உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
28. கணிகையாக வாழமாட்டேன்!
சந்திர பிம்பமுக மலராலே என்னைத் தானே பார்க்கிறார் ஒருகாலே அந்தநாளில் சொந்தம் போலவே உருகுகிறார் இந்தநாளில் வந்து சேவை தருகிறார் ஆரோ இவர் யாரோ - என்ன பேரோ அறியேனே! - அருணாசலக் கவிராயர் பாடல் “நான் சொல்வதை நீ வேறு யாரிடமும் சொல்லக் கூடாது. ஒப்புக் கொள்வாயா?” என்று கேட்டார் திலகவதி அம்மையார். “அது எப்படி? சரி... பரவாயில்லை! நீங்கள் சொல்லுங்கள். ஆனால், எனக்கு மனத்தில் வருத்தம் ஏற்படச் செய்வது போல இருந்தால் கொஞ்சம் அழுவேன்!” என்று கூறித் தலையைக் குனிந்து கொண்டாள் புவன மோகினி. ஏனோ அவளுடைய உள்ளம் அப்படி ஒரு செய்தியை எதிர்பார்த்தது. அதனால் கண்கள் நீர் சிந்தவும் தயாராயின. “நீ இப்போது பார்த்தாயே? அந்தப் பெண்ணை இன்று தேவதாசியாக ஆக்குவதற்குப் பொட்டுக் கட்டுகிறார்கள். கூட இருந்த அவளுடைய தாயைப் பார்த்தாய் அல்லவா? அந்தப் பெண்மணிக்கும் இந்தப் பெண்ணுக்கும் இனிமேல் எந்தவிதமான சொந்தபந்தங்களும் கிடையாது!” என்றார் திலகவதி. புவனா திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தாள். அவள் மனத்தில் ஏற்பட்ட வேதனை நெற்றியின் சுருக்கத்தில் புரிந்தது. “ஏன் அம்மா அப்படி?” என்று கேட்டாள். “இன்று முதல் அவள் கடவுளுக்கும், தேவர்களுக்கும் உரிய சொத்தாக, அடிமையாக ஆகிவிட்டாள். இப்படித் தேவர்களுக்கு அடிமையாக - தாசியாக - இருக்கும் பெண்ணுக்குத் தேவதாசி என்று பெயர். கோவில் காரியங்களுக்கு அவள் பயன்படுவாள். நடன வழிபாடு செய்வாள். உற்சவ காலங்களில் சதிர் ஆடுவாள். சில சமயம் தீபாராதனையின் போது இறைவன் முன் சுத்தநிருத்தியம் ஆடுவது கூட உண்டு. வீதி உலாவுக்கு இறைவன் செல்லும் போது பக்கத்தில் நின்று கவரி வீசுவாள்...” “கழுத்தில் ஏதோ கட்டினார்களே அம்மா?” “கழுத்தில் மணமானதற்கு அடையாளமாகப் பெண்கள் தாலிகட்டிக் கொள்வார்கள். இந்தப் பெண்கள் கழுத்திலே திருமாங்கல்யமாக லிங்கம் பொறித்த தங்கத் தட்டை அணிவதுண்டு. அதேபோலக் கழுத்தில் தங்கப் பொட்டு அல்லது வெள்ளிப் பொட்டை தாலியாக அணிவார்கள். இதைத்தான் பொட்டுக் கட்டுவது என்று சொல்லுவது. வெள்ளி அல்லது வெண்கலத்தால் ஆன காற்கச்சையையும் கட்டிக் கொள்வார்கள். இவர்களைப் பொதுவாக, உருத்திரகணிகையர் என்று சொல்லுவார்கள்.” “இந்தப் பெண் அப்படிப்பட்டவள்தானா அம்மா?” “அப்படி இருக்க வேண்டுமென்று தான் வேண்டிக் கொள்கிறேன்! தேவதாசி என்று ஆலயப்பணிக்கு மட்டுமே என இருந்துவிடும் உருத்திர கணிகையருக்கு மிகுந்த மதிப்பு உண்டு. சுவாமி வீதிஉலா வரும்போது குடதீபம் எடுத்துக் காட்டுவார்கள். விடியற்காலை நாலு மணிக்கே எழுந்திருந்து, நீராடிக் கழுத்தில் உருத்திராட்சமும் நெற்றியில் திருநீறும் தரித்து, அந்தணப் பெண்மணியைப் போலச் சீலை உடுத்தி ஆலயத்துக்கு வருவார்கள். மகாமண்டபக் கதவுகளை அவர்கள் தாம் திறப்பார்கள். இறைவனுக்குப் பூஜை செய்யும் போது ஆடுவார்கள். பதினாறு வகையான உபசாரங்களை இறைவனுக்கு அர்ச்சகர் செய்யும்போது, அதற்கேற்ப அபிநய முத்திரைகளைக் காட்டுவார்கள். இதற்குக் ‘கைகாட்டு முறை’ என்ற பெயரும் உண்டு. உணவு நிவேதனத்தின் போது பலிபீடத்தின் அருகே நின்று தேவாரப் பாடல்களைப் பாடுவார்கள். சில சமயம் ஆடுவதும் உண்டு” என்று கூறி நிறுத்தினார் திலகவதி. “மேலே சொல்லுங்கள் அம்மா! ‘அப்படி இருக்க வேண்டும் என்று தான் வேண்டிக் கொள்கிறேன்’ என்றீர்களே? இவர்கள் வேறு விதமாகவும் இருக்க முடியுமா?” என்று கேட்டாள் புவனா. “உனக்கு எதற்கு இதெல்லாம்? போகப் போக நீயே தெரிந்து கொள்வாய்! உன்னைப் போன்ற இளம்பெண்கள் இதையெல்லாம் பேசக்கூடாது!” என்று முகத்தைக் ‘கடுகடு’ என்று மாற்றி வைத்துக் கொண்டார் திலகவதி. “என்னை ஏமாற்றலாம் என்று பார்க்கிறீர்களா? அதுதான் முடியாது! இப்போது நீங்கள் முழு விவரத்தையும் சொல்லாவிட்டால், கீழே குதித்து இந்த இருட்டில் கண் காணாமல் ஓடி விடுவேன்! அப்புறம் நீங்கள் என்னைப் பிடிக்கவே முடியாது!” என்று பயமுறுத்தினாள் புவன மோகினி. ‘வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டோமே?’ என்று நினைப்பதைப் போல முகத்தை வைத்துக் கொண்டார் திலகவதி. சற்று யோசனை செய்துவிட்டு, “சரி, சொல்கிறேன்... நான் சொல்வதை வேறு யாரிடமும் கூறக்கூடாது! ஒப்புக் கொள்கிறாயா?” என்று கேட்டார். “ஒப்புக் கொள்கிறேன்! மேலே சொல்லுங்கள்...” என்று தூண்டினாள் புவனா. “இப்படி ஆலயத் தொண்டு செய்ய வரும் பெண்கள் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தால், ஆலயத்துக்கு வரும் அரசர்களும் அவர்களைப் பார்த்து ஆசைப்படுவதுண்டு. அப்போது அவர்கள் அந்தக் கணிகையரைத் தமது அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போய்விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ராஜதாசிகள் என்று பெயர். இவர்கள் அதற்குப் பின் கோவிலுக்கு வரமாட்டார்கள். அரண்மனையில் அந்தப்புரத்திலும் இடம் பெற மாட்டார்கள்!” “பின்னே? அவர்கள் கதிதான் என்ன?” “அவர்கள் அரசரின் ஆசைக்குரிய காமக் கிழத்தியர் ஆகி விடுவார்கள். அவ்வளவுதான்! வாழ்நாள் முழுவதும் தனியே ஒரு மாளிகையிலோ, அலங்காரமான அறையிலோ இருந்துவிட வேண்டியதுதான். அரசரை அவர்கள் மணம் செய்து கொள்ள முடியாது. அதனால் அரசவைக்கோ, பொது நிகழ்ச்சிகளுக்கோ வெளியே உடன் வரமுடியாது. ஆனால் அரசர் பிரியப்பட்டு வந்து இன்பம் பெறுவதால், அவர்களுக்கு உல்லாசமான வாழ்க்கையும் கிடைக்கும். ஏன்? அரசர் மூலம் அவர்களுக்குக் குழந்தைகளும் பிறக்கும்! ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு ஓர் இளவரசரைப் போலவோ, இளவரசியைப் போலவோ மரியாதைகள் கிடைக்காது. அந்தப் பையன் பட்டமேற முடியாது. அந்தப் பெண் ராஜகுலத்தில் மணம் செய்து கொள்ள முடியாது. ஏனென்றால், அவர்கள் ராஜதாசியின் மக்கள்; ராணியின் மக்கள் அல்ல! இதனால் அவர்கள் தாம் சம்பாதித்த பொருட்கள் அவ்வளவையும், சில சமயம் கோவிலுக்கே எழுதி வைத்துவிட்டு மறைந்து போவார்கள். சில சமயம் அந்தப் பெண்ணின் மகளும் மீண்டும் கோவிலுக்கே தேவதாசியாகத் திரும்பி வந்துவிடுவாள்... பாவம்! பரிதாபமான வாழ்க்கைதான்...!” என்று கூறி நிறுத்தினார் திலகவதி. புவனா விசிப்பதை நிறுத்தி விட்டாள். ஆனால், அவருடைய மடியில் புதைத்த தலையை எடுக்கவேயில்லை. அவளுடைய மனத்தில் வெளியிட முடியாத துயரம் நிறைந்து கனத்தது. ‘சில வேளைகளில் அவளுடைய தாயார் சித்ரசேனாவின் மாளிகைக்கு மகாராஜா சுவாதித்திருநாள் வந்து செல்லுவதை அவள் பார்த்ததுண்டு. அவளைச் சேடியரிடம் விட்டுவிட்டு, அம்மா மன்னருடன் தனியாகக் கோச்சு வண்டியில் செல்லுவாள். ஆனால் ஒரு தடவையேனும் அம்மாவும், அவளும் அரசருடன் வெளியே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் போனதில்லை; கோவிலுக்கும் சென்றதில்லை! பல தடவைகள் மகாராஜா ராணியாருடன் பவனி வரும்போதும், கொலுவிருக்கும் போதும், அம்மா அவர்களைச் சென்று அடிபணிந்து வணங்கி இருக்கிறாள். மண்டபத்தில் அவர்கள் முன் நடனம் ஆடியும் புவனாவே பார்த்திருக்கிறாள்... அம்மா ராணியாக முடியாது. ஆனால் அரசர் அம்மாவிடம் வந்து போகிறார். இருப்பினும் அந்த ஆசைக்கு அந்தஸ்தோ, மதிப்போ கிடையாது. அந்த ஆசையை அம்மா வெளியே யாரிடத்திலும் சொல்லிக் கொள்ளக்கூட முடியாது... இந்த விசித்திரமான உறவு அவளுக்குப் புரியாமலே இருந்தது. இப்போது திலகவதியார் எடுத்துச் சொல்லவும் விளங்கிவிட்டது! இதனால் தான் அம்மையார் முதலிலிருந்தே சொல்லத் தயங்கினார்களா? தன் அம்மா யார்? ஒரு தேவதாசி... ராஜதாசி இப்படித்தானோ? அப்படியானால் தான் யார்? அப்படிப்பட்ட தாசியின் மகள் தானா? அவ்வளவு தானா?’ நினைக்க நினைக்க அழுகை வெடித்து வந்தது. திலகவதியின் மடியிலே தலையை வைத்தபடி அப்படியே விசித்துக் கொண்டிருந்தாள். தஞ்சைக்குத் திரும்பி வந்த பிறகும் சாப்பிடப் பிடிக்காமல், பாலை மட்டும் அருந்திவிட்டுத் தூங்கிப் போய்விட்டாள். உறக்கத்திலும் கனவாக அந்த நினைவுகளே திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தன... மறுநாள் நடனப் பயிற்சியின் போது கூட திலகவதியார் சொன்னது நினைவுக்கு வந்தது. கலையைக் கற்றுக் கொள்ளலாம்; ஆனால் பின் கணிகையாவதற்காகக் கற்றுக் கொள்ளலாமோ? அழகு நிறைந்த பெண்மணியாக இருந்து காதலுக்கு உரியவளாக இருக்கலாம்; ஆனால் அதற்காக ஆசை நாயகியாக, காமக்கிழத்தியாக இருக்கலாமோ? அதுவும் ஒரு வாழ்க்கையா? அப்படியாவது ஓர் அரசனின் ஆசைக்குப் பலியாகி, எந்த மதிப்பும் இல்லாமல், உரிமைகள் இல்லாத குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு வாழ்வதா? பாவம் அம்மா! அவளுடைய வாழ்க்கை எப்படிப்பட்ட வாழ்க்கை? இவ்வளவு அழகும் சாமர்த்தியமும், கலைத்திறமையும் இருந்தும் கூட அவள் இருட்டிலேயே வாழ்க்கை நடத்த வேண்டியதாகி விட்டதே? இத்தனை நாட்களாக அது அவளுக்குத் தெரியவில்லையே? இதை அவளிடம் கூட அம்மா சொல்லவில்லையே? தன் மகள் திறமை மிகுந்த நடனமணியாக வேண்டும். அதுதான் அம்மாவின் ஆசை. அந்த ஆசையாவது நிறைவேறட்டும். ஆனால் தவறிப் போய்க்கூட ஏமாந்து போய், அம்மாவைப் போல அரசர்களிடம் தலையை ஆட்டிவிடக் கூடாது. அரசவைக்கு ராணி, அந்தரங்கத்துக்கு ராஜதாசி என்ற வாழ்க்கை நடத்தக் கூடாது. ஆண்டவனுக்கு அடிமையாகி உருத்திரகணிகையாக வாழலாம்; அதில் மதிப்பு உண்டு; ராஜதாசியாக வாழ்வதா? அரசனின் போகப் பொருளாக வாழ்க்கையை வீணாக்கி விடுவதா? அவள் ஒருக்காலும் அத்தகைய வாழ்க்கைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளவே மாட்டாள்... நவராத்திரி திருவிழா வந்தது. அரண்மனையில் பன்னிரண்டு பேர்களைக் கொண்டு இராமாயணப் பாராயணம் நடந்தது. தேவி லலிதாம்பிகைக்கும், பவானிக்கும் பூஜை நடந்தது. மாலை நேரங்களில் பொழுதுபோக்காக அரசவையில் பயில்வான்கள் தமது திறமையைக் காட்டிப் பரிசுகளைப் பெற்றுச் சென்றனர். அரண்மனையில் நாள்தோறும் பசுதானம் செய்யப்பட்டது. சுமங்கலிப் பெண்களுக்குப் புடவைகள் தானமாக அளிக்கப்பட்டன. சரசுவதி மஹாலிலும், ஆலயங்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இளவரசருக்கும், இளவரசிக்கும் வைரக்கல் இழைத்த பிச்சுவாவும், வைரப் பதக்கம் பூட்டிய மாலையும் பரிசாக அளிக்கப்பட்டது. விஜயதசமி தினத்தன்று காலையிலிருந்தே வீதிகள் விழாக்கோலம் பூண்டன. குதிரைகள் பவனி வந்தன. முகபடாம் தரித்த யானையின் மீது இளவரசர் நகர்வலம் வந்தார். மாலை வேளையில் பூங்காவில் ஐரோப்பிய பாண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு பிரகதீசுவரர் ஆலயத்தில் திருவாரூரிலிருந்து வந்த நடனமாதர் நாட்டியம் ஆடுவதாக இருந்தது. தொடர்ந்து சாஹஜி மகாராஜாவின் தியாகராஜர் குறவஞ்சி நாட்டிய நாடகமும் நடப்பதாக இருந்தது. அதைப் பார்க்க மாலையிலிருந்தே சுலக்ஷணா மிகுந்த ஆவலுடன் காத்திருந்தாள். ஆனால் அவள் தனியாக முன் செல்ல சார்க்கேல் அனுமதி தரவில்லை. காசியிலிருந்து சரபோஜி மன்னர்,’இளவரசரும், இளவரசியாரும் சேர்ந்து தான் வெளியே போக வேண்டும் என்றும்; காலந்தாழ்த்தாமல் திரும்பி வந்துவிட வேண்டும்’ என்றும் கடிதம் வரைந்து எழுதி அனுப்பி இருப்பதாகத் தகவல் கூறி அனுப்பி விட்டார். மாலையில் சிவாஜி ரதத்தில் ஏறி, ‘சிலங்கணச் சாவடி’ வரையில் சென்று திரும்புவதாக இருந்தது. அரசாங்க அதிகாரிகளின் மரியாதைகளை ஏற்பதாகவும் இருந்தது. ஆகையால் உடனே அரண்மனைக்குத் திரும்பவில்லை. சிவாஜி திரும்பிய பிறகு சுலக்ஷணாவுக்குச் சொல்லி அனுப்பி, பிறகு இருவருமாகக் கிளம்புவதற்குள் இரவு தொடங்கி விட்டது. பிரகதீசுவரர் ஆலயத்தில் முன்புறம் இருந்த மண்டபத்தில் சிவாஜியும், சுலக்ஷணாவும் வந்து அமர்ந்த பிறகு நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. கலெக்டர், சிரஸ்தேதார், துபாஷி, தாசில்தார், கோவில் மேலாளர், சௌகீதார், பாளையக்காரர் ஆகிய பலரும் வந்திருந்தார்கள். ஆகையால் சுலக்ஷணா இருந்த இடத்தை விட்டு அசைய முடியவில்லை. சிவாஜியுடன் வழக்கமான குறும்புடன் பேசவும் இயலவில்லை. ஆடை அணிகள் பூண்டு சிங்காரப் பதுமையைப் போல அமர்ந்திருந்தாள். சிவாஜியோ இளவரசர் என்ற முறையில் அனைவருடைய கவனத்தையும் கவரும்படி சிறப்பு ஆசனத்தில் அமர்ந்திருந்தான். முதலில் நடனமாடிய செங்கமலம், காவேரி இருவரும் பதங்களை அபிநயிக்கும்போது இளவரசரைப் பார்த்தபடியே ஆடினார்கள். ஆகையால் சிவாஜியின் பார்வை திரும்பவே முடியவில்லை. குறவஞ்சி நாட்டிய நாடகத்தின் போது அவையில் கலகலப்பு மேலோங்கிற்று. அவையோரிடம் சிரிப்பதும் மெச்சிப் பாராட்டுவதும் நிறைந்தன. அதனால் எல்லோருமே உற்சாகத்துடன் இருந்தார்கள். வந்திருந்தவர்களிடையே சிவாஜி யாரையோ தேடுவதைப் போலச் சுற்றுமுற்றும் பார்த்தவண்ணம் இருந்தான். அவனுடைய கண்ணுக்கு அந்த உருவம் தட்டுப்படாமையினால், சிறிது ஏமாற்றமும் அடைந்தது தெரிந்தது. அப்போது தீபமாடத்தின் அருகே ஒரு பெண் படியில் ஏறி நாட்டிய நாடகத்தைப் பார்க்க முயலுவது அவன் பார்வையில் விழுந்தது. அந்தத் திசையில் திரும்பியவன் அந்தப் பெண் புவனமோகினியே என்பதை உணர்ந்தான். அவனுடைய இதழ்க்கடையில் புன்னகை அரும்பியது. தன்னை மறந்து கையில் இருந்த மணிக்கோலை லேசாக உயர்த்தி ஜாடையும் காட்டினான். அவனைப் புவனமோகினி பார்ப்பதும் புரிந்தது. மனத்தில் மகிழ்ச்சி துள்ளிற்று. ஆனால் அவள் அவனுடைய புன்னகையையோ, ஜாடையையோ கவனித்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. அவன் பார்வையிலிருந்து விலகிப் போக விரும்புவதே போல, விரைவாகப் படியிலிருந்து இறங்கி, அந்தக் கூட்டத்திலிருந்து நழுவிச் செல்லத் தொடங்கினாள் புவனா! சிவாஜி இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான்! புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|