் சொரிந்தது. இளமைப் பருவத்தின் வாசலில் அடியெடுத்து வைத்த அந்தப் பெண்ணின் மென்மை அவனுடைய வலிமை பொலியும் உடலுக்கு மாலை போல அழகுடன் பொருந்திற்று. “என்னை விட்டு விடுங்கள் இளவரசே! இது தவறு. நாம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது!” என்று அவனுடைய கையைப் பிடுங்கித் தன்னை விடுவித்துக் கொண்டாள். விவரிக்கவொண்ணாத ஒரு பயமும் சோர்வும் அவளைச் சூழ்ந்து கொண்டது. அங்கிருந்து விரைவில் இறங்கிச் செல்லவே மனம் துடித்தது. ஆயினும், தன்னை சிவாஜி அணைத்துத் தூக்கிய இன்ப உணர்வு, அவள் உள்ளத்தில் எழுப்பிய இனிய அலைகள் இன்னும் ஓயவில்லை. அதிலிருந்து அவ்வளவு விரைவில் விடுபடவும் அவளுடைய மனம் இடந்தரவில்லை. எழுந்து உப்பரிகையின் ஒருபுறமாகப் போய் நின்றாள். அலை அலையாகப் புரண்ட கூந்தல் அவளுடைய தந்தச் சிற்பக் கடைசலைப் போன்ற முதுகிலும் இடையிலும் விளையாடியது. தலையில் முடிந்த கொண்டையின் கீழ் மினுமினுத்த கழுத்தின் வெண்மையைக் கன்னங்களின் பளபளப்பை, காதில் ஆடிய குழையைப் பார்த்தபடி நின்றான் சிவாஜி. அவனுடைய நெஞ்சம் அதைப் போலவே மெதுவாக அசைந்தாடிற்று. “போகலாமா இளவரசே?” என்று கேட்டபடி அவன் புறம் திரும்பினாள் புவன மோகினி. முன்னடி எடுத்து வைத்துவிட்டவள், அவன் மிக அருகில் வந்துவிட்டதை உணர்ந்து, லேசாக உடல் நடுங்கி நின்றாள். சிவாஜி துள்ளிக் குதித்து அவள் கைவிரல்களைப் பற்றிக் கொண்டான். “இருட்டி விட்டது புவனா! படிகளில் மெல்லிருள் சூழ்ந்திருக்கிறது. அவசரமாக இறங்காதே! கால்கள் சறுக்கிவிடக் கூடும்!” என்று எச்சரித்தபடி, அதற்காக அவளைப் பக்குவமாக அழைத்துச் செல்லும் பாவனையில் லேசாக அணைத்துப் பிடித்துக் கொண்டான். வளைந்து சென்ற இருள் படியத் தொடங்கிய படிகளில், இருவருமாக மெதுவாக இறங்கினார்கள். அந்த மெல்லிருளிலும் இருவர் பார்வையும் கலந்தன. இருவர் மனத்திலும் உணர்ச்சிகள் பூச்சொரிந்து விழுந்தன. உறுதியான கொழு கொம்பைச் சுற்றிப் படர்ந்த கொடியென அவள் அவன் மீது படிந்தபடி மெதுவாகவே இறங்கினாள். அவள் மெதுவாக ஏதோ சொன்னாள். அவள் குரலின் சுவரங்கள் காதுகளில் தித்திக்க, மயங்கியவனாக அவளைத் தாங்கிக் கொண்டான் சிவாஜி. அவனுடைய விரல்கள் அவள் முகத்தைத் தூக்கி நிமிர்த்தின. லேசாக முகத்தின் மீது குனிவதும் புரிந்தது. “தப்பு இளவரசே! வேண்டாம்!” என்று லேசாகப் பதறியவளாக தனது முகத்தைத் திருப்பி, தன்னை விடுவித்துக் கொண்டு அவசரமாகப் படிகளில் இறங்கினாள் புவன மோகினி. கீழே காவலாளிகள் அவர்களைத் தேடி மேலே வர முயலுவது புரிந்தது. அவர்களுடைய குரல்கள் காற்றலைகளில் லேசாக மிதந்து வந்தன. இளவரசன் தன்னை மீண்டும் தொட்டு விடாதபடி பக்குவமாகவே விலகி மேன்மேலும் படிகளில் இறங்கி ஓடினாள் புவனா. அந்த நடையின் மெருகை, கால்கள் நர்த்தனமாடுவது போல படி இறங்கிச் சென்ற பாதங்களின் ஒயிலைப் பார்த்த வண்ணம் சொக்கிப் போனான் சிவாஜி. கால்விரலை மறைத்துத் தொக்கி ஜிலுஜிலுவென மின்னும் பாவாடை, அவளுடைய உயரத்தை இன்னும் சற்று அதிகப்படுத்தியே காட்டிற்று. காலைத் தூக்கி வைத்த போது, பாதங்கள் இரண்டும் ‘பளீர்’ என்று மாலைப் பொன்னொளியில் மின்னி, பாவாடையின் பட்டுக்கரைகளில் சாகசம் காட்டி மறைந்தன. அவள் மின்னலென ஓடி மறைந்து விட்டாள். ஆனால் சிவாஜியின் மனமோ காற்றின் அலைப்பில் பின்னோக்கி ஒதுங்கும் கொடியைப் போல, பின்னிட்டு அலை பாய்ந்து தவித்தது. அவன் முகத்தருகே ஒளிர்ந்த அந்த அழகு முகமும், கனமாக நீண்ட இமை மயிரும், துள்ளும் கண்களும், ஆடும் குழையின் நிழல் அசைந்த கன்னங்களின் மெருகும், அவன் உள்ளத்தில் வர்ணஜாலம் காட்டின. புவன மோகினி கீழே இறங்கி வந்து சுலக்ஷணாவின் அருகில் அமர்ந்து கொண்டாள். இருவரும் பேசிச் சிரித்த விதத்திலிருந்து தனது தங்கையின் இடை நோவு நீங்கிவிட்டது புரிந்தது. ஒரு சந்தேகம் சிவாஜியின் மனத்தை இருட்டிற்று. ஒருவேளை எல்லாமே அந்தக் கள்ளியின் குறும்புதானோ? அவனையும், புவனாவையும் தனியே மேலே அனுப்ப, திட்டமிட்டுச் செய்த சதிதானோ? “போகலாமா அண்ணா? அல்லது ஊர் திரும்பவே உனக்கு மனம் இல்லையா?” என்று குறும்பாகக் கேட்டாள் சுலக்ஷணா. தங்கையின் பேச்சைக் காட்டிலும் கண்களில் இன்னும் கூர்மையாகவே தெரிந்த குறும்பை உணர்ந்து, அவள் நினைப்பதை ஆழம் காண முயன்றான் சிவாஜி. அவனால் முடியவில்லை. ‘அப்பப்பா! இந்தப் பெண்களின் சாகசம் ஆழ் கடலை விட ரகசியமானதும், புரிந்து கொள்ள முடியாததும் கூட! எங்கிருந்து இவ்வளவு சாதுரியம் இந்த இளம் பெண்ணுக்கு வந்தது? அம்மாவின் புடவைத் தலைப்பில் மறைந்து நின்று கொண்டு, சோழிச் சிரிப்பு தெரிய எட்டிப் பார்த்த சுலக்ஷணாவா இவள்?’ என்று எண்ணிக் கொண்டான். சாரட்டு வண்டி வந்து நின்றது. வாத்தியங்கள் முழங்கின. சிவாஜியும், மற்ற இரு பெண்களும் ஏறிக் கொண்டனர். ராஜ மரியாதைகள் செய்து காவலர்கள் வண்டியை அனுப்பி வைத்தார்கள். இருமருங்கிலும் மரங்கள் சூழ்ந்த சாலையில் முன்னே குதிரை வீரர்கள் செல்ல, அந்த வண்டி குலுங்கிச் சென்றது. அதைப் போல அதில் அமர்ந்திருந்த இரு உள்ளங்களும் குலுங்கி அசைந்த வண்ணம் இருந்தன. அசைந்து குலுங்கும் போது மரத்திலிருந்து பனித்துளிகளுடன் சொரியும் பவழ மலர் போல, அதில் சுகமான உணர்வுகள் நிறைந்த நினைவுகள் உதிர்ந்த வண்ணம் இருந்தன. தஞ்சையில் நுழையுமுன் இராஜ வீதியில் இறங்கிக் கொண்டாள் புவனமோகினி. அவள் இறங்கிச் சென்றுவிட்ட பின், அந்த இடமே வெறுமையாகி விட்டதைப் போல உணர்ந்தான் சிவாஜி. புரிபடாத ஒரு கலக்கம் அவனை அலைத்தது. கூட வந்த தங்கையுடன் பேசவில்லை. அவளும் அவன் மன நிலையை உணர்ந்து கொண்டவளைப் போலக் கண்களை மூடிச் சாய்ந்து கொண்டாள். இரவு உணவும் உண்ண விருப்பமின்றி உறங்கச் சென்றுவிட்டான் சிவாஜி. படுக்கையில் படுத்த பின்னும் அவன் மனத்தில் அமைதி நிலவவில்லை. அன்று மாலை நடந்த நிகழ்ச்சிகளையே மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்து, திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து சுவை கூட்டி அனுபவித்த வண்ணம் இருந்தான். அதேசமயம் அந்த அறியாத பெண்ணின் மனத்தில் அனாவசியமான ஒரு கிளர்ச்சியைத் தூண்டிவிட்டோமோ என்ற குற்ற உணர்வும் அவன் நெஞ்சில் சிறு பாரமாக இறங்கிற்று. மஞ்சத்திலிருந்து எழுந்து நெடு நேரம் நிலா முற்றத்தில் உலவிய வண்ணமாக இருந்தான். இதழ்கள் முற்றுமாக மலராத மென்மலரை விரும்பும் வரிவண்டு இன்புறத் துடித்துச் சுற்றி வருவதைப் போல, அந்தப் பெண்ணின் அழகில், அதரத்தில் தேனின் சுவையைப் பருகப் பேராவல் கொண்டதையும், கிட்டாமற் போன ஏமாற்றத்தையும் எண்ணி அவனுடைய மனம் நொந்தது. அவனுடைய உள்ளத்தின் உண்மையான உணர்வுகளை முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாத ஏக்கத்தில் நெஞ்சம் தவித்தது. அதே சமயம் தனது இல்லத்தில் நெஞ்சம் கலங்கி நின்றாள், புவன மோகினி. அன்று அவள் வீடு திரும்பத் தாமதமானதால், ஓதுவார் அவளைத் தேடி வரச் சொல்லி ஆட்களையும் அனுப்பி இருந்தார். அவருடைய மனைவி வாயிலுக்கருகில் கவலை தேங்கிய முகத்துடன் நின்று கொண்டிருந்தாள். புவனாவைக் கண்டதும் ஆறுதல் விடிந்த முகத்துடன், அவளை வேகமாக இழுத்து பரிவுடன் அணைத்தபடி, லேசான கண்டிப்பு தெரியும் குரலில், “இப்படி நீ போகும் இடம் கூடச் சொல்லாமல் காணாமற் போகலாமா மகளே?” என்று கேட்டாள். “காணாமல் போகவில்லை அம்மா! இதோ என்னை கண்முன்னால் காண்கிறீர்களே?” என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டாள் புவனா. “உன்னைப் பார்த்துவிட்டுப் போக கேரள தேசத்திலிருந்து வந்தவர், இவ்வளவு நேரம் காத்திருந்தார். மீண்டும் நாளைக் காலை வருவதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்” என்றாள் அவள். “அம்மா! யார் அவர்? அவர் எனது தாயைப் பார்த்து வந்தாரா? அம்மா எனக்கு ஏதேனும் கொடுத்தனுப்பி இருக்கிறார்களா?” என்று கேட்டாள் புவனா. “ஆமாம் புவனா! இதோ அந்த அழகான வேலைப்பாடமைந்த பாத்திரம்! அது நிறைய உனக்கு பலாப்பழப் பணியாரம் செய்து அனுப்பி இருக்கிறாள் உன் தாய் சித்திரசேனா!” என்று கொடுத்தாள். ஆவலுடன் அதை வாங்கி மூடியைக் கழற்றிய புவனாவின் கண்களில் நீர் சுரந்தது. ‘ஐயோ அம்மா! நீ இன்னும் உன் மகளை ஒரு கள்ளமறியாத குழந்தை என்றே எண்ணிக் கொண்டிருக்கிறாயே, பாவம்! உன்னுடைய நம்பிக்கைக்கும், பாசத்துக்கும் அருகதை உள்ளவள் தானா நான்’ என்று அவளுடைய உள்ளம் புலம்பிற்று. புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|