![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
38. அனந்தனுக்கே அன்பு அடிமை...
“வெள்ளி விளிசங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக்காட்டான் உள்ளம் புகுந்து எனை நைவித்து நாளும் உயிர்பெய்து கூத்தாட்டு காணும்; கள்அவிழ் செண்பகப் புதுமலர் கோதிக் கனிந்து இசை பாடும் குயிலே! மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது, என் வேங்கடவன் வரக் கூவாய்!” - ஆண்டாள் பாசுரம் மெல்லக் கண் விழித்துப் பார்த்தாள் புவனமோகினி. மயக்கம் முழுவதுமாகத் தெளியாத நிலையில் அருகில் இருந்த பெரியவரிடம், “சுவாமி! தாங்கள் யார்? எதற்காக மூலிகையைக் காட்டி என்னை மயக்கம் தெளியச் செய்கிறீர்கள்?” என்று மயங்கிய குரலில் கேட்டாள் அவள். “புவனா! உன்னாலும் கூட என்னை அடையாளம் தெரிந்து கொள்ள முடியவில்லையா? என் குரலைக் கேட்ட பின்பாவது உன்னால் நான் யார் என்று ஊகிக்க முடிகிறதா?” என்று கேட்டார் அந்தப் பெரியவர். புவனமோகினி மெய்சிலிர்க்க எழுந்து அமர்ந்து கொண்டாள். “சுவாமி! தாங்களா? எனக்கு இங்கே மருத்துவம் செய்ய தாங்கள் வரக் காரணம் என்ன? நான் எங்கே இருக்கிறேன்? நாடக மண்டபத்தில் தீ விபத்து நடந்த பின் என்ன ஆயிற்று?” என்று கேட்டாள் புவனா. “ஆம் மகளே! மன்னர் சரபோஜிதான் இப்போது உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு இரண்டு கடமைகள் இருந்தன. ஒன்று நாட்டைக் காப்பாற்றுவது, இரண்டாவது உன்னைக் காப்பாற்றுவது. இரண்டையும் அவர் தஞ்சை பெருவுடையார் அருளால் நிறைவேற்றி விட்டார்! எந்த உயிருக்கும் ஆபத்தில்லை. கொட்டகை எரிந்து சாம்பலானதுதான் மிச்சம்!” என்றார் அவர். “மன்னர் பெருமானே! தாங்களா என்னைக் காப்பாற்றினீர்கள்? ஏன் இங்கு கொண்டு வந்தீர்கள்? தாங்கள் ஏன் உடன் வந்தீர்கள்? தயவு செய்து கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுவீர்களா?” என்று மனம் கனிய, குரல் குழையக் கேட்டாள் புவனா. “என்னை மன்னித்து விடு! வேறு வழி இன்றி நான் தான் இப்படி ஒரு காரியத்தைத் திட்டமிட்டுச் செய்தேன். நாடக மண்டபம் பற்றி எரிந்ததும், இந்த நாடகத்தின் ஒரு பின்னணி தான். இந்நேரம் சுப்பராய ஓதுவாரும் திலகவதியாரும் எரிந்த உனது உடைகளையும், வெந்த அணி ஆபரணங்களையும் வைத்துக் கொண்டு, நீ இறந்து விட்டாய் என்று முடிவு செய்தவர்களாகப் புலம்பிக் கொண்டிருப்பார்கள். இளவரசன் சிவாஜியும் அவ்வாறே எண்ணி உன் இல்லத்தில் அமர்ந்து கண்ணீர் சொரிந்து கொண்டிருப்பான். இப்படி ஒரு நம்பிக்கையை உண்டாக்கவே, நான் தீ விபத்து நடக்கத் திட்டம் போட்டேன். உன்னைப் பத்திரமாக இங்கே கொண்டு வந்து விட்டேன்!” புவனா தனது இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டாள். மனம் நொந்து அழுவது தோள்கள் குலுங்குவதிலிருந்து தெரிந்தது. பதறும் உள்ளத்தைக் காட்டுவதே போல கைவளையல்கள் குலுங்கின. உடல் நடுங்கித் துடித்தது. “குழந்தாய்! நான் உனது உள்ளத்தைப் புண்படுத்தி விட்டேன். என்னை மன்னித்துவிடு! இதை நான் என்னுடைய சுயலாபத்துக்காகச் செய்யவில்லை. தஞ்சைத் தரணியின் எதிர்காலத்தைக் காப்பாற்றவே செய்தேன். இங்கே பார்.” புவனா நிமிர்ந்து பார்த்தாள். “அதற்கு நான் குறுக்கே நின்றேனா அரசே?” என்று கேட்டாள். “இல்லை புவனா! ஆனால் சிவாஜியின் பிடிவாதம் குறுக்கே நின்றது. அவன் உன்னை மறக்கவோ, கைவிடவோ ஒப்புக் கொள்ளவில்லை. நீ உயிருடன் இருந்தால் உன்னுடன் அவன் எங்கேயும் வரத் தயாராக இருந்திருப்பான். நீ உயிருடன் இல்லை என்று நம்ப வைத்தால் மட்டுமே இந்த முடிவிலிருந்து அவனை மாற்ற முடியும். இப்போது நீ அவனைப் பொறுத்தவரை - தஞ்சை வாழ் மக்களைப் பொறுத்தவரை - தீ விபத்தில் இறந்து விட்டாய். இந்த சோகமே அவனை உருக்கி எடுக்கும். அவனுடைய மனம் தெளிவடைய சில மாதங்கள் ஆகலாம். அதன் பின் அவன் மனம் தேறுவான். ஒரு அரசகுமாரியை மணம் செய்து கொள்வான். எனக்குப் பின் அரசனாகப் பட்டமேறுவான். பட்டமேறுவது மட்டும் முக்கியம் அல்ல. எனது வாரிசாக இருந்து என்னுடைய கலைப் பொக்கிஷங்களைக் காப்பாற்றுவான்! அதுதான் முக்கியம். அந்தக் கலைகளைக் காப்பாற்றவே நான் இப்படிச் செய்ய வேண்டியதாயிற்று...” “தங்கள் அரசைக் காப்பாற்றி விட்டீர்கள். இளவரசரின் எதிர்காலத்தைக் காப்பாற்றி விட்டீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தாங்கள் போற்றி வளர்த்து உருவாக்கிய கலைச் செல்வங்களையும் காப்பாற்றி விட்டீர்கள். நான் ஒன்று தெரிந்து கொள்ளலாமா சுவாமி? என்னுடைய எதிர்காலம் என்ன?” என்று கைகளைப் பிசைந்தவாறு கேட்டாள் புவனமோகினி. மன்னர் சரபோஜி தலையைக் குனிந்து கொண்டார். “நிச்சயமாக அது நல்லபடியாக அமையும் புவனா! உனக்குப் பரதநாட்டியப் பயிற்சி கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினேன். உன்னைப் பத்திரமாகத் திருப்பி அனுப்பி வைப்பதாகக் கூறினேன். இரண்டுமே நான் உனது தாயாருக்கு அளித்த வாக்குறுதிகள். அவற்றைக் காப்பாற்றி விட்டேன்! எனது மெய்க்காப்பாளர் துணையுடன் நான்கு ஆயுதம் தாங்கிய குதிரை வீரர்களின் காவலுடன், கோச்சுவண்டி தயாராக வெளியே நிற்கிறது. உன்னை அவர்கள் பத்திரமாகக் கொண்டு போய் உனது தாயாரிடம் விட்டுவிட்டுத் திரும்புவார்கள்!” சொல்லும் போதே அவருடைய குரல் கனிந்து இளகிற்று. அந்த இளம் பெண்ணின் மனத்தை வேதனைப்படுத்தி விட்டோமே என்று மனம் தவிப்பது புரிந்தது. “ஒரு பெண்ணின் வாழ்க்கை அவ்வளவு தானா அரசே? அவளுக்கென்று ஒரு மனம் இல்லையா? முறைப்படி மணம் செய்து கொண்டு வாழ வேண்டுமென்று ஆசை இருக்காதா? அது தாங்கள் அறியாததா?” “எனக்குத் தெரியும் மகளே! ஆனால் எனக்கு வேறு வழி புலப்படவில்லை. உன்னை மட்டும் தான் என்னால் காப்பாற்ற முடிந்தது. என்னுடைய மகன் பால் நீ கொண்ட காதலைக் காப்பாற்ற முடியவில்லை. ஏனென்றால் அதற்கு நான் முயன்றிருந்தால், என்னுடைய கலைச்செல்வங்களைத் துறக்க நேரிட்டிருக்கும். அதைச் செய்ய எனக்கு உரிமை இல்லை புவனா!” “தங்களை ஒருக்காலும் அந்தச் சங்கடத்துக்கு நான் ஆளாக்க மாட்டேன் அரசே! எப்போதோ நானும் இந்த முடிவுக்கு வந்துவிட்டேன். என்னைப் போன்ற ஒரு பெண் இந்த முடிவுக்கு மட்டும் தான் வரமுடியும் என்பதை நான் உணர்ந்து கொண்டுவிட்டேன்...” என்று சொல்லும் போதே அவளுக்குக் கண்களில் நீர் ததும்பிற்று. பேச முடியாமல் தொண்டையை அடைத்துக் கொண்டது. “புவனா! கலைமகளின் செல்வப்புதல்வி நீ! நீ என்னுடைய மரியாதைக்கும், மதிப்புக்கும் ஆளானவள். உன்னை வருந்தச் செய்வது என்னுடைய நோக்கம் இல்லை. முடிமன்னன் என்ற நிலையையும் மறந்து, நான் வணங்கும் கலைத்தாய் சரசுவதி தேவியின் பெயரால் உன்னிடம் தானம் கேட்கிறேன்! என் மகனை நாட்டுக்குத் திருப்பிக் கொடு. அவனை நீ காதலிப்பது உண்மையானால் மெய்யாகவே அவன் நாட்டுக்குப் பயன்படக் கூடியவனாக, நல்ல அரசனாக வாழவேண்டுமென்று விரும்பினால் இந்தத் தியாகத்தை நீ செய்துதான் ஆகவேண்டும் புவனா! செய்வாயா? அப்படி எனக்கு ஒரு உறுதிமொழி கொடுப்பாயா?” என்று கெஞ்சும் குரலில் கேட்டார் மன்னர். “என்னைத் தான் பிரித்து அழைத்து வந்து விட்டீர்களே அரசே! இனி நான் செய்வதற்கு என்ன மிச்சம் இருக்கிறது?” “இருக்கிறது. இன்னும் ஓராண்டு காலத்துக்குள் சிவாஜியின் திருமணம் முடிந்துவிடும். எதிர்காலத்தில் பட்டத்து ராணியாக இடம்பெற அந்தப் பெண்மணி வந்து விடுவாள். அதுவரை நீ உயிருடன் இருப்பது சிவாஜிக்குத் தெரியக் கூடாது. நீயோ, உன் தாயோ இதை வெளிப்படுத்தக் கூடாது. தஞ்சையில் இந்த இரகசியம் காப்பாற்றப்படும் பொறுப்பை நான் பார்த்துக் கொள்கிறேன். உன் பங்கிற்கு நீ இருக்கும் இடம் தெரியாமல் மறைவாக வாழ்ந்தே ஆக வேண்டும். உன்னை உருவாக்கிய தஞ்சை மண்ணுக்காக இதை நீ காணிக்கையாகத் தரவேண்டும். உன்னிடம் இதைத்தான் நான் தானமாகக் கேட்கிறேன் மகளே!” புவனமோகினி தன்னை மறந்து வாய்விட்டு அழுதாள். இன்னும் யௌவனத்தின் வாசலையே எட்டாத அந்தப் பெண்ணின் பிஞ்சு உள்ளம் அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மன்னரின் கால்களில் விழுந்து புலம்பினாள். மன்னர் அவளை வாரி எடுத்து உட்கார வைத்தார். வெடித்து வந்த விசும்பல்களுக்கிடையே புவனா கூறினாள்: “மனத்தளவில் அவரை முதன் முதலில் மணம் செய்து கொண்டவள் நான் தான். அதை யாருமே மாற்றி விட முடியாது! எந்த அரசகுலப் பெண் இளவரசரை மணந்து கொண்டாலும் அவரால் என்னை - என்னுடைய காதலை - மறக்க முடியாது! என் மனமும் என்றென்றும் அவரையே கணவராக நினைத்துக் கொண்டிருக்கும். அதையும் யாரும் தடுத்து விட முடியாது!” “மனத்தைத் தேற்றிக் கொள் புவனா!” “மனம் தேறத்தான் போகிறேன் சுவாமி! என் உடலிலும் அரச இரத்தம் தான் ஓடுகிறது. அதை நான் அறிவேன். மனோதிடம் இருக்கிறது. ஆனால் ராணியாக எனக்கு இந்த சமூகத்தின் பார்வையில் அருகதை இல்லை. அதற்குக் காரணம் என் தாய் வாழ்ந்த விதம் தான்! ஆனால் நான் அப்படி வாழவும் வேண்டாம். எனக்குப் பிறக்கும் குழந்தைக்குப் பின் இந்த அவல நிலை வரவும் வேண்டாம். கன்னியாகவே வாழ்ந்து என்னுடைய காலத்தைக் கழித்து விடுவேன்! அது எவ்வளவோ கண்ணியமானது...” “உன்னுடைய இந்த இளமையும் அழகும் கலைத் திறமையும் வீணாகப் போகும்படியா விடப் போகிறாய் மகளே?” “அது வீணாகாது சுவாமி! அனந்தபுரத்தில் பத்மநாபருக்கு நான் அடியவளாக வாழ்வேன். என்னுடைய கலையை அவருக்கே அர்ப்பணம் செய்வேன்! அங்கே நாராயணனுக்குத் தொண்டு செய்து வாழும் கலைச் செல்வியைக் காண விரும்பினால் தஞ்சை இளவரசர் அங்கே வரட்டும். என்னுடைய இதய வாசல் இனித் திறக்காது. ஆனால் ஆலயவாசல் என்றும் திறந்திருக்கும்! நான் புறப்படுகிறேன் அரசே! எனக்கு விடை கொடுங்கள்!” என்று உறுதியான குரலில் கூறினாள் புவனா. எழுந்து நிமிர்ந்து நின்று புவனமோகினி கண்களைத் துடைத்துக் கொண்டாள். சரபோஜி மன்னரின் காலில் விழுந்து வணங்கினாள். அவளுக்கு ஆசி கூறக் குனிந்த மன்னரின் கண்களிலிருந்து ஏரி நீராக கண்ணீர்த் துளிகள் அவள் மீது விழுந்தன. மெய் சோர, மனம் தளர, அவளுடன் வந்து அவளை வண்டியில் ஏற்றி வைத்து அனுப்பினார் சரபோஜி. கோச்சு வண்டி தஞ்சைத் தரணியின் எல்லையைக் கடந்து விரைவாக ஓடத் தொடங்கிற்று. குதிரை வீரர்கள் முன்னும் பின்னுமாகக் காவலுக்கு உடன் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடைய வடிவம் புழுதியில் மறைந்து போவதைப் பார்த்த வண்ணம், கைகளை உயர்த்தி, அந்தக் கலைச்செல்வியை மனமார வாழ்த்தினார் மன்னர் சரபோஜி. புவனமோகினி திரும்பி வந்து இரண்டு நாட்களாயிற்று. சித்திரசேனாவிடம் அவள் அதிகம் பேசவே இல்லை. உணவருந்தும் வேளையில் தனக்குப் பிடித்ததாக எதையும் கேட்டு வாங்கிக் கொள்ளவே இல்லை. அவளை உட்கார வைத்து, பெருந்தோகையாகப் படர்ந்திருந்த கூந்தலை ஆசையாகப் பின்னிய போதும் அருமை மகள் புவனா பேசவே இல்லை. நீரை ஏந்திச் செல்லும் கார்மேகம் போல அவளுடைய முகத்தில் ஏதோ ஒரு யோசனை படர்ந்த வண்ணம் இருந்தது. “புவனா! இன்று மாலை நாம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலுக்குப் போகிறோம். அங்கே ஒரு நல்ல நாளில் நீ கற்று வந்த நாட்டியத்தை ஆடிக்காட்டப் போகிறாய். உன்னுடைய கலையைப் பெருமாளுக்கு அர்ப்பணிக்கப் போகிறாய். இது நான் உனக்காக சுவாமியிடம் வேண்டிக் கொண்டது மகளே!” என்று கனிவுடன் சொன்னாள், சித்திரசேனா. அதற்குரிய பதிலை அவளுடைய பார்வை மகளின் முகத்தில் தேடிற்று. குனிந்த தலை சிறிதும் நிமிராமல், “மன்னருக்கு இதெல்லாம் தெரியுமா அம்மா?” என்று கேட்டாள் புவனா. “எல்லாம் தெரியும் புவனா! இன்று மாலை அவரையே இங்கு வரும்படி அழைத்திருக்கிறேன்...” என்றாள் சித்ரா புன்னகை ததும்ப - சிறிது நாணத்துடன்... “எதற்காக? மகளைப் பார்க்கவா அம்மா?” என்று கேட்டாள் புவனா தலை நிமிர்ந்து! மகளின் இந்தக் கேள்வி அவளை உலுக்கி எடுத்தது. சித்ராவின் புன்னகை அப்படியே உயிரற்று உறைந்து போயிற்று. சிட்டுக்குருவியின் சிறகைப் போல் அடித்துக் கொள்ளும் இதயத்தின் படபடப்பை அடக்கக் கைகள் மார்பின் மேல் இறுகப் பதிந்தன. கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. இதழ்கள் துடித்தன. “உனக்குத் தெரியுமா புவனா? உனக்கு நான் சொல்லத் தயங்கினேன் மகளே!” என்றாள் கலங்கிய குரலில். “உண்மைதான் அம்மா தயங்கித் தயங்கியே உன் அழகை, உன் இளமையை, உன் சுகத்தை, எல்லாவற்றையுமே பொசுக்கிக் கொண்டு விட்டாய். நான் அப்படி வாழ்வதாக இல்லை அம்மா! ஒரு தீர்மானத்துடன் தான் திரும்பி வந்திருக்கிறேன். உன்னைப் போலக் கலைச்செல்வியாக இருப்பேன். ஆனால் உன்னைப் போல் வாழமாட்டேன்!” “என்ன சொல்கிறாய் புவனா? விவரமாகச் சொல்லு. உன் மனத்துடிப்பு எனக்குப் புரிகிறது. ஆனால் அதன் காரணம் புரியவில்லை! எனக்கு எல்லாவற்றையுமே விளக்கமாகச் சொல். தாய் என்பதை மறந்து ஒரு தோழியிடம் சொல்லுவதைப் போலக் கூறு...” என்று கலக்கத்துடன் கேட்டாள் சித்திரசேனா. மகள் பேசத் தயங்கியதும் அவளை அணைத்து, “என்னிடமாவது மனம் விட்டுப் பேச மாட்டாயா மகளே? உனக்கு என்ன தயக்கம்?” என்று குரல் தழுதழுக்கக் கேட்டாள். புவனமோகினி விவரித்துச் சொல்ல ஆரம்பித்தாள். தஞ்சையில் கலை பயின்றதை, இளவரசரின் காதல் பிணைப்பில் விழுந்ததை, மன்னர் சரபோஜியின் முடிவை, தான் செய்ய வேண்டி வந்த தியாகத்தை, கலையின் சிறப்பு இருந்தும் கண்ணியமாக மணம் செய்து கொள்ள முடியாததை, கண்ணீருக்கிடையே சொன்னாள். வெடித்து விம்மல்களுக்கிடையே கூறிப் புலம்பினாள். தாயின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதாள். சித்திரசேனா மகளை அப்படியே வாரித் தழுவிக் கொண்டாள். அவள் கூந்தலை நீவிக் கொடுத்துத் தேற்றினாள். நெற்றியிலும், கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டு அணைத்துக் கொண்டாள். மகளின் ஆற்றாமையைத் தனது மார்பில் சுமந்த வண்ணம் பேசினாள். “உண்மைதான். என்னுடைய வாழ்க்கையை நான் மானுட சுகத்துக்கு விட்டு விட்டேன் மகளே! நீ அப்படிச் செய்ய வேண்டாம்! தெய்விகமான இந்தக் கலை தெய்வத்துக்கே அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாக இருக்கட்டும். உலகம் வாழ அறிதுயில் கொண்ட பெருமாள், உன்னுடைய காணிக்கையையும் விரும்பி ஏற்று ஆசி கூறுவார். நீ செய்த ஒப்பில்லாத தியாகம் உன்னை என்றென்றும் மக்கள் நினைத்துப் போற்றச் செய்யும். அதற்கு இந்த அன்புத் தாயின் ஆசிகள் பூரணமாக உண்டு மகளே!” என்று அவளைத் தட்டிக் கொடுத்துத் தேற்றினாள். மாலை வேளை, வானம் மனோகரமாகப் பூத்திருந்தது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இளமையில் எழில் கொஞ்சும் தனது மகளை ஆடச் சொல்லிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது சித்திரசேனாவிற்கு. தானே பாடுவதாகவும் அவள் ஆடவேண்டும் என்றும் சொல்லி, அவளை நடனமாட அழைத்து வந்தாள் அவள். மெலிதான ஒளியில், சித்திரசேனாவின் இல்லத்தை ஒட்டி இருந்த அந்த நடன மண்டபத்தில் ஆடத் தொடங்கினாள் புவனமோகினி. சித்திரசேனா சுவாதித்திருநாள் மகாராஜாவின், ‘பன்னகேந்த்ரசயன’ என்ற பாடலைப் பாட ஆரம்பித்தாள். கணீரென்ற அந்தக் குரல் ஒலிக்கு ஏற்ப புவனாவின் கால் சலங்கை ஒலி கேட்கத் தொடங்கிற்று. கண் வழியே கைகளும் பாதங்களும் ஒன்றி ஈடுபட்டன. அவளுடைய கண்களில் நீர் மறைந்து விட்டது. மனதில் ஒரு புனிதமான பயணத்தை மேற்கொள்ளும் நிறைவு குடி புகுந்தது. முகத்தில் அமைதி தவழ்ந்தது. தன் காதலை மறந்தாள். தன்னை மறந்தாள். அந்த உள்ளத்தில் இப்போதும் எந்தக் கலக்கமும் இல்லை. தன் சிந்தையையும் செயலையும் மோகினியாக வந்து அமரர்களைக் காத்த அரங்கனுக்கே அர்ப்பணித்து, ஆடிக் கொண்டே இருந்தாள் புவனமோகினி... (முற்றும்) புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|