4. இராயசம் அச்சையாவும் ரகுநாத சேதுபதியும் டில்லி பாதுஷாவின் பிரதிநிதி ஆத்திரம் அடைந்ததைக் கண்டு ரங்ககிருஷ்ணமுத்து வீரப்பன் அவனை நோக்கிப் புன்னகை பூத்தான். "நெருப்புடன் விளையாடுகிறீர்கள்! இதன் விளைவுகள் கடுமையாயிருக்கும் என்பதைச் சிந்திக்காமல் செயல்படுகிறீர்கள் என்பதை மீண்டும் வற்புறுத்த விரும்புகிறேன்" என்றான் பாதுஷாவின் பிரதிநிதி. "தங்கள் பேரரசுடன் முன்பு நாங்கள் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி கப்பம் கட்டுவதாக மட்டும் ஒப்புக் கொண்டது உண்மை. செருப்பை வணங்குவது அந்தப் பழைய உடன்படிக்கையில் அடங்காத ஒன்று. உடன்படிக்கைப்படி பார்த்தால் வரம்பை மீறுவது தங்கள் அரசரேயன்றி நாங்கள் இல்லை." "வலிமை உள்ளவர்களுக்கு வலிமையற்றவர்கள் அடங்கித்தான் ஆகவேண்டும்." "அடக்கம் வேறு; அடிமைத்தனம் வேறு." "இதற்குப் பாடம் கற்பிக்காமல் விடப்போவதில்லை." "முடிந்தால் செய்யுங்கள்." இவ்வளவில் பாதுஷாவின் பிரதிநிதியும் உடன் வந்திருந்தவர்களும் வெளியேறி விட்டார்கள். படைகளையெல்லாம் மதுரையிலிருந்து அவசரப்பட்டு வடக்கே திருப்பியனுப்பி விட்டது எத்தனை பெரிய தவறு என்ற ஏக்கத்துடனே வேறு வழியில்லாத காரணத்தால் ஒன்றும் செய்யமுடியாமல் டில்லி திரும்பினான் ஔரங்கசீப்பின் பிரதிநிதி. போகிற போக்கில் திரிசிரபுரம் கோட்டையும் அதன் சுற்றுப்புறங்களும் படை வீரர்களால் நிரப்பப்பட்டு ஆயத்தமாயிருப்பதையும் அவன் கண்டுகொண்டான். கையாலாகாத்தனமும் ஆத்திரமும் அவன் உள்ளத்தை வெதுப்பின. அந்த ஆத்திரக் குமுறலில், முத்து வீரப்பனின் கோட்டைப் படை வீரர்களுடன் பாதுஷாவின் ஆட்கள் போர் செய்ய முயன்று தோற்றுப் போனார்கள். சிலர் அதில் உயிரிழக்கவும் நேரிட்டது. 'கணவனை இழந்து கைம்பெண்ணான ஒரு ராணி உங்களை அவமானப்படுத்திவிட்டாள்' என்பதாகப் பாதுஷாவிடம் போய் அவருக்குச் சினமூட்டுகிற விதத்தில் சொல்லலாம் என்றால் மங்கம்மாள் தான் இதில் சம்பந்தப்படாமல் எல்லாவற்றையுமே சாதுரியமாகச் செய்திருந்தாள். அவளுடைய அந்தச் சாதுரியத்தை நினைக்கும்போது அவன் குமுறல் இரண்டு மடங்காயிற்று. நேரடியாக அவமானப்பட்டது முத்து வீரப்பனிடம் என்றாலும் தங்களை அவமானப்படுத்திய மதிநுட்பம் ஒரு பெண் பிள்ளையினுடையது என்ற உறுத்தல் உள்ளே இருந்தது அவனுக்கு. டில்லி பாதுஷாவின் ஆட்கள் திரும்பிப்போன பின்புதான் கைப்பிடித்த மனைவி சின்ன முத்தம்மாளுடன் இரண்டு வார்த்தை சிரித்துப் பேசவும், சரசமாடவும் நேரம் கிடைத்தது முத்துவீரப்பனுக்கு. அடுத்து சில நாள்கள் மண வாழ்வின் இனிய மயக்கத்தில் கழிந்தன. காவிரியில் புதுவெள்ளம் வந்தது. அவர்கள் மனத்தைப் போலவே காவிரியும் நிரம்பி வழிந்தது. கோடையின் சுகத்தைக் காவிரிக்கரையின் இதமான மாந்தோப்புகளில் செலவிட்டார்கள் அந்த இளம் காதலர்கள். ஆடிப்பாடி மகிழவும் படகு செலுத்திக் களிக்கவும் நேரம் போதாமலிருந்தது அவர்களுக்கு. ஒரு மண்டலத்திற்குப் (40 நாள்) பின் விடிந்த ஒரு வைகறையில் ராணி மங்கம்மாளும் இராயசம் அச்சையாவும் (அரண்மனைக் காரியஸ்தர்) அவசரம் அவசரமாக முத்து வீரப்பனை அழைத்து வரச் சொல்லி அந்தப்புரத்திற்கு ஆளனுப்பினார்கள். விடியலின் கனவும் நனவும் கலந்த இனிய உறக்கத்திலிருந்து அவன் எழுந்திருந்து விரைவாக அவர்கள் இருவரையும் அரண்மனை மந்திராலோசனை மண்டபத்தில் வந்து சந்திக்க வேண்டுமென்று ராணி மங்கம்மாளிடமிருந்து வந்த ஆள் கூறிவிட்டுப் போயிருந்தான். அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த சின்ன முத்தம்மாளை எழுப்பாமலே தாயையும் இராயசத்தையும் சந்திக்கச் சென்றான் அவன். இன்னும் இருள் பிரியவில்லை. காற்று சில்லென்றிருந்தது. தன் தாயோடு அரண்மனை இராயசமான அச்சையாவும் கூட இருக்கிறார் என்றறிந்ததுமே ஏதோ மிகவும் இன்றியமையாத காரியத்தைப் பற்றி ஆலோசனை நடக்கிறது என்பதை முன்கூட்டியே முத்துவீரப்பன் அநுமானம் செய்துகொள்ள முடிந்தது. தாயின் நம்பிக்கைக்குரியவர் அச்சையா என்பதை அவன் அறிவான். அதிகமான செயல் திறமையையும் மிகக குறைவான வார்த்தைகளையும் உடையவர் அவர். மிகப் பெரிய ராஜதந்திரியான அவர் எதிரே நின்று பேசுகிறவர்களை பயபக்தியோடு தம்மை அணுகச் செய்து விடும் ஆஜானுபாகுவான சுந்தரபுருஷர். தீர்க்கமாகப் பார்க்கும் ஒளி நிறைந்த கண்களும், கூரிய நாசியும், விசாலமான நெற்றியும், அழுத்தமான உதடுகளுமாக அச்சையாவை ஏறெடுத்துப் பார்க்கும் யார்க்கும் அவர் முன் ஒரு பணிவு தானாக வந்துவிடும். அள்ளி முடித்த குடுமியும், நெற்றியில் சந்தனத் திலகமுமாக அவர் சிரிக்கும்போது வெளேரென்று தெரியும் அழகான அளவான பல்வரிசை யாரையும் வசியப்படுத்திவிடக் கூடியது. நின்றால் பரந்த மார்பும் திரண்ட புஜங்களுமாக முழங்காலைத் தொடக்கூடிய நீண்ட கரங்களோடு எடுப்பும் ஏற்றமுமாகக் காட்சியளிப்பார் அச்சையா. அசைப்பில் கோயில் ராஜகோபுரம் எதிரே நிற்பது போல இருக்கும். இப்படி அச்சையாவைப் பற்றிய கம்பீரமான நினைப்புகளுடன் அவன் மந்திராலோசனை மண்டபத்திற்குள் நுழைந்த போது, "வா மகனே! காரியம் மிகவும் அவசரமானது! அதனால் தான் உன்னைத் தூக்கத்திலிருந்துங்கூட எழுப்பிவிட்டேன்" என்றாள் தாய். தாயையும் இராசயம் அச்சையாவையும் வணங்கிவிட்டு அமர்ந்தான் முத்துவீரப்பன். "தூங்கிக் கொண்டிருந்தால் கூட என்னை விழிப்பூட்டுவது உங்கள் கடமை அம்மா!" "நீ சிறிது குழந்தையாயிருந்த வரை உன்னைத் தாலாட்டிச் சீராட்டிப் பாலூட்டித் தூங்கச் செய்வது மட்டும் தான் என் கடமையாயிருந்தது மகனே!" "இப்போது இன்னும் நான் குழந்தையில்லை அம்மா. ஆகவே இப்போது நீங்கள் விழிப்பூட்ட வேண்டுமேயன்றித் தூங்கச் செய்யக் கூடாது." "பிரமாதமான வார்த்தை முத்துவீரப்பா! ஆனால் இன்னும் நீ குழந்தை என்பதை நீ உணர்ந்தால் மட்டும் போதாது. உன் எதிரிகளும் உணர வேண்டும்." "முதல் எதிரியாக என் முன் எதிர்பட்ட டில்லி பாதுஷா ஔரங்கசீப்பின் பிரதிநிதிக்கு அதை நான் நன்றாக உணர்த்தி விட்டேன். இன்னும் வேறு யாருக்காவது அதை உணர்த்துவதற்கு அவசியமிருந்தால் சொல்லுங்கள் ஐயா உணர்த்துகிறேன்." "அவசியம் நேற்று வரை ஏற்படவில்லை, இன்று இப்போது இதோ ஏற்பட்டிருக்கிறது". "சற்றே விவரமாகச் சொல்லுங்கள்! எங்கே யாரிடம் அந்த அவசியம் ஏற்பட்டிருக்கிறது?" "எதிரிகளை விடத் துரோகிகள் மோசமானவர்கள்." "யார் அந்தத் துரோகிகள்?" "இந்த அரண்மனை கடந்த காலத்தில் கண்ட துரோகி அழகிரிநாயக்கன். இன்று காணும் துரோகி கிழவன் சேதுபதி என்ற இரகுநாத சேதுபதி! அன்று உன் தந்தை சொக்கநாத நாயக்கரின் உத்தரவுப்படி அவர் அரசாள தஞ்சையை ஆளச் சென்ற அழகிரி நாயக்கன் உன் தந்தைக்குத் துரோகம் செய்து பின்பு வெங்கண்ணாவின் சூழ்ச்சியால் தானும் சீரழிந்துப் போனான். அதே போல் உன் தந்தை சொக்கநாத நாயக்கரிடம் பணிந்து சிற்றரசனாக இருந்த கிழவன் சேதுபதி இப்போது தான் தோன்றித்தனமாக நடந்து கொள்ளத் தொடங்கிவிட்டார். முன்பு உன் தந்தைக்கும் ருஸ்டம்கானுக்கும் போர் ஏற்பட்ட போது இந்தக் கிழவன் சேதுபதி, பெரிதும் உதவியாயிருந்து உன் தந்தையை அவனிடமிருந்து காப்பாற்றினார். அதற்குப் பிரதியாக உன் தந்தை கிழவன் சேதுபதிக்குப் பரிசில்களும் விருதும் கொடுத்துப் பாராட்டியதோடு தன்னிடமிருந்த அதிபுத்திசாலியான குமாரப்ப பிள்ளை என்ற தளவாயையும் சேதுபதிக்கு உறுதுணையாக ஆட்சிப் பணிபுரிய இராமநாதபுரம் அனுப்பி வைத்தார். "உன் தந்தையால் அனுப்பப்பட்ட அந்த அரிய மனிதரான குமாரப்ப பிள்ளையைக் குடும்பத்தோடு கொலை செய்து இப்போது பழிதீர்த்துக் கொண்டு விட்டார் கிழவன் சேதுபதி. நமது ஆட்சிப் பிடிப்பின் கீழ் சிற்றரசராக இருக்க விரும்பாத சேதுபதி தஞ்சை நாயக்க மன்னர் பரம்பரையின் வாரிசான செங்கமலதாசனுடனும், பழைய மதுரைத் தளவாய் வேங்கட கிருஷ்ணப்பனோடும் சேர்ந்து நமக்கு எதிராகச் சதி செய்த போது அந்தச் சதியை எதிர்த்து அதற்கு உடன்பட மறுத்தார் என்ற ஒரே காரணத்துக்காகக் குமாரப்ப பிள்ளை குடும்பத்தோடு கொல்லப்பட்டிருக்கிறார். "நல்லது சொல்லியவருக்கு இப்படி ஒரு கொடுந்தண்டனையா?" "நம்மையும் நமது ஆட்சியையும் அழிப்பதற்குப் பரிசாகத் தனக்கு உதவி செய்ய முன்வரும் தஞ்சை மன்னனுக்குப் புதுக்கோட்டைக்கும், பாம்பாற்றுக்கும் இடைநிலப் பகுதியில் வரி வாங்கும் உரிமையை விட்டுக் கொடுத்திருக்கிறார் சேதுபதி. இந்த நன்றி உணர்வற்ற சதியை முறியடித்துச் சேதுபதியையும் வேங்கடகிருஷ்ணப்பனையும் திருத்த முயன்ற போது தான் குமாரப்ப பிள்ளை கொல்லப்பட்டிருக்கிறார்." "நமக்கு வேண்டியவரைக் கொன்றால் என்ன? நம்மைக் கொன்றால் என்ன?" "இந்த விசுவாச உணர்வுதான் நம்மைக் காக்கக்கூடியது முத்துவீரப்பா! கிழவன் சேதுபதி முரட்டு மனிதர்! மனித வாழ்வை அர்த்தமுள்ளதாகச் செய்யக்கூடிய எந்த இங்கிதமான உணர்வுகளும் இல்லாதவர். ஆட்சியையும், செல்வத்தையுமே மதிப்பவர். நாம் அவருக்குப் பாடம் கற்பிக்க வேண்டிய காலம் வந்து விட்டது." "இப்போதே படைகளோடு புறப்படுகிறேன். பாடமும் புகட்டுகிறேன்." "அது அத்தனை சுலபமானதில்லை மகனே! மறவர் சீமையின் கிழட்டுச் சிங்கத்தை எளிதாக வென்றுவிட முடியாது. இரகுநாத சேதுபதி மற்ற மறவர்களை அழைத்துத் தலையைக் கொடு என்றாலும் கொடுத்து விடுவார்கள். அவ்வளவு செல்வாக்கும் கட்டுப்பாடும் அங்கே அவருக்கு உண்டு." "நன்றியும் விசுவாசமும் இல்லாத இடத்தில் எத்தனைக் கட்டுப்பாடு இருந்தால் என்ன; எவ்வளவு செல்வாக்கு இருந்தால் என்ன?" "உன் கேள்வியிலுள்ள நியாயம் கூட புரியாத வன்கண் மறவர் அவர். அவருடைய சக மறவர்கள் அவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள். ஆகவே அவருக்கு ஆள்கட்டு அதிகம். ஒரு பாவமும் அறியாத அந்நிய நாட்டுக் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் கூட அவருடைய கொடுமைக்குத் தப்ப முடியவில்லை மகனே!" "சொந்த நாட்டு நண்பர்களிடமே விசுவாசமாயில்லாத ஒருவர் அந்நிய நாட்டுப் பாதிரிமார்களிடம் கருணை காட்டுவார் என்று எப்படி அம்மா நீங்கள் எதிர்பார்க்க முடியும்?" "உன் கொள்ளுப் பாட்டனார் திருமலை நாயக்கரும், தந்தையாரும் கிறிஸ்தவப் பாதிரிமார்களையும் அவர்களைப் பின்பற்றியவர்களையும்கூட அன்போடும் ஆதரவோடும் பெருந்தன்மையாக நடத்தினார்களே?..." "என் கொள்ளுப் பாட்டானாருக்கு இருந்த பெருந்தன்மையும் தந்தைக்கு இருந்த தாராள மனமும் கிழவன் சேதுபதிக்கு இல்லையானால் அதற்கு யார் என்ன செய்ய முடியும் அம்மா?" "கிழவன் சேதுபதியால் கொல்லப்பட்ட குமாரப்ப பிள்ளை கூடக் கிறிஸ்தவ வெறுப்பில் கிழவன் சேதுபதியை மிஞ்சியவராக இருந்திருக்கிறார். பாதிரிமார்களையும், உபதேசியார்களையும் பலாத்காரமாகச் சிவலிங்கத்தை வழிபடும்படி வற்புறுத்துகிறார் அவர்" என்றார் இராயசம் அச்சையா. "அது அக்கிரமம் ஐயா! பாதுஷாவின் பழைய செருப்பைக் கும்பிடும்படி நம்மை வற்புறுத்தியவர்களுக்கும் குமாரப்ப பிள்ளைக்கும் என்ன வேறுபாடு?" "நாகரிகமடைந்த நல்லவர்களுக்குத் தான் உன் கேள்வியும் அதன் நியாயமும் புரியும். துவேஷமும் வெறுப்பும் குரோதமும் நிரம்பியவர்களுக்கு நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாது முத்துவீரப்பா." "போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து வந்த ஜான்டிபிரிட்டோ பாதிரியாரைத் தடுத்து மறவர் நாட்டு எல்லைக்குள் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப முயன்றால், தோலை உரித்து மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டுவிடப் போவதாகப் பயமுறுத்துகிற அளவு கிழவன் சேதுபதி கடுமையானவராயிருந்திருக்கிறார் என்று கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன் ஐயா!" "சிலரைத் தோலை உரித்துத் தலைகீழாக மரங்களில் கட்டித் தொங்கவிட்ட கொடுமையும் நடந்திருக்கிறது முத்துவீரப்பா!" "கேட்பதற்கே அருவருப்பாயிருக்கிறது ஐயா! குமாரப்ப பிள்ளை நம் அரண்மனையிலிருந்து சேதுபதிக்கு உதவியாக அனுப்பப்பட்டவர். அவரைக் கொன்றதே தாங்கமுடியாத கொடுமை; அவர் குடும்பத்தினரையும் கொன்றது பயங்கரமான பாவம். கிறிஸ்தவப் பாதிரிமார்களைத் துன்புறுத்துவது பொறுத்துக் கொள்ள இயலாதது. நாம் எப்படியும் அவரை அடக்கியே ஆகவேண்டும்." "ஒரு விநாடி கூடக் காலந்தாழ்த்தக்கூடாது மகனே! பாதுஷாவுக்காகத் திருச்சியில் கூட்டிய படை வீரர்களோடு உடனே மறவர் சீமையின்மீது போர் தொடுத்தாக வேண்டும். தனது தூதரைக் கொல்லும் அந்நிய அரசனைப் படையெடுத்துத் தாக்கும் நியாயம் ஒவ்வொரு நல்ல அரசனுக்கும் உண்டு அப்பா! குமாரப்ப பிள்ளை நம்மால் அங்கு அனுப்பப்பட்டவர். அவரைக் கூண்டோடு அழித்தது நம்மை அவமானப்படுத்தியது போல் தான்! நீ உடனே போருக்கு ஆயத்தமாக வேண்டும் என்பதைச் சொல்லவே உன்னை நானும் இராயசமும் இங்கே அழைத்தோம்." இராயசம் எழுந்து நின்றார். கம்பீரமும் அழகும் வசீகரமும் நிறைந்த அவரது தோற்றத்தைப் பார்த்து ராணியே ஒரு கணம் யாரோ புதியவர் ஒருவரைக் காண்பதுபோல் உணர்ந்தாள். "இந்த மறவர் சீமைப் படையெடுப்புக்கு உங்கள் இருவர் ஆசியும் வேண்டும்" என்று வணங்கினான் முத்து வீரப்பன். "மிகப் பெரிய படிப்பாளியாகிய நம் இராயசம் உன்னை வாழ்த்தினாலே போதுமானது மகனே!" என்றாள் மங்கம்மாள். இராயசம் அச்சையா ராணியை நோக்கிப் புன்முறுவல் பூத்தார். முத்துவீரப்பன், ஆஜானுபாகுவாக எழுந்து நின்ற இராயசம் அச்சையாவையும் அன்னை ராணி மங்கம்மாளையும் வணங்கி விடைபெற்றான். அவன் வணங்கித் தலைநிமிரவும் அரண்மனை வீரன் ஒருவன் பரபரப்பாக அங்கு உள்ளே நுழையவும் சரியாயிருந்தது. வந்த வீரன் வணங்கிவிட்டு மூவரையும் பார்த்துச் சொல்லலனான். "இராமநாதபுரத்திலிருந்து இரகுநாத சேதுபதியின் தூதன் ஒருவன் தேடி வந்திருக்கிறான்." மூவரும் தங்களுக்குள் வியப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆவலும் பரபரப்பும் முந்திய மனநிலையோடு, "உடனே அவனை இங்கே அழைத்துக் கொண்டு வா!" என்று சேதி கொண்டு வந்தவனுக்கு மறுமொழி கூறினான் முத்துவீரப்பன். "வருகிற தகவலில் நாம் மகிழ்ச்சியடையவோ, நமது முடிவை மாற்றிக் கொள்ளவோ காரணமான எதுவும் இருக்கப்போவதில்லை" என்று பதறாத குரலில் நிதானமாகச் சொல்லிவிட்டு மீண்டும் இருக்கையில் அமர்ந்தார் அச்சையா. ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனும், ராணி மங்கம்மாளும் சேதுபதியின் தூதன் வரவேண்டிய நுழைவாயிலையே பார்த்த வண்ணமிருந்தனர். ராணி மங்கம்மாள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
முடிவுரை
|