13 . கண்கலங்கி நின்றாள் மருமகளான சின்ன முத்தம்மாளின் உற்சாகமற்ற போக்கு ராணி மங்கம்மாளுக்குக் கவலையளித்தது. அவள் மனம் குழம்பித் திகைப்பு அடைந்தாள். கணவனை இழந்த துயரத்தை மகன் பிறந்த மகிழ்ச்சியில் மறந்து விடுவாள் என்று எதிர்பார்த்து வீணாயிற்று. சின்ன முத்தம்மாளை எப்படி மனம் மாறச் செய்வது என்று ஓயாமல் சிந்தித்தாள் ராணி மங்கம்மாள். அவளது எந்த முயற்சியாலும் மருமகளை மாற்ற முடியவில்லை. மருமகள் தைரியமாகவும் உற்சாகமாகவும் இராவிடில் பிறந்த குழந்தையை வளர்த்துக் காப்பாற்றுவது சிரமமாயிற்றே என்று தனக்குள் சிந்தித்து ஒரு முடிவும் புலப்படாமல் தவித்தாள் ராணி மங்கம்மாள். எதிர்பாராமல் நேர்ந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்ட ரங்ககிருஷ்ணனின் மரணத்தால் மூத்தவர்களின் விசும்பல்களும் கண்ணீரும் அழுகுரல்களுமே நிரம்பிவிட்ட அரண்மனையில் அதன்பின் தொடர்ந்து நீடித்து துயர மௌனத்தின் கனத்தையும் இறுக்கத்தையும் கரைப்பது போல் இப்போது தான் ஓர் இளம் குழந்தையின் இனிய அழுகுரல் ஒலிக்கத் தொடங்கியிருந்தது. ஆனால் எல்லாருடைய சோகத்தையும் போக்கிய அந்த மங்கலமான இளம் அழுகுரல் அந்தக் குரலுக்குரியவனைப் பெற்றெடுத்தவளின் சோகத்தை மட்டும் போக்கவில்லை. சின்ன முத்தம்மாள் மகன் பிறந்த பின்பும் சித்தப்பிரமை பிடித்தவள் போல் அர்த்தமின்றிப் பார்த்த திசையிலேயே வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். அவளது கவனத்தைத் திருப்புவதற்காகப் பணிப்பெண்கள் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. சிரிப்பதற்கும், முகம் மலர்வதற்கும் முடியாதவளாகி விட்டாளோ என நினைக்கும் அளவுக்குப் பரிதாபமாயிருந்தது அவள் நிலைமை. சின்ன முத்தம்மாளின் இந்தத் துயரத்தைப் போக்க முடியாமலும் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்துக் கலங்கினாள் ராணி மங்கம்மாள். சிரிப்பூட்டுவதிலும் நகைச்சுவையாகப் பேசி மகிழ்விப்பதிலும் கெட்டிக்காரிகளான இளம் பெண்களைச் சதா காலமும் சின்ன முத்தம்மாளின் அருகே சூழ்ந்திருக்கச் செய்து பார்த்தாள். அவளுக்குப் பிறந்திருக்கும் ஆண் குழந்தையைப் பற்றி அவளிடமே நிறையப் பேசச் செய்து கலகலப்பூட்ட முயன்றாள். எதுவுமே எதிர்பார்த்த நல்ல விளைவுகளை உண்டாக்கவில்லை. நாயக்க வம்சத்தை ஆள்வதற்குப் பேரன் பிறந்த மகிழ்ச்சியும் கோலாகலமும் குறையாமல் வந்தவர்களுக்கெல்லாம் பரிசில்களும் தான தர்மங்களும் வழங்கப்பட்டன. அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும் ராணி மங்கம்மாளுக்குப் பேரன் பிறந்ததைக் கொண்டாடினார்கள். சித்த பிரமை பிடித்தாற் போலிருந்த சின்ன முத்தம்மாளுக்கு எல்லா ஏற்பாடுகளும் கண்ணும் கருத்துமாகச் செய்யப்பட்டிருந்தன. பணிப்பெண்கள் தாய்மைப் பேற்றுக்குப் பின்வரும் முதல் நீராடலுக்காக அண்டா நிறையப் பன்னீரை நிரப்பி வைத்திருந்தார்கள். பெரு முயற்சிக்குப் பின் ராணி மங்கம்மாளே ஒருநாள் பிற்பகலில் தனியாகச் சின்ன முத்தம்மாளைச் சந்தித்தாள். அவளிடம் மனம் விட்டுப் பேசினாள். "நீ இப்படி இருப்பது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. சின்ன முத்தம்மா! உன் கவலைகளை நீ மறக்க வேண்டும். உன்னைத் தேற்றிக் கொண்டு உன் மகனைச் சீராட்டி வளர்க்க வேண்டும்." இதற்கு எதுவும் மறுமொழி கூறாமல் கண்ணீர் சிந்தியபடியே மோட்டு வளைவை வெறித்து நோக்கியபடி இருந்தாள் சின்ன முத்தம்மாள். அவளிடம் எந்த விளைவும் ஏற்படவில்லை. ராணி மங்கம்மாள் நீண்ட நேரம் மன்றாடிய பின்னர் சின்ன முத்தம்மாள் மறுமொழி கூறினாள். "நாயக்க வம்சம் தழைக்க ஒரு வாரிசு தேவை என்றீர்கள்! இதோ வாரிசு கிடைத்து விட்டது. எடுத்துக் கொள்ளுங்கள்! குலை போட்டு ஈன்றபின் தாய் வாழைக்கு அப்புறம் இங்கு என்ன வேலை?" - என்று கூறிய படியே தன் அருகில் கிடந்த குழந்தையை இருகைகளாலும் எடுத்து ராணி மங்கம்மாளிடம் நீட்டினாள். ராணி மங்கம்மாள் குழந்தையை மருமகள் கைகளிலிருந்து வாங்கத் தயங்கவில்லை. ஆனால் அதே சமயம் மருமகளின் பேச்சைக் கடிந்து கொண்டாள். "உனக்கு என்ன வந்துவிட்டது இப்போது? ஏன் இப்படிப் பேசுகிறாய்? வாரிசு தேவை என்றால் அதை வளர்த்துப் பெரிதாக்கத் தாயும் தேவை என்பது நான் சொல்லித்தானா உனக்குத் தெரியவேண்டும்?" அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|