![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
11. அரசரின் அழைப்பு
மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக் கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி! கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின் கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன்; வாழி காவேரி! -சிலப்பதிகாரம் அவரிடமிருந்து பதில் வராததால் சுலக்ஷணா எழுந்து அமர்ந்து கொண்டு முழங்கால்களுக்கிடையே முகத்தைப் புதைத்துக் கொண்டாள். மன்னர் அவளருகே அமர்ந்து தலையை மெல்ல வருடியபடி, “மகளே! நீ நகை கேள்; நான் வாங்கித் தருகிறேன். நான் வந்து பார்க்க வேண்டும் என்று சொல்; அன்புக் கட்டளைக்குப் பணிகிறேன். ஆனால், இப்போது கேட்டாயே...? அது அவ்வளவு எளிதானது அல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது” என்றார். “அப்பா! என்ன சொல்லுகிறீர்கள்? மன்னராகிய தாங்கள் அழைத்தால் சுவாமிகள் வராமல் இருந்து விடுவாரா? தாங்கள் மரியாதை செய்து போற்ற விரும்புவதாகச் சொல்லி அனுப்பினால் அவர் வர மறுத்து விடுவாரா? நாம் அவருடைய தெய்வீக இசையைக் கேட்கத்தானே விரும்புகிறோம்? அதில் தவறு ஏதும் இல்லையே?” என்று மனக் குமுறலுடன் கேட்டாள், சுலக்ஷணா. “சுவாமி! தாங்கள் சுலக்ஷணா விரும்புகிறபடி சொல்லி அனுப்புவதில் தவறு ஏதும் இல்லை என்றே நானும் நினைக்கிறேன். அந்த மகான் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவர் என்று கேள்விப்பட்டேன். அதனால் தங்கள் அழைப்பையும் அவர் ஒரு பெருமையாக மதித்து சபைக்கு வருவார் என்றே எனக்குத் தோன்றுகிறது! சுலக்ஷணா மட்டும் அல்ல; சுவாமிகளின் கீர்த்தனங்களை அவரே பாடிக் கேட்க வேண்டும் என்று நானும் ஆவலாக இருக்கிறேன். தங்களுடைய மகளின் பிறந்தநாளன்று அந்த நற்காரியம் நடக்கட்டுமே?” என்று அகல்யாவும் வற்புறுத்திச் சொன்னாள். “எனக்கு ஆட்சேபணை இல்லை. தகுந்த மரியாதைகளுடன் பண்டிதர் மூலமாக நான் அழைப்பை அனுப்புகிறேன். அவர்கள் வந்தால் எனக்குப் பெருமகிழ்ச்சியே ஏற்படும். ஆயினும் எவ்வளவு தூரம் இந்த ஆசை நிறைவேறும் என்பதுதான் எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை!” என்று கூறிவிட்டு வெளியே வந்தார் மன்னர். அரசரைப் போக விடாமல் கையைப் பற்றி இழுத்தவாறே மகள் சுலக்ஷணாவும் உடன் வந்தாள். அவளுக்காக மயிலாடுதுறையிலிருந்து தருவிக்கப் பட்டிருந்த மாம்பழத்தை மன்னரே தமது கையால் நறுக்கித் தர வேண்டும் என்று பிடிவாதம் செய்தபடி, அவரை அமரச் செய்து தானும் மடியில் அமர்ந்து கொண்டாள். மகளுக்கு மாம்பழத்தை நறுக்கிக் கொடுத்தபடி மன்னர் யோசனையில் ஆழ்ந்தார். திருவையாற்றில் திருமஞ்சன வீதியில் சிறுவீடு ஒன்றில், இராமபிரான் திருவுருவத்திற்கு முன் அமர்ந்து பாடும் நாத யோகியைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிப் போனார் அவர். வைகறைப் பொழுதில் காவேரி ஆற்றில் நீராடிவிட்டுத் திரும்பி வந்தார் தியாகராஜ சுவாமிகள். காவேரிக் கரையில் சில நிமிடங்கள் நின்று, ரகசியம் பேசும் நீரின் சலசலப்பையும், வெள்ளிக் கீற்றாய் உதிரும் வைகறையின் சிரிப்பையும், திரும்பி வந்த வழியெல்லாம் புள்ளினங்கள் கூவிய இனிமையையும் எண்ணி மனம் அதில் தோய்ந்து நின்றது. “மேலுகோ தயாநிதி - மேலுகோ தாசரதி...” என்று சௌராஷ்டிர ராகத்தில் பாடியபடியே ராமபிரானையும் சீதா தேவியையும் துயில் எழுப்பினார் சுவாமிகள். குழந்தையை எழுப்பி கண்களைத் துடைக்கும் தாயின் வாஞ்சை அவருடைய கண்களில் தெரிந்தது. ‘பொலபொல’ என்று விடியும் வேளையில் விக்கிரகங்களைத் தேய்த்து நீராட்டி அலங்காரம் செய்து பீடத்தில் அமர்த்தினார். எதிரே அமர்ந்து கொண்டு, கமலாம்பாள் கொண்டு வந்த பழத்தையும் பாலையும் நைவேத்தியம் செய்யத் தொடங்கினார். கனிரசமும், பாலும், தேனும், கற்கண்டும் கொடுத்து குழந்தையை மகிழ்விப்பது போல மனம் நெகிழ்ந்து பாடி நைவைத்தியம் செய்தார். பின் கண்களை மூடிக் கொண்டு ‘நீ பஜன கான...” என்று பாடத் தொடங்கினார். “இராமபிரானே! உன்னுடைய பெயரைச் சொல்லுவது உனது குணங்களையும் புகழ்வது பாடுவது. இந்த இரண்டும் சேர்ந்து கிடைக்கும் இனிய அனுபவம் இருக்கிறதே...? இது வேறு எதில் கிடைக்கும் ராமா? வாதங்களிலும் யோக சித்திகளிலும் உன்னைப் பற்றிய உண்மையைத் தேடுபவர்களுக்கு இது புரியவில்லையா? உனது அழகு மிகுந்த முக தரிசனத்தில் சகல தத்துவங்களையும் அறிந்து கொண்டுவிடலாமே?” என்று மனம் உருகிப் பாடினார். தெருவில் ‘கடகட’வென்று மாட்டுவண்டி ஓடிற்று. உப்பு விற்கும் கிராமத்துப் பெண்டிரின் கூவல் அலை மோதிற்று. ஆனால் எந்தச் சத்தத்திலும், எந்த ஒலி வெள்ளத்திலும் தனது நாத உபாசனையின் பார்வையிலிருந்து அவர் சுழலவில்லை. பாடி முடித்து கண்களை மூடி அமர்ந்திருந்தார். சீதையின் கருணை ததும்பும் நயனமும் அபயகரமும் அவர் நெஞ்சில் அமுதமழை பெய்து கொண்டிருந்தன. இமையிலிருந்து பூத்த நீர் கன்னத்தில் கசிந்தது. இதோ சீடர்கள் வந்து விடுவார்கள். அவர்களிடம் இந்தப் பாடலைப் பாடவேண்டும். நேற்று அவர்கள் ஓலைச் சுவடிகளில் குறித்துக் கொண்டார்கள். காவேரிப் படித்துறையில் அமர்ந்து கொண்டு பாடிப் பார்த்துப் பரிமாறிக் கொண்டிருப்பார்கள். வெங்கட்ரமணன் வந்து அவர் முன்னிலையில் அமர்ந்து அதை மீண்டும் பாடிக் காட்டுவான். இன்று அவர்களை உட்கார வைத்துப் பாட வேண்டும். அவர் பாட அவர்கள் மீண்டும் பாடுவார்கள். ராமச்சந்திரமூர்த்திக்கு ஒவ்வொரு மாலையாகப் போடுவதைப் போல அது அழகாக இருக்கும்... மானம்புச்சாவடி வெங்கடசுப்பன், தில்லைஸ்தானம் ராமன், நெய்க்காரப்பட்டி சுப்பு, உமையாள்புரம் கிருஷ்ணன், நங்கவரம் நீலகண்டன், திருவொற்றியூர் கணேசன்... ஒவ்வொருவராக இடுப்பின் மேல் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு உள்ளே வந்து அவரை வணங்கினார்கள். பூஜா பிரசாதமாகச் சந்தனமும் குங்குமமும் எடுத்து இட்டுக் கொண்டார்கள். அன்று மங்களகரமான தினம். சுவாமிகள் உஞ்சவிருத்தியில் காவேரியைப் பற்றி பாடப் போகிறார். ‘கணீர்’ என்ற குரலில் அவர் பாடச் சீடர்கள் பின் தொடர்ந்து பாடியபடியே செல்லப் போகிறார்கள். இறைவனே பரம ரசிக சிகாமணியாக அதைப் பின் தொடர்ந்து வந்து கேட்பான். அனுமன் பக்தி பரவசமாகிக் கண்ணீர் சொரிந்த வண்ணம் அடியொற்றிப் பின் வருவான். சுவாமிகள் தெருவில் இறங்கி விட்டார். தம்பூரை எடுத்துக் குழந்தையைக் கொஞ்சுவதைப் போல மார்போடு அணைத்துக் கொண்டார். தாள ஒலி கூட நடந்து வந்தது. தெருவாசலில் அரிசியைச் செம்பில் போட வந்த சுமங்கலிகள் கைகூப்பி நின்றனர். காவேரியின் அழகை, பெருமையை, நடையை, நிறைவைப் புகழ்ந்து புளகாங்கிதம் அடைந்து பாடினார் சுவாமிகள். ‘ளார்வெடலின’ என்ற அசாவேரி கீர்த்தனை நயமாக இழைந்தது. “நல்லவர், தீயவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் வாரி வழங்கியபடி பவனிவரும் காவேரியின் அழகைப் பாருங்கள்! ஒருபுறம் வேகத்துடனும் மற்றொருபுறம் பெருகி வரும் பேரொலியுடனும், எப்போதும் அலைபாய்ந்து வரும் குமரி காவேரி, குயில்கள் இசைபாட பசுமை தோரணம் கட்ட, அரங்கநாதனுக்கு மாலையாக அமைந்து, எங்கும் வளம் தந்து வருகிறாள். அவள் இங்கே பஞ்ச நதீசுவரரையும் தரிசிக்க வருகிறாள். இரு கரைகளிலும் நின்று மறையவர் குழாம் இந்த தேவியை ‘ராஜராஜேசுவரி’ என்று போற்றி மலர் தூவி பூஜிக்கிறது பாருங்கள்! தியாகராஜனால் வணங்கப்படும் இந்தக் காவேரித் தாயைப் பாருங்கள்!” இசையின் இனிமையும், சொல் நயமும், பொருளின் செறிவும் கலந்து இழைந்தன, பாடும் போது! ‘நாமும் எளிதில் பாடிவிடலாம்’ என்று யாரும் எண்ணி ஏங்கக்கூடிய எளிமை. உருகி நெஞ்சு கரையப் பாடும் போது பக்தியில் பரவசமாகி ஒன்றிவிடும் உள்ளம். இதுவன்றோ நாதோபாசனை? அலைகள் தவழ்ந்து தவழ்ந்து சிலிர்க்க, காவேரி கூடவே மென்நடை நடந்து வருவது போல உணரும் இதுவல்லவோ கவிஞரின் கருணை? செம்பில் அரிசி நிறைய நிறைய, பஞ்ச நதீசுவரர் ஆலயத்தை நான்கு வீதிகளிலும் வலம் வந்து வீடு திரும்பினார், தியாகராஜ சுவாமிகள். வீட்டு வாசலில் கூட்டம் கூடி இருந்தது. குதிரைகள் நின்றன. அலங்கார முகபடாம்கள் ஒளிர்ந்தன. கட்டுடலும் முண்டாசுத் தலையுமாகச் சிப்பாய்கள் நின்றனர். சுவாமிகளுக்கு எதுவும் புரியவில்லை. தமையனார் ஜபேசன் ஓடி வந்தார். “தியாகராஜ வா உள்ளே வந்து பார்! உனக்காக காத்துக் கொண்டிருக்கும் ராஜ மரியாதைகளைப் பார்! உன்னை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் ராஜப் பிரதிநிதிகளைப் பார். நீ தினந்தோறும் பூஜித்த ராமபிரான் உன்னைக் கைவிடவில்லை. உன் வீடு தேடி ஐஸ்வரிய லட்சுமி வந்திருக்கிறாள்!” என்று அவருடைய கையைப் பற்றி இழுத்தார். சுவாமிகளின் நெற்றி சுருங்கிற்று. கால்கள் பூமியில் தோய்ந்து நின்று மேலே நடக்க மறுத்தன. வாசலுக்கு மெல்ல வந்து நின்றதும், கமலாம்பாள் செம்பில் நீர் கொண்டு வந்து பாதங்களைக் கழுவினாள். ‘சீதாபதி! இது என்ன சோதனை? என்னுடைய மனம் உறுதியாக இருக்கிறதா என்று தட்டிப் பார்க்கிறாயா? நான் பயப்படமாட்டேன். ரகுகுல திருமகனான நீ துணை இருக்கும்போது எனக்கு என்ன பயம்?’ என்று எண்ணியவாறு வீட்டினுள் அடியெடுத்து வைத்தார் சுவாமிகள். புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|