![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
26. மன்னரின் புனிதப் பயணம்!
பூங்கா விரிப்புனற் கோவிலுள்ளே மிக்க போகமெல்லாம் யாங்காண யோகத் துயில் கொள்வாறெள்ளுமெண்ணெயும் போல் நீங்கா துலகத்துயிர்க்குயிராகி நியாமகனாய் ஓங்கார மாயதன் உட்பொருளாய் நின்ற ஒண் சுடரே! - திருவரங்கத்து மாலை திருக்காளத்தி ஜமீன்தார் மன்னர் சரபோஜியைப் பார்க்க வந்திருப்பதாகப் பணியாள் வந்து கூறினான். “வரச்சொல்! வழக்கம் போல் தட்டு ஒன்றில் பட்டாடையும், விபூதி - பிரசாதங்களும் கொண்டு வரும்படி புரோகிதரிடம் கூறு” என்று சொல்லி அனுப்பினார் மன்னர். உள்ளே ஜமீன்தாரைப் பட்டாடை போர்த்துக் கௌரவித்த பிறகு, “என்ன செய்யலாம்? எப்போது வழிபட ஆலயத்துக்குப் போகலாம்?” என்று கேட்டார் சரபோஜி மன்னர். “எப்போது வேண்டுமானாலும் போகலாம். ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள்!” என்று தயங்கினார் அவர். மன்னர் புன்னகையுடன் அவரைத் தட்டிக் கொடுத்து, “தாராளமாகச் சொல்லுங்கள். தயக்கம் வேண்டாம்!” என்றார். “நான் இப்படிக் கூறுவதற்கு அரசர் என்னை மன்னிக்க வேண்டும். ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன், மன்னர் உடைவாளைக் கழற்றி வைத்துவிட்டுச் செல்ல வேண்டும். அதுதான் இந்த ஆலயத்தில் பின்பற்றப்படும் நியதி!” என்று பணிவுடன் கூறினார் ஜமீன்தார். “அது எங்கள் அரச குல மரபுக்கு ஒவ்வாத ஒன்று! தகுதிக்கேற்ற ஆயுதங்கள். பரிவாரங்கள் ஆகியவற்றுடன் செல்லாவிட்டால் நான் அரசனாக வழிபட்டதாகாது. நான் செய்யும் பிரார்த்தனை எனது குடிமக்களுக்குப் பயன் தராது!” என்று அமைதியாகவே பதில் கூறினார் மன்னர். “என்ன செய்வது அரசே! அது இந்த ஆலயத்து வழக்கம். கண்ணப்பநாயனார் ஆயுதமேந்திச் சென்று வழிபட்ட பிறகு, மற்றவர் யாரும் அவ்வாறு ஆயுதம் தாங்கி சந்நிதிக்குச் செல்லக் கூடாது என்பதுதான் எங்கள் வழக்கம்!” என்று மிக உறுதியாகக் கூறினார் ஜமீன்தார். “மங்களகிரியில் பாகை நரசிம்மர் கோவிலுக்குப் போயிருந்தேன். அங்கே வலம்புரிச் சங்கைத் தங்கத் தகட்டினால் அலங்கரித்து பெருமாளுக்குக் காணிக்கையாகக் கொடுத்தேன். எங்கள் ஊர் பிரகதீசுவரரையும், கும்பகோணத்தில் கும்பேசுவரரையும், திருவையாற்றில் பஞ்சநதீசுவரரையும் தரிசிக்கச் சென்றதுண்டு. எங்குமே உடைவாளின்றிச் சென்றதில்லை” என்று தொடர்ந்தார் மன்னர். “அரசே! நான் தங்களுக்காகத் தனியாக ஒரு விதியை எடுத்துரைத்தால், தாங்கள் என் மீது வருத்தப்படலாம். ஆனால் நான் கூறும் பொதுவிதி, தங்களுக்கு ஒவ்வாது என்றால் நான் செய்யக் கூடியது எதுவுமே இல்லை! என்னை மன்னியுங்கள்!” என்று பணிந்து கூறி விடைபெறத் தயாரானார் ஜமீன்தார். “நல்லது! உங்களைத் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. காளத்திநாதரை வெளியிலிருந்து கோபுர தரிசனம் செய்து வழிபட்டுவிட்டுச் செல்கிறேன். எனது மரபைக் கைவிட எனக்கு மனமில்லை” என்று கூறி விடைபெற்றுக் கொண்டார் சரபோஜி மன்னர். உடன் வந்த சேனைத் தலைவன் ராமராவ் ஜாதவை அழைத்து, “கவர்னர் ஜெனரலை நான் கல்கத்தாவில் சந்திக்கும் போது இதைப் பற்றிப் பேசவேண்டும். ‘மன்னர்கள் தத்தம் வழக்கப்படி சென்று தரிசனம் செய்யலாம்’ என்று தல மகாத்மியத்தில் குறிப்பு இருக்கிறது. அதை எடுத்து வையுங்கள். தக்க மரியாதைகளுடன் நான் ஓராண்டிற்குப் பிறகு திரும்பி வரும் போது சந்நிதியில் இறைவழிபாடு செய்வேன்!” என்று கூறினார். பூரியில் மன்னரை தாசில்தார் ஸ்ரீராம்போஸ் எதிர் கொண்டு அழைத்தார். நான்கு குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டியில் அமரச் செய்து அழைத்துப் போனார். ஆலய வாசலில் கோவில் மரியாதைகளும் நடந்தன. பூரணகும்பம் கொடுத்து வேதங்கள் ஓதி அழைத்துச் சென்றார்கள். “பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் பொங்கலையொட்டிச் சிறப்பு விழா நடைபெறும். அதற்கு மகரயாத்ரா என்று பெயர். வங்காளம், காசி, கல்கத்தா ஆகிய இடங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் வரும். தாங்கள் இப்போது பொங்கல் திருநாளில் இங்கே வந்திருக்கிறீர்கள்! இந்தத் திருவிழாவின் போது ஜகன்னாதர் அருளைப் பெறத் தாங்கள் கொடுத்து வைத்திருக்கிறீர்கள்!” என்று பணிவுடன் சொன்னார் தலைமைப் பூசாரி. பூரியில் அரசர் இரு கைகளாலும் பெருமாளுக்கு மலர் தூவி வழிபட்டார். தேவியரையும் அவ்வாறே வழிபடச் செய்தார். பிறகு முடியைக் கழற்றி வைத்துத் தலையை இறைவனின் பாதங்களில் வைத்து வழிபட்டார். உடன் வந்தவர்களும் அவ்வாறே பெருமாளின் பாதங்களில் தலையை வைத்து வணங்கினார்கள். மகா யாத்ரா! சிறப்புத் திருவிழாவை, பொங்கலை ஒட்டிக் கண்டுகளித்தவர், மறுநாள் மேலே யாத்திரையைத் தொடர நினைத்தார். ஆனால் தாசில்தார் கேட்டுக் கொண்டபடி வெள்ளிக்கிழமை வரையில் தங்கித் தரிசித்தார். மறுநாள் பாலபோகமும், அடுத்த நாள் புதன்கிழமை பொங்கல் போகமும், வியாழக்கிழமை தாண்டே சிருங்கார போகமும், வெள்ளிக்கிழமை சாயங்கால போகமும், வெள்ளிக்கிழமை சாயங்கால போகமும் - இப்படி ஒவ்வொரு நாளும் ஆலயத்துக்குச் சென்று தரிசனம் செய்து கொண்டார் மன்னர். பூரி ஜகன்னாதர் தலத்தில் மன்னர் சரபோஜி அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தினார். நாள்தோறும் பன்னிரண்டு பானைகளில் சாதமும் காய்கறிகளும் சமைத்துப் பெருமாளுக்கு நிவேதனம் செய்ய வேண்டும் என்றும், பிறகு அதைக் கூன், குருடர், முடவர் ஆகியோருக்குக் கொடுத்தல் வேண்டும் என்றும் என்றும் நிபந்தனையிட்டு, அதற்கான செலவை தாசில்தார் ஸ்ரீராம்போஸிடம் கொடுத்தார். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அனுப்பி வைப்பதாகவும் சொல்லிப் புறப்பட்டார். தொடர்ந்து யாத்திரைக் குழு பாகல்புரம் வரையில் கங்கைக் கரையிலேயே சென்றது. “பாகல்புரத்துக்குத் தெற்கே ஜாடகண்ட வைத்தியநாத தலம் இருக்கிறது. அதைத் தேவகர் என்றும் சொல்லுவார்கள். அதைத் தாங்கள் அவசியம் தரிசித்துச் செல்லவேண்டும். இராவணன் அங்கே சிவலிங்க பூஜை செய்து வந்ததாக தலபுராணம் கூறுகிறது. கங்கோத்ரி, ஹரித்துவார், பிரயாகை, கல்யாண்பூர், கங்கா சாகர் ஆகிய தலங்களிலிருந்து நாள்தோறும் பலநூறு காவடிகளில் கங்கா தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. மகாசிவராத்திரியன்று ஒன்றே முக்கால் லட்சம் காவடிகள் அப்படி வந்து சேரும். அந்தத் தலத்தில் தங்கி தாங்கள் அபிஷேகத்தைத் தரிசித்துச் செல்ல வேண்டும்!” என்று தாசில்தார் கூறி இருந்தார். அவ்வாறே அங்கு சென்று தரிசனம் செய்தார் சரபோஜி மன்னர். கோவிலின் தென்கிழக்கில் ‘சந்திரகூபம்’ என்ற தீர்த்தத்தில் பஞ்ச கங்கை தங்கி இருப்பதாக ஒரு ஐதீகம் உண்டு. அங்கே மன்னர் நீராடினார்; கோதானம் செய்தார்; விபூதி, உத்திராட்சைகளைத் தரித்து தேவியருடன் சுவாமிக்கும் பஞ்ச கங்கையின் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தார். பின்னர் தம்முடன் வந்திருந்த அனைவருக்கும் கங்கா தீர்த்தத்தை வாங்கிக் கொடுத்து அவ்வாறே அபிஷேகம் செய்யச் செய்தார். பின்னர் சுவாமி, அம்மன் விமான சிகரங்களுக்கு ஜரிகைக் கொடியைக் கட்டுவித்தார். அதையே அவர்கள் மன்னரின் தலையில் கட்டி அவருக்கு மரியாதை செய்வித்தார்கள். கௌரி, பார்வதி ஆகிய இரு அம்மன்களுக்கும் யமுனாபாயும், அகல்யாபாயும் பூஜை செய்தனர். சுமங்கலிகளுக்குப் பட்டுப் புடவைகளைத் தானம் செய்தனர். பிறகு தொடர்ந்து மன்னரும், பரிவாரத்தினரும் தேவகர் என்ற ஜாடகண்ட வைத்தியநாதர் தலத்திலிருந்து புறப்பட்டு கல்கத்தாவுக்குச் சென்றனர். கல்கத்தாவில் மன்னர் கவர்னர் ஜெனரலைச் சந்தித்தார். அதற்காக சல்காகாட் என்ற இடத்தில் முகாமிட்டுத் தங்கினார். கவர்னர் ஜெனரல் மன்னருக்கென்று தங்குவதற்கு பங்களா ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார். அதில் தங்கிக் காலை நேரத்தில் பூஜைகளை முடித்து கவர்னர் ஜெனரலைப் பார்க்கப் புறப்பட்டார் சரபோஜி. “வாருங்கள் சரபோஜி! உங்களைப் பற்றி பிளாக்பர்ன் எழுதி இருந்தார். சென்னையிலிருந்து வந்த ஜார்ஜ்ஹட்டனும் சொன்னார். நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!” என்று கையை நீட்டிக் குலுக்கினார் கவர்னர் ஜெனரல். சரபோஜி அவருடன் கைகுலுக்கினார். அவருடைய முகத்தில் ததும்பிய புன்னகை ஒரு கணம் நிழல் படிந்தது போல மங்கிற்று! “எனக்கு ஒரு மகன் இருக்கிறான்... தங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்...” என்று சொல்லி நிறுத்தினார். “நன்றாகத் தெரியும்! பெயர் சிவாஜிதானே?” என்று கேட்டுவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் அவர். புகைக்கும் குழாயை எடுத்துப் புகையிலைத் தூளைத் திணித்துக் கொண்டார். மன்னரிடம், “நீங்கள் புகைப்பதுண்டா?” என்று கேட்டார். “எப்போதாவது சுருட்டுப் பிடிப்பதுண்டு. உறையூர் சுருட்டு புகழ் பெற்றது. ஆனால் தலயாத்திரையின் போது அறவே விட்டு விட்டேன்!” என்றார் சரபோஜி. “காசிக்குப் போனால் பிடித்தவற்றை இந்துக்கள் விட்டு விடுவார்களே? நீங்கள் சுருட்டுப் பிடிக்கும் வழக்கத்தை விட்டு விடப் போகிறீர்களா?” என்று கேட்டுப் பெரிதாகச் சிரித்தார் துரை. “நீங்கள் பேசும் விதம் எனக்குப் பிடித்திருக்கிறது. என் மகனைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நன்கு படித்தவன். நல்ல முறையில் அவனை வளர்த்து வருகிறேன். வருங்காலத்தில் அவன் தஞ்சையில் என்னைப் போல் ஒரு கலையரசனாகவாவது திகழ வேண்டும் என்பது என்னுடைய ஆசை!” என்றார் சரபோஜி. “அப்படியே நடக்கும். அதில் என்ன சந்தேகம்?” என்று கேட்டார் அவர். “அதைத் தங்களிடமே நேரில் கேட்டு உறுதி செய்து கொள்ள விரும்புகிறேன். கும்பெனியார் பல சமஸ்தானங்களில் ஏதேனும் ஒரு காரணத்தைக் காட்டி, வம்சத் தொடர்பைத் துண்டித்து விடுகிறார்கள். எனக்குக் கூட அப்படி நேர இருந்தது...” என்று தயங்கினார் சரபோஜி. “எனக்குத் தெரியும்! ஆனால் சிவாஜியைப் பற்றி நீங்கள் அவ்விதம் கவலைப்பட வேண்டியதில்லை. உங்களைக் காப்பாற்றியவர் யார்? ஸ்வார்ஷ் பாதிரியார் அல்லவா? அவர் எப்பேர்ப்பட்ட மாமனிதர்? அவர் எண்ணிப் பார்த்து வேதனை அடையக் கூடிய காரியம் எதையும் நான் செய்ய மாட்டேன்!” என்று கூறி மன்னரின் கைமேல் கைகோத்து உறுதி அளித்தார் கவர்னர் ஜெனரல். மன்னர் சரபோஜியின் மனம் நெகிழ்ந்தது. மனத்தில் ஒரு கணம் கருணை ததும்பும் ஸ்வார்ஷ் பாதிரியாரின் முகம் தெரிந்தது. அவருடைய கண்களுக்கு அந்த ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் அந்நியமாகத் தெரியவில்லை. உறவினர் ஒருவரைப் போலவே தோன்றினார். மன்னரைத் தேநீர் அருந்தச் சொல்லி எதிரே அமர்ந்து பேசினார் கவர்னர் ஜெனரல். “சரபோஜி! நீங்கள் மற்ற சமஸ்தானத்து அரசர்களைப் போன்றவர் அல்ல! பெரும்பாலும் அவர்கள் இன்பத்தில் திளைத்து, போக வாழ்க்கை நடத்துகிறார்கள். நீங்கள் அப்படிப்பட்டவர் அல்ல. உங்கள் நாட்டிற்கு அச்சுக் கலையைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அரிய நூல்களைத் தொகுத்து வெளியிடுகிறீர்கள். மருத்துவ முறையில் புதிய தகவல்களைச் சேகரித்திருக்கிறீர்கள். ‘லைப்ரரி’ என்ற முறையை முதல் தடவையாகவே அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். எல்லாமே பாராட்டுதற்குத் தகுந்தவை அரசே! தங்களை நான் வெறும் மன்னராகப் பார்க்கவில்லை. கலை மன்னராகவே பார்த்துப் பெருமைப் படுகிறேன்!” என்றார். “தங்களுக்கு எனது அன்பளிப்பாகச் சில பரிசுகளைக் கொண்டு வந்திருக்கிறேன்!” என்று கூறித் தனது உதவியாளரை அழைத்தார் சரபோஜி. தஞ்சையின் மிகச் சிறந்த கலைப்பொருட்களை, முத்தும் பொன்னும் பதித்த மணி மாலைகளை, வெள்ளி வேலைப்பாடு செய்த தங்கத் தாம்பாளத்தை, தஞ்சாவூர் சித்திரத்தைப் பரிசாகக் கொடுத்தார். பதிலுக்குக் கவர்னர் ஜெனரல் அவருக்குத் துப்பாக்கி, கடியாரம், தங்கமுலாம் பூசிய வெள்ளி ஹௌதா ஆகியவற்றைப் பரிசாகக் கொடுத்து, அத்தர் பன்னீருடன் வெற்றிலை பாக்கும் கொடுத்தார். “புறப்படுங்கள் அரசே! நீங்கள் இங்கே பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன. உங்களை அழைத்துச் செல்ல ஸால்காட் ஜட்ஜ் பியாரவேல் அவர்களை ஏற்பாடு செய்திருக்கிறேன். இங்கே கல்கத்தா கோட்டையில் பீரங்கிகளையும் குண்டுகளையும் பார்க்கலாம். கப்பல் துறைமுகத்தில் கப்பல் கட்டும் கலையைக் காணலாம். ஸ்ரீராம்பூரில் காகிதம் தயாரிப்பதைப் பார்வையிடலாம். அச்சகம் ஒன்றையும் நீங்கள் பார்க்கலாம்! மேலும்...” “காளிகட்டத்தில் காளி மாதாவைத் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறீர்களோ?” “சரியான யூகம்! எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” “இங்கே வந்துவிட்டு என் அன்னை காளிமாதாவைத் தரிசனம் செய்யாமல் இருப்பேனா? மேலும் மார்ச் மாதம் சூரியகிரணம் வருகிறது. அன்று இங்கேயே இருந்து பூஜைகளை செய்துவிட்டுத் தான் போகப் போகிறேன்.” “நல்லது மன்னரே! இங்கே நீங்கள் தங்கும் இரு மாதங்களுக்கும் எல்லா வசதிகளும் அமையும்படி ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கிறேன். அமைதியாக எல்லாவற்றையும் அனுபவித்துப் பாருங்கள். போகும் போது என்னைச் சந்தித்து விட்டுச் செல்லுங்கள்!” என்று கூறி அன்புடன் அணைத்து விடைகொடுத்தார் கவர்னர் ஜெனரல். நிம்மதியுடன் முகாமிற்குத் திரும்பிய அரசருக்கு ஒரு கடிதம் கிடைத்தது. தஞ்சையிலிருந்து சார்க்கேல் எழுதிய கடிதம் அது. அவ்வப்போது அங்கிருந்து நிலவரங்களைப் பற்றி அவர் எழுதி அனுப்புவார். அதைப் படித்து மன அமைதி பெறுவார் சரபோஜி. ஆனால் இம்முறை வந்த கடிதம் அப்படி அமைதி அளிப்பதாக இல்லை! புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|