![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
34. அளவிலாத ஆசைத் துடிப்பு
“பிரிங்குக் கொடியில் உன் உடலையும், தாமரை மொட்டில் உனது அங்கங்களையும், ஒடுங்கிய மான் விழியில் உனது பார்வையையும், குளிர்ந்த நிலவில் உன் முகத்தையும், மயில்தோகையில் உன் கூந்தலையும், நதிகளின் சிற்றலைகளில் உனது புருவத்தின் விசித்திரப் போக்கையும் தான் பார்க்கிறேன். ஆயினும் என் மனதுக்கு இனிய பேரழகியே! இவை எதிலுமே மொத்தமாக உனக்குரிய ஓர் உவமையை என்னால் காண முடியவில்லை.” - கவி காளிதாஸனின் ‘மேக தூதம்’ மறுநாளே சரபோஜி மன்னரின் இராமேசுவர யாத்திரை தொடங்கப்பட்டு விட்டது. ‘தங்களுடன் முக்தாம்பாள் சத்திரம் வரையில் சார்க்கேலுடன் இளவரசரும் வந்துவிட்டுத் திரும்ப வேண்டும்’ என்று மன்னர் கூறி இருந்தார். அதன்படி அவர்கள் குதிரையிலேயே ஏறிச்சென்று வழி அனுப்பி வைத்தார்கள். ‘சரியாக ஒரு மாதத்துக்குப் பின் நான் திரும்பி விடுவேன். கோடைக்காலம் என்பதால் ஆங்காங்கே இறங்கித் தண்ணீர் வசதிகளைக் கவனித்துக் கொண்டு செல்லவேண்டி இருக்கும். ஆகையால் ஹர்காராவை முன்னால் அனுப்பி வையுங்கள்’ என்றும் அவர் சொல்லி இருந்தார். முக்தாம்பாள் சத்திரத்தில் விடைபெற்றுக் கொண்ட போது அகல்யாவின் கண்களில் நீர் நிறைந்தது. மகனை அழைத்து, “சுலக்ஷணாவைப் பார்த்துக் கொள். நீயும்...” என்று சொல்ல வந்தவள் மேலே பேச முடியாமல் சிவாஜியை ஆசீர்வதித்து அணைத்தபடி நின்றுவிட்டாள். தாயின் தயக்கம் என்ன என்பது சிவாஜிக்குப் புரியாமல் இல்லை... “மீண்டும் உங்களை இதே முக்தாம்பாள் சத்திரத்தில் தான் சந்திப்போம். நாங்கள் இரவு தங்குவதற்கும் அனைவருக்கும் சாப்பாட்டிற்குத் தேவையான வசதிகளை இப்போதே ஏற்பாடு செய்துவிட்டுச் செல்லுங்கள். திரும்ப நான் தஞ்சையில் பிரவேசிக்கும் போது நகர அலங்காரத்துக்கும், கோவில் பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்துவிடுங்கள்” என்று கூறிவிட்டு மன்னர் விடைபெற்றுக் கொண்டார். சார்க்கோல் ராமோஜிராவ் சிவாஜியை முக்தாம்பாள் சத்திரத்தைச் சுற்றிக் காட்ட அழைத்துக் கொண்டு போனார். “மிக நல்லமுறையில் நடத்தப்படும் அன்னசத்திரம் இது. இதிலேயே கல்வி நிலையமும் இணைக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் விரிவாகப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது மன்னரின் ஆசை!” என்று கூறி விளக்கத் தொடங்கினார் சார்க்கேல்... “இங்கே மூன்று வேளையும் இலவசமாக உணவு அளிக்கப்படுகிறது. ஏழைகள் என்றோ, பிற மதத்தினர் என்றோ பாராமல் அனைவரும் இங்கே சமமாக அமர்ந்து உணவருந்துகிறார்கள். இதை ஒட்டி ஐந்து கல்வி நிலையங்கள் உள்ளன. இவற்றில் சுமார் அறுநூறு மாணவர்கள் இலவசமாகப் படிக்கிறார்கள். தமிழ், ஆங்கிலம் இரண்டும் கற்றுத் தரப்படுகிறது. சம்ஸ்கிருத மொழியையும், படிக்க வசதி உண்டு” என்று அன்னதான மையத்தையும் கல்வி நிலையங்களையும் அழைத்துக் கொண்டு போய்க் காண்பித்தார் சார்க்கேல். திருநெல்வேலியிலிருந்து வந்து ஆங்கிலம் படிக்கும் சொக்கலிங்கம் என்ற மாணவன் இளவரசரிடம் ஆங்கிலத்தில் பேசினான். படித்து முடித்த பின் துபாஷியாக (இருமொழிகளில் மொழி-பெயர்ப்பவர்) வேலை பார்க்க விரும்புவதாகவும் சொன்னான். கல்வி நிலையத்தில் பாடம் கற்கும் போது கிடைக்காத நூல்களை தஞ்சைக்குச் சென்று சரஸ்வதி மகால் நூல் நிலையத்திலிருந்து கொண்டு வந்து படிப்பதாகச் சொன்னான். “எல்லா விதத்திலும் இவ்வளவு நன்றாக நடத்தப்படுகிறதே? இந்த சத்திரம் முக்தாம்பாள் என்ற அம்மையாரின் பேரில் நிறுவப்பட்டிருப்பது ஏன்? அவர் யார்?” என்று கேட்டான் சிவாஜி. சார்க்கேல் ஒரு கணம் தயங்கினார். பிறகு, “இதையும் நீங்கள் கேட்டால் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்பது மன்னரின் உத்தரவு. ஆகையால் நான் அதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று சத்திரத்தில் இருந்த பிரார்த்தனை மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு அழகிய பெண்மணியின் படம் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அந்தப் பெண்மணியின் முகத்தில் உறைந்த அமைதியும் கண்களில் தேங்கிய கருணையும் சிவாஜியைக் கவர்ந்தன. “இவர்தான் முக்தாம்பாள்!” என்று அறிமுகம் செய்வதைப் போலக் கூறினார் சார்க்கேல். “யார் இந்தப் பெண்மணி? இவருக்கும் அரசருக்கும் ஏதாவது தொடர்பா?” என்று கேட்டான் சிவாஜி. “இளவரசே, நான் கூறுவது எதையும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்! ஆயினும் உண்மையை விளக்கமாகச் சொல்லும்படி அரசர் உத்தரவு இட்டிருப்பதால் நான் அப்படியே கூறக் கடமைப்பட்டுள்ளேன். இந்தப் பெண்மணி மன்னர் சரபோஜியை அவருக்கு மணமாவதற்கு முன் காதலித்தவள். ஆனால் அரசகுலப் பெண்மணி அல்ல என்பதால் அவரை மன்னர் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் இந்த அம்மையார் அவரைத் தனது கணவரைப் போலவே கருதி வாழ்க்கை நடத்தினார். இப்படி இருப்பவர்களை காமக்கிழத்தி என்று சொல்லுவார்கள். ஆனால் அரசரோ இந்த அம்மையாருக்கு மனத்தில் உயர்வான இடத்தைக் கொடுத்திருந்தார். இறந்து போகும் போது இவர் அரசரிடம் தனது பெயரால் ஒரு அன்னசத்திரம் ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அதற்கு இணங்க மன்னரும் இந்தச் சத்திரத்தைத் தொடங்கினார். “முக்தாம்பாள் மிகவும் பெருந்தன்மையாக வாழ்ந்தவர். மிக உயர்ந்த உள்ளம் படைத்தவர். பெண்களுக்கு இயல்பாகக் கிடைக்கக்கூடிய மனைவி என்ற பதவி தனக்குக் கிடைக்கவில்லையே என்று எண்ணி அவர் ஏங்கவில்லை. தன்னை மணந்து கொள்ளும்படி மன்னரை வற்புறுத்தவும் விரும்பவில்லை. அந்த உயர்ந்த மனப்பான்மை கொண்டவரின் பெயரால் நடக்கும் இந்தச் சத்திரத்திலும் அன்னதானமும் கல்விதானமும் அமோகமாக நடைபெறுகிறது ஒரு நாளைக்கு நாலாயிரம் பேருக்கு மேல் சாப்பிடுகிறார்கள். அறுநூறு மாணவர்களுக்கு மேல் படிக்கிறார்கள். எல்லாமே இலவசம். இச்சத்திரத்துக்கு உமையாள்புரத்திலிருந்து பதின்மூவாயிரம் கலம் நெல் அனுப்பி வைக்கப்படுகிறது!” என்று கூறி முடித்தார் சார்க்கேல். சிவாஜிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. சார்க்கேல் அந்த சத்திரத்தின் அருமை பெருமைகளை மட்டும் சொல்லவில்லை. முக்தாம்பாளைப் பற்றியும் கூறுகிறார். அரசருக்கும் அவருக்கும் இருந்த தொடர்புகளையும் விளக்குகிறார். அதற்குத் திருமணம் என்ற முற்றுப்பெற்ற நிலை கிடைக்கவில்லை என்பதையும் அடையாளம் காட்டுகிறார். அதிலும் பெருமை கண்டவர் முக்தாம்பாள் என்கிறார். இதில் அவன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? திரும்பி வரும் வழியெல்லாம் சிவாஜி இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டே வந்தான். அவனுடைய மனத்தில் ஏறத்தாழ ஒரு முடிவான திட்டம் உருவாகி இருந்தது. அரண்மனைக்குத் திரும்பியதும் அந்தரங்கக் காவலாளி ஒருவனை அழைத்து, பிறர் அறியாத வண்ணம் புவனமோகினியிடம் அந்தத் தந்தப் பேழையைச் சேர்ப்பிக்கும்படி கூறி அனுப்பினான். ***** காலை நேரத்திலேயே திலகவதி அம்மையாரிடம் கோவிலுக்குப் போவதாகக் கூறிவிட்டு புவனமோகினி சிவகங்கைத் தோட்டத்து எல்லையில் இருந்த அல்லிக் குளத்திற்கு வந்துவிட்டாள். அதை ஒட்டி அமைந்திருந்த பூங்காக் குடிலின் வாசல் திறந்திருந்தது. அருகே வெண்புரவி நின்று கொண்டிருந்தது. சிவாஜி அங்கே ஏற்கெனவே வந்து விட்டதை புவனா புரிந்து கொண்டாள். முதல்நாள் இரவு அவளை இரகசியமாகச் சந்தித்த காவலாளி கொடுத்த தந்தப் பேழையைத் திறந்து பார்த்த போது, உள்ளே சிவாஜி எழுதி வைத்திருந்த குறிப்பு ஒன்று இருப்பதை அவள் கண்டு கொண்டாள். ‘சூரிய உதயமாகி மூன்று நாழிகை அளவில் சிவகங்கைத் தோட்டத்துக்கு அருகில் உள்ள அல்லிக்குளத்துக்கு வந்து சந்திக்கவும். மிக முக்கியமான விஷயம் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறேன்!’ என்று சிவாஜி எழுதி இருந்தான். குடிலின் உள்ளே சிவாஜி பளிங்குத் தரையில் அமர்ந்திருந்தான். கதவைத் தாளிட்டுவிட்டு புவனமோகினி அவன் அருகில் அமர்ந்து கொண்டாள். அவளைக் கைநீட்டி இழுத்து அணைத்த வண்ணம், அவளுடைய மடி மீது தலைவைத்துப் படுத்துக் கொண்டான் சிவாஜி. இருவர் பார்வைகளும் கலக்க, அந்த மனநெருக்கம் தந்த இன்பத்தில் இருவரும் மெய் மறந்திருந்தனர். சிறிது நேரம் இருவருக்கும் பேசவே தோன்றவில்லை. கையை நீட்டி அவளுடைய முகத்தை அருகில் இழுத்துக் கொண்டான் சிவாஜி. நெற்றி மேல் நெற்றி அழுந்திற்று. அவளுடைய இழிகளில் தனது பிம்பத்தைக் கண்டான் சிவாஜி. நெஞ்சில் தேன்மாரி பொழிந்தது. இருவர் மனமும் கை கோத்து நடனமாடின. அவளுடைய கன்னங்களை வருடினான். கூந்தல் அலைகளை வருடிக் கொடுத்தான். இடையில் விரல்களால் தாளமிட்டன. மார்பில் முகம் புதைத்து மயங்கிக் கிடந்தான். நேரம் நழுவியதே தெரியவில்லை. “உனக்கு முன் கடவுள் தோன்றி உன்னை வரம் கேட்கச் சொன்னால் நீ அவரிடம் என்ன கேட்பாய்?” என்று கேட்டான் சிவாஜி. “இந்தக் கணத்தில் நான் அனுபவிக்கும் இந்த இன்பம், நாம் இருவரும் உணரும் இந்த நெருக்கம் மறைவதற்கு முன் நான் இப்படியே உயிரை விட்டுவிட வேண்டும்! என்று கேட்டுக் கொள்வேன்” என்றாள் புவனா. சிவாஜி விரல்களால் அவளுடைய இதழ்களை மூடினான். மலரினுள் சிறைப்பட்ட வண்டைப் போல் அவளுடைய இதழ் துடித்தது. “என் அன்பே! நாம் இருவரும் இதுபோல என்றும் நீடூழி வாழ வேண்டும் என்று நீ கேட்கக் கூடாதா? இறப்பதற்கா விரும்புகிறாய்? ஏன் அப்படி?” என்று கேட்டான் சிவாஜி. “எனக்கு அப்படி ஓர் ஆசை இல்லையா இளவரசே? ஆயினும் எது சாத்தியமோ அதைத்தானே கேட்க முடியும்? உங்களை என்றும் என்னுடையவளாக ஆக்கிக் கொள்ள நான் விரும்பலாம். என்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் உங்கள் இதயத்தில் இடம் பெறக்கூடாது என்று ஆசைப்படலாம். ஆனால் அப்படி நடக்க இயலுமா?” “ஏன் புவனா? ஏன் அப்படி நினைக்கிறாய்?” “உங்களை மணக்க நான் ஒரு அரசகுமாரி அல்லவே? பட்டத்துக்கு வர இருக்கும் தாங்கள் எங்கே? பரதம் கற்றுக் கொள்ள வந்த ராஜ நர்த்தகியின் மகள் எங்கே? தாங்கள் கவனிக்கவில்லையா? மன்னர் எவ்வளவு சாதுர்யமாகப் பேசினார்? நான் யார் என்பதையும், நான் வந்த காரியம் என்ன என்பதையும் எப்படித் தெளிவாக உணர்த்தினார்! என்னுடைய பணி முடியப் போகிறது என்பதைக் குறிப்பிட்டு, விரைவில் நான் ஊர் திரும்ப வேண்டி இருக்கும் என்பதையும் சொல்லி விட்டார்?” “புவனா! அதற்கு வேறு பொருளும் கொள்ளலாம் அல்லவா?” “அல்ல இளவரசே! என்னைப் பொறுத்தவரை இதற்கு ஒரே பொருள் தான் உண்டு. அது, நான் தங்களை மணக்கும் எண்ணத்தைக் கனவிலும் நினைக்கக்கூடாது என்பதுதான். அப்படியானால் என்னுடைய நிலை என்ன? ராஜநர்த்தகியின் மகளாக எங்களுடைய நாட்டுக்கே திரும்பி விட வேண்டும் என்பதுதான்...” “இங்கேயே இருக்க விரும்பினால்?” “இங்கேயும் அதே நிலைதான்! தங்கள் அரசவையின் ராஜநர்த்தகியாக நான் இருக்க ஒப்புக் கொள்ளலாம். அந்த முறையில் தங்களையும் சந்திக்கலாம். இந்த நாட்டில் இருக்கும் வழக்கப்படி, தங்கள் ஆசைக்குரிய ஆசைக்கிழத்தியாக, அலங்கார தாசியாக, ராஜதாசியாக வாழலாம். அவ்வளவுதான்!” “அப்படி எல்லாம் சொல்லாதே புவனா!” “எனக்கும் அப்படி வாழ விருப்பமே இல்லை. இருப்பினும் வேறு வழிதான் என்ன? எனக்குத் தங்கள் அரண்மனை அந்தப்புரத்தில் இடம் இல்லை. அந்தரங்கத்தில் மட்டுமே இடம் உண்டு. தங்கள் அன்பையும் உறவையும் நான் ஏற்கலாம். ஆனால் அரசியாக இல்லை - ஆசைநாயகியாக. அப்படி வாழ என் மனம் இசையவில்லையே! நான் என்ன செய்ய முடியும்?” என்று கண்ணீர் பெருக்கி அவனுடைய மார்பின் மீது சாய்ந்து கொண்டாள் புவனமோகினி. சிவாஜி அவள் முகத்தருகே குனிந்தான். இதழ்கள் கலந்து நின்றன. நேரம் நழுவியது தெரியவில்லை. அவளுடைய கமலவர்ணக் கால்களை மடிமீது வைத்து இன்புறப் புடித்தான். தனது கைவிரலில் இருந்த மோதிரத்தை எடுத்து புவனாவின் விரலில் சேர்த்தான். அப்போது அவளுடைய மெய்சிலிர்த்தது. “இளவரசே! இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?” “தெரியும் புவனா! கந்தர்வ முறையில் குலக்கன்னியரை பல மன்னர்கள் மகிழ்ந்து கூடி மகிழ்ந்தனர் என்று சொல்லுவார்கள். துஷ்யந்தன் சகுந்தலையை அப்படித்தான் மணந்தான் என்று காளிதாசன் கூறுகிறான்...” “அதன் விளைவு தங்களுக்கே தெரியும் அல்லவா? சகுந்தலை அதன்பின் பட்டபாடுதான் என்ன? என்னையும் அப்படிச் சோதிக்க நினைக்கிறீர்களா?” “புவனா! நீ இவ்வளவு சாமர்த்தியமாகப் பேசக்கூடியவள் என்பது எனக்கு இதுவரை தெரியாது! உன் மனக்குழப்பம் நியாயமானது தான். துணிந்து இதை ஏற்றுக் கொள். இந்தக் கணம் முதல் உன்னை நான் எனது மனைவியாகவே ஏற்கிறேன்.” “இதற்கு உங்கள் அரசகுல சம்பிரதாயம் இடம் தராவிட்டால்?” “அதற்கும் என்னுடைய முடிவு தயார்! ஆனால் அதை இப்போது நான் வெளியே சொல்ல மாட்டேன். ஆனால் உன்னை ஒரு போதும் கலங்க விட மாட்டேன். இப்போதே அந்த உறுதிமொழியை நான் அளிக்கிறேன்.” புவனமோகினி இளவரசனை ஆசையுடன் இழுத்துச் சேர்த்து அணைத்துக் கொண்டாள். மிருதுவான அவள் பார்வையில் அவனுடைய உள்ளம் புளகாங்கிதமடைந்தது. செம்பவழ வாயால் அவனுடைய மார்பை ஒற்றினாள். புஷ்பங்கள் உலைவதுபோல மகிழ்வில் அவனுடைய மார்பு நிமிர்ந்தது. வாழ்வில் இன்னும் இளம் குருத்தாக, பருவத்தில் இன்னும் வசந்தமாக, மலரின் இன்னும் இதழ் விரியாத மொட்டாக, அரும்பி நின்ற இருவரிடையேயும் அளவிலாத ஓர் ஆசைத் துடிப்பு விரவியது. உடல் விதிர்விதிர்த்தது. சட்டென்று விலகி எழுந்து நின்றாள் புவனா. “போதும் இளவரசே! நாம் நிலைதவறிவிடக் கூடாது. அவசரப் படாமல் பொறுத்திருப்போம். மணமாகும் வரை பொறுத்திருப்போம்!” என்று கூறிக் கைகூப்பினாள். அவளை இழுத்துக் கொள்ளத் துடித்த சிவாஜியின் கைகள் அந்தச் சத்தத்தைக் கேட்டு அப்படியே அசைவற்று நின்றன... வெளியே குதிரையின் குளம்புச் சத்தம் கேட்டது. சிவாஜி கதவைத் திறந்தான். புவனா மெல்ல வெளியே எட்டிப் பார்த்தாள். வெளியே சார்க்கேல் நின்று கொண்டிருந்தார். மிகவும் அமைதியான குரலில், “மன்னிக்க வேண்டும். இதுவும் மன்னரின் ஆணைப்படிதான் இளவரசே!” என்றார் அவர். புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|