3. பாதுஷாவின் பழைய செருப்பு அரவணையில் துயிலும் அரங்கநாதப் பெருமாளின் தரிசனம் கிடைத்ததோடன்றி, ராணி மங்கம்மாள் தன் மனத்தில் கருதிப் பூக்கட்டி வைத்துப் பார்த்த மிக முக்கியமான அரசியல் பிரச்சனைக்கும் அந்தப் பெருமாளே வழிகாட்டி உதவவும் செய்தார். அவள் எண்ணியபடியே செய்ய அரங்கனின் உத்தரவும் கிடைத்தது. திரும்புகிற வழியில் திருவானைக்காவிலும், நகருக்குள் மலைக்கோயிலிலும் வழிபாட்டை முடித்துக்கொண்டு, அவர்கள் அரண்மனைக்குத் திரும்பும்போது உச்சிவேளை ஆகியிருந்தது. மலையிலிருந்து கீழே இறங்கும்போதே, கோயிலில் உச்சிகால பூஜைக்கான மணி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. "மகனே! நான் உன்னிடம் எதைப் பேச நினைத்தேனோ அதைப் பேசத் தொடங்கும்போதே ஆலயமணியின் அருள் நாதம் கூட அதை ஆமோதிப்பது போல ஒலிக்கிறது. திருவரங்கத்துக்குப் போகும்போது நான் ஏற்கனவே சொல்லியபடி பொறுப்புகளை உன்னிடம் ஒப்படைக்க அரங்கனும் அனுமதி அளித்துவிட்டான்." "அதற்கு இத்தனை அவசரமும் அவசியமும் ஏன் அம்மா?" "இந்த அவசரத்துக்கும் அவசியத்துக்கும் என்ன காரணம் என்பதை நீயே நாளடைவில் புரிந்து கொள்வாய் ரங்ககிருஷ்ணா! உன் தந்தை இறந்த போதே, நானும் என்னை மாய்த்துக்கொள்ள நினைத்தேன்; அப்போது உன்னை நான் கருவுற்றிருந்த காரணத்தினால் என் உள்ளுணர்வே என்னைத் தடுத்தது. மற்றவர்களும் தடுத்துவிட்டார்கள். இந்த வம்சம் வாழவும் இதன் ஆளுமைக்கு உட்பட்ட மக்கள் நன்றாயிருக்கவுமே நான் இந்தச் சுமையை ஏற்றுத் தாங்கிக் கொண்டேன். சக்தியால் சிலவற்றையும் சமாளித்து வருகிறேன். ஆனாலும் தொடர்ந்து நான் இவற்றை நேரடியாகச் செய்யமுடியாது. உனக்குப் பட்டம் சூட்டியே ஆகவேண்டும்..." "உங்கள் உத்தரவை மீறக்கூடாது என்பதற்காக நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டாலும், தொடர்ந்து உங்களது யுக்தியாலும் சக்தியாலுமே நான் காரியங்களைச் சாதிக்கமுடியும் அம்மா!" "அந்த வகையில் என் ஒத்துழைப்பை நீ குறைவில்லாத வகையில் பெறமுடியும் மகனே!" - இந்த உரையாடலுக்குப் பின் அரண்மனைக்குத் திரும்பிய மறுகணத்திலிருந்து போர்க்கால அவசரத்தோடு துரிதமாக ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினாள் ராணி மங்கம்மாள். அரண்மனைப் புரோகிதர்களை அழைத்து அவசரமாக நல் முகூர்த்தங்களைப் பார்த்தாள். அவளுடைய அவசரத்துக்கும் அவசியத்துக்கும் ஏற்றபடி அடுத்த சில நாட்கள் தொடர்ந்து நல்ல நாட்களாகவே வாய்த்திருந்தன. அரண்மனை வட்டாரத்தினர் அனைவருக்குமே அந்த ஏற்பாடுகளின் வேகம் ஆச்சரியத்தை அளித்தது. ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனின் விவாகத்துக்கும் முடிசூட்டு விழாவுக்கு அடுத்தடுத்து மங்கல முகூர்த்தங்கள் குறிக்கப்பட்டாயிற்று. அரண்மனையில் விவரமறிந்த எல்லாரும் வியக்கும்படி ரங்ககிருஷ்ணமுத்துவீரப்பனின் திருமணம் சின்ன முத்தம்மாளுடன் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ராணி மங்கம்மாளுக்கே அவளுடைய தாய் வீட்டுப் பெயராக 'அன்ன முத்தம்மாள்' என்பது திருமணத்துக்கு முன் வழங்கிய காரணத்தால் அரண்மனையிலேயே மங்கம்மாளுக்குத் துணையாகவும், உறவினராகவும் உடனிருந்த மூத்த பெண்கள் சிலர் பழைய பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியாமல் 'ராணி முத்தம்மா' என்றே அழைத்தும் வந்தனர். அன்ன முத்தம்மாளான ராணி மங்கம்மாளுக்கும், இந்த இளம்வயது முத்தம்மாளுக்கும் ஓர் அடையாள வித்தியாசமாகத்தான் இவளைச் 'சின்ன முத்தம்மாள்' என்று அழைக்கத் தொடங்கியிருந்தார்கள். ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக விரைந்து மேற்கொள்ளப்பட்ட திருமண வைபவமும், முடிசூட்டு விழாவும் அளவு கடந்த கோலாகலத்தையும், குதூகலத்தையும் கொண்டிருக்கவில்லை. அரண்மனைச் சுற்றத்தையும், உறவினரையும் தவிர, அந்த ஆட்சியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு அங்கங்கே இருந்த படைத் தலைவர்களுக்கும், தளபதிகளுக்கும், தளவாய்களுக்கும், தலைக்கட்டுக்களுக்கும் மட்டுமே அவசரம் அவசரமாக அழைப்புச் சொல்லி வரத் தூதுவர்கள், விரைந்து பாயும் புரவிகள் மூலம் அனுப்பப்பட்டனர். இந்த ஏற்பாடுகள் அரண்மனை வட்டாரங்களிலும் சுற்றத்தினரிடமும் இரண்டு விதமான வியப்பைக் கிளரச் செய்தன. பாதுகாப்பையும் அரசியல் உதவியையும் கருதி மங்கம்மாள் ஒரு பெரிய அரச வம்சத்தில்தான் பெண்ணெடுப்பாள் என்று நினைத்திருந்தவர்களுக்கு, அவள் சின்ன முத்தம்மாளைத் தேர்ந்தெடுத்தது வியப்பாயிருந்தது. திடீரென்று இந்த வைபவங்கள் ஏற்பாடு செய்யப்படுவானேன் என்பது மற்றொரு வியப்பாயிருந்தது. காரணம், இந்த ஏற்பாட்டில் சம்பந்தப்பட்டிருந்த ராஜதந்திரப் பிரச்சனைப் பலருக்குத் தெரியாதிருந்ததுதான். திரிசிரபுரத்தில் அந்தத் திருமண வைபவமும், பட்டாபிஷேகமும் அதை ஒட்டி நடந்த பட்டணப்பிரவேசமும் நம்பமுடியாத வேகத்தில் நடந்து முடிந்தன. பட்டணப்பிரவேசம் முடிந்து அரண்மனை திரும்பியதுமே முடிசூடிய கோலத்தில் பட்டத்தரசியாகச் சின்னமுத்தம்மாளையும் அருகிலழைத்துக் கொண்டு, எதிரே தன் ஆசிகோரி வந்து வணங்கிய மகனைப் பார்த்ததும் ராணி மங்கம்மாள் அவனுக்கு ஆசி கூறி வாழ்த்திய பின் மேலும் கூறினாள். "மகனே! பாதுஷாவின் ஆட்களும் பழைய செருப்பும் நாளைப் பகலில் இங்கே வரக்கூடுமென்று தெரிகிறது. உனது திருமணத்திற்காகவும், முடிசூட்டு விழாவுக்காகவும் இங்கே வந்த படைத்தலைவர்களும், படைவீரர்களும் கோட்டைச்சுற்றி நாலா பக்கமும் மறைந்திருப்பார்கள். நானும் சின்ன முத்தம்மாளும் சபைக்கு வரா விட்டாலும் உப்பரிகையில் அமர்ந்து சபையைக் கவனித்துக் கொண்டிருப்போம். உன்னுடைய இந்தப் பேரழகியான மனைவியின் கடைக்கண் பார்வையில் நீ உறுதியாக நடந்து கொள்ளத்தக்க நெஞ்சுரம் உனக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் உன்னை வாழ்த்துகிறேன்." "தாயே! உங்கள் ஆசி கிடைக்குமானால் எத்தகைய எதிரியையும் வெல்லும் பலம் எனக்கு வந்துவிடும்". "சொல்லிக் கொடுத்த வார்த்தைகளும், கட்டிக் கொடுத்த சோறும் அதிக நேரம் கெடாமல் இருக்காது மகனே! என்று எந்த வேளையில் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று அன்று அந்த வேளையில் அப்போதே துணிந்து முடிவு செய்யும் மனோதிடம் உனக்கு வந்தாலொழிய ராஜ்ய பாரத்தைத் தாங்க உன்னால் முடியாது." "நீங்கள் உடனிருக்கும் வரை எனக்கு எதுவும் சிரமமில்லை தாயே!" என்று மீண்டும் வணங்கினான் ரங்க கிருஷ்ண முத்துவீரப்பன். ராணி மங்கம்மாள் சிரித்தபடியே சின்ன முத்தம்மாளைப் பார்த்துக் கூறலானாள்: "முத்தம்மா! இளவரசரைக் கெட்டிக்காரியும் பேரழகியுமான உன்னைப் போன்ற பெண் ஒருத்தியிடம் ஒப்படைத்திருக்கிறேன். இளவரசரின் வீரத்தையும், செருக்கையும், தன்மானத்தையும் வளர்ப்பதாக உன் அழகு அமைய வேண்டும்! கெட்டிக்காரத்தனமில்லாத அழகும் - அழகில்லாத கெட்டிக்காரத்தனமும் அரசியல் காரியங்களுக்குப் பயன்படுவதில்லைப் பெண்ணே!" சின்ன முத்தம்மாள் இதைக் கேட்டுப் பவ்யமாக நாணித் தலை குனிந்தாள். அவர்கள் இருவரையும் விடைகொடுத்து அனுப்பிவிட்டு இராயசத்தை அழைத்துச் சில உத்தரவுகள் போட்டாள் ராணி மங்கம்மாள். மறுநாள் பொழுது புலரும் பொழுது காவிரிக்கரையில் கதிரவன்கூட ஆவலோடு உதித்தாற் போலிருந்தது. திரிசிரபுரம் கோட்டையில் அரசவை கூடிய போது பட்டம் சூடிக்கொண்ட ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன் அரியணையில் கம்பீரமாகக் கொலுவீற்றிருந்தான். அந்தப்புர பகுதியிலிருந்து புறப்பட்டு வந்து அப்படியே மேல்மாடத்து உப்பரிகையிலிருந்து அரசவையைக் காண முடிந்த வகையில் ராணி மங்கம்மாளும் சின்ன முத்தம்மாளும் அங்கே அமர்ந்திருந்தார்கள். பட்டம் சூடிப் பதவியேற்றிருக்கும் இளவரசைப் புகழ்ந்து தமிழ்ப் புலவர்களும், சில தெலுங்குப் புலவர்களும் கவிதை பாடினார்கள். சபையும், அரசரும் கவிதைகளை இரசித்துக்கொண்டிருக்கும் போதே, "டில்லி பாதுஷாவின் பிரதிநிதியும், ஆட்களும் கோட்டை வாசலில் காத்திருக்கிறார்கள்" என்று தகவல் வந்தது. அவர்களை உள்ளே அழைத்து வரச் சொல்லி ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன் சிறிதும் தயங்காமல் உடனே எதிர்கொள்ள ஆயத்தமானான். யானையைக் கோட்டை வாசலிலேயே நிறுத்திவிட்டு அதன்மேல் அம்பாரியிலிருந்த ஔரங்கசீப்பின் பழைய செருப்பை அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு பழுக்காத் தாம்பாளத்தில் எடுத்து வைத்துக்கொண்டு உடன் வந்திருந்த வீரர்கள் பின் தொடர ஆடம்பரமாகவும் படாடோபமாகவும் உள்ளே நுழைந்தான் பாதுஷாவின் பிரதிநிதி. நெடுந்தூரம் பயணம் செய்திருந்த களைப்பாலும் எங்கேயும் யாரும் போரிடாததாலும் டில்லியிலிருந்தே உடன் வந்திருந்த படை வீரர்களில் பெரும் பகுதியினரை அநாவசியம் என்று கருதி மதுரையிலிருந்தே அவசரப்பட்டு வடக்கே திருப்பி அனுப்பியிருந்தான் அந்தப் பிரதிநிதி. "இளவரசருக்கு உடல் நலமில்லை. திரிசிரபுரம் திரும்புகிறார்" என்று மதுரை தமுக்கம் மாளிகையிலிருந்து ராணி மங்கம்மாள் திண்டுக்கல்லுக்கு அனுப்பியிருந்த தகவல் வேறு டில்லியிலிருந்து வந்திருந்த ராஜப்பிரதிநிதியின் வேகத்தைத் தடுத்துப் போதுமான அளவு குழப்பியிருந்தது. எல்லாரும் தலைவணங்கிவிட்ட செருப்புக்கு ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனும் மறுக்காமல் தலை வணங்கி விடுவான். படைபலத்தைக் காட்டி அவனை மிரட்ட வேண்டிய அவசியம் இராது. தானும் சில வீரர்களும் பழைய செருப்புடன் திரிசிரபுரம் சென்றாலே போதுமானது என்ற முடிவுடந்தான் அந்தப் பிரதிநிதி அன்று அங்கே வந்திருந்தான். டில்லி பாதுஷாவின் பிரதிநிதி வேகம் குறைந்து குழம்பி விடவேண்டும் என்பதை எதிர்ப்பார்த்துத்தான் மதுரையிலேயே அவனை எதிர்கொண்டு சந்திக்காமல் கவனத்தைத் திசை திருப்பி மகனுக்கு உடல் நலமில்லை என்று சொல்லித் திரிசிரபுரம் திரும்பியிருந்தாள் ராணி மங்கம்மாள். "இத்தனைப் பேர் எதிர்க்காத பாதுஷாவின் செருப்பை ஒரு விதவையை தாயாகக் கொண்ட நோயுற்ற ஓர் இளவரசனா எதிர்க்கப்போகிறான்?" - என்று நினைத்து மிகவும் அலட்சியமாகவும் சற்று அஜாக்கிரதையாகவும் திரிசிரபுரத்துக்கு வந்திருந்தான் டில்லி பாதுஷாவின் பிரதிநிதி. பாதுஷாவின் பிரதிநிதியை எதிர்கொண்டு வரவேற்று அவையில் அமரச் செய்தான் ரங்ககிருஷ்ணன். இராயசத்தை அழைத்துத் தந்தை சொக்கநாத நாயக்கரின் மறைவுக்குப் பின் தாய் வழக்கமாக டில்லி பாதுஷாவுக்குச் செலுத்தி வந்த கப்பத்தொகையையும் கூட முறையாகச் செலுத்தச் செய்தான். பெருமக்கள் நிறைந்திருந்த அந்த ராஜசபையில் பாதுஷாவின் பிரதிநிதியையும் உடன் வந்திருந்தவர்களையும் அதிகபட்ச முகமலர்ச்சியோடும் விநயத்தோடும் மரியாதையோடும் நடத்தினான் ரங்ககிருஷ்ணன். ஒரு சுவாரஸ்யமான ஏற்கனவே நன்கு ஒத்திகை செய்யப்பட்ட நாடகத்தைப் பார்ப்பதுபோல் மேலே உப்பரிகையிலிருந்து ராணி மங்கம்மாளும் சின்ன முத்தம்மாளும் அவையில் நடப்பதை எல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். பாதுஷாவின் பிரதிநிதிக்கும் ரங்ககிருஷ்ணனுக்கும் உரையாடல் தொடர்ந்தது. "இளவரசருக்கு உடல் நலமில்லை என்பதாகச் சொன்னார்கள். இப்போது எப்படியோ?" "நோயும் விருந்தும் எப்போதாவது வரக்கூடியவை... இப்போது தாங்கள் வந்திருப்பதைப் போல..." "நோயாக வந்திருக்கிறேன் என்கிறீர்களா? விருந்தாக வந்திருக்கிறேன் என்கிறீர்களா?" "நான் விருந்தென்று எண்ணித்தான் சொன்னேன். தங்களுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படி வைத்துக் கொள்வதில் எனக்கு ஆட்சேபணை இல்லை." "முடிசூடிப் பட்டமேற்றுக் கொண்டபின் இளவரசருக்கு மிகவும் சாதுர்யமாகப் பேச வருகிறது." "பேச்சு மட்டும் அப்படி என்று பாதுஷாவின் மேலான பிரதிநிதி அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது." "தாங்கள் தாய் மகாராணி மங்கம்மாள் இப்படியெல்லாம் சாமர்த்தியமாகப் பேசுவதில் நிபுணர் என்று கேள்வி..." "மறுக்கவில்லை. ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் என்னோடு தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்." "பாதுஷாவின் புதிய நிபந்தனை இளவரசருக்கும் மகாராணிக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்." "எப்போது நிபந்தனை புதிதோ அப்போது அதை நீங்களே வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டியதுதான் முறை." பதில் பேசாமல் பாதுஷாவின் பிரதிநிதி தன்னுடன் வந்திருந்த வீரர்களில் ஒருவனுக்குச் சைகை காட்டி அழைத்து ஏதோ கூறினான். உடனே அந்த் டில்லி வீரன் பட்டுத்துணியிட்டு மூடியிருந்த பழுக்காத் தாம்பாளத்தை அப்படியே அரியணைக்கு முன்பிருந்த அலங்கார மேடையில் வைத்துவிட்டுத் துணியை நீக்கினான். தாம்பாளத்தில் ஔரங்கசீப்பின் பழைய செருப்பு ஒன்று இருந்தது. அதைக் கண்டவுடன் ரங்ககிருஷ்ணனின் முகத்திலிருந்த மலர்ச்சியும் புன்னகையும் மறைந்தன. மீசை துடிதுடித்தது. ஆனாலும் பொறுமையை இழந்துவிடாமல் கேட்டான். "என்ன இது?" "டில்லி பாதுஷாவின் பாதுகை". "டில்லி பாதுஷா மற்றொரு காலுக்குச் செருப்பே போட்டுக் கொள்வதில்லையா?" "மரியாதையாகப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள் இளவரசே! பாதுஷா கப்பம் வாங்குகிறவர். நீங்கள் கப்பம் கட்டுகிறவர்! ஞாபகமிருக்கட்டும்." "மரியாதை என்பது கொடுத்துப் பெற வேண்டியது. கேட்டுப் பெறக்கூடியது இல்லை." "மறுபடியும் எச்சரிக்கிறேன். நீர் கப்பம் கட்டுகிறவர். பாதுஷா வாங்குகிறவர்." "அவர் கப்பத்தை வாங்கலாம். மானத்தை வாங்கிவிட முடியாது. கூடாது." "டில்லிப் பேரரசுக்கு அடங்கிக் கப்பம் கட்டுகிற அனைவரும் இந்தப் பாதுகையை வணங்கவேண்டும் என்பது பாதுஷாவின் புதிய கட்டளை." "தெய்வங்களின் திருவடிகளைத்தான் பாதுகை என்று சொல்வதும், வணங்குவதும் எங்கள் வழக்கம். மனிதர்களின் பழைய செருப்பை நாங்கள் பாதுகையாக நினைப்பதில்லை." "இன்றைய திமிர் நாளைய விளைவைச் சந்திக்க வேண்டியதாகிவிடும் இளவரசே!" "அன்புக்குக் கட்டுப்படலாம். பயமுறுத்தலுக்குப் பணிய முடியாது. மீண்டும் சொல்கிறேன். தெய்வங்களின் திருவடிச் சுவடுகளைத் தலைவணங்கலாம். மனிதர்களின் கிழிந்த செருப்பை வணங்குவது பற்றி நினைக்கக்கூட முடியாது." "இதுதான் உங்கள் முடிவான பதிலா?" "இதை விட முடிவான பதில் தேவையானாலும் தர முடியும். இது புரியாவிட்டால் அதையும் தருகிறேன்." "இந்த மிரட்டல் சிறுபிள்ளைத்தனமானது இளவரசே!" "பெருந்தன்மையான காரியங்கள் என்னவென்றே தெரியாதவர்கள் சிறுபிள்ளைத்தனம் எது என்றும் கண்டுபிடிக்கத் தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள்." "பேச்சு எல்லை மீறுகிறது." "புரியவில்லையானால் செயலிலேயே காட்டிவிடுகிறேன். இதோ" என்று கூறிய படியே அரியணையிலிருந்து எழுந்து ரங்ககிருஷ்ணன் அந்தப் பழுக்காத் தாம்பாளத்திலிருந்த செருப்பை, தன் காலில் எதற்குப் பொருந்துமோ அதில் அணிந்து கொண்டான். பாதுஷாவின் பிரதிநிதியைக் கம்பீரமாக நிமிர்ந்து பார்த்துச் சொன்னான். "இவ்வளவு பெரிய மகாராஜாவான டில்லி பாதுஷா போன்றவர்கள் கேவலம் ஒற்றைக் காலுக்கு மட்டுமா செருப்பு அனுப்புவது? முடிந்தால் மற்றொரு காலுக்கும் சேருகிறார் போல் அனுப்பி வைக்கும்படி சொல்லுங்கள்." பாதுஷாவின் பிரதிநிதி இதைக் கண்டு ஸ்தம்பித்துப் போனான். அவன் இப்படி நடக்கும் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை. அவமானப்பட்டுவிட்ட உணர்விலும், ஆத்திரத்திலும் அவன் முகம் சிவந்தது. கடுமையாக ஏதோ சொல்ல விரும்பி ஆனால் உணர்ச்சி மிகுதியால் வார்த்தைகள் வராமல் அவனுடைய உதடுகள் துடித்தன. புருவங்கள் நெரிந்தன. முகம் வியர்த்தது. ராணி மங்கம்மாள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
முடிவுரை
|